திசைச்சொல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொழியியல், சொற்களைப் பெயர் என்றும் வினை என்றும் பாகுபடுத்திக்கொள்ளும். தமிழ்மொழியில் இவற்றுடன் இடைச்சொல், உரிச்சொல் என்னும் பாகுபாடுகளும் உண்டு. செய்யுள் ஈட்டிக்கொள்ளும் சொற்கள் என்று தொல்காப்பியம் சொற்களை வேறு வகையிலும் பாகுபடுத்திப் பார்க்கிறது. அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன. இந்தப் பாகுபாடு பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே உரியது. வினைச்சொற்களுக்கு இந்தப் பாகுபாடு இல்லை. [1] [2]
தொகுப்பு விளக்கம்
- இயற்சொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் இயற்சொல்
- திரிசொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் சேரி வழக்கில் கொச்சைப்படுதல் உண்டு. அவற்றைச் செய்யுட்கு உரியனவாகத் திரித்துக்கொள்ளும் சொல் திரிசொல்.
- திசைச்சொல் - தமிழ்நாட்டின் அடையும் புடையும் கிடந்த திசைநாட்டார் வழங்கும் சொல் திசைச்சொல்.
- வடசொல் - ஆரிய மொழியில் வழங்கும் சொல் வடசொல்.
செந்தமிழ் சேர்ந்த 12 நிலம் [3]
இளம்பூரணர் செந்தமிழ் நிலத்துக்கு எல்லை கூறும்போது, வையை ஆற்றுக்கு வடக்கு, மருத ஆற்றுக்குத் தெற்கு, கருவூருக்குக் கிழக்கு, மருவூருக்கு மேற்கு என வகுத்துக்கொண்டார். இதன் வழி இவர் காட்டும் 12 நிலங்களும் திசைச்சொற்களும் [4]
- பொங்கர் (பொதுங்கர்) நாடு
- ஒளி நாடு
- தென்பாண்டி நாடு – ஆ, எருமை என்பனவற்றைப் பெற்றம் என்பர், தம்மாமி என்பதனைத் தந்துவை என்பர். சோற்றினைச் சொன்றி என்பர்.
- குட்டநாடு - தாயைத் தள்ளை என்பர்
- குடநாடு – தந்தையை அச்சன் என்பர்
- பன்றிநாடு – வயலைச் செய் என்பர்.
- கற்கா நாடு – வஞ்சரைக் கையர் என்பர்
- சீத நாடு – ஏடா (தோழன்) என்பதனை எலுவ என்பர்.
- பூழி நாடு – நாயை ஞமலி என்பர்
- மலையமான் நாடு - தோழியை இகுளை என்பர்.
- அருவாள் நாடு – செய்யை (நிலத்தை)ச் செறு என்பர். சிறுகுளத்தைப் பாழி, என்றும், கேணி என்றும் கூறுவர்.
- அருவா வடதலை நாடு – குறுணியை (ஒரு கல நெல்லில் ஆறில் ஒரு பங்கு) குட்டை என்பர். புளியை எகினம் என்பர் [5]
என்பன. இவை செந்தமிழ் நிலத்துக்குத் தென்கிழக்கிலிருந்து வலம்வரும்போது வலஞ்சுழி வடகிழக்கு வரையில் செந்தமிழ்-நிலத்தைச் சார்ந்துள்ள நாடுகள்.[6] வேணாடு – தோட்டத்தைக் கிழார் என்பர்.[7]
செந்தமிழ் சூழ்ந்த 12 நிலம்
தெய்வச்சிலையார் செந்தமிழ்நிலம் எனக் குறிப்பிடுவது வடவேங்கடத்துக்குத் தெற்கிலுள்ள அனைத்து நிலப்பகுதியும் ஆகையால் திசைச்சொல் வழங்கும் நிலமாக இவர் கொள்ளும் நாடுகளின் பெயர்கள் வேறுபடுகின்றன. அவை வருமாறு:
- கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம்
- கொல்லம்
- கூபகம்
- சிங்களம் – ஐயோ என்பதை அந்தோ என்பர்
- கன்னடம் – ‘யான் தற் கரைய’ – விளித்தலைக் கரைதல் என்பர்
- வடுகம் – சொல் என்பதைச் செப்பு என்பர்
- கலிங்கம்
- தெலிங்கம் – பசுவையும், எருதினையும் பாண்டில் என்பர்
- கொங்கணம்
- துளுவம் – குதிரையை உணர்த்தும் மா என்னும் சொல்லைக் கொக்கு என வழங்குவர்
- குடகம் – குடாவடி உளியம் என்னும் பெயரைப் பிள்ளைகளுக்கு இட்டு வழங்குவர்
- குன்றகம்
இவற்றுள் கூபகமும், கொல்லமும் கடலால் கொள்ளப்பட்டன. தப்பியோர் குடியேறிய பகுதி இப்போதுள்ள கொல்லம், [8]
கன்னடம், வடுகம், கலிங்கம், தெலிங்கம், துளுவம் ஆகிய 5 நாடுகளை வடவர் பஞ்சதிராவிடம் என்பர் [9]
நன்னூல் உரை தரும் விளக்கம்
செந்தமிழ் சேர்ந்த 12 நிலமும் ஒன்று, தமிழ் பேசப்படாத நிலம் 17, ஆக 18 நிலத்திலும் வழங்கும் சொல் தமிழுக்கு வருமானால் அது திசைச்சொல்.
- 12 செந்தமிழ் சேர் நிலம்
- தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
- பன்றிஅருவாள் அதன்வடக்கு — நன்றாய
- சீதமலநாடு புனல்நாடு செந்தமிழ்சேர்
- ஏதமில் பன்னிரு நாட்டெண். (மயிலைநாதர் காட்டும் பழைய மேற்கோள் வெண்பா)
- 17 தமிழொழி நிலம்
- சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக்,குடகம்
- கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம்,வங்கம்,
- கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம்,
- தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே (மயிலைநாதர் மேற்கோள் காட்டியுள்ள கட்டளைக்கலித்துறைப் பாடல்) [10]
- அகத்தியனார் பாடல்
- கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
- சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
- எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம்
- கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
- கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
- என்பன குடபால் இருபுறச் சையத்து
- உடனுறைவு பழகும் தமிழ்திரி நிலங்களும்
- முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
- அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
- பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
- பன்னிரு நிலத்தில் சொல்நயம் உடையவும் – என்றார் அகத்தியனாரும் [11]
Remove ads
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads