திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருவிதாங்கூர் என்பது, இந்தியாவின் தற்காலக் கேரளா மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இங்கு தீண்டாமை, காணாமை, நடவாமை, கல்லாமை போன்ற சமூக கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது. அவையே திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள் என்றழைக்கப்படுகின்றன. உயர் சாதியினர் வாழும் இடங்களில் கீழ்சாதியினரை விலக்கி வைத்தல், பொது குளங்கள், கிணறுகள், சந்தைகள், சாலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தவதற்கும் இவர்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. சமுதாயத்தில் இவர்களது கீழான நிலையை விளக்கும் வண்ணம் அவர்கள் அணியும் ஆடை, அணிகலன்கள், உபயோகிக்கும் பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பலவிதமான விதிமுறைகள் கடைபிடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இறைவழிபாடு செய்வதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டது.[1] பொருளாதார ரீதியாகவும் பல கட்டுப்பாடுகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. அபராதம், வரி என்ற பெயர்களில் பல விதமான சுமைகள் அவர்கள் மீது ஏற்றப்பட்டன. இந்துக் கோவில்களுக்கும், சாதி நிலக்கிழார்களுக்கும் ஊதியமின்றி பணி செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். கல்விக் கூடங்களில் அனுமதியும், அரசுப் பணிகளில் வாய்ப்பும் மறுக்கப்பட்டன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தென் பகுதியில் வாழ்ந்து வந்த நாடார் இனத்தவராவர்.[2]

Remove ads

சாதி வரிசை

இங்கு நம்பூதிரி பிராமணர்களான ஆரிய வம்சா வழியினர் சாதி வரிசையின் முதலிடத்திலும், நாட்டையாண்ட அரச பரம்பரையினர்களான சத்திரியர்கள் இரண்டாமிடத்திலும், வணிகத்தைத் தங்கள் தொழிலாக கொண்ட வைசியர்கள் மூன்றாமிடத்திலும், இம்மூவர்களுக்கும் ஏவல் தொழில் புரிந்து வந்த ஆரிய கலப்பின சூத்திரர்களான நாயர்கள் நான்காம் இடத்திலும் மனுதர்ம அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டனர். இந்த நான்கு பிரிவுகளிலும் உள்ளடங்காத பூர்வகுடி மக்களை பஞ்சமர்கள் அல்லது சண்டாளர்கள் என்று குறிப்பிட்டனர்.

Remove ads

சமூகக் கட்டுப்பாடுகள்

ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு செறுமர் முப்பது அடி தொலைவிலும். ஒரு பறையர் அல்லது புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.[3] இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவர். தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. நாடார் இனத்தவர் அணியும் ஆடை அணிகலன்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உயர் சாதியினரைப் போன்று குறிப்பாக நாயர் சாதியினரைப் போன்று ஆடை அணிய அனுமதிக்கப்படவில்லை. ஆண்களும், பெண்களும் கால் மூட்டுக்கு கீழும், இடைக்கு மேலும் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது.[4] உயர் சாதியினர் முன் கீழ் சாதி பெண்கள் மார்பை மறைத்து ஆடை அணிந்து சென்றால் அது அவர்களை அவமதிக்கும் செயல் என்று உயர் சாதியினர் கருதினர்.[5] இக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மேலாடைகள் கிழித்து எறியப் பட்டது. விலையுயர்ந்த ஆபரணங்களை அணியவும், குடை பிடிக்கவும், காலணி அணியவும், அனுமதி மறுக்கப்பட்டது. ஓடு வேய்ந்த வீடுகளில் வசிப்பதும், பால் கொடுக்கும் பசுக்கள் வளர்ப்பதும், வாகனங்கள் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது.[6] திருமண பந்தல்கள் அலங்காரம் மறுக்கப்பட்டது.[7] பெண்கள் தண்ணீர் குடத்தை இடையில் சுமந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.[3] குடத்தை தலையில் வைத்து இருகைகளாலும் அதை தாங்கிப் பிடித்துச் செல்லவே அனுமதிக்கப்பட்டனர.

Remove ads

சமயக் கட்டுப்பாடுகள்

இறைவழிபாடு செய்வதிலும், பலவிதக் கட்டுப்பாடுகள் கீழ்சாதியினர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அரசும், உயர்சாதியினரும் நிர்வகித்து வந்த கோவில்களில் நுழையவோ, வழிபாடு நடத்தவோ, கோவில்களின் வெளிப் பிரகாரங்களில் செல்லவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தங்கள் வழிபாட்டிற்கென இவர்கள் எழுப்பிய கோவில்களில் கூட உயர்சாதியினர் வழிபடும் சிவன், பிரம்மா, விட்னு போன்ற தெய்வங்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. வீரபத்திரன், மாடன், சுடலை, வீரன், மாடசுவாமி, இருளன், முத்தாரம்மன், பத்ரக்காளி போன்ற தெய்வங்களையே இவர்கள் வழிபட்டனர்.[8] மதச்சடங்குகள் அனுசரிப்பதிலும் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நெய், பால், போன்ற பொருட்களை வழிபாட்டில் பயன்படுத்த இவர்களுக்கு அனுமதியில்லை. கள், சாராயம் போன்ற பொருட்களை இவர்கள் பயன்படுத்தினர்.[9]

பொருளாதாரக் கட்டுப்பாடுகள்

பொருளாதார ரீதியாகவும கீழ்சாதியினர் பல இன்னலுக்கு ஆளாகினர். அபராதம், வரி, நன்கொடை, என்ற பெயரில் வருமானத்தின் பெரும் பகுதியை அவர்கள் இழந்தனர்.

பிராயசித்தம்

தவறு செய்து தண்டிக்கப்பட்டவரகள் அரசுக்கு செலுத்திய அபராதத் தொகையே பிராயச்சித்தம் எனப்பட்டது. பிராயச்சித்தம் என்று பெயரில் தங்களுக்கு விருப்பமான தொகையை அரசு அதிகாரிகள் வசூலித்துக் கொள்ளலாம். வசூலிக்கப்பட்ட தொகையில் 20 விழுக்காடு தொகை போக மீதியை அரசுக் கருவூலங்களில் செலுத்த வேண்டும். இதனால் காரியக்காரர்கள் வசுலில் ஒரு பகுதியை மட்டும் கருவூலத்தில் செலுத்திவிட்டு மீதியை தங்களுக்கென வைத்துக் கொண்டனர்.[10]

புருசந்தாரம்

பரம்பரை சொத்துக்கு உரிமையுடைய வாரிசுகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரி புருசந்தாரம் ஆகும்.இதன் படி சொத்து மதிப்பில் 40 விழுக்காடுக்கும் அதிகமான தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். பிராயசித்தத்தைப் போன்றே இந்த வரியிலும் ஒரு பகுதியை அதை வசூலித்த காரியக்காரர்களே வைத்துக் கொண்டனர்.[10]

தலைவரி

நாடார் இனத்தவரை அதிகம் பாதிப்புள்ளாக்கிய மற்றொரு வரி தலைவரி (Poll tax) ஆகும்.[11] பதினாறு முதல் அறுபது வயது வரையுள்ள ஆண்கள் அனைவரிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது.[12] இறந்தவர்களுக்கும் இவ்வரியை உறவினர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரியை கொடுக்க முடியாத காரணத்தால் பலகுடும்பங்கள் அண்டைமாநிலமான தமிழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்தவர்களின் உறவினர்களிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது.[13]

இதர வரிகள்

தலைவரியைத் தவிர தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி, என்று பல விதமான வரிகள் வசூலிக்கப்பட்டன. நாடார்கள் பனையேறுவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஏணிக்கு ஏணிகாணம் என்ற வரியும், தளைக்கு (தளை என்பது பணை ஏறும் தொழிலாளிகள் பணை ஏறும் போது கல்களில் அணிந்து கொள்ளும் பனை நாரினால் செய்யப்பட்ட வளையம்) தளைகாணம் என்ற வரியும் வசூலிக்கப்பட்டன. கள் தயாரிப்பவர்களிடமிருந்து ஒரு குடம் கள்ளிற்கு ஒரு நாளி கள் வீதம் வரியாக வசூலி்க்கப்பட்டது.[14] ஒரு குடிசைக்கு ஒரு பணம் வீதம் குப்ப காச்சா(kuppa katch) என்ற வீட்டு வரியும் வசூலிக்கப்பட்டது.[15] வீடுகளுக்கு கூரை மாற்றும் போது மனை மேய்ப்பான் கொள்ளுமிறை என்றொரு வரியும் வசூலிக்கப்பட்டது. அவர்களுக்கு சொந்தமான நிலங்களுக்கும் அங்கு வளர்கின்ற பனை, தென்னை, கமுகு, மா, பலா, புளி, புன்னை, இலுப்பை போன்ற மரங்களுக்கும் வரி கொடுக்க வேண்டும். திருமணமான பெண்களிடமிருந்து தாலியிறை வசூலிக்கப்பட்டது. சிலவகையான ஆடைகள் அணிவதற்கும், அணிகலன்கள் அணிவதற்கும், தலைப்பாகை அணிவதற்கு, குடைப் பிடிப்படதற்கு, பல்லக்கில் செல்வதற்கு, திருமணம் நடத்துவதற்கு என ஒவ்வொன்றிற்கும் அரசுக்குப் பணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அரசுக்கு சேர வேண்டியப் பணத்தைவிட பன்மடங்கு அதிகமாக அதிகாரிகள் வரி வசூலித்து வந்ததால், அதிலிருந்து விடுபட சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார்கள்.[16]

வரி கொடுக்க தவறியவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் முதுகில் பாரமான கற்கள் எற்றி வைத்து வெயிலில் பல மணி நேரம் நிற்க வைத்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை காதில் நுழைத்து தொங்க விடுதல், சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தல் போன்றக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.[17]

Remove ads

விருத்தி, ஊழியம்

உப்பளங்களிலிருந்து மண்டிகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் உப்பு மூடை சுமந்து செல்லுதல், அரசு பண்டகச் சாலைகளைப் பாதுகாத்தல், காடுகளிலிருந்து வெட்டிக் கொண்டு வரும் மரத்தடிகளைப் பாதுகாத்தல், யானைகளைப் பிடிக்கும் குழிகள், வெட்டிப் போடப்பட்ட காடுகளைப் பாதுகாத்தல் போன்ற வேலைகளை கீழ்சாதியினர் ஊதியமின்றி செய்ய கட்டாயப் படுத்தப்பட்டனர்.[18] தொடர்ந்து பல நாட்கள் இவ்வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் பல குடும்பங்கள் நெருக்கடிகளைச் சந்தித்தது.

நிலங்களுக்கு வேலி அமைத்தல், வண்டிகளில் சுமைகளை ஏற்றி இறக்குதல், அரசனின் குதிரைகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு போடுதல், அரசுக் கட்டிடங்களைப் பழுது பார்த்தல், காவல் காத்தல் போன்ற வேலைகளை விருத்திக்காரர்கள் ஊதியம் பெறாமல் செய்து கொடுக்க வேண்டும். நாடார்கள் மாத்திரமே இவ்வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.[19] இலவசமாக வேலை செய்வதுடன் விருத்திக்காரர்கள் எழுதுவதற்கு தேவையான எழுத்தோலை, கோவில்களுக்கு தேவையான கருப்புக்கட்டி, எண்ணெய், பூமாலை, பால் போன்ற பொருட்களையும், ஊட்டுப் புரைகளுக்கு தேவையான விறகு மற்றும் காய்கறிகளையும், அரசு யானைகளின் தீவனத்திற்கான தென்னை ஓலைகள் ஆகியவற்றை இலவசமாக கொடுப்பதும் விருத்திக்காரர்களின் வேலையாகும். இவற்றைத் தவிர பண்டிகை நாட்களில் அரச குடும்பத்தினருக்கும், உயர் சாதியினருக்கும் கோழிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இலவசமாக கொடுக்க வேண்டியிருந்தது.[15] மேலும் இந்தப் பொருட்களை திருவனந்தபுரத்திற்குத் தலைச்சுமையாகச் சுமந்து கொண்டு சேர்க்கவும் வேண்டும்.

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads