நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) என்பது பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான கல்வி வாரியம் ஆகும். இந்த வாரியம் மைய அரசின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியமானது, தமது நிர்வாகத்தில் இணைக்கப்பட்ட பள்ளிகளை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட கலைத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவ்வாரியத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 21,448 ஆகும்.[2]இக்கல்வி வாரியத்தின் பாடத்திட்டப்படி கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்தியாலயம், மற்றும் மாதிரி பள்ளித் திட்டம்|மாதிரிப் பள்ளிகள் செயல்படுகிறது.
Remove ads
வரலாறு
இந்தியாவில் கல்விக்காக தொடங்கப்பட்ட முதல் கல்வி வாரியமானது ‘உத்திரப்பிரதேச உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி வாரியம் 1921 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கல்வி வாரியத்தின் ஆட்சி எல்லையானது இராஜபுதனம், மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.[3] 1929 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமானது, இராஜபுதனத்தில் உயர்நிலைக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்விக்கான கூட்டு வாரியம் ஒன்றை ஏற்படுத்தியது. இந்த வாரியத்தின் ஆட்சி எல்லையானது அஜ்மீர், மெர்வாரா, மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னர் இந்த ஆட்சி எல்லையானது அஜ்மீர், போபால் மற்றும் விந்தியப் பிரதேசம் ஆகியவற்றோடு வரம்புக்குட்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, 1952 ஆம் ஆண்டில் இந்த வாரியத்தின் அமைப்பானது திருத்தப்பட்டு அதன் ஆட்சி எல்லையானது பகுதி-இ மற்றும் பகுதி-ஈ யூனியன் பிரதேசங்களும் ஆட்சி எல்லைக்குள் உட்படுத்தப்பட்டது. இறுதியாக 1962 ஆம் ஆண்டில் இந்த வாரியமானது மறுசீரமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் முக்கிய நோக்கங்களாவன: கல்வி நிறுவனங்களுக்கு திறம்பட பணியாற்றுவது, மைய அரசில் அடிக்கடி இட மாறுதல் செய்யப்படக்கூடிய பதவிகளில் உள்ள பெற்றோரின் குழந்தைகளின் கல்வித் தேவைகளைத் தீர்க்க உதவுவது ஆகியவை ஆகும்.
Remove ads
அதிகார எல்லை
வாரியத்தின் அதிகார எல்லையானது தேசத்தின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. வாரியம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதன் விளைவாக, முந்தைய 'தில்லி இடைநிலைக்கல்வி வாரியம்’ மத்திய வாரியத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது. எனவே மத்திய வாரியத்தின் ஒரு பகுதியாக அனைத்து கல்வி நிலையங்களும் தில்லி வாரியத்தின் மூலமாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்குப் பின், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலம் மற்றும் தற்போதைய ஜார்கண்ட், உத்திராஞ்சல் மற்றும் சண்டிகார் ஆகிய பிரதேசங்களும் வாரியத்துடன் இணைக்கப்பட்டன. 1962 ஆம் ஆண்டு 309 பள்ளிகளைக் கொண்டிருந்த வாரியம், இன்று (2018 ஆம் ஆண்டின் நிலையில்) இந்தியாவில் 20299 பள்ளிகளையும், 25 வெளிநாடுகளில் 220 பள்ளிகளையும் கொண்டுள்ளது. இவற்றில் 1123 கேந்திரிய வித்யாலயாக்களும், 2953 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், 15837 சுயநிதிப்பள்ளிகளுகம், 592 ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களும் மற்றும் 14 மத்திய திபெத்திய பள்ளிகளும் உள்ளன.
Remove ads
முக்கிய நடவடிக்கைகள் மற்றும் குறிக்கோள்கள்
குறிப்பிடத்தக்க உள் இணைக்கப்பட்ட குறிக்கோள்களை அடைவதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் அமைக்கப்பட்டது:
- 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவில் தேர்வுகளின் விதிமுறைகளைக் குறிப்பிடுவதற்கு, மற்றும் பொதுத் தேர்வை நடத்துவதற்காக
- இணைக்கப்பட்ட பள்ளிகளில் தேர்வு எழுதி வெற்றிபெறுபவர்களுக்கு தகுதி சான்றிதழ்களை வழங்குவதற்காக.
- பணி மாற்றங்களைக் கொண்டிருக்கும் பெற்றோர்களைக் கொண்ட மாணவர்களுக்கு கல்வித் தேவைகளை முழுமையாக்குவதற்காக.
- தேர்வுகளின் பயிற்சி வகுப்பு ஆணைகளைக் குறிப்பிடுவதற்காகவும், தெரிவிப்பதற்காகவும்
- தேர்வின் நோக்கத்தை இணைக்கப்பட்ட கல்வி நிலையங்களுக்குத் தெரிவிக்கவும், நாட்டின் கல்வித் தரங்களை உயர்த்துவதும் இதன் நோக்கமாகும்.
வாரியத்தின் முதன்மை நோக்கம்
- மாணவர்களை நட்பார்ந்த முறையில் நடத்துவதும், மாணவர்களுக்கு மையப்படுத்தப்பட்ட முன் உதாரணமாக விளங்குவதற்காகவும் கற்பிக்கும்-கற்றல் செயல்முறைகளில் புதுமைகள்.
- தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு பயிற்சிகளில் சீரமைத்தல்கள்.
- பணி-சார்ந்த மற்றும் பணி-இணைக்கப்பட்ட உள்ளீடுகளை சேர்ப்பதன் மூலமான திறன் கற்றல்.
- சேவைப் பயிற்சித் திட்டங்கள், பயிலரங்குகள் மற்றும் பலவற்றை நடத்துவதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் கல்வித் திறன்களை நிலையாக்குதல்.
பன்முகப்படுத்தல்
இதன் செயல்பாடுகளை பயனுள்ள முறையில் வெளிப்படுத்துவதற்கு, நாட்டின் பல பகுதிகளில் வாரியம் மூலமாக வட்டார அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் இணைக்கப்பெற்ற பள்ளிகளுக்கு அதிக ஏற்புத்தன்மை கிடைக்கும். அலகாபாத், அஜ்மீர், சென்னை, குவாஹாத்தி, பஞ்சுகுலா மற்றும் தில்லி ஆகியப் பகுதிகளின் வாரியத்தின் வட்டார அலுவலங்கள் அமைந்துள்ளன. இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள பள்ளிகள், தில்லி வட்டார அலுவலகம் மூலமாக கவனிக்கப்பட்டு வருகிறது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் வட்டார அலுவலகங்களுடைய அதிகார எல்லையின் முழு விவரங்களுக்கு ஐப் பார்க்கவும். இதன் தலைமையகமானது, வட்டார அலுவலகங்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. எனினும், வட்டார அலுவலங்களுக்கு போதுமான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொள்கைகளை ஈடுபடுத்தி சிக்கல்கள் ஏற்பட்டாலும், தலைமை அலுவலகத்தில் அவை குறிப்பிடப்படுகின்றன. தினசரி நிர்வாகம், பள்ளிகளுடன் தொடர்பு, தேர்வுகளுக்கான முந்தைய மற்றும் பிந்தைய ஏற்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட பொருள்கள் அனைத்தும் குறிப்பிட்ட வட்டார அலுவலங்கள் மூலமாகக் கையாளப்படுகின்றன.
Remove ads
நிர்வாக அமைப்பு
செயலர் கல்வி, இந்திய அரசாங்கம், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் உரிமை கொள்ளப்பட்ட கட்டுப்படுத்தும் ஆணையத்தின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ் இந்த வாரியம் செயல்படுகிறது. இயற்கையாக ஆலோசனை கூறும் பல்வேறு சட்டப்படியான செயற்குழுக்களையும் இந்த வாரியம் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் வாரியத்தின் நிர்வாகக் குழு நிறுவப்பட்டுள்ளது. வாரியத்தின் நிர்வாகக்குழுவிற்கு முன்பாக ஒப்புதலுக்காக அனைத்து செயற்குழுக்களின் பரிந்துரைகளும் வைக்கப்படும்.
Remove ads
வாரியத்தின் அமைப்புமுறை
வாரியமானது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளரின் (பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு) ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. வாரியமானது தனது அமைப்பில் பல்வேறு சட்டபூர்வமான ஆலோசனை வழங்கும் குழுக்களைத் தன்னகத்தே கொ்ணடுள்ளது. வாரியத்தின் நிர்வாக அமைப்பானது இவற்றின் விதிகள் மற்றும் ஒழுங்கு மு றைகளின்படி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளும் வாரியத்தின் நிர்வாக அமைப்பின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படுகின்றன.
வாரியத்தின் செயல் அலுவலராக தலைவரும், அவருக்கு உதவி செய்வதற்கு செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், இயக்குநர் (கல்வி செயல்பாடுகள்), இயக்குநர் (பயிற்சி), இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்), இயக்குநர் (பல்வகைத் தேர்வுகள்), இயக்குநர் (கல்வித்தொலைக்காட்சி, ஆராய்ச்சி & மேம்பாடு), இயக்குநர் (தொழிற்கல்வி), மூன்று மண்டல இயக்குநர்கள், இயக்குநர் (பதிவு அலுவலகம், அஜ்மீர்) மற்றும் செயல் இயக்குநர் (ஜேஏபி) ஆகியோரும் உள்ளனர்.
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் செயலாளர் நிர்வாகம், கணக்கு மற்றும் தணிக்கை, பொதுத்தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் இணைப்புக்கான அங்கீகாரங்கள் ஆகியவற்றுக்கான பொறுப்பு அலுவலர் ஆவார்.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தேர்வுகள் மற்றும் மற்றும் தேர்வுகளின் நிர்வாகம், தேர்வுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகள், மண்டல அலுவலகங்களுடன் இணைந்து ஆண்டு மற்றும் பகுதி இடைநிலை மற்றும் உயர்நிலைத் தேர்வு நடத்துவது ஆகியவை தொடர்பான பணிகளுக்குப் பொறுப்பாவார்.
இயக்குநர் (கல்வித்தொலைக்காட்சி, ஆராய்ச்சி & மேம்பாடு) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் தொடங்கப்பட்ட தொடங்கப்பட்ட கல்விசெயற்கைக்கோள் வழியான தொலைதூரக்கல்வி மற்றும் தொழிற்துறைப் பாடத்திட்டங்களின் வடிவமைப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பாவார்.
இயக்குநர் (கல்விசார் பணிகள்) மற்றும் இயக்குநர் (பயிற்சிகள்) ஆகியோர் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பாடங்களுக்கான கலைத்திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கான பணிமனைகளை ஒருங்கிணைத்தல், பணியார்களுக்கான பயிற்சித் தேவைகள் குறித்து மதிப்பிடல், புதிய பாடப்பிரிவுகளுக்கான உள்ளடக்கம் மற்றும் கல்வியில் புதுமைகள் குறித்தவற்றிற்கான பாடநூல்கள் உருவாக்கம், இடைநிலை மற்றும் மேல்நிலைப் பாடப்பிரிவுகளுக்கான பாடநூல்களை வெளியிடல், கல்வி சார்ந்த திட்டப்பணிகளை கண்காணித்தல் ஆகியவற்றிற்குப் பொறுப்பானவர்கள் ஆவார்கள்.
இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்) ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான இணையத்தில் பதிவுகள் செய்வது, அனைத்து மண்டலங்களுக்குமான தேர்வுகளுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகளைச் செய்வது, புது தில்லி மண்டலத்தின் அனைத்து கணினி சார்ந்த செயல்பாடுகளைச் செய்வது கூட்டு நுழைவுத் தேர்வுகள், மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வு, மைய அரசுப்பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் புலமைத் தேர்வுகள், இணைய வழி விண்ணப்பங்கள், வெளியீடுகள் நிர்வாக அமைப்பு, கல்வி உதவித் தொகை, வேலைக்கு ஆள் சேர்ப்பது, வலைத்தளத்தை நாளது தேதி வரை அவ்வப்போது புதுப்பித்தல், நிர்வகித்தல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான செயல்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்த பணிகளுக்குப் பொறுப்பாவார்.
இயக்குநர் (பல்வகைத் தேர்வுகள்) மைய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஜவஹர் நவோதயா வித்யாலயாவிற்கான ஆட்சேர்ப்பிற்கான தேர்வ மற்றும் அதன் நிர்வாகம் ஆகிய பணிகளுக்குப் பொறுப்பாவார்.
இயக்குநர் (தொழிற்கல்வி) தொழிற்கல்வி சார்ந்த பாடங்களுக்கான கலைத்திட்டத்தை வடிவமைப்பதற்குப் பொறுப்பானவர் ஆவார்.
மண்டல இயக்குநர்கள் இடைநிலைப் பள்ளிக்கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி சான்றிதழ்களுக்கான முதன்மை மற்றும் பகுதித் தேர்வுகள் தொடர்பான அனைத்துப் பணிகள் மற்றும் தேர்வுகளை நிர்வகித்தல் சார்ந்த பணிகள், தேர்வுகளுக்கு முந்தைய, பிந்தைய பணிகள், தேர்வு முடிவுகளை அறிவித்தல் மற்றும் தொடர்புடைய அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பானவர்கள் ஆவர்.
இயக்குநர் (பதிவு அலுவலகம், அஜ்மீர்) பதிவு அலுவலகம் சார்ந்த பணிகள், ஆவணங்களின் நகல்கள், சரிபார்த்தல், வாரியத்தின் ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்குப் பொறுப்பானவர் ஆவார்.
Remove ads
இணைப்புகள்
அனைத்து ஜவஹர் நவோதயா வித்யாலயங்கள், அனைத்து கேந்திரிய வித்யாலயாக்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியக் கல்வி முறையைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள், மத்திய அரசிடம் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் ஆகியவை நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டவையாகும்.
தேர்வுகள்
வாரியமானது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடத்துகிறது. தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் மே இறுதியில் வெளியிடப்படுகின்றன.[4] முன்னதாக வாரியமானது, பொறியியல் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த இளநிலைப் பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கான அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தது. இருப்பினும் குறிப்பிடப்பட்ட அந்தத் தேர்வானது இந்திய தொழில்நுட்ப கழகங்கள்-கூட்டு நுழைவுத் தேர்வுடன் இணைக்கப்பட்டதற்குப் பிறகு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
இவ்வாரியமானது, இந்தியாவிலுள்ள முதன்மையான மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான அகில இந்திய மருத்துவ முன் தேர்வினை நடத்துகிறது. 2014 ஆம் ஆண்டில், இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான பல்கலைக் கழக மானியக்குழு- தேசிய தகுதித் தேர்வினை நடத்தும் பணி இவ்வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[5] இத்தேர்வுகளைத் தவிர்த்து மைய அரசில் ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பிற்கான புலமைத் தேர்வு ஆகியவையும் இவ்வாரியத்தால் நடத்தப்படுகின்றன.[5] 2014 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான தகுதித் தேர்வை நடத்தும் பணியின் சேர்க்கைக்குப் பின் இவ்வாரியமானது உலகில் தேர்வுகள் நடத்தக்கூடிய மிகப்பெரும் அமைப்பாக உருவெடுத்தது.[5][6]
2017 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவதற்கான தேசிய தேர்வு முகமையை உருவாக்குதற்கான முன்மொழிவிற்கு ஒப்புதல் வழங்கியது. தற்போது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியமானது தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (ஆண்டிற்கு இரு முறை), பல்கலைக் கழக மானியக்குழு-தேசிய தகுதித் தேர்வு (ஆண்டிற்கு இரு முறை) மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகியவற்றை நடத்தி வருகிறது.
Remove ads
வட்டார அலுவலகங்கள்
தற்போது இந்த வாரியம் எட்டு வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது:
- தில்லி- தில்லி மண்டலம், வெளிநாட்டுப் பள்ளிகள்
- சென்னை- தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மஹாராஸ்டிரா, கோவா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ
- குவஹாத்தி- அசாம், நாகலாந்து, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம்
- அஜ்மீர்- ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், தத்ரா மற்றும் நாகர் ஹைவெலி
- பஞ்ச்குலா- ஹரியானா, சண்டிகார் ஒன்றியப் பகுதிகள், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம்.
- அலகாபாத்- உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல்
- பாட்னா- பீகார், ஜார்கண்ட்
- புவனேஷ்வர்- மேற்கு வங்காளம், ஒரிசா, சட்டிஸ்கர்
சமசுகிருத வாரம்
இந்த வாரியத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்விநிலையங்களும் ஆகத்து 7 முதல் 14 வரை சமசுகிருத வாரம் கொண்டாடுமாறு சூன்30, 2014 அன்று ஆணையிடப்பட்டது.[7] இந்த வாரத்தில் சமசுகிருதம் தொடர்புள்ள பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் போன்றவற்றை நடத்திட பள்ளி முதல்வர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் இதற்கான சுற்றறிக்கையில் இம்மொழியின் பண்பாட்டுக் கூறுகளையும் மற்ற இந்திய மொழிகளுடான பிணைப்பையும் எடுத்துக்காட்டும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தவும் பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன.[8]
சமசுகிருதம் இந்து சமய உரைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், இந்த ஆணை இந்தியாவின் சமயச்சார்பற்ற பன்முகத்திற்கு எதிராக இம்மொழியை மற்ற சமயத்தினர் மீது திணிப்பதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.[9] தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இது வடமொழியைத் திணிப்பதற்கான ஓர் நடவடிக்கை என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.[10] இதனை எதிர்த்து மாநில முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.[11] இந்த ஆணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு போடப்பட்டது; சூலை 30, 2014 அன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.[12] இதனையடுத்து சமசுகிருத வாரம் கொண்டாடுவதை எதிர்த்து ஆகத்து 5, 2014 அன்று சென்னையில் உள்ள நடுவண் கல்வி வாரிய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.[13]இதன் காரணமாக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பள்ளிகளுக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Remove ads
இதனையும் காண்க
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads