வலசை போதல்

From Wikipedia, the free encyclopedia

வலசை போதல்
Remove ads

வலசை போதல் (Animal migration) என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. மேலும் மனிதனைப் போலவே, விலங்கினங்கள் கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன. அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக் கொள்கின்றன.[1] குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசை போதல் எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன.

Thumb
பறவைக் கூட்டமொன்றின் இலையுதிர்காலப் புலப்பெயர்வு
Thumb
பறவைகள் கூட்டமாக இடம்பெயர்தல்
Remove ads

பறவைகள் வலசை போதல்

இது பறவைகள் புலப்பெயர்வு எனப்படுகின்றது. இவ்வாறு புலம்பெயரும் பறவைகள் இதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன. இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன[2] சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று ஒத்திகைகள் கூடப்பார்க்கின்றன.[2] பிறகு, ஒருநாள் ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு செல்லத் துவங்குகின்றன.
இடம் பெயரும் பறவைகள் இருவிதமான நேர் உணர்வைப் பெற்றுள்ளன. ஒன்று உள்ளூர் நேரத்தைச் சார்ந்தது. மற்றொன்று பருவ நிலை மாற்றம் தொடர்பானது, மேலும் அவை புவிக் காந்தப்புலத்தைச் சார்ந்தது. ஆனால் உலகின் சில பகுதிகளில் தீர்க்கரேகைகள் புவி காந்தப் புலத் தன்மைக்கு ஏற்ப அதிகம் மாறுவதில்லை.
இளம் பறவைகளைக் கொண்டு இலையுதிர் காலத்திலும், வயதான பறவைகளைக்கொண்டு வசந்த காலத்திலும் இடப்பெயர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுகளின் படி கால, நேர, இட அடிப்படையில் அமையும் பறவைகளின் வான் பயண உத்திகள், வயதான பறவைகளுக்கு அதிகமாகவே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ரீட்வார்ப்லர் என்ற இனப் பறவைகள் தீர்க்க ரேகையைக் கண்டறிவதுடன் இரு அச்சு வான் பயணமுறையை மேற்கொண்டு வசந்த காலத்தில் தத்தம் வாழிடங்களுக்குச் சரியாக வந்து சேர்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Remove ads

நீண்டதூரத் தரைப் பறவைகள் புலப்பெயர்வு

Thumb
நீண்ட தூரம் பறவைகள் இடப்பெயர்வைக் காட்டும் படம்

பல வகையான தரைப் புலம்பெயர் பறவைகள் மிக நீண்ட தூரங்கள் இடம் பெயருகின்றன. இனப்பெருக்கக் காலத்தை மிதவெப்பப் பகுதிகளில் அல்லது ஆர்க்டிக் வட அரைக்கோளத்தில் கழிக்கின்ற பறவைகள், மற்றக் காலங்களில் வெப்ப வலயங்களை (tropics) அல்லது தென் அரைக்கோளத்திலுள்ள மிதவெப்ப வலயப் (temperate zones) பகுதிகளை நாடிச் செல்வதே மிகவும் பொதுவாகக் காணப்படும் புலப்பெயர்வு ஆகும். சான்றாக வடக்கு ஐரோப்பாவிலுள்ள குருவிகள், ஆப்பிரிக்காவிலுள்ள குளிர்கால இடங்களை நோக்கி 6,800 மைல்கள்(11000கி.மீ) அல்லது அதற்கு அதிகமாகப் பறந்து செல்கின்றன. இவைகள் தங்களுக்குள் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் ஒன்று மோதாமலும், சரியான இடைவெளியுடனும், ஒரு குறிப்பிட்ட வேகத்துடனும் பறந்து செல்கின்றன.

Thumb
புலம் பெயர் பறவைகளின் வழித்தடங்கள்.

வட பிரதேசக் கோடை காலத்தின் நீண்ட பகற்காலம், புதிதாகப் பொரித்த குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதற்கான அதிக வாய்ப்புக்களைக் கொண்டது. இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும். இலையுதிர் காலத்தில் பகற்காலம் சுருங்கி, உணவு கிடைப்பதும் அரிதாகும்போது பறவைகள் வெப்பப் பகுதிகளுக்கு வருகின்றன. இப் பகுதிகளில் பருவகாலங்களைப் பொறுத்து, உணவு கிடைப்பதில் அதிக மாற்றம் இருப்பதில்லை. இவ்வாறு புலம்பெயர்வதால் கிடைக்கும் நன்மைகள், களைப்பு, சக்திச் செலவு, புலப்பெயர்வின்போது ஏற்படும் ஆபத்துக்கள் என்பன போன்ற பாதக அம்சங்களை ஈடுசெய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

Remove ads

புலப்பெயர்வு நடவடிக்கைகள்

புலப்பெயர்வுக்கு முந்திய காலப்பகுதியில், பல பறவைகளில் அதிகரித்த செயற்பாடுகள் அல்லது புலப்பெயர்வு அமைதியின்மை காணப்படுகின்றது. அத்துடன் அதிகரித்த கொழுப்புப் படிதல் போன்ற உடற்கூற்றியல் மாற்றங்களும் ஏற்படுகின்றன. கூட்டிலடைத்து வளர்க்கப்படும் பறவைகளும், பகல்நேரம் சுருங்குதல், வெப்பநிலை குறைதல் போன்ற எவ்வித சூழல் சார்ந்த குறிகள் எதுவும் இல்லாமலேயே, பறவைகளுக்கிடையில் புலப்பெயர்வு அமைதியின்மையை தோற்றுவிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, பறவைகளில் புலப்பெயர்வைக் கட்டுப்படுத்துவதில் உள்ளுணர்வு சார்ந்த நிரலாக்கம் (endogenic programming) செயற்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. கூண்டிலடைத்து வளர்க்கப்பட்ட பறவைகளும், பறக்கவிடும்போது, இயற்கையில் இவ்வினப் பறவைகள் புலப்பெயர்வின்போது பறக்கும் அதே திசையிலேயே பறக்க முயல்வது தெரிய வந்துள்ளது. அத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும் பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும் நிகழ்வதும் அறியப்பட்டுள்ளது.

வலசை போகும் பிற உயிரினங்கள்

வெட்டுக்கிளி

பாலைவன வெட்டுக்கிளிப் பூச்சிகள் பெருந்திரள் கூட்டமாக இடம்பெயரும் போது ஒரு நாளைக்கு 3000 டன்கள் தாவரங்களை உண்ணுகின்றன. ஒரு பெருந்திரள் கூட்டத்தில் சுமார் 50,000 மில்லியன் வரை பூச்சிகள் இருக்கும்.

கடல் வாழிகள்

கடலில் வாழக்கூடிய மீன்கள், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம் ஆகியவையும் வலசை போகின்றன. சால்மன் மீன்கள் என்ற மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடலிலிருந்து நன்னீரை நோக்கி 1500 மைல்கள் (2400கி.மீ) வரை பயணிக்கின்றன. இவ்வாறு நீண்ட தூரப் பயணத்தில் முற்றிலும் ஆற்றலிழந்த நிலையில் இனப்பெருக்கத்திற்குப் பின் பல மீன்கள் இறந்து விடுகின்றன.

ஆமைகள்

ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக நீண்ட தூரம் வலசை போகின்றன. குறிப்பாக பிரேசில் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக எட்டு வாரங்களில் 1250 மைல்கள் (2000கி.மீ) பயணிக்கின்றன.

மான்கள்

வட அமெரிக்காவிலுள்ள பாரன் மைதான மான்கள் 3700 மைல்களுக்கும் (5000கி.மீ) மேலாகப் பயணிக்கின்றன. இதுவே பாலூட்டிகளில் அதிக தூரம் நடைபெறும் வருடாந்திர வலசை போதலாகும்.

Remove ads

வலசை போதல் பற்றிய ஆய்வுகள்

கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பருவ கால இடப்பெயர்வைக் கண்டறிந்தார். கி.மு. 384-322-இல் எழுதிய 'விலங்குகளின் வரலாறு' என்ற நூலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். தற்காலத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த ஆராய்ச்சிகள் பெருகியுள்ளன. இவற்றிற்கென தனிப் படிப்புகளும் உள்ளன. முனைவர் சலீம் அலி (1896-1987) என்பவர் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்த பறவை நிபுணர் ஆவார். இவரின் ஆய்வுகள் மூலம் பறவைகள் பற்றிய பல்வேறு சுவையான தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

பறவைகள் தங்களது இடம்பெயர்ச்சிக்கு குறைந்தது இரண்டு அச்சுகளாகிய அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் பயன்படுத்துகின்றன எனப் புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு சிலரின் ஆய்வுப்படி பறவைகளின் இடப்பெயர்வு வடக்கு, தெற்கு திசையில் அமைகின்றது. ரஷ்யாவில் உள்ள ரிபாஷி என்னுமிடத்தில் உள்ள உயிரியல் மையத்தின் ஆய்வாளர் நிகிதா சென்ஸ்டவ் வசந்த காலத்தில் பறவைகள் நெடுந்தொலைவு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் சென்று திரும்பும்போது கிழக்கு மேற்காக இடம்பெயர்கின்றன என்று தன் ஆய்வில் கூறியுள்ளார். இதிலிருந்து பறவைகள் எவ்வாறு அட்ச ரேகைகளைக் கண்டறிகின்றன என்பது தெரியவில்லை. ஆனால் தீர்க்க ரேகை என்பது வடக்கு தெற்கு திசைகளில் செல்கிறது. இதை நடுப்பகலில் உள்ள சூரியனின் இருப்பிடத்தை வைத்தோ அல்லது பூமியின் காந்தப்புலத்தை வைத்தோ எளிதில் கண்டறியலாம் என்று சென்ஸ்டவ் விளக்கியுள்ளார்.

மூன்றாவதாக வானத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் இடம்பெயரும் பறவைகள், அவை செல்ல வேண்டிய இடத்தில் தீர்க்கரேகையை அறிந்து இடம் பெயருகின்றன என்பர். ஆனால் இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.

Remove ads

உசாத்துணை

  • முனைவர் அ. சுப்பையா பாண்டியன், 'அறிவியல் ஒளி',அக்டோபர் 2010 மாத இதழ்.
  • '9-ஆம் வகுப்பு அறிவியல் பாடநூல்' தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்-2011( சமச்சீர்கல்விப் பொதுப் பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது)
  • அலி, சலீம்; அலி, லயீக் பதே (2004). பறவை உலகம். புது தில்லி: நேசனல் புக் டிரஸ்ட். p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-237-4146-4. {{cite book}}: Check |first= value (help)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads