உருசியா

ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் உள்ள ஒரு நாடு From Wikipedia, the free encyclopedia

உருசியாmap
Remove ads

உருசியா[b] (Russia) அல்லது உருசியக் கூட்டமைப்பு (Russian Federation)[c] என்பது கிழக்கு ஐரோப்பாவிலும், வடக்கு ஆசியாவிலும் பரவியிருக்கும் ஒரு நாடும், பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நாடும் ஆகும். இது 11 நேர வலயங்களுக்கு விரிவடைந்தும், 14 நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டும் உள்ளது.[d] உலகின் ஒன்பதாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடும், ஐரோப்பாவின் மிக அதிக மக்கள் தொகையுடைய நாடும் இதுவாகும். உருசியா அதிக அளவு நகரமயமாக்கப்பட்ட ஒரு நாடாகும். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட 16 மக்கள் தொகை மையங்களை இது உள்ளடக்கியுள்ளது. மாசுகோ இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். சென் பீட்டர்சுபெர்கு இதன் இரண்டாவது மிகப் பெரிய நகரமும், இதன் பண்பாட்டுத் தலைநகரமும் ஆகும்.

விரைவான உண்மைகள் உருசியக் கூட்டரசுRussian Federation, தலைநகரம் ...

கிழக்கு இசுலாவியர்கள் ஐரோப்பாவில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட குழுவாக பொ. ஊ. 3ஆம் மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வளர்ச்சி அடைந்தனர். முதல் கிழக்கு இசுலாவிய அரசான கீவ ருஸ் 9-ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்தது. 988-இல் பைசாந்தியப் பேரரசிடமிருந்து கிழக்கு மரபு வழிக் கிறித்தவத்தை இது பின்பற்றத் தொடங்கியது. கீவ ருஸ்ஸானது இறுதியாகக் கலைக்கப்பட்டது. பிறகு உருசிய நிலங்களின் ஒன்றிணைப்புக்கு மாசுகோவின் மாட்சி மிக்க வேள் பகுதி தலைமை தாங்கியது. 1547-இல் உருசியாவின் சாராட்சி அறிவிக்கப்பட்டதற்கு வழி வகுத்தது. உருசியாவானது படையெடுப்பு, இணைப்பு, உருசிய நாடு காண் பயணிகளின் முயற்சிகள் போன்றவற்றின் வழியாகப் பரந்து விரிந்தது. உருசியப் பேரரசாக வளர்ச்சியடைந்தது. வரலாற்றின் மூன்றாவது மிகப் பெரிய பேரரசாக இது இன்றும் தொடருகிறது. எனினும், 1917 உருசியப் புரட்சியுடன் உருசிய முடியாட்சியானது ஒழிக்கப்பட்டது. உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடைமைக் குடியரசால் இறுதியாக இடம் மாற்றப்பட்டது. உலகின் முதல் அரசியலமைப்பு ரீதியிலான சோசலிசக் குடியரசு இது தான். உருசிய உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடைமைக் குடியரசானது சோவியத் ஒன்றியத்தை மூன்று பிற சோவியத் குடியரசுகளுடன் சேர்த்து நிறுவியது. இதில் சோவியத் ஒன்றியம் மிகப் பெரியதாகவும், முதன்மையான உறுப்பினராகவும் இருந்தது. பல தசம இலட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பில் சோவியத் ஒன்றியமானது 1930-களில் வேகமாகத் தொழில் புரட்சிக்கு உள்ளாகியது. கிழக்குப் போர் முனையில் பெருமளவிலான முயற்சிகளுக்குத் தலைமை தாங்கியதன் மூலம் இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்காக பிந்தைய காலத்தில் இது ஒரு தீர்க்கமான பங்கை ஆற்றியது. பனிப்போர் தொடங்கியதுடன் பண்பாட்டுப் பேரரசுவாதம் மற்றும் பன்னாட்டு செல்வாக்கிற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இது போட்டியிட்டது. மனிதன் உருவாக்கிய முதல் செயற்கைக் கோள் மற்றும் விண்வெளிக்கு முதல் மனிதன் பயணித்தது உள்ளிட்ட மிக முக்கியமான உருசியத் தொழில்நுட்பச் சாதனைகளில் சிலவற்றை 20ஆம் நூற்றாண்டின் சோவியத் சகாப்தமானது கண்டது.

1991-இல் உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடைமைக் குடியரசானது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து உருசியக் கூட்டமைப்பாக உருவாகியது. புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது. இது ஒரு கூட்டாட்சி பகுதி-அரசுத் தலைமை ஆட்சி அமைப்பை நிறுவியது. தற்போதைய நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உருசியாவின் அரசியலமைப்பானது விளாதிமிர் பூட்டினின் கீழ் உள்ளது. முந்தைய சோவியத் அரசுகள் மற்றும் பிற நாடுகளின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சண்டைகளில் உருசியாவானது இராணுவ ரீதியாகப் பங்கெடுத்துள்ளது. 2008-இல் சார்சியாவுடனான இதன் போர் மற்றும் 2014-இலிருந்து உக்குரைனுடனான இதன் போர் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

உருசியாவானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஒரு நிரந்தர உறுப்பினராகும். ஜி-20, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ், ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு மற்றும் உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் ஓர் உறுப்பினர் ஆகும். விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு, மற்றும் ஐரோவாசியப் பொருளாதார ஒன்றியம் போன்ற சோவியத் காலத்துக்குப் பிந்தைய அமைப்புகளின் ஒரு முன்னணி உறுப்பினர் அரசாக இது உள்ளது. அணு ஆயுதங்களின் மிகப் பெரிய கையிருப்பையும், உலகின் மூன்றாவது மிக அதிக இராணுவச் செலவீனத்தையும் இது கொண்டுள்ளது. உருசியா பொதுவாக ஓர் உலக வல்லமையாகவும், ஒரு பிராந்திய சக்தியாகவும் கருதப்படுகிறது. மக்களாட்சி, மனித உரிமைகள் மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகிய அளவீடுகளில் உருசியா பன்னாட்டு அளவில் மிகக் குறைவான தரநிலையைக் கொண்டுள்ளது. அதிக அளவிலான ஊழலையும் இந்த நாடு கொண்டுள்ளது. 2024-ஆம் ஆண்டின் நிலவரப்படி உருசியா ஓர் உயர்-வருமானப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் 11-ஆவது இடத்திலும், கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி 4-ஆவது இடத்திலும் உள்ளது. இதற்கு இது தன் பரந்த கனிம மற்றும் எரி பொருள் வளங்களைச் சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு உருசியாவாகும். உருசியா 32 யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களுக்குத் தாயகமாக உள்ளது.

Remove ads

பெயர்க் காரணம்

ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியின்படி, ஆங்கிலத்தில் "இரசியா" என்ற பெயர் முதன்முதலில் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது, இது 11 ஆம் நூற்றாண்டிலும், 12 ஆம் நூற்றாண்டின் பிரித்தானிய மூலங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு, இடைக்கால இலத்தீன் மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டது. உருசியர்களைக் குறிக்கும் உருசி மற்றும் -இயா என்ற பின்னொட்டு ஆகியவற்றிலிருந்து இது தருவிக்கப்பட்டுள்ளது.[21][22]

ருஸ்கி (русский) என்ற பெயர்ச்சொல், பெயரடை ஆகியன உருசிய இன மக்களைக் குறிக்கிறது. ருஸ்கீஸ்க்கிய் (российский) என்ற பெயரடை இன வேறுபாடின்றி உருசியக் குடிமக்களைக் குறிக்கிறது. அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட பெயர்ச்சொல்லான ரசியானின் (россиянин) என்ற சொல்லும் உருசிய அரசின் குடிமகன் என்ற பொருளில் புழங்குகிறது.[23][24]

பயன்படுத்தப்பட்ட மிகப் பழமையான பெயர்ச்சொற்கள் "ருஸ்" (Русь), "உருசிய நிலம்" (Русская земля, உருஸ்கயா சிம்லியா) ஆகியனவாகும்.[25] 'உருஸ்' என்ற சொல் ரூரிக்கிட் வம்சத்தின் மூன்று உறுப்பினர்கள் தோன்றிய சுவீடியப் பழங்குடியினரான உருஸ் மக்களிடமிருந்து பெறப்பட்டது.[26] சுவீடியர்களைக் குறிக்கும் 'ருட்சி' என்ற பின்னிய மொழிச் சொல்லும் ஒரே தோற்றத்தைக் கொண்டுள்ளது.[27] நவீன வரலாற்றியலில், தொடக்க இடைக்கால கிழக்கு சிலாவிக் அரசு பொதுவாக இதன் தலைநகரத்தின் பெயரால் 'கீவ ருஸ்' என்று குறிப்பிடப்படுகிறது.[28] 'உருஸ்'-இற்கான மற்றொரு இடைக்கால இலத்தீன் பெயர் உருத்தேனியா ஆகும்.[29]

உருசிய மொழியில், நாட்டின் தற்போதைய பெயர், ரஸ்ஸீயா (Росси́я) பைசாந்தியக் கிரேக்கப் பெயரான 'Ρωσία' (ரொசீயா) என்பதிலிருந்து வந்தது.[30] 'ரசீயா' என்ற பெயர் முதன்முதலில் 1387 இல் சான்றளிக்கப்பட்டது.[31] 15-ஆம் நூற்றாண்டில் உருசிய மூலங்களில் 'ரசீயா' என்ற பெயர் தோன்றியது. மேலும், ஒருங்கிணைந்த உருசியப் பேரரசின் மையமாக மாசுகோ எழுச்சி பெற்றபோது, 'ருஸ்' என்ற வட்டாரப் பெயர் ஒதுக்கப்படத் தொடங்கியது.[32] இருப்பினும், 17-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, இந்த நாடு அதன் மக்களால் பெரும்பாலும் "ருஸ்", "உருசிய நிலம்", "மாசுகோ அரசு" என்று குறிப்பிடப்பட்டது.[33][23]

1721 ஆம் ஆண்டில், முதலாம் பேதுரு மன்னர் உருசியப் பேரரசை (இரசீசுக்கயா இம்பீரியா) அறிவித்தார்.[33] இரசீயா என்ற பெயர் பன்னாட்டு உருசியப் பேரரசுக்கும் பின்னர் நவீன உருசிய அரசுக்கும் பொதுவான பெயராகப் பயன்படுத்தப்பட்டது.[34] இரசீயா என்பது உருசிய இனத்தவர் உட்பட ஒரு மேலாதிக்க அடையாளத்தைக் குறிப்பதால், ருஸ்கி என்ற இனப்பெயரிலிருந்து வேறுபடுகிறது.[34] 1917 உருசியப் புரட்சி, 1918 உருசிய சோவியத் சோசலிசக் குடியரசுப் பிரகடனத்திற்குப் பிறகு, அரசின் தலைப்பில் "இரசியன்" என்பதை ருஸ்கயா என்பதற்குப் பதிலாக இரசீசுக்கயா என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் முந்தையது ஒரு பன்னாட்டு அரசைக் குறிக்கிறது, பிந்தையது பல்லினப் பரிமாணங்களைக் கொண்டிருந்தது.[35] நவீன உருசிய மொழியில், பழைய உருசியாவைக் குறிக்க ருஸ் என்ற பெயர் இன்னும் கவிதை அல்லது உரைநடையில் பயன்படுத்தப்படுகிறது.[28]

Remove ads

வரலாறு

தொடக்க கால வரலாறு

உருசியாவில் முதல் மனிதக் குடியிருப்பானது முன் கற்காலத்தின் பிந்தைய பகுதியின் தொடக்கத்தைச் சேர்ந்த ஒல்தோவன் காலத்திற்குக் காலமிடப்படுகிறது. சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓமோ இரெக்டசுவின் மனிதர்கள் தெற்கு உருசியாவின் தமன் தீபகற்பத்திற்கு இடம் பெயர்ந்தனர்.[36] சுமார் 15 இலட்சம் ஆண்டுகள் பழமையான தீக்கல் கருவிகள் வடக்குக் காக்கேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[37] அல்த்தாய் மலைத்தொடர்களில் உள்ள தெனிசோவா குகையிலிருந்து எடுக்கப்பட்ட கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு உடல்கள் மிகப் பழமையான தெனிசோவா மனிதன் 1,95,000-1,22,700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான் என மதிப்பிடுகின்றன.[38] பாதி நியாண்டர்தால் மற்றும் பாதி தெனிசோவா மனிதனின் ஒரு தொல் வழக்கான மனிதக் கலப்பினத்தைச் சேர்ந்த தென்னி எனும் புதைப் படிவங்கள் சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வாழ்ந்தனர். பிந்தைய கால குகையிலும் கூட இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.[39] சுமார் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, கடைசியாக எஞ்சிப் பிழைத்த நியாண்டர்தால்களில் சிலருக்குத் தாயகமாக உருசியா இருந்துள்ளது. மெசுமைசுகயா குகையில் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.[40]

உருசியாவில் தொடக்க கால நவீன மனிதனின் முதல் தடயமானது 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு சைபீரியாவில் கிடைக்கிறது.[41] உடல் அமைப்பில் நவீன மனிதர்களின் உயர் செறிவுடைய பண்பாட்டு எச்சங்களின் கண்டுபிடிப்பானது கோசுதியோங்கி-போர்ஸ்சியோவோ என்ற இடத்தில் குறைந்தது 40,000 ஆண்டுகளுக்கு முன்னரும்,[42] சுங்கிர் என்ற இடத்தில் 34,600 ஆண்டுகளுக்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களும் மேற்கு உருசியாவில் உள்ளன.[43] மனிதர்கள் ஆர்க்டிக் உருசியாவை குறைந்தது 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மமோந்தோவயா குர்யா என்ற இடத்தில் அடைந்தனர்.[44] சைபீரியாவைச் சேர்ந்த பண்டைக் கால வடக்கு ஐரோவாசிய மக்கள் மரபணு ரீதியாக மால்டா-புரேட் பண்பாட்டை ஒத்தவர்கள் ஆவர். பண்டைக் கால பூர்வகுடி அமெரிக்கர்கள் மற்றும் கிழக்கத்திய வேட்டையாடி-சேகரித்து உண்பவர்களுக்கு முக்கியமான மரபணுப் பங்களிப்பாளராக சைபீரியாவின் தொல்லியல் களங்களின் அபோந்தோவா கோரா தொல்லியல் வளாகத்தைச் சேர்ந்தோர் விளங்கினர்.[45]

Thumb
பொ. ஊ. மு. 3,300 மற்றும் 1,500க்கு இடையில் யம்னயா புல்வெளி மேய்ப்பாளர் மூதாதையர்களின் வெண்கலக் காலப் பரவல்.[46] தெற்கு சைபீரியாவைச் சேர்ந்த அபனசியேவோ பண்பாடும் இதில் உள்ளடங்கியுள்ளது.

குர்கன் கோட்பாடானது தெற்கு உருசியா மற்றும் உக்குரைனின் வோல்கா-தினேப்பர் பகுதியை ஆதி இந்தோ ஐரோப்பிய மக்களின் தாயகமாகக் குறிப்பிடுகிறது.[47] உக்குரைன் மற்றும் உருசியாவின் பான்டிக்-காசுப்பியப் புல்வெளியிலிருந்து தொடக்க கால இந்திய-ஐரோப்பியப் புலப் பெயர்வுகளானவை யம்னயா மூதாதையர்களையும், இந்திய-ஐரோப்பிய மொழிகளையும் ஐரோவாசியாவின் பெரும் பகுதி முழுவதும் பரப்பியது.[48][49] செப்புக் காலத்தில் பான்டிக்-காசுப்பியப் புல்வெளியில் நாடோடி மேய்ப்பாளர் வாழ்க்கை முறையானது வளர்ச்சியடையத் தொடங்கியது.[50] இபதோவோ,[50] சிந்தசுதா,[51] அர்கைம்,[52] மற்றும் பசிரிக்[53] போன்ற இடங்களில் இத்தகைய புல்வெளி நாகரிகங்களின் எச்சக் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[51] போர்க் களத்தில் குதிரைகளின் பயன்பாட்டின் தொடக்க காலத்தில் அறியப்பட்ட தடயங்களை இவை கொண்டுள்ளன. வடக்கு ஐரோப்பாவில் யூரலிய மொழிக் குடும்பத்தைப் பேசியவர்களின் மரபணுப் பங்களிப்பானது குறைந்தது 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் சைபீரியாவிலிருந்து தொடங்கிய புலப்பெயர்வால் வடிவம் பெற்றது.[54]

பொ. ஊ. 3 முதல் 4 வரையிலான நூற்றாண்டுகளில் தெற்கு உருசியாவில் ஒய்யம் எனும் கோத்திய இராச்சியமானது அமைந்திருந்தது. இது பிறகு ஊணர்களால் தாக்கப்பட்டது. பொ. ஊ. 3-ஆம் மற்றும் 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிரேக்கக் குடியேற்றங்களின் பின் வந்த ஓர் எலனிய அரசியல் அமைப்பான போசுபோரன் இராச்சியமானது[55] ஊணர்கள் மற்றும் ஐரோவாசிய ஆவர்கள் போன்ற போர்க் குணம் கொண்ட பழங்குடியினங்களால் தலைமை தாங்கப்பட்ட நாடோடிப் படையெடுப்புகளால் வீழ்ச்சியடைந்தது.[56] துருக்கியப் பூர்வீகத்தைக் கொண்ட கசர்கள் தெற்கே காக்கேசியாவில் இருந்து, கிழக்கே வோல்கா ஆற்று வடி நிலத்தைத் தாண்டியும், மற்றும் மேற்கே தினேப்பர் ஆற்றுக்கு அருகில் இருந்த கீவ் வரையிலிருந்த இடைப்பட்ட புல்வெளிகளை 10-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர்.[57] இதற்குப் பிறகு பெச்சேனெக்குகள் என்பவர்கள் ஒரு பெரிய கூட்டமைப்பை உருவாக்கினர். இது இறுதியாக குமன்கள் மற்றும் கிப்சாக்குகளால் வெல்லப்பட்டது.[58]

ஆதி இந்தோ-ஐரோப்பியர்களிடமிருந்து பிரிந்த இசுலாவியப் பழங்குடியினங்களில் உருசியர்களின் மூதாதையர்களும் ஒருவராவர். அண்.1,500 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவின் வடகிழக்குப் பகுதியில் இவர்கள் தோன்றினர்.[59] கிழக்கு இசுலாவியர்கள் படிப்படியாக மேற்கு உருசியாவில் (தோராயமாக நவீன மாசுகோ மற்றும் சென் பீட்டர்சுபெர்குக்கு இடைப்பட்ட பகுதி) இரு அலைகளாகக் குடியமர்ந்தனர். ஓர் அலையானது கீவிலிருந்து தற்கால சுசுதால் மற்றும் முரோம் பகுதிகளை நோக்கியும், மற்றொரு அலையானது போலோத்ஸ்கிலிருந்து வெலிக்கி நோவ்கோரோத் நகரம் மற்றும் ரோசுதோவ் நகரங்களை நோக்கியும் வந்தனது.[60] இசுலாவியப் புலப் பெயர்வுக்கு முன்னர் அந்நிலப்பரப்பில் பின்னோ-உக்ரிய மக்கள் வாழ்ந்து வந்தனர். 7-ஆம் நூற்றாண்டு முதல் புதிதாக வந்த கிழக்கு இசுலாவியர்கள் மெதுவாகப் பூர்வீக பின்னோ-உக்ரியகளைத் தங்களுக்குள் இணைத்துக் கொண்டனர்.[61][62]

கீவ ருஸ்

Thumb
1097-இல் லியுபெச் மன்றச் சந்திப்புக்குப் பிறகு கீவ ருஸ்

9-ஆம் நூற்றாண்டில் முதல் கிழக்கு இசுலாவிய அரசுகளின் நிறுவலானது வாராஞ்சியர்கள் எனப்படும் வைக்கிங்குகளின் வருகையோடு ஒத்துப் போகிறது. கிழக்கு பால்டிக் கடலில் இருந்து கருங்கடல் மற்றும் காசுப்பியன் கடல்களுக்கு நீண்டிருந்த நீர் வழிகளின் வழியாக துணிகர முயற்சியாக அவர்கள் வந்திருந்தனர். முதன்மை தொடர் வரலாறு எனும் உருசியா குறித்த நூலின் படி ருஸ் மக்களைச் சேர்ந்த ஒருவரான உருரிக் என்ற பெயருடையவர் 862-இல் வெலிக்கி நோவ்கோரோத் நகரத்தின் ஆட்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 882-இல் இவருக்குப் பின் வந்த ஒலேக் தெற்கு நோக்கித் துணிகர முயற்சியாகச் சென்று கீவைக் கைப்பற்றினார். கீவானது முன்னர் கசர்களுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தது.[61] உருரிக்கின் மகனான இகோர் மற்றும் இகோரின் மகனான இசுவியாதோசுலாவ் ஆகியோர் இறுதியாக அனைத்து உள்ளூர் கிழக்கு இசுலாவியப் பழங்குடியினங்களையும் கீவ ஆட்சிக்கு அடி பணிய வைத்தனர். கசர் ககானரசை அழித்தனர்.[63] பைசாந்தியம் மற்றும் பாரசீகத்திற்குள் ஏராளமான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினர்.[64][65]

10 முதல் 11-ஆம் நூற்றாண்டுகளில் கீவ ருஸ் ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும் மிகச் செழிப்பான அரசுகளில் ஒன்றாக உருவானது. பேரரசர் விளாதிமிர் (980–1015) மற்றும் அவரது மகன் புத்திசாலி யரோசுலாவ் (1019–1054) ஆகியோரின் ஆட்சிக் காலங்களானவை கீவின் பொற்காலமாகக் கருதபப்டுகின்றன. பைசாந்தியத்தில் இருந்து கிழக்கு மரபுவழிக் கிறித்தவத்தை இவர்கள் ஏற்றுக் கொண்டது மற்றும் உருஸ்கயா பிராவ்டா எனும் முதல் கிழக்கு இசுலாவிய எழுதப்பட்ட சட்டங்களின் உருவாக்கம் ஆகியவற்றை இக்கால கட்டமானது கண்டது.[61] நில மானிய முறைமை மற்றும் மையப்படுத்தப்படாத அரசின் காலமானது வந்தது. கீவ ருஸ்ஸை ஒன்றிணைந்து ஆட்சி செய்து கொண்டிருந்த உருரிக் அரசமரபின் உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியான சண்டைகளை இது குறித்தது. கீவின் ஆதிக்கமானது குன்றியது. வட கிழக்கே விளாதிமிர்-சுசுதால், வடக்கே நோவ்கோரோத் குடியரசு மற்றும் தென் மேற்கே கலீசியா-வோலினியா ஆகியவற்றுக்கு இது அனுகூலமாக அமைந்தது.[61] 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் கீவானது அதன் முதன்மை நிலையை இழந்தது. கீவ ருஸ்ஸானது வெவ்வேறு வேள் பகுதிகளாகத் துண்டானது.[66] 1169-இல் இளவரசர் ஆந்த்ரேய் போகோலியூப்ஸ்கி கீவைச் சூறையாடினார். விளாதிமிரைத் தனது மையப் பகுதியாக உருவாக்கினார்.[66] வட கிழக்குப் பகுதிக்கு அரசியல் சக்தி மாறுவதற்கு இது வழி வகுத்தது.[61]

இளவரசர் அலெக்சாந்தர் நெவ்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட நோவ்கோரோதியர்கள் 1240-இல் நெவா யுத்தத்தில் படையெடுத்து வந்த சுவீடுகளை முறியடித்தனர்.[67] மேலும், 1242-இல் பனிக் கட்டி யுத்தத்தில் செருமானிய சிலுவைப் போர் வீரர்களையும் தோற்கடித்தனர்.[68]

கீவ ருஸ்ஸானது இறுதியாக 1237-1240-ஆம் ஆண்டின் மங்கோலியப் படையெடுப்பில் வீழ்ந்தது. கீவ் மற்றும் பிற நகரங்கள் சூறையாடப்படுவதில் இது முடிவடைந்தது. மேலும், மக்களில் ஒரு பெரும் பங்கினரின் இறப்பிற்கும் காரணமானது.[61] பிற்காலத்தில் தாதர்கள் என்று அறியப்பட்ட படையெடுப்பாளர்கள் தங்க நாடோடிக் கூட்டம் எனும் அரசை அமைத்தனர். அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு உருசியாவை இவர்களே ஆண்டனர்.[69] மங்கோலியர்களுக்குத் திறை செலுத்த ஒப்புக் கொண்டதற்குப் பிறகு நோவ்கோரோத் குடியரசு மட்டும் அயல்நாட்டு ஆக்கிரமிப்பில் இருந்து தப்பித்தது.[61] கலீசியா-வோலினியாவானது லித்துவேனியா மற்றும் போலந்தால் பிற்காலத்தில் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், நோவ்கோரோத் குடியரசானது வடக்கே தொடர்ந்து செழித்திருந்தது. வட கிழக்கே கீவ ருஸ்ஸின் பைசாந்திய-இசுலாவியப் பாரம்பரியங்களானவை பின்பற்றப்பட்டு உருசிய அரசானது உருவாக்கப்பட்டது.[61]

மாசுகோவின் மாட்சி மிக்க வேள் பகுதி

Thumb
குலிகோவோ யுத்தத்திற்கு முன் திரினிட்டி செர்கியசு லவ்ரா தேவாலயத்தில் இளவரசர் திமித்ரி தோன்ஸ்கோயை ஆசீர்வதிக்கும் ஆன்மீகத் தலைவர் ராதோனெசின் செர்கியசு. ஓவியர் எர்னஸ்ட் லிஸ்னரின் ஓர் ஓவியத்தில் உள்ள சித்தரிப்பு.

கீவ ருஸ்ஸின் அழிவானது இறுதியாக மாசுகோவின் மாட்சி மிக்க வேள் பகுதியின் வளர்ச்சியைக் கண்டது. இந்த வேள் பகுதி விளாதிமிர்-சுசுதாலின்[70](pp11–20) ஒரு பகுதியாகத் தொடக்கத்தில் இருந்தது. மங்கோலிய-தாதர்களின் நிலப்பகுதிக்குள் இன்னும் தொடர்ந்து இருந்தாலும் தங்களது மறைமுக நடவடிக்கைகள் மூலம் 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் மாசுகோவானது அதன் செல்வாக்கை நிலை நிறுத்தத் தொடங்கியது.[71] "உருசிய நிலங்களை ஒன்றிணைப்பதில்" முன்னணி சக்தியாக படிப்படியாக உருவானது.[72][73] 1325-இல் மாசுகோவுக்கு உருசிய மரபுவழித் திருச்சபைத் தலைவரின் இருக்கையானது மாற்றப்பட்ட போது மாசுகோவின் செல்வாக்கு அதிகரித்தது.[74] மாசுகோவின் கடைசி எதிரியான நோவ்கோரோத் குடியரசானது முதன்மையான உரோம வர்த்தக மையம் மற்றும் அன்சியாதியக் குழுமத்தின் தூரக் கிழக்குத் துறைமுகமாகச் செழித்திருந்தது.[75]

மாசுகோவின் இளவரசர் திமித்ரி தோன்ஸ்கோயால் தலைமை தாங்கப்பட்ட உருசிய வேள் பகுதிகளின் ஒன்றிணைந்த இராணுவமானது 1380-இல் குலிகோவோ யுத்தத்தில் மங்கோலிய-தாதர்களுக்கு ஒரு மைல் கல் தோல்வியைக் கொடுத்தது.[61] மாசுகோவானது படிப்படியாக அதன் தலைமை வேள் பகுதி மற்றும் சுற்றியிருந்த வேள் பகுதிகளை உள்ளிழுத்துக் கொண்டது. திவேர் மற்றும் நோவ்கோரோத் போன்ற முந்தைய வலிமையான எதிரிகளும் இதில் அடங்குவர்.[72]

மூன்றாம் இவான் ("பேரரசர் இவான்") தங்க நாடோடிக் கூட்டத்தின் கட்டுப்பாட்டைத் தூக்கி எறிந்தார். மாசுகோவின் நிலப்பரப்பின் கீழ் ஒட்டு மொத்த வடக்கு ருஸ்ஸையும் ஒன்றிணைத்தார். "அனைத்து ருஸ்ஸின் மாட்சி மிக்க கோமகன்" என்ற பட்டத்தைக் கொண்ட முதல் உருசிய ஆட்சியாளர் இவராவார். 1453-இல் கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மாசுகோவானது பைசாந்தியப் பேரரசின் மரபின் வழித் தோன்றல் என உரிமை கோரியது. கடைசி பைசாந்தியப் பேரரசர் 11-ஆம் கான்சுடன்டைனின் உடன் பிறப்பின் மகளான சோபியா பலையோலோகினாவை மூன்றாம் இவான் மணந்து கொண்டார். பைசாந்தியச் சின்னமான இரட்டைத் தலைக் கழுகைத் தன்னுடைய சொந்த சின்னமாக்கினார். இறுதியாக உருசியாவின் சின்னமாக்கினார்.[72] 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடைசி சில சுதந்திர உருசிய அரசுகளை இணைத்ததன் மூலம் ஒட்டு மொத்த உருசியாவையும் மூன்றாம் வாசிலி ஒன்றிணைத்தார்.[76]

உருசியாவின் சாராட்சி

Thumb
நான்காம் இவான் உருசியாவின் மாட்சிமிக்க இளவரசராக 1533 முதல் 1547 வரை திகழ்ந்தார். பிறகு 1584-இல் இவரது இறப்பு வரை உருசியாவின் ஜார் மன்னராகத் திகழ்ந்தார்.

உருசியாவே மூன்றாவது உரோம் என்ற கருத்தின் அடிப்படையில் மாட்சி மிக்க கோமகனான நான்காம் இவான் ("பயங்கர இவான்") அதிகாரப்பூர்வமாக 1547-இல் உருசியாவின் முதல் ஜாராக (பொருள்: சீசர்) மகுடம் சூட்டிக் கொண்டார். ஜார் மன்னர் சட்டங்களின் ஒரு புதிய வடிவத்தை (1550-இன் சுதேப்னிக் சட்டம்) அறிவித்தார். முதல் உருசிய நிலமானிய முறையின் பிரதிநிதித்துவ அமைப்பை (செம்ஸ்கி சோபோர் அமைப்பு) நிறுவினார். இராணுவத்தைப் புதுப்பித்தார். மத குருமார்களின் செல்வாக்கைக் குறைத்தார். உள்ளூர் அரசாங்கத்தை மறு ஒருங்கிணைப்புச் செய்தார்.[72] இவரது நீண்ட ஆட்சிக் காலத்தின் போது வோல்கா ஆற்றுப் பக்கவாட்டில் இருந்த கசன் மற்றும் அசுதிரகான்[77] மற்றும் தென் மேற்கு சைபீரியாவில் இருந்த சைபீர் கானரசு ஆகிய மூன்று தாதர் கானரசுகளை இணைத்ததன் மூலம் ஏற்கனவே பெரியதாக இருந்த உருசிய நிலப்பரப்பைக் கிட்டத்தட்ட இரு மடங்காக இவான் ஆக்கினார். இறுதியாக, 16-ஆம் நூற்றாண்டின் முடிவில் உருசியாவானது உரால் மலைகளுக்குக் கிழக்கே விரிவடையத் தொடங்கியது.[78] எனினும், பால்டிக் கடற்கரை மற்றும் கடல் வாணிபத்திற்கான வாய்ப்புக்காக போலந்து இராச்சியம், லித்துவேனியாவின் மாட்சி மிக்க வேள் பகுதி (பிறகு இவை போலந்து-லித்துவேனியப் பொது நலவாயமாக இணைக்கப்பட்டன), சுவீடன் இராச்சியம் மற்றும் டென்மார்க்-நார்வே ஆகியவற்றின் கூட்டணிக்கு எதிராக நீண்ட மற்றும் தோல்வியடைந்த லிவோனியப் போரால் ஜார் ஆட்சியானது பலவீனமடைந்தது.[79] 1572-இல் முக்கியமான மோலோதி யுத்தத்தில் படையெடுத்து வந்த கிரிமிய தாதர்களின் இராணுவமானது முழுவதுமாகத் தோற்கடிக்கப்பட்டது.[80]

Thumb
உருசிய ஜார் மன்னர் பியோதோர் கோதுனோவின் உருசிய வரைபடம். 1614-இல் டச்சு வரைபடவியலாளர் எச்செல் கெரிட்சால் இது பதிப்பிக்கப்பட்டது.

இவானின் மகன்களின் இறப்பானது 1598-இல் பண்டைக் கால உரூரிக் அரசமரபின் முடிவைக் குறித்தது. 1601-1603-ஆம் ஆண்டின் அழிவை ஏற்படுத்திய பஞ்சம், உரிமை கோரியவர்களின் ஆட்சி மற்றும் 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரச்சசிகளின் காலத்தின் போது அயல் நாட்டவரின் தலையீடு ஆகியவை உள்நாட்டுப் போருக்கு வழி வகுத்தன.[81] இச்சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போலந்து-லித்துவேனியா பொதுநலவாயமானது உருசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. தலைநகரம் மாசுகோ வரை விரிவடைந்தது.[82] 1612-இல் வணிகர் குசமா மினின் மற்றும் இளவரசர் திமித்ரி போசார்ஸ்கி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட உருசியத் தன்னார்வலர்களின் படையால் போலந்துக் காரர்கள் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.[83] செம்ஸ்கி சோபோரின் முடிவின் படி, 1613-இல் ரோமனோவ் அரசமரபானது அரியணைக்கு வந்தது. பிரச்சினையில் இருந்து நாடானது அதன் படிப்படியான மீள்வைத் தொடங்கியது.[84]

உருசியாவானது அதன் நிலப்பரப்பு விரிவாக்கத்தை 17-ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. இது கோசாக் மக்களின் காலமாக இருந்தது.[85] 1654-இல் உக்குரைனியத் தலைவரான போக்தான் கிமேல்னித்ஸ்கி உருசிய ஜார் அலெக்சிசின் பாதுகாப்பின் கீழ் உக்குரைனை அளிக்க முன் வந்தார். இந்த வாய்ப்பை அலெக்சிசு ஏற்றுக் கொண்டது மற்றொரு உருசிய-போலந்துப் போருக்கு வழி வகுத்தது. இறுதியாக தினேப்பர் ஆற்றை எல்லையாகக் கொண்டு உக்குரைனானது பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி (இடது கரை உக்குரைன் மற்றும் கீவ்) உருசிய ஆட்சிக்குக் கீழ் விடப்பட்டது.[86] கிழக்கே பரந்த சைபீரியாவின் வேகமான உருசிய பயண ஆய்வு மற்றும் குடியேற்றமானது தொடர்ந்தது. மதிப்பு மிக்க விலங்கு உரோமங்கள் மற்றும் தந்தங்களுக்காக வேட்டை தொடர்ந்தது. உருசிய நாடு காண் பயணிகள் முதன்மையாகக் கிழக்கே சைபீரிய ஆற்று வழிகளின் வழியாக முதன்மையாக உந்திச் சென்றனர். 17-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வாக்கில் கிழக்கு சைபீரியாவில் சுகோத்கா மூவலந்தீவில், அமுர் ஆற்றின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் அமைதிப் பெருங்கடலின் கடற்கரை ஆகிய பகுதிகளில் உருசியக் குடியிருப்புகள் இருந்தன.[85] 1648-இல் செம்யோன் தெசுனியோவ் பெரிங் நீரிணையைக் கடந்த முதல் ஐரோப்பியரானார்.[87]

உருசியப் பேரரசு

Thumb
நான்காம் இவானின் மகுடம் சூட்டுதல் முதல் முதலாம் பேதுருவின் இறப்பு வரையிலான உருசியாவின் விரிவு மற்றும் நிலப்பரப்புப் பரிணாம வளர்ச்சி

முதலாம் பேதுருவின் கீழ் 1721-இல் உருசியாவானது ஒரு பேரரசாக அறிவிக்கப்பட்டது. ஐரோப்பாவின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றாகத் தன்னைத் தானே நிறுவிக் கொண்டது. 1682 முதல் 1725 வரை ஆட்சியில் இருந்த பேதுரு பெரும் வடக்குப் போரில் (1700-1721) சுவீடனைத் தோற்கடித்தார். கடல் மற்றும் கடல் வணிகத்துக்கு உருசியாவின் வாய்ப்பை உறுதி செய்தார். 1703-இல் பால்டிக் கடலில் உருசியாவின் புதிய தலைநகரமாக சென் பீட்டர்சுபெர்கை நிறுவினார். தன் ஆட்சிக் காலம் முழுவதும் பெரும் சீர்திருத்தங்களைப் பேதுரு கொண்டு வந்தார். உருசியாவுக்குக் குறிப்பிடத்தக்க மேற்கு ஐரோப்பியப் பண்பாட்டுத் தாக்கங்களை இந்நடவடிக்கைகள் கொண்டு வந்தது.[88] இவருக்குப் பின் முதலாம் கேத்தரீன் (1725-1727), இரண்டாம் பேதுரு (1727-1730), மற்றும் அன்னா ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர். முதலாம் பேதுருவின் மகளான எலிசபெத்தின் (ஆட்சி. 1741-1762) ஆட்சிக் காலமானது உருசியா ஏழாண்டுப் போரில் (1756-1763) பங்கெடுத்ததைக் கண்டது. இச்சண்டையின் போது உருசியத் துருப்புகள் கிழக்கு புருசியா மீது தாக்குதல் ஓட்டம் நடத்தின. பெர்லினை அடைந்தன.[89] எனினும், எலிசபெத்தின் இறப்பின் போது இந்த அனைத்துப் படையெடுப்பு வெற்றிப் பகுதிகளும் புருசியாவுக்கு ஆதரவான மூன்றாம் பேதுருவால் புருசிய இராச்சியத்திடம் திருப்பி அளிக்கப்பட்டன.[90]

இரண்டாம் கேத்தரீன் ("பேரரசி கேத்தரீன்", ஆட்சி. 1762-1796) பிறகு ஆட்சி புரிந்தார். உருசியாவின் அறிவொளிக் காலத்திற்குத் தலைமை தாங்கினார். போலந்து-லித்துவேனியப் பொது நலவாயத்தின் மீதான உருசிய அரசியல் கட்டுப்பாட்டை இவர் விரிவாக்கினார். பொது நலவாயத்தின் பெரும்பாலான நிலப்பரப்புகளை உருசியாவுக்குள் இணைத்தார். உருசியாவை ஐரோப்பாவிலேயே மிக அதிக மக்கள் தொகையுடைய நாடாக ஆக்கினார்.[91] தெற்கே உதுமானியப் பேரரசுக்கு எதிரான வெற்றிகரமான உருசிய-துருக்கியப் போர்களுக்குப் பிறகு கேத்தரீன் கிரிமியக் கானரசைக் கலைத்தது மற்றும் கிரிமியாவை இணைத்ததன் மூலம் உருசியாவின் எல்லையைக் கருங்கடலுக்கு நீட்டித்தார்.[92] உருசிய-பாரசீகப் போர்களில் வழியாக கஜர் ஈரான் மீதான வெற்றிகளின் விளைவாக 19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வாக்கில் உருசியாவானது காக்கேசியாவையும் கூட வென்றது.[93] கேத்தரீனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவரும், அவரது மகனுமான பவுல் நிலையற்றவராக இருந்தார். உள்நாட்டு விஷயங்களிலேயே முதன்மையாகக் கவனத்தைக் கொண்டிருந்தார்.[94] அவரது குறுகிய ஆட்சிக் காலத்தைத் தொடர்ந்து கேத்தரீனின் உத்தியானது முதலாம் அலெக்சாந்தராலும் (1801-1825) தொடரப்பட்டது. 1809-இல் பலவீனமடைந்து இருந்த சுவீடனிடமிருந்து பின்லாந்தைப் பறித்தார்.[95] 1812-இல் உதுமானியர்களிடம் இருந்து பெச்சராபியாவைக் கைப்பற்றினார்.[96] வட அமெரிக்காவில் அலாஸ்காவை முதலில் அடைந்து குடியேற்றமாக்கிய முதல் ஐரோப்பியர்களாக உருசியர்கள் உருவாயினர்.[97] 1803-1806-இல் உலகைச் சுற்றிய முதல் உருசியப் பயணமானது நடத்தப்பட்டது.[98] 1820-இல் அந்தாட்டிக்கா கண்டத்தை ஓர் உருசியப் பயணக் குழுவானது கண்டுபிடித்தது.[99]

பெரும் சக்தியாதல், மற்றும் சமூகம், அறிவியல் மற்றும் கலைகளின் வளர்ச்சி

Thumb
மாசுகோவில் இருந்து நெப்போலியன் பின் வாங்குதல். ஓவியர் ஆல்பிரெச்ட் ஆதாம். ஆண்டு 1851.

நெப்போலியப் போர்களின் போது பல்வேறு ஐரோப்பிய சக்திகளுடன் உருசியா கூட்டணிகளில் இணைந்தது. பிரான்சுக்கு எதிராகப் போரிட்டது. நெப்போலியன் தனது சக்தியின் உச்சத்தில் 1812-இல் நடத்திய உருசியா மீதான பிரெஞ்சுப் படையெடுப்பானது மாசுகோவை அடைந்தது. மிகக் கடுமையான உருசியக் குளிருடன், உருசியர்களின் பிடிவாதமான எதிர்ப்பானது இணைந்து இந்தப் படையெடுப்பு இறுதியாகத் தோல்வியில் முடியக் காரணமானது. படையெடுத்து வந்தவர்களுக்கு ஓர் அழிவுகரமான தோல்விக்கு வழி வகுத்தது. இதில் அனைத்து ஐரோப்பிய நாட்டவரையும் கொண்டிருந்த நெப்போலியனின் பெரும் இராணுவமானது ஒட்டு மொத்த அழிவைச் சந்தித்தது. மிக்கைல் குதுசோவ் மற்றும் மைக்கேல் ஆந்த்ரியாசு பர்க்லேய் டி டாலி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஏகாதிபத்திய உருசிய இராணுவமானது நெப்போலியனை வெளியேற்றியது. ஆறாம் கூட்டணியின் போரில் ஐரோப்பா முழுவதும் நெப்போலியனைத் துரத்தியது. இறுதியாகப் பாரிசுக்குள் நுழைந்தது.[100] வியன்னா மாநாட்டில் உருசியக் குழுவின் கட்டுப்பாட்டை முதலாம் அலெக்சாந்தர் கொண்டிருந்தார். நெப்போலியனின் காலத்துக்குப் பிந்தைய ஐரோப்பாவின் வரைபடத்தைத் தீர்மானித்தது இந்த வியன்னா மாநாடு ஆகும்.[101]

மேற்கு ஐரோப்பாவுக்குள் நெப்போலியனைத் துரத்திச் சென்ற அதிகாரிகள் தாராளமய யோசனைகளை பதிலுக்கு உருசியாவுக்கள் கொண்டு வந்தனர். 1825-ஆம் ஆண்டு வெற்றியடையாத திசம்பர் புரட்சியின் போது ஜார் மன்னரின் சக்திகளைக் குறைக்க முயற்சித்தனர்.[102] மாற்றத்தை விரும்பாத முதலாம் நிக்கோலசின் (1825-1855) ஆட்சியின் முடிவில் கிரிமியாப் போரில் தோல்வியின் காரணமாக இது தடைப்பட்டது. முதலாம் நிக்கோலசின் ஆட்சியானது ஐரோப்பாவில் உருசியாவின் சக்தி மற்றும் செல்வாக்கின் உச்ச நிலையாகக் கருதப்படுகிறது.[103]

பெரும் தாராளமயச் சீர்திருத்தங்களும், முதலாளித்துவமும்

நிக்கோலசுக்குப் பின் வந்த இரண்டாம் அலெக்சாந்தர் (1855-1881) குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாடு முழுவதும் சட்டங்கள் மூலம் கொண்டு வந்தார். இதில் 1861-ஆம் ஆண்டின் சம உரிமை அளிக்கும் சீர்திருத்தமும் அடங்கும்.[104] தொழில்மயமாக்கத்தை இத்தகைய சீர்திருத்தங்கள் ஊக்குவித்தன. ஏகாதிபத்திய உருசிய இராணுவத்தை நவீனமயமாக்கின. இந்த இராணுவமானது 1877-1878-ஆம் ஆண்டின் உருசிய-துருக்கியப் போருக்குப் பிறகு உதுமானிய ஆட்சியிலிருந்து பெரும்பாலான பால்கன் குடாவை விடுதலை செய்தது.[105] 19-ஆம் மற்றும் தொடக்க 20-ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான காலத்தின் போது நடு மற்றும் தெற்கு ஆசியாவில் ஆப்கானித்தான் மற்றும் அதன் அண்டை நிலப்பரப்புகள் மீது உருசியாவும், பிரிட்டனும் ஒருவர் மற்றொருவரை வெற்றி கொள்வதற்காகச் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டன. இரண்டு முதன்மையான ஐரோப்பிய பேரரசுகளுக்கு இடையிலான இப்பகைமையானது பெரும் விளையாட்டு என்று பிற்காலத்தில் அறியப்பட்டது.[106]

19-ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியானது உருசியாவில் வேறுபட்ட சமூக இயக்கங்களின் வளர்ச்சியைக் கண்டது. இரண்டாம் அலெக்சாந்தர் 1881-ஆம் ஆண்டு புரட்சியாளர்களால் அரசியல் கொலை செய்யப்பட்டார்.[107] அவரது மகன் மூன்றாம் அலெக்சாந்தரின் (1881-1894) ஆட்சியில் தாராளமயமானது குறைவாக இருந்தாலும் அமைதி அதிகமாக இருந்தது.[108]

அரசியலமைப்பு முடியாட்சியும், உலகப் போரும்

கடைசி உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசுக்குக் (1894-1917) கீழ் 1905-ஆம் ஆண்டின் உருசியப் புரட்சியானது உருசிய-சப்பானியப் போரின் அவமானகரமான தோல்வியால் தூண்டப்பட்டது.[109] இந்த புரட்சியானது ஒடுக்கப்பட்டது. கருத்து வெளிப்பாடு மற்றும் கூடல் சுதந்திரத்தை வழங்குதல், அரசியல் கட்சிகளை சட்டப்படி முறைமையாக்குதல், அரசு துமா எனப்படும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைப்பின் உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்களை (1906-ஆம் ஆண்டின் உருசிய அரசியலமைப்பு) விட்டுக் கொடுக்க அரசாங்கமானது கட்டாயப்படுத்தப்பட்டது.[110]

புரட்சியும், உள்நாட்டுப் போரும்

Thumb
பேரரசர் இரண்டாம் நிக்கலாசு மற்றும் ரோமனோவ் குடும்பத்தினர் போல்செவிக்குகளால் 1918-ஆம் ஆண்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

1914-இல் உருசியாவின் கூட்டாளி செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் அறிவிப்புச் செய்ததன் விளைவாக முதலாம் உலகப் போருக்குள் உருசியா நுழைந்தது.[111] இதன் முந்நேச நாட்டுக் கூட்டாளிகளிடமிருந்து தனித்து விடப்பட்டு இருந்தாலும் பல்வேறு போர் முனைகளில் சண்டையிட்டது.[112] 1916-இல் ஏகாதிபத்திய உருசிய இராணுவத்தின் புருசிலோவ் தாக்குதலானது ஆத்திரிய-அங்கேரிய இராணுவத்தைக் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்தது.[113] முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியாளர்கள் மீது ஏற்கனவே இருந்த பொது மக்களின் நம்பிக்கையின்மையானது போரின் செலவீனங்கள் அதிகரித்தது, அதிகப்படியான வீரர்கள் இழக்கப்பட்டது, மற்றும் ஊழல் மற்றும் துரோகம் குறித்த வதந்திகளால் ஆழமானது. 1917-ஆம் ஆண்டின் உருசியப் புரட்சிக்கு இந்த அனைத்துக் காரணங்களும் சூழ்நிலையை உருவாக்கின. இரு முதன்மையான செயல்பாடுகளின் மூலம் இப்புரட்சியானது நடத்தப்பட்டது.[114] 1917-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டாம் நிக்கலாசு பதவி விலகக் கட்டாயப்படுத்தப்பட்டார். இவரும், இவரது குடும்பமும் சிறைப்படுத்தப்பட்டனர். உருசிய உள்நாட்டுப் போரின் போது பிறகு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.[115] தங்களைத் தாமே தற்காலிக அரசு என்று அறிவித்துக் கொண்ட அரசியல் கட்சிகளின் ஓர் உறுதியற்ற கூட்டணியால் முடியாட்சியானது இடம் மாற்றப்பட்டது.[116] இக்கூட்டணியானது உருசியக் குடியரசை அறிவித்தது. 19 சனவரி [பழைய நாட்காட்டி 6 சனவரி] 1918-இல் உருசிய அரசியலமைப்பு அவையானது உருசியாவை ஒரு சனநாயகக் கூட்டாட்சிக் குடியரசாக அறிவித்தது. இவ்வாறாகத் தற்காலிக அரசாங்கத்தின் முடிவை உறுதி செய்தது. அடுத்த நாளே அனைத்து உருசிய மைய செயலாட்சிக் குழுவால் அரசியலமைப்பு அவையானது கலைக்கப்பட்டது.[114]

பெட்ரோகிராட் சோவியத் எனும் ஒரு மாற்றுப் பொதுவுடைமைவாத அமைப்பானது இருந்தது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களின் வழியாக இது அதிகாரத்தைச் செயல்படுத்தியது. இவர்கள் சோவியத்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். புதிய அதிகார மையங்களின் ஆட்சியானது பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக நாட்டில் அவற்றை அதிகரிக்க மட்டுமே செய்தது. இறுதியாக போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனினால் தலைமை தாங்கப்பட்ட அக்டோபர் புரட்சியானது தற்காலிக அரசாங்கத்தைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தது. முழு நிர்வாக சக்தியை சோவியத்துக்களுக்குக் கொடுத்தது. உலகின் முதல் சோசலிசக் குடியரசின் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது.[114] பொதுவுடைமைவாதத்திற்கு எதிரான வெள்ளை இயக்கம் மற்றும் செஞ்சேனையைக் கொண்டிருந்த போல்செவிக்குகள் ஆகியோருக்கு இடையில் உருசிய உள்நாட்டுப் போரானது வெடித்தது.[117] முதலாம் உலகப் போரின் மைய சக்திகளுடனான சண்டைகளை முடித்து வைத்த பிரெசுது-லிதோவ்சுக் ஓப்பந்தம் கையொப்பமிடப்பட்டதற்குப் பிறகு போல்செவிக் உருசியாவானது அதன் பெரும்பாலான மேற்கு நிலப்பரப்புகளைச் சரணடைய வைத்தது. இப்பகுதியானது அதன் மக்கள் தொகையில் 34%, அதன் தொழிற்சாலைகளில் 54%, அதன் வேளாண்மை நிலத்தில் 32% மற்றும் அதன் நிலக்கரிச் சுரங்கங்களில் சுமார் 90%-ஐக் கொண்டிருந்தது.[118]

Thumb
1920-இல் மாசுகோவில் விளாதிமிர் லெனின் உரையாற்றுகிறார். அருகில் லியோன் திரொட்ஸ்கி மேடையின் மீது சாய்ந்து நிற்கிறார்.

பொதுவுடைமைவாதத்துக்கு எதிரான படைகளுக்கு ஆதரவாக ஒரு தோல்வியடைந்த இராணுவத் தலையீட்டை நேச நாடுகள் தொடங்கின.[119] இதே நேரத்தில் போல்செவிக்குகளும், வெள்ளை இயக்கத்தவரும் ஒருவர் மற்றொருவருக்கு எதிராக நாடு கடத்துதல் மற்றும் மரண தண்டனைகள் கொடுத்தல் உள்ளிட்டவற்றைச் செய்தனர். இவை முறையே சிவப்புப் பயங்கரவாதம் மற்றும் வெள்ளைப் பயங்கரவாதம் என்று அறியப்படுகின்றன.[120] வன்முறை நிறைந்த உள்நாட்டுப் போரின் முடிவில் உருசியாவின் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்பானது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. போரின் போது 1 கோடி வரையிலான மக்கள் அழிந்திருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் குடிமக்கள் ஆவர்.[121] வெள்ளை இயக்கத்தவரில் தசம இலட்சக் கணக்கானவர்கள் சோவியத் ஒன்றியத்துக்கு ஆதரவு அளிக்காத, அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறியவர் ஆயினர்.[122] 1921-1922-ஆம் ஆண்டின் உருசியப் பஞ்சமானது 50 இலட்சம் வரையிலானோரைக் கொன்றது.[123]

சோவியத் ஒன்றியம்

Thumb
1936-இல் சோவியத் ஒன்றியத்துக்குள் உருசிய சோவியத் கூட்டாட்சி பொதுவுடைமைவாதக் குடியரசின் (சிவப்பு) அமைவிடம்

அரசால் நெறிப்படுத்தப்பட்ட பொருளாதாரமும், சோவியத் சமூகமும்

1922 திசம்பர் 30 அன்று லெனினும், அவரது உதவியாளர்களும் பைலோ உருசியா, திரான்சு காக்கேசியா மற்றும் உக்குரைனியக் குடியரசுகளுடன் உருசிய சோவியத் கூட்டாட்சி பொதுவுடைமைவாதக் குடியரசை ஓர் ஒற்றை அரசாக இணைத்ததன் மூலம் சோவியத் ஒன்றியத்தை அமைத்தனர்.[124] இரண்டாம் உலகப் போரின் போது இறுதியாக ஏற்பட்ட உள் எல்லை மாற்றங்கள் மற்றும் இணைப்புகளானவை 15 குடியரசுகளின் ஓர் ஒன்றியத்தை உருவாக்கின. இதில் அளவு மற்றும் மக்கள் தொகையில் மிகப் பெரியதாக உருசிய சோவியத் கூட்டாட்சி பொதுவுடைமைவாதக் குடியரசு விளங்கியது. இந்த ஒன்றியத்தில் அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் மிக்கதாக இருந்தது.[125]

1924-இல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து ஒரு மூவர் குழுவானது அதிகாரத்தைக் கொண்டிருக்க நியமிக்கப்பட்டது. இறுதியாகப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலினால் அனைத்து எதிர்ப்புப் பிரிவுகளையும் ஒடுக்க முடிந்தது. தனது கையில் அதிகாரத்தைப் பெற்று அவர் 1930-களில் நாட்டின் தலைவரானார்.[126] உலகப் புரட்சியின் முதன்மையான முன்மொழிஞரான லியோன் திரொட்ஸ்கி 1929-இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.[127] "ஒரு நாட்டில் பொதுவுடைமைவாதம்" என்ற ஸ்டாலினின் யோசனையானது அதிகாரப்பூர்வ வரியானது.[128] போல்செவிக் கட்சியில் தொடர்ந்த உள் போராட்டங்கள் பெரும் துப்புரவாக்கத்தில் இறுதி முடிவை எட்டின.[129]

இசுடாலினியமும், நவீனமயமாக்கலும்

இசுடாலின் தலைமையிலான அரசாங்கமானது ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், பெரும்பாலும் கிராமப்புற நாடாக இருந்ததன் தொழில்மயமாக்கம் மற்றும் அதன் வேளாண்மையைக் கூட்டுப் பண்ணை ஆக்கியது ஆகியவற்றைத் தொடங்கியது. வேகமான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களைக் கொண்ட இக்கால கட்டத்தின் போது மக்கள் தண்டனைப் பணி செய்யும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இசுடாலின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதாலோ அல்லது எதிராக நடந்திருந்ததனாலோ பல அரசியல் குற்றம் சாட்டப்பட்டவர்களும் இவ்வாறாக அனுப்பப்பட்டவர்களில் அடங்குவர்.[130] சோவியத் ஒன்றியத்தின் தொலை தூரப் பகுதிகளுக்கு இவர்கள் இடம் மாற்றப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர்.[131] நாட்டின் வேளாண்மையின் வடிவம் மாறிய, திட்டமிடப்படாத நிலையானது கடுமையான அரசின் கொள்கைகள் மற்றும் ஒரு வறட்சியுடன் இணைந்து[132] 1932-1933-ஆம் ஆண்டில் சோவியத் பஞ்சத்திற்கு வழி வகுத்தது. இப்பஞ்சமானது 57 முதல் 87 இலட்சம் வரையிலான மக்களைக் கொன்றது.[133] இதில் 33 இலட்சம் பேர் உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடைமைவாதக் குடியரசில் இருந்தனர்.[134] இறுதியாக, சோவியத் ஒன்றியமானது பெரும்பாலும் வேளாண்மைப் பொருளாதாரத்திலிருந்து ஒரு முதன்மையான தொழில் துறை சக்தியாக குறுகிய காலத்திலேயே இழப்பை ஏற்படுத்திய மாற்றத்தை அடைந்தது.[135]

இரண்டாம் உலகப் போரும், ஐக்கிய நாடுகள் அவையும்

Thumb
1942-இல் லெனின்கிராட் முற்றுகையின் போது இரு பதின்ம வயதுப் பெண்கள் பிபிடி-40 துணை எந்திரத் துப்பாக்கிகளை ஒன்று சேர்த்துப் பொருத்துகின்றனர்
Thumb
போர் முறையின் வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் குருதி தோய்ந்த யுத்தமான சுடாலின்கிராட் சண்டையானது 1943-இல் செருமானிய இராணுவத்திற்கு எதிரான ஒரு தீர்க்கமான சோவியத் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

சோவியத் ஒன்றியமானது இரண்டாம் உலகப் போருக்குள் 17 செப்தெம்பர் 1939 அன்று நாசி செருமனியுடனான மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் ஓர் இரகசியப் பிரிவின் படி அதன் போலந்துப் படையெடுப்புடன் நுழைந்தது.[136][137] சோவியத் ஒன்றியமானது பின்னர் பின்லாந்து மீது படையெடுத்தது.[138] பால்டிக் அரசுகளை ஆக்கிரமித்து இணைத்துக் கொண்டது.[139] மேலும், உருமேனியாவின் பகுதிகளையும் இணைத்துக் கொண்டது.[140]:91–95 1941 சூன் 22 அன்று செருமனி சோவியத் ஒன்றியம் மீது படையெடுத்தது.[141] கிழக்குப் போர் முனையைத் திறந்தது. இரண்டாம் உலகப் போரின் மிகப் பெரிய போர் அரங்கு இது தான்.[142]:7

இறுதியாக சுமார் 5 இலட்சம் செஞ்சேனைத் துருப்புக்களானவை நாசிக்களால் பிடிக்கப்பட்டன.[143]:272 நாசிக்கள் வேண்டுமென்றே 33 இலட்சம் சோவியத் போர்க் கைதிகளைப் பட்டினி போட்டு இறக்க வைத்தனர் அல்லது கொன்றனர். நடு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வாழ்ந்த இசுலாவிய மக்களை அடிமைப்படுத்தி இனப் படுகொலை செய்யும் நாசிக்களின் இனவெறித் திட்டமான பொதுத் திட்டம் ஒசுதுவை நிறைவேற்ற வேண்டி "பட்டினித் திட்டத்தின்" படி ஒரு பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களும் கொல்லப்பட்டனர்.[144]:175–186 வேர்மாக்டானது தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற போதிலும் மாசுகோ சண்டையில் அவர்கள் தாக்குதலானது தடுத்து நிறுத்தப்பட்டது.[145] 1942-1943-ஆம் ஆண்டின் குளிர் காலத்தில் சுடாலின்கிராட் சண்டையில் முதலிலும்,[146] பிறகு 1943-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் குர்ஸ்க் யுத்தத்திலும்[147] இறுதியாக செருமானியர்கள் முக்கியமான தோல்விகளைச் சந்தித்தனர். மற்றுமொரு செருமானிய தோல்வியானது லெனின்கிராட் முற்றுகையாகும். இந்த முற்றுகையில் நகரமானது நிலப்பகுதியில் 1941 மற்றும் 1944-க்கு இடையில் செருமானிய மற்றும் பின்லாந்துப் படைகளால் முழுவதுமாகச் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. பட்டினியைச் சந்தித்தது. 10 இலட்சத்துக்கும் மேலானோர் இறந்தனர். ஆனால், இந்நகரம் என்றுமே சரணடையவில்லை.[148] 1944-1945-இல் கிழக்கு மற்றும் நடு ஐரோப்பா வழியாக சோவியத் படைகளானவை எளிதாக வென்றன. மே 1945-இல் பெர்லினைக் கைப்பற்றின.[149] ஆகத்து 1945இல் சிவப்பு இராணுவமானது மஞ்சூரியா மீது படையெடுத்தது. வடகிழக்கு ஆசியாவிலிருந்து சப்பானியர்களை வெளியேற்றியது. சப்பான் மீதான நேச நாடுகளின் வெற்றிக்குப் பங்களித்தது.[150]

இரண்டாம் உலகப் போரின் 1941-1945-ஆம் ஆண்டு கால கட்டமானது உருசியாவில் பெரும் தேசப்பற்றுப் போர் என்று அறியப்படுகிறது.[151] ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் சீனாவுடன் சேர்த்து சோவியத் ஒன்றியமானது இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளின் பெரும் நால்வர் என்று கருதப்பட்டது. இவை பிறகு நான்கு காவலர்களாக உருவாயின. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் அடித்தளம் இது தான்.[152]:27 போரின் போது சோவியத் குடிமக்கள் மற்றும் இராணுவ இறப்புகளானவை 2.6 முதல் 2.7 கோடி வரையில் இருந்தன.[153] இரண்டாம் உலகப் போரின் அனைத்து இறப்புகளிலும் சுமார் பாதி பேர் இந்த எண்ணிக்கையினர் ஆவர்.[154]:295 சோவியத் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பானது பெரும் அழிவைச் சந்தித்தது. 1946-1947-ஆம் ஆண்டின் சோவியத் பஞ்சத்துக்குக் காரணமானது.[155] எனினும், ஒரு பெரும் தியாகத்தைச் செய்ததன் காரணமாகச் சோவியத் ஒன்றியமானது ஓர் உலக வல்லரசாக எழுச்சியடைந்தது.[156]

வல்லரசும், பனிப்போரும்

Thumb
பெப்பிரவரி 1945-இன் யால்ட்டா மாநாட்டில் வின்ஸ்டன் சர்ச்சில், பிராங்க்ளின் ரூசவெல்ட் மற்றும் ஜோசப் ஸ்டாலின் ஆகிய "பெரும் மூவர்"

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போதுசுதாம் சந்திப்பின் படி செஞ்சேனையானது கிழக்கு மற்றும் நடு ஐரோப்பாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு மற்றும் ஆஸ்திரியாவின் கிழக்குப் பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.[157] உருசியாவைச் சார்ந்திருந்த பொதுவுடைமைவாத அரசாங்கங்கள் கிழக்குக் கூட்டமைப்பின் சார்பு நாடுகளில் நிறுவப்பட்டன.[158] உலகின் இரண்டாவது அணு ஆயுத சக்தியாக உருவான பிறகு[159] சோவியத் ஒன்றியமானது வார்சா உடன்பாட்டுக் கூட்டணியை நிறுவியது.[160] பனிப்போர் என்று அறியப்படும் உலகளாவிய ஆதிக்கத்திற்கான ஒரு போராட்டத்துக்குள் நுழைந்தது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பை எதிர்த்துப் போராடியது.[161]

குருசேவ் மென்மைச் சீர்திருத்தங்களும், பொருளாதார முன்னேற்றமும்

1953-இல் இசுடாலினின் இறப்பு மற்றும் ஒரு குறுகிய கால இணைந்த ஆட்சிக்குப் பிறகு புதிய தலைவரான நிக்கித்தா குருசேவ் முற்காலத்தின் இசுடாலின் கொள்கைகளைக் கண்டித்தார். இசுடாலின் மயமாக்கத்தை மாற்றும் கொள்கையைத் தொடங்கினார். குலாக் எனும் தண்டனைப் பணி முகாம்களில் இருந்து பல அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.[162] ஒடுக்கு முறைக் கொள்கைகளின் பொதுவான எளிமையாக்கப்படலானது பின்னர் குருசேவ் மென்மைச் சீர்திருத்தங்கள் என்று அறியப்பட்டது.[163] இதே நேரத்தில் துருக்கியில் ஐக்கிய அமெரிக்காவின் சூபிடர் ஏவுகணைகள் மற்றும் கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை நிறுவுவது தொடர்பாக இரு எதிரிகள் மோதிக் கொண்ட போது பனிப்போர் பிரச்சினைகளானவை அதன் உச்சத்தை அடைந்தன.[164]

1957-இல் சோவியத் ஒன்றியமானது உலகின் முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளான இசுப்புட்னிக் 1-ஐ ஏவியது. இவ்வாறாக விண்வெளிக் காலத்தைத் தொடங்கி வைத்தது.[165] உருசியாவின் விண்ணோடியான யூரி ககாரின் பூமியைச் சுற்று வட்டப்பாதையில் சுற்றிய முதல் மனிதனாக உருவானார். 1961 ஏப்பிரல் 12 அன்று வஸ்தோக் 1 என்ற குழுவைக் கொண்டிருந்த விண்கலத்தில் சுற்றி வந்தார்.[166]

வளர்ச்சியடைந்த பொதுவுடைமைவாத காலம் அல்லது மந்தநிலை சகாப்தம்

1964-இல் குருசேவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இணைந்த ஆட்சியின் மற்றொரு காலகட்டமானது தொடங்கியது. இது லியோனீது பிரெசுனேவ் தலைவராகும் வரை தொடர்ந்தது. 1970-கள் மற்றும் 1980-களின் தொடக்க கால சகாப்தமானது பிற்காலத்தில் மந்தநிலை சகாப்தம் என்று குறிப்பிடப்பட்டது. 1965-ஆம் ஆண்டின் கோசிகின் சீர்திருத்தமானது சோவியத் பொருளாதாரத்தைப் பகுதியளவுக்குப் பரவலாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.[167] 1979-இல் ஆப்கானித்தானின் பொதுவுடைமைவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட ஒரு புரட்சிக்குப் பிறகு சோவியத் படைகள் அதன் மீது படையெடுத்தன. சோவியத்-ஆப்கான் போரை இறுதியாகத் தொடங்கின.[168] மே 1988இல் ஆப்கானித்தானில் இருந்து சோவியத்துக்கள் பின்வாங்கத் தொடங்கினார். பன்னாட்டு எதிர்ப்பு, சோவியத்துக்களுக்கு எதிரான தொடர்ச்சியான கரந்தடிப் போர் முறை மற்றும் சோவியத் குடிமக்களுக்கான ஆதரவு இல்லாதது ஆகியவற்றின் காரணமாகப் பின் வாங்கினர்.[169]

பெரஸ்ட்ரோயிகா, சனநாயகமயமாக்கல் மற்றும் உருசிய இறையாண்மை

Thumb
சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மற்றும் ஐக்கிய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆகியோர் 1988 மே 31 அன்று செஞ்சதுக்கத்தில் மாசுகோ உச்சி மாநாட்டின் போது

1985 முதல் சோவியத் அமைப்பில் தாராளமயச் சீர்திருத்தங்களைக் கொண்டு வர விரும்பிய கடைசி சோவியத் தலைவரான மிக்கைல் கொர்பச்சோவ் பொருளாதார மந்த நிலைக் காலத்தை முடித்து வைக்க மற்றும் அரசாங்கத்தை சனநாயகமயமாக்கும் ஒரு முயற்சியாக கிளாஸ்நோஸ்ட் (வெளிப்படைத் தன்மை) மற்றும் பெரஸ்ட்ரோயிகா (மறு கட்டமைப்பு) கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.[170] எனினும், இது நாடு முழுவதும் வலிமையான தேசியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் வளர்ச்சிக்குக் காரணமானது.[171] 1991-க்கு முன்னர் சோவியத் பொருளாதாரமானது உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஆனால், அதன் இறுதி ஆண்டுகளின் போது இது ஒரு பிரச்சினையைச் சந்தித்தது.[172]

1991 வாக்கில் பால்டிக் நாடுகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிவதைத் தேர்ந்தெடுத்ததன் காரணமாக பொருளாதார மற்றும் அரசியல் அமளியானது ஏற்பட்டது.[173] 17 மார்ச்சு அன்று ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பங்கெடுத்த குடிமக்களில் பெருமளவினர் சோவியத் ஒன்றியத்தை ஒரு புதுப்பிக்கப்பட்ட கூட்டாட்சியாக மாற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.[174] சூன் 1991-இல் உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடைமைக் குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உருசிய வரலாற்றில் முதல் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக போரிஸ் யெல்ட்சின் உருவானார்.[175] ஆகத்து 1991-இல் கொர்பச்சோவின் அரசாங்கத்தின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியானது கொர்பச்சோவுக்கு எதிராகவும், சோவியத் ஒன்றியத்தைத் தக்க வைக்கும் குறிக்கோளுடனும் நடத்தப்பட்டது. மாறாக, சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் முடிவுக்கு இது காரணமானது.[176] 1991 திசம்பர் 25 அன்று சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து சம கால உருசியாவுடன் சேர்த்து 14 பிற சோவியத் காலத்துக்குப் பிந்தைய அரசுகள் உருவாயின.[177]

சுதந்திர உருசியக் கூட்டரசு

ஒரு சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறுதலும், அரசியல் பிரச்சினைகளும்

Thumb
2000-இல் தன் முதல் பதவியேற்பின் போது அதிபராக உறுதி மொழி எடுக்கும் விளாதிமிர் பூட்டின். அருகில் போரிஸ் யெல்ட்சின் உள்ளார்.

சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியானது உருசியா ஓர் ஆழமான மற்றும் நீடித்த பொருளாதார மந்த நிலைக்குள் செல்வதற்குக் காரணமானது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் அதற்குப் பிறகு தனியார்மயமாக்கல் மற்றும், சந்தை மற்றும் வணிகத் தாராளமயமாக்கல் உள்ளிட்ட பரவலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதர "அதிர்ச்சி வைத்தியம்" போன்றவற்றை ஒத்த தீவிரமான மாற்றங்களும் இதில் அடங்கியிருந்தன.[178] தனியார் மயமாக்கலானது பெருமளவுக்கு நிறுவனங்களின் கட்டுப்பாட்டை அரசு அமைப்புகளிடம் இருந்து அரசாங்கத்துடன் தொடர்புகளை உடைய நபர்களுக்கு மாற்றியது. இது உருசிய சிலவராட்சி உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.[179] புதிதாக செல்வந்தரானவர்களில் பலர் ஒரு பெரும் மூலதன வெளியேற்றத்தில் 100 கோடிக் கணக்கான பணம் மற்றும் உடைமைகளை நாட்டுக்கு வெளியே கொண்டு சேர்த்தனர்.[180] பொருளாதார மந்த நிலையானது சமூக சேவைகளின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. பிறப்பு வீதம் குறைந்தது. அதே நேரத்தில், இறப்பு வீதம் அதிகரித்தது.[181][182] தசம் இலட்சக் கணக்கானவர்கள் வறுமையில் வீழ்ந்தனர்.[183] கடுமையான லஞ்ச ஊழல்,[184] மேலும் குற்றவாளிக் குழுக்கள் மற்றும் அமைப்பு ரீதியிலான குற்றங்களானவை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.[185]

1993-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யெல்ட்சின் மற்றும் உருசிய நாடாளுமன்றத்துக்கு இடையிலான பிரச்சினைகளானவை ஓர் அரசியலமைப்புப் பிரச்சினையாக முடிந்தன. இராணுவப் படையின் மூலமாக வன்முறையாக முடிந்தன. பிரச்சினையின் போது யெல்ட்சினுக்கு மேற்குலக அரசாங்கங்கள் ஆதரவளித்தன. 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.[186]

நவீன தாராளமய அரசியலமைப்பு, பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை

திசம்பரில் ஒரு பொது வாக்கெடுப்பானது நடத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. அதிபருக்குப் பெருமளவு அதிகாரங்களை வழங்கியது.[187] 1990-களானவை உள்ளூர் இனச் சண்டைகள் மற்றும் பிரிவினைவாத இசுலாமியக் குழுக்கள் ஆகிய இரு பிரிவினராலும் வடக்கு காக்கேசியாவில் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய சண்டைகளால் கடக்கப்பட்டது.[188] 1990-களின் தொடக்கத்தில் செச்சன் பிரிவினைவாதிகள் சுதந்திரத்தை அறிவித்த நேரத்தில் இருந்து எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் உருசியப் படைகளுக்கு இடையே ஓர் இடைவிடாத கரந்தடிப் போரானது நடைபெற்றது.[189] செச்சன் பிரிவினைவாதிகளால் குடிமக்களுக்கு எதிராகத் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை ஆயிரக்கணக்கான உருசியக் குடிமக்களின் வாழ்வைப் பறித்தன.[e][190]

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிறகு அதன் வெளிநாட்டுக் கடன்களை அடைக்கும் பொறுப்பை உருசியா ஏற்றுக் கொண்டது.[191] 1992-இல் பெரும்பாலான நுகர்வோர் விலை வாசிக் கட்டுப்பாடுகளானவை நீக்கப்பட்டன. இது கடுமையான விலைவாசி உயர்வுக்குக் காரணமானது. உருசியாவின் நாணயமான ரூபிளும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அரசால் மதிப்பு குறைக்கப்பட்டது.[192] அதிகப்படியான முதலீட்டு வெளியேற்றம் மற்றும் கடன்களை அடைக்க இயலாத நிலையுடன் சேர்ந்து அதிகப்படியான வரவு செலவுப் பற்றாக்குறைகளானவை 1998-ஆம் ஆண்டின் உருசிய நிதி நெருக்கடிக்குக் காரணமானது. இது ஒரு மேற்கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறைவுக்கு வழி வகுத்தது.[193]

ஒரு நவீன மயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய நகர்வு, அரசியல் மையப்படுத்தல் மற்றும் சனநாயகப் பின்னிறக்கம்

1999 திசம்பர் 31 அன்று அதிபர் யெல்ட்சின் எதிர்பாராத விதமாகப் பதவி விலகினார்.[194] சமீபத்தில் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட மற்றும் தன்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த ஆட்சியாளரான விளாதிமிர் பூட்டினிடம் பதவியை ஒப்படைத்தார்.[195] 2000-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பூட்டின் வெற்றி பெற்றார்.[196] இரண்டாவது செச்சனியாப் போரில் செச்சனிய எதிர்ப்பைத் தோற்கடித்தார்.[197]

2004-இல் பூட்டின் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் வென்றார்.[198] உயர்ந்த கச்சா எண்ணெய் விலை மற்றும் அயல் நாட்டு முதலீட்டில் ஓர் அதிகரிப்பு ஆகியவை உருசியப் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரங்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்ததைக் கண்டன.[199] பூட்டினின் ஆட்சியானது நிலைத் தன்மையை அதிகரித்தது.[200] 2008-இல் பூட்டின் பிரதம மந்திரிப் பதவியை ஏற்றுக் கொண்டார். ஒரு முறைக்கு திமீத்ரி மெத்வேதெவ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்படி பதவிக் காலத்திற்கு வரம்புகள் இருந்த போதிலும் அதிகாரப் பகிர்வு இவ்வாறாக ஏற்பட்டது.[201] இக்காலமானது இருவரின் இணைந்த ஆட்சியைக் கண்டது. ஒருவர் பின் ஒருவராக ஒரு மிதி வண்டியில் இருவர் அமர்ந்திருப்பதைப் போல் இக்காலத்தின் சனநாயக முறை இருப்பதாக மேற்குலகத்தால் விமர்சிக்கப்பட்டது.[202]

Thumb
2022 செப்தெம்பர் 30 அன்று உருசியா ஆக்கிரமித்த உக்குரைனின் நிலப்பரப்புகள். அப்பகுதிகளின் இணைவானது அறிவிக்கப்பட்ட நேரத்தில் உள்ள நிலவரப்படி இந்த வரைபடம் காட்டுகிறது.

அண்டை நாடான ஜார்ஜியாவுடனான ஒரு தூதரகப் பிரச்சினையைத் தொடர்ந்து 1 - 12 ஆகத்து 2008-இல் உருசிய-ஜார்ஜியப் போரானது நடைபெற்றது. ஜார்ஜியாவில் உருசியா ஆக்கிரமித்த நிலப்பரப்புகளில் இரு பிரிவினைவாத அரசுகளை உருசியா அங்கீகரிப்பதில் இது முடிவடைந்தது.[203] 21-ஆம் நூற்றாண்டின் முதல் ஐரோப்பியப் போர் இதுவாகும்.[204]

உக்குரைன் படையெடுப்பு

2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அண்டை நாடான உக்குரைனில் மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான ஒரு புரட்சியைத் தொடர்ந்து உருசியாவானது உக்குரைனின் கிரிமியாப் பகுதியை ஆக்கிரமித்து, கிரிமியாவின் நிலை குறித்த விவாதத்துக்குள்ளான ஒரு பொது வாக்கெடுப்பை உருசிய ஆக்கிரமிப்பின் கீழ் நடத்தியதற்குப் பிறகு இணைத்துக் கொண்டது.[205][206] இந்த இணைவானது உக்குரைனின் தொன்பாஸ் பகுதியில் எதிர்ப்பை உருவாக்கியது. உக்குரைனுக்கு எதிரான அறிவிக்கப்படாத போரின் ஒரு பகுதியாக உருசிய இராணுவத் தலையீட்டால் இதற்கு ஆதரவு அளிக்கப்பட்டது.[207] உருசிய கூலிப் படைகள் மற்றும் இராணுவப் படைகளானவை உள்ளூர் பிரிவினைவாத எதிர்ப்பாளர்களின் ஆதரவுடன் புதிய உக்குரைனிய அரசாங்கத்திற்கு எதிராகக் கிழக்கு உக்குரைனில் ஒரு போரை நடத்தின. இப்பகுதியில் அரசாங்கத்திற்கு எதிரான மற்றும் உருசியாவுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு உருசிய அரசாங்கம் ஆதரவளித்ததற்குப் பிறகு இவ்வாறு நடத்தப்பட்டது.[208] எனினும், பெரும்பாலான குடிமக்கள் உக்குரைனிலிருந்து பிரிவதை எதிர்த்தனர்.[209][210]

இச்சண்டையை அதிகமாகத் தீவிரப்படுத்தும் விதமாக 2022 பெப்பிரவரி 24 அன்று உருசியாவானது உக்குரைன் மீது ஒரு முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.[211] இரண்டாம் உலகப் போரிலிருந்து ஐரோப்பாவில் மிகப் பெரிய மரபு வழிப் போரை இப்போரானது குறித்தது.[212] இது பன்னாட்டு கண்டனத்திற்கு உள்ளானது.[213] உருசியாவுக்கு எதிராக விரிவான பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டன.[214]

Thumb
2024 மே 15 அன்று சோய்கு, செராசிமோ, பெலோவ்சோவ், எவ்குரோவ் மற்றும் உருசியாவின் இராணுவ மாவட்டங்களின் தளபதிகளுடன் பூட்டின்.

இதன் விளைவாக மார்ச்சில் ஐரோப்பிய மன்றத்தில் இருந்து உருசியா வெளியேற்றப்பட்டது.[215] ஏப்பிரலில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் இருந்து இந்நாடு இடைநீக்கம் செய்யப்பட்டது.[216] செப்தெம்பரில் வெற்றிகரமான உக்குரைனியப் பதில் தாக்குதல்களைத் தொடர்ந்து[217] பூட்டின் "பகுதியளவு இராணுவ ஒருங்கிணைப்பை" அறிவித்தார். பார்பரோசா நடவடிக்கை காலத்திலிருந்து உருசியாவின் முதல் இராணுவ ஒருங்கிணைப்பு இதுவாகும்.[218] செப்தெம்பர் மாத முடிவு வாக்கில் பூட்டின் நான்கு உக்குரைனியப் பகுதிகளின் இணைப்பை அறிவித்தார். இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்து ஐரோப்பாவில் நடத்தப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பு இணைவு இதுவாகும்.[219] பூட்டினும், உருசியாவால் பதவியில் அமர்த்தப்பட்ட தலைவர்களும் இணைப்பு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர். பன்னாட்டு அளவில் இது அங்கீகரிக்கப்படாததாகவும், பரவலாக சட்டத்திற்குப் புறம்பானது என கண்டனத்துக்குள்ளானதாகவும் அமைந்தது. இந்த நான்கு பகுதிகளில் எந்த ஒரு பகுதியையும் முழுமையாக ஆக்கிரமிக்க உருசியப் படைகளால் இயலவில்லை என்ற உண்மை இருந்த போதிலும் இவ்வாறு அறிவிக்கப்பட்டது.[219] ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நாடுகளுக்கு இடைப்பட்ட அமைப்புகள் மற்றும் தேசிய நாடாளுமன்றங்களானவை உருசியாவைப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஓர் அரசு என்று அறிவித்த தீர்மானங்களை நிறைவேற்றின.[220] மேலும், உருசியாவானது லாத்வியா, லித்துவேனியா மற்றும் எசுதோனியா ஆகிய நாடுகளால் ஒரு தீவிரவாத அரசு என்று அறிவிக்கப்பட்டது.[221] இப்படையெடுப்பின் விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[222][223] இப்படையெடுப்பின் போது ஏராளமான போர்க் குற்றங்களைப் புரிந்ததாக உருசியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[224][225][226] உருசியாவின் மக்கள் தொகைப் பிரச்சினையை உக்குரைன் போரானது மேலும் அதிகரித்தது.[227]

சூன் 2023-இல் உக்குரைனில் உருசியாவுக்காகச் சண்டையிடும் ஒரு தனியார் இராணுவ ஒப்பந்ததாரரான வாக்னர் குழுவானது உருசிய இராணுவ அமைச்சகத்துக்கு எதிராக வெளிப்படையான கிளர்ச்சியை அறிவித்தது. தொன்-மீது-ரசுத்தோவ் நகரத்தைக் கைப்பற்றியது. மாசுகோவை நோக்கிய ஓர் அணி வகுப்பைத் தொடங்கியது. எனினும், வாக்னர் மற்றும் பெலாரசு அரசாங்கத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இக்கிளர்ச்சியானது கைவிடப்பட்டது.[228][229] கிளர்ச்சியின் தலைவரான எவ்கேனி பிரிகோசின் பிறகு ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார்.[230]

Remove ads

புவியியல்

Thumb
உருசியாவின் இட அமைவு வரைபடம்

ஐரோப்பாவின் தூரக் கிழக்குப் பகுதி மற்றும் ஆசியாவின் தூர வடக்குப் பகுதி ஆகியவற்றின் மீது உருசியாவின் பரந்த நிலப்பரப்பானது விரிவடைந்துள்ளது.[231] இது ஐரோவாசியாவின் தூர வடக்கு விளிம்பு வரை விரிவடைந்துள்ளது. 37,653 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுடைய உலகின் நான்காவது மிக நீண்ட கடற்கரையை இது கொண்டுள்ளது.[f][233] உருசியாவானது 41° மற்றும் 82° வடக்கு அட்சரேகைகள், மற்றும் 19°கிழக்கு மற்றும் 169°மேற்கு தீர்க்கரேகைகள் ஆகியவற்றுக்குள் அமைந்துள்ளது. கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 9,000 கிலோமீட்டர் நீளத்திலும், வடக்கிலிருந்து தெற்காக 2,500 முதல் 4,000 கிலோமீட்டர் நீளத்திலும் இது விரிவடைந்துள்ளது.[234] நிலப்பரப்பின் அடிப்படையில் உருசியா உலகின் மூன்று கண்டங்களை விடவும் மிகப் பெரியதாகும்.[g] புளூட்டோ கிரகத்தை ஒத்த அதே அளவு பரப்பளவை இது கொண்டுள்ளது.[235]

உருசியா ஒன்பது முக்கியமான மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. இவை தூரக் கிழக்குப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. இப்பகுதியானது காக்கேசிய மலைகளின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி (உருசியா மற்றும் ஐரோப்பாவில் மிக உயர்ந்த சிகரமான 5,642 மீட்டர் உயரமுடைய எல்பிரஸ் மலையை இது கொண்டுள்ளது);[9] சைபீரியாவின் அல்த்தாய் மற்றும் சயான் மலைகள்; மற்றும் கிழக்கு சைபீரிய மலைகள் மற்றும் உருசியத் தூரக் கிழக்கில் கம்சாத்கா தீபகற்பம் (ஐரோவாசியாவின் மிக உயரமான, செயல்பாட்டில் உள்ள எரிமலையான 4,750 மீட்டர் உயரமுடைய கிளியுச்சேவ்ஸ்கயா சோப்காவை இது கொண்டுள்ளது).[236][237] நாட்டின் மேற்குப் பகுதியில் வடக்கிலிருந்து தெற்காக அமைந்துள்ள உரால் மலைகளானவை கனிம வளங்களைச் செழிப்பாகக் கொண்டுள்ளன. ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கும் இடையிலான பாரம்பரிய எல்லையை அமைக்கின்றன.[238] உருசியா மற்றும் ஐரோப்பாவில் ஆழமான புள்ளியான காசுப்பியன் கடலின் தலைப் பகுதியில் அமைந்துள்ள காசுப்பியன் தாழ்வுப் பகுதியானது கடல் மட்டத்திற்குக் கீழே சுமார் 29 மீட்டர்களை அடைகிறது.[239]

மூன்று பெருங்கடல்களையும் எல்லையில் கொண்டுள்ள உலகின் வெறும் மூன்று நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும்.[231] பெரும் எண்ணிக்கையிலான கடல்களுடன் இது தொடர்பைக் கொண்டுள்ளது.[h][240] நோவாயா செம்லியா, பிரான்சு யோசோப்பு நிலம், செவர்னயா செம்ல்யா, புதிய சைபீரியத் தீவுகள், விராஞ்செல் தீவு, கூரில் தீவுகள் (இதில் நான்கு சப்பானுடன் பிரச்சினையில் உள்ளன) மற்றும் சக்கலின் உள்ளிட்டவை இந்நாட்டின் முக்கியமான தீவுகள் மற்றும் தீவுக் கூட்டங்கள் ஆகும்.[241][242] உருசியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவால் நிர்வகிக்கப்படும் டையோமெதி தீவுகளானவை ஒன்றுக்கொன்று வெறும் 3.8 கிலோ மீட்டர் இடைவெளியில் தான் உள்ளன.[243] கூரில் தீவுகளின் குனசீர் தீவானது சப்பானின் ஹொக்கைடோவில் இருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது.[2]

உருசியா 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆறுகளுக்குத் தாயகமாக உள்ளது.[231] உருசியா உலகின் மிகப் பெரிய மேற்பரப்பு நீர் வளங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது. இதன் ஏரிகள் தோராயமாக உலகின் நீர்ம நிலை நன்னீரில் கால் பங்கைக் கொண்டுள்ளன.[237] உருசியாவின் நன்னீர் அமைப்புகளில் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமான பைக்கால் ஏரியானது உலகின் மிக ஆழமான, மிகத் தூய்மையான, மிகப் பழமையான மற்றும் மிக அதிக கொள்ளளவு உடைய நன்னீர் ஏரியாகும். உலகின் தூய்மையான மேற்பரப்பு நீரில் ஐந்தில் ஒரு பங்குக்கும் மேலானதை இது கொண்டுள்ளது.[244] வடமேற்கு உருசியாவில் உள்ள லதோகா மற்றும் ஒனேகா ஆகியவை ஐரோப்பாவின் மிகப் பெரிய இரு ஏரிகள் ஆகும்.[231] ஒட்டு மொத்த புதுப்பிக்கக் கூடிய நீர் வளங்களில் உருசியா பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.[245] மேற்கு உருசியாவில் உள்ள வோல்கா ஆறானது பொதுவாக உருசியாவின் தேசிய ஆறாகக் கருதப்படுகிறது. ஐரோப்பாவின் மிக நீண்ட ஆறு இது தான். இது வோல்கா வண்டல் சமவெளியை அமைக்கிறது. ஐரோப்பாவின் மிகப் பெரிய ஆற்றுக் கழிமுகம் இது தான்.[246] சைபீரிய ஆறுகளான ஓப், ஏநிசை, லேனா மற்றும் அமுர் ஆகியவை உலகின் மிக நீண்ட ஆறுகளில் சிலவாகும்.[247]

காலநிலை

Thumb
உருசியாவின் கோப்பென் காலநிலை வகைப்பாடு

உருசியாவின் பெரிய அளவு மற்றும் கடலில் இருந்து இதன் பகுதிகளில் பல தொலை தூரத்தில் உள்ளது ஆகியவை நாட்டின் பெரும் பகுதி முழுவதும் ஈரப்பதமுள்ள கண்டப் பகுதி காலநிலை நிலவுவதற்குக் காரணமாகியுள்ளன. இதில் விதி விலக்கு தூந்திரப் பகுதி மற்றும் தொலை தூரத் தென்மேற்கு ஆகியவை மட்டுமே ஆகும். தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள மலைத் தொடர்களானவை இந்திய மற்றும் அமைதிப் பெருங்கடலில் இருந்து வெதுவெதுப்பான காற்று வீசுவதைத் தடுக்கின்றன. அதே நேரத்தில், இதன் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் விரிவடைந்துள்ள ஐரோப்பியச் சமவெளியானது அத்திலாந்திக்கு மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் இருந்து தாக்கத்தைப் பெற இதைத் திறந்து விட்டுள்ளது.[248] பெரும்பாலான வடமேற்கு உருசியா மற்றும் சைபீரியா ஆகியவை துணை ஆர்க்டிக் கால நிலையைக் கொண்டுள்ளன. வடகிழக்கு சைபீரியாவின் உள் பகுதிகளில் மட்டு மீறிய கடுமையான குளிர் காலமும் (இது பெரும்பாலும் சகா பகுதியில் ஏற்படுகிறது. அங்கு வட அரை கோளத்தின் குளிரான பகுதிகள் அமைந்துள்ளன. மிகக் குறைந்த பதிவிடப்பட்ட வெப்பநிலையாக -71.2 °C இங்கு பதிவிடப்பட்டுள்ளது),[241] அதிக மிதமான குளிர் காலமானது மீதி அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுகிறது. ஆர்க்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள உருசியாவின் பரந்த கடற்கரை மற்றும் உருசியாவின் ஆர்க்டிக் தீவுகளானவை துருவத் தட்பவெப்பத்தைக் கொண்டுள்ளன.[248]

கருங்கடலின் கிராஸ்னதார் பிரதேசத்தின் கடற்கரைப் பகுதி, மிகக் குறிப்பாக சோச்சி, மற்றும் வடக்கு காக்கேசியாவின் சில கடற்கரை மற்றும் உள் பகுதிகள் மிதமான மற்றும் ஈரமான குளிர் காலங்களுடன் ஓர் ஈரப்பதமான துணை வெப்ப மண்டலக் கால நிலையைக் கொண்டுள்ளன.[248] கிழக்கு சைபீரியா மற்றும் உருசிய தூரக் கிழக்கில் பல பகுதிகளில் கோடை காலத்துடன் ஒப்பிடும் போது குளிர் காலமானது உலர்ந்ததாக உள்ளது; அதே நேரத்தில், நாட்டின் பிற பகுதிகள் அனைத்து பருவ காலங்களிலும் மேற்கொண்ட அதிக மழைப் பொழிவைப் பெறுகின்றன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் கால மழைப் பொழிவானது பொதுவாகப் பனியாக விழுகிறது. காலினின்கிராத் ஒப்லாஸ்தின் தூர மேற்குப் பகுதிகள் மற்றும், கிராஸ்னதார் கிராய் மற்றும் வடக்கு காக்கேசியாவின் தெற்கில் உள்ள சில பகுதிகள் பெருங்கடல் காலநிலையைக் கொண்டுள்ளன.[248] கீழ் வோல்கா மற்றும் காசுப்பியன் கடற்கரைப் பகுதியுடன், மேலும் சைபீரியாவின் சில தூரத் தெற்குப் பகுதிகள் ஒரு பகுதியளவு-வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளன.[249]

பெரும்பாலான நிலப்பரப்பு முழுவதும் வெறும் இரண்டு தனித்துவமான பருவங்கள் காணப்படுகின்றன. அவை குளிர்காலம் மற்றும் கோடை காலமாகும். ஏனெனில், இளவேனிற் காலமும், இலையுதிர் காலமும் பொதுவாகக் குறுகியவையாக உள்ளன.[248] மிகக் குளிரான மாதம் சனவரி (கடற்கரையில் பெப்பிரவரி); மிக வெப்பமான மாதம் பொதுவாக சூலை. வெப்பநிலையின் அதிகப்படியான வேறுபாடுகளானவை இந்நாட்டில் பொதுவானவையாக உள்ளன. குளிர் காலத்தில் வெப்பநிலைகளானவை தெற்கிலிருந்து வடக்கே மற்றும் மேற்கிலிருந்து கிழக்கே குளிர் நிலை ஆகின்றன. கோடைக் காலங்கள் மிக வெப்பமாக, சைபீரியாவில் கூட வெப்பமாக இருக்கும்.[250] உருசியாவில் காலநிலை மாற்றமானது மிக அதிகப் படியான காட்டுத் தீக்களுக்குக் காரணமாகிறது.[251] இவை நாட்டின் மிகப் பரந்த நிலத்தடி உறைபனியை உருக வைக்கின்றன.[252]

உயிரினப் பல்வகைமை

Thumb
கோமி பகுதியில் உள்ள யுகித் வா தேசியப் பூங்காவானது ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய தேசியப் பூங்கா ஆகும்.[238]

இதன் மிகப் பெரிய அளவின் காரணமாக உருசியாவானது வேறுபட்ட சூழ்நிலை அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதில் துருவப் பாலைவனங்கள், தூந்திரம், காட்டுத் தூந்திரம், தைகா, கலவையான மற்றும் அகண்ட இலைக் காடுகள், வன புல்வெளிகள், ஸ்டெப்பி புல்வெளிகள், பகுதியளவு-பாலைவனம் மற்றும் அயன அயல் மண்டலம் ஆகியவை அடங்கும்.[253] உருசியாவின் நிலப்பரப்பில் சுமார் பாதியளவானது காடுகளாக உள்ளது.[9] உலகின் மிகப் பெரிய காடுகளின் பரப்பளவை உருசியா கொண்டுள்ளது.[254] உலகின் மிக அதிக கார்பனீராக்சைடு அளவுகளில் சிலவற்றை இவை தனியாகப் பிரித்து வைக்கின்றன.[254][255]

உருசியாவின் உயிரின வகையானது 12,500 கலன்றாவர இனங்கள், 2,200 பிரயோபைற்று இனங்கள், சுமார் 3,000 இலைக்கன் இனங்கள், 7,000 - 9,000 அல்கா இனங்கள், மற்றும் 20,000 - 25,000 பூஞ்சை இனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. உருசிய விலங்குகளானவை 320 பாலூட்டி இனங்கள், 732க்கும் மேற்பட்ட பறவையினங்கள், 75 ஊர்வன இனங்கள், சுமார் 30 நீர்நில வாழ்வன இனங்கள், 343 நன்னீர் மீன் இனங்கள் (இதில் அதிகப்படியானவை அகணிய உயிரிகளாக உள்ளன), தோராயமாக 1,500 உப்புநீர் மீன் இனங்கள், 9 தாடையற்ற மீன் இனங்கள், மற்றும் தோராயமாக 100 - 1,50,000 முதுகெலும்பிலி இனங்கள் (இதில் அதிகப்படியானவை அகணிய உயிரிகளாக உள்ளன) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[253][256] உருசிய சிவப்புத் தகவல் நூலில் தோராயமாக 1,100 அரிய மற்றும் அழிவு நிலையில் உள்ள தாவர மற்றும் விலங்கு இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[253]

உருசியாவின் ஒட்டு மொத்த இயற்கைச் சூழ்நிலை அமைப்புகளும் கிட்டத்தட்ட 15,000 பல்வேறு நிலைகளையுடைய சிறப்பு நிலை பாதுகாக்கப்பட்ட இயற்கை நிலப்பரப்புகளில் பாதுகாக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் 10%-க்கும் மேற்பட்ட இடத்தை இவை ஆக்கிரமித்துள்ளன.[253] இவை 45 உயிர்க் கோளக் காப்பிடங்கள்,[257] 64 தேசியப் பூங்காக்கள் மற்றும் 101 இயற்கைக் காப்பிடங்களை உள்ளடக்கியுள்ளன.[258] குறைந்த அளவிலேயே கொண்டிருந்தாலும் நாடானது இன்னும் செயல்பாட்டிலுள்ள காடுகள் என கருதப்படும் பல சூழ்நிலை அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவை முதன்மையாக வடக்கு தைகாப் பகுதிகள் மற்றும் சைபீரியாவின் துணை ஆர்க்டிக் தூந்திரம் ஆகியவற்றில் உள்ளன.[259] உருசியாவானது காட்டு இயற்கைக் காட்சிப் பரப்பு நிலைச் சுட்டெண்ணின் சராசரி மதிப்பாக 9.02-ஐ 2019-இல் பெற்றது. இதில் 172 நாடுகளில் 10-ஆவது தர நிலையைப் பெற்றது. உலகளாவிய முக்கியமான நாடுகளில் முதல் தர நிலையைப் பெற்றது.[260]

Remove ads

அரசாங்கமும், அரசியலும்

Thumb
உருசிய அரசியலமைப்பின் ஒரு விளக்கப்படம்

அரசியலமைப்பின் படி உருசியாவானது ஒரு செவ்வொழுங்கான கூட்டாட்சிக் குடியரசாகும். இது ஒரு பகுதியளவு-அதிபர் அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு அதிபர் நாட்டுத் தலைவராக உள்ளார்.[261] பிரதமர் அரசுத் தலைவராக உள்ளார்.[9] ஒரு பல கட்சி சார்பாண்மை மக்களாட்சியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி அரசாங்கமானது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது:[262]

  • சட்டவாக்க அவை: ஈரவை முறைமையுடைய உருசியாவின் கூட்டாட்சி அவையானது 450 நிரந்தர உறுப்பினர்களையுடைய அரசு துமா மற்றும் 170 உறுப்பினர்களையுடைய கூட்டாட்சி மன்றம்[262] ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூட்டாட்சிச் சட்டம் இயற்றுதல், போர்ப் பிரகடனம், ஒப்பந்தங்களை அங்கீகரித்தல், நிதி வழங்குதல் மற்றும் அதிபர் மீது குற்ற விசாரணை நடத்துதல் போன்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது.[263]
  • செயலாட்சி: ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பது, உருசிய அரசாங்கம் (அமைச்சரவை) மற்றும் பிற அதிகாரிகளை நியமித்தல் ஆகியவற்றை அதிபர் செய்கிறார். அரசாங்கமும், அதிகாரிகளும் நிர்வகித்து, கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்துகின்றனர்.[261] அரசியலமைப்பு அல்லது கூட்டாட்சிச் சட்டங்களை மீறியதாக இல்லாதவரை அதிபர் வரம்பற்ற அளவுகளையுடைய ஆணைகளை வெளியிடலாம்.[264]
  • நீதித்துறை: அரசியலமைப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் கீழ் கூட்டாட்சி நீதிமன்றங்கள் ஆகியவை சட்டங்களை விளக்குகின்றன. அரசியலமைப்புக்கு உட்படாதது என கருதப்படும் சட்டங்களை செல்லாததாக்குகின்றன.[265] இந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளானவர்கள் அதிபரின் பரிந்துரையின் பேரில் கூட்டாட்சி மன்றத்தால் நியமிக்கப்படுகின்றனர்.[262]

அதிபர் பொது வாக்கெடுப்பின் மூலம் ஓர் ஆறு ஆண்டு காலப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட முறைகளுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.[266][i] அரசாங்கத்தின் அமைச்சகங்களானவை பிரதமர் மற்றும் அவரது துணை பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற நபர்களை உள்ளடக்கியுள்ளது. பிரதமரின் பரிந்துரையின் பேரில் இவர்கள் அனைவரும் அதிபரால் நியமிக்கப்படுகின்றனர் (அதே நேரத்தில், பிரதமரின் நியமிப்பானது அரசு துமாவின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது). உருசியாவில் ஆதிக்கமிக்க அரசியல் கட்சியாக ஐக்கிய உருசியா கட்சி உள்ளது. "பெரிய முகாம்" மற்றும் "சக்தியுள்ள கட்சி" என்று இது குறிப்பிடப்படுகிறது.[268][269] பூட்டினின் கொள்கைகளானவைப் பொதுவாக பூட்டினியம் என்று குறிப்பிடப்படுகின்றன.[270]

அரசியல் பிரிவுகள்

1993-ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் படி உருசியாவானது ஒரு செவ்வொழுங்கான கூட்டாட்சி (செவ்வொழுங்கற்ற சீரமைவையும் இது சாத்தியமாகக் கொண்டுள்ளது) ஆகும். உருசிய சோவியத் கூட்டாட்சிப் பொதுவுடைமைவாதக் குடியரசின் சோவியத் செவ்வொழுங்கற்ற மாதிரியைப் போல் இல்லாமல் தற்போதைய அரசியலமைப்பானது பிற பகுதிகளின் நிலையை குடியரசுகள் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது. "கூட்டாட்சி அமைப்புகள்" என்ற தலைப்புடன் அனைத்துப் பகுதிகளையும் சமமாக ஆக்கியுள்ளது. சோவியத் காலத்தில் குடியரசுகள் மட்டுமே கூட்டாட்சியின் அமைப்புகளாக இருந்தன. உருசியாவின் பகுதிகளானவை அவற்றுக்கு என்று ஒதுக்கப்பட்ட போட்டியிடங்களைக் கொண்டுள்ளன. ஆனால் எந்த ஒரு பகுதியும் இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை, இறையாண்மையுடைய அரசின் நிலையை அவை கொண்டிருக்கவில்லை, அவற்றின் அரசியல் அமைப்புகளில் எந்தவொரு இறையாண்மையையும் வெளிக்காட்ட அவற்றுக்கு உரிமை இல்லை மற்றும் நாட்டிலிருந்து பிரிந்து செல்ல அவற்றுக்கு உரிமை இல்லை. அமைப்புகளின் சட்டங்களானவை கூட்டாட்சி சட்டங்களுக்கு முரண்பட்டதாக இருக்க முடியாது.[271]

கூட்டாட்சி அமைப்புகளானவை[j] சமமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன. கூட்டாட்சி அவையின் மேலவையான கூட்டாட்சி மன்றத்தில் இரு பிரதிநிதிகளை ஒவ்வொரு அமைப்பும் கொண்டுள்ளன.[272] எனினும், அவை தாம் கொண்டுள்ள சுயாட்சியின் அளவில் வேறுபடுகின்றன.[273] கூட்டாட்சிப் பிரிவுகள் மீதான மைய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை எளிதாக்குவதற்காக 2000-ஆம் ஆண்டு பூட்டினால் உருசியாவின் நடுவண் மாவட்டங்கள் நிறுவப்பட்டன.[274] உண்மையில் 7-ஆக இருந்த இவை தற்போது 8 கூட்டாட்சி நடுவண் மாவட்டங்களாக உள்ளன. அதிபரால் நியமிக்கப்படும் ஒரு தூதுவரால் இந்த ஒவ்வொரு மாவட்டமும் நிர்வகிக்கப்படுகிறது.[275]

Thumb
மேலதிகத் தகவல்கள் கூட்டாட்சி அமைப்புகள், நிர்வாகம் ...

அயல் நாட்டு உறவுகள்

Thumb
2019-இல் ஒசாக்காவில் ஜி20-இன் ஒத்த நிலையினருடன் பூட்டின்

2019 நிலவரப்படி உலகின் ஐந்தாவது மிகப் பெரிய தூதரக அமைப்பை உருசியா கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 190 உறுப்பினர் நாடுகள், நான்கு பகுதியளவு-அங்கீகரிக்கப்பட்ட அரசுகள், மற்றும் பார்வையாளர் தகுதி பெற்ற மூன்று ஐக்கிய நாட்டு அவை அரசுகள் ஆகியவற்றுடன் இது தூதரக உறவுகளைப் பேணி வருகிறது. இந்நாடு 144 தூதரகங்களைக் கொண்டுள்ளது.[282] ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் உருசியாவும் ஒன்றாகும். இந்நாடு பொதுவாக ஓர் உலக வல்லமையாகக் கருதப்படுகிறது.[283][284][285] எனினும், 2022-இல் தொடங்கிய உக்குரைன் படையெடுப்பில் இது அடைந்த போராட்டங்களை தொடர்ந்து ஒரு நவீன உலக வல்லமையாக இதன் நிலையானது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.[286][287] உருசியா ஒரு முன்னாள் வல்லரசு ஆகும். முந்தைய சோவியத் ஒன்றியத்தின் முன்னணிப் பகுதியாகும்.[156] ஜி-20, ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஓர் உறுப்பினராக உருசியா உள்ளது. விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்,[288] ஐரோவாசியப் பொருளாதார ஒன்றியம்,[289] கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு,[290] சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு[291] மற்றும் பிரிக்ஸ்[292] போன்ற அமைப்புகளில் ஒரு முன்னணிப் பங்கை உருசியா ஆற்றி வருகிறது.

அண்டை நாடான பெலாரசுவுடன் உருசியா நெருக்கமான உறவு முறைகளைப் பேணி வருகிறது. இரு நாடுகளின் ஓர் இணைக் கூட்டமைப்பான "ஒன்றிய நாட்டின்" ஒரு பகுதி பெலாரசுவாகும்.[293] வரலாற்று ரீதியாக உருசியாவின் நெருக்கமான கூட்டாளியாக செர்பியா இருந்து வந்துள்ளது. ஏனெனில், இரு நாடுகளுமே ஒரு வலிமையான பரற்பர பண்பாட்டு, இன மற்றும் சமய ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன.[294] உருசியாவின் இராணுவத் தளவாடங்களுக்கு மிகப் பெரிய நுகர்வோராக இந்தியா உள்ளது. சோவியத் சகாப்தத்திலிருந்தே இரு நாடுகளும் ஒரு வலிமையான உத்தி ரீதியிலான மற்றும் தூதரக உறவு முறைகளைப் பகிர்ந்து கொண்டு வந்துள்ளன.[295] புவிசார் அரசியல் ரீதியாக முக்கியமான தென்காக்கேசியா மற்றும் நடு ஆசியாவில் உருசியா செல்வாக்குச் செலுத்தி வருகிறது; இந்த இரு பகுதிகளும் உருசியாவின் "கொல்லைப்புறம்" என்று குறிப்பிடப்படுகின்றன.[296][297]

Thumb
       உருசியா
       உருசியாவின் "நட்பற்ற நாடுகளின் பட்டியலில்" உள்ள நாடுகள். உக்குரைன் மீதான படையெடுப்புக்காக உருசியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகளை இப்பட்டியலானது உள்ளடக்கியுள்ளது.

21-ஆம் நூற்றாண்டில் பிராந்திய ஆதிக்கம் மற்றும் பன்னாட்டுச் செல்வாக்கைப் பாதுகாப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட ஓர் ஆக்ரோஷமான அயல்நாட்டுக் கொள்கையை உருசியா பின்பற்றி வருகிறது. அரசாங்கத்துக்கு உள்நாட்டு ஆதரவை அதிகரிப்பதையும் இது குறிக்கோளாகக் கொண்டிருந்தது. 2008-இல் ஜார்ஜியாவுடனான ஒரு போர் மற்றும் 2014-இல் தொடங்கிய உக்குரைன் போர் உள்ளிட்ட சோவியத் காலத்துக்குப் பிந்தைய அரசுகளில் இராணுவத் தலையீட்டையும் இது செய்தது. மத்திய கிழக்கில் தன் செல்வாக்கை அதிகரிக்க உருசியா விரும்புகிறது. மிக முக்கியமாக சிரிய உள்நாட்டுப் போரில் ஓர் இராணுவத் தலையீடு செய்ததன் மூலமாக இவ்வாறு ஆக விரும்புகிறது. இணையப் போர் முறை மற்றும் வான் வெளி விதிமீறல்கள் ஆகியவற்றுடன் தேர்தலில் தலையிடுவது ஆகியவை உருசிய சக்தி குறித்த பார்வையை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.[298] அண்டை நாடான உக்குரைன் மற்றும் மேற்குலகம் - குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை மற்றும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு ஆகியவற்றுடனான உருசியாவின் உறவு முறைகளானவை வீழ்ச்சி அடைந்து விட்டன; குறிப்பாக 2014-இல் கிரிமியா இணைக்கப்பட்டது மற்றும் 2022-இல் தொடங்கப்பட்ட ஒரு முழு அளவிலான படையெடுப்பு ஆகியவற்றிலிருந்து வீழ்ச்சி அடைந்து விட்டன.[299][300] பகிர்ந்து கொள்ளப்பட்ட அரசியல் குறிக்கோள்கள் காரணமாக உருசியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு முறைகளானவை குறிப்பிடத்தக்க அளவுக்கு இரு தரப்பு மற்றும் பொருளாதார ரீதியில் வலுவடைந்துள்ளன.[301] ஒரு சிக்கலான உத்தி ரீதியிலான, எரிபொருள் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு உறவு முறைகளைத் துருக்கியும், உருசியாவும் பகிர்ந்து கொண்டுள்ளன.[302] உருசியா ஈரானுடன் இனிமையான மற்றும் நட்புடணர்வுடைய உறவு முறைகளைப் பேணி வருகிறது. உருசியாவின் ஓர் உத்தி ரீதியிலான மற்றும் பொருளாதாரக் கூட்டாளியாக ஈரான் திகழ்கிறது.[303] தன் செல்வாக்கை ஆர்க்டிக்,[304] ஆசியா-பசிபிக்,[305] ஆப்பிரிக்கா,[306] மத்திய கிழக்கு[307] மற்றும் இலத்தீன் அமெரிக்காவில்[308] விரிவடையச் செய்ய உருசியா அதிகரித்து வரும் நிலையாக முயற்சி செய்து வருகிறது. பொருளாதார உளவியல் பிரிவு அமைப்பின் கூற்றுப் படி, சீனா அல்லது இந்தியா போன்ற நாடுகளில் வாழும் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர் உருசியாவை நோக்கிச் சம நிலையுடைய அல்லது ஆதரவான பார்வையைக் கொண்டுள்ளனர்.[309][310]

இராணுவம்

Thumb
உருசிய விமானப் படையின் ஐந்தாம் தலைமுறைத் தாரைப் போர் விமானமான சுகோய் எஸ்யு-57[311]

உருசிய ஆயுதப் படைகளானவை தரைப்படை, கடற்படை மற்றூம் விமானப்படை என பிரிக்கப்பட்டுள்ளன. இரு சுதந்திரமான ஆயுதமேந்திய படைகளும் உள்ளன. அவை உத்தி ரீதியிலான ஏவுகணைத் துருப்புக்கள் மற்றும் விமானத்திலிருந்து இறக்கப்படும் துருப்புகள் ஆகியவை ஆகும்.[9] 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி உருசிய இராணுவமானது சுமார் 10 இலட்சம் பணியில் உள்ள வீரர்களைக் கொண்டுள்ளது. உலகின் ஐந்தாவது மிகப் பெரிய இராணுவம் இதுவாகும். சுமார் 20 இலட்சம் முதல் 2 கோடி வரையிலான கையிருப்பு வீரர்களையும் அது கொண்டுள்ளது.[312][313] 18 - 27 வயதுடைய அனைத்து ஆண் குடிமகன்களும் ஆயுதமேந்திய படைகளில் ஓர் ஆண்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது கட்டாயமாகும்.[9]

அணு ஆயுதங்களை உடைய ஐந்து அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும். உலகின் மிக அதிக அணு ஆயுதங்களின் கையிருப்பை இந்நாடு கொண்டுள்ளது. உலகின் அணு ஆயுதங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உருசியா கொண்டுள்ளது.[314] தொலைதூர ஏவுகணை நீர்மூழ்கிகளின் இரண்டாவது மிகப் பெரிய குழுவை உருசியா கொண்டுள்ளது.[315] தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்திகளைப் பயன்படுத்தும் வெறும் மூன்று நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும்.[316] உலகிலேயே மூன்றாவது அதிக இராணுவ செலவீனத்தை உருசியா கொண்டுள்ளது. 2023-இல் இந்நாடு ஐஅ$109 பில்லியன் (7,79,524.4 கோடி)யைச் செலவழித்தது. இது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5.9% ஆகும்.[317] 2021-இல் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இது திகழ்ந்தது. ஒரு பெரிய மற்றும் முழுவதுமாக உள்நாட்டை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்புத் தொழில்துறையை இந்நாடு கொண்டுள்ளது. இதன் சொந்த இராணுவத் தளவாடங்களில் பெரும்பாலானவற்றை இந்நாடே உற்பத்தி செய்கிறது.[318]

மனித உரிமைகள்

Thumb
2022ஆம் ஆண்டின் உக்குரைன் மீதான உருசியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து போருக்கு எதிரான போராட்டங்கள் உருசியா முழுவதும் வெடித்தன. பரவலான ஒடுக்கு முறையைப் போராட்டங்கள் சந்தித்தன. 15,000 மக்கள் கைது செய்யப்படுவதற்கு இது காரணமானது.[319]

முன்னணி சனநாயக மற்றும் மனித உரிமைக் குழுக்களால் உருசியாவின் மனித உரிமை மீறல்களானவை தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பன்னாட்டு மன்னிப்பு அவை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவை உருசியா சனநாயக நாடு அல்ல என்றும், இதன் குடிமக்களுக்கு சில அரசியல் உரிமைகள் மற்றும் குடிசார் சுதந்திரங்களுக்கு மட்டுமே இந்நாடு அனுமதி அளிக்கிறது என்றும் குற்றம் சாட்டுகின்றன.[320][321]

2004-இலிருந்து பிரீடம் ஹவுஸ் அமைப்பானது தன் உலகில் சுதந்திரம் ஆய்வில் "சுதந்திரமற்ற" நாடு என உருசியாவைக் குறிப்பிடுகிறது.[322] 2011-இலிருந்து பொருளாதார உளவியல் பிரிவு அமைப்பானது தன் சனநாயகச் சுட்டெண்ணில் உருசியாவை "முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகார அரசாங்கம்" என தரப்படுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டில் 167 நாடுகளில் 144-ஆவது இடத்தை உருசியாவுக்கு இது வழங்கியது.[323] ஊடக சுதந்திரத்தைப் பொறுத்த வரையில் 2022-இன் எல்லைகளற்ற செய்தியாளர்களின் ஊடகச் சுதந்திரச் சுட்டெண்ணில் 180 நாடுகளில் 155-ஆவது இடத்தை உருசியாவுக்கு அது கொடுத்தது.[324] முறையற்ற தேர்தல்கள்,[325] எதிர் அரசியல் கட்சிகள் மற்றும் போராட்டங்கள் மீதான தடுப்பு நடவடிக்கை,[326][327] அரசு சாராத அமைப்புகளை இடர்ப்படுத்துதல், சுதந்திர பத்திரிக்கையாளர்களை வன்முறை கொண்டு அடக்குவதை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கொல்லுதல்,[328][329][330] மற்றும் பொது ஊடகம் மற்றும் இணையத்தின் தணிக்கை ஆகியவற்றுக்காக அரசியல் விமர்சகர்கள் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களால் உருசிய அரசாங்கமானது பரவலாக விமர்சிக்கப்படுகிறது.[331]

முசுலிம்கள் குறிப்பாக சலாபிகள் உருசியாவில் இடர்ப்பாடுகளை எதிர் கொண்டுள்ளனர்.[332][333] வடக்கு காக்கேசியாவில் எதிர்ப்பாளர்களை அடக்குவதற்காக உருசிய அதிகாரக் குழுக்களானவை பகுத்தறிவற்ற கொலைகள்,[334] கைதுகள், கட்டாயத்தின் பேரில் காணாமல் போதல் மற்றும் குடிமக்களை சித்திரவதை செய்தல் ஆகிய குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளன.[335][336] தாகெஸ்தானில் தங்களது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் தொல்லைகளை சில சலாபிகள் எதிர் கொள்வதுடன், எதிர்ப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தங்களது வீடுகளும் வெடி வைத்துத் தகர்க்கப்படுவதற்கு ஆளாகின்றனர்.[337][338] உருசியச் சிறைகளில் உள்ள செச்சனியர் மற்றும் இங்குசு ஆகியோர் பிற இனக் குழுக்களைக் காட்டிலும் அதிக முறைகேடாக நடத்தப்படுவதற்கு ஆளாவதாகக் குறிப்பிடப்படுகிறது.[339] 2022-ஆம் ஆண்டின் உக்குரைன் படையெடுப்பின் போது உருசியா "வடிகட்டு முகாம்களை" அமைத்தது. இங்கு பல உக்குரைனியர்கள் முறைகேடாக நடத்தப்பட்டு உருசியாவுக்குக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். செச்சன் போர்களில் பயன்படுத்தப்பட்டவற்றுடன் இந்த முகாம்கள் ஒப்பிடப்படுகின்றன.[340][341] படையெடுப்பின் தொடக்கத்தைத் தொடர்ந்து அரசியல் ஒடுக்கு முறையும் கூட அதிகரித்துள்ளது. உருசிய ஆயுதப் படைகளுக்கு "அவப் பெயர் உண்டாக்குவோருக்கு" தண்டனைகளைக் கொடுக்கும் சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.[342]

ந. ந. ஈ. தி. உரிமைகளுக்கு ஏராளாமன கட்டுப்பாடுகளை உருசியா அறிமுகப்படுத்தியுள்ளது. தன் பாலினத் திருமணங்கள் மீதான 2020-ஆம் ஆண்டு தடை மற்றும் உருசிய ந. ந. ஈ. தி. இணையம் போன்ற ந. ந. ஈ. தி.+ அமைப்புகளை "அயல்நாட்டு முகவர்கள்" என அதிகாரப்பூர்வமாகப் பெயரிடுதல் போன்றவை இதில் அடங்கும்..[343][344]

இலஞ்ச ஊழல்

தங்களது அதிகாரத்தைத் தங்களது நாட்டின் வளங்களைத் திருடப் பயன்படுத்தும் ஓர் அரசு,[345] ஒரு சிலவர் ஆட்சி[346] மற்றும் ஒரு செல்வக்குழு ஆட்சி[347] எனப் பலவாறாக உருசிய அரசியலமைப்பானது குறிப்பிடப்படுகிறது. திரான்சுபரன்சி இன்டர்நேசனல் அமைப்பின் 2023-ஆம் ஆண்டிற்கான ஊழல் மலிவுச் சுட்டெண்ணில் மிகக் குறைவான தரத்தைக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடு இதுவாகும். 180 நாடுகளில் 141-ஆவது இடத்தை இது பெற்றது.[348] உருசிய ஒரு நீண்ட ஊழல் வரலாற்றைக் கொண்டுள்ளது. ஊழல் ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது.[349] இது பொருளாதாரம்,[350] வணிகம்,[351] பொது நிர்வாகம்,[352] சட்ட அமல்படுத்தல்,[353] சுகாதாரச் சேவை,[354][355] கல்வி[356] மற்றும் இராணுவம்[357] உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பாதிக்கிறது.

சட்டமும், குற்றமும்

உருசியாவில் சட்டங்களின் முதன்மையான மற்றும் அடிப்படை அறிக்கையானது உருசியக் கூட்டரசின் அரசியலமைப்பாகும். உருசிய குடிசார் மற்றும் குற்றவியல் சட்டம் போன்ற சட்டங்களானவை உருசிய சட்டத்தின் முதன்மையான சட்ட ஆதாரங்களாக உள்ளன.[358][359][360]

ஐக்கிய அமெரிக்காவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப் பெரிய சட்டத்திற்குப் புறம்பான ஆயுத வணிகச் சந்தையை உருசியா கொண்டுள்ளது. உலகளாவிய அமைப்பு ரீதியிலான குற்றச் சுட்டெண்ணில் ஐரோப்பாவில் முதல் இடத்திலும், உலகில் 32-ஆவது இடத்திலும் இது உள்ளது. சிறைகளில் மிக அதிக எண்ணிக்கையில் மக்களையுடைய நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும்.[361][362][363]

Remove ads

பொருளாதாரம்

Thumb
மாசுகோவில் உள்ள மாசுகோ பன்னாட்டு வணிக மையம். இந்நகரமானது உலகின் மிகப் பெரிய நகர்ப்புறப் பொருளாதாரங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது.[364]

உருசியா ஒரு கலவையான சந்தைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. 1990களின் போது சோவியத் திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து ஒரு குழப்பமான வடிவ மாற்றத்தைத் தொடர்ந்து இவ்வாறாகக் கொண்டுள்ளது.[365] நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பாலானவை இதன் ஏராளமான மற்றும் வேறுபட்ட இயற்கை வளங்கள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.[366] உலக வங்கியால் உருசியாவானது ஓர் உயர்-வருமானப் பொருளாதாரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[367] பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் ஒன்பதாவது மிகப் பெரிய பொருளாதாரத்தையும், கொள்வனவு ஆற்றல் சமநிலையில் ஆறாவது மிகப் பெரிய பொருளாதாரத்தையும் இந்நாடு கொண்டுள்ளது. சில அளவீடுகளின் படி இதன் பொருளாதாரமானது கொள்வனவு ஆற்றல் சமநிலையில் உலகில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது.[368] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறை சுமார் 54%, தொழில் துறை 33%, மற்றும் இருப்பதிலேயே மிகச் சிறியதாக வேளாண்மைத் துறை 4% ஆகிய அளவுகளைக் கொண்டுள்ளன.[369] உருசியாவானது பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 7 கோடிப் பேரைக் கொண்டுள்ளது. உலகின் எட்டாவது மிகப் பெரிய பணியாளர் எண்ணிக்கை இதுவாகும்.[370] ஒரு மிகக் குறைந்த அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பின்மை வீதமாக 4.1%-ஐ இது கொண்டுள்ளது.[371]

உருசியா உலகின் 13-ஆவது மிகப் பெரிய ஏற்றுமதியாளராகவும், 21-ஆவது மிகப் பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது.[372][373] கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சம்பந்தப்பட்ட வரிகள் மற்றும் ஏற்றுமதி சுங்க வரிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை இது அதிகமாகச் சார்ந்துள்ளது. சனவரி 2022-இல் உருசியாவின் கூட்டாட்சி வரவு செலவுத் திட்ட அறிக்கையில் வருமானத்தில் 45%-ஆக இந்த வரிகள் இருந்தன.[374] 2019-இல் இதன் ஏற்றுமதியில் 60% வரை இவையே இருந்தன.[375] பெரிய பொருளாதாரங்களில் வெளிநாட்டுக் கடனின் மிகக் குறைவான நிலைகளில் ஒன்றை உருசியா கொண்டுள்ளது.[376] இதன் உலகின் ஐந்தாவது மிகப் பெரிய அந்நியச் செலாவணிக் கையிருப்புகளானவை ஐஅ$601 பில்லியன் (42,98,111.6 கோடி)க்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளன.[377] எனினும், இவற்றில் பாதி வெளிநாடுகளில் தடைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு குறிப்பிடத்தக்க பணமானது உக்குரைனியப் போரில் செலவிடப்பட்டதாக நம்பப்படுகிறது. வளர்ந்த நாடுகளிலேயே வீட்டு வருமானம் மற்றும் செல்வத்தில் சமமற்ற நிலையானது மிக அதிகமாக உருசியாவில் காணப்படுகிறது.[378] பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இங்கு காணப்படுகின்றன.[379][380]

சோவியத் காலத்துக்குப் பிந்தைய வேகமான ஒரு தசாப்த பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகு உயர் கச்சா எண்ணெய் விலைகள், அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் முதலீட்டில் ஓர் ஏற்றம் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டிருந்த[199] உருசியப் பொருளாதாரமானது உருசிய-உக்குரைனியப் போர் மற்றும் கிரிமியா இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து 2014-இல் பன்னாட்டு பொருளாதாரத் தடைகளின் ஓர் அலையால் சேதமடைந்தது.[381] 2022-இல் உக்குரைன் மீதான உருசியாவின் படையெடுப்புக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் நிறுவனங்களின் புறக்கணிப்புகளையும் இந்நாடு எதிர் கொண்டது.[382] உலகில் மிக அதிகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடாக உருசியா உருவானது.[383] மேற்குலக நிதி அமைப்பில் இருந்து உருசியப் பொருளாதாரத்தைத் தனிமைப்படுத்தும் "ஓர் ஒட்டு மொத்த பொருளாதார மற்றும் நிதிப் போர்" என்று இச்செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டன.[214] இதன் விளைவான எதிர்மறைத் தாக்கத்தின் காரணமாக உருசிய அரசாங்கமானது ஏப்பிரல் 2022-இல் இருந்து பொருளாதாரத் தரவுகளில் பெருமளவைப் பதிப்பிப்பதை நிறுத்தியது.[384] உருசியா ஒப்பீட்டளவில் பொருளாதார நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சியைப் பேணிய போதும் (உயர் இராணுவச் செலவீனம், வீட்டு நுகர்வு, மற்றும் மூலதன முதலீடு ஆகியவற்றால் இது சாத்தியமானது) பொருளாதாரத் தடைகளானவை உருசியப் பொருளாதாரம் மீது ஒரு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.[385][386][387]

போக்குவரத்தும், ஆற்றலும்

Thumb
திரான்சு-சைபீரிய இரயில்வேயே உலகின் மிக நீளமான இருப்புப் பாதை வழி ஆகும். இது மாசுகோவை விளாதிவசுத்தோக்குடன் இணைக்கிறது.[388]

உருசியாவில் தொடருந்துப் போக்குவரத்தானது பெரும்பாலும் அரசால் இயக்கப்படும் உருசியத் தொடருந்து அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்நாட்டில் பயன்படுத்தப்படும் இருப்புப் பாதையின் மொத்த நீளமானது பொதுவாக உலகின் மூன்றாவது மிக நீண்டதாக, 87,000 கிலோ மீட்டர்களையும் விட அதிகமானதாக உள்ளது.[389] 2019-ஆம் ஆண்டிடு நிலவரப் படி, உருசியாவானது உலகின் ஐந்தாவது மிகப் பெரிய சாலை அமைப்பைக் கொண்டுள்ளது. 15 இலட்சம் கிலோ மீட்டருக்கும் மேற்கொண்ட நீளமுடைய சாலைகள் இங்கு உள்ளன.[390] எனினும், இதன் சாலை அடர்த்தியானது உலகிலேயே மிகக் குறைவானவற்றில் ஒன்றாக உள்ளது. இதன் பரந்த நிலப்பரப்பும் இதற்கு ஒரு பங்குக் காரணமாகும்.[391] உருசியாவின் உள்நாட்டு நீர்வழிகளானவை உலகிலேயே மிக நீண்டதாகும். இவற்றின் ஒட்டு மொத்த நீளம் 1,02,000 கிலோமீட்டர் ஆகும்.[392] உருசியா 900-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களைக் கொண்டுள்ளது.[393] இந்த எண்ணிக்கை உலகில் ஏழாவது இடத்தில் இது தரப்படுத்தப்படுகிறது. இதில் மிகவும் பரபரப்பானது மாசுகோவிலுள்ள செரேமேதியேவோ பன்னாட்டு விமான நிலையமாகும். உருசியாவின் மிகப் பெரிய துறைமுகமானது கருங்கடலில் கிராஸ்னதார் பிரதேசத்திலுள்ள நோவோரோசிய்ஸ்க் துறைமுகமாகும்.[394]

உருசியா பரவலாக ஓர் ஆற்றல் வல்லரசாகக் குறிப்பிடப்படுகிறது.[395] உலகின் மிகப் பெரிய நிரூபிக்கப்பட்ட இயற்கை எரிவாயு வளங்கள்,[396] இரண்டாவது மிகப் பெரிய நிலக்கரி வளங்கள்,[397] எட்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் வளங்கள்[398] மற்றும் ஐரோப்பாவில் மிகப் பெரிய களிமண் பாறை எண்ணெய் வளங்களை இந்நாடு கொண்டுள்ளது.[399] உருசியா உலகின் முன்னணி இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராகவும்,[400] இரண்டாவது மிகப் பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தியாளராகவும்,[401] மற்றும் இரண்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராகவும் உள்ளது.[402][403] உருசியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியானது ஐரோப்பிய ஒன்றியம், சீனா, மற்றும் முன்னாள் சோவியத் மற்றும் கிழக்குக் குழும நாடுகளுடன் ஆழமான பொருளாதார உறவு முறைகளுக்கு வழி வகுத்துள்ளது.[404][405] எடுத்துக்காட்டாக, கடைசித் தசாப்தத்தில் ஐரோப்பாவுக்கான (ஐக்கிய இராச்சியம் உட்பட) ஒட்டு மொத்த எரிவாயுத் தேவையில் உருசியாவின் பங்கானது 2009-இல் 25%-இலிருந்து பெப்பிரவரி 2022-இல் உக்குரைன் மீதான உருசியாவின் படையெடுப்புக்கு சில வாரங்களுக்கு முன்னர் 32%-ஆக அதிகரித்தது.[405]

2000-களின் நடுப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் பங்களிப்பானது சுமார் 20%-ஆக இருந்தது. இது முன்னர் 20 - 21%-ஆக இருந்தது.[406] உருசியாவின் ஏற்றுமதிகளில் எண்ணெய் மற்றும் வாயுவின் பங்களிப்பான சுமார் 50% மற்றும் கூட்டரசு வரவு செலவுத் திட்ட அறிக்கையின் வருவாயில் பங்களிப்பான சுமார் 50% ஆகியவை அதிகமான அளவாகும். உருசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏற்றத்தாழ்வுகள் எண்ணெய் மற்றும் வாயு விலைகளை அதிகமாகச் சார்ந்துள்ளன.[407] ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கானது 50%-யும் விடக் குறைவானதாகும். உருசியப் புள்ளியல் முகமையான ரோஸ்டாட் 2021-இல் பதிப்பித்த இத்தகைய அகல் விரிவான ஆய்வின் படி உருசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் மற்றும் வாயுத் துறையின் அதிகபட்ச மொத்தப் பங்களிப்பானது 2019-இல் 19.2%-ஆகவும், 2020-இல் 15.2%-ஆகவும் இருந்தது. இதில் பிரித்தெடுத்தல், சுத்திகரித்தல், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் வாயு விற்பனை, அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துதல், மற்றும் அனைத்துத் துணைச் செயல்பாடுகளும் அடங்கும். நோர்வே மற்றும் கசகஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கச்சா எண்ணெய்த் துறையின் பங்களிப்பை இது ஒத்ததாக உள்ளது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கச்சா எண்ணெய்த் துறையின் பங்களிப்பை விட மிகக் குறைவானதாக உள்ளது.[408][409][410][411][412]

உருசியா உலகின் நான்காவது மிகப் பெரிய மின்சார உற்பத்தியாளராக உள்ளது.[413] ஆற்றலின் மிகப் பெரிய ஆதாரமாக இயற்கை எரிவாயுவானது உள்ளது. அனைத்து முதன்மை ஆற்றலில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கும், 42% மின்சார நுகர்வுக்கும் இது காரணமாக உள்ளது.[414][415] பொது மக்கள் பயன்பாட்டுக்காக அணு சக்தியைப் பயன்படுத்திய முதல் நாடு உருசியா ஆகும். 1954-இல் உலகின் முதல் அணு மின்சக்தி நிலையத்தை உருசியா கட்டமைத்தது.[416] அணு மின்சக்தித் தொழில்நுட்பத்தில் இது தொடர்ந்து முன்னோடியாக உள்ளது. வேகமான நியூட்ரான் அணுக்கரு உலைகளில் ஓர் உலகத் தலைவராக உருசியா கருதப்படுகிறது.[417] உலகின் நான்காவது மிகப் பெரிய அணு சக்தி ஆற்றல் உற்பத்தியாளராக உருசியா திகழ்கிறது. மொத்த மின்சார உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை அணுசக்தியிலிருந்து இந்நாடு உற்பத்தி செய்கிறது.[415][418] உருசியாவின் ஆற்றல் கொள்கையானது அணுசக்தி ஆற்றலின் பங்கை விரிவாக்குவது மற்றும் புதிய அணுக்கரு உலைத் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது ஆகியவற்றைக் குறிக்கோள்களாக கொண்டுள்ளது.[417]

உருசியா 2019-இல் பாரிசு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.[419] இந்நாட்டின் பைங்குடில் வாயுக்களின் வெளியீடுகளானவை உலகின் நான்காவது மிகப் பெரியதாகும்.[420] நிலக்கரியானது இன்னும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்குக்குக் (17.64%) காரணமாக உள்ளது.[415] 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி உருசியா ஐந்தாவது மிகப் பெரிய நீர்மின்சார உற்பத்தியாளராக உள்ளது.[421] மொத்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்குக்கு (17.54%) நீர் மின்சாரமானது பங்களிக்கிறது.[415] புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களின் பயன்பாடு மற்றும் மேம்பாடானது தொடர்ந்து மிகக் குறைவானதாகவே உள்ளது. இத்தகைய ஆற்றல் ஆதாரங்களை விரிவாக்க வலிமையான அரசாங்க அல்லது பொது மக்களின் ஆதரவு இல்லாத சில நாடுகளில் உருசியாவும் ஒன்றாக இருப்பதால் இந்நிலை காணப்படுகிறது.[418]

வேளாண்மையும், மீன் வளர்ப்பும்

Thumb
சைபீரியாவின் தோம்சுக் மாகாணத்தில் கோதுமை

வேளாண்மைத் துறையானது மொத்தப் பணியாளர் எண்ணிக்கையில் சுமார் எட்டில் ஒரு பங்குப் பேருக்குப் பணி அளித்தாலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சுமார் 5%-ஐ மட்டுமே பங்களிக்கிறது.[422] 12,65,267 சதுர கிலோ மீட்டர்களுடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய அறுவடைப் பகுதியை இந்நாடு கொண்டுள்ளது. எனினும், இதன் சூழ்நிலையின் கடுமைத்தன்மை காரணமாக இதன் நிலத்தில் சுமார் 13.1% மட்டுமே வேளாண்மை நிலமாகவும்,[9] மேற்கொண்ட 7.4% பயிரிடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[423] நாட்டின் வேளாண்மை நிலமானது ஐரோப்பாவின் "ரொட்டிக் கூடையின்" பகுதியாகக் கருதப்படுகிறது.[424] விதைக்கப்படும் பகுதியில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானது தீவனப்பயிர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய விளை நிலங்களானவை தொழிற்பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.[422] உருசிய வேளாண்மையின் முதன்மையான உற்பத்திப் பொருளானது எப்போதுமே தானியமாக இருந்துள்ளது. பயிரிடும் நிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியில் இது விளைவிக்கப்படுகிறது.[422] உலகின் மிகப் பெரிய கோதுமை ஏற்றுமதியாளர்,[425][426] வாற்கோதுமை மற்றும் நெளி கோதுமையின் மிகப் பெரிய உற்பத்தியாளர், மக்காச் சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் மிகப் பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்று, மற்றும் உரத்தின் முன்னணித் தயாரிப்பாளராக உருசியா உள்ளது.[427]

காலநிலை மாற்றத்திற்கான தகவமைப்பு குறித்த பல்வேறு ஆய்வாளர்கள் 21-ஆம் நூற்றாண்டின் எஞ்சியுள்ள காலத்தில் உருசிய வேளாண்மைக்குப் பெரிய வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கின்றனர். ஏனெனில், சைபீரியப் பகுதியில் வேளாண்மைக்குத் தகுந்த சூழலானது இக்காலத்தில் அதிகரிக்கும். இது இப்பகுதிக்குள் இப்பகுதியிலிருந்தும், வெளியிலிருந்தும் புலப்பெயர்வுக்கு வழி வகுக்கும்.[428] மூன்று பெருங்கடல்கள் மற்றும் 12 சிறிய கடல்களை ஒட்டியுள்ள இதன் மிகப் பெரிய கடற்கரை காரணமாக உருசியா உலகின் ஆறாவது மிகப் பெரிய மீன் பிடித் தொழிற்துறையைக் கொண்டுள்ளது; 2018-இல் கிட்டத்தட்ட 50 இலட்சம் டன்கள் மீன்களை இந்நாடு பிடித்தது.[429] உலகின் மிகச் சிறந்த மீன் முட்டையான பெலுகா மீன் முட்டைகளுக்குத் தாயகமாக உருசியா உள்ளது. மெல்லிய உலோகக் கொள்கலன்களில் அடைத்து வைக்கப்படும் மீன்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கை உருசியா உற்பத்தி செய்கிறது. உலகின் மொத்த நல்ல நிலையில் உள்ள மற்றும் உறைய வைக்கப்பட்ட மீன்களில் சுமார் நான்கில் ஒரு பங்கை இது உற்பத்தி செய்கிறது.[422]

அறிவியலும், தொழில்நுட்பமும்

Thumb
மிகைல் இலமனோசொவ் (1711–1765) பல்கலை வல்லுநர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர், கவிஞர் மற்றும் கலைஞர் ஆவார்.

2019-இல் ஆய்வு மற்றும் விருத்தி மீது தன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1%-ஐ உருசியா செலவழித்தது. உலகின் பத்தாவது மிகப் பெரிய இத்தகைய செலவீனத்தை உருசியா கொண்டுள்ளது.[430] 2020-இல் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கையில் உலக அளவில் இது பத்தாவது இடத்தைப் பிடித்தது. தோராயமாக 13 இலட்சம் ஆய்வுக் கட்டுரைகளைப் பதிப்பித்தது.[431] 1904 முதல் நோபல் பரிசானது இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்காக 26 சோவியத் மற்றும் உருசியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[432] உலகளாவிய புத்துருவாக்கச் சுட்டெண்ணில் 2024-ஆம் ஆண்டு உருசியா 60-ஆவது இடம் பெற்றது. 2021-இல் இது பெற்ற 45-ஆவது இடத்தை விட இது குறைவானதாகும்.[433][434]

யூக்ளியமல்லாத வடிவியற் கணிதத்தில் முன்னோடியாக இருந்த நிக்கோலாய் லோபசேவ்ஸ்கி மற்றும் ஒரு புகழ் பெற்ற ஆசிரியரான பப்னுட்டி செபிசேவ் ஆகியோரின் காலங்களிலிருந்து உருசியக் கணிதவியலாளர்கள் உலகின் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் சிலராக உருவாயினர்.[435] நவீன வேதியியலின் முதன்மையான ஆதாரக் கட்டமைப்பான தனிம அட்டவணையை திமீத்ரி மெண்டெலீவ் உருவாக்கினார்.[436] பீல்ட்ஸ் பதக்கத்தை ஒன்பது சோவியத் மற்றும் உருசியக் கணிதவியலாளர்கள் பெற்றுள்ளனர். 2002-இல் பயின்கேர் அனுமானத் தேற்றத்திற்கான தன் இறுதி நிரூபிப்பிற்காக முதன் முதலில் கிளேய் மில்லினியம் பிரைஸ் பிராப்ளம்ஸ் விருது, மேலும் 2006-இல் பீல்ட்ஸ் பதக்கம் ஆகியவற்றைக் கிரிகோரி பெரல்மான் பெற்றுள்ளார்.[437]

வானொலியைத் தயாரித்தவர்களில் அலெக்சாந்தர் பப்போவும் ஒருவராவார்.[438] அதே நேரத்தில் நிக்கோலாய் பாசோவ் மற்றும் அலெக்சாந்தர் புரோகோரோவ் ஆகியோர் சீரொளி மற்றும் மேசரின் இணைக் கண்டுபிடிப்பாளர்களாக இருந்தனர்.[439] குறைகடத்திச் சந்திப்புகளின் பிரிவுக்கு முக்கியமான பங்களிப்புகளையும், ஒளி உமிழ் இருமுனையங்களையும் கண்டுபிடித்தல் ஆகியவற்றுக்கு ஒலேக் லோசேவ் பங்களித்துள்ளார்.[440] புவிவேதியியல், உயிரிப் புவிவேதியியல் மற்றும் கதிரியக்கக் காலமதிப்பீடு ஆகியவற்றின் நிறுவனர்களில் ஒருவராக விளாதிமிர் வெர்னாத்ஸ்கி கருதப்படுகிறார்.[441] நோயெதிர்ப்பியலில் தன்னுடைய முன்னோடி ஆய்வுக்காக இலியா மெச்னிகோவ் அறியப்படுகிறார்.[442] செவ்வியல் பழக்கமுறுத்தலில் தனது வேலைப்பாடுக்காக இவான் பாவ்லோவ் முதன்மையாக அறியப்படுகிறார்.[443] கோட்பாட்டு இயற்பியலின் பல பகுதிகளுக்கு அடிப்படையான பங்களிப்புகளை லேவ் லந்தாவு கொடுத்துள்ளார்.[444]

தோட்டத் தாவரங்கள் தோன்றிய மையங்களை அடையாளப்படுத்தியதற்காக நிகோலாய் வவிலோவ் மிக முக்கியமாக அறியப்படுகிறார்.[445] துரோபிம் லைசென்கோ முதன்மையாக லைசென்கோயியம் எனும் அறிவியலுக்காக அறியப்படுகிறார்.[446] பல பிரபலமான உருசிய அறிவியலாளர்களும், கண்டுபிடிப்பாளர்களும் வெளிநாடு வாழ் உருசியர்களாக இருந்தனர். இகோர் சிகோர்ஸ்கி அமெரிக்காவின் ஒரு விமானத் தயாரிப்பு முன்னோடியாவார்.[447] விளாதிமிர் சிவோரிகின் என்பவர் ஐகனோஸ்கோப் மற்றும் கைனெஸ்கோப் தொலைக்காட்சி அமைப்புகளின் கண்டுபிடிப்பாளர் ஆவார்.[448] பரிணாம உயிரியல் துறையில் நவீன கூட்டிணைப்பை வடிவமைத்த தனது வேலைப்பாட்டுக்காக தியோடோசியசு தோப்சன்ஸ்கி மைய நபராக உள்ளார்.[449] பெரு வெடிப்புக் கோட்பாட்டின் முதன்மையான பரிந்துரையாளர்களில் ஒருவராக ஜார்ஜ் காமாவ் திகழ்கிறார்.[450]

விண்வெளி ஆய்வு

Thumb
பூமியின் தாழ் வட்டப்பாதையில் செயல்படும் உருசிய விண்வெளி நிலையமான மீர்

உருசிய நடுவண் விண்வெளி நிறுவனமானது உருசியாவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகும். விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிப் பயணத் துறையில் இந்நாட்டின் சாதனைகளானவை கோட்பாட்டு விண்வெளிப் பயணவியலின் தந்தையான கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகிக்குத் தடயமிடப்படலாம். இவரது வேலைப்பாடுகளானவை செர்கேய் கோரோல்யோவ், வேலன்டின் குளுஷ்கோ மற்றும் பல பிறர் போன்ற முன்னாள் சோவியத் விண்வெளிப் பயண ஊர்திப் பொறியாளர்களுக்கு அகத்தூண்டுதலாக விளங்கின. இவர்கள் விண்வெளிப் போட்டியின் தொடக்க நிலைகள் மற்றும் அதைத் தாண்டிய காலத்தில் சோவியத் விண்வெளித் திட்டங்களின் வெற்றிக்குப் பங்களித்தனர்.[451]:6–7,333

1957-இல் முதன் முதலில் பூமியைச் சுற்றி வந்த செயற்கைக் கோளான இசுப்புட்னிக் 1 ஆனது ஏவப்பட்டது. 1961-இல் விண்வெளிக்குள்ளான முதல் மனிதப் பயணமானது வெற்றிகரமாக யூரி ககாரினால் மேற்கொள்ளப்பட்டது. பல பிற சோவியத் மற்றும் உருசிய விண்வெளிச் சாதனைகள் தொடர்ந்தன. 1963-இல் வலந்தீனா தெரெசுக்கோவா வஸ்தோக் 6 என்ற விண்கலத்தில் தனிநபராகப் பறந்து சென்று விண்வெளிக்குச் சென்ற முதல் மற்றும் இளமையான பெண்ணானார்.[452] 1965-இல் வோஷ்கோத் 2 பயணத்தின் போது விண்பெட்டகத்திலிருந்து வெளியேறி நடந்து விண்வெளியில் நடைபோட்ட முதல் மனிதனாக அலெக்சேய் லியோனவ் உருவானார்.[453]

1957-இல் ஒரு சோவியத் விண்வெளி நாயான லைக்கா இசுப்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியைச் சுற்றி வந்த முதல் விலங்கானது.[454] 1966-இல் உலூனா 9 விண்கலமானது ஒரு வானியல்சார் பொருள் (நிலா) மீது இறங்குதலை நடத்திய பிறகு செயல்பட்ட முதல் விண்கலமானது.[455] 1968-இல் சோந்த் 5 விண்கலமானது பூமியின் உயிரினங்களுடன் (இரு ஆமைகள் மற்றும் பிற உயிரினங்களுடன்) நிலாவைச் சுற்றி வந்த முதல் விண்கலமானது.[456] 1970-இல் வெனேரா 7 விண்கலமானது மற்றொரு கிரகமான வெள்ளி மீது இறங்கிய முதல் விண்கலமானது.[457] 1971-இல் மார்ஸ் 3 விண்கலமானது செவ்வாய் மீது இறங்கிய முதல் விண்கலமானது.[458]:34–60 இதே காலகட்டத்தின் போது, லுனோகோத் 1 விண்கலமானது முதல் கோள் தரையியக்க ஊர்தியானது.[459] அதே நேரத்தில், சல்யூட் 1 ஆனது உலகின் முதல் விண்வெளி நிலையமானது.[460]

ஏப்பிரல் 2022 நிலவரப்படி உருசியா விண்வெளியில் 172 செயல்பாட்டில் உள்ள செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது.[461] இது உலகின் மூன்றாவது மிக அதிக எண்ணிக்கையாகும். 2011-இல் விண்ணோடம் திட்டத்தின் கடைசி ஏவுதல் மற்றும் 2020-இல் எசுபேசுஎக்சுவின் முதல் மனிதர்களுடைய பயணம் ஆகியவற்றுக்கு இடையில் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்ல ஏற்ற ஒரே ஏவுகலங்களாக சோயூசு ஏவுகலங்கள் திகழ்ந்தன.[462] ஆகத்து 2023-இல் உலூனா 25 விண்கலமானது ஏவப்பட்டது. லூனா-குளோப் நிலவு ஆய்வுத் திட்டத்தின் முதல் விண்கலம் இதுவாகும்.[463]

சுற்றுலா

Thumb
சென் பீட்டர்சுபெர்கில் உள்ள பெட்டர்கோப் அரண்மனை. இது ஓர் உலகப் பாரம்பரியக் களமாகும்.

உலக சுற்றுலா அமைப்பின் குறிப்பின் படி, 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் 16-ஆவது மிக அதிகமாகப் பயணிகள் வருகை புரியும் நாடு உருசியாவாகும். ஐரோப்பாவில் பத்தாவது மிக அதிகப் பயணிகள் வருகை புரியும் நாடு உருசியாவாகும். இவ்வாண்டில் 24.6 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வருகைகள் புரியப்பட்டன.[464] சுற்றுலாவுக்கான கூட்டாட்சி முகமையின் கூற்றுப் படி, உருசியாவுக்கு வந்த அயல் நாட்டுக் குடிமக்களின் பயணங்களின் எண்ணிக்கையானது 2019-இல் 2.44 கோடியாக இருந்தது.[465] உருசியர்கள் பன்னாட்டுச் சுற்றுலாவுக்காக 2018-இல் ஐஅ$11.6 பில்லியன் (82,958.6 கோடி)களைச் செலவிட்டனர்.[464] 2019-இல் பயணமும், சுற்றுலாவும் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.8%-க்குப் பங்களித்தன.[466] கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் சுற்றுலாவானது 2020-இல் வீழ்ச்சியடைந்தது. அந்த ஆண்டில் அயல் நாட்டுப் பயணிகளில் 63 இலட்சத்துக்கும் சற்றே அதிகமானோர் மட்டுமே வருகை புரிந்தனர்.[467]

பண்டைக் கால உருசிய நகரங்களைக் கருத்துருவாகக் கொண்ட ஒரு வழியான "உருசியாவின் தங்க வளையத்தைச்" சுற்றிய ஒரு பயணம்; வோல்கா போன்ற பெரிய ஆறுகளின் மீதான படகுப் பயணம்; காக்கேசிய மலைத் தொடர் போன்ற மலைத் தொடர்களின் மீதான மலையேற்றம்[468] மற்றும் பிரபலமான திரான்சு-சைபீரியத் தொடருந்துப் பயணங்கள்[469] போன்றவற்றை உள்ளடக்கியதாக உருசியாவின் முதன்மையான சுற்றுலா வழிகள் உள்ளன. செஞ்சதுக்கம், பெட்டர்கோப் அரண்மனை, கசன் கிரெம்லின், புனித செர்கியசின் லவ்ரா தேவாலயம் மற்றும் பைக்கால் ஏரி உள்ளிட்டவை உருசியாவின் மிக அதிகப் பயணிகள் வருகை புரியும் மற்றும் பிரபலமான இடங்களாக உள்ளன.[470]

உலகெங்கிலும் இருந்து வந்த மக்களைக் கொண்டிருக்கிற இந்நாட்டின் தலைநகரம் மற்றும் வரலாற்று மையமான மாசுகோவானது ஒரு சுறுசுறுப்பான நவீன பெரு நகரம் ஆகும். உயர் கலை, உலகத் தர பேலட் நடனம் மற்றும் நவீன வானுயர் கட்டடங்களைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பாரம்பரிய மற்றும் சோவியத் சகாப்தக் கட்டடங்களையும் இது தக்க வைத்துக் கொண்டுள்ளது.[471] ஏகாதிபத்தியத் தலை நகரான சென் பீட்டர்சுபெர்கு பாரம்பரியக் கட்டடங்கள், மாவட்டத் தலைமைக் கிறித்தவத் தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள், வெண்ணிற இரவுகள், குறுக்கு வெட்டுக் கோடுகள் போன்ற ஆறுகள் மற்றும் ஏராளமான கால்வாய்களுக்காகப் பிரபலமானதாக உள்ளது.[472] உருசிய அரசு அருங்காட்சியகம், ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் மற்றும் திரேதியகோவ் கலைக் காட்சிக் கூடம் போன்ற அதன் செழிப்பான அருங்காட்சியகங்களுக்காக உருசியா உலகப் புகழ் பெற்றதாக உள்ளது. போல்சோய் மற்றும் மரின்ஸ்கி போன்ற திரையரங்குகளுக்காகவும் புகழ் பெற்றுள்ளது. கிரெம்லின் மற்றும் புனித பசில் பேராலயம் ஆகியவை உருசியாவின் முக்கியமான பண்பாட்டு இடங்களில் சிலவாக உள்ளன.[473]

Remove ads

மக்கள் தொகை

Thumb
2021-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி உருசிய நகரங்களின் மக்கள் தொகை அடர்த்தி
உருசியா முழுவதுமான இனக்குழுக்கள்
Thumb
2010-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையையுடைய உருசியாவின் இனக்குழுக்கள்
Thumb
2021-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி உருசிய இனத்தவர்களின் சதவீதத்தின் அடிப்படையில் உருசியப் பகுதிகள்

2021-இல் உருசியா (கிரிமியா மற்றும் செவஸ்தோபோல் தவிர்த்து) 14.47 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.[16] 2010-ஆம் ஆண்டின் 14.28 கோடி மக்கள் தொகையில் இருந்து இது ஓர் அதிகரிப்பாகும்.[474] ஐரோப்பாவின் மிக அதிக மக்கள் தொகையுடைய மற்றும் உலகின் ஒன்பதாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடு இதுவாகும்.[475] ஒரு சதுர கிலோமீட்டருக்கு 8 பேர் என்ற மக்கள் தொகை அடர்த்தியுடன் உருசியாவானது உலகின் மக்கள் அடர்த்தி மிகவும் குறைவான நாடுகளில் ஒன்றாக உள்ளது.[9] இதன் மக்களில் பெரும் அளவினர் இதன் மேற்குப் பகுதிக்குள் வாழ்கின்றனர்.[476] இந்நாடானது அதிகளவு நகரமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மக்களில் மூன்றில் இரு பங்கினர் பட்டணங்கள் மற்றும் நகரங்களில் வாழ்கின்றனர்.

உருசியாவின் மக்கள் தொகையானது 14.80 கோடிக்கும் அதிகமாக 1993-ஆம் ஆண்டு உச்ச நிலையை அடைந்தது. இதன் பிறப்பு வீதத்தையும் விட அதிகமான இதன் இறப்பு வீதம் காரணமாக இறுதியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இதை சில ஆய்வாளர்கள் மக்கள் தொகை பிரச்சினை என்று அழைக்கின்றனர்.[477] 2009-இல் 15 ஆண்டுகளில் முதல் முறையாக இது ஆண்டு மக்கள் அதிகரிப்பைப் பதிவு செய்தது. குறைவான இறப்பு வீதம் மற்றும் அதிகரித்து வந்த பிறப்பு வீதம் மற்றும் அதிகரித்த மக்கள் குடியேற்றம் காரணமாக இறுதியாக ஆண்டு மக்கள் தொகை அதிகரிப்பை இது கண்டது.[478] எனினும், 2020-ஆம் ஆண்டு முதல் இந்த மக்கள் தொகை அதிகரிப்புகளானவை எதிர் மறையாகி விட்டன. கோவிட்-19 பெருந்தொற்றின் மூலமான அதிகப்படியான இறப்புகளானவை இதன் வரலாற்றில் மிகப் பெரிய அமைதி கால மக்கள் தொகை வீழ்ச்சிக்குக் காரணமாகியுள்ளன.[479] 2022-ஆம் ஆண்டின் உக்குரைன் மீதான உருசியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மக்கள் தொகைப் பிரச்சினையானது ஆழமாகி விட்டது.[480] குறிப்பிடப்படும் அதிகப் படியான இராணுவ இறப்புகள் மற்றும் மேற்குலக நாடுகளின் பெரும் அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் புறக்கணிப்புகளால் ஏற்பட்ட மீண்டும் தொடங்கிய மக்கள் வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக இது நடைபெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.[481]

2022-இல் உருசியா முழுவதும் கருவள வீதமானது ஒரு பொண்ணுக்கு 1.42 குழந்தைகள் என்று மதிப்பிடப்பட்டது.[482] 2.1 என்ற தேவையான கருவள வீதத்தை விட இது குறைவானதாகும். உருசியாவின் கருவள வீதமானது உலகின் மிகக் குறைவான கருவள வீதங்களில் ஒன்றாகும்.[483] இதைத் தொடர்ந்து இந்நாடானது உலகின் மிக அதிக வயதுடைய மக்கள் தொகைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. இந்த நாட்டின் மக்களின் சராசரி வயது 40.3 ஆண்டுகளாகும்.[9]

பல்வேறு சிறுபான்மையினருடன் தொடர்புடைய பல துணை தேச அமைப்புகளுடன் கூடிய ஒரு பல தேச நாடு உருசியாவாகும்.[484] நாடு முழுவதும் 193-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் உள்ளன. 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் தொகையில் தோராயமாக 81% பேர் உருசியர்களாக இருந்தனர். மக்கள் தொகையில் எஞ்சிய 19% பேர் சிறுபான்மை இனத்தவராக இருந்தனர்;[485] உருசியாவின் மக்கள் தொகையில் ஐந்தில் நான்கு பங்குக்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய வழித்தோன்றல்களாகவும் -இதில் பெருமளவினர் சிலாவிய மக்களாவர்,[486] ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையினத்தவர் பின்னோ-உக்ரிய மற்றும் செருமானிய மக்களாக உள்ளனர்.[487][488] ஐரோப்பிய வழித் தோன்றல்களில் பெருமளவினர் சிலாவிய மக்களாக உள்ளனர். ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப் படி உருசியாவின் புலம் பெயர்ந்து வந்த மக்கள் தொகையானது உலகின் மூன்றாவது மிகப் பெரியதாகும். 1.16 கோடிக்கும் மேற்பட்டோர் இவ்வாறாகப் புலம் பெயர்ந்து உள்ளனர்;[489] இதில் பெரும்பாலானவர்கள் சோவியத் காலத்துக்குப் பிந்தைய நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். முதன்மையாக இவர்கள் நடு ஆசியாவிலிருந்து வந்துள்ளனர்.[490]

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, கூட்டாட்சி அமைப்பு ...

மொழி

உருசியா முழுவதுமான சிறுபான்மையின மொழிகள்
Thumb
உருசியா முழுவதும் ஆல்த்தாய் மற்றும் யூரலிய மொழிகள் பேசப்படுகின்றன
Thumb
வடக்கு காக்கேசியாவானது இன-மொழி ரீதியில் பல்வகைமை உடையதாக உள்ளது.[492]

உருசியாவின் அதிகாரப்பூர்வ மற்றும் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி உருசியம் ஆகும்.[3] ஐரோப்பாவின் மிக அதிகமாகப் பேசப்படும் தாய் மொழி இதுவாகும். ஐரோவாசியாவின் புவியியல் ரீதியாக மிகப் பரவலாக உள்ள மொழி இதுவாகும். மேலும், உலகின் மிகப் பரவலாகப் பேசப்படும் இசுலாவிய மொழி இதுவாகும்.[493] அனைத்துலக விண்வெளி நிலையத்தின் இரு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று உருசியம் ஆகும்[494]. மேலும், ஐக்கிய நாடுகள் அவையின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் இதுவும் ஒன்றாகும்.[493]

உருசியா பல மொழிகளை உடைய நாடாகும். தோராயமாக 100 - 150 சிறுபான்மையின மொழிகள் நாடு முழுவதும் பேசப்படுகின்றன.[495][496] 2010-ஆம் ஆண்டின் உருசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி நாடு முழுவதும் 13.75 கோடிப் பேர் உருசிய மொழியையும், 43 இலட்சம் பேர் தாதர் மொழியையும், மற்றும் 11 இலட்சம் பேர் உக்குரைனிய மொழியையும் பேசுகின்றனர்.[497] உருசியத்தோடு மேற்கொண்டதாக தங்களது சொந்த மொழிகளை நிறுவும் உரிமையை நாட்டின் தனிக் குடியரசுகளுக்கு அரசியலமைப்பானது உரிமையாகக் கொடுத்துள்ளது. மேலும், தங்களது தாய் மொழியைத் தக்க வைக்கும் உரிமையை அரசியலமைப்பு இதன் குடிமக்களுக்கு உறுதி அளிக்கிறது. தாய் மொழியின் கல்வி மற்றும் வளர்ச்சிக்குத் தகுந்த சூழ்நிலையை உருவாக்கவும் வழி வகை செய்கிறது.[498] எனினும், பல மொழிகள் அழியும் நிலைக்குச் செல்வதன் காரணமாக உருசியாவின் மொழியியல் பல்வகைமையானது வேகமாகக் குறைந்து வருவதாகப் பல்வேறு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.[499][500]

சமயம்

Thumb
மாசுகோவின் புனித பசில் பேராலயமானது உருசியாவின் மிக முக்கியமான சமயக் கட்டடமாக உள்ளது.

அரசியலமைப்பு ரீதியாக உருசியா ஒரு மதச் சார்பற்ற நாடு ஆகும். அதிகாரப் பூர்வமாக சமய சுதந்திரமானது இதன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.[501] நாட்டின் மிகப் பெரிய சமயம் கிழக்கு மரபு வழிக் கிறித்தவமாகும். உருசிய மரபுவழித் திருச்சபையால் இது முதன்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[502] நாட்டின் "வரலாறு, மற்றும் அதன் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டின் உருவாக்கம், மற்றும் வளர்ச்சியில்" இதன் "தனிச் சிறப்பான பங்குக்காக" சட்டபூர்வமாக இத்திருச்சபையானது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[501] இதன் "வரலாற்றுப் பாரம்பரியத்தை" உள்ளடக்கிய நாட்டின் "பாரம்பரிய" சமயங்களாக கிறித்தவம், இசுலாம், யூதம் மற்றும் பௌத்தம் ஆகியவை உருசியச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[503][504]

உருசியாவில் இரண்டாவது மிகப் பெரிய சமயமாக இசுலாம் உள்ளது. வடக்கு காக்கேசியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மற்றும் வோல்கா-உரால் பகுதியில் உள்ள சில துருக்கிய மக்கள் இடையே பாரம்பரிய சமயமாக இது உள்ளது.[502] கால்மீக்கியா, புரியாத்தியா, சபைக்கால்சுக்கி ஆகிய பகுதிகளில் பௌத்த சமயத்தினர் பெருமளவில் காணப்படுகின்றனர். துவா பகுதியிலுள்ள மக்கள் தொகையில் பெருமளவினர் பௌத்த சமயத்தவர் ஆவர்.[502] ரோத்னோவெரி (இசுலாவிய புது பாகன் சமயம்),[505] ஆசியனியம் (சிதிய புதுப் பாகன் சமயம்),[506] பிற இன பாகன் சமயங்கள், மற்றும் ஒலிக்கும் செதார்களின் அனஸ்தாசியானியம்[507] போன்ற உள்-பாகன் இயக்கங்கள், இந்து சமயத்தின் பல்வேறு இயக்கங்கள்,[508] சைபீரிய சாமன் மதம்[509] மற்றும் தெங்கிரி மதம், ரோரிசியம் போன்ற பல்வேறு புது தியோசாபிய இயக்கங்கள், மற்றும் பிற நம்பிக்கைகள் உள்ளிட்ட பிற சமயங்களையும் பல உருசியர்கள் பின்பற்றுகின்றனர்.[510][511] சில சமயச் சிறுபான்மையினர் ஒடுக்கு முறையை எதிர் கொண்டுள்ளனர். சிலர் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளனர்;[512] குறிப்பாக 2017-இல் உருசியாவில் யெகோவாவின் சாட்சிகள் சட்டத்திற்குப் புறம்பானவர்களாக ஆக்கப்பட்டனர். அன்றிலிருந்து இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர். "தீவிரவாத" மற்றும் "பாரம்பரியமற்ற" நம்பிக்கையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.[513]

2012-இல் ஆராய்ச்சி அமைப்பான இசுரேதா நீதி அமைச்சகத்துடன் ஒத்துழைப்பில் அரேனா அட்லசைப் பதிப்பித்தது. 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் துணைத் தகவல் இதுவாகும். நாடு முழுவதுக்குமான ஒரு பெரிய எடுத்துக்காட்டு சுற்றாய்வை அடிப்படையாகக் கொண்ட உருசியாவின் சமய மக்கள் தொகை மற்றும் தேசியங்களை விளக்கமாக வரிசைப்படுத்தி இது கூறியது. இதன் முடிவுகளானவை 47.3% உருசியர்கள் தங்களைக் கிறித்தவர்கள் என்று அறிவித்ததைக் குறிப்பிட்டது. இதில் 41% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 1.5% வெறுமனே மரபுவழித் திருச்சபையினர் அல்லது உருசியம் சாராத மரபுவழித் திருச்சபைகளின் உறுப்பினர்கள், 4.1% திருச்சபை தொடர்பற்ற கிறித்தவர்கள் மற்றும் 1%-க்கும் குறைவான பழைய நம்பிக்கையாளர்கள், கத்தோலிக்கர்கள் அல்லது சீர்திருத்தத் திருச்சபையினர் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இது தவிர்த்து 25% பேர் எந்தவொரு குறிப்பிட்ட சமயத்துடனும் தொடர்பில்லாத நம்பிக்கையாளர்களாகவும், 13% பேர் இறை மறுப்பாளர்களாகவும், 6.5% பேர் முசுலிம்களாகவும்,[k] 1.2% பேர் "கடவுள்கள் மற்றும் மூதாதையர்களுக்கு மதிப்பளிக்கும் பாரம்பரிய சமயங்களைப் பின்பற்றுவோராகவும்" (ரோட்னோவெரி, பிற பாகன் சமயங்கள், சைபீரிய சாமன் மதம் மற்றும் தெங்கிரி மதம்), 0.5% பேர் புத்த சமயத்தவர், 0.1% பேர் யூத சமயத்தவர்களாகவும் மற்றும் 0.1% பேர் இந்துக்களாகவும் இருந்தனர்.[502]

கல்வி

Thumb
உருசியாவில் மிக மதிப்பு வாய்ந்த கல்வி நிறுவனமான மாசுகோ அரசுப் பல்கலைக்கழகம்[514]

உருசியா வயது வந்தோருக்கான எழுத்தறிவு வீதமாக 100%-ஐக் கொண்டுள்ளது.[515] 11 ஆண்டு கால கட்டாயக் கல்வியைக் கொண்டுள்ளது. இது 7 முதல் 17-18 வயதுடைய குழந்தைகளுக்கு என்று உள்ளதாகும்.[516] அரசியலமைப்பின் படி இதன் குடிமக்களுக்கு இந்நாடு கட்டணமில்லாக் கல்வியை வழங்குகிறது.[517] உருசியாவின் கல்வி அமைச்சகமானது தொடக்க மற்றும் மேல்நிலைக் கல்விக்கும், மேலும் தொழிற்கல்விக்கும் பொறுப்பானதாகும். அதே நேரத்தில் உருசியாவின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகமானது அறிவியல் மற்றும் உயர்கல்விக்குப் பொறுப்பானதாகும்.[516] பிராந்திய அதிகார மையங்கள் தங்களது அதிகார வரம்புகளுக்குள் கூட்டாட்சி சட்டங்களின் நடப்பிலுள்ள ஆதாரக் கட்டமைப்புகளுக்குள் கல்வியை ஒழுங்குபடுத்துகின்றன. உலகின் மிக அதிகக் கல்வியறிவு பெற்ற நாடுகளில் உருசியாவும் ஒன்றாகும். மூன்றாம் நிலைக் கல்வி கற்ற பட்டதாரிகளை உலகின் ஆறாவது மிக அதிக தகவுப் பொருத்த அளவாக மக்கள் தொகையின் சதவீதத்தில் 62.1%-ஆக இந்நாடு கொண்டுள்ளது.[518] 2018-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.7%-ஐக் கல்விக்காக இந்நாடு செலவழித்தது.[519]

உருசியாவின் பள்ளிக்கு முந்தைய கல்வி அமைப்பானது மிகவும் மேம்பட்டதாகவும், விருப்பத் தேர்ந்தெடுப்புக்கு உரியதாகவும் உள்ளது.[520] 3 - 6 வயதுடைய குழந்தைகளில் சுமார் ஐந்தில் நான்கு பங்கினர் நாள் குழந்தையர் பேணகங்கள் அல்லது பாலர் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். தொடக்கப் பள்ளியானது 11 ஆண்டுகளுக்குக் கட்டாயமாகும். 6 - 7 வயதில் இருந்து இது தொடங்குகிறது. ஓர் அடிப்படைப் பொதுக் கல்விச் சான்றிதழ்களுக்கு இது வழி வகுக்கிறது.[516] மேல்நிலைத் தரச் சான்றிதழுக்கு மேற்கொண்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பள்ளிக் கல்வியானது தேவைப்படுகிறது. உருசியர்களில் சுமார் எட்டில் ஏழு பங்கினர் தங்களது கல்வியை இந்த நிலையைத் தாண்டித் தொடர்கின்றனர்.[521]

உயர் கல்விக்கான கல்வி நிலையங்களுக்கான அனுமதியானது தேர்வுக்குரியதாகவும், மிகவும் போட்டியிட வேண்டியதாகவும் உள்ளது;[517] முதல் பட்டதாரிப் படிப்புகளானவை பொதுவாக ஐந்து ஆண்டுகள் பிடிக்கின்றன.[521] மாசுகோ அரசுப் பல்கலைக்கழகம் மற்றும் சென் பீட்டர்சுபெர்கு அரசுப் பல்கலைக்கழகம் ஆகியவை உருசியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய பல்கலைக்கழகங்கள் ஆகும்.[522] நாடு முழுவதும் 10 மிக அதிக மதிப்புடைய கூட்டாட்சிப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. 2019-இல் அயல்நாட்டு மாணவர்களுக்கான உலகின் ஐந்தாவது முன்னணி கல்வி கற்கும் இடமாக உருசியா திகழ்ந்தது. சுமார் மூன்று இலட்சம் அயல்நாட்டு மாணவர்கள் இங்கு கல்வி கற்று வந்தனர்.[523]

சுகாதாரம்

Thumb
மெட்டல்லுர்க் எனும் சோச்சியில் உள்ள ஒரு சோவியத் சகாப்த நல ஆக்க மருத்துவமனை நிலையம்[524]

அரசியலமைப்பின் படி உருசியா இலவசமான, அனைவருக்குமான சுகாதாரச் சேவையை அனைத்து உருசியக் குடிமக்களுக்கும் உறுதி செய்கிறது. இதை ஒரு கட்டாய அரசு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக உறுதி செய்கிறது.[525] உருசியக் கூட்டரசின் சுகாதார அமைச்சகமானது உருசியப் பொது சுகாதாரச் சேவை அமைப்பை மேற்பார்வையிடுகிறது. இத்துறையானது 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பணியாளர்களாகக் கொண்டுள்ளது. உள்ளூர் நிர்வாகத்தை மேற்பார்வையிட தங்களது சொந்த சுகாதாரத் துறைகளை கூட்டாட்சி அமைப்புகளும் கொண்டுள்ளன. உருசியாவில் தனியார் சுகாதாரச் சேவைகளைப் பெற ஒரு தனியான தனியார் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமானது தேவைப்படுகிறது.[526]

2019-இல் உருசியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.65%-ஐ சுகாதாரச் சேவைக்காகச் செலவிட்டது.[527] பிற வளர்ந்த நாடுகளை விட இதன் சுகாதாரச் சேவை செலவீனமானது குறிப்பிடத்தக்க அளவுக் குறைவாக உள்ளது.[528] உலகின் மிக அதிக பெண்களுக்கு சார்பான பாலின வீதங்களில் ஒன்றை உருசியா கொண்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணுக்கும் 0.859 ஆண்களே இங்கு உள்ளனர்.[9] இது அதிகப்படியான ஆண்கள் இறப்பு வீதத்தால் ஏற்பட்டுள்ளது.[529] 2021-இல் உருசியாவில் பிறப்பின் போது ஒட்டு மொத்த ஆயுட்கால எதிர்பார்ப்பானது 70.06 ஆண்டுகளாக (ஆண்களுக்கு 65.51 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 74.51 ஆண்டுகள்) இருந்தது.[530] இந்நாடு ஒரு மிகக் குறைவான குழந்தை இறப்பு வீதத்தையும் (1,000 குழந்தைப் பிறப்புகளுக்கு 5 குழந்தைகள் இறப்பு வீதம்) கொண்டுள்ளது.[531]

உருசியாவில் இறப்பிற்கான முதன்மையான காரணமாக இதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளன.[532] உருசியாவில் பரவலான உடல் நலப் பிரச்சினையாக உடற் பருமன் உள்ளது. பெரும்பாலான வயது வந்தோர் அதிகப்படியான எடையுடையவர்களாக உள்ளனர்.[533] எனினும், நாட்டில் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையானது உருசியாவின் வரலாற்று ரீதியான அதிக மதுபான நுகர்வு வீதமாகும்.[534] உலகின் மிக அதிக மதுபான நுகர்வுகளில் ஒன்றாக இவ்வீதம் தொடர்கிறது. கடைசி தசாப்தத்தில் ஒரு குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்ட போதிலும் இந்நிலை தொடர்கிறது.[535] நாட்டில் மற்றுமொரு சுகாதாரப் பிரச்சினையானது புகைப் பழக்கமாகும்.[536] தற்போது குறைந்து வந்தாலும் நாட்டின் அதிகப்படியான தற்கொலை வீதமானது[537] ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாகத் தொடர்கிறது.[538]

Remove ads

பண்பாடு

Thumb
இரவில் மாசுகோவின் போல்சோய் திரையரங்கம்

உருசிய எழுத்தாளர்களும், தத்துவவாதிகளும் ஐரோப்பிய இலக்கியம் மற்றும் சிந்தனைகளின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியுள்ளனர்.[539][540] பாரம்பரிய இசை,[541] பாலட் நடனம்,[542] விளையாட்டு,[543] ஓவியம்[544] மற்றும் திரைத்துறை[545] ஆகியவற்றின் மீது பெரும் தாக்கத்தை உருசியர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் விண்வெளிப் பயணத்திற்கு முன்னோடிப் பங்களிப்புகளையும் கூட இந்நாடு கொடுத்துள்ளது.[546][547]

உருசியா 32 யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களுக்குத் தாயகமாக உள்ளது. இதில் 21 களங்கள் பண்பாட்டுடன் தொடர்புடையவை ஆகும். அதே நேரத்தில் 31 மேற்கொண்ட களங்கள் பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ள பட்டியலில் உள்ளன.[548] உலகம் முழுவதும் உருசியப் பண்பாட்டைப் பரப்பியதில் ஒரு முதன்மையான பங்கை பெரிய, உலகளாவிய வெளிநாடு வாழ் உருசியர்கள் ஆற்றியுள்ளனர். உருசியாவின் தேசியச் சின்னமான இரட்டைத் தலைக் கழுகானது ஜார் மன்னர்களின் காலத்தில் இருந்தே உள்ளது. இந்நாட்டின் மரபுக் குறியீடு மற்றும் வரலாற்று ஆய்வில் இது முக்கிய அம்சமாக உள்ளது.[72] நாட்டின் தேசிய நபராக்கங்களாக உருசியக் கரடியும், உருசியத் தாயும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.[549][550] மத்ரியோஷ்கா பொம்மையானது உருசியாவின் ஒரு பண்பாட்டுச் சின்னமாகக் கருதப்படுகிறது.[551]

விடுமுறைகள்

Thumb
சென் பீட்டர்சுபெர்கில் நெவா ஆற்றில் கொண்டாடப்படும் ஸ்கார்லெட் செய்ல்ஸ் பண்டிகை

பொது, தேசப்பற்று மற்றும் சமயம் சார்ந்த எட்டு அதிகாரப்பூர்வ விடுமுறைகளை உருசியா கொண்டுள்ளது.[552] ஆண்டானது 1 சனவரி அன்று புது ஆண்டு நாளில் தொடங்குகிறது. இதற்குப் பிறகு உடனடியாக 7 சனவரி அன்று உருசிய மரபுவழிக் கிறித்துமசு கொண்டாடப்படுகிறது. இவை இரண்டுமே நாட்டின் மிகப் பிரபலமான விடுமுறைகள் ஆகும்.[553] "தந்தை நாட்டின் தற்காப்பாளர் நாளானது" ஆண்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டு 23 பெப்பிரவரி அன்று கொண்டாடப்படுகிறது.[554] 8 மார்ச்சு அன்று கொண்டாடப்படும் அனைத்துலக பெண்கள் நாளானது சோவியத் சகாப்தத்தின் போது உருசியாவில் பிரபலமாக உருவானது. பிற விடுமுறை நாட்களை விட "15 மடங்கு" அதிக இலாபத்தை மாசுகோவின் பூ விற்பனையாளர்கள் பொதுவாகப் பெறுகின்றனர் என்ற அளவுக்கு பெண்கள் குறித்த ஆண்டுக் கொண்டாட்டமானது மிகவும் பிரபலமாகியுள்ளது. குறிப்பாக, உருசிய ஆண்களிடையே இது பிரபலமாகியுள்ளது.[555] இளவேனில் மற்றும் தொழிலாளர் நாள் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் தொழிலாளர்களுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சோவியத் சகாப்த விடுமுறை நாள் இதுவாகும்.[556]

நாசி செருமனி மீதான சோவியத் வெற்றி மற்றும் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவை நினைவுபடுத்தும் வெற்றி நாளானது மே 9 அன்று மாசுகோவின் செஞ்சதுக்கத்தில் ஆண்டு தோறும் ஒரு பெரும் அணி வகுப்பாகக் கொண்டாடப்படுகிறது.[557] பிரபலமான "இறப்பற்ற இராணுவப் பிரிவின்" குடிசார் நிகழ்ச்சியையும் இது குறிக்கிறது.[558] வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்திலிருந்து இறையாண்மையை உருசியா அறிவித்ததை நினைவுபடுத்த 12 சூன் அன்று கொண்டாடப்படும் உருசிய நாள்[559] மற்றும் மாசுகோவைப் போலந்துக்காரர்கள் ஆக்கிரமித்திருந்ததன் முடிவைக் குறிக்கும் 1612-ஆம் ஆண்டு எழுச்சியை நினைவுபடுத்த நவம்பர் 4 அன்று கொண்டாடப்படும் ஒற்றுமை நாள் உள்ளிட்டவை பிற தேசப்பற்று விடுமுறைகள் ஆகும்.[560]

பல பிரபலமான பொதுவற்ற விடுமுறைகள் உள்ளன. பழைய ஆண்டுப் பிறப்பானது 14 சனவரி அன்று கொண்டாடப்படுகிறது.[561] மாசுலேனிட்சா என்பது பண்டைக் கால மற்றும் பிரபலமான ஒரு கிழக்கு இசுலாவிய நாட்டுப்புற விடுமுறை ஆகும்.[562] விண்வெளிக்குள் சென்ற முதல் மனிதப் பயணத்திற்குப் புகழ் அளிக்கும் விதமாக 12 ஏப்பிரல் அன்று விண்வெளி வீரர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.[563] புனித வெள்ளி மற்றும் திரித்துவ ஞாயிறு ஆகியவை இரு முதன்மையான கிறித்தவ விடுமுறைகள் ஆகும்.[564]

கலையும், கட்டடக் கலையும்

Thumb
கார்ல் பிரியுல்லோவ், பொம்பெயியின் கடைசி நாள் (1833)
Thumb
உருசியாவின் பேரரசரின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாக குளிர்கால அரண்மனையானது பயன்படுத்தப்பட்டது.

தொடக்க கால உருசிய ஓவியங்களானவை சின்னங்கள் மற்றும் ஒளிரும் சுதை ஓவியங்களில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபல சின்னம் சார்ந்த ஓவியரான ஆந்த்ரே உருப்லேவ் உருசியாவின் பொக்கிசம் எனக் கருதப்படும் மிகச் சிறந்த சமயக் கலைகளில் சிலவற்றை உருவாக்கினார்.[565] 1757-இல் நிறுவப்பட்ட கலைக்கான உருசியக் கல்வி நிலையமானது உருசியக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. சமயம் சாராத ஓவியங்கள் குறித்த மேற்குலகத் தொழில்நுட்பங்களை உருசியாவுக்குள் கொண்டு வந்தது.[88] 18-ஆம் நூற்றாண்டில் கல்விப் பணியாளர்களான இவான் அர்குனோவ், திமித்ரி லெவித்ஸ்கி, விளாதிமிர் போரோவிகோவ்ஸ்கி ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்திய ஓவியர்களாக உருவாயினர்.[566] 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கமானது கார்ல் பிரியுல்லோவ் மற்றும் அலெக்சாந்தர் இவானோவ் ஆகியோரால் வரையப்பட்ட பல முக்கியமான ஓவியங்களைக் கண்டது. இவர்கள் இருவருமே புனைவிய வரலாற்று சித்திரப்படாம்களுக்காக அறியப்படுகின்றனர்.[567][568] மற்றொரு புனைவிய ஓவியரான இவான் ஐவசோவ்ஸ்கி கடல் சார்ந்தவற்றைச் சித்தரிக்கும் ஓவியக் கலையின் மிகச் சிறந்த ஓவியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[569]

1860-களில் இவான் கிராம்ஸ்கோய், இலியா ரெபின் மற்றும் வாசிலி பெரோவ் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட விமர்சனம் செய்த மெய்மையியலாளர்களின் (பெரெத்விசினிகி) ஒரு குழுவானது கலைக்கான உருசியக் கல்வி நிலையத்தில் இருந்து பிரிந்தது. சமூக வாழ்வின் பல தரப்பட்ட அம்சங்களை ஓவியங்களில் சித்தரித்தது.[570] 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமானது குறியீட்டியலின் வளர்ச்சியைக் கண்டது. மிக்கைல் விருபேல் மற்றும் நிக்கோலசு ரோரிச் ஆகியோரால் இது பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.[571][572] உருசிய அவந்த்-கார்டே கலையானது தோராயமாக 1890 முதல் 1930 வரை செழித்திருந்தது. எல் லிசிட்ஸ்கி,[573] காசிமிர் மலேவிச், நடாலியா கோஞ்சரோவா, வசீலி கண்டீன்ஸ்கி, மற்றும் மார்க் சகால் ஆகியோர் இந்த சகாப்தத்தைச் சேர்ந்த உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்கள் ஆவர்.[574]

உருசியக் கட்டடக் கலையின் வரலாறானது பண்டைக் கால இசுலாவியர்களின் தொடக்க கால மரக் கட்டடங்கள் மற்றும் கீவ ருஸ்ஸின் தேவாலயக் கட்டடக் கலையிலிருந்து தொடங்குகிறது.[575] கீவ ருஸ் கிறித்தவ மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு பைசாந்தியக் கட்டடக் கலையால் இது முதன்மையாகத் தாக்கம் பெற்றிருந்தது.[576] அரிசுடாட்டில் பியோரவந்தி மற்றும் பிற இத்தாலியக் கட்டடக் கலைஞர்கள் உருசியாவுக்கள் மறுமலர்ச்சி பாணிகளைக் கொண்டு வந்தனர்.[577] 16-ஆம் நூற்றாண்டானது தனித்துவமான கூடாரம் போன்ற தேவாலயங்கள் மற்றும் வெங்காய வடிவக் குவிமாடம் போன்றவற்றின் வளர்ச்சியைக் கண்டது. வெங்காய வடிவக் குவிமாடமானது உருசியக் கட்டடக் கலையின் ஒரு தனித்துவமான அம்சமாகும்.[578] 17-ஆம் நூற்றாண்டில் மாசுகோ மற்றும் யாரோசுலாவில் தீ போன்று காணப்படும் பாணியிலான அலங்காரமானது செழித்திருந்தது. 1680-களின் நரிஷ்கின் பரோக் கட்டடக் கலைக்கு படிப்படியாக இது வழி விட்டது.[579]

பேரரசர் பேதுருவின் சீர்திருத்தங்களுக்குப் பிறகு உருசியக் கட்டடக் கலையானது மேற்கு ஐரோப்பியப் பாணிகளால் தாக்கம் பெற்றது. ரோகோகோ கட்டடக் கலைக்கான 18-ஆம் நூற்றாண்டு ஆர்வமானது பார்த்தாலோமியோ ரசுதிரேல்லி மற்றும் அவரது பின்பற்றாளர்களின் வேலைப்பாடுகளுக்கு இட்டுச் சென்றது. வாசிலி பசேனோவ், மத்வேய் கசகோவ் மற்றும் இவான் இசுதரோவ் போன்ற மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய உருசியக் கட்டடக் கலைஞர்கள் மாசுகோ மற்றும் சென் பீட்டர்சுபெர்கில் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் நினைவுச் சின்னங்களை உருவாக்கினர். இதைத் தொடர்ந்து வந்த பல உருசியக் கலை வடிவங்களுக்கு ஓர் அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தனர்.[565] பேரரசி கேத்தரீனின் ஆட்சிக் காலத்தின் போது சென் பீட்டர்சுபெர்கானது புதுப் பாரம்பரியக் கட்டடக் கலையின் ஒரு வெளிப்புற அருங்காட்சியகமாக மாற்றம் பெற்றது.[580] முதலாம் அலெக்சாந்தருக்குக் கீழ் பேரரசு பாணியானது நடைமுறை ரீதியிலான கட்டடக்கலைப் பாணியாக உருவானது.[581] 19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியானது புது பைசாந்திய மற்றும் உருசிய புத்தெழுச்சிப் பாணிகளால் ஆதிக்கம் பெற்றிருந்தது.[582] 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருசியப் புதுப் பாரம்பரியப் புத்தெழுச்சியானது ஒரு புதுப் பாணியானது.[583] புதுக் கலை,[584] கட்டமைப்புவாதம்[585] மற்றும் பொதுவுடைமைவாதப் பாரம்பரியம் போன்றவை 20-ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியின் மிகப் பரவலான பாணிகள் ஆகும்.[586]

இசை

Thumb
பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி (1840–1893). ஓவிய ஆண்டு 1893. ஓவியர் நிகோலாய் திமித்ரியேவிச் குஸ்னெட்சோவ்.

18-ஆம் நூற்றாண்டு வரை உருசியாவில் இசையானது முதன்மையாக தேவாலய இசை மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனங்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தது.[587] 19-ஆம் நூற்றாண்டில் பாரம்பரிய இசையமைப்பாளர் மிக்கைல் கிளிங்காவுடன் சேர்த்து ஐந்து பேரைக் கொண்ட த மைட்டி ஹேன்ட்புல் குழுவின் (இதற்குப் பிறகு பெலியயேவ் குழு வந்தது)[588] பிற உறுப்பினர்கள், மற்றும் இசையமைப்பாளர்கள் ஆண்டன் மற்றும் நிக்கோலாய் உரூபின்ஸ்டெயினால் தலைமை தாங்கப்பட்ட உருசிய இசைக் குழுவுக்கு இடையிலான பிரச்சினைகளால் இசையானது வரையறுக்கப்பட்டது.[589] புனைவிய சகாப்தத்தின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கியின் பிந்தைய பாரம்பரியமானது 20-ஆம் நூற்றாண்டுக்குள் செர்கேய் ரச்மனினோபால் தொடரப்பட்டது. அலெக்சாந்தர் சிரியாபின், அலெக்சாந்தர் கிலசுனோவ்,[587] இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, செர்கேய் புரோகோபியேவ் மற்றும் திமித்ரி சோஸ்தகோவிச், மற்றும் பின்னர் எடிசன் தெனிசோவ், சோபியா குபைதுலினா,[590] ஜார்ஜி சிவிரிதோவ்,[591] மற்றும் ஆல்பிரெட் இசுனிட்கே ஆகியோர் 20-ஆம் நூற்றாண்டின் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள் ஆவர்.[590]

சோவியத் சகாப்தத்தின் போது பாப் இசையும் கூட ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான புகழ் பெற்ற நபர்களை உருவாக்கியது. இதில் இரு பாலட் நடனக் கலைஞர்களான விளாதிமிர் விசொட்சுக்கி மற்றும் புலட் ஒகுட்சவா,[590] மற்றும் மேடைக் கலைஞரான அல்லா புகசேவா[592] ஆகியோர் அடங்குவர். சோவியத் அதிகாரக் குழுக்களிடமிருந்து தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும் ஜாஸ் இசையானது செழித்து வளர்ந்தது. நாட்டின் மிகப் பிரபலமான இசை வடிவங்களில் ஒன்றாகப் பரிணாமம் அடைந்தது.[590] 1980-கள் வாக்கில் ராக் இசை உருசியா முழுவதும் பிரபலமானது. அரியா, அக்குவேரியம்,[593] டிடிடி[594] மற்றும் கினோ[595] போன்ற இசைக் குழுக்களை உருவாக்கியது. கினோ இசைக் குழுவின் தலைவரான விக்டர் திசோய் குறிப்பாக ஒரு மிகப் பெரிய நபராக உருவானார்.[596] 1960-களிலிருந்தே உருசியாவில் பாப் இசையானது தொடர்ந்து செழித்து வளர்ந்தது. டி. எ. டி. யு. போன்ற உலகளவில் பிரபலமான இசைக் குழுக்களையும் கொண்டிருந்தது.[597]

இலக்கியமும், தத்துவமும்

வார்ப்புரு:Main வார்ப்புரு:Multiple image உலகின் மிக அதிகத் தாக்கம் கொண்ட மற்றும் வளர்ச்சி அடைந்த இலக்கியங்களில் ஒன்றாக உருசிய இலக்கியம் கருதப்படுகிறது.[539] இது நடுக் காலத்தில் இருந்து தொடங்கியது. அப்போது பழைய கிழக்கு இசுலாவிய மொழியில் இதிகாசங்களும், காலவரிசை நூல்களும் எழுதப்பட்டன.[598] அறிவொளிக் காலத்தின் போது மிகைல் இலமனோசொவ், தெனிசு போன்விசின், கவ்ரிலா தெர்சவின் மற்றும் நிகோலாய் கரம்சின் ஆகியோரின் நூல்களுடன் இலக்கியமானது முக்கியத்துவத்தில் வளர்ச்சி அடைந்தது.[599] 1830-களின் தொடக்கத்தில் இருந்து கவிதை, வசனம் மற்றும் நாடகம் ஆகியவற்றில் பெரிதும் ஆச்சரியப்பட வைத்த பொற்காலத்தின் கீழ் உருசிய இலக்கியமானது சென்றது.[600] கவிதைத் திறமையுள்ளவர்கள் மலர்வதற்குப் புனைவியமானது அனுமதியளித்தது. வாசிலி சுகோவ்ஸ்கி, பிறகு இவரது சீடரான அலெக்சாந்தர் பூஷ்கின் வெளிச்சத்துக்கு வந்தனர்.[601] பூஷ்கினின் காலடியைத் தொடர்ந்து ஒரு புதிய தலைமுறைக் கவிஞர்கள் பிறந்தனர். இதில் மிக்கைல் லெர்மோந்தோவ், நிகோலாய் நெக்ரசோவ், அலெக்செய் கான்ஸ்டன்டினோவிச் டால்ஸ்டாய், பியோதர் தியுத்சேவ் மற்றும் அபனசி பெத் ஆகியோர் அடங்குவர்.[599]

முதல் மிகச் சிறந்த உருசியப் புதின எழுத்தாளர் நிகோலாய் கோகோல் ஆவார்.[602] இவருக்குப் பிறகு இவான் துர்கெனோவ் வந்தார். சிறு கதைகள் மற்றும் புதினங்கள் ஆகிய இரண்டிலுமே சிறந்தவராக துர்கெனோவ் திகழ்ந்தார்.[603] பியோதர் தஸ்தயெவ்ஸ்கி மற்றும் லியோ டால்ஸ்டாய் ஆகியோர் சீக்கிரமே சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்களாக உருவாயினர். மிக்கைல் சல்திகோவ்-செத்ரின் நையாண்டி வசனங்களை எழுதினார்.[604] அதே நேரத்தில் நிகோலாய் லெஸ்கோவ் அவரது சிறு புனைவுகளுக்காக முக்கியமாக நினைவுபடுத்தப்படுகிறார்.[605] இந்நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஆன்டன் செக்கோவ் சிறுகதை எழுதுவதில் சிறந்து விளங்கினார். ஒரு முன்னணி நாடக ஆசிரியராக உருவானார்.[606] நீதிக் கதை எழுத்தாளரான இவான் கிரிலோவ்,[607] விமர்சகரான விசாரியோன் பெலின்ஸ்கி போன்ற புனைவு சாராத எழுத்தாளர்கள்,[608] மற்றும் அலெக்சாந்தர் கிரிபோயேதோவ் மற்றும் அலெக்சாந்தர் ஓஸ்த்ரோவ்ஸ்கி போன்ற நாடக ஆசிரியர்கள் உள்ளிட்டோர் 19-ஆம் நூற்றாண்டின் பிற முக்கியமான எழுத்தாளர்கள் ஆவர்.[609][610] 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமானது உருசியக் கவிதையின் வெள்ளிக் காலமாகக் குறிப்பிடப்படுகிறது. அலெக்சாந்தர் புளோக், அன்னா அக்மதோவா, போரிஸ் பாஸ்ரர்நாக், மற்றும் கான்ஸ்டன்டைன் பல்மோன்ட் போன்ற கவிஞர்களை இந்தச் சகாப்தமானது கொண்டிருந்தது.[611] அலெக்சாண்டர் குப்ரின், நோபல் பரிசு பெற்ற இவான் புனின், லியோனித் ஆந்த்ரேயேவ், எவ்செனி சம்யதின், திமித்ரி மெரேஸ்கோவ்ஸ்கி மற்றும் ஆந்த்ரே பெளி போன்ற சில முதல் தர புதின எழுத்தாளர்கள் மற்றும் சிறுகதை எழுத்தாளர்களில் சிலரை இக்காலமானது உருவாக்கியது.[599]

1917-ஆம் ஆண்டின் உருசியப் புரட்சிக்குப் பிறகு உருசிய இலக்கியமானது சோவியத் மற்றும் வெளி நாடுகளில் வாழும் வெள்ளை இயக்கத்தவர் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. 1930-களில் பொதுவுடைமைவாத மெய்யியலானது உருசியாவில் முதன்மையான புதிய பாணியாக உருவானது. இதன் முன்னணி நபர் மாக்சிம் கார்க்கி ஆவார். இந்த பாணிக்கான அடித்தளங்களை இவர் அமைத்தார்.[612] மிக்கைல் புல்ககோவ் சோவியத் சகாப்தத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராவார்.[613] நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் புதினமான வீரம் விளைந்தது உருசிய இலக்கியத்தின் மிக வெற்றிகரமான வேலைப்பாடுகளில் ஒன்றாகும். வெளிநாடு வாழ் வெள்ளை இயக்க எழுத்தாளர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் விளாதிமிர் நபோக்கோவ்,[614] மற்றும் ஐசாக் அசிமோவ் ஆகியோர் அடங்குவர். ஐசாக் அசிமோவ் "பெரும் மூன்று" அறிவியல் புனைவு எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[615] சில எழுத்தாளர்கள் சோவியத் சித்தாந்தத்தை எதிர்க்கத் துணிந்திருந்தனர். நோபல் பரிசு பெற்ற புதின எழுத்தாளரான அலெக்சாண்டர் சோல்செனிட்சின் இதில் ஒருவராவார். இவர் குலாக் எனும் தண்டனைப் பணி முகாம்களில் இருந்த வாழ்வு குறித்து எழுதினார்.[616]

உருசியத் தத்துவமானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக உள்ளது. அலெக்சாந்தர் கெர்சன் "வேளாண் மக்கள் ஈர்ப்பியத்தின்" தந்தைகளில் ஒருவராக அறியப்படுகிறார்.[617] மிகைல் பக்கூனின் "அரசின்மையின்" தந்தையாகக் குறிப்பிடப்படுகிறார்.[618] அரசின்மை-பொதுவுடைமைவாதத்தின் மிக முக்கியமான கோட்பாட்டாளராக பேதுரு குரோபோத்கின் திகழ்கிறார்.[619] மிக்கைல் பக்தினின் எழுத்துக்களானவை அறிஞர்களுக்கு முக்கியமான அகத்தூண்டுதலாக இருந்துள்ளன.[620] தெய்வீக ஞானத்தின் முன்னணிக் கோட்பாட்டாளராகவும், தெய்வீக ஞான சபையின் இணை நிறுவனராகவும் எலனா பிளவாத்ஸ்கி பன்னாட்டு அளவில் பின்பற்றாளர்களைப் பெற்றுள்ளார்.[621] ஒரு முக்கியப் புரட்சியாளரான விளாதிமிர் லெனின் பொதுவுடைமைவாதத்தின் ஒரு திரிபு வடிவமான லெனினிசத்தை உருவாக்கினார்.[622] மற்றொரு புறம் லியோன் திரொட்ஸ்கி திரொட்ஸ்கியியத்தை உருவாக்கினார்.[623] 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஒரு முக்கியமான தத்துவவாதியாக அலெக்சாந்தர் சினோவியேவ் திகழ்ந்தார்.[624] தன்னுடைய பாசிசப் பார்வைகளுக்காக அறியப்படும் அலெக்சாந்தர் துகின் "புவிசார் அரசியலின் குரு" என்று கருதப்படுகிறார்.[625]

சமையல் பாணி

Thumb
குவாசு என்பது ஒரு பண்டைக் கால மற்றும் பாரம்பரிய உருசியப் பானமாகும்.

கால நிலை, பண்பாடு, சமயப் பாரம்பரியங்கள் மற்றும் நாட்டின் பரந்த புவிவியலால் உருசிய சமையல் பாணியானது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அண்டை நாடுகளின் சமையல் பாணிகளுடன் இது ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. புல்லரிசி, கோதுமை, வாற்கோதுமை மற்றும் சிறுதானியப் பயிர்களானவை பல்வேறு ரொட்டிகள், மெலிதான கேக் வகைகள் மற்றும் கூலங்கள், மேலும் பல பானங்களுக்கான மூலப் பொருட்களைக் கொடுக்கின்றன. ரொட்டியின் பல வேறுபட்ட வகைகளானவை[626] உருசியா முழுவதும் மிகப் பிரபலமானவையாக உள்ளன.[627] ஸ்ச்சி, போர்ஸ்ச், உகா, சோல்யங்கா, மற்றும் ஓக்ரோஷ்கா உள்ளிட்ட சுவை மிகுந்த சூப்புகளும், குழம்புகளும் இந்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இசுமேதனா (ஒரு கடுமையான புளிப்புப் பாலேடு) மற்றும் மயோனெய்சு ஆகியவை அடிக்கடி சூப்புகள் மற்றும் சாலட்களுடன் சேர்க்கப்படுகின்றன.[628][629] பிரோஸ்கி,[630] பிலினி[631] மற்றும் சிர்னிகி ஆகியவை மெலிதான கேக் வகைகளின் உள்நாட்டு வடிவங்களாகும்.[632] பீஃப் இசுதுரோகனோப்,[633]வார்ப்புரு:Rp சிக்கன் கீவ்,[633]வார்ப்புரு:Rp பெல்மெனி[634] மற்றும் சஷ்லிக் ஆகியவை பிரபலமான மாமிச உணவுகள் ஆகும்.[635] முட்டைக் கோசு சுருள்களுக்குள் திணிக்கப்பட்ட (கோலுப்த்சி) உணவுகளானவை பொதுவாக மாமிசங்கள் கொண்டு திணிக்கப்படுகின்றன.[636] இவை பிற மாமிச உணவுகளில் ஒன்றாகும். ஓலிவியர் சாலட்,[637] வினேக்ரெட்[638] மற்றும் உடையுடைய ஹெர்ரிங் உள்ளிட்டவை பிற சாலட்கள் ஆகும்.[639]

உருசியாவின் மதுவற்ற தேசிய பானம் குவாசு ஆகும்.[640] தேசிய மதுபானம் வோட்கா ஆகும். உருசியா மற்றும் பிற பகுதிகளில் வோட்காவின் தயாரிப்பானது 14-ஆம் நூற்றாண்டிலிருந்து நடைபெறுகிறது.[641] உலகின் மிக அதிக வோட்கா நுகர்வை இந்நாடு கொண்டுள்ளது.[642] அதே நேரத்தில், பீரானது மிகப் பிரபலமான மதுபானமாக உள்ளது.[643] 21-ஆம் நூற்றாண்டில் ஒயின் உருசியாவில் அதிகரித்து வந்த பிரபலத் தன்மையைக் கொண்டுள்ளது.[644] நூற்றாண்டுகளாக உருசியாவில் தேநீரானது பிரபலமானதாக உள்ளது.[645]

பொது ஊடகமும், திரைத்துறையும்

Thumb
மாசுகோவின் ஒசுதன்கினோ கோபுரம். ஐரோப்பாவின் மிக உயரமான தனித்து நிற்கும் அமைப்பு இதுவாகும்.[646]

உருசியாவில் 400 செய்தி முகமைகள் உள்ளன. டாஸ், ஆர்ஐஏ நோவாஸ்தி, இசுப்புட்னிக் மற்றும் இன்டர்பேக்ஸ் ஆகியவை பன்னாட்டு அளவில் செயல்படும் மிகப் பெரிய ஊடகங்கள் ஆகும்.[647] உருசியாவில் மிகப் பிரபலமான ஊடகமாக தொலைக்காட்சி உள்ளது.[648] நாடு முழுவதும் உரிமம் வழங்கப்பட்ட வானொலி நிலையங்களில் குறிப்பிடத்தக்கவையாக ரேடியோ ரோசீ, வெஸ்டி எஃப்எம், எக்கோ ஆஃப் மாசுகோ, ரேடியோ மயக் மற்றும் ருஸ்கோயே ரேடியோ ஆகியவை உள்ளன. 16,000 பதியப்பட்ட செய்தித் தாள்களில் ஆர்குமென்டி இ ஃபக்தி, கோம்சோமோல்ஸ்கயா பிராவ்டா, ரோசிய்ஸ்கயா கசெட்டா, இஸ்வெஸ்டியா, மற்றும் மாசுகோவ்ஸ்கிஜ் கோம்சோமோலெட்ஸ் ஆகியவை பிரபலமானவையாக உள்ளன. அரசால் நடத்தப்படும் சேனல் 1 மற்றும் உருசியா-1 ஆகியவை முன்னணி செய்தி அலை வரிசைகள் ஆகும். அதே நேரத்தில் உருசியாவின் பன்னாட்டு ஊடகச் செயல்பாடுகளின் முகமாக ஆர்டி தொலைக்காட்சியானது உள்ளது.[648] ஐரோப்பாவில் மிகப் பெரிய காணொளி விளையாட்டுச் சந்தையை உருசியா கொண்டுள்ளது. நாடு முழுவதும் 6.50 கோடிக்கும் அதிகமான காணொளி விளையாட்டாளர்கள் உள்ளனர்.[649]

உருசியா மற்றும் பின்னர் சோவியத் திரைத் துறையானது புதுமைக்கான ஒரு மைதானமாகத் திகழ்ந்தது. போர்க்கப்பல் பத்தியோம்கின் போன்ற உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களை இது கொடுத்தது. 1958-இல் புருசெல்ஸ் உலகக் கண்காட்சியில் எக்காலத்திலும் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த திரைப்படமாக இது பெயரிடப்பட்டது.[650][651] சோவியத் சகாப்த இயக்குநர்கள், மிகக் குறிப்பாக செர்கீ ஐசென்ஸ்டைன் மற்றும் ஆந்த்ரே தர்கோவ்ஸ்கி ஆகியோர் உலகின் மிகப் புதுமையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களில் சிலராக உருவாயினர்.[652][653] லெவ் குலேசோவின் ஒரு மாணவர் ஐசென்ஸ்டைன் ஆவார். குலேசோவ் உலகின் முதல் திரைப்படப் பள்ளியான "ஒளிப்பதிவுக்கான அனைத்து-ஒன்றிய அமைப்பில்" முன்னோடித் திரைப்பட எடிட்டதொகுப்பான சோவியத் அசைவிலாப் படக் கோட்பாட்டை உருவாக்கியவர் ஆவார்.[654] திசிகா வெர்தோவின் "திரை-கண்" கோட்பாடானது ஆவணப் பட உருவாக்கம் மற்றும் திரைப்பட மெய்மையியலின் வளர்ச்சியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[655] சப்பேவ், த கிரேன்ஸ் ஆர் பிளையிங், மற்றும் பேலட் ஆஃப் எ சோல்ஜர் உள்ளிட்ட பல சோவியத் பொதுவுடைமை மெய்மையியல் திரைப்படங்களானவை கலை ரீதியாக வெற்றிகரமானவையாகத் திகழ்ந்தன.[545]

1960-கள் மற்றும் 1970-களானவை சோவியத் திரைத் துறையில் ஒரு மிகப் பெரும் அளவில் வேறுபட்ட கலைப் பாணிகளைக் கண்டன.[545] எல்தர் ரியாசனோவ் மற்றும் லியோனிட் கைதை ஆகியோரின் அந்நேர நகைச்சுவையானவை மிகவும் பிரபலமானதாக இருந்து. அவர்களின் வசனங்களில் பல இன்றும் கூட பொது வழக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.[656][657] 1961-68-இல் லியோ டால்ஸ்டாயின் இதிகாசமான போரும் அமைதியும் நூலை செர்கே போந்தர்சுக் இயக்கினார். இது அகாதமி விருதைப் பெற்றது. சோவியத் ஒன்றியத்தில் தயாரிக்கப்பட்ட மிக அதிக செலவுடைய திரைப்படமாக இது இருந்தது.[545] 1969-இல் விளாதிமிர் மோதிலின் ஒயிட் சன் ஆப் த டெசர்ட் சர்வதேசத் திரைப்படமானது வெளியிடப்பட்டது. ஓசுடெர்ன் (சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட மேற்கத்தியத் திரைப்பட பாணி) வகையில் ஒரு மிகப் பிரபலமான திரைப்படமாக இது திகழ்ந்தது. விண்வெளிக்குள்ளான எந்தவொரு பயணத்துக்கு முன்னரும் விண்ணோடிகளால் பாரம்பரியமாகப் பார்க்கப்படும் திரைப்படமாக இது உள்ளது.[658] சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிறகு உருசியத் திரைத் துறையானது பெரும் இழப்புகளைச் சந்தித்தது. எனினும், 2000-களின் பிற்பகுதியில் இருந்து இது மீண்டும் ஒரு முறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. திரைத் துறையானது தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.[659]

விளையாட்டு

Thumb
உலகின் முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான மரியா சரப்போவா தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு உலகின் மிக அதிக சம்பளம் பெறும் பெண் வீராங்கனையாகத் திகழ்ந்தார்.[660]

உருசியாவின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும்.[661] 1960-இல் யூரோ கோப்பையை வென்றதன் மூலம் சோவியத் ஒன்றிய தேசியக் காற்பந்து அணியானது முதல் ஐரோப்பிய வெற்றியாளராக உருவாகியது.[662] 1988-இல் யூரோ கோப்பையின் இறுதியை அடைந்தது.[663] உருசியக் கால்பந்து கழகங்களான சிஎஸ்கேஏ மாசுகோ மற்றும் செனித் சென் பீட்டர்சுபெர்கு ஆகியவை 2005 மற்றும் 2008-இல் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவை வென்றன.[664][665] 2008-இல் யூரோ கோப்பைக்கான அரையிறுதியை உருசிய தேசியக் காற்பந்து அணியானது அடைந்தது.[666] 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி[667] மற்றும் 2018 உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளை நடத்தும் நாடாக உருசியா திகழ்ந்தது.[668] எனினும், ஃபிஃபா மற்றும் யூஈஎஃப்ஏ போட்டிகளிலிருந்து உருசிய அணிகளானவை தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.[669]

ஐஸ் ஆக்கியானது உருசியாவில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. அதன் காலம் முழுவதும் சோவியத் தேசிய ஐஸ் ஆக்கி அணியானது இந்த விளையாட்டில் பன்னாட்டு அளவில் ஆதிக்கம் செலுத்தியது.[543] பண்டி என்பது உருசியாவின் தேசிய விளையாட்டாகும். இவ்விளையாட்டில் வரலாற்று ரீதியாக மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்த நாடாக உருசியா திகழ்கிறது.[670] உருசிய தேசிய கூடைப்பந்து அணியானது 2007 யூரோ கூடைப்பந்துப் போட்டியை வென்றது.[671] இதுவும் உருசிய கூடைப்பந்து கழகமான பிபிசி சிஎஸ்கேஏ மாசுகோவும் மிக வெற்றிகரமான ஐரோப்பியக் கூடைப்பந்து அணிகளில் சிலவாகத் திகழ்கின்றன.[672] சோச்சி ஒலிம்பிக் பூங்காவில் சோச்சி ஆட்டோட்ரோமில் வருடாந்திர பார்முலா ஒன் உருசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியானது நடத்தப்பட்டது. 2022-ஆம் ஆண்டின் உக்குரைன் மீதான உருசியாவின் படையெடுப்பைத் தொடர்ந்து இப்போட்டி நிறுத்தப்பட்டது.[673][674]

வரலாற்று ரீதியாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் மிக வெற்றிகரமான போட்டியாளர்களில் ஒரு பிரிவினராக உருசிய தடகள வீரர்கள் திகழ்ந்துள்ளனர்.[543] சீரிசை சீருடற்பயிற்சியில் முன்னணி நாடாக உருசியா திகழ்கிறது. உருசியாவின் ஒருங்கிசைந்த நீச்சலானது உலகின் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.[675] பனிச் சறுக்கு நடனமானது உருசியாவில் மற்றுமொரு பிரபலமான விளையாட்டு ஆகும். குறிப்பாக இணைப் பனிச்சறுக்கு மற்றும் பனிச்சறுக்கு நடனம் ஆகியவை பிரபலமானவையாக உள்ளன.[676] உருசியா ஏராளமான முக்கிய டென்னிஸ் விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ளது.[677] நாட்டில் ஒரு பரவலான பிரபல பொழுது போக்காகச் சதுரங்கம் திகழ்கிறது. உருசியர்களில் பலர் உலகின் முன்னணி சதுரங்க விளையாட்டாளர்களாக தசாப்தங்களுக்குத் திகழ்ந்துள்ளனர்.[678] 1980-இன் கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மாசுகோவிலும்,[679] 2014-இன் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2014-இன் குளிர்கால மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் சோச்சியுலும் நடத்தப்பட்டன.[680][681] எனினும், ஊக்க மருந்து விதிமீறலுக்காக உருசியாவின் தடகள வீரர்கள் 43 ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். பிற எந்தவொரு நாட்டை விடவும் இந்த எண்ணிக்கை மிக அதிகமானதாகும். உலகளாவிய மொத்தத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இதுவாகும்.[682]

Remove ads

குறிப்புகள்

வார்ப்புரு:Notelist

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads