பா. செயப்பிரகாசம்
தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பா. செயப்பிரகாசம் (1941 – 23 அக்டோபர் 2022) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் மற்றும் திராவிட - இடதுசாரி சிந்தனையாளர் ஆவார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. எழுத்து வட்டத்திற்குள் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ளாமல், போராட்டக் களத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியர் உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவர். தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும் பங்காற்றியவர்.[2]
Remove ads
தொடக்க வாழ்க்கை
தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இராமச்சந்திராபுரம் என்ற ஊரில் 1941-ஆம் ஆண்டில் ஒரு வேளாண் குடும்பத்துக்கு மகனாகப் பிறந்தார் செயப்பிரகாசம். இவருக்கு ஒரு அண்ணனும் இரு சகோதரிகளும் உண்டு. இளம் அகவையிலேயே தன் தாயை இழந்தார். பின் தனது ஐந்தாம் அகவையில் குடும்பத்தோடு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள தன் தாய்வழிப் பாட்டியின் ஊரான சென்னம்மரெட்டிபட்டிக்கு இடம்பெயர்ந்தார்.[3]
Remove ads
கல்வி
சென்னம்மரெட்டிபட்டியில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தனியார் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் தலைவர்களுள் ஒருவராக விளங்கினார்.[4] அதனால் இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (Defence of India act and Defence of India rules 1962) கைதாகி மூன்று மாதங்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர்.[5]
Remove ads
பணி
1968 முதல் 1971 வரை கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றினார். இக் காலகட்டத்தில் மணிமேகலை என்ற (இடதுசாரிக் குடும்பப் பின்னணி கொண்ட ) பெண்மணியைத் திருமணம் செய்தார்.[6] இவர்களுக்கு தீபன் என்ற மகனும் சாருநிலா என்ற மகளும் பிறந்தனர்.[1]
1971-இல் தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
சூன் 1975-இல் அறிவிக்கப்பட்ட இந்திய அளவிலான நெருக்கடி நிலையால் தமிழ்நாட்டில் அப்போதைய தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இதனால் வேலையிழந்த செயப்பிரகாசம் குடும்பத்துடன் பாண்டிச்சேரிக்குச் சென்றார். அங்கு ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) தொழில்நுட்ப அலுவலராகப் பணியாற்றிய தன் அண்ணன் குடும்பத்தின் தயவில் சில காலம் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் எழுத்தாளர் க. பஞ்சாங்கம் இவருக்கு அறிமுகமானார்.
பின் மீண்டும் தமிழ்நாட்டு செய்தி விளம்பரத் துறையில் வேலை பெற்று 1999- ஓய்வுபெற்றார்.[1] அதன்பின் மாற்று அரசியல் சார்ந்த அமைப்புகளோடு இணைந்து இயங்கினார்.[7]
இலக்கியப்பணி
ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மூன்றாவது முகம், இரவுகள் உடைபடும் ஆகிய தொகுப்புகள் சூரியதீபன் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன.
தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தை முன்னிட்டும் படைப்புகளை எழுதியுள்ளார்.[8]
இதழியல்
1971 மே மாதம் இவரின் முதல் கதையான ‘குற்றம்’ - தாமரை மாத இதழில் வெளியானது.[9] கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதை சொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் (கவிதை, கதை, கட்டுரை, உருவகக் கதைகள்) வெளிவந்துள்ளன.
1981 முதல் 1991 வரை மக்கள் கலாச்சாரக் கழகம் நடத்திய மனஓசை இதழில் சூரியதீபன் என்கிற புனைபெயரில் ஆசிரியராகச் செயல்பட்டார். அப்போது பஞ்சாங்கமும் அவருடன் இணைந்து செயல்பட்டார். 1988 இறுதியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்திருந்த பெருமாள் முருகன் செயப்பிரகாசத்தைச் சந்தித்தார். அடுத்த சில மாதங்களிலேயே அவர் மனஓசை ஆசிரியர் குழுவில் இணைந்தார்.[7]
இதழ்ப் பணியும் கட்சி வேலையும் தன்னிடமிருந்த படைப்பாற்றலின் வீரியத்தை மழுங்கடித்துவிட்டன என்று ஒரு நேர்காணலில் செயப்பிரகாசம் கூறினார்.[6]
கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் இவர் படைப்புகள் தொடர்ந்து வெளிவருகின்றன.[5]
Remove ads
அரசியல் பார்வை
இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அதன் பின்னான காலகட்டத்தில் திமுகவின் பாதையோடு முரண்பட்ட செயப்பிரகாசம், மார்க்சியம் மற்றும் தமிழ்த் தேசியம் நோக்கி நகர்ந்தார். திராவிட இயக்கத்தின் மீது கடும் விமர்சனங்களை வைத்தார். "தம் இறுதிக் காலத்தில் திராவிட இயக்கப் பங்களிப்பு பற்றிய அவர் கருத்துகளில் மாற்றம் ஏற்பட்டதாக உணர்கிறேன்" என்றார் பெருமாள் முருகன்.[7]
சாதி ஒழிப்புக் கருத்தில் அழுத்தமாக நின்ற செயப்பிரகாசம், தன் குடும்பத்தில் பல சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார்.[7]
Remove ads
மறைவு
23 அக்டோபர் 2022 அன்று விளாத்திக்குளம் அம்பாள் நகரிலுள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார் செயப்பிரகாசம்.[5] தன் மறைவுக்குப் பின் எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களி ன் ஆய்வுக்காக ஒப்படைக்கவேண்டும் என்று உறவினர்களிடமும் நண்பர்களிடமும் முன்னதாகத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் 25 அக்டோபர் அன்று நண்பகல் 12 மணியளவில் அவர் வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன்பின் அவர் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.[1][2]
Remove ads
புகழ்
"[மனஓசை] ஆசிரியர் குழுவில் செயல்பட்ட அந்த மூன்றாண்டுகள் [1989-91] என் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்...பாசெ படைப்புகளைத் தேர்வுசெய்வதில் உள்ள வாசிப்பு நுட்பங்களை உணர்த்தினார்...‘மனஓசை’யில் செயல்பட்ட அந்த மூன்றாண்டு காலம் அவரிடம் கற்றுக்கொண்ட மாணவன் நான். அதனால்தான் எல்லாவற்றிலும் முதன்மையாக ‘என் ஆசிரியர்’ என்று அவரை மேலேற்றி வைத்திருக்கிறேன்." என்றார் பெருமாள் முருகன் (25.10.22 அன்று விளாத்திக்குளத்தில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை).[7]
"இடதுசாரித் தத்துவங்கள், உலக அரசியல், நக்சல்பாரி இயக்கம் குறித்து கடலைப் பார்த்தவாறு அவரோடு உரையாடி அறிந்துகொண்டவை எனக்குள் பெரிதும் உரமாகச் சேர்ந்தன...பேராசிரியர், தோழர் கேசவன் வீட்டில் மூன்றாம் அணி அரசியல் குறித்து இரவு முழுக்க நடைபெறும் விவாதங்களில் கலந்துகொள்ள புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் சென்று வரக்கூடிய அளவிற்கு எனக்குள் ஆர்வத்தை வளர்த்தெடுத்தவராக பா.செயப்பிரகாசம் விளங்கினார். அவர் காண விரும்பிய பொதுவுடமைச் சமூகக் கனவு, மானுடச் சமூகம் இருக்கும்வரை இருக்கும் என்பதில் ஐயமில்லை" என்றார் பஞ்சாங்கம்.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads