சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் (Savitribai Phule Pune University)(முன்னர்: புனே பல்கலைக்கழகம்)[4] இந்தியாவில் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் மகாராட்டிர மாநிலம் புனே நகரின் வடமேற்கில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[5] இது சுமார் 411 ஏக்கர் (1.7 சதுர கிலோமீட்டர்கள்) பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வளாகத்தில்[6] 46 கல்விசார் துறைகளுடன் அமைந்துள்ளது.[7] இப்பல்கலைக்கழகத்தினை கிழக்கத்திய ஒக்ஸ்போர்ட் எனவும் அழைக்கின்றனர். முதலில் புனே பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்ட இப்பல்கலைக்கழகத்திற்கு பின்னர், பெண்களின் விடுதலைக்காகவும், அதிகாரத்திற்காகவும், கல்விக்காகவும் போராடிய சாவித்திரிபாய் புலே எனும் பெண்மணியின் பெயர் சூட்டப்பட்டது.[8]

இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் பல ஆராய்ச்சி நிலையங்கள், இணைக்கப்பட்ட கல்லூரிகள், திணைக்களங்கள் போன்றவை அமைந்துள்ளன.[9][10]
Remove ads
வரலாறு
1948ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் பத்தாம் நாள் மும்பை சட்டப்பேரவை நிறைவேற்றிய புனா பல்கலைக் கழகச் சட்டம் என்பதன் அடிப்படையில் புனே பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.[11] 1948ஆம் வருடத்திலேயே முனைவர் எம். ஆர். ஜயகர் இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பதவியேற்றார். அப்போதைய முதலமைச்சர் மற்றும் மும்பை நகரின் கல்வியமைச்சராக இருந்த பி. ஜி.கெர் இந்தப் பல்கலைக்கழகத்திற்கான வளாகத்திற்கான இடத்தினை உறுதி செய்தார். 1950ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு 411 ஏக்கர்கள் (அதாவது 1.7 சதுர கிலோமீட்டர்கள்) நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.[5]
இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ள இடம் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்தது. கட்கிப் போர் நிகழ்கையில் இதன் சில சம்பவங்கள் தற்போது புனே பல்கலைக் கழகம் நிறுவப்பட்டுள்ள இடத்தில் நிகழ்ந்தன. தற்போதைய முதன்மைக் கட்டிடம் 1864ஆம் ஆண்டு கட்டப்பட்டு ஆளுநர் இல்லம் எனப்பட்டது.[12][13]
Remove ads
அமைப்பும் நிர்வாகமும்
அதிகார எல்லை
துவக்கத்தில், இந்தப் பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லை மகாராட்டிரா மாநிலத்தின் மேற்குப் பகுதியின் 12 மாவட்டங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1964ஆம் ஆண்டு கோலாப்பூர் நகரில் சிவாஜி பல்கலைக் கழகம் அமைக்கப் பெற்றவுடன், இதன் அதிகார எல்லையானது புனே, அகமதுநகர், நாசிக், துலே மற்றும் ஜள்காவ் ஆகிய ஐந்து நகரங்களுக்குள்ளாக மட்டுப்படுப்படுத்தப்பட்டது. இவற்றில் துலே மற்றும் கள்காவ் ஆகிய இரண்டும் 1990ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வட மகாராட்டிரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[5]
துணைவேந்தர்கள்
பல்கலைக்கழகத்தின் முன்னாள், தற்போதைய துணைவேந்தர்கள்:[14]
இணைப்புகள்
1949ஆம் வருடம் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த கல்லூரிகள் மொத்தமாக 18 ஆகும். இவற்றில், 8,000 மாணாக்கர்களுக்கும் மேலான எண்ணிக்கை கொண்டிருந்த, புகழ்பெற்ற பெர்குசான் கல்லூரி, புனே பொறியியல் கல்லூரி, இராணுவ தொழிநுட்ப நிறுவனமும் அடங்கும். இதன் பிறகு, கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 2004ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகம் 46 இளநிலைப் பட்டதாரித் துறைகள், 269 இணைப்புக் கல்லூரிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற 118 ஆராய்ச்சி நிறுவனங்கள் உடனான 170,000 மாணவர்களை இளநிலை மற்றும் முதுநிலை ஆகிய இரண்டு நிலைகளிலுமான பல்வேறு கல்வித் துறைகளில் கொண்டிருந்தது.[15]
இந்தப் பல்கலைக்கழகம் வித்யாவாணி என்னும் சமூக வானொலியை நடத்துகிறது. இதில் புனே பல்கலைக்கழகம் நடத்தும் பல்வேறு துறைகள், மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், பல்கலைக்கழகத்தின் தேர்வுகள், அவற்றின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் ஆகியவை ஒலிபரப்பாகின்றன.[16] இளைஞர்களின் பிரச்சினைகளுடன் தொடர்புடையதான பல்வேறு கல்விசார் நிரல்களும் ஒலிபரப்பாகின்றன.[17]
துறைகள்
அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை வழங்கும் பல்வேறு துறைகளும் ஆய்வு மையங்களும் பல்கலைக்கழகத்தில் உள்ளது.[18]
- பொறியியல் துறை: கணினி அறிவியல் பொறியியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், குடிமைப் பொறியியல், இயந்திரப் பொறியியல், மின் பொறியியல், தானியங்கி மற்றும் தன்னியக்கமாக்கல், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் போன்ற படிப்புகளை வழங்குகிறது.
- சுற்றுச்சூழல் அறிவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இது 2018-2019 கல்வியாண்டில் இருந்து தொடங்கியது.
- 1949 ஆம் ஆண்டில் ரானடே நிறுவனத்தின் கட்டிடத்தில் அயல்நாட்டு மொழிகள் துறை தொடங்கப்பட்டது. இது ஆரம்ப நிலை முதல் முதுகலைப் படிப்புகள் வரை ஜெர்மன், பிரெஞ்சு, உருசிய மொழி, சப்பானிய மொழி மற்றும் எசுப்பானிய மொழிகளுக்கான படிப்புகளை வழங்குகிறது. காலையிலும் மாலையிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
- போட்டித் தேர்வு மையம் (சி. இ. சி. சி.): பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்கானது.
- கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே மகளிர் ஆய்வு மையம்
ஆய்வு நிறுவனங்கள்
புனே பல்கலைக்கழகம் 70 ஆராய்ச்சி நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது. இவற்றில், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம், தேசிய வேதியியல் ஆய்வகம், தேசிய உயிரணு அறிவியல் மையம், அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான கோகலே கல்வி நிறுவனம், தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம், இந்தியப் புள்ளியியல் கழகம் சார்ந்த ஆவணப்படுத்தல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஆகியவை அடங்கும்.
புனே பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இதர ஆராய்ச்சி நிறுவனங்கள் பின்வருமாறு:
- வானொலி வானியற்பியலுக்கான தேசிய மையம்
- மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையம். பராம் வீச்சு கொண்ட மிகு திறன் வாய்ந்த கணினிகளுக்கு இதுவே தாயகமாகும்.
- உயிரிய தகவல் நுட்பம் மற்றும் உயிரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
Remove ads
தரவரிசை
சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம், 2023 ஆம் ஆண்டின் டைம்ஸ் இதழ் வெளியிட்ட உயர் கல்விக்கான பன்னாட்டுப் பல்கலைக்கழக தரவரிசையில் உலகின் 601-800 குழுவில் இடம் பெற்றது, அத்துடன் ஆசியாவில் 201-250 குழுவிலும், 2022 ஆம் ஆண்டில் வளர்ந்துவரும் பொருளியல் கல்லூரிகளின் பட்டியலில் 201-250 குழுவிலும் இடம்பெற்றது.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் கூற்றுப்படி இது ஒட்டுமொத்தமாக கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவில் 35 வது இடத்திலும், 2023 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களில் 19 வது இடத்திலும் இருந்தது.
மாணவர் வாழ்க்கை
பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் மாணவர்களுக்கு வசிப்பிடங்களை வழங்குகின்றன. பன்னாட்டு மையம் வருகை தரும் மாணவர்கள் உட்பட பன்னாட்டு மாணவர்களுக்கு வசிப்பிடங்களை வழங்குகிறது.[19]


குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
- சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் இந்தியாவின் 7ஆவது பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங்
- பிரதீபா பாட்டீல் - இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்
- விலாஸ்ராவ் தேஷ்முக் - மகாராட்டிராவின் 17வது மற்றும் 19வது முதல்வர்
- சரத் பவார் - மகாராட்டிராவின் முன்னாள் முதல்வர்.
- இந்தியாவின் 9ஆவது பிரதமரான பி. வி. நரசிம்ம ராவ், புனே பல்கலைக்கழகத்தின் கீழ் பெர்குசன் கல்லூரி செயல்பட்டபோது இங்கு பட்டம் பெற்றார்.
- லீலா பூனாவாலா, ஆல்பா லாவல் - இந்தியா என்னும் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பத்மசிறீ பட்டம் பெற்றவரும் ஆவார்.
- லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையின் துணைவேந்தர் சி. குமார் என். படேல் கரியமில ஒளிமியைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவர் 1996ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அறிவியலுக்கான தேசியப் பதக்கம் பெற்றார்.
- இசுடான்போர்டு பல்கலைக் கழகத்தின் ஹிட்டாச்சி அமெரிக்கப் பேராசிரியரான தாமஸ் கைலத் 2000ஆம் ஆண்டு தகவல் துறையில் கருத்தாக்கம் என்பது குறித்தான தமது பங்களிப்பிற்காக ஷான்னோன் விருது பெற்றார். இவர் சிலிக்கான் வேலியின் புகழ்பெற்ற பொறியாளர் கூடத்தில் (2005) அனுமதி பெற்றுள்ளார். கணிதம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் அளித்த பங்களிப்பிற்காக இந்திய அரசின் பத்ம பூசண் விருதினையும் 2009ஆம் ஆண்டு இவர் பெற்றார்.
- இந்தியாவின் மிகப்பெரும் இருசக்கர விசையுந்தித் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் மேலாண்மை இயக்குனரான ராஜிவ் பஜாஜ்.
- இந்திய அறிவியற் கழகத்தின் இயக்குநர் பத்மநாபன் பலராம் புனே பல்கலைக் கழகத்தில் தனது இளநிலைப் பட்டத்தினையும், பின்னர் கார்னேஜி மெல்லான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஆர்வார்ட்டு பல்கலைக் கழகத்தில், நோபெல் பரிசு வென்றவரான ராபர்ட் பர்ன்ஸ் வுட்வார்ட் உடன் முனைவர் பட்ட மேலாய்வு ஒன்றில் பங்கேற்றார். பின்னர், இவர் இந்திய அறிவியல் கழகத்தின் மூலக்கூறு உயிரிய இயற்பியல் துறையில் பணியாற்றி வருகிறார்.
- கலைப் பொருள் சேகரிப்பாளரும் வரலாற்றாசிரியருமான தின்கர் ஜி. கேல்கர் தனது இலக்கியம் மற்றும் தத்துவவியல் பிரிவில் முனைவர் பட்டத்தினை 1978 இல் பெற்றார்.[20]
- பத்திரிகையாளர் ஷெரீன் பான் தகவல் தொடர்பு ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் பல்கலைக்கழகத்தில் நிபுணத்துவம் பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads