மனித சுற்றுச்சூழல் குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாடு

1972 இல் ஸ்டாக்ஹோமில் நடந்த ஐநா மாநாடு From Wikipedia, the free encyclopedia

Remove ads

மனித சுற்றுச்சூழல் குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாடு (United Nations Conference on the Human Environment) என்பது 1972 ஆம் ஆண்டு சூன் 5-16 நாட்களில் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஒரு மாநாடு ஆகும்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டைக் கூட்ட முடிவு செய்தபோது, சுவீடன் அரசாங்கம் அதை நடத்துவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது.[1] கனேடிய இராசதந்திரி மாரிஸ் ஸ்ட்ராங் இந்தத் திட்டத்தில் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி பட்டறிவு கொண்டவராக இருந்ததினால், மாநாட்டின் பொதுச்செயலாளராக இருந்து செயலாற்ற அவருக்கு ஐ.நா பொதுச்செயலாளர் ஊ தாண்ட் அழைப்புவிடுத்தார்.[2]

இந்த மாநாட்டின் விளைவாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் அல்லது யுஎன்இபி உருவாக்கப்பட்டது.[3]

Remove ads

அறிமுகம்

சூழல் சீர்கேடு குறிது அறிவியலாளர் ரேச்சல் கார்சன் எழுதி பெரும் கவனத்தைப் பெற்றிருந்த 'மௌன வசந்தம்' நூல் வெளியாகி சில ஆண்டுகள் கடந்திருந்தன. நாடுகளின் எல்லை கடந்த அமில மழை உலக நாடுகளை அச்சுறுத்திவந்தது. இது குறித்து கவலை கொண்ட சுவீடன் சுற்றுச் சூழல் மாறுபாடு குறித்தும், அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகளின் ஒத்துழைப்பை வேண்டியும் ஐ.நா. மாநாட்டை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை 1968 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் ஈகோசோக்கிற்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஆதரிக்கும் ஈகோசோக்கி தீர்மானம் 1346 ஐ நிறைவேற்றியது. 1969 ஆண்டைய பொதுச் சபை தீர்மானம் 2398 இன் படி 1972 ஆம் ஆண்டில் ஒரு மாநாட்டைக் கூட்ட முடிவு செய்யபட்டது.[4] 114 நாடுகள் கலந்து கொண்டு நான்கு ஆண்டுகள் நீடித்த இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விரிவானவையாக இருந்தன. இதற்கு $30,000,000 மேல் செலவாகும் எனப்பட்டது.[5]

Remove ads

மாநாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள்

சோவியத் ஒன்றியம் மற்றும் பிற வார்சா உடன்பாடு நாடுகள் கிழக்கு ஜெர்மனியை சேர்க்காததால் மாநாட்டை புறக்கணித்தன. கிழக்கு அல்லது மேற்கு ஜேர்மனி அந்த நேரத்தில் ஐ.நா.வில் உறுப்பினர்களாக இருக்கவில்லை. ஏனெனில் அவை இன்னும் ஒன்றையோன்றை நாடுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை (அவை பின்னர் 1972 திசம்பரில் அடிப்படை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஒப்புக்கொண்டன).[5][6]

பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளால் இந்த மாநாட்டை வரவேற்கவில்லை, இவை பிரஸ்ஸல்ஸ் குழு என்று அழைக்கப்பட்டன. மேலும் இவை மாநாட்டின் தாக்கத்தைத் தடுக்க முயன்றன.[7]

மாநாட்டில் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே பிளவுகள் தோன்றத் தொடங்கின. சீனப் பேராளர்கள் மாநாட்டில் அமெரிக்காவிற்கு எதிராக நின்றனர். இந்தோசீனா மற்றும் உலகம் முழுவதும் அமெரிக்காவின் கொள்கைகளை கண்டித்து 17 அம்ச குறிப்பாணையை அவர்கள் வெளியிட்டனர். இந்த நிலைப்பாடு மற்ற வளரும் நாடுகளை உற்சாகப்படுத்தியது. மாநாட்டில் கலந்து கொண்ட 122 நாடுகளில் 70 நாடுகள் வளரும் நாடுகளாகும். பாக்கித்தான், பெரு, சிலி உள்ளிட்ட பல நாடுகள் காலனித்துவத்திற்கு எதிரான இயல்புடைய அறிக்கைகளை வெளியிட்டன. இது அமெரிக்க பிரதிநிதிகளை மேலும் கவலையடையச் செய்தது. அந்த நேரத்தில் அமெரிக்காவின் உள்துறைச் செயலாளராக இருந்த ரோஜர்ஸ் மார்டன், சீன விமர்சனங்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் விதத்தில் "உருசியர்கள் இங்கே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று விமர்சித்தார்.[6] ஐக்கிய நாடுகள் அவையின் புதிய உறுப்பினரான சீனா, ஆயத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.[8]

1972 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் நிர்வாகம் பன்னாட்டளவில் குறிப்பாக உலகின் தெற்குப் பகுதியில் முன்னுரிமை தரத்தக்கதாக இருக்கவில்லை. வளரும் நாடுகள் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தை உருவாக்குவதற்கு ஆதரவளித்தன. அது சுற்றுச்சூழல் நிர்வாகத்தை ஆதரிப்பதற்காக அல்ல, மாறாக அதன் தலைமையகம் கென்யாவில் நைரோபியில் இருக்கும் காரணத்தால். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமானது வளரும் நாடுகளில் ஏற்படுத்தபட்ட முதல் ஐ.நா. நிறுவனமாக இருந்தது.[3]

Remove ads

ஸ்டாக்ஹோம் பிரகடனம்

இந்தப் பிரகடனத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு தொடர்பான 26 அடிப்படைக் கோட்பாடுகள், 109 பரிந்துரைகள் கொண்ட செயல் திட்டம் மற்றும் ஒரு தீர்மானம் ஆகியவற்றைக் உள்ளடக்கிய விசயங்கள் உள்ளடக்கியதாக இருக்க கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.[9]

ஸ்டாக்ஹோம் பிரகடனத்தின் கோட்பாடுகள்:[10]

  1. மனித உரிமைகள் வலியுறுத்தப்பட வேண்டும், நிறவெறியும், காலனித்துவமும் கண்டிக்கப்பட வேண்டும்
  2. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
  3. புதுப்பிக்கத்தக்க வளங்களை உற்பத்தி செய்யும் பூமியின் திறன் பராமரிக்கப்பட வேண்டும்
  4. காட்டுயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
  5. புதுப்பிக்கவியலா வளங்கள் பகிரப்பட வேண்டும் அவை தீர்ந்துவிடக்கூடாது
  6. தன்னைத்தானே சுத்தப்படுத்தும் சுற்றுச்சூழலின் திறனை விட மாசுபாடு கூடுதலாக இருக்கக்கூடாது
  7. பாதிப்பை உருவாக்கும் கடல் மாசுபாடு தடுக்கப்பட வேண்டும்
  8. சுற்றுச்சூழலை மேம்படுத்த வளர்ச்சி தேவை
  9. எனவே வளரும் நாடுகளுக்கு உதவி தேவை
  10. வளரும் நாடுகள் சுற்றுச்சூழல் மேலாண்மையை மேற்கொள்ள அவற்றின் ஏற்றுமதிகளுக்கு நியாயமான விலை தேவை
  11. சுற்றுச்சூழல் கொள்கை வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கக்கூடாது
  12. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த வளரும் நாடுகளுக்கு பண உதவி தேவை
  13. ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு திட்டமிடல் வேண்டும்
  14. அறிவார்ந்த திட்டமிடல் சுற்றுச்சூழலுக்கும் வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும்
  15. சுற்றுச்சூழல் பிரச்சனைகளை களைய மக்கள் குடியிருப்புகளை திட்டமிட்டு அமைக்க வேண்டும்
  16. நடுகள் தங்களுக்குப் பொருத்தமான மக்கள்தொகைக் கொள்கைகளைத் திட்டமிட வேண்டும்
  17. தேசிய நிறுவனங்கள் அரசின் இயற்கை வளங்களை மேம்படுத்த திட்டமிட வேண்டும்
  18. சுற்றுச்சூழலை மேம்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்
  19. சுற்றுச்சூழல் கல்வி அவசியம்
  20. குறிப்பாக வளரும் நாடுகளில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட வேண்டும்
  21. நாடுகள் தங்கள் வளங்களை அவர்கள் விரும்பியபடி பயன்படுத்தலாம் ஆனால் அது அடுத்த நாட்டின் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது
  22. இவ்வாறு ஆபத்தில் உள்ள நடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
  23. 'ஒவ்வொரு நாடும் அது தனக்கான தரநிலையை நிறுவ வேண்டும்
  24. சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்
  25. சுற்றுச்சூழலை மேம்படுத்த சர்வதேச அமைப்புகள் உதவ வேண்டும்
  26. பேரழிவு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும்

"வறுமைதான் உலகின் மிகப் பெரிய மாசுபடுத்தி. வறுமை பரவலாக இருக்கும்போது சுற்றுச்சூழலை எப்படி மேம்படுத்த முடியும்?" என்று இந்த மாநாட்டில் இந்திரா காந்தி பேசினார்.[11] இ்வாறு சுற்றுச்சூழல் மேலாண்மைக்கும் வறுமை ஒழிப்புக்கும் இடையிலான தொடர்பை அவர் முன்வைத்தார்.[12][13]

ஸ்டாக்ஹோம் மாநாடு உலகெங்கிலும் உள்ள நாடுகளை சுற்றுச்சூழல் நிலைமைகளைக் கண்காணிக்கவும், சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் மற்றும் முகமைகளை உருவாக்கவும் தூண்டியது.[14][15][16] யுஎன்இபியை நிறுவுவது உட்பட சாதனைகள் மேற்கொள்ளபட்டபோதிலும், இந்த மாநாட்டின் பெரும்பாலான செயல்திட்டங்களை செயல்படுத்துவதில் தோல்வியடைந்ததால், ஐ.நா. தொடர்ந்து மாநாடுகளை நடத்த வேண்டிய நிலையில் இருந்தது.[17] 1992 இல் ரியோ டி ஜெனிரோவில் கூட்டப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (ரியோ புவி உச்சி மாநாடு), 2002 ஜோகன்னஸ்பர்க்கில் நிலையான வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாடு, 2012 இல் நிலையான வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (ரியோ + 20) ஆகிய அனைத்தும் ஸ்டாக்ஹோம் மாநாட்டின் பிரகடனத்தை அவற்றின் தொடக்கப் புள்ளியாக எடுத்துக்கொண்டன.

இந்த மாநாடும் மற்றும் அதற்கு முந்தைய அறிவியல் மாநாடுகளும் ஐரோப்பிய பொருளியல் சமூகத்தின் (அது பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் ஆனது) சுற்றுச்சூழல் கொள்கைகளில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக சிலர் வாதிடுகின்றனர்.[18] எடுத்துக்காட்டாக, 1973 இல், ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநரகத்தை உருவாக்கியது மேலும் முதல் சுற்றுச்சூழல் செயல் திட்டத்தை உருவாக்கியது. இவ்வாறு இதில் அதிகரித்த ஆர்வம் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு புவி வெப்பமடைதலை மேலும் புரிந்துகொள்ள வழி வகுத்தது. இது கியோட்டோ நெறிமுறை மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்தது. மேலும் நவீன சூழல்வாதத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியது.

Remove ads

50 ஆண்டுகளுக்குப் பிறகு

2022 ஆம் ஆண்டில் "ஸ்டாக்ஹோம்+50: ஒரு சிறந்த எதிர்காலத்தை திறக்கிறது" என்ற அறிக்கையை அறிவியலாளர் குழு வெளியிட்டது. அதில் 1972 இல் மனித சுற்றுச்சூழலில் குறித்த ஐ. நா. சபையின் மாநாட்டில் செய்யப்பட்ட மாற்றங்களை பகுப்பாய்வு செய்து எதிர்காலத்திற்கான பரிந்துரைகளை வழங்கியது.[19] "

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads