திராங்கானு
மலேசிய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திராங்கானு (மலாய்: Terengganu அல்லது Tranung; ஆங்கிலம்: Terengganu; சீனம்: 登嘉楼 ஜாவி: ترڠݢانو) என்பது மலேசியாவின் சுல்தானக அரசியலமைப்பைக் கொண்ட மாநிலமாகும். திராங்கானு ஆற்றின் முகப்பில் அமைந்து இருக்கும் கடலோர நகரமான கோலா திராங்கானு; மாநிலத்தின் தலைநகரமாகும். அதுவே மாநிலத்தின் மிகப்பெரிய நகரம்; அரசத் தலைநகரமும் ஆகும்.

பெர்கெந்தியான் தீவு (Perhentian Islands); ரெடாங் தீவு (Redang Island) போன்ற பல தீவுகள் திராங்கானு மாநிலத்தின் கடற்கரைக்கு அருகில் அமைந்து உள்ளன. உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன.
Remove ads
சொற்பிறப்பியல்
"திராங்கானு" எனும் பெயரின் தோற்றம் குறித்துப் பல கோட்பாடுகள் உள்ளன. திராங் கானு (மலாய்: Tereng Ganu) என்றால் 'பிரகாசமான வானவில்' என்று பெயரின் தோற்றம் குறித்து ஒரு கோட்பாடு கூறுகிறது.[1]
திராங்கானுவின் ஒன்பதாவது சுல்தான் பகிண்டா ஓமார் (Baginda Omar) என்பவரால் கூறப் பட்டதாக மற்றொரு கதையும் உள்ளது. முன்பு காலத்தில் பகாங்கில் இருந்து வேட்டையாடும் குழு ஒன்று இப்போதைய தெற்கு திராங்கானு பகுதியில் சுற்றித் திரிந்து வேட்டையாடுவது வழக்கம்.
பெரிய விலங்கின் கோரைப் பல்
அப்போது ஒரு தடவை ஒரு பெரிய விலங்கின் கோரைப் பல் தரையில் கிடப்பதைப் பார்த்து இருக்கிறார்கள். அந்தக் கோரைப் பல் எந்த விலங்குக்குச் சொந்தமானது என்று தெரியாமல், டாரிங் அனு (மலாய்: Taring Anu) என்று கூறி இருக்கிறார்கள்.[1]
அதன் பின்னர் டாரிங் அனு எனும் சொற்களின் மூலமாக திராங்கானுவின் பெயர் உருவாகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. திராங்கானு என்பதைச் சயாமியர்கள் டிராங்கானு (தாய்லாந்து மொழியில்: ตรังกานู) (Trangkanu) என்று அழைக்கிறார்கள். தாய்லாந்து மக்கள் 1940-ஆம் ஆண்டுகள் வரை சயாமியர்கள் என்று அழைக்கப் பட்டார்கள்.
திராங்கானு மக்கள் பொதுவாக திராங்கானுவை டிரானுங் (Tranung) அல்லது கானு (Ganu) என உச்சரிக்கிறார்கள். இங்கு ’ஜி’ எனும் எழுத்து வலியுறுத்தப்படுகிறது.[2]
Remove ads
வரலாறு
தென் சீனக் கடல் கரைப் பகுதியில் திராங்கானுவின் அமைவிடம் உள்ளது. அந்த வகையில் பழங்காலத்தில் இருந்தே அங்கு வர்த்தகப் பாதைகள் இருந்து உள்ளன. இப்போது திராங்கானு இருக்கும் பகுதியில், 6-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீன வணிகர்கள் மற்றும் கடலோடிகளால் எழுதப்பட்ட அறிக்கைகள் கிடைத்து உள்ளன.
மற்ற மலாய் மாநிலங்களைப் போலவே, இஸ்லாம் வருவதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திராங்கானுவில் இந்து - பௌத்தக் கலாசாரம் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.[3]
அத்துடன் ஆன்மவாதப் பாரம்பரிய நம்பிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீ விஜய பேரரசின் செல்வாக்கின் கீழ், திராங்கானு அரசு, மஜபாகித் பேரரசு, கெமர் பேரரசு மற்றும் குறிப்பாக சீனர்களுடன் விரிவான அளவில் வர்த்தகம் செய்து வந்து உள்ளது.[3]
Remove ads
சீன வரலாற்று மூலங்கள்
திராங்கானு பற்றிய குறிப்புகள் காணப்படும் மிகப் பழைய மூலங்களுள் சீன வரலாற்று மூலங்களும் அடங்கும். சுயி அரச மரபு (Sui dynasty) காலத்தைச் சேர்ந்த சீன எழுத்தாளர் ஒருவரின் குறிப்பு; தான்-தான் (Tan-Tan) என்னும் அரசு; சீனாவுக்குத் திறை செலுத்தியதாகக் கூறுகிறது.[4][5] இந்தத் தான்-தான் அரசு திராங்கானு நிலப்பகுதிக்கு உட்பட்ட ஓர் இடத்தில் அமைந்து இருந்ததாகவும் கூறப் படுகிறது.[6]
சீனாவின் சுயி அரசமரபு வீழ்ச்சி அடைந்த பின்னர், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் இருந்த அந்தத் தான்-தான் அரசு; அந்தக் காலக் கட்டத்தில் சீனாவை ஆட்சி செய்த தாங் அரச மரபுக்குத் (Tang dynasty) திறை செலுத்தியது.[4] எனினும் 7-ஆம் நூற்றாண்டில் தான்-தான் அரசு ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. அதன் பின்னர் சீனாவுக்குத் திறை செலுத்துவதை நிறுத்திக் கொண்டது.
- கி.பி. 1178-இல் சூ குபெய் (ஆங்கிலம்: Zhou Qufei; சீனம்: 周去非) என்பவர் எழுதிய லிங்-வாய்-டாய்-டா (ஆங்கிலம்: Lingwai Daida; சீனம்: 嶺外代答) எனும் நூல்;
- 1226-இல் சாவோ ருகுவா (Zhao Rugua) எழுதிய சூ பான் சி (San-fo-ts’i) எனும் நூல்;
ஆகிய இரண்டு நூல்களும் திராங்கானுவை டெங்-யா-நு (Teng-ya-nu) அல்லது டெங்-யா-நுங் (Teng-ya-nung) என்று குறிப்பிடுகின்றன. ஸ்ரீ விஜயப் பேரரசை சான் போசி (San-fo-ts’i) என்று குறிப்பிடுகின்றன. திராங்கானுவை ஸ்ரீ விஜயப் பேரரசின் சிற்றரசு எனவும் குறிப்பிடுகின்றன.
மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் திராங்கானு



13-ஆம் நூற்றாண்டில் சிறீவிசயத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மஜபாகித் பேரரசின் செல்வாக்கின் கீழ் திராங்கானு கண்காணிக்கப்பட்டது.15-ஆம் நூற்றாண்டில் மஜபாகித் அரசு, மலாயா தீபகற்பத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அயூத்தியா இராச்சியம் (Ayutthaya Kingdom), மலாக்கா சுல்தானகம் (Malacca Sultanate) ஆகிய இரு அரசுகளுடன் போட்டி போட்டது.[7]
அந்தப் போட்டியில் மலாக்கா வெற்றி பெற்றது. அதன் பின்னர் திராங்கானு நிலப்பகுதி, மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1511ல் மலாக்கா போர்த்துக்கீசியயரால் தோற்கடிக்கப் பட்டதும்; புதிதாக உருவான ஜொகூர் சுல்தானகம் (Sultanate of Johor), திரங்கானு உள்ளிட்ட முன்னைய மலாக்கா சுல்தானகத்தின் பல ஆட்சிப் பகுதிகளைத் தன் செல்வாக்கிற்குள் கொண்டு வந்தது.[8]
அந்த வகையில் 17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சில காலம் திராங்கானு, அச்சே சுல்தானகத்தின் (Aceh Sultanate) கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனாலும், அதே அந்த 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜொகூர் சுல்தானகம் மீண்டும் திராங்கானு மீது தன் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டது.
திரங்கானு சுல்தானகம்
தற்போதைய திரங்கானு சுல்தானகம் 1708-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.இதன் முதலாவது சுல்தான்: முதலாவது சைனல் ஆப்தீன் (Sultan Zainal Abidin I) தன்னுடைய ஆட்சிப் பீடத்தை கோலா பெராங்கில் நிறுவினார். பின்னர் சில தடவைகள் தன் ஆட்சிப் பீட இடங்களை மாற்றினார். பின்னர், இறுதியாக கோலா திராங்கானுவில் உள்ள புக்கிட் கிளேடாங் (Bukit Keledang) எனும் இடத்திற்கு அருகில் நிறுவினார்.
18-ஆம் நூற்றாண்டில் கோலா திராங்கானு ஒரு சிறிய நகரமாக இருந்தது. அந்த நகரத்தைச் சுற்றி ஆயிரம் வீடுகள் பரவி இருந்தன எனச் சொல்லப்பட்டது. அக்காலத்தில் ஏற்கனவே சீனர்கள் கோலா திராங்கானுவில் காணப் பட்டனர். அந்தக் கட்டத்தில் கோலா திராங்கானு நகரின் மக்கள் தொகையில் அரைப் பங்கினர் சீனர்கள். அவர்கள் வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபட்டு இருந்தனர்.[9][10]
1831-ஆம் ஆண்டில் சுல்தான் தாவூத் (Sultan Daud) இறந்த பின்னர் தெங்கு மன்சூர் (Tengku Mansur), தெங்கு ஓமார் (Tengku Omar) ஆகியோரிடையே வாரிசுரிமைப் போட்டி ஏற்பட்டு உள்நாட்டுப் போராக வெடித்தது.
சுல்தான் ஓமார்
அப்போது தெங்கு ஓமார் புக்கிட் புத்திரி (Bukit Puteri) எனும் இடத்தில் இருந்தார். தெங்கு மன்சூர் பாலிக் புக்கிட் (Balik Bukit) எனும் இடத்தில் இருந்தார். இறுதியில் தெங்கு ஓமார் தோல்வியுற்று கோலா திரங்கானுவை விட்டுத் தப்பியோடினார்.
தெங்கு மன்சூர், சுல்தான் இரண்டாவது மன்சூர் (Sultan Mansur II) என்னும் பெயரில் அடுத்த சுல்தானானார். 1837-ஆம் ஆண்டில் சுல்தான் மன்சூர் இறக்கவே அவரின் மகன் சுல்தான் முகமத் என்னும் பெயரில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
1839-ஆம் ஆண்டில் படையுடன் திராங்கானுவுக்குத் திரும்பிய தெங்கு ஓமார், சுல்தான் முகமத்தைத் தோற்கடித்து சுல்தான் ஓமார் என்னும் பெயரில் முடி சூடிக் கொண்டார்.
திராங்கானு கல்வெட்டு

உலு திராங்கானு மாவட்டத்தின் தலைநகரான கோலா பேராங்கில் (Kuala Berang) ஓர் அரேபியக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு திராங்கானு கல்வெட்டு (Terengganu Inscription Stone) என்று பெயர். 1303-ஆம் ஆண்டு கல்வெட்டு.[11]
அந்தக் கல்வெட்டின் சான்றுகளின்படி, இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றிய முதல் மலாய் மாநிலம் திராங்கானு என அறியப்படுகிறது. திராங்கானு ஒரு காலக் கட்டத்தில் மலாக்காவின் ஆளுமை மாநிலமாக இருந்தது. ஜொகூர் சுல்தானகத்தின் தோற்றத்திற்குப் பின்னர், திரங்கானு தன் சுயாட்சியைக் கணிசமான அளவிற்குத் தக்க வைத்துக் கொண்டது.
திராங்கானுவின் முதல் சுல்தான் துன் சைனல் ஆபிதீன்
1724-இல் திராங்கானு ஒரு சுதந்திரமான சுல்தானாகமாக உருவெடுத்தது. முதல் சுல்தான் துன் சைனல் ஆபிதீன். இவர் முன்னாள் ஜொகூர் சுல்தானின் தம்பி. 18-ஆம் நூற்றாண்டில் திராங்கானு அரசியலில் ஜொகூர் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது.
19-ஆம் நூற்றாண்டில், தாய்லாந்தின் இரத்தனகோசின் இராச்சியத்தின் (Rattanakosin Kingdom) ஓர் அடிமை மாநிலமாக திராங்கானு மாறியது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் பூங்கா மாஸ் என்று அழைக்கப்படும் கப்பம் கட்டியது.
சுல்தான் உமார் ரியாத் ஷாவின் சிறப்பான ஆட்சி



இது சுல்தான் உமார் ரியாத் ஷாவின் (Sultan Omar Riayat Shah) ஆட்சியின் கீழ் நிகழ்ந்தது. இருப்பினும் இவர் திராங்கானுவில் வர்த்தகம் மற்றும் நிலையான அரசாங்கத்தை மேம்படுத்திய ஒரு பக்தியுள்ள ஆட்சியாளர் என நினைவு கூரப்படுகிறார். தாய்லாந்து ஆட்சியின் கீழ், திராங்கானு செழித்து வளர்ந்தது.[12]
1909-ஆம் ஆண்டின் ஆங்கிலோ - சயாமிய உடன்படிக்கையின்படி திராங்கானு மீதான அதிகாரம் சயாமில் இருந்து பெரும் பிரித்தானியாவுக்கு மாற்றப்பட்டது. 1919-இல் திராங்கானு சுல்தானுக்கு ஒரு பிரித்தானிய ஆலோசகர் நியமிக்கப்பட்டார்.
மேலும் திராங்கானு கூட்டாட்சி இல்லாத மலாய் மாநிலங்களில் ஒன்றாகவும் மாறியது. இந்த நடவடிக்கை உள்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. அதனால் மக்கலிடையே அதிருப்தி. 1928-இல் மக்கள் எழுச்சியை ஒடுக்க ஆங்கிலேயர்கள் இராணுவ பலத்தைப் பயன்படுத்தினார்கள்.
இரண்டாம் உலகப் போரிப் போது திராங்கானு
1939-ஆம் ஆண்டில் சயாம் நாடு என்பது தாய்லாந்து நாடு என மறுபெயரிடப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் திராங்கானுவை ஆக்கிரமித்தது. அடுத்தக் கட்டமாக, கிளாந்தான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களுடன் திராங்கானுவும் சயாம் ஆட்சிக்கு மாற்றம் செய்யப் பட்டது.
இரண்டாம் உலகப் போரில், ஜப்பானின் தோல்விக்குப் பிறகு, மலாய் மாநிலங்களின் மீதான பிரித்தானிய கட்டுப்பாடு மீண்டும் நிறுவப்பட்டது. 1948-ஆம் ஆண்டில் திராங்கானு மலாயா கூட்டமைப்பில் உறுப்பியம் பெற்றது.
பின்னர் 1957-ஆம் ஆண்டில் மலாயாவின் ஒரு மாநிலமானது. 1963-ஆம் ஆண்டில் மலாயா என்பது மலேசியா என உருவகம் பெற்றது. தற்சமயம் மலேசியா கூட்டமைப்பில் ஓர் உறுப்பினராக உள்ளது.
திராங்கானுவில் இஸ்லாமியக் கட்சி
பாரிசான் நேசனல் கூட்டணியின் பல பத்தாண்டுகள் கால ஆட்சியைத் தொடர்ந்து, 1999-ஆம் ஆண்டில் மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்) ஆட்சிக்கு வந்தது. மலேசியாவில் இஸ்லாமியக் கட்சி, முதலாவதாக கிளாந்தான் மாநிலத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தது. இரண்டாவது மாநிலமாகத் திராங்கானுவைக் கைப்பற்றியது
2004 மலேசியப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் அரசாங்கம் மீண்டும் திராங்கானுவைக் கைப்பற்றியது. 2018 மலேசியப் பொதுத் தேர்தல் வரை திராங்கானு மாநிலத்தை பாரிசான் நேசனல் தொடர்ந்து ஆட்சி செய்தது. இன்றும் தொடர்கிறது.
Remove ads
நிலவியல்
திராங்கானு மாநிலம் தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ளது. வடமேற்கில் கிளாந்தான், தென்மேற்கில் பகாங் மற்றும் கிழக்கில் தென் சீனக் கடல் எல்லைகளாக உள்ளன.[13]
பெர்கெந்தியான் தீவு; ரெடாங் தீவு; கப்பாஸ் தீவு போன்ற பல தீவுகள் திராங்கானு மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ளன. மாநிலத்தின் மொத்த பரப்பளவு 13,035 km2 (5,033 sq mi)..[14]
திராங்கானு தீவுகள்
- பவள விரிகுடா, பெர்கெந்தியான் கெச்சில்
- ரெடாங் தீவு
- கெமியா தீவு
- கப்பாஸ் தீவு
- தொலைவில் இருந்து கப்பாஸ் தீவு
- பாசிர் பாஞ்சாங் தீவு
- தொலைவில் இருந்து ரெடாங் தீவு
- ரெடாங் தீவு கடற்கரை
மக்கள் தொகையியல்
2010-ஆம் ஆண்டில் திராங்கானுவின் மக்கள் தொகை 1,015,776. 2015-ஆம் ஆண்டில் 1,153,500 ஆக அதிகரித்து உள்ளது.[15] 2006—ஆம் ஆண்டில், மலாய்க்காரர்கள் மக்கள் தொகை 94.7%; சீனர்கள், 2.6%; இந்தியர்கள் 0.2% மற்றும் பிற இனக்குழுக்கள் 2.4%. 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திராங்கானுவின் இன அமைப்பு 97% பூமிபுத்திரர்கள்; 2.6% சீனர்கள்; 0.2% இந்தியர்கள்; மற்றும் 0.1% மற்றவர்கள்.[15]
2000-ஆம் ஆண்டில், மாநிலத்தின் மக்கள்தொகை 48.7% நகர்ப்புறத்தில் வாழ்ந்தனர். பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வாழ்ந்தனர். 2005-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, விகிதாச்சாரங்கள் கணிசமாக மாறியது, 51% மக்கள் நகர்ப்புறங்களிலும், 49% கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர்.[16]
திராங்கானு இந்தியர்கள்
திராங்கானுவில் உள்ள இந்தியர்கள் பெரும்பாலும் தமிழர்கள். பெரும்பான்மையினர் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள். இருப்பினும் சிறுபான்மையினர் இஸ்லாத்தையும் பின்பற்றுகிறார்கள். சீனர்களைப் போலவே, திராங்கானுவில் உள்ள இந்தியர்ச் சமூகமும் தனிச் சமூகமாகத் தனித்து வாழ்கின்றது.
இந்தியர்கள் பலர் தமிழ் மொழி, மலாய் மொழி, ஆங்கில மொழி, மற்றும் உள்ளூர்த் திராங்கானு மலாய் மொழியில் மிகச் சரளமாக பேசுகிறார்கள்.
திராங்கானுவில் உள்ள பெரும்பாலான இந்தியர்கள் கோலா திராங்கானு போன்ற நகர்ப் புறங்களில் வாழ்கின்றனர். திராங்கானுவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மலையாளி வம்சாவழியினரும் உள்ளனர்.
திராங்கானு மாநிலத்தில் இந்துக் கோயில்கள்
திராங்கானு மாநிலத்தில் மொத்தம் ஐந்து இந்துக் கோயில்கள் உள்ளன.
- ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், கெமாமான் (Sri Maha Mariamman Temple)
- ஸ்ரீ காளி யுக துர்கா லட்சுமி அம்மன் கோயில், (Sri Kaliyuga Durga Lakshmi Amman Temple).
- ஸ்ரீ சூல அம்மன் கோயில், கோலா திராங்கானு (Sri Soola Amman Temple)
- ஸ்ரீ மகா மாரியம்மன், கெமாமான் (Sri Maha Mariamman)
- ஸ்ரீ மகா தட்சணகாளி கோயில் ஜபோர், கெமாமான் (Sri Maha Dakshanakali Temple)
கோலா திராங்கானுவில் இரண்டு இந்துக் கோயில்கள் உள்ளன. அவற்றில் பெரிய இந்துக் கோயில் ஸ்ரீ கலியுக துர்கா இலட்சுமி அம்மன் கோயில். திராங்கானு மாநிலத்தின் தலைநகர் கோலா திராங்கானுவில், ஜாலான் செரோங் லஞ்சாட் எனும் சாலையில் அமைந்து உள்ளது.[17][18]
இந்தக் கோயிலை, கோலா திராங்கானு துர்கா அறக்கட்டளை நடத்துகிறது. 1975-ஆம் ஆண்டில் துர்கா அறக்கட்டளை; கல்வி, நலன் மற்றும் தொண்டு நிகழ்ச்சிகளுக்காகவும், இந்துக் கோயில் பராமரிப்புகளுக்காகவும் நிறுவப்பட்டது. 2011-ஆம் ஆண்டில் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது.[17] மற்றோர் ஆலயத்தின் பெயர் ஸ்ரீ சூல அம்மன் கோயில் (Sri Soola Amman Temple). இந்த ஆலயமும் கோலா திராங்கானு நகரில்தான் உள்ளது.
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
திராங்கானு மாநிலம் 8 மாவட்டங்கள், 99 முக்கிம்கள் மற்றும் 7 உள்ளூர் அரசாங்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[19][20][21]
Remove ads
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads