மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம்
மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் இரண்டாவது பாலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாலம் அல்லது மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது இணைப்பு (ஆங்கிலம்: Malaysia–Singapore Second Link; மலாய் மொழி: Laluan Kedua Malaysia–Singapura; சீனம்: 马新第二通道) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தையும் சிங்கப்பூர் தீவையும் இணைக்கும் பாலம் ஆகும். 1998 ஜனவரி 2-ஆம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
மலேசியாவில் இந்தப் பாலத்தை, பொதுவாக துவாஸ் பாலம் அல்லது துவாஸ் இரண்டாவது பாலம் என்று அழைப்பதும் உண்டு.[1] சிங்கப்பூரில், துவாஸ் இரண்டாவது இணைப்பு (Tuas Second Link) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப் படுகிறது.
மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது. சிங்கப்பூரின் அப்போதைய பிரதமர் கோ சொக் தோங்; மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் பின் முகமது; ஆகியோரால் அதிகாரப் பூர்வமாக இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.[2][1]
Remove ads
பொது



இரட்டை - மூன்று வழிப் பாதைகளைக் கொண்ட இந்த 'மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாலம்' எனும் மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது இணைப்பு பாலம்; ஜொகூர், தஞ்சோங் குப்பாங் பகுதியையும்; சிங்கப்பூர், துவாஸ், அகமது இப்ராகிம் சாலையையும் இணைக்கின்றது.
நீரின் மேல் உள்ள பாலத்தின் மொத்த நீளம் 1.92 கி.மீ. (1.19 மைல்). ஆனாலும், இரு நாடுகளின் சோதனைச் சாவடிகளுக்கும் இடையே உள்ள பாலத்தின் தூரம் 6 கி.மீ. (3.7 மைல்) ஆகும்.
மலேசியப் பகுதியில் இந்தப் பாலம், இரண்டாவது இணைப்பு விரைவுச் சாலையுடன் (ஆங்கிலம்: Second Link Expressway; Linkedua Expressway; மலாய் மொழி: Lebuhraya Laluan Kedua Malaysia–Singapura - E3); இணைக்கப் படுகிறது. சிங்கப்பூர்ப் பகுதியில் இந்தப் பாலம் ஆயர் ராஜா விரைவுச் சாலையுடன் இணைகிறது.
துவாஸ் சோதனைச் சாவடி
மலேசியப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி, சுல்தான் அபு பக்கர் வளாகம் (Kompleks Sultan Abu Bakar) என்று அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி, துவாஸ் சோதனைச் சாவடி (Tuas Checkpoint) என்று அழைக்கப்படுகிறது.
துவாஸ் சோதனைச் சாவடி, 19.6 ஹெக்டர் (48 ஏக்கர்) நிலப்பரப்பில் சிங்கப்பூர் டாலர் S$485 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.[3]
இந்த மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாலம் கட்டப் படுவதற்கு 54,000 கன மீட்டர்கள் (1,900,000 கன அடி) கற்காரை உறுதிக் கலவையும்; 20,000 டன்கள் எஃகும் பயன்படுத்தப்பட்டன.
பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல்
சாதாரண நாட்களில் இரண்டு திசைகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதால், பொதுவாக இந்தப் பாலத்தில் பயணம் செய்வதற்கு குறைவான நேரம் பிடிக்கிறது. இருப்பினும், சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், கிறிஸ்துமஸ் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில், அதிகமான போக்குவரத்தினால் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன.
துவாஸ் சோதனைச் சாவடி, ஒரு வாகனச் சோதனைச் சாவடியாக மட்டுமே செயல்படுகிறது. சோதனைச் சாவடிக்குள் பயணிகள் கால் நடையாக கடந்து செல்வதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை.[4]
Remove ads
மற்ற சாலைகளில் இருந்து அணுகல்
மலேசியாவில் இருந்து
இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை (Second Link Expressway) வழியாக இந்த மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாலத்தை அணுகலாம். அதாவது வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (E2) எனும் தீபகற்ப மலேசியாவின் பிரதான சாலையானது; (North–South Expressway (E2); செனாய் 253 வடக்கு மாற்றுச் சந்தியில் (Exit 253 Senai North Interchange) இணைகிறது. ஆக இந்த இணைப்புச் சாலைகளின் வழியாக மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாலத்தைச் சென்று அடையலாம்.
இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலையை அடைவதற்கு மற்றும் ஒரு வழி உள்ளது. தாமான் பெர்லிங் வழியாக பாசிர் கூடாங் நெடுஞ்சாலையை அடைந்து, அங்கு இருந்து இரண்டாவது இணைப்பு விரைவுச் சாலைக்குச் செல்லலாம்.
சிங்கப்பூரில் இருந்து
சிங்கப்பூரின் ஆயர் ராஜா விரைவுச்சாலை வழியாக இந்தப் பாலம் நேரடியாக இணைக்கப் படுகிறது. ஆகவே சாலைச் சந்திப்புகளின் பிரச்சினைகள் குறைவு. தவிர, துவாஸ் பகுதியில் உள்ள இதர சாலைகளின் வழியாகவும் ஆயர் ராஜா விரைவுச்சாலையை (Ayer Rajah Expressway) அடைந்து, அங்கு இருந்து மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாலத்திற்குச் செல்லலாம்.
Remove ads
கட்டுமானச் செலவு
மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் கட்டும் திட்டத்திற்காகச் சிங்கப்பூர் அரசாங்கம் S$620 மில்லியன் (சிங்கப்பூர் வெள்ளி) (Singapore Dollar) செலவிட்டது. அதில் பெரும்பகுதியான S$485 மில்லியன், துவாஸ் சோதனைச் சாவடியைக் கட்டுவதற்குச் செலவிடப்பட்டது.[1]
மீதித் தொகையில் S$84 மில்லியன், துவாஸ் சோதனைச் சாவடிக்கான இடத்தை மீட்டு எடுப்பதற்கும்; S$51 மில்லியன், பாலத்தின் சிங்கப்பூர்ப் பகுதியை நிர்மாணிப்பதற்கும் செலவிட்டது.
மலேசியாவைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்திற்காக சிங்கப்பூர் வெள்ளி (Singapore Dollar) S$358 மில்லியன் செலவிட்டது. அதில் பாதிக்கு மேல், சுமார் S$200 மில்லியன், சோதனைச் சாவடியைக் கட்டுவதற்குச் செலவிட்டது. மீதமுள்ள S$158 மில்லியன் பாலத்தின் மலேசியப் பகுதியைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.[1]
வரலாறு
மலேசியா மற்றும் சிங்கப்பூர் இரு நாடுகளுக்கு இடையே இரண்டாவது இணைப்புப் பாலத்தை உருவாக்குவதற்கான திட்டம், அப்போதைய ஜொகூர் மந்திரி பெசார், ஒசுமான் சாத் (Othman Saat) என்பவரால் கொண்டு வரப்பட்டது. முதன்முதலில் 1980-ஆம் ஆண்டு ஜுலை மாதம் அந்தத் திட்டம் பற்றி கருத்து கூறப்பட்டது.
ஜொகூர் பாரு மாநகரில் இருந்து கேலாங் பாத்தா (Gelang Patah) சற்று தொலைவில் இருப்பதால் அப்பகுதியில் இரண்டாவது பாலம் கட்டப் படுவது சாத்தியம் என கருதப்பட்டது.[5][6] தரைப்பாலத்தில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இரண்டாவது பாலம் கட்டுவதற்கான கருத்து முன்வைக்கப்பட்டது.
தனியார் நிறுவனத்துடன் கட்டுமான ஒப்பந்தம்
இது தொடர்பாக, சூலை 1989-இல், மலேசிய ஐக்கியப் பொறியியலாளர் நிறுவனம் எனும் தனியார் நிறுவனம் (United Engineers Malaysia Berhad (UEM)); சிங்கப்பூருக்கான இரண்டாவது இணைப்பைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன்மொழிவை மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. 1993 சூலை மாதம் ஒரு சலுகை ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் விளைவாக, 1993 சூலை 27-ஆம் தேதி தொடங்கி மேலும் 30 ஆண்டுகளுக்கு; பாலம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை வடிவமைக்க, கட்டமைக்க, நிர்வகிக்க, பராமரிக்க; மலேசிய ஐக்கியப் பொறியியலாளர் நிறுவனத்திற்குச் சிறப்பு உரிமைகளும், சிறப்பு அதிகாரங்களும் வழங்கப்பட்டன.
இரு அரசுகளின் ஒத்துழைப்பு
இதைத் தொடர்ந்து, 1994 மே மாதம் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. பாலம் கட்டுவதற்கு மலேசிய அரசு மற்றும் சிங்கப்பூர் அரசு ஆகிய இரு அரசுகளின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. அதன் விளைவாக, 1994 மார்ச் 22-ஆம் தேதி இரு அரசுகளுக்கும் இடையே ஓர் ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ஒவ்வோர் அரசாங்கமும் அதன் எல்லைக்குள் அமையும் பாலத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டது.
44 கிலோமீட்டர் அதிவேக நெடுஞ்சாலைகள்
இரண்டாவது பாலத்தின் கூறுகளாக 44 கிலோமீட்டர் அதிவேக நெடுஞ்சாலைகள்; ஒரு சுங்க வளாகம்; ஒரு குடிவரவு வளாகம் மற்றும் ஒரு தனிமைப்படுத்தல் வளாகம், மூன்று சுங்கச் சாவடிகள், இரண்டு ஓய்வுச் சேவைப் பகுதிகள் மற்றும் பிற துணை வசதிகள் ஆகியவை முக்கிய கூறுகளாகும்.
ஒரு நாளைக்கு 200,000 வாகனங்கள் செல்லும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டாவது இணைப்புப் பாலம் 1998 ஜனவரி 2-ஆம் தேதி, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமட் மற்றும் சிங்கப்பூரின் பிரதமர் கோ சோக் தோங் ஆகிய இரு நாட்டு பிரதமர்களால், அதே ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
Remove ads
வழிசெலுத்தல் கூறுகள்
பாலத்திற்கு அடியில் உள்ள கடல் பகுதியில் பயணம் செய்யும் போது, பாலத் தூண்களில் பொருத்தப்பட்ட விளக்குகள் மற்றும் வழிசெலுத்தல் இடங்களில் வைக்கப்படும் ஒளிரும் மிதவைகள் போன்றவை வழிசெலுத்தல் தளவாடச் சாதனங்கள் ஆகும்.
மூன்று கடல் கால்வாய்களின் பரிமாணங்கள்
- 75 மீட்டர்கள் (246 அடி) அகலம் 25 மீட்டர்கள் (82 அடி) உயரம்
- 50 மீட்டர்கள் (160 அடி) அகலம் 9 மீட்டர்கள் (30 அடி) உயரம்
- 75 மீட்டர்கள் (246 அடி) அகலம் 12 மீட்டர்கள் (39 அடி) உயரம்
Remove ads
தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்
- பாலம் தொடர்பான விவரக் குறிப்புகள்
- பாலத்தின் ஒட்டுமொத்த நீளம்: 1,920 மீட்டர்கள் (6,300 அடி)
- மலேசியக் கடல் எல்லைக்குள்: 1,769 மீட்டர்கள் (5,804 அடி)
- கட்டுமானக் காலம்: அக்டோபர் 1994 முதல் அக்டோபர் 1997 வரை
- நிலத்தூண் அடிமானங்களின் மொத்த நீளம்: 10,230 மீட்டர்கள் (33,560 அடி)
- உறுதிக் கலவையின் மொத்த அளவு: 54,000 கன சதுர மீட்டர்கள் (1,900,000 cu ft)
- வலுவூட்டும் இரும்புத் தடங்களின் எடை: 18,000 tonnes (20,000 short tons)
- முன் வார்ப்புக் கற்காரை பிரிவுகளின் எண்ணிக்கை: 840 அலகுகள்
- நீண்ட தொங்கு இடைவெளி: 165 மீட்டர்கள் (541 அடி)
- பாலத்தின் அடியில் உள்ள கடல் கால்வாய்கள்
- மலேசியாவின் முதல் பகுதியில்: 75 மீட்டர்கள் (246 அடி) அகலம் 25 மீட்டர்கள் (82 அடி) உயரம்.
- மலேசியாவின் இரண்டாம் பகுதியில்: 50 மீட்டர்கள் (160 அடி) அகலம் 9 மீட்டர்கள் (30 அடி) உயரம்.
- சிங்கப்பூர் பகுதியில்: 75 மீட்டர்கள் (246 அடி) அகலம் 12 மீட்டர்கள் (39 அடி) உயரம்
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads