மலேசிய ஊழியர் சேமநிதி வாரியம்
மலேசிய நிதி அமைச்சின் கீழ் உள்ள அரசு வாரியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய ஊழியர் சேமநிதி வாரியம் (மலாய்: Kumpulan Wang Simpanan Pekerja KWSP; ஆங்கிலம்: Employees' Provident Fund) (EPF); என்பது மலேசிய நிதி அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு வாரியம் ஆகும். மலேசியாவில் இந்த அமைப்பு இ.பி.எப் என பரவலாக அழைக்கப்படுகிறது.
இந்த வாரியம் மலேசியாவில் தனியார் துறை ஊழியர்களுக்கான கட்டாயச் சேமிப்புத் திட்டம்; மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை நிர்வகிக்கிறது. தனியார் துறையில் பணிபுரியும் மலேசிய குடிமக்களுக்கு, ஊழியர் சேமநிதி உறுப்பியம் என்பது சட்டப்படி கட்டாயமாகும்; மேலும் மலேசியர் அல்லாத குடிமக்களும் இந்த ஊழியர் சேமநிதியில் தன்னார்வமாகச் சேரலாம்.
மலேசியாவில் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுக்கால வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. உலகின் பழமையான சேமநிதித் திட்டங்களில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது. இந்தத் திட்டம் மலேசியாவின் தனியார்துறை ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.
Remove ads
வரலாறு
மலேசிய ஊழியர் சேமநிதி வாரியம், 1951-ஆம் ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி கட்டளைச் சட்டத்தின்படி (Employees Provident Fund Ordinance 1951), அக்டோபர் 1, 1951-இல் தேசிய அஞ்சல் இயக்குநர் அதிகாரத்தின் கீழ் நிறுவப்பட்டது.[3] இந்தச் சட்டம் 1951-ஆம் ஆண்டு இபிஎப் (EPF) சட்டமாக மாறியது. 1982-ஆம் ஆண்டு மேலும் ஒரு மாற்றம்; அதற்குப் பின்னர் 1991-ஆம் ஆண்டு அந்தச் சட்டம் இபிஎப் சட்டம் 1991 என மாற்றம் கண்டது.
1991-ஆம் ஆண்டு இபிஎப் சட்டம் 1991 எனும் 1991-ஆம் ஆண்டு மலேசிய ஊழியர் சேமநிதி வாரியச் சட்டம்[4]; ஊழியர்களும் அவர்களின் முதலாளிகளும் ஓய்வூதிய சேமிப்பில் பங்களிக்க வேண்டும் என்று கோருகிறது. மேலும்; தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அல்லது அதற்கு முன் சிறப்பு நோக்கங்களுக்காகத் தங்களின் சேமிப்பை மீட்டுக் கொள்ள அனுமதிக்கிறது.[5] திசம்பர் 31, 2012 நிலவரப்படி, மலேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தில் 13.6 மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 6.4 மில்லியன் பேர் செயல் பங்களிப்பு உறுப்பினர்களாக இருந்தனர். அதே தேதியில், மலேசிய ஊழியர் சேமநிதி வாரியத்தில் 502,863 பங்களிப்பு முதலாளிகளும் இருந்தனர்.[5]
சேமநிதி வடிவமைப்பு
தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை வாழ்நாள் வங்கித் திட்டத்தில் சேமிக்க உதவும் வகையில் ஊழியர் சேமநிதி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சேமநிதி என்பது ஓர் ஊழியரின் ஓய்வூதிய நிதியாகவும்; அல்லது அந்த ஊழியர் தற்காலிகமாகவோ அல்லது மேலும் வேலை செய்யத் தகுதி அற்றவராகவோ இருந்தாலும் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கான சட்டம் மற்றும் தார்மீகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு கட்டமைப்பையும் ஊழியர் சேமநிதி வழங்குகிறது.[5]
திசம்பர் 31, 2020 நிலவரப்படி, ஊழியர் சேமநிதி சொத்து அளவின் அளவு RM998 பில்லியனாக (US$238 பில்லியன்) இருந்தது,[6] இது ஆசியாவின் நான்காவது பெரிய ஓய்வூதிய நிதியாகவும், உலகின் ஏழாவது பெரிய ஓய்வூதிய நிதியாகவும் அமைந்தது.[7]
முதலீடுகள்
2012-ஆம் ஆண்டு தொடக்கம், ஒவ்வோர் உறுப்பினரின் மாத சம்பளத்திலும் குறைந்தது 11% பங்களிப்பை வழங்கி சேமிப்புக் கணக்கில் சேமித்து வைப்பதை உறுதி செய்யும் வகையில் ஊழியர் சேமநிதி வாரியம் செயல்படுகிறது. அதே வேளையில் உறுப்பினரின் முதலாளி ஊழியரின் சம்பளத்தில் குறைந்தது 12%-ஐ சேமிப்பிற்கு கூடுதலாக நிதியளிக்கக் கடமைப்பட்டுள்ளார் (சம்பளம் RM5,000-க்கும் குறைவாக இருந்தால் 13%).[5]
ஓர் உறுப்பினரின் ஊழியர் சேமநிதி சேமிப்பு, ஊழியர் சேமநிதி வாரியத்தால் இலாபகரமானதாகவும் அனுமதிக்கப்பட்டதாகவும் கருதப்படும் நிறுவனங்களுக்கான முதலீடாகப் பயன்படுத்தப்படலாம். அதிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகை அந்தந்த உறுப்பினர்களின் கணக்குகளுக்கு வங்கியின் வழியாகச் செலுத்தப்படும். இதற்கு மாற்றாக, உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பைத் தங்கள் சொந்த முதலீடுகளிலும் பயன்படுத்தலாம். இருப்பினும் அத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படும் இழப்புகளுக்கு சேமநிதி வாரியம் பொறுப்பு ஏற்காது. மற்றும் அவ்வாறு ஏற்படும் இழப்புகளுக்கு உறுப்பினர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.[5]
Remove ads
ஈவுத்தொகை
முதலீட்டு முடிவுகளைப் பொறுத்து, வைப்புத்தொகை நிதியின் மீது ஊழியர் சேமநிதி வாரியம் தன் ஆண்டு ஈவுத்தொகையை அறிவிக்கிறது. காலப்போக்கில் மாறுபடும் முதலீட்டு முடிவுகளைப் பொறுத்து ஈவுத்தொகை அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் சட்டப்படி, ஊழியர் சேமநிதி வாரியம், 2.5% ஈவுத்தொகையை மட்டுமே வழங்க கடமைப்பட்டுள்ளது (பணியாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1991 இன் பிரிவு 27 இன் படி - as per Section 27 of the Employees Provident Fund Act 1991).[8]
ஊழியர் சேமநிதி வாரியம் அதன் உறுப்பினர்களுக்கு நிலையான நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் குறைந்த வருமானத்தை ஈட்டினாலும், குறைந்த ஆபத்துள்ள வருவாய் திட்டங்களில் முதலீடு செய்கிறது.[9]
Remove ads
திரும்பப் பெறுதல்
ஓய்வூதியத் திட்டமாக, உறுப்பினர்கள் 50 வயதை எட்டும்போது மட்டுமே சேமநிதி சேமிப்பில் திரட்டப்பட்ட பணத்தை திரும்பப் பெற முடியும். அந்தக் கட்டத்தில் அவர்கள் தங்களின் சேமநிதியில் இருந்து 30% மட்டுமே எடுக்க முடியும்; 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் திரும்பப் பெறலாம்.
ஓர் உறுப்பினர் 55 வயதிற்கும் முன்னதாக இறக்கும் பட்சத்தில், அந்த உறுப்பினர் பரிந்துரை செய்த தனிநபருக்கு சேமநிதி வழங்கப்படும். ஓர் உறுப்பினர் நிரந்தரமாக வேறு நாட்டிற்குக் குடிபெயர்ந்தாலோ, ஊனமுற்றாலோ, அல்லது அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை தேவைப்படும் போதோ அவரின் சேமநிதிப் பணத்தைத் திரும்பப் பெறுதல் சாத்தியமாகும்.[10]
மேலும் காண்க
- சிங்கப்பூர் மத்திய சேமநிதி
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி, இந்தியா
- மலேசியாவின் பொருளாதாரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads