மு. கருணாநிதி
முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர், திமுக தலைவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.[3] இவர் முத்தமிழறிஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்குவகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.
Remove ads
இளமைப்பருவம்
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி.[4][5] இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக் கல்வியைத் திருக்குவளையில் பெற்றார். பின்னர்த் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித் தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை.
Remove ads
இளைஞர் அமைப்பு
கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944 அன்று உருவாக்கினார். அதன் தலைவராக மு. கருணாநிதியும் அமைச்சராக கே.வெங்கிடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6] இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார்.[7] சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான 'அனைத்து மாணவர்களின் கழகம்' என்ற அமைப்பாக உருப்பெற்றது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப்பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார்.
Remove ads
முரசொலி இதழ்
முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார்.[8] சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார்.
அரசியல்
கல்லக்குடி போராட்டம்
நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கருணாநிதி, தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953)[9] ஈடுபட்டது ஆகும். இந்தத் தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கல்லக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமெண்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்தப் பெயரைக் கல்லக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.[9][10]
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
1957-இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி, திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டைப் பாதுகாக்க, இஃது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று முழக்கமிட்டார்.
அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.
Remove ads
தி.மு.க.வில் வகித்த பதவிகள்
பொருளாளர்
1960-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969-ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார்.
தலைவர்
1969-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்
போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957-ஆம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தி.மு.க. வேட்பாளராகவும் போட்டியிட்டார். மேலவை உறுப்பினரானதால் 1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.[11][12]
ஆண்டு | தொகுதி | வாக்கு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்கு | வாக்கு வேறுபாடு |
1957 | குளித்தலை | 22785 | கே.எ. தர்மலிங்கம் | காங்கிரசு | 14489 | 8296 |
1962 | தஞ்சாவூர் | 32145 | ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் | காங்கிரசு | 30217 | 1928 |
1967 | சைதாப்பேட்டை | 53401 | எஸ்.ஜி.வினாயகமூர்த்தி | காங்கிரசு | 32919 | 20482 |
1971 | சைதாப்பேட்டை | 63334 | என்.காமலிங்கம் | காங்கிரசு | 50823 | 12511 |
1977 | அண்ணா நகர் | 43076 | ஜி.கிருஷ்ணமூர்த்தி | அ.தி.மு.க. | 16438 | 16438 |
1980 | அண்ணா நகர் | 51290 | எச். வி. அண்டே | அ.தி.மு.க. | 50591 | 699 |
1989 | துறைமுகம் | 41632 | கே.எ.வகாப் | முஸ்லீம் லீக் | 9641 | 31991 |
1991 | துறைமுகம் | 30932 | கே.சுப்பு | காங்கிரசு | 30042 | 890 |
1996 | சேப்பாக்கம் | 46097 | நெல்லைக் கண்ணன் | காங்கிரசு | 10313 | 35784 |
2001 | சேப்பாக்கம் | 29836 | தாமோதரன் | காங்கிரசு | 25002 | 4834 |
2006 | சேப்பாக்கம் | 34188 | தாவூத் மியாகான் | சுயேச்சை | 25662 | 8526 |
2011 | திருவாரூர் | 109014 | எம்.இராசேந்திரன் | அ.தி.மு.க. | 58765 | 50249 |
2016 | திருவாரூர் | 121473 | பன்னீர்செல்வம் | அ.தி.மு.க. | 53107 | 68366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் |
Remove ads
சட்டமேலவை உறுப்பினர்
இலங்கைத் தமிழருக்காகக் கருணாநிதியும் அன்பழகனும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அடுத்துவந்த சட்டமேலவைத் தேர்தலில் கருணாநிதி சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
1962 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் அமைந்த மூன்றாவது சட்டப்பேரவையில், இரா. நெடுஞ்செழியன் எதிர்க்கட்சித் தலைவராகவும், மு. கருணாநிதி எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும் இருந்தார்.
அமைச்சர்
1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்த பின்னர் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
முதலமைச்சர்
- 1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
- 1971-1976—இரண்டாவது முறையாக
- 1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
- 1996-2001—நான்காம் முறை ஆட்சி
- 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி
என ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார்.
அரசு நிருவாகம்
மாநிலத்தின் வளர்ச்சிக்காகக் கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். தகவல் தொழில்நுட்பத் துறையை மாநிலத்தில் வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய உழுவை உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது.
விமர்சனங்கள்
1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.[சான்று தேவை] 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது.[13][14] 1973 ல் மிசா 1975 சூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.[சான்று தேவை] காங்கிரசை கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது.[சான்று தேவை]
Remove ads
எதிர்க்கட்சித் தலைவர்
தமிழகச் சட்டப்பேரவையில் 1977 முதல் 1983 வரை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
குடும்பம்
தனிப்பட்ட வாழ்க்கை
கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் தாவர உணவு முறையை பின்பற்றுபவரானார். இவர் அரசியல் பணிகளையும் எழுத்துப் பணிகளையும் ஓய்வின்றிச் செய்ய முடிந்ததற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.
படைப்புகள்
இவர் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.[16] மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000-இக்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார்.[17] கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை, தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.[18]
திரைப்படத் துறைப் பங்களிப்புகள்
20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி என்னும் படத்தால் மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார். 60 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
நாடகங்கள்
- அனார்கலி, 1957
- உதயசூரியன், 1959
- உன்னைத்தான் தம்பி
- இளைஞன் குரல், 1952 (31.8.52 ஆம் நாள் தேனி வழக்குநிதிக்காக மதுரையில் அரங்கேற்றப்பட்டது)[19]
- ஒரே முத்தம்
- காகிதப்பூ, 1966
- சாக்ரடீஸ் 1957
- சாம்ராட் அசோகன்
- சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம்
- சேரன் செங்குட்டுவன், 1978
- திருவாளர் தேசியம்பிள்ளை
- தூக்கு மேடை,1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி.
- நச்சுக் கோப்பை (பழனியப்பன் அல்லது சாந்தா அல்லது சமூகத்தின் கொடுமை என்னும் நாடகம் பின்னாளில் நச்சுக்கோப்பை என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்டது)
- நான்மணிமாலை (குறு நாடகங்கள்)
- நானே அறிவாளி, 1971
- பரதயாணம் 1978
- பரப்பிரம்மம். 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. 26-2-1953ஆம் நாள் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் புயல்நிவாரண நிதிக்காக நெடுஞ்செழியன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.[20]
- பலிபீடம் நோக்கி, 1948, எரிமலைப் பதிப்பகம், துறையூர்.
- பிரேத விசாரணை, 13-4-1947ஆம் நாள் திருவாரூரில் திராவிடர் கழக நிதியளிப்பு விழாவில் அரங்கேற்றப்பட்டது.[21]
- புனித இராஜ்யம் 1979
- மணிமகுடம், 1955, முத்துவேல் பதிப்பகம், திருச்சி. (4-9-1955 சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன் குழுவினரால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அரங்கேற்றம்) [22]
- மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
- மந்திரிகுமாரி
- வாழமுடியாதவர்கள் [23] (27-7-1951 இரவு 10;30 மணிக்கு, காஞ்சி அசோகா அரங்கில் அரங்கேற்றம்)
வரலாற்றுப் புனைவுகள்
- ரோமாபுரி பாண்டியன் 1974
- தென்பாண்டிச் சிங்கம் 1983
- பாயும்புலி பண்டாரக வன்னியன் 1991
- பொன்னர் சங்கர் 1988
புதினங்கள்
- இரத்தக்கண்ணீர், திராவிடப்பண்ணை, திருச்சி [24]
- ஒரே ரத்தம், 1980
- சுருளிமலை
- புதையல், 1975
- வான்கோழி, 1978
- வெள்ளிக்கிழமை, 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, சென்னை.
குறும்புதினங்கள்
- அரும்பு 1978
- சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்), 1987
- நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953
- பெரிய இடத்துப்பெண் (1948 செப்)
சிறுகதைத் தொகுதிகள்
- ஒருமரம் பூத்தது, சிறுகதைகள், 1979
- கண்ணடக்கம், 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (கண்ணடக்கம், நெருப்பு, வேணியின் காதலன், நடுத்தெரு நாராயணி, அமிர்தமதி ஆகிய கதைகள் அடங்கியது)
- கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977, 1982, 1991
- கிழவன் கனவு; 1945; வெளியிட்டவர்: சு.இராமநாதன், விஜயபுரம், திருவாரூர்.[25]
- சங்கிலிச்சாமியார், 1945
- தப்பிவிட்டார்கள் 1952
- தாய்மை 1956
- தேனலைகள் 1958
- நளாயினி (1956) திராவிடப்பண்ணை, திருச்சி [26]
- பழக்கூடை 1979 (தொடர்கதை, கடைசிக்கட்டம், புகழேந்தி, திடுக்கிடும் கதை, அபாக்யசிந்தாமணி ஆகிய கதைகள அடங்கியது)
- பதினாறு கதையினிலே
- பிள்ளையோ பிள்ளை (1948 சூலை; விந்தியம் வெளியீடு, திருவாரூர்)[27]
- மு.க.வின் சிறுகதைகள், முத்துவேல் பதிப்பகம், கோபாலபுரம், சென்னை -6.
- முடியாத தொடர்கதை 1982
- வாழமுடியாதவர்கள், மு.பதிப்பு 1950, திராவிடன் பதிப்பகம், வேலூர் (மதிப்புரை - இரா. நெடுஞ்செழியன்; 1. வாழமுடியாதவர்கள், 2 பிள்ளையோ பிள்ளை, 3. ஏழை, 4. கண்டதும் காதல் ஒழிக, 5. கங்கையின் காதல், 6.ஒரிஜினலில் உள்ளபடி...)
சிறுகதைகளின் பட்டியல்
- அணில்குஞ்சு
- அபாக்கிய சிந்தாமணி
- அமிர்தமதி
- அய்யோ ராஜா!
- ஆட்டக்காவடி
- ஆதரிக்கிறார்
- ஆலமரத்துப்புறாக்கள்
- இரகசியம்
- எழுத்தாளர் ஏகலைவன்
- ஏழை
- ஒரிஜினலில் உள்ளபடி
- கங்கையின் காதல்
- கடைசிக்கட்டம்
- கண்டதும்காதல் ஒழிக!
- கண்ணடக்கம்
- காசாலேசா
- காதல்கடிதம்
- காந்திதேசம்
- கிழவன் கனவு : கற்பனையருவி
- குப்பைத்தொட்டி
- சங்கிலிச்சாமி
- சந்தனக்கிண்ணம்
- சபலம்
- சித்தார்த்தன் சிலை
- சீமான் வீட்டுச் சீக்காளி
- சுமந்தவள்
- செத்தவள்கதை
- தப்பவில்லை
- தப்பிவிட்டார்கள்
- தாய்மை
- திடுக்கிடும் கதை
- தொடர்கதை
- தொத்துக்கிளி
- நளாயினி
- நந்தியூர் நரியப்பன்
- நரியூர் நந்தியப்பன்
- நுனிக்கரும்பு
- நெருப்பு
- பனங்குலை
- பாலைவனரோஜா
- பிரேதவிசாரணை
- பிள்ளையோ பிள்ளை
- புகழேந்தி
- புரட்சிப்படம்
- பெற்ற பிள்ளையை விற்ற தாய்
- மயிலிறகு
- மலரவில்லை
- முத்தாரம்
- முந்நூறு ரூபாய்
- வாழமுடியாதவர்கள்
- விஷம் இனிது
- வேணியின் காதலன்
கவிதைத் தொகுதிகள்
- அண்ணா கவியரங்கம் 1968
- கலைஞரின் கவிதைகள் 1977
- கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
- கவியரங்கில் கலைஞர் 1971
- கவிதையல்ல 1945
- கவிதைமழை - மூன்று தொகுதிகள் 2004
- காலப்பேழையும் கவிதைச்சாவியும்
- முத்தாரம், இ.பதி 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (மு.க.சிறையிலிருந்தபொழுது 1.பிறையே, 2.ஆடிக்காற்று, 3.பச்சைக்கிளி, 4.புகழ், 5.கருப்புப்பெண், 6.அகப்பை சித்தர், 7.மலையே வாழி, 8.நாடகமேடை, 9.அவள், 10.தளிர், 11.கடலே, 12.விண்மீன், 13.ஆறு, 14.வாழிய வைகறை, 15.தமிழே என்னும் தலைப்பில் எழுதிய கவிவசனங்களின் தொகுப்பு)
- வாழ்வெனும் பாதையில் - கவியரங்கக் கவிதைகள்
உரைநூல்கள்
- திருக்குறள் உரை 1996
- சங்கத் தமிழ் 1987
- தொல்காப்பியப் பூங்கா, 2003
இலக்கிய மறுபடைப்புகள்
- குறளோவியம் 1968, 1985
- சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம் 1967
- தாய்
- பூம்புகார் (முரசொலி மலர்களில் வெளிவந்த தொடர்)
தன்வரலாறு
இவர் தனது வாழ்க்கை வரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4,165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்தது.[16]
பேட்டிகள்
- கையில் அள்ளிய கடல் 1998
சொற்பொழிவுகள்
- தலைமையுரை, பாரிநிலையம், சென்னை.[28]
- போர்முரசு
- மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
- பெரியார் பிறவாதிருந்தால்
கட்டுரைகள்
- அகிம்சாமூர்த்திகள், 1953, பாரிநிலையம், சென்னை.
- அல்லிதர்பார், 1953, பாரி நிலையம், சென்னை.
- ஆறுமாதக் கடுங்காவல், திராவிடப்பண்ணை, திருச்சி.
- இந்தியாவில் ஒரு தீவு 1978
- இளைய சமுதாயம் எழுகவே
- இருளும் ஒளியும்
- இலங்கைத் தமிழா, இது கேள்! 1981
- இனமுழக்கம்
- உணர்ச்சிமாலை 1951
- உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
- உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
- கருணாநிதியின் வர்ணனைகள், 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [29]
- களத்தில் கருணாநிதி 1952
- சரித்திரத் திருப்பம்
- சுழல்விளக்கு, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [29]
- மயிலிறகு 1993
- மலரும் நினைவுகள் 1996
- முத்துக்குவியல்
- பூந்தோட்டம், திராவிடப்பண்ணை, திருச்சி.
- பெருமூச்சு 1952
- பேசுங்கலை வளர்ப்போம் 1981
- பொன்னாரம் (கே. ஆர். நாராயணன் வெளியீடு)
- தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
- திராவிடசம்பத்து 1951
- துடிக்கும் இளமை
- நாடும் நாடகமும், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.
- யாரால்? யாரால்? யாரால்? 1981
- விடுதலைக்கிளர்ச்சி, 1952, திராவிடப்பண்ணை, திருச்சி.[30]
- பேசும்கலை வளர்ப்போம்
சிறுகுறிப்புகள்
- சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் ( முதல் பதிப்பு) 1978
- வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
- கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
- கலைஞரின் நவமணிகள் 1984
- சிந்தனை ஆழி 1953
- கருணாநிதியின் கருத்துரைகள் (முதல் தொகுப்பு) 1967
- கலைஞரின் கருத்துரைகள் 1971
- கலைஞரின் குட்டிக்கதைகள்
- கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
- கலைஞரின் சொல்நயம் 1984
- கலைஞரின் சின்ன சின்ன மலர்கள், முதல் பதிப்பு 1994
- கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத்துளிகள்
- கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
- கலைஞரின் உவமை நயங்கள் 1972
- கலைஞரின் முத்துக்குவியல்
- கலைஞரின் நவமணிகள்
கதை, வசனம்
- பராசக்தி மலர், 1953
- மனோகரா, மூனா கானா பதிப்பகம், சென்னை
- நாம், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.
- திரும்பிப்பார், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.
பயணக்கட்டுரைகள்
- இனியவை இருபது
கடிதங்கள்
- கலைஞர் கடிதம் தொகுதி -1 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -2 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -3 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -4 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -5 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -6 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -7 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -8 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -9 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -10 1986
- கலைஞர் கடிதம் தொகுதி -11 1996
- கலைஞர் கடிதம் தொகுதி -12 1996
சட்டமன்ற உரைகள்
1957 முதல் 2018-ஆம் ஆண்டு வரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.
பெற்ற விருதுகளும் சிறப்புகளும்
- உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது 2009-ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.[31]
- கருணாநிதி 1970-ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார்.
- 1987-ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
- 2010-ஆம் ஆண்டு, ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் அமைத்தார்.
- கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி![32]
இறப்பு
2016-ஆம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலைப் பரிசோதித்து வந்தார். அதன் பிறகு கருணாநிதி உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாகக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகத் தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்பிறகு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு கருணாநிதியை வீட்டிலேயே கண்காணித்து வந்தனர். பின்பு கருணாநிதியின் உடலில் நலிவு அதிகமானதை அடுத்து, சூலை 27, 2018 அன்று நள்ளிரவில் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சூலை 29, 2018 அன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகக் கூறப்பட்டது. அதன் பின்பு ஆகத்து 06, 2018 அன்று இவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் ஆகத்து 07, 2018 அன்று சிகிச்சை பலனின்றிச் சென்னையில் காலமானார்.[33]
படைப்புகள் நாட்டுடைமையாக்கம்
மு. கருணாநிதியின் அனைத்து நூல்களும் உரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படுவதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 22, ஆகத்து, 2024 அன்று அறிவித்தார்.[34][35]
இதனையும் காண்க
குறிப்புகள்
- இரா. நெடுஞ்செழியன் (பதில்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads