மு. க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia

மு. க. ஸ்டாலின்
Remove ads

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மகனும் ஆவார்.

விரைவான உண்மைகள் மு.க.ஸ்டாலின், 8-ஆவது தமிழக முதலமைச்சர் ...

ஸ்டாலின் 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[1] 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராக பொறுப்பில் இருந்தார். தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, 28 ஆகத்து, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ளார்.[2][3]

இந்தியன் எக்சுபிரசு நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் வெளியிட்ட இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் மு. க. ஸ்டாலின் 30-ஆவதாக இடம் பெற்றார்.[4]

Remove ads

ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பமும்

1953-ஆம் ஆண்டு மு. கருணாநிதி, தயாளு அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகச் சென்னையில் பிறந்தார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைவதற்கு 4 நாட்கள் முன்பு பிறந்ததால், அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயர் இடப்பட்டது.[5][6]

மு. க. ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.[7] விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார். 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் பட்டம் பெற்றார். ஆகத்து 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மு. க. ஸ்டாலினுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[8][9][10][11]

ஸ்டாலின் ஆகத்து 25, 1975-இல் துர்கா (எ) சாந்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். உதயநிதி தமிழ்த் திரைப்பட இயக்குநர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இவரது மகள் செந்தாமரை தொழில்முனைவோராகவும், கல்வியாளராகவும் இருப்பதோடு சென்னை சன்சைன் பள்ளிகளின் இயக்குநராகவும் உள்ளார். செந்தாமரை தொழிலதிபர் மற்றும் அரசியல் வியூகவாதி சபரீசன் வேதமூர்த்தியை மணந்தார்.

மு. க. ஸ்டாலின் தன்னை இறை மறுப்பாளர் என்றும், ஆனால் எந்த மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவர் அல்ல என்றும் அறிவித்துள்ளார்.

Remove ads

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை

14 வயதில், 1967-இல் தனது தாய்மாமன் முரசொலி மாறனுக்காகத் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்தார். 1973-ஆம் ஆண்டு மு. க. ஸ்டாலின் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]

1976-ஆம் ஆண்டு அவசர நிலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது, இவர் தனது தீவிர அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சிறையில் இருந்தபோது ஸ்டாலின் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

மு. க. ஸ்டாலின் திமுக இளைஞர் அணியை உருவாக்கினார். 1982-ஆம் ஆண்டு தொடங்கித் திமுகவின் இளைஞரணி செயலாளராக மு. க. ஸ்டாலின் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகித்தார்.[சான்று தேவை]

Remove ads

இளைஞரணிப் பட்டம்

மு. க. ஸ்டாலின் 1968-ஆம் ஆண்டு கோபாலபுரத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து முடிதிருத்தும் கடையில் திமுக இளைஞரணியைத் தொடங்கினார். 1983-ஆம் ஆண்டில், இவர் கோபாலபுரம் இளைஞரணியை மாநிலம் தழுவிய அணியாக மாற்றி நாற்பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் இளைஞரணியின் செயலாளராகப் பதவி வகித்தார். இளைஞரணியின் ஆரம்ப கட்டங்களில், மு. க. ஸ்டாலின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, தமிழக இளைஞர்களுக்கு அடிமட்ட அளவில் தீவிர அரசியலின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.[13]

சட்டமன்ற உறுப்பினர்

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் முதல் முறையாக, 1984 ஆம் ஆண்டு போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1989-இல் மீண்டும் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக அரசு 1991-ஆம் ஆண்டு தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடிப்பதற்குள் கலைக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு, அதே சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட அவர், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே. ஏ. கிருஷ்ணசாமியிடம் தோல்வியடைந்தார். மீண்டும் 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

2003-இல், திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். 2011-ஆம் ஆண்டு, மு. க. ஸ்டாலின் முதல் முறையாகத் தனது ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து சென்னை புறநகரில் உள்ள கொளத்தூர் தொகுதிக்கு மாறி போட்டியிட்டார்.[14]

சென்னை மாநகராட்சி மேயர்

1996-ஆம் ஆண்டு நடந்த சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைத் மு. க. ஸ்டாலின் பெற்றார்.[15] இவர் சிங்கார சென்னை (அழகான சென்னை) என்றழைக்கப்படும் திட்டத்தை உருவாக்கினார்.

மு. க. ஸ்டாலின் மேயர் பதவியில் இருந்தபோது துப்புரவுப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து சென்னை நகரத்தின் குப்பை அள்ளும் முறைகளை நவீனப்படுத்தினார். இவரது ஆட்சியில், 9 பெரிய மேம்பாலங்களும், 49 குறும்பாலங்களும் கட்டப்பட்டன. இதுதவிர 18 முக்கியச் சாலை சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்பட்டன. சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்டது. அவரது பதவிக் காலத்தில், நெரிசல் மிகுந்த 10 சாலைகளில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேம்பாலங்கள் கட்ட 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டபோது 30% நிதி மீதம் இருந்தது. மு. க. ஸ்டாலின் 2001-ஆம் ஆண்டு 2-ஆவது முறையாக அவர் சென்னை மக்களால் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2002-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா கொண்டு வந்த ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்ற சட்டத் திருத்தத்தால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் மு. க. ஸ்டாலின். சென்னை உயர்நீதிமன்றம், சட்டமியற்றும் அமைப்புகள், தனிநபர்களின் "கணிசமான உரிமைகளை" பின்னோக்கிப் பாதிக்கும் சட்டங்களை உருவாக்குவதைத் "தடுக்கவில்லை" என்று கூறிச் சட்டத்தை இரத்து செய்தது. இருப்பினும், சென்னை (இப்போது சென்னை) சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம்- 1919-இன்கீழ், மு.க.ஸ்டாலினைப் போலன்றி, முந்தைய மேயர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை மேயராக இருக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. எனினும் மு. க. ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.[16]

அமைச்சர்

2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மு. க. ஸ்டாலின் , தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1,75,493 மகளிர் சுய உதவிக் குழுக்களை நிறுவி மாநிலம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைப் தொடங்குவதில் பங்காற்றினார்.[3][17] ஒகேனக்கல் மற்றும் இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் போன்ற குடிநீர் திட்டங்களையும் அவர் தொடங்கினார். 2008-இல், அவர் திமுகவின் பொருளாளராகப் பொறுப்பு வகித்தார்.

துணை முதலமைச்சர்

தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி, 2009-இல் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அது முதல் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினார். தனது உடல்நிலை காரணமாக மகனான ஸ்டாலினுக்குச் சில துறைகள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்தார். இவர் அமைச்சரவையில் உள்ளூர் நிர்வாக அமைச்சராகப் பதவி வகித்தார். இதன் விளைவாகத் தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். இவர் அந்தப் பதவியில் 29 மே 2009 முதல் 15 மே 2011 வரை பணியாற்றினார்.[18]

எதிர்க்கட்சித் தலைவர்

2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ​​ஸ்டாலின் நமக்கு நாமே என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்குச் சென்றார். அந்தத் தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வென்று, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[19] 2017-ஆம் ஆண்டில், ஸ்டாலின் மற்றொருமுறை நமக்கு நாமே சுற்றுப்பயணத்திற்குச் சென்றார். பின்னர் 2018-ஆம் ஆண்டில், அவரின் தந்தை கருணாநிதி மறைவுக்குப் பின், ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்றார்.

2019 பொதுத் தேர்தல் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

மு. க. ஸ்டாலின் தேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, மாநிலத்தில் 2019 பொதுத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை தாங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களையும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 21-இல் 12 இடங்களையும் 52% வாக்குகளைப் பெற்று வென்றது. திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

Remove ads

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

மு. க. ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான தேர்தல் பரப்புரையை வழிநடத்தினார். சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் 159 இடங்களைத் திமுக கூட்டணி வென்றது. திமுக 132 இடங்களில் வெற்றி பெற்றது. 2021 மே 7 -ஆம் தேதி மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் பதவியேற்ற மு. க. ஸ்டாலின், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். தமிழக மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் நிலை, ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகங்களின் நிலையைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்றைத் தொடங்கினார்.

தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை முன்னேற்ற எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், ஜீன் டிரேஸ், அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் நிதிச் செயலாளர் எஸ். நாராயண் உள்ளிட்ட முன்னணி பொருளாதார நிபுணர்களைக் கொண்ட புதிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2021-இல், ‘இந்தியா டுடே’ இதழ் நடத்திய "மூட் ஆஃப் தி நேஷன்" கணக்கெடுப்பில், 42% ஆதரவுடன் இந்தியாவின் அனைத்து முதல்வர்களிலும் மு. க. ஸ்டாலின் முதலிடம் பிடித்தார்.

2021 செப்டம்பரில், தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி தினமாகக் கொண்டாடப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்தார். மத்திய அரசால் வெளியிடப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம், சென்னை-சேலம் விரைவு சாலை திட்டம், நியூட்ரினோ ஆய்வகம் மற்றும் மூன்று விவசாய திருத்தச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராடிய பத்திரிகையாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு தொடர்ந்த 5570 வழக்குகளை ஸ்டாலின் அரசு செப்டம்பர் 2021-இல் திரும்பப் பெற்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 2022-ஆம் ஆண்டு மே மாதம், விடுதலை செய்யப்பட்டதைப் பாராட்டி, முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்து, தனது மகிழ்ச்சிகளைத் தெரிவித்தார்.[20][21][22][23][24]

Remove ads

போட்டியிட்ட தேர்தல்கள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், தொகுதி ...
வெற்றி தோல்வி
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads