மெசியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெசியா (Messiah) என்னும் பெயர் ஒரு மக்கள் குழுவினருக்கு விடுதலை அளிப்பவர், மீட்பு வழங்குபவர் என்னும் பொருள் தருகின்ற சொல் ஆகும். இது குறிப்பாக, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய ஆபிரகாமிய சமயங்கள் சார்ந்த கருத்துருவகம் ஆகும்.

எபிரேய விவிலியத்தில்
பழைய ஏற்பாடு என்று கிறித்தவர்களால் அழைக்கப்படுகின்ற நூல் தொகுதியான எபிரேய விவிலியத்தில் "மெசியா" அல்லது "மஷியா" (mashiach) என்று வரும் சொல் எண்ணெயால் திருப்பொழிவு (அபிசேகம்) செய்யப்பெறுகின்ற அரசன், பெரிய குரு போன்றோரைக் குறிக்கும் (காண்க: விடுதலைப் பயணம் 30:22-25).
மெசியா என்னும் கருத்துருவகம் யூத சமயத்துக்கு மட்டுமே உரியதன்று. எபிரேய விவிலியமே, பெர்சிய மன்னனான சைரசு என்பவரை "மெசியா" என்று அழைக்கிறது.[1] ஏனென்றால் யூத சமயத்தைச் சாராதவராக இருந்தாலும் சைரசு மன்னன் யூதர்களின் கோவிலை மறுபடியும் கட்டி எழுப்ப ஆணையிட்டு, இசுரயேல் மக்களுக்கு ஆதரவு காட்டினார்.
யூதர்களின் மெசியா என்பவர் தாவீது அரசனின் வழித்தோன்றலாக வருவார் என்றும், கடவுளிடமிருந்து திருப்பொழிவு பெறுவார் என்றும், இசுரயேலின் பன்னிரு குலங்களையும் அரசாள்வார் என்றும், அமைதி நிலவுகின்ற ஒரு புதிய உலகைத் தோற்றுவிப்பார் என்றும் யூதர்கள் நம்பினர்.
Remove ads
மெசியாவும் கிறிஸ்துவும்
மெசியா என்னும் எபிரேயச் சொல் (Mašíaḥ) கிரேக்க மொழியில், செப்துவசிந்தா விவிலிய மொழிபெயர்ப்பில் "கிறிஸ்தோஸ்" (Khristós = Χριστός) என்று மாறியது. அதற்கும் "திருப்பொழிவு பெற்றவர்" என்பதே பொருள்.[2]
"கிறிஸ்தோஸ்" என்னும் பெயரே இயேசு கிறிஸ்து என்னும் பெயரில் நாசரேத்து இயேசுவுக்குச் சிறப்புப் பெயராக அமைந்தது. அப்பெயரிலிருந்தே "கிறித்தவம்", "கிறித்தவர்" போன்ற சொற்கள் தோன்றின.
பழைய ஏற்பாட்டில் உள்ள இறைவாக்குகளும் முன்னறிவிப்புகளும் இயேசு கிறிஸ்துவையே மெசியாவாகக் குறிக்கின்றன என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள்.
Remove ads
இசுலாமிய மரபு
இசுலாமிய மரபுப்படி, இயேசு மரியாவின் மகனாகப் பிறந்தவர்; இசுரயேலருக்கு இறைவாக்கினராகவும் மெசியாகவாகவும் அனுப்பப்பட்டவர். அவர் இறுதி நாள்களில் மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்புவார்; "வழிகாட்டப்பட்டவர்" (மாதி [மாக்தி] Mahdi) என்பவரோடு இணைந்துகொண்டு "போலி மெசியா"வை எதிர்த்து முறியடிப்பார்.[3]
மெசியா என்னும் சொல்லின் பொருள்
அரமேய மொழியில் משיחא "meshiha" எனவும், எபிரேய மொழியில் Māšîăḥ எனவும் உள்ள சொல் கிரேக்க மொழியில் Μεσσίας அதிலிருந்து இலத்தீனிலும் "Messias" என வடிவம் பெற்றது. இச்சொல்லின் பொருள் "(கடவுளால்) எண்ணெய் பூசப்பெற்றவர்", "திருப்பொழிவு பெற்றவர்" "அபிசேகம் பெற்றவர்" என்பது ஆகும்.
செப்துவசிந்தா என்னும் விவிலிய கிரேக்க மொழிபெயர்ப்பு எபிரேய விவிலியத்தில் 39 முறை வருகின்ற மெசியா என்னும் சொல்லை (Mašíaḥ) "கிறிஸ்தோஸ்" Χριστός (Khristós) என்று மொழிபெயர்க்கிறது.[2] கிரேக்க புதிய ஏற்பாடு இரு முறை Μεσσίας, Messias என்று குறிக்கிறது (காண்க: யோவான் 1:41; 4:25).
"கிறிஸ்தோஸ்" என்னும் கிரேக்க சொல்லின் பொருளும் "எண்ணெய் பூசப்பெற்றவர்" என்பதே. அதிலிருந்தே "கிறிஸ்து" என்னும் சிறப்புப் பெயர் இயேசுவைக் குறிக்கும் பெயராக உருப்பெற்றது.
Remove ads
அரபி மொழியில்
மெசியா என்னும் சொல் அரபி மொழியில் Masīḥ என்று வரும். தற்கால அரபி மொழியில் மெசியா என்னும் பெயர் இயேசுவின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. அரபு கிறித்தவர்களும் முசுலிம்களும் Masīḥ என்னும் சொல்லால் இயேசுவைக் குறிப்பிடுகிறார்கள். "மெசியாவாகிய இயேசு" என்பதை அவர்கள் Yasūʿ al-Masih (يسوع المسيح ) என்று எழுதுகிறார்கள். Masīḥ என்னும் சொல்லின் நேரடிப் பொருள் "திருப்பொழிவு பெற்றவர்" என்பதாகும்.
Remove ads
யூத சமயத்தில் மெசியா
ஓர் ஆள்மீதோ பொருள்மீதோ எண்ணெய் தேய்த்து/வார்த்து முழுகுதல் "மொஷியா" என்னும் எபிரேயச் சொல்லில் அடங்கியிருக்கும் பொருள் ஆகும். இதையே அபிசேகம் செய்தல் என்றும் கூறுவர் (காண்க: 1 சாமுவேல் 10:1-2). எபிரேய விவிலியத்தில் எண்ணெய் வார்த்து திருப்பொழிவு செய்யும் செயல்பாடு பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. அச்செயல்பாட்டில் கீழ்வருவன அடங்கும்: அரசன் திருப்பொழிவு செய்யப்படுதல் (1 அரசர் 1:39), யூத குருக்கள் திருப்பொழிவு பெறுதல் (2 லேவியர் 4:3), இறைவாக்கினர் திருப்பொழிவு பெறுதல் (எசாயா 61:1); யூத கோவிலும் கோவில் கலன்களும் திருப்பொழிவு பெறுதல் (விடுதலைப் பயணம் 40:9-11), புளிப்பற்ற அப்பம் திருப்பொழிவு பெறல் (எண்ணிக்கை 6:15), யூதரல்லாத ஒரு மன்னன் திருப்பொழிவு பெறுதல்.
இறுதிக் காலம் பற்றிய யூத இறையியலில், மெசியா என்பவர் வருங்காலத்தில் தாவீதின் குலமரபிலிருந்து பிறப்பார் என்றும், அவர் திரு எண்ணெயால் பூசப்பட்டு அரசராகத் திருப்பொழிவு பெற்று, கடவுளின் அரசில் ஆட்சி செய்வார் என்றும், மெசியா காலத்தில் யூத மக்களை ஆள்வார் என்றும் உள்ளது. யூத சிந்தனையில், மெசியா என்பவர் கடவுளுக்கு நிகரானவரோ கடவுளின் மகனோ அல்ல. எதிர்காலத்தில் மெசியா வருவார் என்பது யூத சமயத்தின் ஓர் அடிப்படை நம்பிக்கை ஆகும்.
யூத சமயத்தின் ஒரு பிரிவான கபாலா (Kabbalah) போதனைப்படி, வரவிருக்கும் மெசியாவின் காலத்தில் அமைதியும் சுதந்திரமும் நிலவும். தாவீதின் மகனான மெசியாவுக்கு முன் யோசேப்பின் மகனான மெசியா வருவார். அவர் தம் உயிரையே பலியாகத் தந்து இசுரயேல் மக்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து, அவர்களை தாவீதின் மகனான மெசியாவின் வருகைக்குத் தயார் செய்வார்.[4]
Remove ads
கிறித்தவப் பார்வையில் மெசியா

மெசியா என்னும் எபிரேயச் சொல்லின் நேரடி கிரேக்க மொழிபெயர்ப்பு "கிறிஸ்தோஸ்" (khristos (χριστος)), அதன் ஆங்கில வடிவம் Christ. கிறித்தவர்கள் இயேசுவை "கிறிஸ்து/கிறிஸ்து" என்றும் மெசியா என்றும் அழைப்பார்கள். மெசியா பற்றி எபிரேய விவிலியத்தில் கூறப்பட்ட இறைவாக்குகள் இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறின என்றும், இயேசுவே விவிலியத்தில் முன்னறிவிக்கப்பட்ட மெசியா ஆவார் என்பதும் கிறித்தவர்களின் நம்பிக்கை. மெசியாவாக வந்த இயேசு தமது பணி, சாவு, உயிர்த்தெழுதல் வழியாக உலகத்தை மீட்டு அதன் மீட்பரும் இரட்சகரும் ஆனார் எனவும், அதே இயேசு மீண்டும் அரசராகவும் ஆண்டவராகவும் வருவார் எனவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.
மிகப்பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் இயேசுவைக் கடவுளின் மகனாகவும், மனுவுருவெடுத்த இறை வார்த்தையாகவும் ஏற்று வழிபடுகின்றன. இயேசுவை மெசியாவாகவும் ஏற்கின்றன. ஆனால் யூத சமயமும் இசுலாமும் இயேசுவைக் கடவுளின் மகனாக ஏற்பதில்லை.
Remove ads
இசுலாம் பார்வையில் மெசியா
திருக்குரான் போதனைப்படி, மரியாவின் மகனான இயேசு (அரபி: Isa ibn Maryam) மெசியாவாகவும் இறைவாக்கினராகவும் யூத மக்களுக்கு அனுப்பப்பட்டார் (குரான் 3:45). இயேசு விண்ணகத்தில் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் உலகிற்குத் திரும்பவும் வந்து போலி மெசியாவை முறியடிப்பார் என்றும் கூறப்படுகிறது.[3] போலி மெசியாவை முறியடித்தபின் இயேசு முசுலிம்களின் தலைவர் ஆவார். அவர் இசுலாமிய குழுமத்தை ("உம்மா") ஒன்று சேர்த்து, அல்லாவை வழிபடும் சமூகமாக ஒன்றிணைப்பார். அவ்வாறு நிகழும்போது, கிறித்தவர்களும் யூதர்களும் இயேசுவைக் குறித்து நம்புகின்றவை தவறு என்று தெரியவரும். இவ்வாறு திருக்குரானில் உள்ளது. இக்கருத்தைக் கிறித்தவர்களும் யூதர்களும் ஏற்பதில்லை.
இசுலாமிய போதனை தொடர்பான ஹதீஸ் இலக்கியத்தின்படி, மரியாவின் மகனான இயேசு மீண்டும் வருவார். அவ்வாறு வரும்போது தான் இயேசு உண்மையாகவே உயிர்நீப்பார். ஏனென்றால், சிலுவையில் இயேசு இறக்கவில்லை. அவர் இறந்ததாகப் பிறர்தான் நினைத்துக்கொண்டார்கள். மாறாக, இயேசுவை அல்லா தம்மிடம் எடுத்துக்கொண்டார்.
Remove ads
அகமதியா

19ஆம் நூற்றாண்டில் எழுந்த இசுலாமிய சீர்திருத்த இயக்கமாகிய அகமதியா கொள்கைப்படி, மெசியா என்பதும் "மாக்தி" என்பதும் ஒரே ஆள் தான்.[5]
மாக்தி என்பவர் "கடவுளால் வழிநடத்தப்படுபவர்" ஆவார். பிறருக்குத் துன்பம் இழைப்பதற்கு மாறாக, தானே துன்பத்தை ஏற்பதே மெசியாவின் பண்பு. இப்பண்பு இயேசுவிடமும் மிர்சா குலாம் அகமத்-இடமும் துலங்கியது.[6]
இறுதிக்காலத்தில் மெசியா வருவார் என்று கிறித்தவர்கள் நம்புவதும், மாக்தி இறுதிக்காலத்தில் வருவார் என்று முசுலிம்கள் நம்புவதும் ஒரே ஆள் குறித்தே என்பது அகமதியர் கருத்து.[7]
"இயேசுவைத் தவிர வேறு மாக்தி இல்லை" போன்ற பல ஹதீஸ்களை அகமதியர் சான்றாகக் காட்டுகின்றனர்.[8]
இறுதிக் காலத்தில் வரும் மெசியா அகமதியா இயக்கத்தை நிறுவிய மிர்சா குலாம் அகமது என்று அகமதியா இயக்கத்தினரின் நம்புகின்றனர்.
மேலும் காண்க
குறிப்புகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads