ர. பிரக்ஞானந்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரமேசுபாபு பிரக்ஞானந்தா (Rameshbabu "Pragg" Praggnanandhaa; பிறப்பு: 10 ஆகத்து 2005) இந்தியத் தமிழ் சதுரங்க கிராண்ட்மாசுட்டர் ஆவார்.சென்னையில் பிறந்த சதுரங்க வீரரான இவர் அபிமன்யூ மிசுரா, செர்கே கரியாக்கின், குகேஷ், சவாகிர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்ற ஐந்தாவது-வயதில் இளையவர் ஆவார்.[1][2] இவர் 2022 பெப்ரவரி 22 இல், தனது 16-வது அகவையில், நடப்பு உலக வாகையாளரான மாக்னசு கார்ல்சனை வென்ற வயதில் குறைந்த சதுரங்க வீரரானார்.[3] 2022 மே 20 இல், மீண்டும் கார்ல்சனை வென்றார்.[4][5] இவருக்கு 2022இல் இந்திய அரசின் அர்ச்சுனா விருது வழங்கப்பட்டது.[6]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
பிரக்ஞானந்தா சென்னையில் 2005 ஆகத்து 10 இல் பிறந்தார்.[7] இவர் பெண் கிராண்ட்மாசுட்டரும், பன்னாட்டு மாசுட்டருமான ஆர். வைசாலியின் தம்பி ஆவார். இவரது தந்தை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றுகிறார்.[8] பிரக்ஞானந்தா சென்னையில் உள்ள வேலம்மாள் முதன்மை வளாகத்தில் படிக்கிறார்.[9]
தொழில் வாழ்க்கை
2013-2017
பிரக்ஞானந்தா 2013-இல் உலக இளைய சதுரங்க போட்டியில் 8 வயது பிரிவில் வென்று பிடே மாசுட்டர் என்ற பட்டத்தைப் பெற்றார். 2015-இல் 10-வயதுப் பிரிவில் போட்டியிட்டு வென்றார்.[10]
2016 இல், தனது 10 வயது 10 மாதம் 19 நாட்களில், வரலாற்றில் மிக இளையவராக அனைத்துலக சதுரங்க மாசுட்டரானார். அங்கேரியின் பிரபல சதுரங்க வீராங்கனை யூடித் போல்காரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்து இச்சாதனையைப் புரிந்தார்.[11][12] 2017 நவம்பரில் உலக இளையோர் சதுரங்க வாகையாளர் போட்டியில் 8 புள்ளிகளுடன் நான்காவதாக வந்து தனது முதலாவது கிராண்ட்மாசுட்டர் நோர்ம் பட்டத்தைப் பெற்றார்.[13] தனது இரண்டாவது நோர்ம் பட்டத்தை 2018 ஏப்ரல் 17 இல் கிரேக்கத்தில் நடந்த போட்டித்தொடரில் வென்றார்.[14] 2018 சூன் 23 இல் தனது மூன்றாவதும் இறுதியுமான நோர்ம் பட்டத்தை இத்தாலியில் நடந்த திறந்த போட்டியில், கிராண்ட்மாசுட்டர் மொரோனி லூக்காவை எட்டாவது சுற்றில் வென்று, தனது 12 ஆண்டு, 10 மாதம், 13 நாட்கள் அகவையில் செர்கே கரியாக்கினுக்குப் பின் (கரியாக்கின் 12 ஆண்டுகள் 7 மாதங்களில் பெற்றார்), கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்ற இரண்டாவது இளையவர் என்ற பெருமையைப் பெற்றார்.[15][16][17] அபிமன்யூ மிசுரா,[1] செர்கே கரியாக்கின், குகேசு, சவகீர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்ற ஐந்தாவது-இளைய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[2]
2018
2018 சனவரியில், வட கரொலைனாவில் இடம்பெற்ற சார்லட் சதுரங்க மையத்தின் 2018 குளிர்கால கிராண்ட்மாசுட்டர் நோர்ம் போட்டியில் பிரக்ஞானந்தா விளையாடி கிரான்ட்மாசுட்டர் ஆல்டர் பொரேரோ, டெனிசு செம்லோவ் ஆகியோருடன் 5.0/9 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.[18]
2019
2019 சூலையில், டென்மார்க்கில் எக்சுட்ராகொன் திறந்த சதுரங்கப் போட்டியை 8½/10 புள்ளிகளுடன் (+7–0=3) வென்றார்.[19] 2019 அக்டோபர் 12 இல், உலக இளையோர் வாகையாளர் போட்டிகளில் 18-அகவைக்குக் குறைவானோரின் பிரிவில் போட்டியிட்டு 9/11 என்ற கணக்கில் வென்றார்.[20] 2019 திசம்பரில், தனது 14 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்களில் 2,600 தரவரிசையைப் பெற்ற இரண்டாவது வயதில் குறைந்தவர் என்ற சாதனையைப் பெற்றார்.[21]
2021
2021 ஏப்ரலில், இளம் திறமையாளர்களுக்காக யூலியசு பேயர், Chess24.com ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்நிலைச் சுற்றுப் போட்டியில் போல்கர் சவாலை பிரக்ஞானந்தா வென்றார்.[22] இவர் 15.5/19 என்ற கணக்கில் வென்று அடுத்த சிறந்த போட்டியாளர்களை விட 1.5 புள்ளிகள் அதிகம் பெற்றார்.[23] இந்த வெற்றி அவருக்கு 2021 ஏப்ரல் 24 அன்று அடுத்த மெல்ட்வாட்டர் வாகையாளர் சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற உதவியது, அங்கு அவர் 7/15 (+4-5=6) புள்ளிகளுடன் 10வது இடத்தைப் பிடித்தார், இதில் தெய்மூர் ராசபோவ், சான்-கிர்சிஸ்டோஃப் டுடா, செர்கே கரியாக்கின் ஆகியோருக்கு எதிரான வெற்றிகளும், உலக வாகையாளர் மாக்னசு கார்ல்சனுடனான சமனில் முடிந்த போட்டியும் அடங்கும்.[24]
பிரக்ஞானந்தா 2021 சதுரங்க உலகக் கோப்பையில் 90வது தரவரிசையில் நுழைந்து, சுற்று 2 இல் கேப்ரியல் சர்கிசியனை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார், சுற்று 3 இல் மைக்கல் கிரசென்கோவைத் தோற்கடித்து 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.ஆனாலும், மாக்சிம் வாச்சியர்-லாகிரேவ் உடனான நான்காவது சுற்றில் வெளியேற்றப்பட்டார்.
2022
20 பிப்ரவரி 2022 அன்று, வாகையாளர் சுற்று 2022 இன் நிகழ்நிலை ஏர்திங்ஸ் மாசுட்டர்சு விரைவுப் போட்டியில், 15+10 நேரக் கட்டுப்பாட்டுடன், எந்த நேரத்திலும் உலக வாகையாளர் மேக்னசு கார்ல்சனுக்கு எதிரான ஆட்டத்தை வென்ற மூன்றாவது இந்திய வீரர் (ஆனந்த், அரிகிருட்டினனுக்குப் பிறகு) ஆனார்.[25][26]
மே 2022 இல் நடந்த செசபிள் மாசுட்டர்சு விரைவுச் சுற்றில், கார்ல்சனை மீண்டும் வென்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.[4][27][28] 2022 FTX கிரிப்டோ கோப்பை போட்டியில் கார்ல்சனை மூன்று தடவைகள் தோற்கடித்து, இறுதி நிலைகளில், கார்ல்சனுக்குப் பின்னர் இரண்டாவதாக வந்தார்.[29]
சதுரங்க உலகக் கோப்பை 2023
2023 சதுரங்க உலகக் கோப்பைக்கான போட்டியில், பிரக்ஞானந்தா தரவரிசையில் 34-ஆவதாக உள்ள டேவிட் நவாராவை மூன்றாவது சுற்றிலும், தரவரிசையில் 2-ஆவதாக உள்ள இகாரு நகமுராவை நான்காவது சுற்றிலும், பெரென்சு பெர்க்சை ஐந்தாவது சுற்றிலும், அர்ச்சூன் எரிகாய்சியை காலிறுதியிலும்,[30] தரவரிசையில் இரண்டாவதாக உள்ள பபியானோ கருவானாவை அரையிறுதியிலும் தோற்கடித்து,[31] தனது 18-ஆவது அகவையில் சதுரங்க உலகக் கோப்பை இறுதிச் சுற்றை அடைந்த இந்தியாவின் மிக இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் விசுவநாதன் ஆனந்த்துக்குப் பின்னர் இறுதிச் சுற்றை அடைந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இவ்வெற்றியின் மூலம் 2024 இல் உலக வாகையாளருக்கான வேட்பாளர் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதலாவதாக உள்ள மாக்னசு கார்ல்சனை எதிர்த்துப் போட்டியிட்டு,[32] விரைவு சமன்-முறியில் மாக்னசிடம் தோற்று இரண்டாவதாக வந்தார்.[33]
2024
2024 கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்ற 8 பேரில் பிரக்ஞானந்தா 5 வது இடத்தைப் பிடித்தார். அதில் 14 போட்டிகளில் 7 புள்ளிகளைப் பெற்றார். நோர்வே செஸ் 2024 போட்டியின் 3 வது சுற்றில், முதல் முறையாக மேக்னஸ் கார்ல்சனை கிளாசிக்கல் 'ஓவர் தி போர்டு' போட்டியில் தோற்கடித்தார்.[34] செப்டம்பர் 2024 இல் நடைபெற்ற 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைசாலியும் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர்.[35]
2025
பிரக்ஞானந்தா 2025 டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் மிகையாட்டப் போட்டியில் குகேசைத் தோற்கடித்து முதுநிலைப் பிரிவில் வெற்றி பெற்றார்.[36] பிராக் சதுரங்க விழாவில் நான்காவது இடத்தையும், கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் போலந்து ரேபிட் & பிளிட்ஸ் 2025 இல் 3 வது இடத்தையும் பிடித்தார்.
மே 2025 இல், உலகச் சதுரங்கச் சுற்றுப்பயண சூப்பர்பெட் செஸ் கிளாசிக் ருமேனியாவில் மாக்சிம் வச்சியர்-இலாக்ரேவ், அலிரெசா பிரூஜா ஆகியோருக்கு எதிரான மிகையாட்டப் போட்டியில் 5.5/9 புள்ளிகள் பெற்று வாகையாளரானார்.[37]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads