வாடைக்காற்று (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

வாடைக்காற்று (திரைப்படம்)
Remove ads

வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ் பெற்ற புதினம் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.

விரைவான உண்மைகள் வாடைக்காற்று, இயக்கம் ...

இத்திரைப்படத்தில் ஏ. இ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன், கலாநிதி கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்னம், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருந்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.

Remove ads

கதைச் சுருக்கம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

Thumb
வாடைக்காற்று திரைப்படத்தின் ஒரு காட்சி

வாடைக்காற்று காலத்தில் வெளியிடங்களிலிருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, நட்பு, கோபம் என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டது இக்கதை. முந்திய வருடத்தில் அங்கு வந்து வாடி போட்டுத் தொழில் செயத சம்மாட்டி செமியோன் (மனோகரன்) உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா (சந்திரகலா)வுடன் கொண்ட உறவு அவளது தந்தை (பிரான்சிஸ்), தமையன் (கந்தசாமி) ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது. உள்ளூர்க்காரரான பொன்னுக் கிழவர் (ஜேசுரட்னம்) பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை (ஆனந்தராணி) கண்போல வளர்த்து வருகிறார். முயல் வேட்டையாடிக் கொண்டு திரியும் அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலத்துக்கு (பாலச்சந்திரன்) அவளை திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு.

மீண்டும் அடுத்த பருவகாலம் வருகிறது. வெளியூர் மீனவர்கள் வருகிறார்கள். வெகு தூரத்திலிருந்து கூழக்கடாக்கள் என்ற் பறவைகளும் வருகின்றன. ஆனால் இந்தமுறை புதிதாக மரியதாஸ் (இந்திரகுமார்) என்ற சம்மாட்டி வந்து சேர்கிறான். அவனோடு பிரச்சினைகளும் வருகின்றன. செமியோன் சம்மாட்டி வழக்கமாக வாடி போடும் இடத்திலே தான் வாடி போட்டுத் தொழில் செய்கிறான். பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். போதாதற்கு நாகம்மாவையும் மனம் மாற்றி தன்னுடன் அழைத்துப் போய் விடுகிறான். இதனால் விருத்தாசலமும், பொன்னுக்கிழவரும் வேதனையினால் வெந்து போகிறார்கள். செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே வெற்றி கிடைக்கிறது. முறைப்பெண்ணான நாகம்மாவை எங்கிருந்தோ வந்தவனுக்கு பறிகொடுத்த விருத்தாசலத்தை, சுடலைச் சண்முகம் (ஜவாஹர்) கிண்டல் செய்கிறான்.

ஊர்த் திருவிழா நடக்கிறது. செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிறான். இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட்டார்கள். அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடுகிறான். நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்கிறான். விருத்தாசலமும், செமியோனும் தங்கள் இழப்பினால் வருந்த, மரியதாஸும், நாகம்மாவும் ஊரை விட்டுப் போகிறார்கள். மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது.

Remove ads

சில குறிப்புகள்

  • 'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.
  • இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.
  • வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற பாடலைப் பாடிய ஜோசப் ராசேந்திரன், இலங்கை வானொலியின் ஒரு அறிவிப்பாளர். இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
  • 'விருத்தாசலம்' (கே. எஸ். பாலச்சந்திரன்) பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவைத் தான் முதலில் அணுகினார்கள்.
  • பிரபலமான கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நடித்த இந்தத் திரைப்படத்தில் பின்னணிக் குரல் கொடுத்தவர்களும் சளைத்தவர்களல்ல. 'தணியாத தாகம்' வானொலி நாடகத்தில் 'யோக்ம்' பாத்திரத்தில் நடித்த விஜயாள் பீற்றர், 'அப்புக்குட்டி' ரி. ராஜகோபால், அருட்பிதா. கரவையூர்ச் செல்வம் ஆகியோரே அவர்கள்.
  • வீரகேசரிப் பிரசுரங்களான செங்கை ஆழியானின் வாடைக் காற்று, அ. பாலமனோகரனின் நிலக்கிளி எனும் இரண்டு நாவல்களிடையே ஒன்றைத் தெரிவுசெய்து தரும்படி, இயக்குநர் பாலு மகேந்திராவிடம், அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் சிவதாசன் கேட்டபொழுது, நிலக்கிளி நாவலில் வரும் 'பதஞ்சலி' பாத்திரத்தில் நடிக்க தென்னிந்தியாவிலும் நடிகைகள் இல்லை. 'வாடைக்காற்றை' இலங்கைச் சூழலுக்கேற்ப இலகுவாக படமாக்கலாம்" என்றார் பாலு மகேந்திரா.
Remove ads

வெளி இணப்புக்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads