விக்கல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்கல் (hiccup அல்லது hiccough) ஓர் மறிவினை (அனிச்சைச்செயல்) ஆகும். பிரிமென்றகடு ஒரு நிமிடத்திற்குள்ளாகப் பலமுறை சுருங்குவதால் இது உண்டாகிறது. மூளை நரம்பியல் மட்டத்தில் மறிவினை வில்லின் இயக்கத்தினால் விக்கல் தூண்டப்படுகிறது.[1] அத்தூண்டலால் பிரிமென்றகடு அழுந்தச் சுருங்குகிறது. அதைத் தொடர்ந்து 0.25 நொடிக்குப் பிறகு குரல்வளை நாண்கள் மூடுவதால் 'இக்கு' எனும் ஒலி ஏற்படுகிறது. தனியாக ஒருமுறை மட்டுமோ, தொடர்ந்து பலவாகவோ விக்கல் வரலாம். ஏற்ற இறக்கங்களும் இடைவெளியும் பொதுவாக ஒரே அளவில் இருக்கும். தொடர்ந்து விக்கல் ஏற்பட்டால் பொதுவாகச் சிறிது நேரம் கழிந்தபின் தானாகவே நின்றுவிடும். இருப்பினும் மக்கள் பொதுவாக சிலத்தீர்வுகளை நாடுவதுண்டு.[2] அரிதாகச் சிலவேளைகளில் மருத்துவ உதவி தேவைப்படலாம்.
Remove ads
காரணங்கள்
பெரும்பாலும் மைய மற்றும் புற நரம்பு மண்டல விளைவுகளால் உண்டாகிறது. கார்பானிக் அமிலம் (H2CO3) ஏற்றப்பட்ட பானங்களை அருந்துதல், சாராயம் குடித்தல், காரமான உணவு வகைகள் போன்றவற்றாலும் ஏற்படுகிறது. கட்டுங்கடங்காத விக்கல் பிரிமென்றகட்டின் நரம்பான ஃப்ரீனிக் நரம்பு உறுத்தப்படும் நிலைகளில் உண்டாகிறது.
நோய்க்கூற்று உடலியக்கக் காரணங்கள்
- மிகுதியாகக் காற்றை விழுங்குதல்[3]
- இரைப்பை அமில எதுக்களிப்பு[4]
- இயற்பிளவுப் பிதுக்கம்[5]
- அதிவிரைவாக உண்ணுதல்[6]
- அச்சம், மனக்கலக்கம், களிப்பு, பெருமகிழுணர்வு முதலியன மிகும்போது[சான்று தேவை]
- கார்பானிக் அமிலம் (H2CO3) ஏற்றப்பட்ட பானங்களை அருந்துதல், சாராயம் குடித்தல், காரமான உணவு வகைகளை உட்கொள்ளுதல்[7]
- போதை மருந்து உட்கொள்ளுதல்[8]
- சிரிப்பு[9]
விதானக் கருப்பகுதி உறுத்தல்
- சிறுநீரகக் கோளாறு[10]
மைய நரம்புமண்டலக் கோளாறுகள்
- பக்கவாதம்[10]
- தண்டுவட மரப்பு நோய்[11]
- மூளை உறையழற்சி[10]
நரம்புப் பாதிப்பு
- அறுவை சிகிச்சையின்போது பத்தாம் நரம்பு பாதிப்படைதல்[5]
வயிற்றிலிருந்து காற்றை வெளியேற்றுதல்
2012-ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வொன்றின்படி பாலூட்டிகளின் பிற மறிவினைகள் படிமாற்றத்தில் தோன்றியபடியே விக்கலும் தாய்ப்பால் குடிப்பதையொட்டியே தோன்றியிருக்குமெனக் கருதுகிறார்கள். குழந்தைகள் தாய்ப்பாலருந்துவதற்கும் மூச்சுவிடுவதற்கும் தேவையான தகவமைப்புக்களில் ஒன்றே விக்கல் என்கின்றனர்.[6] பாலூட்டிகளில் மட்டுமே விக்கல் ஏற்படுகிறது. அவற்றிலும் குழந்தைப் பருவத்தில் மிகுதியாகவும் வளர வளர விக்கல் ஏற்படுவது குறையவும் செய்கிறது. வயிற்றில் புகுந்துள்ள காற்று வெளியேறவும் விக்கல் உதவக்கூடும்.
இக்கருத்தின்படி வயிற்றில் இருக்கும் காற்றுக்குமிழி வயிறு, உணவுக்குழாய், பிரிமென்றகடு ஆகிய உறுப்புக்களிலுள்ள உணர்விகளைத் தூண்டுகிறது. இது விக்கலை ஏற்படுத்தி காற்றை வலுவுடன் வெளித்தள்ள உதவுகிறது.
படிவளர்ச்சி மரபு வழிக் கருதுகோள்
கனடாவில் உள்ள கல்காரி பல்கலைக்கழக மூச்சு ஆராய்ச்சிக் குழுவைச் (respiratory research group) சேர்ந்த கிறிஸ்டியன் ஸ்டிராஸ் (Christian Straus) மற்றும் அவரின் குழுவினர் விக்கல் குறித்து புதிய படிவளர்ச்சி மரபு வழிக் கருதுகோள் (phylogenetic theory) ஒன்றை முன்வைத்துள்ளனர்.[12] இதன்படி விக்கல் என்பது இருவாழ்விகளின் மூச்சு விடும் முறையின் எச்சம் ஆகும். தவளை போன்ற இருவாழ்விகள் விக்கலை ஒத்த முறையில் தான் நீரை விழுங்குகின்றன. இந்தக் கருதுகோளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகக் கீழ்கண்ட கண்டறிவுகள் உள்ளன.
1. மனிதக் கரு வளர்ச்சியின் போது விக்கலுக்கான நரம்புப் பாதைகள் நுரையீரல் சுவாசத்திற்கான நரம்புப் பாதைகள் உருவாதலுக்கு முன்னமே உருவாகி விடுகின்றன.
2. இருவாழ்களின் நீர் விழுங்கலும் விக்கலும் பாக்ளோஃபென் மருந்தால் தடை செய்யப்படுகின்றன.
3. குறைப்பிரசவக் குழந்தைகள் தங்களின் 2.5 விழுக்காட்டு நேரத்தை விக்கலெடுப்பதிலேயே செலவழிக்கின்றன. ஏனெனில் அவர்களின் நுரையீரலும் நரம்பு மண்டலமும் சரிவர வளர்ச்சியடையாததால் இருவாழ்விச் சுவாச முறையைப் பின்பற்றுகின்றன.
Remove ads
பண்பாடு
விக்கல் எனும் சொல் விக்கு எனும் வினைச்சொல்லிலிருந்து பிறப்பது. விக்கு என்பது இக்கு எனும் ஒலிக்குறிப்பிலிருந்து பிறந்தது.[13] ஆங்கிலத்திலும் விக்கலுக்கான சொல் hiccup அவ்வாறானதே. சிலாவிக்கு, பால்ட்டிக்கு, செருமானிய, அங்கேரிய, துருக்கிய, இந்திய பழங்கதைகளில் ஒருவரைப்பற்றி வேறெங்கோ பேசப்படும்போது விக்கல் ஏற்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். [14][15]
குறிப்பிடத்தக்க நபர்கள்
சார்லசு ஆசுபார்ன் எனும் அமெரிக்கருக்கு தொடர்ந்து 68 ஆண்டுகள் விக்கல் இருந்தது. 1922-ஆம் ஆண்டுமுதல் பிப்பிரவரி 1990 வரை ஏறத்தாழ 43 கோடிமுறை விக்கியிருப்பார் எனக்கணித்து கின்னசு புத்தகத்தில் குறித்துள்ளனர்.[16][17] 2007-இல் புளோரிடாவைச் சேர்ந்த பதின்ம வயதுப் பெண் செனிஃவர் மீ நிமிடத்துக்கு 50 முறை 5 வாரங்களுக்குத் தொடர்ந்து விக்கியிருக்கிறார்.[18][19] இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தோஃவர் சாண்டுசு 2007-இல் இருந்து 27 மாதங்கள் 1 கோடி முறை விக்கியிருக்கிறார். பின்னர் அவரது சிக்கல் மூளையிலிருந்த ஒரு கட்டி நரம்புகளை அழுத்துவதால் ஏற்பட்டது எனக் கண்டறிந்தனர். 2009-ஆம் ஆண்டு அறுவை மருத்துவத்துக்குப்பிறகு அவரது விக்கல் நின்றது.[20]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads