கருங்கொட்டு கதிர்க்குருவி
பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கருங்கொட்டுக் கதிர்க்குருவி (Zitting Cisticola, Cisticola juncidis) அல்லது விசிறிவால் கதிர்க்குருவி, தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தெற்காசியா தொடங்கி வட அவுஸ்திரேலியா வரை பரவலாகக் காணப்படும் ஒரு சிறிய பறவை. இது மேய்ச்சல் நிலங்களில் காணப்படும். சிவப்பு கலந்த பழுப்பு நிறப் பின்புறம், கழுத்துப் பகுதியில் குறைவான பொன்னிறம், வெள்ளையுடன் சேர்ந்த பழுப்பு என்பனவற்றால் இதனை எளிதில் அடையாளம் காண முடியும். இனப்பெருக்கக் காலத்தில், ஆண் வளைந்து நெளிந்து பறந்து, ஒருவித ஒலியெழுப்பும். அவ்வொலி கத்தரிக்கோலால் தொடர்ந்து வெட்டுவது போன்ற ஒலியை ஒத்ததாக இருக்கும்.
Remove ads
விவரம்
கருங்கொட்டுக் கதிர்க்குருவியின் மேற் பகுதி பழுப்பு நிறமும் கருமையான கோடுகளும் உடையது. கீழ்ப் பகுதி வெள்ளையும் அகன்ற வாலையும் உடையது. ஆண் தலையில் குறைந்த கோடுகளைக் கொண்டும், பெண்ணை விட அதிக அடையாளத்தைக் கொண்டும் காணப்படும். ஆனாலும், அவை பெரிய வித்தியாசமாக இருப்பதில்லை. இனப்பெருக்கமற்ற காலங்களில் பற்றைகளுக்குள் மறைவாக வாழும் இவற்றைக் காண்பது கடினம்.[2][3]
பாகுபாட்டியலும் முறையும்

பரந்த பரம்பலில், சில வகைப் பறவை எண்ணிக்கைகள் அவதானிக்கப்பட்டதில் 18 துணை இனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை ஒலி எழுப்புதல், இறகு, அளவு என்பவற்றால் வேறுபட்டுள்ளன. தென் பிரான்சு, கிரேக்கம், துருக்கி, சிசிலி, கோர்சிகா, எகிப்து, மேற்கு போர்த்துக்கல், இசுபெயின் ஆகிய இடங்களில் சிஸ்டிகோலா இனம் உள்ளது. இசுரேல், சிரியா, ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் நியுரோடிக்கஸ் இனம் உள்ளது. யுரொபிகியாலிஸ், பேரேனியஸ் என்பன வட, கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. காபோன், அங்கோலா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் டெரேஸ்ரிஸ் இனம் உள்ளது. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் உள்ள சலிமாலி, இந்தியச் சமவெளிகள், இலங்கையின் வறண்ட பகுதிகளில் காணப்படும் குருவிகள் இனப்பெருக்கமற்ற காலத்தில் நீண்ட வால் கொண்ட குறிஸ்டன்ஸ் போன்று காலத்திற்கு ஏற்ப மாறும் வால் அமைப்பு அற்றவை. மலயா, தென்கிழக்கு ஆசியாவிலும், தென் சீனாவில் வடக்கில் டின்னாபுலன்யஸ் இனமும், புரினிசெப்ஸ் கொரியாவிலும் சப்பானிலும் காணப்படுகின்றன. ஏனைய இனங்களாக நிக்ரோஸ்ரியாட்டஸ் (பிலிப்பீன்சு), கொண்ஸ்டன்ஸ் (சுலாவெசி), புஸ்சிகபில்லா (கிழக்கு யாவா), லீன்யோரி (வட ஆத்திரேலியா), நோர்மனி (வடமேற்கு குயின்ஸ்லாந்து), லாவேரி (வடகிழக்கு ஆத்திரேலியா) ஆகியன உள்ளன.[4]
Remove ads
பரம்பலும் உறைவிடமும்
இவை பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களிலும் நீர் நிலைகளை அண்மித்தும் காணப்படும். இவை நிரந்தரமாகத் தங்கி வாழ்பவை. ஆனால் சில கிழக்காசியப் பறவைகள் குளிர் காலத்தில் வெப்பத்திற்காகத் தென் பகுதிக்குச் செல்கின்றன. இமயமலைப் பகுதியில், இவை கிட்டத்தட்ட 1,900 m (6,200 அடி) உயரம் வரை கோடை காலத்தில் செல்கின்றன. குளிர்காலத்தில் 1,300 m (4,300 அடி) உயரத்திற்குக் கீழே செல்கின்றன. இவ்வினம் வட ஐரோப்பாவில் குறைவான நாடோடிப் பறவைகளாகவும், குறிப்பாக வேகமாகச் செல்பவையாகவுள்ளன. இதன் ஐரோப்பிய பரப்பெல்லை பொதுவாகப் பரந்தும், வட பறவைகள் கடும் குளிர்காலத்திற்கு ஏற்றவையாகவும் உள்ளன.[5]
பழக்கமுறையும் சூழலியலும்

கருங்கொட்டு கதிர்க்குருவி சிறிய பூச்சியுண்ணும் பறவையாகும். சில நேரங்களில் சிறு கூட்டமாக வாழும். மழைக்காலமே இவற்றின் இனப் பெருக்க காலமாகும். பல பகுதிகளில் உள்ள இப் பறவைகள் வருடத்திற்கு இரு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.[6] ஆண்கள் பல பெண்களோடு இனப்பெருக்கத்திற்காக இணையும். ஆனாலும் சில ஒன்றுடன் மட்டுமே சேரும்.[7] பற்றைகளின் ஆழத்தில் ஆரம்ப கூடு கட்டலை ஆண்களே செய்து, சிறந்த காட்சியுடன் பெண்ணை அழைக்கும். ஆணை ஏற்றுக் கொண்ட பெண் கூடு கட்டலை நிறைவு செய்யும். மெல்லிய நார், சிலந்தி வலை, புற்கள் மற்றும் பச்சை இலைகளினால் கூடு கட்டப்படும். கிண்ணம் போன்ற அமைப்புடைய கூடு புற்கள் அல்லது இலைகள் மூலம் மூடப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டு காணப்படும். அதனுள் 3 தொடக்கம் 6 வரையான முட்டைகளை இடும். பெண்கள் முட்டைகளை அடை காக்கின்றன. 10 நாட்களின் பிறகு குஞ்சுகள் பொரிக்கின்றன. பெண்கள் அடிக்கடி தன் துணையினை மாற்றிக் கொள்ளும். அத்துடன் அவை குறித்த பிரதேசத்தில் வசிப்பது மிகக் குறைவு. ஆனால், ஆண்கள் இடம்மாறுவது குறைவு.[8] சிலவேளைகளில், பெண்கள் முதலாவது வருடத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.[9][10]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads