மேற்குத் தொடர்ச்சி மலை
மேற்தொடர்ச்சிமலையின் வரலாறு From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.[1] இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.
Remove ads
பரவல்

பரப்பளவு:1, 60,000 சதுர கி. மீ. , நீளம்:1600 கி. மீ.
இம்மலைத்தொடர் மராட்டியம், குசராத்து மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கி.மீ.. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும். மேலும், இம்மலைத் தொடரிலுள்ள சில மலைகளின் சிகர உயரங்கள் வருமாறு, மன்னாமலை சிகரம் 2659 மீ., தொட்டபெட்டா சிகரம் 2640 மீ., மீசபுலி மலை சிகரம் 2637மீ, முகூர்த்தி சிகரம் 2554 மீ. ஆகும்.
Remove ads
புவியியல்

இந்த மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது. முற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்தது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்தது மற்றும் ஏறக்குறைய 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும். இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில் அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாக காரணமானது.
Remove ads
ஆறுகள்
தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகுகின்றன. இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா வில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில கோதாவரி, கிருட்டிணா, காவிரி மற்றும் தாமிரபரணி. கோவையில் சிறுவாணி "உலகின் இரண்டாம் சுவைமிகு நீர்" ,பவானி ,நொய்யல் என நதிகள் பிறக்கின்றன. இவை தவிர பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. புவியியல் ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அரபிக்கடலிற்கு அருகில் அமைந்துள்ளதால் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் சிறிய ஆறுகளேயாகும். அவற்றுள் சில முல்லை பெரியாறு, சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கபினி ஆறு, கல்லாவி ஆறு, பெண்ணாறு மற்றும் பெரியாறு ஆகும்.
இந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும் மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. மகராட்டினத்தில் உள்ள கோபாளி அணை, கோய்னா அணை, கேரளாவில் உள்ள பரம்பிகுளம் அணை, தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணைக்கட்டு போன்றவை குறிப்பிடத்தகுந்தவைகளாகும்.
உலகப் பாரம்பரியக் களம்
இம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.[1][2][3]
மாதவ் காட்கில் குழு
பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், புவியியல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும், மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010 மார்ச்சு 4 அன்று அமைத்தது. இந்தக்குழு தனதுஅறிக்கையை 2011 ஆகத்து 30 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை 2012 மே - 23ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துக் களையும், விமர்சனங்களையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. அரசால் பிராந்திய மொழிகளில் இவ்வறிக்கை 2014 வரை மொழிபெயர்க்கப்படவில்லை. 1700 பேர் மட்டுமே இவ்வறிக்கை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதிலும் 30.34 விழுக்காடு பேர் மட்டுமே அறிக்கைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாதவ் காட்கில் அறிக்கையை திறம்பட அமல்படுத்தும் வகையில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க டாக்டர் கத்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை 2012 ஆகத்து 17 அன்று மத்திய அரசு அமைத்தது.[4]
Remove ads
கத்தூரிரங்கன் குழு பரிந்துரை
மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு பற்றிய கத்தூரிரங்கன் அறிக்கையில் மலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், மணல் குவாரிகள், சுரங்க பணிகள் தடைசெய்யவேண்டும், 20,000 சதுர மீட்டர்களுக்கு மேல் கட்டுமானம் கூடாது, 50,000 ஹெக்டேருக்கு மேல் வீடுகள் கட்டக்கூடாது எனக்கூறிய அறிக்கையை மத்திய அரசு தடை செய்தது.[5] இந்தக்குழு தனது அறிக்கையை 2013, ஏப்ரல் 15 அன்று அரசிடம் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் 37 விழுக்காடு பகுதியை பாது காக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.[4]
தமிழ்நாடும் கத்தூரிரங்கன் குழு பரிந்துரைகளும்
மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை சூழ்ந்த 41 சதவீத பகுதியில் 37 சதவீத பகுதியை சுலபமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதி என கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ளது. மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் முதல் மண்டலத்தில் 4156 கிராமங்கள் வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய எட்டுமாவட்டங்களில் 135 கிராமங்கள் வருகின்றன.இந்தப் பகுதியில் புதிதாக பட்டா வழங்கக்கூடாது. புதிய விவசாய பகுதிகள் விஸ்தரிக்கக்கூடாது. புதிய குடியிருப்புகள் கட்டக் கூடாது. வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது, அதாவது, பள்ளி, மருத்துவ மனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போக்குவரத்து ஆகியவை கூடாது. வனநிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. வன உரிமைச் சட்டம் 2006ன் படி வன நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு குடும்பத்துக்கு 10 ஏக்கர் வரை வழங்க வேண்டும். ஆனால் கஸ்தூரிரங்கன் அறிக்கை அதற்கு தடைவிதிக்கிறது. தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடைவிதிக்கப் பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில், வனநிலங்களில் பயிர் செய்து வரும் மக்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். இந்த கட்டுப் பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து 10 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொருந்தும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.[4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads