எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிபி 1588ஆம் ஆண்டு எசுப்பானிய பேரரசு இங்கிலாந்தின் மீது கடல் வழியாகப் படையெடுத்தது (ஸ்பானிஷ் அர்மாடா, ஆங்கிலம்: Spanish Armada, எசுப்பானியம்: Grande y Felicísima Armada). ஸ்பெயின் அரசர் இரண்டாம் ஃபிலிப்பு, இங்கிலாந்தைக் கைப்பற்றி, அதன் அரசி முதலாம் எலிசபெத்தை அரசணையிலிருந்து இறக்க இந்த படையெடுப்பை மேற்கொண்டார். இங்கிலாந்து கடற்படையை ஆங்கிலக் கால்வாயில் முறியடித்து, பின்னர் தரைப்படைகளை இங்கிலாந்து மண்ணில் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் தலைமையிலான இங்கிலாந்து கடற்படை ஸ்பானிஷ் கடற்படையைத் தோற்கடித்து விரட்டியதால், ஃபிலிப்பின் திட்டம் தகர்க்கப்பட்டது.
Remove ads
பின்புலம்
இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர், ஆண் வாரிசு வேண்டி தான் மறுமணம் செய்து கொள்ள ஏதுவாக, ரோமன் கத்தோலிக்கச் திருச்சபையிலிருந்து வெளியேறினார். இங்கிலாந்திற்கென்று ஆங்கிலிக்க சபையை உருவாக்கினார். எனவே ரோமன் கத்தோலிக்க ஸ்பானிஷ் பேரரசிற்கும் இங்கிலாந்திற்கும் பகை மூண்டது. ஹென்றிக்குப் பின்னர் அவரது மகளும் இரண்டாம் ஃபிலிப்பின் மனைவியுமான முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியானார். கத்தோலிக்கரான அவர் தனது ப்ராடஸ்டன்ட் குடிமக்களை கொடுமை படுத்தியதால், மக்கள் அவர் மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அவரது மறைவுக்குப் பின் 1558 ஆம் ஆண்டு ப்ராடஸ்ட்ன்டான அவரது மாற்றாந்தாய் சகோதரி முதலாம் எலிசபத்தை அரசியாக்கினர். தன் மனைவிக்குப் பின் இங்கிலாந்தின் அரசர் தானே என்று எண்ணிய ஃபிலிப்பு இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கிலாந்து-ஸ்பெயின் இடையே பகை வளர ஆரம்பித்தது. கிபி 1585 ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையாகப் போர் மூண்டது.
Remove ads
படையெடுப்புத் திட்டங்கள்
இங்கிலாந்தைக் கைப்பற்ற பிலிப்பு போட்ட திட்டங்களின் படி பெரும் கப்பல் படையும், தரைப்படையும் திரட்டப்பட்டன. இத்திட்டங்களுக்கு போப்பாண்டவர் ஆறாம் சிக்ஸ்டசின் ஆதரவு இருந்தது. பெரும் கப்பல் படை கொண்டு, வலிமையான ஆங்கில கடல் படையை ஆங்கிலக் கால்வாயில் அழிக்க வேண்டும். பின்னர் எளிதாக தரைப்படையை இங்கிலாந்தில் தரையிறக்கி நாட்டைக் கைப்பற்ற வேண்டும் – இதுவே பிலிப்பின் திட்டமாகும். இதற்காக 22 காலியன் (galleon) வகைப் போர்க்கப்பல்களும், 108 ஆயுதமேந்திய வணிகக் கப்பல்களும் திரட்டப்பட்டன. 55,000 வீரர்கள் கொண்ட தரைப்படையும் தயாரானது.
Remove ads
கடல் போர்
16 ஜூலை 1588 இல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. மெதினா சிதோனியா பிரபுவின் தலைமையில் ஸ்பானிஷ் கடற்படை இங்கிலாந்து நோக்கி முன்னேற ஆரம்பித்தது. அவரை எதிர்க்க இங்கிலாந்து கடற்படை 34 போர்க் கப்பல்கள் மற்றும் 163 ஆயுதமேந்திய வணிகக் கப்பல்களுடன் காத்திருந்தது. கப்பல் எண்ணிக்கையில் இங்கிலாந்தின் கை ஓங்கியிருந்தாலும், ஸ்பானிஷ் கடற்படை அதிக பீரங்கிகளைக் கொண்டிருந்தது. ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் ஃபிரான்சிஸ் ட்ரேக் போன்ற திறமை வாய்ந்த கடல் தளபதிகள் இங்கிலாந்து கப்பல் படையை லாவகத்துடன் கையாண்டனர். 27 ஜூலை அன்று ஸ்பானிஷ் படை பிறை வடிவில் ப்ரான்சின் கலாய் (calais) கடற்கரையை அடைந்தது. நள்ளிரவில் டிரேக்கின் தீக்கப்பல்கள் ஸ்பானிஷ் கப்பல்களைத் தாக்கின. எண்ணையும், வெடிமருந்தும் நிரப்பி சிறு கப்பல்களை ஸ்பானிஷ் கப்பல்களின் மீது ட்ரேக் மோத விட்டார். இதனால் பல ஸ்பானிஷ் கப்பல்கள் தீப்பிடித்து மூழ்கின; அப்படை கட்டுப்பாட்டை இழந்து சிதறியது. பிறை விடிவ வியூகம் சிதறி நாற்புறமும் பிரிந்த ஸ்பானிஷ் படை, அருகிலிருந்த கிரேவ்லைன்ஸ் துறைமுகத்தில் ஒன்று சேர முயற்சித்தது. ஆனால் இதற்குள், அப்படையின் பலவீனங்களை அறிந்து கொண்ட ஆங்கில மாலுமிகள் இடை விடாது தாக்கினர். ஒற்றுமை அறவே இழந்த ஸ்பானிஷ் படை பின் வாங்கி வட அட்லாண்டிக் பெருங்கடல் பக்கம் சென்று விட்டது.

பிரித்தானிய தீவுகளின் வட முனையை சுற்றி, அயர்லாந்து கடற்கரையோரமாக வந்து இங்கிலாந்தை மீண்டும் தாக்க மெதினா சிதோனியா திட்டமிட்டார். ஆனால் இரண்டு மாதம் நீடித்த அந்த பயணத்தில், அப்படை பெரும் புயல்களால் தாக்கப்பட்டு நிலை குலைந்தது. பல கப்பல்கள் மூழ்கின, 5000 க்கும் மேற்பட்ட மாலுமிகள், நோயாலும் பசியாலும் இறந்தனர். மெதினா சிதோனா மீண்டும் இங்கிலாந்தைத் தாக்கும் எண்ணத்தை கைவிட்டு ஸ்பெயின் திரும்பினார். அதோடு பிலிப்பின் படையெடுப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டன. இக்கடல் போரில் புயல்கள் ஏற்படுத்திய சேதத்தால் இங்கிலாந்து மீண்டும் தாக்குதலில் இருந்து தப்பியது. இதனை நினைவு கூறும் வகையில் எலிசபெத்து அரசி “கடவுள் ஊதினார், அவர்கள் (கத்தோலிக்கர்கள்) சிதறினர்” என்ற இலத்தீன் வாசகம் பொறித்த பதக்கங்களை வெளியிட்டார். இங்கிலாந்தின் இந்த வெற்றி, ஐரோப்பாவின் ப்ராடஸ்டன்ட் கிருத்துவர்களுக்கு பெரும் ஊக்கமளிப்பதாக இருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads