அரித்துவார் மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹரித்துவார் மாவட்டம் (Haridwar district) (ⓘ), இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதிமூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் அரித்துவார் நகராகும். புதுதில்லியிலிருந்து 212 கிலோ மீட்டர் தொலைவில் இம்மாவட்டம் அமைந்துள்ளது.
இந்து சமய மக்களின் புனித தலங்களின் ஒன்றானதும், ஏழு மோட்சபுரிகளில் ஒன்றாகவும் அரித்துவார் விளங்குகிறது. இந்து சமய கலாசார பண்பாட்டு களமாகவும் விளங்குகிறது.
Remove ads
மாவட்ட எல்லைகள்
2,360 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அரித்துவார் மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும் டேராடூன் மாவட்டமும், கிழக்கில் பௌரி கார்வால் மாவட்டமும், தெற்கில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டம் மற்றும் பிஜ்னோர் மாவட்டமும், மேற்கில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சகாரன்பூர் மாவட்டமும் எல்லைகளாக கொண்டுள்ளது.
புவியியல்
2,360 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அரித்துவார் மாவட்டம், உத்தராகண்டம் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.[3]

மாவட்டத்தின் பெரும் பகுதிகள் காடுகளைக் கொண்டுள்ளது. கங்கை ஆற்றின் பெரும் கால்வாய்கள் இம்மாவட்டத்தின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் நீர்பாசன வசதிகள் அளிக்கிறது.
தட்ப வெப்பம்
- கோடைக்காலம்: 35 °C – 42 °C
- குளிர்காலம்: 6 °C – 16.6 °C[4]இம்மாவட்டத்தின் பருவ மழை கோடைக்காலத்தில் பெய்கிறது.
இயற்கையும் காட்டுயிர்களும்
அடர்ந்த காட்டில் உள்ள இராஜாஜி தேசியப் பூங்கா அரித்துவார் நகரத்திலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கங்கை ஆற்றாங்கரையில் அமைந்த நீல் தார பறவைகள் காப்பகத்தில் குளிர்காலத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு சரணாலயமாக உள்ளது.[5]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 18,90,422 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,005,295 மற்றும் பெண்கள் 885,127 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 801 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 73.43% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.04% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.79% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 285,693 ஆக உள்ளது.[6]
Remove ads
நிர்வாகம்
இம்மாவட்டம் அரித்துவார், ரூர்கி, லக்சர் என மூன்று வருவாய் வட்டங்களும், பகவான்பூர், ரூர்கி, நர்சன், பகத்ரபாத், லக்சர் மற்றும் கான்பூர் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.
அரசியல்
அரித்துவார் மாவட்டம் பதினொன்று சட்டமன்ற தொகுதிகளையும் ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் கொண்டுள்ளது.
- அரித்துவார் (நகர்புறம்)
- பெல் ராணிப்பூர்
- ஜவாலாபூர் (தலித்)
- பகவான்பூர் (தலித்)
- ஜாப்ரெரா (தலித்)
- பிரான்காளியார்
- ரூர்கி
- கான்பூர்
- மங்கலூர்
- லக்சார்
- அரித்துவார் (கிராமப்புறம்)
பொருளாதாரம்
கங்கை ஆற்று நீர் பாசானத்தால் வேளாண்மைத் தொழில் முக்கிய இடத்தில் உள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், பாரத மிகு மின் நிறுவனம், இந்துஸ்தான் யுனி லிவர், டாபர், மகேந்திரா, ஹேவல்ஸ் போன்ற தொழில் நிறுவனங்கள் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது.
திருவிழாக்கள் & கண்காட்சிகள்

ஆண்டு முழுவதும் அரித்துவாரின் கங்கை கரையில் பல சமய விழாக்கள் நடைபெறுகிறது. அவைகளில் முக்கியமானவைகள்; புரட்டாசி மாதம் நடைபெறும் கங்கை தசரா விழா, அமாவாசை விழா, கங்கை ஆராத்தி, குகல் திருவிழா ஆகும். [7]
மேலும் பனிரெண்டு ஆண்டு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் இலட்சக் கணக்கான பக்தர்கள் அரித்துவாரில் கூடி கங்கையில் புனித நீராடுவார்கள் கூடுவார்கள் 1998 மகா கும்பமேளாவின் போது எண்பது இலட்சம் பக்தர்கள் கங்கை ஆற்றில் புனித நீராடினர். [8]
பார்க்க வேண்டிய இடங்கள்

- அரித்துவாரில் நாள் தோறும் மாலையில் சிவனின் படித்துறையில் நடைபெறும் கங்கா ஆரத்தி[9]
- கங்கால் நகரத்தில் உள்ள சதி குண்டம்.
- தட்சனேஸ்வர மகாதேவர் கோயில், கங்கால் நகரம்
- மாயதேவி கோயில்[10]
- சப்தரிஷி ஆசிரமம்
- அரித்துவாரிலிருந்து பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீமகோடா குளம்
- சண்டி தேவி கோயில், அரித்துவார்
- மானசதேவி கோயில்
- ராமர் கோயில், இந்தியாவின் பெரிய இராமர் கோயில்.
- பாவன் தாம், கண்ணாடி மாளிகை
- நீல் தார பறவைகள் காப்பகம்
- இராஜாஜி தேசியப் பூங்கா
Remove ads
போக்குவரத்து வசதிகள்
புதுதில்லி - டேராடூன் நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 58 அரித்துவார் மாவட்டம் வழியாக செல்கிறது. இந்நெடுஞ்சாலை உத்தரகாண்டம் மாநிலத்தின் பல நகரங்களுடன் தரை வழியாக இணைக்கிறது. அரித்துவார் தொடருந்து நிலையம், நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. [11] அருகில் உள்ள விமான நிலையம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம் [12] மற்றும் புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads