கலியுக வரதராச பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலியுக வரதராச பெருமாள் கோவில் (Kaliyuga Varadaraja Perumal Temple) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் அரியலூர் மாவட்டத்தில், அரியலூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லங்குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோவிலை கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். விசயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் காலத்தை சேர்ந்த பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் இராமநவமி அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது. இந்தப் பெருவிழாவின் போது தோ்த் திருவிழா முக்கியமானதாக உள்ளது.[1][2][3][4] இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூசைகள் நடத்தப்படுகிறன. மகா சிவராத்திரி அன்று திருமாலுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

விரைவான உண்மைகள் கலியுக வரதராச பெருமாள் கோவில், ஆள்கூறுகள்: ...

இந்தக் கோயிலில் உள்ள பெருமாள், கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக விளங்குகிறார். இவர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார்.

Remove ads

கோயில் பற்றிய கதை

1751-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் படையாட்சி எனும் பெரும் விவசாயி இருந்தார். அவர் நிறைய மாடுகளைக் கொண்டிருந்தார். அவற்றில், சினைமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிவராமல் போனது. அவர் அந்த மாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவில் வந்த பெரியவர் ஒருவர், காணாமல் போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ள சங்கு இலைப் புதரில் கன்றுடன் உள்ளது என்று கூறி மறைந்தார்.

மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான் படையாட்சி. அங்கு கன்றுடன் நின்றிருந்த பசு அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அதன்பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் படையாட்சி கனவில் தோன்றிய பெரியவர், கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்குமாறு கூறினார். மேலும் அவர் கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றியதாகவும் தானே கலியுக வரதராசப் பெருமாள் எனக் கூறி மறைந்தார். பின்னர், மங்கான் படையாட்சியால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது.[5] [6]

Remove ads

வணங்குதல்

பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி பெருமாளை வணங்குகின்றனர்.[7] தானியங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கிடங்கு போல காணப்படும் அறைகளில் தனித்தனியாக நேர்த்தியாக வைக்கப்படுகின்றன. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இக்கோயிலுக்காக வேண்டி ஆடுகளின் கழுத்தில் குறிப்பு வைத்து கட்டிவிடும் பழக்கமும் உள்ளது. அவ்வாறு பிரார்த்தனைக்கான ஆடுகளை யாரும் பிடிப்பதில்லை. அந்த ஆடுகள் மிகவும் மரியாதையோடு நடத்தப்படுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads