கா. கலியபெருமாள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கா.கலியபெருமாள் (Ka. Kaliaperumal, ஆகத்து 19, 1937 - சூலை 8, 2011) மலேசியாவில் பேராக் மாநிலத்தில் பிறந்தவர். இவர் மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 80க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிக்கூடப் பயிற்சி நூல்களை எழுதியவர்[1]. நூற்றிற்கும் மேலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை[2][3] எழுதியவர். மலேசியாவில் தமிழர் சடங்கு[4] முறைகளை முறையாக வடிவமைத்துக் கொடுத்தவர்.
பாவேந்தர் பாரதிதாசன் ‘தமிழ்க்குயிலார்’ எனும் சிறப்பு விருதை 1960 ஆம் ஆண்டுகளில் வழங்கினார். அந்த விருதை கலியபெருமாள் அவர்கள் தம்முடைய இறுதிகாலம் வரையில் தம் பெயருடன் இணைத்து வாழ்ந்தார்.
உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியத்தை உருவாக்கியவர். கல்வி, எழுத்துச் சேவைகளினால் தேசிய நல்லாசிரியர் விருது (Tokoh Guru), பேராக் மாநில சுல்தான் விருது, ஆசிரியர் சங்கத் தொண்டர்மணி விருதுகளைப் பெற்றவர். அமெரிக்க உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது.
Remove ads
எழுத்துலக ஈடுபாடு
1953-ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் இவருடைய முதல் படைப்பு பிரசுரமானது. அதிலிருந்து இன்று வரை 200 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 300 க்கும் மேற்பட்ட கவிதைகள், உரைவீச்சுகள், நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.
இவருடைய படைப்புகள் மலேசிய தேசிய நாளிதழ்கள், வார மாத இதழ்களில் பிரசுரமாகி உள்ளன. மொழி, சமயம், சமுதாயம் பற்றி மலேசியத் தேசிய பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளையும், கேள்வி பதில் பகுதிகளையும் எழுதியுள்ளார்.
'பக்தியும் பகுத்தறிவும்’ எனும் ஒரு கேள்வி பதில் பகுதியை மலேசிய நண்பன் நாளிதழில் எழுதி வந்தார். அப்பகுதி இலட்சக்கணக்கான மலேசிய ரசிகர்களை அவருக்குப் பெற்றுத் தந்தது.
Remove ads
தமிழ்க்குயில்
தமிழ்க்குயில், ஆசிரியர் ஒளி எனும் இதழ்களை இவர் வெற்றிகரமாக நடத்தினார். இதனால் அவர் 'தமிழ்க்குயில் கலியபெருமாள்' எனவும் 'தமிழ்க்குயிலார்' எனவும் அழைக்கப் படுகின்றார். இவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தேசியப்பேரவை
மலேசிய எழுத்தாளர்களை ஒருமித்த அணியில் திரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலவாரியாக இயங்கிவரும் தமிழ் எழுத்தாளர் சங்கங்களையும் ஒன்றிணைக்க "மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தேசியப் பேரவை"யை 1982-ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.
மலேசிய எழுத்தாளர் சங்கங்களின் பேரவையின் அமைப்புத் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார். பேராக் மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த போது மாநில தேசிய அளவில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.
பொதுப்பணி
தமிழாசிரியர் சங்கத்தில் பல பொறுப்புகள் வகித்து வழிநடத்திய இவர் தனது இலக்கிய பணிகளுக்கிடையே, ஈப்போ நகரத்தில் வள்ளலார் அன்பு நிலையத்தை தோற்றுவித்து தொண்டாற்றி வந்தவர்.
நூல்கள்
- அடிப்படைத் தமிழ்
- சிறுவர் செந்தமிழ்க் களஞ்சியம்
- தமிழர் திருமண முறைகள்
- நீத்தார்கடன் நெறி முறைகள்
- பொன்மணிச் சிந்தனைகள்
- தமிழர் பண்பட்டுக் களஞ்சியம் (1000 பக்கங்களுக்கு மேலான இது ஒரு தொகுப்பு நூல்)
மேலும் பல நூல்கள்.
பரிசுகளும் விருதுகளும்
மலேசியாவில் தலைசிறந்த தமிழ்ப் படைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த கலியபெருமாள் அதிகமான பாராட்டுகள், விருதுகளைப் பெற்றவர். இவரின் கல்வித் தொண்டைப் பாராட்டி பல சமூகக் கழகங்கள் விருதுகளை வழங்கியுள்ளன.
- பேரா மாநில கல்வி இலாகா ‘தொக்கோ குரு’ விருது
- மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம் ‘தொண்டர்மணி’ விருது
- பினாங்கு செந்தமிழ்க் கலைநிலையம் ’செந்தமிழ்க் கலைஞர்’ விருது
- கோலாலம்பூர் தமிழர் சங்கத்தின் ’திருக்குறள் மாமணி’ விருது
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘தனிநாயக அடிகள்’ விருது
- மலேசிய சுவாமி ஆத்மானந்த அடிகள் ‘தமிழ் நெறிக்குயில்’ விருது
- தமிழ் நேசன் 'பவுன் பரிசு'
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் 'பொற்கிழி பரிசு'
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை வழங்கிய 'கேடயப் பரிசு'
- செந்தமிழ் கலா நிலைய சுவாமி இராம தாசர் வழங்கிய 'கேடயப் பரிசு'
- 'செந்தமிழ்ச் செம்மல்' விருது - சுவாமி கிருபானந்த வாரியார் வழங்கியது
- 'செந்தமிழ் வாணர்' விருது - சித்தியவான் திருவள்ளுவர் படிப்பகம் வழங்கியது
- 'திருக்குறள் மணி' விருது - ரவூப் தமிழர் சங்க வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் வழங்கப்பட்டது
- 'தமிழ் நெறிக் காவலர்' விருது - சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையில், கல்வி அமைச்சரிடமிருந்து பெற்றது
- பேராக் மாநில சுல்தான் அவர்களின் பி.ஜே.கே விருது
- பேராக் மாநில சுல்தான் அவர்களின் ஏ.எம்.பி விருது
- பாவேந்தர் பாரதிதாசன் ‘தமிழ்க்குயிலார்’ விருது
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads