துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்
Remove ads

துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில் அல்லது சௌந்தரநாயகி உடனுறை ஆபத்சகாயேசுவரர் கோயில் (Thukkachi Abatsahayesvar Temple) என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். சோழ அரசர்களால் அமைக்கப்பட்ட இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருமையுடையதாகும்.[1][2]. சிதிலமடைந்த இக்கோயில் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதால், யுனெஸ்கோவின் 2024ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதுக்கு தேர்வாகியது.[3]

விரைவான உண்மைகள் ஆபத்சகாயேசுவரர் கோயில், பெயர் ...
Thumb
கோயிலின் ஒரு சிறு நுழைவாயில்
Remove ads

அமைவிடம்

இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம், துக்காச்சி ஊராட்சியில் உள்ள கூகூர் கிராமத்தில் பாயும் அரசலாறு கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பகோணத்திற்கு கிழக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தென் திருக்காளத்தி

இக்கோயில் தென் திருக்காளத்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருக்காளத்தி என்ற தலமானது காற்று பூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதைப் போல இக்கோயில் அதற்கு இணையாக தென் காளத்தியாக விளங்குகிறது.[1]

வரலாறு

கோயில் உள்ள சோழர் காலக் கல்வெட்டுகளில் இக்கோயிலின் பெயர் திருக்காலத்தி மகாதேவர் கோயில் என்றும், ஊரின் பெயர் குலோத்துங்க சோழ நல்லூர் என்றும், இவ்வூர் உய்யக்கொண்டார் வளநாட்டில் இருந்தது என்றும் அறியவருகிறது. இக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனால் (ஆட்சிக் காலம்:1001-1044) நிறுவப்பட்டது. விக்கிரம சோழன் (ஆட்சிக் காலம் 1118-1135)[4] தோல் நிறமி இழத்தல் நோயால் அவதியுற்ற போது, துக்காச்சி ஆபத்சகாயஸ்வரர் கோயிலில் 48 நாட்கள் தங்கியிருந்து சிவபெருமானை வேண்டியதால் நோயிலிருந்து மீண்டான். இதனால் இக்கோயில் வளாகத்தை விரிவுபடுத்தினார்.

கோயில் அமைப்பு

சோழர் காலக் கட்டிடக்கலையில் அமைந்த இக்கோயிலின் மூலவர் பெயர் ஆபத்சகாயஸ்வரர், அம்பாள் பெயர் துர்கை எனும் சௌந்திரநாயகி. இக்கோயிலில் சரபேஸ்வரர், வராகி, ஜேஸ்டா தேவி, சப்தகன்னியர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், மற்றும் குபேரன் ஆகியோரின் தெய்வத் திருமேனிகள் இக்கோயிலில் உள்ளது. வடக்கு நோக்கிய சந்திரசேகரருக்கு சிறு தனிச்சன்னதி உண்டு.[5][1][6] இக்கோயில் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைக்கு புகழ் பெற்றது. ஒரு காலத்தில் 7 பிரகாரங்கள் கொண்டிருந்த இக்கோயிலில், தற்போது 3 பிரகாரங்கள் மட்டுமே உள்ளது. கும்பகோணக் கோயில்களில் மூன்று சரபேஸ்வரர் சன்னதிகள் உள்ளது. அதில் முதலாவது சரபேஸ்வரர் சன்னதி இக்கோயிலில் நிறுவப்பட்டதாகும்.[6][7]ஐராவதேசுவரர் கோயில் விமானம் போன்றே இக்கோயில் விமானம் அமைந்துள்ளது.[6]

மூலவரின் கருவறை விமானம் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் கருவறை விமானத்தின் அமைப்பைப் போல உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். இறைவி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் உள்ளார். முதல் திருச்சுற்றில் உள்ள துர்க்கை பிற கோயில்களில் உள்ளவாறு வடக்கு நோக்கி அமையாமல் தென்முகம் நோக்கி உள்ளார். மகாமண்டபத்தில் சரபேசுவரர் தென் திசை நோக்கி உள்ளார். இக்கோயிலில் குபேரன், வராகி, ஜேஷ்டா தேவி, சப்தகன்னிகள், தட்சிணாமூர்த்தி, கற்பக விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், மகாலட்சுமி, லிங்கோத்பவர் ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் தென்திசை நோக்கி தனிச் சன்னதியில் உள்ளார்.[6]

Remove ads

மறு சீரமைப்பு

தமிழ்நாடு அரசின் ஆலோசனையின்படி, இக்கோயிலின் தொன்மை மாறாது 2015ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பணி துவங்கியது. சீரமைப்பு பணி முடிந்து 2023ஆம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோயில் பழைமை மாறாது சீரமைப்பு செய்தபடியால் இக்கோயிலுக்கு யுனேஸ்கோவின் பண்பாட்டிற்கான விருது வழங்கப்பட்டது.[8][9][10]

குடமுழுக்கு

இக்கோயிலின் குடமுழுக்கு 3 செப்டம்பர் 2023இல் நடைபெற்றது. [11] [12] கோயில் திருப்பணியின்போது தொன்மை மாறாமல் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டதால் இக்கோயில் யுனெஸ்கோ விருதினைப் பெற்றுள்ளது. [13]

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads