பந்தியாய் சிரே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பந்தியாய் சிரே (கெமர்: ប្រាសាទបន្ទាយស្រី) என்பது, கம்போடியாவில் அமைந்துள்ள, பத்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட சிவன் மற்றும் பார்வதி கோயில் ஆகும். கம்போடியாவின் பண்டைய தலைநகர்களான யசோதரபுரம் மற்றும் அங்கோர் தாம் என்பவற்றின் அருகே,[1] புகழ்பெற்ற அங்கோர் வாட்டிற்கு சற்று அப்பால் அமைந்து விளங்குகின்றது. உயர்தரமான சிற்பங்களும், கலைவனப்பும் நிறைந்த இக்கோயில், இன்றும் சுற்றுலாப்பயணிகளைப் பெருமளவில் கவர்வதுடன், "கெமெர் கலையின் மாணிக்கம்" என்று புகழப்படுகின்றது.[2]
Remove ads
வரலாறு
தோற்றம்

கம்போடிய மன்னர்களால் கட்டப்படாத மாபெரும் ஆலயமாகக் கொள்ளப்படும் பந்தியாய் சிரே, பொ.பி 22 ஏப்ரல் 967 அன்று,[4] மன்னன் இராசேந்திர வருமனின் அரசவை அறிஞர்களான விஷ்ணுகுமாரன் மற்றும் மன்னன் ஹர்ஷவருமனின் பேரனும்[5]:117 ஏழை - எளியோர்க்குப் பேருதவிகள் புரிந்தவனும்[6] ஆன யக்ஞவராகர் ஆகியோரால் கட்டப்பட்டது.[7]:367 பந்தியாய் சிரே ஆலயம் அமைந்திருந்த நகர் முன்பு "ஈசுவரபுரம்" என்றே அறியப்பட்டதுடன், இக்கோயில் "திரிபுவனமகேசுவரம்" என்றே அழைக்கப்பட்டிருக்கின்றது.[8]
'பந்தியாய் சிரே" எனும்ம் கெமெர் மொழிச் சொல்லுக்கு "அணங்கு கோட்டம்" என்று பொருள். இவ்வாலயம் முழுவதும் நிறைந்து காணப்படும் கந்தருவக்கன்னிகளின் சிற்பங்களும்,[9] ஆலயம் முழுவதும் அமைந்திருந்த சொல்லொணாப் பேரழகும்.[8] இப்பெயரை ஆலயம் தரித்துக்கொள்ளக் காரணமாய் அமைந்திருக்கின்றது.

இவ்வாலயத்தின் தோற்றத்துக்கு, கெமெர் அரசின், சோழநாட்டுடனா தொடர்பும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அங்கோர் வாட்டிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் அமைந்திருந்த பழைய சிவாலயமொன்று, சோழர் படையால் திருப்பணிகள் செய்யப்பட்டு, இராசேந்திர சோழனின் தாய் திரிபுவன மகாதேவியின் நினைவாக, "திரிபுவனமாகேசுவரம்" எனப் பெயர் சூட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. தமிழ் மரபில் கூறப்படுவது போல், இக்கோவிலின் இரண்டாம் சுற்றுக் கோபுரத்திலுள்ள ஆடல் வல்லான் சிற்பத்தின் கீழே காரைக்கால் அம்மையார் அமர்ந்திருந்து முழவிசைக்கும் காட்சி, இதற்கான ஐயந்திரிபற்ற சான்றாகும்.[10]
விரிவாக்கம்
பதினோராம் நூற்றாண்டில், இக்கோவிலில் மீள்திருப்பணிகள் இடம்பெற்றிருக்கின்றன[1]:96 என்றும், 1119 யூலை மாதம் "திவாகரபண்டிதர்" எனும் பூசகர் வசம் ஒப்படைக்கப்பட்டமையும்[11] 1303 ஆகஸ்டு 8 வரை, இக்கோயில் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தமையும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்ப்பட்டிருக்கின்றது.[12]
சமகாலக் கண்டுபிடிப்பு
1914இல் காட்டுள் மறைந்திருந்த ஆலயம் வெளிக்கொணரப்பட்டதுடன், 1923இல் இடம்பெற்ற ஒரு சிலைத்திருட்டுச் சம்பவத்துடன், உலகின் கவனத்துக்கு வரலாயிற்று.[13] சிதைந்துகிடந்த ஆலயத்தை மீளமைக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்[14][15][16] காழ்ப்புணர்வாலும், சிலைக்கொள்ளைகளாலும் அடிக்கடி பாதிக்கப்பட்டது. பாதுகாப்புக் கருதி, பந்தியாய் சிரேயிலிருந்து கம்போடிய தேசிய அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்ட உமாமகேசன் சிற்பமொன்று கூட அங்குவைத்தே உடைக்கப்பட்டிருக்கின்றது.[17]
Remove ads
ஆலய அமைப்பு

மரத்தைச் செதுக்குவது போல், செதுக்கக்கூடிய[18] மணற்கற்களால் அமைக்கப்பட்டிருப்பதால், இக்கோவிலுக்கே தனிச்சிறப்பான வசீகரம் ஒன்றுண்டு. சுண்ணமும் செங்கல்லும், சில தாங்குதளங்கள் அமைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. காலத்தைக் குறிக்கும் காலன், கோயில் துவாரபாலகர், அரமகளிர் முதலானவை, இகோயிலின் சிற்பக்கலையழகுக்கான சிறப்பான எடுத்துக்காட்டுகள்.
கிழக்கு நோக்கிய மூன்று செவ்வக வடிவ வளாகங்கள், மூன்று திருச்சுற்றுக்களால் சூழப்பட்டதாக, ஒரு இராசகோபுரத்தின் வாயிலாக இணையும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன. உள்ச்சுற்றில் கருவறையும், மூன்று விமானங்களும் அமைந்துள்ளன. இருபுறமுள்ள இருவிமான அறைகள், கம்போடிய மரபின் படி, நூலகங்களாகச் சொல்லப்படுகின்றன.
வெளி இராச கோபுரம்
ஐநூறு சதுர மீ. பரப்பளவில் இருந்த "ஈசுவரபுரம்" எனும் நகருக்கு வாயிலாக இருந்த பெருங்கோபுரம் இது. ஐராவதம் மீது இந்திரன் அமர்ந்திருக்கும் சிற்பத்தை[19] முகப்பில் கொண்ட இக்கோபுரத்திலிருந்து செல்லும் 67 மீ நீளமான இராசபாதை, உட்சுற்றுடன் இணைகின்றது.
வெளிச்சுற்று

கிழக்கும் மேற்கும், இரு கோபுரவாயில்களைக் கொண்ட சுண்ணச் சுவரால் மூன்றாம் சுற்று சூழப்பட்டிருக்கின்றது.[21]அசுரச் சகோதரர்கள் சுண்டனும் உபசுண்டனும், திலோத்தமையை அடையத் தமக்குள் போரிடும் மற்றும் இரண்டு விடும் காட்சியைச் சித்தரிக்கும் தன் மேற்்கு வாயில் அலங்காரம், தற்போது பாரிஸ் அருங்காட்சியகமொன்றில் வைக்கப்பட்டிருக்கின்றது.[20] கிழக்கு வாயில் அலங்காரம், சீதையை இராவணன் கவரும் காட்சியுடன்,[22] தரையில் சிதைந்து கிடக்கின்றது. கிழக்கும் மேற்கும் இரு பாலங்களால் இணைக்கப்பட்டு, இம்மூன்றாம் சுற்று, பெரும்பாலும் அகழியால் சூழப்பட்டதாகக் காணப்படுகின்றது.
நடுச்சுற்று
இரண்டாம் சுற்றானது, கிழக்கும் மேற்கும் இரு கோபுரங்களுடன், வெளிப்புறமாக ஒரு சுண்ணச்சுவராலும், உட்புறமாக ஒரு செங்கற்சுவராலும் சூழப்பட்டிருக்கின்றது. இதன் மேலைக்கோபுரத்தில், வாலியும் சுக்ரீவனும் மோதும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கீழைக்கோபுரத்திலேயே, ஆடல்வல்லான் சிற்பமும், அதனருகே காரைக்காலம்மை சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. சிதைந்துள்ள இதன் உள் - வெளிச் சுவர்க்கோட்டங்களில் ஒன்றில், நரசிம்மர் இரணியனைக் கொல்லும் சிற்பம் இடம்பெற்றிருக்கின்றது.
உட்சுற்று
கோபுரங்களுக்கிடையே சிதைந்த உட்சுவருக்குள் உள்ள முதலாம் சுற்றின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு மூலைகளில், இரு நூலகங்கள் அமைந்துள்ளன. தென்புற நூலகத்தின் கீழைவாயிற்சிற்பமாக ஈசனின் கயிலைக் காட்சியும், இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சியும் இணைந்த அழகிய சிற்பம் ஒன்றுள்ளது.[23] மேலைவாயிற்சிற்பத்தில் காமதகனச் சிற்பம் அமைந்துள்ளது.[23]
வடபுற நூலகத்தின் கீழைவாயிற் சிற்பத்தில், காண்டவவன தகனம் காட்டப்பட்டிருக்கின்றது. அதே நூலகததின் மேற்கு வாயிலில் கம்சவதம் இடம்பெறுகின்றது..[24] மத்தியில், பந்தியா சிரேயின் பேரெ்ழிற் சிற்பங்கள் நிறைந்த ஈசனின் கருவறை அமைந்து விளங்குகின்றது. எனினும், இடிபாடுகளின் காரணமாக, இதன் உட்பகுதிக்குச் செல்ல அனுமதியில்லை.
Remove ads
மேலும் பார்க்க
அடிக்குறிப்புகள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads