மருதூர், அரியலூர் மாவட்டம்
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மருதூர் (Marudur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராகும். [4] இவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு விவசாயம் பெரும்பங்காற்றுகிறது.
Remove ads
அமைவிடம்
மருதூர் கிராமம், அரியலூர் மாவட்டத்தின் உடையார்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகும், இது மாவட்டத் தலைநகரான அரியலூரிலிருந்து செந்துறை வழியாக மாவட்டத்தின் மற்றொரு முக்கிய பகுதியான ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் சுமார் 33 கி.மீ தொலைவிலும், ஜெயங்கொண்டத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மருதூர் கிராமத்தைச்சுற்றி பொன்பரப்பி, கொடுக்கூர், குவாகம், வாரியங்காவல், நாகல்குழி, கீழமாளிகை ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.
Remove ads
மக்கள் தொகை
மருதூர் கிராமத்தில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மொத்தம் 1487 குடும்பங்களைச் சேர்ந்த 5765 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 2848 பேரும் மற்றும் பெண்கள் 2917 பேரும் உள்ளனர். 2014-ன் நிலவரப்படி மக்கள் தொகையானது ஏறத்தாழ ஆறாயிரத்தை கடந்துள்ளது.
மொழியும் பண்பாடும்
இங்கு வசிப்பவர்கள் அனைவரும் தமிழ் பேசும் தமிழ் மக்கள். அனைவரும் உடை, உணவு, பழக்க வழக்கங்கள், திருமணம், சடங்கு, சம்பிரதாயங்களில் பின்பற்றுவது அவரவர் மரபு சார்ந்த தமிழர் பண்பாடு.
வாழ்வாதாரம்
இங்கு உழவுத் தொழில் முதன்மையானது. இதில் முந்திரி பெரும்பங்கு வகிக்கிறது. மொத்தம் உள்ள உழவு நிலங்களில் மூன்றில் இரண்டு பங்கு முந்திரிக்காடுகள். இது தவிர, நிலக்கடலை, கம்பு, உளுந்து போன்றவைகளும் பயிரிடப்படுகின்றன. நெசவுத் தொழில் செய்பவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இது தவிர தச்சுத் தொழில் செய்பவர்களும் உண்டு. குடிசைத் தொழில்கள் எதுவும் கிடையாது. அன்றாடக் கூலி வேலைக்குச் செல்பவர்களும் உண்டு. பெண்களில் பலர் அரசின் 100 நாள் வேலைக்கு செல்கிறார்கள். இளைஞர்கள் பலர் துபாய், சிங்கப்பூர் போன்ற அந்நிய தேசங்களில் வேலை செய்து வருவாய் ஈட்டுகிறார்கள்.
Remove ads
கோவில்கள்
ஆன்மீக வழிபாடு நடத்துவதற்கு கிராமத்தில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளன. வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளியன்று கோவில்களில் பக்தர்கள் கடவுளை வழிபடுவார்கள். இங்குள்ள கோவில்களில் மாரியம்மன் கோவில், சுப்பிரமணியர் கோவில், திரௌபதி அம்மன் கோவில், பெரியசாமி கோவில், கருப்புசாமி கோவில், வீரனார் கோவில், பிள்ளையார் கோவில், செல்லியம்மன் கோவில், பெரியாண்டவர் கோவில், காளியம்மன் கோவில் என்பன குறிப்பிடத்தகுந்த கோவில்களாகும்.
Remove ads
பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள்
தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை கிராமம் முழுவதும் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் சாக்கை எனப்படும் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறும்.
அரசியல்
மருதூர் கிராமம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும்,[5] சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு ஆண்டிமடம் சட்டமன்ற தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாக இருந்தது.
கிராமத்திலுள்ள அடிப்படை வசதிகள்
பள்ளிக்கூடங்கள்
இங்கு தமிழ்வழி கல்வி கற்பிக்கும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியும், இரண்டு அரசு நடுநிலைப்பள்ளிகளும், இரண்டு தொடக்கப்பள்ளிகளும், தனியாருக்கு சொந்தமான ஒரு ஆங்கிலவழி தொடக்கப்பள்ளியும் உள்ளன. தற்போதுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியானது 1962-ம் ஆண்டு துவங்கப்பட்டு 2006-ம் ஆண்டு வரை 44 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளியாகவே இருந்தது. 2007-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினர். இதைப் போலவே இரண்டு நடுநிலைப் பள்ளிகளும் அரசாங்கத்தால் துவக்கப் பள்ளிகளில் இருந்து தரம் உயர்த்தப்பட்டவை.
மருத்துவ வசதி
இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. பேருந்து மூலமாக வெளியூர்களுக்கு சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மக்கள், தற்போது உள்ளூரிலேயே போதிய மருத்துவ வசதிகளைப் பெறுகின்றனர். இங்கு பெண்களுக்காக 24 மணிநேர இலவச பிரசவம் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிராமத்தில் பல தாய்மார்கள் பயன் பெற்றுள்ளனர். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
போக்குவரத்து வசதி
1.பேருந்து வசதி
ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூர் செல்லும் முதன்மைச்சாலையில் மருதூர் கிராமம் அமைந்துள்ளதால் போதிய பேருந்து வசதிகள் உள்ளன. இந்த ஊரின் வழியாக இருபதுக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் செல்கின்றன. இங்கிருந்து முக்கியமான இடங்களான சென்னை, திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2.தொடருந்து மற்றும் விமான போக்குவரத்து வசதி மற்ற போக்குவரத்து வசதிகளுக்கு மருதூர் கிராமத்திலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டும்.
தொடருந்து சேவை பெற செல்லவேண்டிய இடங்கள்:-
- செந்துறை - 12 கி.மீ
- ஆர்.எஸ்.மாத்தூர் - 10 கி.மீ
- அரியலூர் - 33 கி.மீ
3.விமானப் போக்குவரத்து சேவை பெற மருதூர் கிராமத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
சுகாதார வளாகம்
மருதூரில் தற்போது ஆண்களுக்கு ஒன்றும் பெண்களுக்கு ஒன்றும் என இரண்டு சுகாதார வளாகங்கள் தனித்தனியே அமைத்துத் தரப்பட்டுள்ளன. தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மானியம் கொடுத்து ஊக்குவித்து வருகிறது.
நூலகம்
மருதூர் கிராமத்தில் கிளை நூலகம் உள்ளது. இந்நூலகம் துவக்கத்தில் ஊர்ப்புற நூலகமாக இருந்தது. தற்போது கிளை நூலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு தமிழ் மொழியில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, கதைகள் உள்ளிட்ட தலைப்புகளில் 10,000-த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இங்கு நாளேடுகளும், வார, மாத இதழ்களும் கிடைக்கின்றன. இதன்மூலம் தினம் பலர் பயன் பெறுகிறார்கள். நூலகம் ஊராட்சிக்கு சொந்தமான தனிக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
வங்கி
மருதூர் கிராமத்தில் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவந்தது வங்கி பயன்பாடு. 2014-ம் ஆண்டு புதிதாக கனரா வங்கியின் கிளை ஒன்று துவங்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. வேறு எந்த வங்கி கிளைகளும் இங்கு இல்லை.
குடிநீர் வசதி
கிராமத்தின் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரை சேமிப்பதற்காக பெரிய அளவிளான குடிநீர் தொட்டிகளை கிராமம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்துள்ளனர். சில கிணறுகளும் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.
நியாய விலைக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
மருதூர் கிராமத்தில் ஒரு முழுநேர நியாய விலைக்கடையும், இரண்டு பகுதிநேர நியாய விலைக்கடைகளும் உள்ளன. இவை தனித் தனிக் கட்டிடங்களில் இயங்குகின்றன. இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமும் உள்ளது. விவசாயிகள் விவசாயக் கடன் பெற உதவி செய்யப்படுகிறது. இந்த கூட்டுறவு சங்கம் தனிக் கட்டிடத்தில் இயங்குகிறது.
Remove ads
சுற்றியுள்ள ஊர்கள்
மருதூர் கிராமத்தின் படத்தொகுப்பு
- பெயர்ப்பலகை
- ஊராட்சி மன்ற அலுவலகம்
- அரசு மேல்நிலைப் பள்ளி
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- நூலகம்
- பெரியசாமி கோவில்
- அங்கன்வாடி மையம்
- மருதூர் பெரிய ஏரி
- அரசு மேல்நிலைப்பள்ளி புதுக் கட்டிடம்
- முதன்மைச் சாலை
- முந்திரிப் பழங்கள்
- கிராம நிர்வாக அலுவலகம்
- நீர் தேக்கத்தொட்டி
- நியாய விலைக்கடை
- அரசு மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடம்
- சுகாதார வளாகம்
- வாரச்சந்தை
- சுப்பிரமணியர் கோவில்தெரு
- கனரா வங்கி
- முந்திரி மரம்
- செல்லியம்மன் கோவில்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

