வியப்புக்குறி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வியப்புக்குறி அல்லது ஆச்சரியக்குறி அல்லது உணர்ச்சிக்குறி என்பது ஒரு இடைச்சொல் அல்லது ஆச்சரியத்திற்குப் பிறகு பொதுவாக வலுவான உணர்வுகளைக் குறிக்க அல்லது வலியுறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் நிறுத்தற்குறியாகும். ஆச்சரியக்குறி பெரும்பாலும் ஒரு வாக்கியத்தின் முடிவைக் குறிக்கிறது.[1][2][3]

உணர்ச்சிக்குறி (தமிழ் நடை)

விரைவான உண்மைகள் ‌!, வியப்புக்குறி ...
Thumb
உணர்ச்சிக்குறி

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.

இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.

நிறுத்தக்குறிகளுள் ஒன்று உணர்ச்சிக்குறி ஆகும். இது வியப்புக்குறி என்று அறியப்பட்டாலும், மகிழ்ச்சி, அச்சம், வெறுப்பு போன்ற வேறு பல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தப் பயன்படுவதால் உணர்ச்சிக்குறி என்பதே அதிகப் பொருத்தமானது.

Remove ads

உணர்ச்சிக்குறி (!) இடும் இடங்கள்

வியப்பு, மகிழ்ச்சி, அச்சம், வெறுப்பு, இரக்கம் போன்ற உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தவும் விளித்துப் பேசவும் உணர்ச்சிக்குறி பயன்படுகிறது.

உணர்ச்சிக்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:

1) வியப்பு, மகிழ்ச்சி, அதிர்ச்சி, இரக்கம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்கியங்களின் முடிவில் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
எவ்வளவு பெரிய மலை! (வியப்பு)
நாம் எதிர்பார்த்தபடியே திருமணமும் நன்றாக நடந்து முடிந்தது! (மகிழ்ச்சி)
சித்தன் விமான விபத்தில் இறந்துவிட்டான்! (அதிர்ச்சி)
பல்லாயிரக் கணக்கான மக்களை ஆழிப்பேரலை விழுங்கிவிட்டது! (இரக்கம்)
பொருளாதாரத் தேக்கம் காரணமாக முருகனின் வேலை போய்விடுமோ!' (அச்சம்)
ஊழல் பேர்வழிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு வேறா! (வெறுப்பு)
2) உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
ஓகோ! இன்றைய திருமணத்திற்கு நேற்றே வந்துவிட்டீர்களா?
ஆ!
அட!
சே!
சீ!
ஐயோ!
அப்படியா!
ஆகா!
என்னே!
அந்தோ!
ஐயகோ!
3) உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில் இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
ஐயோ ஐயோ!
4) கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
தீ! தீ!
பாம்பு! பாம்பு!
5) விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
பெரியோர்களே! தாய்மார்களே!
அன்பர்களே!
என் இனிய எந்திரா!
6) வாழ்த்து, வசவு, வெறுப்பு முதலியவற்றைத் தெரிவிக்கும் வினையை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
மணமக்கள் வாழ்க!
புரட்சி ஓங்குக!
எங்கேயாவது போய்த்தொலை!
7) வியங்கோள் வினை இரட்டித்து வரும்போது இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டு:
வருக வருக!
8) முழக்கமிடப் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது தொடர்கள் அடுத்தடுத்து வரும்போது ஒவ்வொன்றின் இறுதியிலும் உணர்ச்சிக்குறி இடுவது முறை.
எடுத்துக்காட்டுகள்:
கோழைகள்! துரோகிகள்!
உண்மை! முற்றிலும் உண்மை!
Remove ads

சான்றுகள்

1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads