வே. தங்கபாண்டியன்
இந்தியாவின் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வே. தங்கபாண்டியன் (V. Thangapandian; 13 செப்டம்பர் 1933 - 31 சூலை 1997) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக (திமுக) உறுப்பினரான இவர், அக் கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் (1974-97), சட்ட மேலவை உறுப்பினர் (1968-74), அருப்புக்கோட்டை தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் (1989-91; 1996-97), தமிழ்நாட்டுக் கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் (1996-97), வணிகவரித்துறை அமைச்சர் (சனவரி - சூலை 1997) ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.[1][2]
இவர் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன், திமுக சார்பில் தென்சென்னை தொகுதிக்கான இந்திய மக்களவை உறுப்பினராக (2019-) உள்ளார். மகன் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக (2023-) உள்ளார்.
Remove ads
தொடக்க வாழ்க்கை
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி எனும் ஊரில் வேலு நாச்சியார் - வேலுச்சாமி இணையருக்கு இரண்டாம் மகனாக 13 செப்டம்பர் 1933 அன்று பிறந்தார் தங்கபாண்டியன். தொடக்கக் கல்வியை சாயல்குடியிலேயே பயின்றபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று இளங்கலை (B.A.), இளைநிலை கல்வியல் (B.T.) ஆகிய பட்டங்களைப் பெற்றார். அக் காலத்தில் திராவிட மாணவர் மன்றம், இளங்கோ மன்றம் ஆகிய அமைப்புகளில் செயல்பட்டார். அண்ணாவினை அழைத்துக் கல்லூரியில் கூட்டங்களை நடத்தினார்.
Remove ads
அரசியல்
17 செப்டம்பர் 1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடங்கப்பட்டபோது அதன் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். கல்லூரிப் படிப்புக்குப்பின் மல்லாங்கிணறு அரசுப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றியவாறே கட்சிப் பணிகளையும் தொடர்ந்தார். பிறகு ஆசிரியர் பணியைக் கைவிட்டு முழுநேரமாகக் கட்சிப்பணிகளை மேற்கொண்டார்.
சட்ட மேலவை உறுப்பினர் (1968-74)
திமுக, சென்னை மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியமைத்தபின் அன்றைய இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் எஸ். எஸ். தென்னரசு பரிந்துரையின்பேரில் தங்கபாண்டியனை 1 மார்ச் 1968 தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக்க வழிசெய்தார் அண்ணாதுரை. இப் பதவியில் 28 பிப்ரவரி 1974 வரை இருந்தார் தங்கபாண்டியன். தன் பதவிக்காலத்தில் மாநிலத் தன்னாட்சித் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய மேலவைக் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
மாவட்டச் செயலாளர் (1974-97)
எஸ். எஸ். தென்னரசு-வுக்குப் பின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார் தங்கபாண்டியன். நெருக்கடி நிலை காலகட்டத்தில் உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மையச் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டார்.
காரியாப்பட்டி ஒன்றியப் பெருந்தலைவர், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.1997-இல் தான் மறையும்வரை மாவட்டச் செயலாளராக இருந்தார்.
சட்டப் பேரவை உறுப்பினர் - முதல் பதவிக்காலம் (1989-91)
1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தங்கபாண்டியன், அ.இ.அ.தி.மு.க-வின் வேட்பாளர் வி. எஸ். எம். பஞ்சவர்ணத்தைக் காட்டிலும் 15,523 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சட்டமன்றத்துக்குத் தேர்வானார்.[3]
சட்டப் பேரவை உறுப்பினர் - இரண்டாம் பதவிக்காலமும் அமைச்சர் பதவியும் (1996-97)
1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது மீண்டும் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தங்கபாண்டியன், அ.இ.அ.தி.மு.க-வின் வேட்பாளர் கே. சுந்தரபாண்டியனைக் காட்டிலும் 16,365 வாக்குகள் கூடுதலாகப் பெற்று சட்டமன்றத்துக்குத் தேர்வானார். தங்கபாண்டியனை கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக அன்றைய முதலமைச்சரான "கலைஞர்" மு. கருணாநிதி நியமித்தார். 22 சனவரி 1997 அன்று அவர் துறை, கே. என். நேருவுக்கு ஒதுக்கப்பட்டது. கருணாநிதி வகித்த வணிகவரித்துறை அமைச்சர் பொறுப்பை தங்கபாண்டியன் ஏற்றார்.
Remove ads
மறைவு
1997-இல் விருதுநகர் மாவட்டம் இராசபாளையத்தில் ஏற்பட்ட கலவரத்தை அமைதிப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் கருணாநிதியால் அனுப்பப்பட்ட தங்கபாண்டியன் அந் நகரிலேயே 31 சூலை அன்று தன் 64-ஆம் அகவையில் காலமானார்.அவர் உடல், மல்லாங்கிணறில் அடக்கம் செய்யப்பட்டது.[4]
குடும்பம்
தங்கபாண்டியன் 1962-இல் இராசாமணி என்பவரை சாதி மறுப்புத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 1962-இல் சுமதி என்ற மகள் பிறந்தார். சுமதி, பின்னாளில் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆனார். 1966-இல் பிறந்த மகனுக்கு எஸ். எஸ். தென்னரசு நினைவாக தங்கம் தென்னரசு எனப் பெயரிட்டனர். இராசாமணி 4 அக்டோபர் 2020 அன்று தன் 84ஆம் அகவையில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடல், தங்கபாண்டியன் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads