இந்தியக் காட்டெருது

From Wikipedia, the free encyclopedia

இந்தியக் காட்டெருது
Remove ads

இந்தியக் காட்டெருது (பாசு காரசு) எனப்படுவது இந்தியக் காடுகளில் காணப்படும் ஓர் ஆவினம். இது மாடு இனங்களிலேயே மிகப்பெரிய உடலளவைக் கொண்டது ஆகும். இவ்விலங்கு கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து, ஆமா[2] என்று பல பெயர்களில் அறியப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் கடமாவில் நான்கு வகையான உள்சிற்றினங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கடமாவின் மூதாதைய இனம் ஆசியக் கண்டத்தில் சுமார் 20 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக அறியப்பட்டுள்ளது.[3] இது பீகாரின் மாநில விலங்காகும்.

விரைவான உண்மைகள் இந்தியக் காட்டெருது, காப்பு நிலை ...
Remove ads

சங்க இலக்கியத்தில் கடமா

  • கடமா தொலைச்சிய கானுறை வேங்கை (நாலடி, 300)
  • மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331)

உடலமைப்பு

கடமா தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஆவினம்.[2] பெரும்பாலான விலங்குகளில் ஆண் விலங்குகள் பெரியதாய் அழகாய் இருப்பதைப் போன்று கடமா எருதுகள் பசுக்களைக் காட்டிலும் உடலமைப்பில் பெரியவை. வயதுவந்த எருது சுமார் 600 முதல் 1000 கிலோ எடையும் 1.6 முதல் 1.9 மீட்டர் உயரமும் இருக்கும். பசுக்கள் எடையளவில், ஆணின் எடையில் நான்கில் ஒரு பங்கே இருக்கும். இருபால் விலங்குகளின் வால் நீளம் அண்ணளவாக (ஏறக்குறைய) 70 முதல் 100 செ.மீ வரை இருக்கும். இது வயதையும் உடலையும் பொறுத்து மாறுபடும். இவ்விலங்குகளின் உடல் மேற்தோல் அடர்த்தியான பளுப்பு நிறமயிர்களால் ஆனது. தேக்கு மரக்காடுகளிலும் இலையுதிர் காடுகளிலும் வாழும் கடமாக்கள் கூடுதலாக அடர்நிறத்தில் இருக்கின்றன.[2] ஆண் விலங்குகளின் அசைதாடை கீழ்க் கடைவாயிலிருந்து முன்னங்கால்கள் வரை நீண்டு இருக்கும். பசுக்களுக்கு நான்கு காம்புகள் இருக்கின்றன.[2] எருதுகளின் முதுகுப்பகுதில் உள்ள திமில்கள் பசுக்களைவிடப் பெரியதாக இருக்கும். இருபால் விலங்குகளுக்கும் அகன்ற கொம்புகள் உண்டு. கொம்புகளின் அடித்தளம் மஞ்சள் நிறமாகவும் கூர்மையான கொம்பு முனைகள் கருப்பு நிறத்திலும் காணப்படும். அதிக அளவாக கொம்புகள் சுமார் 80 செ.மீ நீளம் வரை வளரும்.[4]

Remove ads

பரவல்

இவ்விலங்குகள் புல்வெளிகள் நிறைந்த தேக்குமரக்காடுகளிலும், இலையுதிர் ஈரக்காடுகள், மூங்கிற்காடுகள், இலையுதிர் உலர்காடுகள், மழைக்காடுகள் முதலிய வெப்பமண்டலக் காடுகளிலும் தேயிலைத்தோட்டங்களுக்கு அருகாமையிலும் வாழ்பவையாகும்.[2] வங்கதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, தைவான், மலேசியா, மியான்மர், நேப்பாளம், தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகளில் இவ்விலங்கு வாழ்ந்து வருகிறது.[4] கடமாவின் நான்கு உள்சிற்றினங்களும் அவற்றின் பரவலும் கீழ்காணும் சட்டத்தில் (அட்டவணை) கொடுக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் உள்சிற்றினம், பரவல் ...
Thumb
பாசு காரசு கிரங்கேரி
Thumb
விலங்குகாட்சி சாலையில் இந்தியக் காட்டெருது

சூழியல்

கடமா ஒரு பகலாடும் விலங்காகும். இவை காலையிலும் மாலையிலும் மிகவும் சுறுசுறுப்புடன் இரை தேடும். வெயில் நிறைந்த பகல் நேரங்களைப் பெரும்பாலும் மரநிழலில் ஓய்வெடுத்துக் கழிக்கும். தற்சமயம் இவ்விலங்கு வாழும் காடுகளில் மனிதர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பதற்கு இரவு நேரங்களில் இரை தேடுகின்றது. இவ்விலங்கின் இருப்புக்கு நீர் இன்றியமையாததாக இருந்தாலும் நீர் எருமைகளைப் போல இவை நீரில் புரளுவதில்லை. கடமா மந்தைகளில் 2 முதல் 40 மாடுகள் வரை இருக்கும். ஒரு மந்தையை மூத்த பெண் கடமா ஒன்று தலைமையேற்று நடத்திச் செல்லும். மந்தையின் ஒரு விலங்கு எச்சரிப்பு ஒலி எழுப்பினால் அனைத்து விலங்குகளும் காட்டுக்குள் ஓடி மறைந்துவிடும்.

இனப்பெருக்க காலத்தில் எருதுகள் மந்தைகளில் இருந்து விலகி தனித்து புணர்வதற்காக பசுக்களைத் தேடிச்செல்லும். பெரும்பாலும் பெரிய உடலைக் கொண்ட எருதையே பசுக்கள் இனப்பெருக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கின்றன. புணரும்போது எருதுகள் ஒரு தனி மாதிரியான ஒலியை எழுப்புகின்றன. அவ்வொலி சுமார் 1.6 கி.மீ தொலைவு வரை கேட்கக்கூடியதாக இருக்கும்.

இவை புல், செடிகள் மற்றும் பழங்களை உணவாக உட்கொள்ளும். இவற்றின் இயற்கை எதிரிகள் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற கொண்றுண்ணிகள் ஆகும்.

Remove ads

இனப்பெருக்கம்

கடமாவின் சூல்கொள்ளல் காலம் சுமார் 275 நாட்கள் ஆகும். தாய் கடமா பெரும்பாலும் ஒரு கன்றையோ, மிக அரிதாக இரண்டு கன்றுகளையோ ஈன்றெடுக்கும். கன்று ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை தாயின் அரவணைப்பில் இருக்கும். இரண்டு அல்லது மூன்று வயதாகும் போது இளங்கன்றுகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைகின்றன. கடமாக்களின் வாழ்நாள் சுமார் 30 வயது வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் நடந்தாலும், திசம்பர் முதல் சூன் வரையிலான காலத்திலேயே அதிக அளவிலான இனப்பெருக்கம் நடக்கிறது.

Remove ads

காப்புநிலை

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972) கடமாவை முதல் காப்பு அட்டவணையில் சேர்த்துள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு கடமாவை அழிவாய்ப்பு உள்ள விலங்காக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடமா 15 மாநிலங்களில் 101 காப்பகங்களில் வாழ்கிறது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 7.12 சதவீத நிலத்தில் கடமாவின் இயற்கை உயிர்த்தொகை உள்ளது. கடமாவின் வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை வாழிடச் சீரழிப்பும் வேட்டையாடப்படுதலும் கால்நடைகளிடம் இருந்து பரவும் கோமாரி போன்ற நோய்களும் ஆகும்.[5]

Remove ads

படியெடுப்புமுறை இனப்பெருக்கம்

2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் சியாக்சு மையத்தில் உள்ள மரபியல் ஆய்வகத்தில் கடமாவின் கன்று ஒன்று படியெடுப்பு முறையில் ஒரு பசுவின் மூலம் ஈன்றெடுக்கப்பட்டது. ஆனால் அக்கன்று பிறந்து 48 மணிநேரத்தில் தீராத வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads