புலி
பாலூட்டிகளிலுள்ள ஒரு வேட்டை விலங்கு From Wikipedia, the free encyclopedia
Remove ads
புலி (பாந்தெரா டைகிரிசு -Panthera tigris) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள பாலூட்டிச் சிற்றினமாகும். பூனைக் குடும்பத்திலேயே உருவத்தில் மிகப்பெரிய விலங்கான இது, செம்மஞ்சள் நிற மேற்தோலுடன் கருப்பு நிறக் கோடுகளுடன் வெளிறிய அடிப்பகுதியுடன் காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் போன்ற தாவர உண்ணிகளை வேட்டையாடுகின்றது. இது தனக்கென எல்லையினை வகுத்துக் கொண்டு சமூக வாழ்க்கை வாழும் விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயது வரை வாழ்கின்றன. பிறகு இவை தங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.
புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதியில் தொடங்கி அமுர் ஆற்றின் வடிப்பகுதி வரையிலும், தெற்கில் இமயமலை அடிவாத்தில் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புலிகள் தங்கள் வாழ்விடத்தில் ஏறத்தாழ 93% அளவு வரை இழக்க நேரிட்டது. நாளடைவில் இவை மேற்கு, நடு ஆசியா, சாவகம், பாலி தீவுகள், தென்கிழக்கு மற்றும் தெற்காசியா, சீனா ஆகிய இடங்களில் அருகிப்போனது. தற்போது இவை உருசியாவின் சைபீரிய மிதவெப்பவலயக் காடுகள், இந்தியத் துணைக்கண்டம், தெற்காசியாவின் சில பகுதிகள், இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகள் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
புலியானது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலான புலிகள் இந்தியாவில் வாழ்கின்றன. காடுகளின் அழிவு, வேட்டையாடுதல் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது. அதிக மனித சனத்தொகை அடர்த்தி உள்ள நாடுகளில் மனிதர்களின் அத்துமீறல் காரணமாக புலிகளுடன் ஏற்படும் மோதல் காரணமாக இவை கொல்லப்படுகின்றன.
புலிகள் பண்டைய புராணங்களிலும் கலாச்சாரங்களின் நாட்டுப்புறக் கதைகளிலும் முக்கியமாக இடம்பெற்றுள்ளன. மேலும் இவை கொடிகள், விளையாட்டு அணிகளுக்கான சின்னங்கள், நவீன திரைப்படங்கள், இலக்கியங்களில் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன. புலியானது இந்தியா, வங்கதேசம், மலேசியா, தென் கொரியாவின் தேசிய விலங்காகவும் உள்ளது.
Remove ads
வகைப்பாட்டியல்
1758ஆம் ஆண்டில், கார்ல் லின்னேயஸ் தனது படைப்பான சிசுடமா நேச்சுரே வில் புலியை விவரித்து இதற்கு பெலிசு டைகிரிசு என்ற அறிவியல் பெயரை வழங்கினார்.[2] 1929ஆம் ஆண்டில், பிரித்தானிய வகைப்பாட்டியல் நிபுணரனான ரெசினால்ட் போகாக் "பாந்தெரா டைகிரிசு" என்ற தற்போதைய விலங்கியல் பெயரை பயன்படுத்தி பெரும் பூனை பேரினத்தின் கீழ் இதனை வகைப்படுத்தினார்.[4][5]
கிளையினங்கள்
புலிகளின் கிளையினங்கள் பற்றிய லின்னேயசின் விளக்கத்தைத் தொடர்ந்து, பல புலிகளின் விலங்கியல் மாதிரிகள் விவரிக்கப்பட்டு துணையினங்களாக முன்மொழியப்பட்டன.[6] 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் விவரிக்கப்பட்ட பெரும்பாலான கிளையினங்கள் உரோமத்தின் நிறம், அதன் மீதிருந்த கோட்டின் வடிவங்கள் , உடலின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டன. இவ்வாறு விவரிக்கப்பட்ட பல கிளையினங்களின் நம்பகத்தன்மை 1999 -இல் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. உருவவியல் ரீதியாக வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த புலிகள் சிறிதளவில் மட்டுமே வேறுபடுகின்றன. இதன் விளைவாக, ஆசியாவின் பிரதான நிலப்பரப்பில் வசித்த புலிகள், சுந்தா பெருந் தீவுகளில் வசித்த புலிகள் என இரண்டு புலி கிளையினங்களை மட்டுமே அங்கீகரிக்க முன்மொழியப்பட்டது. ஆசிய பிரதான நிலப்பரப்பில் வசித்த புலிகள் பொதுவாக இலகுவான நிறத்திலான உரோமங்கள், குறைவான எண்ணிக்கையிலான கோடுகளுடன் அளவில் பெரிதாக இருப்பதாக விவரிக்கப்படுகிறது. அதே சமயம் தீவுப் புலிகள் சிறியதாக, அதிக எண்ணிக்கையிலான பட்டையான கருங்கோடுகளுடன் இருந்தன.[7][8]
2015இல் இந்த இரண்டு கிளையினங்களின் முன்மொழிவு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி அனைத்து புலி கிளையினங்களின் உருவவியல், சுற்றுச்சூழல், மூலக்கூறு பண்புகளின் விரிவான பகுப்பாய்வு மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அறிவியலாளர்கள் வங்காளப் புலி, மலேசியப் புலி, இந்தோசீனப் புலி, சைபீரியப் புலி, தென் சீனப் புலி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கிளையினம், சுமாத்திராப் புலி, பாலிப் புலி, சாவகப் புலி ஆகியவற்றை உள்ளடக்கிய மற்றுமொரு கிளையினம் என இரண்டு கிளையினங்களை மட்டுமே அங்கீகரிக்க முன்மொழிந்தனர்.[9][10][11] புலிகளை இரண்டு கிளையினங்களாக பிரிக்கும் இந்த கூற்று சில ஆராய்ச்சியாளர்களால் மறுக்கப்படுகிறது, ஏனெனில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட உயிருள்ள ஆறு கிளையினங்களை மரபணு ரீதியாக வேறுபடுத்தி அறியலாம்.[10] 2018இல் மரபணு ஆராய்ச்சியின் முடிவுகள் உயிருள்ள முன்மொழியப்பட்ட ஆறு கிளையினங்களை ஆதரிக்கின்றன. இந்த கிளையினங்கள் அனைத்தும் ஏறத்தாழ 110,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு பொதுவான மூதாதையரிலிருந்து வந்தவை என்பதைக் குறிக்கின்றன.[12] 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்த ஆறு துணையினங்களின் மரபணு தனித்துவத்தையும் பிரிவினையையும் உறுதிப்படுத்தியுள்ளன.[13][14]
புலிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:[6][11]
பரிணாமம்
| |||||||||||||||||||||||||||
பேரினம் பாந்தராவின் வகைப்பாட்டியல் (உட்கரு டி. என். ஏ. ஆய்வு அடிப்படையில், 2016[31] |

பாந்தெரா எனும் பெரும்பூனை பேரினத்தில் புலியுடன் சிங்கம், சிறுத்தை, ஜாகுவார், பனிச்சிறுத்தை ஆகியவையும் அடங்கியுள்ளன. மரபணு பகுப்பாய்வு முடிவுகள் புலி, பனிச்சிறுத்தை சிற்றினங்கள் ஏறத்தாழ 2.88 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு பொது மூதாதயரிலிருந்து பிரிந்ததாகக் காட்டுகின்றது.[32][35]
இன்று உயிருடன் இருக்கும் அனைத்து புலிகளுக்கும் ஒரே பொதுவான மூதாதையர் 108,000 முதல் 72,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன. 2022ஆம் ஆண்டு ஆய்வு 94,000 ஆண்டுகளுக்கு முன் நவீன புலிகள் ஆசியாவில் தோன்றியதாகவும், நவீன கால புலிகள், முன்னர் வாழ்ந்த பழங்காலப் புலிகலிடையே இனக்கலப்பு இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றது.[36]
கலப்பினங்கள்
லைகர், டைகன் என அழைக்கப்படும் கலப்பினங்கள் புலிகளை சிங்கங்களுடன் இனப்பெருக்கம் செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட கலப்பினங்கள் ஆகும். ஒரு பெண் புலிக்கும் ஆண் சிங்கத்துக்கும் பிறந்த கலப்பின விலங்கை லைகர் எனவும், ஆண் புலி பெண் சிங்கத்திற்கு பிறந்த கலப்பின விலங்கினத்தை டைகன் எனவும் அழைக்கின்றனர். இந்த கலப்பின உயிரினங்கள் சிங்கம், புலி ஆகிய இரண்டின் உடல், நடத்தை குணங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.[37] ஆண் சிங்கங்களிடம் இருக்கும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மரபணுவின் விளைவாக லைகர்கள் பொதுவாக மிகவும் பெரியதாக வளர்கின்றன. இதற்கு மாறாக, ஆண் புலிகளிடம் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மரபணு இல்லாததால் டைகன்கள் இவ்வாறு வளருவதில்லை.[38][37]
Remove ads
பண்புகள்

புலி பூனை குடும்பத்தின் மிகப்பெரிய உயிரினமாக கருதப்படுகிறது.[8] புலியினங்களின் உடல் தோற்றம் பெருமளவில் வேறுபடுவதால், புலியின் "சராசரி" அளவு சிங்கத்தை விட குறைவாக இருக்கலாம், அதே சமயம் அளவில் பெரிய புலிகள் பொதுவாக சிங்கங்களை விட பெரியவை.[7] சைபீரிய மற்றும் வங்காளப் புலிகள் புலியின்களில் மிகப்பெரிய துணையினங்களாகக் கருதப்படுகிறது.[8] வங்காளப் புலிகளின் சராசரி நீளம் மூன்று மீட்டர் வரையிலும், ஆண் புலிகளின் எடை 200 முதல் 260 கிலோ வரையிலும், பெண் புலிகளின் எடை 100 முதல் 160 கிலோ வரையிலும் இருக்கும்.[39] தீவுப் புலிகள் சிறியவையாக இருக்கின்றன, சுமாத்திராப் புலிகளின் நீளம் 2.5 மீட்டர் வரையிலும், ஆண் புலிகள் 100 முதல் 160 கிலோ மற்றும் பெண் புலிகள் 75 முதல் 110 கிலோ எடையுடன் இருக்கின்றன.[39][8] வெவ்வேறு புலி துணையினங்களின் உடல் அளவுகள் அதன் வசிப்பிடங்களின் காலநிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.[8][7]

ஒரு புலியானது வலிமையான தசைகள், சிறிய கால்கள், வலிமையான முன்கால்கள், அகன்ற பாதங்கள், பெரிய தலை மற்றும் நீண்ட வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[8] இதன் முன் பாதங்களில் ஐந்து இலக்கங்களும், பின் பாதங்களில் நான்கு இலக்கங்களும் உள்ளன. இவை அனைத்தும் உள்ளிழுக்கக்கூடிய வளைந்த நகங்களைக் கொண்டுள்ளன.[8] புலியின் மண்டை ஓடு பெரியது மற்றும் உறுதியானது. இது சிங்கத்தின் மண்டை ஓட்டை ஒத்திருக்கிறது. நீள்வட்ட அமைப்புடன் சுருங்கிய முன் பகுதி, நீண்ட நாசி எலும்புகள் மற்றும் ஒரு பெரிய முகடு கொண்டது.[17][8] கீழ் தாடையின் அமைப்பு மற்றும் நாசிகளின் நீளம் ஆகியவை புலியினங்களை பிரித்துக் காட்டும் மிகவும் நம்பகமான குறியீடுகளாகும். புலிக்கு மிகவும் வலுவான பற்கள் உள்ளன மற்றும் இது சற்றே வளைந்த நீளமான கோரை பற்களைக் கொண்டுள்ளது.[8]
உரோமம்
ஒரு புலியின் உரோமம் பொதுவாக மெல்லியதாக இருக்கும். இருப்பினும் சைபீரியப் புலி குளிரைத் தாங்கும் விதமாக அடர்த்தியான உரோமத்தைக் கொண்டுள்ளது.[8][17]ஆண் புலிகள் கழுத்து மற்றும் தாடை பகுதிகளில் அடர்த்தியான முடிகளைக் கொண்டுள்ளது. மேலும் இதன் வாய் பகுதியில் மீசை போன்ற நீண்ட முடிகள் உள்ளது.[8] இவை பொதுவாக செம்மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும், இவற்றின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் சிவப்பு வரை மாறுபடலாம்.[8][7] முகத்தின் சில பகுதிகள் மற்றும் உடலின் அடிப்பகுதியில் இவை வெள்ளை நிற உரோமத்தைக் கொண்டுள்ளன.[8][17] இதன் காதுகளின் பின்புறத்தில் கருப்பு நிறத்தால் சூழப்பட்ட ஒரு வெள்ளை புள்ளியையும் கொண்டுள்ளது.[8]

புலியானது தனித்துவமான கருப்பு அல்லது அடர் பழுப்பு நிற கோடுகளைக் கொண்டுள்ளது. இந்த கோடுகளின் அமைப்பு ஒவ்வொரு புலிக்கும் இடையே வேறுபடுகின்றது.[8][40] கோடுகள் பெரும்பாலும் செங்குத்தாக உள்ளன, ஆனால் மூட்டுகள் மற்றும் நெற்றியில் இவை கிடைமட்டமாக இருக்கும். உடலின் பின்புறத்தில் இவை அதிகமாக உள்ளன மற்றும் வயிற்றின் கீழ் கோடுகள் இல்லாமல் கூட போகலாம். கோடுகளின் நுனிகள் பொதுவாக கூர்மையாக இருக்கும் மற்றும் சிலது பிளவுபடலாம் அல்லது நடுவில் பிரிந்து மீண்டும் ஒண்டு சேரலாம். வாலில் இவை தடிமனான பட்டைகள் போல் அமைந்துள்ளன.[17]
இதன் செம்மஞ்சள் நிறம் புலியின் இரை இதனை எளிதில் கண்டுகொள்ளாமலிருக்க சுற்றுப்புறத்துடன் ஒன்றிணைந்து மறைவதற்கு உதவுகின்றன.[41] காய்ந்த மரங்கள், நாணல்கள் மற்றும் உயரமான புற்களைக் கொண்ட பகுதிகளில் இந்த கோடுகள் புலிகளுக்கு சாதகமாக இருக்கும்.[42][43][44] காதில் உள்ள வெள்ளைப் புள்ளிகள் புலிகளிடையே தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிகின்றது.[8]
நிற வேறுபாடுகள்

புலிகளில் மூன்று நிற வேறுபாடுகள் அறியப்பட்டுள்ளன. கோடுகளற்ற பனி போன்ற வெள்ளை நிற புலிகள், கோடுகளுடன் கூடிய வெள்ளை மற்றும் தங்க நிற உரோமங்களுடன் கூடிய புலிகள் ஆகியவை இதில் அடங்கும். வெள்ளைப்புலி பொதுவாக வெள்ளை நிற பின்னணியில் பழுப்பு நிற கோடுகளுடன் உள்ளது. தங்க நிற புலி சிவப்பு-பழுப்பு நிற கோடுகளைக் கொண்டுள்ளது. பனி வெள்ளைப் புலி வெளிறிய சிவப்பு-பழுப்பு நிற வளையங்கள் கொண்ட வால் பகுதியையும், கோடுகள் இல்லாத அல்லது மிகவும் மங்கலான கோடுகள் கொண்ட உரோமத்தையும் கொண்டுள்ளது. இப்போது காட்டுப் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் இந்த வேறுபாடுகளை இயற்கையில் காண்பது அரிதாகும். ஆனால் உயிரியல் பூங்காக்களில் இது போன்ற புலிகள் இன்றும் வளர்க்கப்படுகின்றன.[45]
வெள்ளைப் புலிகளின் இனப்பெருக்கம் சர்ச்சைக்குரியது, ஏனெனில் புலிகளின் இனப்பாதுகாப்புக்கு அவற்றால் எந்த பயனும் இல்லை. 0.001% காட்டுப் புலிகள் மட்டுமே இந்த நிற உருவத்திற்கான மரபணுக்களைக் கொண்டுள்ளது. செயற்கையாக இவை இனப்பெருக்கம் செய்யப்பட்டால் இவற்றின் விகிதம் அதிகரிக்கின்றது மற்றும் இவை சாதாரண புலிகளுடன் இனப்பெருக்கம் செய்தால், மரபணுக்கலில் மாறுபாடு ஏற்படுத்துகிறது.[46][47]
Remove ads
வாழ்விடம்

புலி வரலாற்று ரீதியாக கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தோசீன தீபகற்பம் வரையிலும், தென்கிழக்கு சைபீரியாவிலிருந்து இந்தோனேசியாவின் சுமாத்திரா, சாவா மற்றும் பாலி தீவுகள் வரையிலும் பரவியிருந்தது.[8] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது அதன் வரலாற்று பரவலில் 7% க்கும் குறைவான இடங்களிலேயே காணப்படுகின்றது. இந்திய துணைக்கண்டம், இந்தோசீன தீபகற்பம், சுமாத்திரா தீவுகள், உருசியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு சீனா ஆகிய இடங்களில் மட்டுமே இவை காணப்படுகின்றன.[1] 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளாவிய புலிகளின் வாழ்விடத்தின் மிகப்பெரிய பரப்பளவு இந்தியாவில் உள்ளது.[48]
புலி முக்கியமாக காடுகளில் வாழ்கிறது.[39] மத்திய ஆசியாவில் இது தாழ்வான மலைகளிலும் பரந்த இலை காடுகளிலும் வசிப்பதாக குறிப்பிடப்படுகின்றன.[49] இந்திய துணைக்கண்டத்தில், இது வெப்பமண்டல அகன்ற இலைக் காடுகள், பசுமையான காடுகள், வெப்பமண்டல உலர் காடுகள்கள், சமவெளிகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளில் வாழ்கின்றன.[50] இமயமலைகளில் இது மிதமான உயரத்தில் உள்ள மலைகளின் நடுவே உள்ள காடுகளில் காணப்படுகின்றன.[51][52][53][54] இந்தோனேசிய தீவுகளில் புலிகள் தாழ்நில சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மலைக் காடுகளில் உள்ளன.[55]
நடத்தை மற்றும் சூழலியல்

புலிகள் பகலை விட இரவில் சுறுசுறுப்பாக இருக்கின்றன. இவை மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கின்றன.[56] அதிகாலையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இவை நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 4.6 கி.மீ. தூரம் பயணிக்கின்றது.[57] புலிகள் அந்தி வேளையில் இருந்து நள்ளிரவு வரை உள்ள நேரத்தில் வேட்டைகளில் ஈடுபடுகின்றது.[58][59]
மற்ற பூனை இனங்களைப் போலவே, புலிகளும் தன்னை தானே நக்குவதன் மூலமும், இவற்றின் உடலிலிருந்து சுரக்கும் ஒரு வகை எண்ணெயைப் உரோமம் முழுவதும் பரப்புவதன் மூலமும் தங்கள் மேலங்கிகளைப் பராமரிக்கின்றன. புலிகள் நன்றாக நீந்த வல்லவை, இவை குறிப்பாக வெப்பமான நாட்களில் பெரும்பங்கை நீர்நிலைகளில் கழிக்கின்றன.[40] பெரிய புலிகள் எப்போதாவது மட்டுமே மரங்களில் ஏறுகின்றன. ஆனால் 16 மாதங்களுக்கும் குறைவான குட்டிகள் வழக்கமாக அவ்வாறு செய்யலாம்.[60]
சமூக இயக்கம்

வயது வந்த புலிகள் பெரும்பாலும் தனிமையில் வாழ்கின்றன. இவை தனக்கென ஒரு இடத்தை நிறுவி அதன் வரம்புகளை பராமரிக்கின்றன. பராமரிக்கப்படும் இடத்தின் அளவு இரையின் மிகுதி, புவியியல் பகுதி மற்றும் பாலினத்தைப் பொறுத்தது. ஆண் மற்றும் பெண் புலிகள் தங்களுக்கென தனி பிரதேசங்களை பாதுகாக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் ஒரு ஆண் புலியின் பிரதேசம் பெரியதாக இருக்கும் மற்றும் அதில் பல பெண் புலிகளின் பிரதேசங்களை உள்ளடக்கியிருக்கலாம்.[8][40][61] இந்தியாவில் பெண் புலிகளின் பிரதேசங்கள் ஏறத்தாழ 46 முதல் 96 சதுர கி.மீ. ஆகவும், ஆண் புலிகளின் பிரதேசங்கள் ஏறத்தாழ 81 முதல் 147 சதுர கி.மீ. ஆகவும் இருந்தன.[62][63] புலிகளின் எண்ணிக்கை அல்லது இரை குறைவாக இருந்தால் அது சில சமயம் பெரிய பிரதேசங்களை ஆள்கின்றன. சீனாவில் ஆண் புலிகள் ஏறத்தாழ 417 சதுர கி.மீ. வரை உள்ள பிரதேசங்களை பாதுகாக்கின்றன.[64][65][66]

புலிகள் நெடுந்தூரம் செல்ல வல்லவை, இவை கிட்டத்தட்ட 650 கி.மீ. தொலைவு வரை பயணிக்கின்றது.[67] இளம் புலிகள் தங்கள் தாயின் பிரதேசத்தின் அருகில் தங்கள் முதல் பிரதேசங்களை நிறுவுகின்றன. இருப்பினும், ஆண் புலிகள் தங்கள் பெண் சகாக்களை விட அதிகமான தூரம் இடம்பெயர்ந்து செல்கின்றன. ஆண் புலிகள் பொதுவாக பெண் புலிகளை விட இளம் வயதிலேயே தாயை பிரிந்து செல்கின்றன.[68] ஒரு இளம் ஆண் புலி மற்றொரு ஆணின் பிரதேசத்தில் தற்காலிகமாக வாழ வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் சண்டைகளின் விளைவாக இளம் ஆண் புலிகளின் ஆண்டு இறப்பு விகிதம் 35% வரை உள்ளது. மாறாக இளம் பெண் புலிகள் 5% என்ற விகிதத்தில் மட்டுமே இறக்கின்றன.[60] புலிகள் தாவரங்கள் மற்றும் பாறைகள் மீது தனது சிறுநீரை தெளித்தல் மற்றும் மரங்கள் மீது தன் உடலிலிருந்து வெளிப்படும் வாசனை கொண்ட சுரப்புகளை தேய்த்தல் மற்றும் அதன் மலத்தை தரையில் தேய்த்தல் போன்ற நடவடிக்கைகளினால் தங்கள் எல்லைக் குறிக்கின்றன.[40][69][70] வாசனை அடையாளங்கள் ஒரு புலியை மற்றோரு புலியால் அடையாளம் காண அனுமதிக்கின்றன. இனப்பெருக்கத்தின் போது ஒரு பெண் புலி தன் வாசனையை அடிக்கடி குறிப்பதன் மூலமும், குரல்களை எழுப்புவதன் மூலமும் தன் இருப்பை ஆண் புலிகளுக்கு தெரிவிக்கும். உரிமை கோரப்படாத பிரதேசங்கள், சில நாட்கள் அல்லது வாரங்களில் வேறொரு புலியால் கையகப்படுத்தப்படலாம்.[40]
பொதுவாக ஆண் புலிகளிடம் சகிப்புத்தன்மை குறைவாகவே இருக்கும். பிரதேச தகராறுகள் பொதுவாக வெளிப்படையான மிரட்டல் மற்றும் சண்டைகளின் மூலம் தீர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் ஆதிக்கம் நிறுவப்பட்டவுடன், ஒரு ஆண் புலி தனது வரம்பிற்குள் இருக்கும் இன்னுமோர் ஆண் புலியை பிரச்சனை இல்லாத வரை பொறுத்துக்கொள்ளலாம். ஒரு பெண் புலிக்காக போட்டியிடும் இரண்டு ஆண் புலிகளுக்கு இடையே மிகவும் கடுமையான தகராறுகள் ஏற்படுகின்றன. புலிகள் பெரும்பாலும் தனியாக வாழ்ந்தாலும், தனிநபர்களுக்கிடையேயான உறவுகள் சிக்கலானதாக இருக்கும். ஆண் சிங்கங்களைப் போலல்லாமல், ஒரு ஆண் புலியானது அதன் பிரதேசத்தில் உள்ள பெண் புலிகள் மற்றும் குட்டிகளுடன் உணவை பகிர்ந்து கொள்ளும்.[71][72]
தொடர்பு
நட்புரீதியான சந்திப்புகள் மற்றும் பிணைப்புகளின் போது, புலிகள் ஒன்றுக்கொன்று உடலைத் தேய்த்துக்கொள்கின்றன.[8][72] புலிகள் மற்றொரு புலியின் அடையாளங்களை முகர்ந்து பார்க்கும் போது ஒரு வித முக பாவத்தை காட்டுகின்றன.[8] புலிகள் தங்கள் மனநிலையை அடையாளம் காட்ட தங்கள் வால்களைப் பயன்படுத்துகின்றன. நல்லுறவைக் காட்ட, வாலை மேலே தூக்கி மெதுவாக அசைகிறது, அதே சமயம் பயம் மற்றும் பணிவை காட்ட வாலைப் பக்கவாட்டாக அசைக்கிறது. பொதுவாக அமைதியாக இருக்கும்போது, வால் தாழ்வாக தொங்கும் நிலையில் உள்ளது.[60]
புலிகள் பொதுவாக பலவிதமான சத்தங்களை எழுப்புகின்றன. தொலைதூரத்தில் உள்ள மற்ற நபர்களுக்கு தங்கள் இருப்பைக் குறிக்க இவை உறுமுகின்றன. இந்த உறுமல் சத்தம் ஏறத்தாழ 8 கி.மீ. தூரம் வரை கேட்கும். ஒரு புலி தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு முறை உறுமலாம். இனச்சேர்க்கையின் போதும், ஒரு தாய் தன் குட்டிகளை தன்னிடம் அழைக்க விளையும் போதும் இவை குறிப்பிட்ட ஒலிகளை எழுப்புகின்றன. பதட்டமாக இருக்கும் போது, புலிகள் ஒரு வகையான முனகல் சத்தத்தை ஏற்படுத்துகின்றன.[8][73] பெரும்பாலும் நட்பு சூழ்நிலைகளில் மெதுவான ஒலிகளை எழுப்புகின்றன.[74] தாய்ப்புலிகள் தங்கள் குட்டிகளுடன் முணுமுணுப்பதன் மூலம் தொடர்பு கொள்கின்றன, அதே நேரத்தில் குட்டிகள் மியாவ் போன்ற ஒளி எழுப்புகின்றன.[72]
வேட்டையாடுதலும் உணவும்

ஊனுண்ணியான புலி மான் மற்றும் காட்டுப் பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடுகின்றது. புலிகள் காட்டெருமை போன்ற பெரிய இரைகளையும், குரங்கு, மயில் மற்றும் பிற பறவைகள், முள்ளம்பன்றி மற்றும் மீன்கள் போன்ற மிகச் சிறிய இரைகளையும் சில சந்தர்ப்பங்களில் கொல்கின்றன.[75][8][40] புலிகள் பொதுவாக இந்திய யானை மற்றும் காண்டாமிருகம் ஆகியவற்றை தாக்குவதில்லை. எனினும் சில சமயங்களில் இந்நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[76][77][78][79] மனிதர்களுக்கு அருகாமையில் இருக்கும் போது, புலிகள் சில நேரங்களில் வீட்டு கால்நடைகள் மற்றும் நாய்களை வேட்டையாடுகின்றன.[8] புலிகள் எப்போதாவது தாவரங்கள், பழங்கள் மற்றும் தாதுப்பொருட்களை உட்கொள்ளும்.[80]
புலிகள் தங்கள் தாயிடமிருந்து வேட்டையாடக் கற்றுக்கொள்கின்றன.[81] இரையைப் பொறுத்து, ஒரு புலி பொதுவாக வாரந்தோறும் கொல்லும்.[39] புலிகள் பொதுவாக தனியாக வேட்டையாடுகின்றன, ஆனால் ஒரு வயது வரை குட்டிகள் ஒன்றாக வேட்டையாடுகின்றன. புலி இரையைத் தேடி நீண்ட தூரம் பயணித்து, இலக்கைக் கண்டுபிடிக்க பார்வை மற்றும் செவித்திறனைப் பயன்படுத்துகிறது.[72] புலிகள் பொதுவாக பதுங்கியிருந்து தாக்கும். சாத்தியமான இரையை நெருங்கும் போது, தலையை குனிந்து முன்னோக்கி ஊர்ந்து செல்கிறது. மேலும் இரை போதுமான அளவு அருகில் வரும் வரை அமைதியாக காத்திருக்கும்.[39] புலிகள் மணிக்கு 56 கி.மீ. வேகமாக ஓடக்கூடியவை. இவை 10 மீட்டர் வரை தாவி பாய்ந்து சென்று இரையை பிடிக்க முடியும்.[72]

புலி பின்னால் அல்லது பக்கவாட்டில் இருந்து தாக்குகிறது. இது முன்னங்கால்களால் இரையைப் பிடித்து பிறகு தொண்டையில் கடித்து கழுத்தை நெரித்து கொள்கின்றது.[8][82] புலிகள் சில நேரங்களில் இரையைக் கொல்ல தொண்டையைக் கிழிப்பது அல்லது கழுத்தை உடைப்பது உள்ளிட்ட பிற முறைகளைப் பயன்படுத்தலாம். பெரிய இரையை கொல்லும் போது அதன் பின்புறத்தில் கடித்து தசைநார்களை துண்டிக்கின்றது. சில சமயங்களில் தனது பாதங்களினால் ஒரு அடி வைப்பதன் மூலம் இறையின் மண்டை ஓட்டை உடைக்கும் திறன் கொண்டது.[39] முழுமையாக வளர்ந்த எருமையின் உடலை சிறிது தூரம் இழுத்துச் செல்லும் வலிமை புலிக்கு உண்டு. இது சாப்பிடுவதற்கு முன் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறது மற்றும் ஒரு அமர்வில் 50 கிலோ இறைச்சியை உட்கொள்ளலாம்.[72]
இனப்பெருக்கம்

புலி ஆண்டு முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றது, ஆனால் பெரும்பாலான குட்டிகள் மார்ச் மற்றும் சூன் மாதங்களுக்கு இடையில் பிறக்கின்றன.[83][8] ஒரு ஆண் புலி தனது எல்லைக்குள் இருக்கும் அனைத்து பெண் புலிகளுடனும் இணைகிறது. இளம் ஆண் புலிகளும் பெண் புலிகளால் ஈர்க்கப்படுவதால் இது சண்டைக்கு வழிவகுக்கிறது, இதில் அதிக ஆதிக்கம் செலுத்தும் ஆண் புலி மற்ற ஆண் புலிகளை விரட்டுகிறது.[83] ஒரு பெண் புலி இனச்சேர்க்கைக்குத் தயாராக இருப்பதைக் காட்ட ஆண் புலி காத்திருக்கிறது. ஒரு பெண் புலி தன் வாலை பக்கவாட்டில் வைத்து ஆண் புலிக்கு சமிக்ஞை செய்கிறது. கலப்பு பொதுவாக 20 முதல் 25 வினாடிகள் நீளமானது மற்றும் புலி சோடிகள் நான்கு நாட்கள் வரை ஒன்றாக இருக்கலாம் மற்றும் பல முறை இனச்சேர்க்கை செய்யலாம். கர்ப்ப காலம் 93 முதல் 114 நாட்கள் வரை இருக்கும்.[83]

ஒரு புலியானது ஒதுங்கிய இடத்தில், அடர்ந்த தாவரங்களில், ஒரு குகையில் அல்லது ஒரு பாறையின் கீழ் குட்டிகளை ஈனுகின்றது .ஒரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈனுகின்றது.[83] புதிதாகப் பிறந்த குட்டிகளின் எடை1.௬ கிலோ வரை இருக்கும், மேலும் இவை பிறக்கும் போது பார்வையற்றவையாக இருக்கின்றன. தாய் தன் குட்டிகளை நக்கி சுத்தப்படுத்துகிறது, பாலூட்டுகிறது மற்றும் அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்கிறது.[83] தாய் புலி குட்டிகளை விட்டு வேட்டையாட வெகுதூரம் பயணிப்பதில்லை. தாய் தனது குட்டிகளை வாயால் கழுத்தை பிடித்து ஒவ்வொன்றாக கொண்டு செல்கிறாள். இந்த ஆரம்ப மாதங்களில் புலி குட்டிகளின் இறப்பு விகிதம் 50% ஐ எட்டும். குட்டிகளால் ஒரு வாரத்தில் பார்க்க முடியும், இரண்டு மாதங்களில் இவை வெளியே வர தொடங்கும்.[83]
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குட்டிகள் தங்கள் தாயைப் பின்தொடர முடியும். பெண் புலி வேட்டையாடச் செல்லும்போது இவை ஒளிந்துகொள்கின்றன. குட்டிகள் விளையாடினாலும், தாயுடன் இணைந்து வேட்டையாடுவதைப் பயிற்சி செய்கின்றன.[71] ஏறக்குறைய ஆறு மாத வயதில், குட்டிகள் அதிக சுதந்திரம் பெறுகின்றன. எட்டு மற்றும் பத்து மாதங்களுக்கு இடையில், இவை வேட்டைக்கு தங்கள் தாயுடன் செல்கின்றின. ஒரு குட்டி 11 மாதங்களிலேயே தனியாக இரையை கொல்ல வல்லது. ஆண் புலிகளுக்கு பெண் புலிகளை விட முன்னதாகவே தனியாக வேட்டையாட சுதந்திரம் கிடைக்கும்.[68] பெண் புலிகள் பாலியல் முதிர்ச்சி அடைய மூன்று முதல் நான்கு வருடங்கள் ஆகும். ஆண் புலிகளுக்கு இது நான்கு முதல் ஐந்து வருடங்களாகும். புலிகள் 26 ஆண்டுகள் வரை வாழலாம்.[8] குட்டிகளை வளர்ப்பதில் ஆண் புலி பங்கு வகிக்காது, ஆனால் இது அவைகளுடன் பழகலாம். வசிக்கும் ஆண் தனது எல்லைக்குள் இருக்கும் குடும்பங்களுக்குச் சென்று உறவாடுகின்றது.They socialise and even share kills.[84][85] One male was recorded looking after orphaned cubs whose mother had died.[86]
Remove ads
அச்சுறுத்தல்கள்

புலியின் வாழ்வின் முக்கிய அச்சுறுத்தல்களில் வாழிட அழிவு, வேட்டையாடுதல் ஆகியவை அடங்கும். இதன் உரோமங்கள், பல் உள்ளிட்ட உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. இதனால் காடுகளில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைத்துள்ளது.[1][48] சாலைகள், இரயில் பாதைகள், மின்சார கம்பிகள், நீர்ப்பாசன கால்வாய்கள், சுரங்க நடவடிக்கைகள் போன்றவற்றால் புலியின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன.[87]காடழிப்பும் பயிரிடலும் புலிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது.[88][89][90][91][92][93] புலிகள் கண்ணி வெடிகள், சறுக்கல் வலைகள், வேட்டை நாய்களைப் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன.[94][95][96][97] 2000-2022 ஆண்டுகளில், 28 நாடுகளில் 3,377 புலிகளின் உடல் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.[98][99][100][101] பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்த புலி உடல பாகங்களுக்கான தேவையும் புலிகளின் எண்ணிக்கைக்கு பெரும் அச்சுறுத்தலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[102][103] கால்நடைகளை புலிகள் தாக்கி வேட்டையாடுவதால், உள்ளூர் மக்கள் புலிகளைக் கொல்வதும் புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு பங்களிக்கிறது.[104][105][106][107][108]
பாதுகாப்பு முயற்சிகள்
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, புலியானது அருகிய இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது.[1] 2010 இல் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியான்மர், உருசியா , சீனா, தாய்லாந்து, லாவோசு, கம்போடியா, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உருசியாவில் சந்தித்து, புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க ஒப்புக்கொண்டனர். ஒரு தசாப்தத்திற்குப் தெற்காசிய நாடுகளும் உருசியாவும் இதில் முன்னேற்றம் கண்டன.[118][48] சர்வதேச அளவில், புலி பாதுகாக்கப்பட்டு, உயிருள்ள புலிகள் மற்றும் அவற்றின் உடல் உறுப்புகளின் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.[1] இந்தியாவில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் கீழ் 1972 முதல் புலிகள் பாதுகாக்கப்படுகிறது.[119]1973 ஆம் ஆண்டில், இந்தியாவில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் புலிகள் திட்டம் புலிகள் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டது. அப்போதிருந்து, 2022 வரை நாட்டில் 53 புலிகள் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன.[120] புலிகளை இன்னிகையில் ஏறத்தாழ 70% இன்று இந்தியாவில் உள்ளது.[118]
நேபாளத்தில் இது தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1973 முதல் பாதுகாக்கப்படுகிறது.[119][118] பூட்டானில், இது 1969 முதல் பாதுகாக்கப்படுகிறது; 2006-2015 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட முதல் புலி செயல் திட்டம் வாழ்விட பாதுகாப்பு, கல்வி மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்டது.[121]வங்காளதேசத்தில், இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 2012 இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.[122][123] 2003 இல் உருவாக்கப்பட்ட மியான்மரின் தேசிய புலிகள் பாதுகாப்பு உத்தியானது சீரழிந்த வாழ்விடங்களை மீட்டெடுப்பது போன்ற மேலாண்மை பணிகளை உள்ளடக்கியது.[124] 2010 ஆம் ஆண்டு தொடங்கி, தாய்லாந்து புலிகளையும் அவற்றின் இரையையும் பாதுகாக்க "தாய்லாந்து புலி செயல் திட்டத்தை" அறிமுகப்படுத்தியது.[118][125] சீனாவில், 1993 ஆம் ஆண்டில் புலிகளின் உடல் பாகங்கள் வர்த்தகம் தடை செய்யப்பட்டது, இது பாரம்பரிய சீன மருத்துவத்தில் புலி எலும்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவியது.[126]
1940 களில், புலி உருசியாவில் அழிவின் விளிம்பில் இருந்தது. அதன் பிறகு வேட்டையாடுவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகள் தொடங்கப்பட்டன, மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் வலையமைப்பு நிறுவப்பட்டது. இது புலிகளின் எண்ணிக்கையில் உயர்வுக்கு வழிவகுத்தது.[127][128] 1994 இல், இந்தோனேசிய சுமத்திரா புலிகள் பாதுகாப்பு உத்தி, சுமத்திராவில் புலிகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுத்தது.[129][130]
Remove ads
மனிதர்களுடனான உறவு

இந்தியாவில் புலி வேட்டையாடப்படும் ஓவியங்கள் 5,000-6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, நாணயங்களில் புலிகளைக் கொல்வது போல் சித்தரிக்கப்பட்டது. புலி வேட்டை 16 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசின் கீழ் நிறுவப்பட்ட ஒரு விளையாட்டாக மாறியது. புலிகள் யானை அல்லது குதிரைகளின் மீது இருந்து துரத்தி கொள்ளப்பட்டன. பிரித்தானியர்கள் 1757 ஆம் ஆண்டிலேயே புலிகளைக் கொல்ல வெகுமதிகளை வழங்கினார்கள். குறிப்பாக 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏறத்தாழ 80,000 புலிகள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[131][132]
மற்ற காட்டு விலங்குகளை விட புலிகள் நேரடியாக அதிக மக்களை கொன்றதாக கூறப்படுகிறது.[133] பெரும்பாலான பகுதிகளில், பெரிய புலிகள் பொதுவாக மனிதர்களைத் தவிர்க்கின்றன, ஆனால் மக்கள் அவற்றுடன் இணைந்து வாழும் இடங்களில் தாக்குதல்கள் நடக்கின்றன.[134][135][134]மனிதர்கள் மீதான பெரும்பாலான தாக்குதல்கள் தற்காப்பிற்காக நடக்கின்றன.[135] மனித உண்ணிப் புலிகள் பெரும்பாலும் வயதான அல்லது காயமுற்ற புலிகளாக இருக்கும்.[40][136]

பழங்காலத்திலிருந்தே புலிகள் காட்சிக்காக பயன்படுத்தப்பட்டன. இவை சிறை பிடிக்கப்பட்டு சாகச நிகழ்ச்சிகள் மற்றும் மிருகக்காட்சி சாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டன. விலங்கு உரிமைக் குழுக்களின் அழுத்தம் மற்றும் இயற்கையான அமைப்புகளில் அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற பொதுமக்களின் அதிக விருப்பத்தின் காரணமாக பல நாடுகளில் புலிகள் மற்றும் பிற விலங்குகளை நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது குறைந்தது. பல நாடுகள் இத்தகைய செயல்களை கட்டுப்படுத்தும் அல்லது தடை செய்யும் சட்டங்களை அமல்படுத்தியுள்ளன.[137] ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் அமெரிக்காவில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.[138] 2020 ஆம் ஆண்டில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7,000–8,000 புலிகள் "புலி பண்ணை"களில் இருந்தன. இந்த புலிகள் பாரம்பரிய மருத்துவத்திற்காக புலி பாகங்களுக்காக வளர்க்கப்படுகின்றன.[138]
கலாச்சார முக்கியத்துவம்
2004ஆம் ஆண்டு அனிமல் பிளானட் நடத்திய வாக்கெடுப்பில், புலி 21% வாக்குகளைப் பெற்று உலகின் விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[139] 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புலி மிகவும் பிரபலமான காட்டு விலங்கு என்று கண்டறியப்பட்டது.[140]
பண்டைய சீனாவில், புலி காட்டின் அரசனாக போற்றப்பட்டது. சீனாவின் பேரரரசரைக் குறிக்கப் புலி பயன்படுத்தப்பட்டது.[141] சீன வானவியலில் புலி பன்னிரண்டு ராசிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தின் பசுபதி முத்திரையில் காட்டப்படும் விலங்குகளில் புலியும் ஒன்று. தென்னிந்தியாவின் சோழ வம்சத்தின் காலத்தில் புலியானது முத்திரைகள், நாணயங்களில் சித்தரிக்கப்பட்டது. புலி சோழர்களின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருந்தது.[60]
புலிகளுக்கு மத முக்கியத்துவம் உண்டு. சில சமயங்களில் இவை வழிபடப்படுவதும் உண்டு. பௌத்த சமயம் புலி, குரங்கு, மான் ஆகியவை மூன்று உணர்வற்ற உயிரினங்கள் என்றும் புலி கோபத்தை குறிக்கிறது என்றும் கூறுகிறது.[142][121] இந்து சமயத்தில், புலி பராசக்தி, ஐயப்பன் ஆகியோரின் வாகனமாக கருதப்படுகின்றது. இதேபோல், கிரேக்க உலகில், புலி தியோனிசசின் வாகனமாக சித்தரிக்கப்பட்டது. கொரிய புராணங்களில் புலிகள் மலைக் கடவுள்களின் தூதர் எனக் கூறப்படுகின்றது.[143]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads