கோலா கிராய் மாவட்டம்
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோலா கிராய் மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Kuala Krai; ஆங்கிலம்: Kuala Krai District; சீனம்: 瓜拉吉赖县; ஜாவி: كوالا كراي) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். 1940-ஆம் ஆண்டுகளில் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது கோலா லெபிர் (Kuala Lebir) என்று அழைக்கப்பட்டது.
இந்த மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 53 மீட்டர் (177 அடி) உயரத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா கிராய் [2]
Remove ads
பொது
முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட கோலா கிராய் மாவட்டம்; கிளந்தான் மாநிலத்தின் மையத்தில் உள்ளது. மலைப்பாங்கான இந்த மாவட்டம் 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, அதன் முழுப் பகுதியும் வெப்பமண்டல மழைக்காடாக இருந்தது. இப்பகுதியில் இரண்டு பெரிய ஆறுகள் உள்ளன. லெபிர் ஆறு; மற்றும் கலாஸ் ஆறு.
இந்த ஆறுகளும் ஒன்றிணைந்து கிளாந்தான் ஆறு (Kelantan River) எனும் ஒரு பெரிய ஆற்றை உருவாக்குகின்றன. பின்னர் இந்த கிளாந்தான் ஆறு 70 கி.மீ. வடக்கு நோக்கிப் பாய்ந்து; மாநிலத்தின் தலைநகரமான கோத்தா பாருவிற்கு அருகில் தென்சீனக் கடலில் சேர்கிறது.
2014-ஆம் ஆண்டு பா குனிங் (Bah Kuning) எனப்படும் கிளாந்தான் பெரும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோலா கிராய் மாவட்டமும் ஒன்றாகும். இதன் விளைவாக சொத்து இழப்புகள் அதிகம் ஏற்பட்டது; அத்துடன் மத்திய அரசு அவசரகால நிலையையும் அறிவித்தது.
Remove ads
தொடருந்து பாதை
20-ஆம் நூற்றாண்டில் போக்குவரத்து இணைப்புகள் மேம்பட்டதால், மக்கள் இந்த மாவட்டத்திற்கு அதிகமாகக் குடிபெயர்ந்தனர். விவசாயத்திற்குக் கிடைக்கும் ஏராளமான நிலத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். மேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய மையங்களுடன் கிளந்தான் மாநிலத்தை இணைக்க 1920-களில் ஒரு தொடருந்து பாதை கட்டப்பட்டது.[3]
இந்தப் பாதை கோலா கிராய் பிரதேசத்தின் வழியாகச் சென்றது. தொடருந்து பாதையின் இரு மருங்கிலும் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் நகரங்களும் கிராமங்களும் தோன்றின. அந்த நேரத்தில் மலாயா முழுவதும் ரப்பர் உற்பத்தி முக்கியத்துவம் பெற்று இருந்தது. அந்தக் கட்டத்தில் பல ரப்பர் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் 1970 - 1980-களில் செம்பனை எண்ணெய் தோட்டங்கள் நிறுவப்பட்டன.
Remove ads
துணை மாவட்டங்கள்
கோலா கிராய் மாவட்டத்தின் பரப்பளவு 2329 கி.மீ.²; மூன்று துணை மாவட்டங்களைக் கொண்டுள்ளது:
- பத்து மெங்கேபாங் - (Batu Mengkebang) (726.9 கி.மீ.²) - 122 கிராமங்கள்
- தாபோங் - (Dabong) (844.5 கி.மீ.²) - 27 கிராமங்கள்
- மானிக் உராய் - (Manek Urai) (757.6 கி.மீ.²) - 67 கிராமங்கள்
கோலா கிராய் நகரம்
கோலா கிராய் நகரத்தின் வரலாறு, 1920-ஆம் ஆண்டுகளில் கிழக்கு கடற்கரை இரயில்வே (East Coast Railway) எனும் கிழக்கு கடற்கரை இரயில்பாதை கட்டுமானத்தில் இருந்து தொடங்குகிறது.
அதற்கு முன், இந்தப் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரே குடியேற்றம் பத்து மெங்கேபாங் (Batu Mengkebang) எனும் கிராம உட்புறப் பகுதியாகும். இந்தப் பத்து மெங்கேபாங் கிராமம், கிளாந்தான் உட்பகுதியில் மிக தொலைவில் இருந்தது. வாரத்தில் ஒரு முறைதான் ஆற்றின் வழியாகத்தான் படகுப் பயணங்கள் இருந்தன.
பத்து மெங்கேபாங் படகுச் சேவை
பத்து மெங்கேபாங் படகுச் சேவையை, டப் டிவலப்மெண்ட் ரிவர் ஸ்டீமர் (Duff Development River Steamers) எனும் பெயரில் கிளாந்தான் அரசாங்கம் நடத்தி வந்தது.[4] வாரத்திற்கு ஒரு முறை தான் கிராம மக்கள் பாசிர் மாஸ் நகரத்திற்கு வர முடியும்.
இரயில் பாதையின் திறப்பு, கிளாந்தான் மாநிலத்தின் தொலைதூர உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. கோலா கிராயில் இருந்த ஆற்றுப் போக்குவரத்து இரயில் சேவையால் முழுமையாக மாற்றம் அடைந்தது.
இப்போது கோலா கிராய் நகரத்திலும்; கோலா கிராய் மாவட்டத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கோலா கிராய் நகரத்திற்கு மிக அருகிலேயே நெடுஞ்சாலைகளை அமைத்து இருக்கிறார்கள். மலேசிய கூட்டரசு சாலை 8 மிக அருகில் இந்த நகரத்தைத் தாண்டித்தான் செல்கிறது.
Remove ads
பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி
கோலா கிராய் மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. கோலா கிராய் மாவட்டத்தில் மட்டும் அல்ல; கிளாந்தான் மாநிலத்திலேயே ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி தான் உள்ளது. அதன் பெயர் பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி. 1945 டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி தோற்றுவிக்கப் பட்டது.[5][6]
1940-ஆம் ஆண்டுகளில் கோலா கிராய் மாவட்டம், வேளாண் துறைக்காக திறந்துவிடப்பட்ட போது அங்கு பல ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழர்கள் நூற்றுக்கணக்கில் கெடா மாநிலத்தின் லூனாஸ், பாலிங், கூலிம், கோலா கெட்டில் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். 9 தமிழ்ப்பள்ளிகள் திறக்கப்பட்டன.[7]
தமிழ்ப்பள்ளிகள் பாதிப்பு
1990-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர், வளர்ச்சி மேம்பாடு திட்டங்கள் காரணமாகவும்; முதலீடு மாற்றங்கள் காரணமாகவும்; கோலா கிராய் மாவட்டத்தில் இருந்த பல ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டன. அவற்றுக்குப் பதிலாக செம்பனை எண்ணெய் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தோனேசியர்களும்; வங்காளதேச மக்களும் அதிகமாக கொண்டு வரப்பட்டார்கள்.
அதன் காரணமாக தமிழர்கள் பலர் வேலை இழந்து நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்தனர்; சிலர் கோலா கிராய் நகர்ப் பகுதியிலேயே சொந்தத் தொழில்களில் ஈடுபட்டனர்; மேலும் சிலர் கோத்தா பாரு நகரத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியச் சென்றனர். அதன் விளைவாக அங்குள்ள தமிழ்ப்பள்ளிகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டன. இப்போது எஞ்சி இருக்கும் ஒரே ஒரு பள்ளி பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி மட்டுமே.[8]
பாசீர் காஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி
முன்பு பாசீர் காஜா தமிழ்ப்பள்ளிக்கு, பாசீர் காஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Pasir Gajah Kelantan) என்று பெயர். இப்போது பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி (SJKT Pasir Gajah Kelantan) என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.[9]
1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கிளாந்தான் மாநிலத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் மாணவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தேசிய மலாய்ப் பள்ளிகளாக மாற்றப் பட்டன. எஞ்சிய ஒரே ஒரு தமிழ் பள்ளிதான் இந்தப் பாசீர் காஜா தமிழ்ப்பள்ளி.[10]
வரலாறு
1956-ஆம் ஆண்டில் இருந்து 1964-ஆம் ஆண்டு வரையில், கோலா கிராய் தமிழ்ப்பள்ளியைக் கிளாந்தான் அரசாங்கம் கண்காணித்து நிர்வகித்து வந்தது. இருப்பினும், 1965-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியின் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. அரசாங்கத்தின் முழு நிதியுதவி பெறும் அரசுப் பள்ளி என கிளாந்தான் அரசாங்க அரசிதழில் வெளியிடப்பட்டது.[7]
அதன் பிறகு இந்தப் பள்ளிக்கு கோலா கிராய் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJK (T) Ladang Pasir Gajah) என மறுபெயரிடப்பட்டது. 2004-ஆம் ஆண்டில், ஒரு புதிய மூன்று மாடி பள்ளியை உருவாக்குவதற்கு கிளாந்தான் அரசாங்கம் RM 2.2 மில்லியன் நிதியை ஒதுக்கியது. அத்துடன் அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் அரசு தமிழ்ப்பள்ளி என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட கட்டிடத்தில் பள்ளி இயங்கத் தொடங்கியது. அன்று முதல், கிளாந்தான் மாநிலத்தின் ஒரே தமிழ்ப்பள்ளியாக இந்தப் பள்ளி இயங்கி வருகிறது.[7]
அனைத்து வசதிகளுடன் நவீனப் பள்ளி
இந்தப் பள்ளியில் 6 வகுப்பறைகள், ஒரு நூலகம், ஓர் அறிவியல் ஆய்வகம், ஓர் ஆசிரியர் அறை, ஓர் அவசர மருத்துவ அறை, ஒரு தொழில்நுட்ப அறை, ஒரு கணினி அறை, ஒரு பெரிய மண்டபம், மாணவர்கள் ஓய்வு அறைகள், மழலையர் பள்ளி என அனைத்து வசதிகளும் உள்ளன. பள்ளியின் வளாகமும் பள்ளியின் திடலும் பெரியவை.
ஒவ்வொரு வகுப்பறையிலும் 50 மாணவர்கள் தாராளமாக அமர்ந்து படிக்கலாம். இந்தப் பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் வசதியாகப் படிக்க முடியும். ஆனால், தற்போது பள்ளியில் 10 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
பிற மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள்; கிளாந்தான் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த 2 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர். இருப்பினும் ஒவ்வொரு வகுப்பிலும் 5-க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால் தற்போதைய நிலைமை மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.[7]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads