ஜுராசிக் பார்க்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜுராசிக் பார்க் (பின்னர் ஜுராசிக் வேர்ல்ட் எனவும் குறிப்பிடப்பட்டது)[1][2][3] என்பது ஒரு அமெரிக்க நாட்டு அறிபுனை ஊடக கதைக்குழுமம் ஆகும். இது படியெடுக்கப்பட்ட தொன்மாக்கள் வாழும் கருப்பொருள் பூங்கா ஒன்றின் வீழ்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் படைத்தவர், அசல் வேலைப்பாடுகள் ...

1990 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் எழுதிய ஒரு புதினம் வெளியாகும் முன்பே அதன் உரிமைகளை யுனிவர்சல் ஸ்டுடியோஸும் அம்ப்ளின் என்டர்டெயின்மென்டும் வாங்கியபோது இக்குழுமம் தொடங்கியது. இப்புதினமும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் திரைப்படத் தழுவலும் வெற்றிகரமாக அமைந்தன. இத் திரைப்படம் 2013-இல் முப்பரிமாண வடிவிலும் வெளியானது.[4] 2018 -இல், அமெரிக்கக் காங்கிரசு நூலகம் , இப் படத்தை "பண்பாட்டு, வரலாற்று அழகியல் முக்கியத்துவம் வாய்ந்தது" என்ற அடிப்படையில் அமெரிக்காவின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுத்தது.[5]

இவற்றின் தொடர்ச்சிகளாக 1995-இல் ஒரு புதினமும் 1997-இல் ஒரு திரைப்படமும் வெளியாயின. இதன்பின் வந்த ஜுராசிக் பார்க் III முதலான படங்கள், கிரைட்டன் புதினங்களின் நேரடித் தழுவல்கள் அல்ல.

நான்காவதாக ஜுராசிக் வேர்ல்ட் என்ற படம் 2005-இல் வெளியாகவிருந்தது. எனினும் பலமுறை தடைபட்டபின் 2015 ஜூனில் வெளியானது. இது, தன் துவக்க வார இறுதியில் உலகளவில் $ 50 கோடி ஈட்டிய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.[6] மேலும் திரையரங்குகளில் மொத்தமாக $ 160 கோடி ஈட்டி அச்சமயத்தில் அதிக வருவாய் ஈட்டிய மூன்றாம் படமாகவும் 2015-இல் அதிக வருவாய் ஈட்டிய இரண்டாம் படமாகவும் ஆனது. பணவீக்க சரிசெய்தல் படி பார்த்தால் இப் படம் ஜுராசிக் பார்க்-குக்கு அடுத்து இக் குழுமத்திலேயே அதிக வருவாய் ஈட்டிய இரண்டாம் படமாக உள்ளது. இதன்பின் இக்குழுமம் ஜுராசிக் வேர்ல்ட் என்றே அழைக்கப்படுகிறது.

ஐந்தாவதாக ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் என்ற படம் 2018-இல் வெளியானது. இது உலகளவில் $130 கோடிக்குமேல் ஈட்டி $100 கோடியைக் கடந்த மூன்றாவது ஜுராசிக் திரைப்படமாகவும், 2018-இல் அதிக வருவாய் ஈட்டிய மூன்றாம் படமாகவும், தற்போதுவரை அதிக வருவாய் ஈட்டிய 13-ஆம் படமாகவும் உள்ளது.

இக் குழுமத்திலுள்ள திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற நிகழ்பட ஆட்டங்களும் வரைகதைகளும் (comics) வெளியாகியுள்ளன. உலகெங்கும் உள்ள யுனிவர்சல் கருப்பொருள் பூங்காக்களில் இவற்றின் அடிப்படையிலான நீர் சவாரிகளும் திறக்கப்பட்டுள்ளன. 2000-ஆம் ஆண்டு நிலவரப்படி இக்குழுமம் $ 500 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.[7] பல அசைவூட்டப் படங்களை லெகோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன் ஆகியன 'ஜுராசிக் வேர்ல்ட்: கேம்ப் கிரடெஷியஸ்' என்ற அசைவூட்டக் குறும்படத் தொடரை செப்டம்பர் 18, 2020 அன்று வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022), ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் (2025) ஆகிய படங்கள் வெளியாயின.

Remove ads

பின்னணி

முகவுரையும் தொன்மாக்களும்

ஜுராசிக் பார்க் குழுமமானது, மனிதர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் தொன்மாக்கள் (மரபணுப் பொறியியல் வழியே படியெடுக்கப்பட்டவை) பற்றிப் பேசுகிறது.[8] இக் கதையின் முதன்மைக் களம்,   நடு அமெரிக்காவுக்கு மேற்கே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகள். எனினும் தொன்மாக்கள் அமெரிக்க நிலப்பரப்பு உட்பட உலகம் முழுவதும் இடம்பெயர்வதை ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் (2018) பேசுகிறது.[9]

பெரும்பாலும் அனிமேட்ரானிக்ஸ் மற்றும் கணினியுருப்படம் வழியே தொன்மாக்களை மீளுருவாக்கிய வகையில் இத் திரைப்படத் தொடர் கவனம் பெற்றுள்ளது.[10][11] முதல் படம், தொல்லுயிரியல் துறையில் கூடுதல் ஆவலை ஈர்த்ததுடன் புதிய காட்சிப்படுத்தல் வழியே தொன்மாக்கள் குறித்த பொதுப் பார்வையை மாற்றியது.[12][13] பிந்தைய படங்கள் தொல்லுயிரியல் உண்மைகளைப் புறந்தள்ளியமை விமர்சிக்கப்பட்டது.[14][15][16] ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022), அண்மைக் கண்டறிதல்களுக்கு ஏற்ப இறகுகள் கொண்ட தொன்மாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.[17]

இன்ஜென்

இன்ஜென் (International Genetic Technologies, Inc) (InGen) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பாலோ ஆல்ட்டோ நகரில் தலைமையிடத்தையும் ஐரோப்பாவில் ஒரு கிளையையும் கொண்டிருந்த (கற்பனை) நிறுவனமாகும்.[nb 1] எனினும், அதன் பெரும்பாலான ஆய்வுகள் கோஸ்ட்டா ரிக்கா நாட்டு (கற்பனை) தீவுகளான ஈஸ்லா நுப்லார், ஈஸ்லா சோர்னா ஆகிய இடங்களிலேயே நடைபெற்றன.[nb 1][nb 2] முதல் புதினத்தின் துவக்கத்தில் இன்ஜென், 1980கள் காலகட்ட மரபியல் தொடக்கநிலை நிறுவனங்களுள் ஒன்றாகவே காட்டப்படுகிறது. எனினும் அப் புதினம் மற்றும் படத்தின் நிகழ்வுகள், மெசோசோயிக் ஊழியைச் சேர்ந்த தொன்மாக்கள் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குவாகா வரையான பல்வகை உயிரினங்களை (அக்காலங்களில் அம்பர் பிசினில் மாட்டிய கொசுக்களின் உடலில் இருந்த அவற்றின் குருதியைக் கொண்டு) படியெடுக்கும் முறையை இன்ஜென் கண்டறிந்ததாகக் கூறுகின்றன.[nb 1]

இன்ஜென், முதல் புதினத்தில் ஜுராசிக் பார்க் பூங்காவை நடத்தும் நிறுவனமாக நிறுவப்பட்டது. ஆனால் கதைசொல்லலில் எளிமை வேண்டி முதல் படம், ஜுராசிக் பார்க் என்ற வணிகக் குறியீட்டை மட்டுமே வலியுறுத்தியது. InGen என்ற பெயர் படத்தில் கணினித் திரைகள், சுழலிறகிகள் போன்றவற்றில் தெரிந்தாலும் ஒருபோதும் குறிப்பிட்டுப் பேசப்படவில்லை. இன்ஜென்னின் நிறுவன அடையாளம் இரண்டாம் படத்தில் முதன்மை பெறுகிறது. ஜுராசிக் வேர்ல்ட் (2015) காலகட்டத்தில் இன்ஜென் மற்றும் அதன் அறிவுசார் சொத்துகள் அனைத்தும் மஸ்ரானி குழுமத்தால் (Masrani Global Corporation) வாங்கப்படுகின்றன.

Beacham's Encyclopedia of Popular Fiction என்ற நூல், இன்ஜென்னைப் பிற தீய நிறுவனங்களுடன் ஒப்பிடத்தக்கதெனக் கூறுகிறது.[18] பிற தரவுகள், டி.ரெக்ஸ் குட்டியை இன்ஜென் பெறும் நிகழ்வை கிங் காங் படத்தின் மறை குறிப்பாகக் கருதுகின்றனர்.[19] இன்ஜென்னை ஜான் கிரிஷாம்மின் த ஃபெர்ம் புதினத்தில் வரும் நிறுவனத்தைப் போலவே தீர்மானமான கமுக்கத்தன்மை வாய்ந்தது என்கிறார் கென் கெல்டர்.[20]

பயோசின்

புதினங்கள் கூறுவதுபடி பயோசின் கார்ப்பரேஷன் (Biosyn Corporation அல்லது சுருக்கமாக பயோசின் - Biosyn) என்பது இன்ஜென்னின் போட்டி நிறுவனம். இது தன் தொழில்துறை உளவு நடவடிக்கைகளை முன்னிட்டு சர்ச்சைகளுக்குப் பெயர்பெற்றது. முதல் படத்தில், இன்ஜென்னிடம் உள்ள தொன்மாக்களின் மரபணுக்களை வேட்டை மற்றும் மருந்தியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் நோக்கில் இந்நிறுவனம் கைப்பற்ற எண்ணுகிறது.

பயோசின் ஜெனடிக்ஸ் (Biosyn Genetics) என்ற நிறுவனம், ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022) திரைப்படத்தில் அறிமுகமாகிறது. முதல் படத்தில் சாதாரண ஊழியராக இருந்த லூயிஸ் டாட்ஜ்சன் இப்போது இந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் (CEO) ஆகிறார்.

ஈஸ்லா நுப்லார்

Thumb
ஜுராசிக் பார்க் (1993) திரைப்படத்தில் காணப்படும் ஈஸ்லா நுப்லார் தீவின் வரைபடம். பல்வேறு சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு இரசிகர்களால் உருவாக்கப்பட்டது.  புதினம், நிகழ்பட ஆட்டங்கள், ஜுராசிக் வேர்ல்ட் திரைத்தொடர் ஆகியவற்றில் இத் தீவின்  தளவமைப்புகள் வெவ்வேறாகத் தோன்றினாலும் அதன் ஒட்டுமொத்த வடிவம், எப்போதும் தலைகீழ் கண்ணீர்த்துளி போலவே உள்ளது.

இத் தீவு ஜுராசிக் பார்க் புதினம் மற்றும் முதலாம், நான்காம், ஐந்தாம் படங்களின் கதைக்களமாக உள்ளது. புதினத்தின்படி, இத் தீவின் பெயர், ஸ்பானிய மொழியில் ""முகில் சூழ்ந்த தீவு" எனப் பொருள்படும். இவ் வெப்பமண்டலத் தீவானது கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் மேற்கே 120 மைல் தொலைவில் அமைந்துள்ளது. முதல் புதினம் மற்றும் படத்தின்படி, இங்கு அமையவிருந்த தொன்மா கருப்பொருள் பூங்கா, அதன் விலங்குகள் தப்பியமையால் கைவிடப்பட்டது. முதல் புதினத்தில், கோஸ்ட்டா ரிக்க அரசு இத் தீவைப் பாதுகாப்பற்றது என அறிவித்து அதை நாபாம் கொண்டு அழிக்கிறது. எனினும் திரைக்கதையின்படி இத் தீவு ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதி வரை காண்பிக்கப்படுகிறது.

ஜுராசிக் வேர்ல்ட் (2015) படத்தில், மஸ்ரானி குளோபல் கார்ப்பரேசன் இங்கு ஒரு கருப்பொருள் பூங்காவைத் திறப்பதாகக் கதை அமைந்துள்ளது . எனினும் கதையின் இறுதியில் மீண்டும் தொன்மாக்கள் இத் தீவை மேற்கொள்கின்றன. ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் படத்தில், இத் தீவிலிருந்த ஒரு எரிமலை வெடித்து முழுத் தீவையும் அழிக்கிறது.[21]

ஈஸ்லா சோர்னா

ஈஸ்லா நுப்லாருக்குத் தென்மேற்கே 87 மைல்கள் தொலைவிலும், கோஸ்டா ரிக்காவுக்கு மேற்கே 207 மைல்கள் தொலைவிலும் அமைந்துள்ளது ஈஸ்லா சோர்னா. லாஸ் சின்கோ மியூர்டெஸ் ( Las Cinco Muertes - ஐந்து சாவுகள்) என்றழைக்கப்படும் ஐந்து தீவுகள் அடங்கிய சங்கிலியின் ஒரு பகுதியாக ஈஸ்லா சோர்னா உள்ளது, பிற தீவுகள் கதையில் வரவில்லை. Site B எனவும் அறியப்படும் ஈஸ்லா சோர்னா, த லொஸ்ட் வேர்ல்ட் புதினம் மற்றும் இரண்டாம் மூன்றாம் படங்களின் கதைக்களமாக உள்ளது. ஈஸ்லா நுப்லாரை விடப் பெரியதான இங்கு வெப்பமண்டலம், உயர்நில வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மழைக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு காலநிலைகள் உள்ளன.

இன்ஜென் அதன் தொன்மா ஆராய்ச்சியின் பெரும்பகுதியை நடத்தியதும், தொன்மாக்கள் உருவாக்கப்பட்டுப் பின் ஈஸ்லா நுப்லாருக்குக் கொண்டுசெல்லப்பட்டதும் இங்கிருந்துதான். இரண்டாம் படத்தின் முடிவில், தொன்மா உயிரியல் காப்பகமாக ஈஸ்லா சோர்னா அறிவிக்கப்படுகிறது.[22] நான்காம், ஐந்தாம் படங்கள் இத் தீவின் நிலையைக் குறிப்பிடவில்லை. எனினும் ஐந்தாம் படத்துக்கான ஒரு விளம்பர வலைப்பக்கத்தில், சட்டவிரோதமாகப் படியெடுக்கப்பட்ட விலங்குகள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தீவின் சூழல் மண்டலம் சீர்கெட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய தொன்மாக்கள் ஈஸ்லா நுப்லாரில் அமைக்கப்பட்ட ஜுராசிக் வேர்ல்ட் கருப்பொருள் பூங்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.[22]

ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தில், ஈஸ்லா சோர்னாவைச் சேர்ந்த இரு வளர்ந்த டி-ரெக்ஸ்கள், ஈஸ்லா நுப்லாரில் இருந்து வந்த மற்றொரு டி-ரெக்சை எதிர்கொள்கின்றன. அதே படத்தில், இரு தீவுகளின் தொன்மாக்களும் பயோசின் நிறுவனத்துக்குச் சொந்தமான பள்ளத்தாக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராம்சே கோல் என்ற கதைமாந்தர் குறிப்பிடுகிறார். மெய்ஸி லாக்வுட்டுக்கு ஹென்றி வூ காண்பிக்கும் 1986 ஆம் ஆண்டைச் சேர்ந்த காணொளியில் இத்  தீவு தோன்றுகிறது.

Remove ads

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் படம், வெளியீட்டு நாள் (ஐக்கிய அமெரிக்கா) ...
Remove ads

வரவேற்பு

மொத்த வருவாய்

மேலதிகத் தகவல்கள் படம், வட அமெரிக்கா வெளியீட்டு தேதி ...

குறிப்புகள்

  1. புதினங்களின் படி.
  2. முதல் இரு திரைப்படங்களின்படி.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads