ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (Jurassic World: Dominion) என்பது 2022-இல் கோலின் திரெவாரோ இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். மேலும் இது ஜுராசிக் வேர்ல்ட் வரிசையின் மூன்றாம் படமும், ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஆறாம் படமும் ஆகும். திரெவாரோவும் முதல் இரண்டு படங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கும் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
ஈஸ்லா நுப்லார் தீவின் தொன்மாக்களும் ஏனைய தொல்விலங்குகளும் அமெரிக்கத் தலைநிலம் மற்றும் உலகின் பல இடங்களில் பரவத் தொடங்கி நான்காண்டுகள் கடந்தபின் இப் படத்தின் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.[5][6][7][8][9][10]
முந்தைய படங்களில் தோன்றிய நடிகர்களுள் 10 பேர் தங்கள் பாத்திரங்களை மீண்டும் ஏற்றுள்ளனர். இவர்களோடு புதுமுகங்களும் நடித்துள்ளனர்.
இப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 24, 2020 அன்று துவங்கியது. பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 13, 2020 அன்று நிறுத்திவைக்கப்பட்டது. ஜூலை 6 அன்று மீண்டும் துவங்கி நவம்பர் 6 அன்று நிறைவுற்றது.
யுனிவர்சல் ஸ்டுடியோஸால் வழங்கப்பட்ட இப் படம் மே 23, 2022 அன்று மெக்சிக்கோ சிட்டியில் திரையிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் 10, 2022 அன்று ஐமேக்ஸ், 4DX, RealD 3D, டால்பி சினிமா ஆகிய திரை வடிவங்களில் வெளியானது.[11][12][13][14][15] உலகளவில் $100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி, 2022 பட வருவாய்ப் பட்டியலில் நான்காம் இடம் பெற்றது. பல திறனாய்வாளர்கள் இத் தொடர் முன்பே நிறைந்திருக்கவேண்டியது என்பதாகக் கூறினர்.
இதன் தனித் தொடர்ச்சியாக ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் எனும் திரைப்படம் 2 சூலை 2025 அன்று வெளியானது.
Remove ads
கதைச்சுருக்கம்
ஈஸ்லா நுப்லார் எரிமலை வெடிப்பு, லாக்வுட் மாளிகை நிகழ்வு ஆகியவைக்குப் பின்னான நான்கு ஆண்டுகளில் அங்கிருந்து தப்பிய தொன்மாக்கள், ஆக்கிரமிப்பு உயிரினங்களாக மாறி உலகெங்கும் சூழலியல் அழிவுகளையும் தாக்குதல்களையும் நிகழ்த்துகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசின் ஒப்புதலுடன், பயோசின் ஜெனிடிக்ஸ் நிறுவனம் இத்தாலியின் டோலமைட் மலைப்பகுதியில் ஒரு தொன்மாக் காப்பகத்தை நிறுவியுள்ளது. அங்கு அந் நிறுவனம், மருந்தியல் மற்றும் உழவியல் துறைகளில் புதுமைகள் படைக்கும் நோக்கில் மரபணுத்தொகையியல் ஆய்வுகளை மேற்கொள்கிறது.
தங்கள் Dinosaur Protection Group அமைப்பைத் தொடர்ந்து இயக்கிவரும் கிளேர் டியரிங், ஸியா ரோட்ரிக்ஸ், பிராங்க்ளின் வெப் ஆகியோர், சட்டவிரோத தொன்மா இனப்பெருக்கக் களங்களை உளவு பார்க்கின்றனர். கிளேரின் தோழனான ஓவன் கிரேடி, ஆதரவற்ற தொன்மாக்களை இடப்பெயர்வு செய்யும் கையாளுனராக இவர்களுக்கு உதவுகிறார். சியேரா நிவாடா மலைத்தொடரில் உள்ள தங்கள் மரக்குடிலில் ஓவனும் கிளேரும் பெஞ்சமின் லாக்வுட்டின் படியாக்கப் பேர்த்தியான மெய்ஸி-யை பயோசின் போன்ற உயிரியல் நிறுவனங்களின் பார்வையில் படாமல் வளர்த்துவருகின்றனர். ஓவனிடம் பயிற்சி பெற்ற வெலாசிராப்டரான "புளூ", கலவியற்ற இனப்பெருக்கம் வழியே பிறந்த தன் குட்டியுடன் அங்கு வருகிறது. அக் குட்டிக்கு பீட்டா (Beta) எனப் பெயரிடுகிறார் மெய்ஸி. மேலும் அவர், தனிமையில் வாழ்வதால் விரக்தியடைந்த நிலையில் கிளாரி மற்றும் ஓவனிடம் இருந்து பதுங்கிச் செல்கிறார். அப்போது அங்கு வரும் பயோசின் ஆட்கள் அவரையும் பீட்டாவையும் கடத்திச் செல்கின்றனர்.
வேறு சில இடங்களில், மீளுருவாக்கப்பட்ட பழங்கால வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டங்களாகத் தோன்றிப் பயிர்களை அழிக்கின்றன. பயோசின் உருவாக்கிய விதைகளைப் பயன்படுத்திப் பெருநிறுவன அளவில் வளர்க்கப்படும் பயிர்கள் இந்நிகழ்வுகளில் பாதிக்கப்படாமல் உள்ளதை அறியும் தொல் தாவரவியல் வல்லுநர் எல்லி சாட்லர், இதற்குப் பின்னால் பயோசின் இருக்கலாம் என ஐயுறுகிறார். இவ்வெட்டுக்கிளிகள் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதும் அவர் இச்சிக்கலில் உதவி வேண்டித் தன் நெடுநாள் சகாவான தொல்லுயிரியலாளர் ஆலன் கிரான்ட்-டை அணுகுகிறார்.
நடுவண் ஒற்று முகமையின் (CIA) தொன்மா கையாளுதல் பிரிவில் பணியாற்றும் பிராங்க்ளின் வெப், மெய்ஸியும் பீட்டாவும் மால்ட்டா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கிளாரி-ஓவன் இணையரிடம் கூறுகிறார். மால்ட்டா செல்லும் கிளேரும் ஓவனும் அங்குள்ள தொன்மா கறுப்புச் சந்தை ஒன்றினுள் ஊடுருவுகின்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சோதனை செய்கையில் அங்குள்ள இரைகௌவித் தொன்மாக்கள் விடுவிக்கப்பட்டுப் பேரழிவை நிகழ்த்துகின்றன. ஓவனின் முன்னாள் ஜுராசிக் வேர்ல்ட் உடனூழியரும் தற்போது மால்ட்டாவில் கமுக்கமாகப் பணியாற்றுபவருமான பேரி சம்பென், இத்தாலியில் உள்ள பயோசின் ஆய்வகத்துக்கு மெய்ஸியும் பீட்டாவும் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். கறுப்புச் சந்தையில் பணியாற்றிய கைலா வாட்ஸ் என்ற சரக்கு வானோடி, கிளேர்-ஓவன் இணையரை அங்கு அழைத்துச்செல்கிறார்.
இதற்கு முன்னதாக பயோசின் தலைவர் லூயி டாட்ஜ்சன் செய்த சட்டவிரோதச் செயல்களை அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பு இயக்குநர் ராம்சே கோல் வழியே அறிந்த இயான் மால்கம் (தற்போது பயோசின் ஆலோசகர்), அவற்றை அம்பலப்படுத்த எல்லியின் உதவியை நாடியிருந்தார். மேலும் பயோசின் மரபணு வல்லுநர் ஹென்றி வூ, உலகின் உணவு வழங்கலைக் கட்டுப்படுத்த வெட்டுக்கிளிகளை மீளுருவாக்கியமையும் பயோசின் பயிர்களைத் தவிர்க்கும்படி அவற்றை வடிவமைத்தமையும் தெரியவருகிறது. உலகளாவிய பஞ்சத்தை ஏற்படுத்தவல்ல அத் திட்டத்தைத் தற்போது வூ வெறுக்கிறார். அங்கு அழைத்துவரப்படும் மெய்ஸியிடம் உரையாடும் அவர், தன் முன்னாள் சகாவும் பெஞ்சமின் லாக்வுட்டின் காலமான மகளுமான சார்லட் லாக்வுட், அவர்தம் சொந்த மரபணுவைப் பயன்படுத்தி உருவத்தில் தன்னைப்போலவே உள்ள மெய்ஸியைக் கலவியற்ற இனப்பெருக்கம் வழியே பெற்றெடுத்த செய்தியைப் பகிர்கிறார். மேலும் சார்லட் தனக்கு இருந்த ஒரு கொடிய நோயை மெய்ஸி மரபுரிமையாகப் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் மெய்ஸியின் மரபணுவை மாற்றியமைத்தமையும் தெரியவருகிறது. மெய்ஸி, புளூ ஆகியோர் பிறந்த விதமும் அவர்களின் மரபணுக்களும் வெட்டுக்கிளிப் பேரிடரைத் தடுக்கவல்ல ஒரு நோய்க்காரணியை உருவாக்கப் பெரிதும் உதவும் என வூ நம்புகிறார்.
இச்சமயம் கைலா, கிளேர், ஓவன் ஆகியோருடன் பயோசின்-னின் வான்வெளியை அடையும் வானூர்தியை கெட்சால்கோட்லஸ் என்ற பழங்காலப் பறவை தாக்குகிறது. இதனால் வானூர்தியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தரையிறங்கும் கிளேர், தெரெசினோசாரஸ் என்ற தொன்மாவிடமிருந்து தப்புகிறார். மறுபுறம் தரையில் மோதிய வானூர்தியிலிருந்து வெளியேறிய கைலாவும் ஓவனும் பைரோராப்டர் என்ற தொன்மாவிடமிருந்து தப்பி மீண்டும் கிளேருடன் இணைகிண்றனர்.
மறுபுறம் பயோசின் நிறுவனத்துக்கு வருகை தரும் எல்லியும் கிரான்ட்டும் ஒரு தடை செய்யப்பட்ட ஆய்வகத்துள் ஊடுருவி அங்குள்ள வெட்டுக்கிளி மாதிரி ஒன்றைக் கைப்பற்றுகின்றனர். பின்னர் அங்கு வரும் மெய்ஸியை அழைத்துக்கொண்டு தப்புகின்றனர். இவ்வூடுருவலை அறியும் டாட்ஜ்சன் பிற வெட்டுக்கிளிகளைத் தீயிட்டு அழிக்கிறார். எனினும் அவற்றுள் சில, எரிந்துகொண்டே வெளியேறி ஒரு மாபெரும் காட்டுத்தீயை ஏற்படுத்துகின்றன. இதனால் பயோசின் மண்டலம் முழுதும் உள்ள ஊழியர்கள் வெளியேறுகின்றனர்.
ஆய்வகத்திலிருந்து மயிரிழையில் தப்பும் எல்லி, கிரான்ட், மெய்ஸி ஆகிய மூவரும் ஒருவழியாக மால்கம், ஓவன், கிளேர், கைலா ஆகியோருடன் இணைகின்றனர். இதற்கிடையே தன்னிடம் உள்ள தொன்மா முளையங்களுடன் ஒரு வேகவளையத்தில் தப்பும் டாட்ஜ்சன், வழியிலேயே சுரங்கப்பாதையில் சிக்கி மூன்று டைலோஃபோசாரஸ் தொன்மாக்களுக்கு இரையாகிறார்.
பீட்டாவைக் கண்டடையும் ஓவன் அதை மயக்கப்படுத்துகிறார். எழுவர் குழுவை விரட்டும் ஒரு ஜைகனோடோசாரஸை டி-ரெக்ஸ், தெரெசினோசாரஸ் ஆகியன கொல்கின்றன. கிரான்ட் உள்ளிட்ட எழுவரும் வூவை அழைத்துக்கொண்டு பயோசின் வானூர்தி ஒன்றில் அப்பகுதியை விட்டு வெளியேறுகின்றனர்.
தங்கள் உறவைப் புதுப்பித்துக்கொள்ளும் எல்லியும் கிரான்ட்டும், மால்கம் மற்றும் ராம்சேவுடன் சேர்ந்து பயோசின்னுக்கு எதிரான நீதிவிசாரணையில் சாட்சியமளிக்கின்றனர். ஓவன், கிளேர், மெய்ஸி ஆகியோர் வீடு திரும்பி பீட்டாவை புளூவுடன் சேர்த்துவைக்கின்றனர். தான் திட்டமிட்டவாறே வூ ஒரு நோய்க்காரணியை உருவாக்கி வெட்டுக்கிளிகளை அழிக்கும் நோக்கில் வெளியிடுகிறார்.
உலகெங்கிலும், தொன்மாக்கள் தற்கால விலங்குகளுடன் இணைந்து வாழ்கின்றன. ஐக்கிய நாடுகள் அவை, பயோசின் பள்ளத்தாக்கை தொன்மா சரணாலயமாக அறிவிக்கிறது.
Remove ads
நடித்தவர்கள்
முதன்மைக் கட்டுரை: ''ஜுராசிக் பார்க் தொடரில்'' தோன்றிய கதைமாந்தரின் பட்டியல்
எண் | கதைமாந்தர் | நடித்தவர் | குறிப்பு |
1 | ஓவன் கிரேடி (Owen Grady) | கிறிஸ் பிராட் (Chris Pratt)[16] | விலங்கின நடத்தையியல் வல்லுநர்; கடற்படைக் கால்நடை மருத்துவர் ; ஜுராசிக் வேர்ல்ட் -டில் வெலோசிராப்டர்களைப் பயிற்றுவித்த ஊழியர்; கிளாரின் காதலர்; மெய்ஸியின் வளர்ப்புத் தந்தை. |
2 | கிளேர் டியரிங் (Claire Dearing) | பிரைஸ் டல்லஸ் ஹோவார்டு (Bryce Dallas Howard)[16] | முன்னாள் ஜுராசிக் வேர்ல்ட் பூங்கா மேலாளர் ; தற்போது தொன்மா பாதுகாப்புக் குழுவின் நிறுவனர்; ஓவனின் காதலி; மெய்ஸியின் வளர்ப்புத் தாய். |
3 | ஆலன் கிரான்ட் (Dr.Alan Grant) | சாம் நெய்ல் (Sam Neill)[17] | தொல்லுயிர் ஆய்வாளர்; 1993-இல் ஜான் ஹேமன்டின் ஜுராசிக் பார்க்கைப் பார்வையிட்டவர்களுள் ஒருவர்; ஜுராசிக் பார்க் III (2001) படத்தில் காண்பிக்கப்படும் ஈஸ்லா சோர்னா நிகழ்வில் உயிர்தப்பியோருள் ஒருவர். |
4 | எல்லி சாட்லர் (Dr.Ellie Sattler) | லாரா டென் (Laura Dern)[17] | தொல்தாவர ஆய்வாளர்; 1993-இல் ஜான் ஹேமன்டின் ஜுராசிக் பார்க்கைப் பார்வையிட்டவர்களுள் ஒருவர். |
5 | இயான் மால்கம் (Dr.Ian Malcolm) | ஜெஃப் கோல்ட்ப்ளும் (Jeff Goldblum)[17] | ஒழுங்கின்மை கோட்பாட்டாளர் ; ஜுராசிக் பார்க்கின் முன்னாள் ஆலோசகர்; த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் (1997) படத்தில் காண்பிக்கப்படும் சான் டியாகோ நிகழ்வில் தொடர்புடையோரில் முதன்மையானவர். |
6 | பேரி சம்பென் (Barry Sembène) | ஓமர் சை (Omar Sy)[18][19] | ஜுராசிக் வேர்ல்ட்டில் ஓவனுடன் பணிபுரிந்த முன்னாள் விலங்கு பயிற்சியாளர், தற்போது பிரெஞ்சு உளவாளி. |
7 | ஸியா ரோட்ரிக்ஸ் (Zia Rodriguez) | டானியெல்லா பினெடா (Daniella Pineda)[20] | தொல்விலங்கு மருத்துவர்; தொன்மா பாதுகாப்புக் குழு உறுப்பினர். |
8 | பிராங்க்ளின் வெப் (Franklin Webb) | ஜஸ்டிஸ் ஸ்மித் (Justice Smith)[20] | ஜுராசிக் வேர்ல்ட்டின் முன்னாள் தொழில்நுட்ப வல்லுநர்; தொன்மா பாதுகாப்புக் குழு உறுப்பினர். |
9 | சொயோனா சாண்டோஸ்
(Soyona Santos) |
டீச்சன் லேக்மன் (Dichen Lachman)[21] | தொன்மாக்களைக் கடத்துபவர் |
10 | ரைன் டெலகோர்
(Rainn Delacourt) |
ஸ்காட் ஹேஸ் (Scott Haze)[22] | பயோசின்-னுக்காக மெய்ஸி, பீட்டா ஆகியோரைக் கடத்தியவர். |
11 | மெய்ஸி லாக்வுட் (Maisie Lockwood) | இசபெல்லா செர்மன் (Isabella Sermon)[23] | பெஞ்சமின் லாக்வுட்டின் படியாக்கப் பேர்த்தி; ஓவன் மற்றும் கிளேரின் வளர்ப்பு மகள் |
12 | ஹென்றி வூ (Dr. Henry Wu) | பி. டி. வோங் (B. D. Wong)[23] | ஜுராசிக் பார்க் மற்றும் ஜுராசிக் வேர்ல்ட் பூங்காக்களின் முன்னாள் மரபியல் வல்லுநர். |
13 | ராம்சே கோல்
(Ramsay Cole) |
மாமெடூ ஆச்சே (Mamoudou Athie)[24] | பயோசின் செய்தித்தொடர்பு இயக்குநர் |
14 | கைலா வாட்ஸ்
(Kayla Watts) |
டிவாண்டா வைஸ் (DeWanda Wise)[25] | ஓவன் மற்றும் கிளாருக்கு உதவும் முன்னாள் வான்படை வானோடி. |
15 | லூயி டாட்ஜ்சன்
(Dr. Lewis Dodgson) |
காம்ப்பெல் ஸ்காட் (Campbell Scott ) | பயோசின் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர்; ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் இப் பாத்திரத்தை கேமரூன் தோர் (Cameron Thor) ஏற்றிருந்தார் |
16. | சார்லட் லாக்வுட்
(Charlotte Lockwood ) |
எல்வா ட்ரில் (Elva Trill)[26] | மெய்ஸியின் உண்மையான தாய்; இவரின் இளம் அகவைத் தோற்றத்தையும் மெய்ஸியாக நடித்த இசபெல்லா செர்மனே ஏற்றுள்ளார். |
17 | டிமிட்ரி திவயோஸ்[27]
(Dimitri Thivaios) |
மால்ட்டா நாட்டைச் சேர்ந்த கூலிப்படை உறுப்பினர். | |
18. | வையட் ஹன்ட்லி
(Wyatt Huntley) |
கிறிஸ்டோஃபர் பொலாஹா[28](Kristoffer Polaha) | டெலகோரின் உதவியாட்களுள் ஒருவர். |
19. | ஷீரா
(Shira) |
வரடா சேது[29] (Varada Sethu) | மீன்வளம் மற்றும் வனத்துறை அலுவலர். |
20. | விகி (Wigi) | என்ஸோ ஸ்கில்லினோ ஜூனியர்
(Enzo Squillino Jnr ) |
Remove ads
தயாரிப்பு
முன்னேற்றம்
ஜுராசிக் வேர்ல்ட் (2015) திரைப்படம் குறித்த துவக்க உரையாடல்களின்போது, அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க், மேலும் பல படங்களைத் தயாரிக்க ஆர்வமாக இருப்பதாக இயக்குநர் கோலின் திரெவாரோவிடம் கூறினார்.[30] ஏப்ரல் 2014 இல், திரெவாரோ, ஜுராசிக் வேர்ல்ட்டின் தொடர்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அறிவித்தார். மேலும் "மனப்போக்கும் அத்தியாயத்தன்மையும் சற்றுக் குறைவாக இருக்கக்கூடிய ஒன்றை, முழுமையான கதையாக உணரக்கூடிய ஒரு தொடருக்குள் வளைந்து பொருந்தக்கூடிய ஒன்றை நாங்கள் உருவாக்க விரும்பினோம்." என்றார்.[31]
ஜுராசிக் வேர்ல்ட்-டில் ஓவனாக நடித்த கிறிஸ் பிராட், இத் தொடரின் மேலதிக படங்களுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[32] ஜுராசிக் வேர்ல்ட்-டில் ஓவனுக்கும் பேரிக்கும் (ஓமர் சை) இடையே காட்டப்பெற்ற நட்பு, அதன் தொடர்ச்சிகளிலும் தொடரக்கூடும் என திரெவாரோ கூறினார்.[31]
மே 2015 -இல், திரெவாரோ, பிற இயக்குநர்கள் இத் தொடரின் எதிர்வரும் படங்களில் பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கூறினார், வெவ்வேறு இயக்குநர்கள், மேலதிகப் படங்களுக்கு வெவ்வேறு பண்புகளைக் கொண்டுவரமுடியும் என்று அவர் நம்பினார்.[33] மறுமாதம் மேலும் கூறுகையில்: "மிஷன்: இம்பாசிபிள், ஸ்டார் வார்ஸ் முதலான உரிமைக்குழுமங்கள் போல புதிய குரல்கள் மற்றும் புதிய பார்வைகளால் உண்மையாகவே இது பயனடையப்போகிறது.... இதை நாம் புதிதாகவும் மாறக்கூடியதாகவும் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைவதாகவும் வைத்திருக்க வேண்டும் " என்றார்.[34] மேலும் இத் தொடர், தொடர்ந்து ஒரு தொன்மாப் பூங்கா பற்றியதாக இல்லாமல் மனிதர்-தொன்மா இணைவாழ்வு குறித்து ஆராயக்கூடும் என்றும் கூறினார்.[30]
செப்டம்பர் 2015-இல், திரெவாரோ, ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதியின் போது பிரைஸ் டல்லஸ் ஹோவர்டின் பாத்திரமான கிளேர் ஆகப்பெரிய வளர்ச்சியடையும் என்றார்.[35] மறுமாதம், ஜுராசிக் வேர்ல்ட் தயாரிப்பாளர் பிராங்கு மார்சல், மூன்றாம் ஜுராசிக் வேர்ல்ட் படத்திற்கான திட்டங்களை உறுதிப்படுத்தினார்.[36] திரெவாரோ, ஸ்பில்பேர்க் ஆகியோருக்கு படத்திற்கான கதை யோசனை இருப்பதாக யுனிவர்சல் பிக்சர்ஸ் தலைவர் டோனா லாங்லி நவம்பர் 2015 இல் கூறினார்.[37]
செப்டம்பர் 2016- இல், ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதிக்கான திட்டங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன.[38] மேலும், (2014-இல் ஜுராசிக் வேர்ல்ட் படப்பிடிப்பின்போது) அவர் ஒரு முத்தொகுதிக்காக எவ்வளவு திட்டமிட்டிருந்தார் என்று திரெவாரோவிடம் கேட்கப்பட்டபோது: "எனக்கு முடிவு தெரியும். அதை எங்கு செல்ல வேண்டுமென விரும்பினேன் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. " என்றார்.[39] பின்பு கூறுகையில் " [தொடர்புடைய] மக்களை நீங்கள் உண்மையாகவே இணைத்துச்செல்லவும் அவர்களின் ஆவலைத் தக்கவைக்கவும் விரும்பினால், முத்தொகுதியின் துவக்கம், இடைப்பகுதி மற்றும் முடிவை முன்பே திட்டமிடுவது இதுபோன்ற ஒரு உரிமைக்குழுமத்துக்கு இன்றியமையாதது. அதை அந்த அளவில் எண்ணிப் பார்க்கவேண்டும். இது தன்னிச்சையாக இருக்க முடியாது [...] முந்தைய ஜுராசிக் பார்க் திரைப்படங்கள் மிகவும் தெளிவான உறுதியான முடிவுகளைக் கொண்டிருந்தன. இதைவிட அவை மிகுந்த அத்தியாயத்தன்மை கொண்டிருந்தன. " என்றார்[40].
முன் தயாரிப்பு
பிப்ரவரி 2018-இல் (ஜுராசிக் வேர்ல்ட் 3 என அப்போது அறியப்பட்ட) ஒரு பெயரற்ற படம், ஜூன் 11, 2021 அன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.[41][42] மேலும் அதற்கான திரைக்கதையை எமிலி கார்மைக்கேலுடன் இணைந்து திரெவாரோ இயற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் படத்தைத் தயாரித்த மார்சலும் குரோவ்லியும் மீண்டும் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றவிருந்தனர். திரெவாரோவும் ஸ்பில்பேர்க்கும் நிர்வாகத் தயாரிப்பாளர்களாயினர்.[41][43][44] மார்ச் 30, 2018 அன்று ஸ்பில்பேர்க் கேட்டுக்கொண்டதன் பேரில் திரெவாரோ பட இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.[16][45]
எழுத்தாக்கம்
ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் பட முன்னேற்றத்தின்போது திரெவாரோ, அப் படத்தின் தொன்மாக்கள் திறந்த மூலமாக மாறக்கூடும் எனவும் அதனால் (கதையில்) உலகெங்குமுள்ள பல நிறுவனங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்காக தங்கள் சொந்த தொன்மாக்களை உருவாக்கும் நிலை ஏற்படுமெனவும் கூறினார்.[46][47] தொன்மாக்களை உலகில் இணைத்துக்கொள்வது தொடர்பான சில காட்சிகளும் கருத்துக்களும் (மூன்றாம் படத்தில் பின்பு பயன்படுத்தும் நோக்குடன் ) ஃபாலன் கிங்டம் திரைக்கதையிலிருந்து நீக்கப்பட்டன.[7][8]
கார்மைக்கேலின் குறும்படம் ஒன்றைப் பார்த்தபின் திரெவாரோ அவரைச் சந்தித்தார். முன்பு பசிபிக் ரிம்: அப்ரைசிங் படத்துக்கும் த பிளாக் ஹோல் பட மறு ஆக்கத்துக்கும் கார்மைக்கேல் ஆற்றிய எழுத்துப்பணியால் வியந்த திரெவாரோ, அவரையே ஜுராசிக் வேர்ல்ட் 3 படத்துக்கும் இணை எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்தார்.[48][49]
திரெவாரோவும் கார்மைக்கேலும் நிலவரப்படி திரைக்கதையை எழுதிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில் ஜுராசிக் வேர்ல்ட் 3 ஒரு "அறிவியல் பரபரப்புப் புனைவு" எனவும் இக் குழுமத்தின் முதல் படமான ஜுராசிக் பார்க்-கின் இன் தொனியுடன் மிக நெருக்கமாக பொருந்துவதாகவும் திரெவாரோ கூறினார்.[16] பின்னர் இதை "இப்போது வரை இவ் வுரிமைக்குழுமத்தில் உள்ள அனைத்தையும் கொண்டாடும் செயல் " என்றும் வருணித்தார்.[50] மே 2018 இல் அவர், முந்தைய ஜுராசிக் வேர்ல்ட் படங்களில் குறிப்பிடத்தகு பாத்திரங்களில் தோன்றிய கலப்பினத் தொன்மாக்கள் எதையும் இப் படம் காண்பிக்காது என்று அறிவித்தார்.[51]
ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் வெளியானபின், அதன் தொடர்ச்சியானது, உலகெங்கும் பரவிவிட்ட தொன்மாக்களைக் குறித்ததாக இருக்குமென்றும் , இதனால் ஹென்றி வூ அல்லாத பிற பாத்திரங்கள் தங்கள் சொந்த தொன்மாக்களை உருவாக்குவரென்றும் திரெவாரோ கூறினார்..[6][7][8] எனினும் நகரங்களை அச்சுறுத்துபவையாக இல்லாமல், மக்கள் சந்திக்கநேரும் காட்டுவிலங்குகள் போன்றவையாக தொன்மாக்கள் இருக்கும் என்பதாக அவர் கூறினார்.[52] தான் முன்பிருந்தே பார்க்கவிரும்பிய படம் இது என்பதாகக் கூறியவர்,[8] கதைப்போக்கை நடைமுறையிலுள்ள மனிதர்-காட்டுயிர் உறவோடு இணைத்தும் பேசினார்.[53] மேலும் இப்படம், ஓவன் மற்றும் கிளேரின் மீட்சியையும் மெய்ஸியைப் பார்த்துக்கொள்ளும் அவர்களின் பொறுப்பையும் பேசும் என்றார்.[6]
ஹோவர்ட் பேசுகையில் தவறான கைகளுக்குத் தொழில்நுட்பம் சென்றால் ஏற்படக்கூடிய விளைவுகளை இப் படம் சுட்டுவதாகத் தெரிவித்தார். "இப்போதெல்லாம் யாரும் தொன்மாக்களைப்பற்றி ஆர்வம் காட்டுவதில்லை" என நான்காம் படத்தில் ஹோவர்ட் கூறுவதை இறுதிப்படத்தின் வழியே தவறென்று நிறுவுவதே தன திட்டம் என்றார் திரெவாரோ.[54]
நடிகர் தேர்வு
முந்தைய ஜுராசிக் பார்க் முத்தொகுதியில் எல்லி சாட்லராக நடித்த லாரா டென் மார்ச் 2017-இல், மீண்டும் தன் பாத்திரத்தை ஏற்க ஆர்வம் காட்டினார்.[55][56] ஏப்ரல் 2018-இல் திரெவாரோ பேசுகையில், பிராட்டும் ஹோவர்ட்டும் தங்கள் பாத்திரங்களில் மீண்டும் நடிப்பார்கள் என்றார். 2018 பிற்பகுதியில், ஹோவர்ட் பேசுகையில் , ஜுராசிக் பார்க் முத்தொகுதியிலிருந்து அதிக கதாபாத்திரங்களை (எல்லி சாட்லர் மற்றும் இயான் மால்கம் உட்பட) மூன்றாம் படத்தில் சேர்க்க வேண்டுமென்பதே தன் உயர் விருப்பம் என்றார்.[57][58][59] சாம் நெய்ல், லாரா டென் ஆகியோரின் மறுதோற்றத்தை திரெவாரோ உறுதிசெய்தார்.[6] மேலும், முந்தைய ஜுராசிக் வேர்ல்ட் படங்களில் இடம்பெற்ற ஹென்றி வூ , படத்தின் கதையில் ஒரு முதன்மைப் பாத்திரம் என்றும் கூறினார்.[6]
செப்டம்பர் 2019-இல் நெய்ல், டென், கோல்ட்ப்ளும் ஆகியோர் மீண்டும் நடிப்பது உறுதியானது.[17][60][61] தன் பாத்திரத்துக்காக உடற்பயிற்சியில் ஈடுபடுவதாக நெய்ல் கூறினார்.[62][63] ஜுராசிக் பார்க் III (2001) க்குப் பின் திரைப்படத் தொடரில் நெய்ல் மற்றும் டென்னின் முதல் தோற்றமாக ஜுராசிக் வேர்ல்ட் 3 இருக்கும். மேலும் முதல் ஜுராசிக் பார்க் படத்துக்குப் பின் மூவரும் ஒருசேரத் தோன்றும் படமாக இருக்கும்.[64][65] "இப்போது இவர்கள் யார்? அவர்கள் வாழும் புதிய உலகத்தைவைத்து என்ன செய்கிறார்கள்? அதன் வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதைப் பற்றி அவர்கள் எப்படி உணர்கிறார்கள்?" போன்ற கேள்விகளுக்கு இப் படம் விடையளிக்கும் என்றார் திரெவாரோ.[65]
2019 பிற்பகுதியில் , மாமெடூ ஆச்சே, டிவாண்டா வைஸ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நியமிக்கப்பட்டனர்.[24][66] பின்னர் ஜேக் ஜான்சன், ஓமர் சை, ஜஸ்டிஸ் ஸ்மித், டானியெல்லா பினெடா, இசபெல்லா செர்மன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை மீண்டும் ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.[18][20][67] டீச்சன் லேக்மன், ஸ்காட் ஹேஸ் ஆகிய புதுமுகங்களின் பங்களிப்பும் உறுதியானது.[21][22] ஹென்றி வூ பாத்திரத்தில் நடிக்க பி.டி. வோங் உறுதியானார்.[68]
முதல் படத்தில் லூயிஸ் டாட்ஜ்சனாக நடித்த கேமரூன் தோர், பாலியல் வழக்கில் தண்டனை பெற்றமையால் அவர் இடத்தில் காம்ப்பெல் ஸ்காட் நடிப்பார் என ஜூன் 2020 இல் அறிவிக்கப்பட்டது.[69]
ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் படத்தை அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) படத்துடன் கிறிஸ் பிராட் ஒப்பிட்டார். இவ்விரண்டும் தமக்கு முந்தைய படங்களிலிருந்து பல கதைமாந்தர்களைக் காண்பிப்பமை குறிப்பிடத்தக்கது.[70][71]
கோவிட் -19 பெருந்தொற்று மற்றும் பிற சூழ்நிலைகள் காரணமாக தனது பாத்திரத்தை மீண்டும் ஏற்க இயலவில்லை என்று ஜேக் ஜான்சன் ஜூலை 2021-இல் அறிவித்தார்..[72]
ஜுராசிக் வேர்ல்ட் படத்தில் ஸ்காட் மிட்சல்-லாக நடித்த ஆன்டி பக்லி, தான் மீண்டும் நடிக்கவிருப்பதாகக் கூறினார். ஆனால் படத்தின் திரைக்கதை மீளுருவாக்கம் பெறுகையில் அவரது சேர்க்கை கைவிடப்பட்டது.[73]
படப்பிடிப்பு
பிப்ரவரி 19, 2020 அன்று, கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள கதீட்ரல் குரோவில் வான்வழிக் காட்சிகளைப் படமாக்க ஒரு தயாரிப்புப் பிரிவு ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தியது.[74][75] பிப்ரவரி 24 அன்று முதன்மைப் படப்பிடிப்பு தொடங்கியது. மறுநாள் படத்தின் தலைப்பு ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் என அறிவிக்கப்பட்டது.[76][77] பிரித்தானிய கொலம்பியா மாநிலத்தின் மெர்ரிட் நகரில் பிப்ரவரி 25 அன்று படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிடப்பட்டு மார்ச் துவக்கத்தில் நிறைவுற்றது.[78][79][80][81][82][83] மார்ச் பிற்பகுதியில், தயாரிப்பு இங்கிலாந்தின் ஹாவ்லி சிற்றூருக்கு மாற்றப்பட்டது. அங்கும் மின்லி சிற்றூரிலும் நடைபெற்ற படப்பிடிப்பு மூன்று இரவுகள் நீண்டது. இறுதி இரவில் உலங்கு வானூர்தி கொண்டு படம்பிடிக்கப்பட்டது.[84][85]
முந்தைய படத்தைப்போலவே ஹவாயிலும் இங்கிலாந்தின் பைன்வுட் ஸ்டுடியோசிலும் படப்பிடிப்பு நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.[86][87][88] பைன்வுட் ஸ்டுடியோஸில் படமெடுக்கையில் பெரிய திரையமைவுகளை ஒன்றிணைக்கும் 007 ஒலிப்பதிவுக்களமும் பயன்படுத்தப்படும்.[89] இங்கு ஒரு வெளிப்புறத் திரையமைவு, பனிப்பகுதியில் விபத்துக்குள்ளான ஒரு வானூர்தியைக் காட்சிப்படுத்தியது.[90]
ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டி.ரெக்ஸ் கிகனோடோசரஸ் ஒன்றால் கொல்லப்பட்டபின் ஒரு கொசு அந்த டி.ரெக்ஸின் இரத்தத்தை உறிஞ்சுவதைக் காட்டும் படத்தின் துவக்கக்காட்சி சுகுத்திரா தீவில் படமாக்கப்பட்டது.[91][92]
நான்காம் படத்தில் பணியாற்றிய ஜான் சுவார்ட்ஸ்மன் மீண்டும் ஒளிப்பதிவாளராகத் திரும்பியுள்ளார்.[93]
ஐந்தாம் படத்தில் தொன்மாக்களை அமெரிக்கத் தலைநிலத்துக்குக் கொண்டுசென்ற கப்பலின் பெயரான ஆர்கேடியா என்பதே இப் படத்தின் செயல் தலைப்பாகும்.[78][84] அசைவூட்டத் தொன்மாக்களை ஜான் நோலன் உருவாக்குகிறார்.[94][95] படத்தின் அறிவியல் ஆலோசகராக தொல்லுயிர் ஆய்வாளர் ஸ்டீபன் புருசாட் உள்ளார்.[96][97]
இப்படத்தின் ஆக்கச்செலவு $.16.5 கோடி ஆகும்.[98]
கோவிட்-19 பெருந்தொற்று
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 13, 2020 அன்று படத்தயாரிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் தொடருவது குறித்த முடிவெடுக்கப் பல வாரங்களாகுமென எதிர்பார்க்கப்பட்டது.[99] இதற்குமுன்னாக ஏப்ரல்-மே 2020 தொடங்கி பைன்வுட் ஸ்டுடியோஸ்[62][100] , மால்ட்டா தலைநகர் வல்லெட்டா [86][101] ஹவாய்[86][102] உட்பட பல்வேறு இடங்களில் ஏறத்தாழ 100 நாள்களுக்கு படப்பிடிப்பை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.[103] தாமதத்தைத் தொடர்ந்து, முன்பே படமாக்கப்பட்ட காட்சிகளின் பின்-தயாரிப்புப் பணிகளைப் படக்குழுவினர் மேற்கொள்ளத் துவங்கினர்[104][105]. இக்காட்சிகளுள் பெரும்பாலானவை தொன்மாக்கள் தொடர்பாக இருந்ததால் காட்சி விளைவுகள் குழுவினருக்கும் செயலாற்ற வாய்ப்பு கிட்டியது.[105]
கொரோனாவைரஸ் தொடர்பான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பிரித்தானிய அரசு வழங்கியவுடன் படப்பிடிப்பு தொடரும் என்று மார்ஷல் கூறினார்.[106] ஜூலை 2020 இல் படத்தின் சில பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற நம்பிக்கை இருப்பதாக நெய்ல் கூறினார்.[107]
"ஜூலை 2020 தொடக்கத்தில் பைன்வுட் ஸ்டுடியோசில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்" என்று யுனிவர்சல் உறுதிப்படுத்தியது. ஒவ்வொரு நடிகருக்கும் படக்குழு உறுப்பினருக்கும் ஆயிரக்கணக்கான கோவிட்-19 பரிசோதனைகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளுக்காக ஏறத்தாழ $ 50 இலட்சம் செலவிட யுனிவர்சல் திட்டமிட்டது. தயாரிப்பு தொடருமுன்னும் படப்பிடிப்பின்போது பலமுறையும் குழுவினர் சோதிக்கப்படுவர். உடல்வெப்ப சோதனை நிலையங்கள் அமைக்கப்படும். பரிசோதிக்கப்படாத குழுவினர், படப்பிடிப்புக் களத்துக்குள் நுழையாவண்ணம் காவலர்களால் தடுக்கப்படுவர். படப்பிடிப்பின்போது மருத்துவர்களும் செவிலியர்களும் உடனிருப்பர். குழுவினர் அனைவருக்கும் கோவிட்-19 பயிற்சி அளிக்கப்படும். பைன்வுட் களத்தில் 150 சானிடைசர் நிலையங்கள் அமைக்கப்படும். சமூக இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளை நினைவூட்ட 1,800 பாதுகாப்பு அறிவிப்புகள் வைக்கப்படும். படப்பிடிப்பின்போது நடிகர்களைத் தவிர, படக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் முகமூடிகளை அணியும்படி அறிவுறுத்தப்படுவர்.[108] படப்பிடிப்பு துவங்குமுன் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகள் அடங்கிய 109 பக்க ஆவணத்தை நடிகர்கள் பெற்றனர்.[109] மேலும், 750 பேர் கொண்ட தயாரிப்புக் குழு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவற்றுள் பெரிய குழுவில் கட்டுமானம், படப்பிடிப்புப் பொருள்கள், மற்றும் பிற முன்-படப்பிடிப்புச் செயல்பாடுகள் தொடர்புடைய உறுப்பினர்கள் இருப்பர். சிறிய குழுவில் திரெவாரோ, நடிகர்கள், மற்றும் அடிப்படையான படக்குழுவினர் இருப்பர்.[98]
ஜூலை 6 அன்று படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.[110] எஞ்சியுள்ள படப்பிடிப்பிற்காக இங்கிலாந்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியை யுனிவர்சல் வாடகைக்கு எடுத்தது. படப்பிடிப்பைத் தொடங்குமுன் நடிகர்களும் படக்குழுவினரும் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தலுக்குப் பின், அவர்கள் சமூக இடைவெளியோ, முகவுறையோ இன்றி விடுதியில் கட்டற்று உலவ இசைவளிக்கப்பட்டது. வாரம் மும்முறை நடிகர்களுக்கும் விடுதி ஊழியர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகளால், படப்பிடிப்பைத் தொடர்தல் பாதுகாப்பானது என்ற நம்பிக்கை நடிகர்களுக்கு ஏற்பட்டது.[4][111][112] இவற்றுக்காக ஏறத்தாழ $ 90 லட்சம் செலவானது. பெருந்தொற்றுக் காலத்தில் தயாரிப்பை மீண்டும் தொடங்கிய பெரிய படங்களுள் ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் ஒன்றாகும்.
ஸ்டுடியோ செட்களுக்கு வெளியே ஒருசில இடங்களே தேவைப்படுவதாலும், ஒப்பீட்டளவில் ஒருசில நடிப்புக்குழுவினரையே கொண்டிருப்பதாலும் இப்படம், தொடர்வதற்கு ஏற்றதென யுனிவர்சல் கருதியது. முன்னதாகவே இங்கிலாந்தில் படப்பிடிப்பு நிகழ்ந்தமையும் மறுதொடர்கையை எளிதாக்கியது. பெருந்தொற்றுக் காலத்தில் எவ்வாறு மீண்டும் தொடங்குவது என்பதில் பிற பெரிய படத்தயாரிப்புகளுக்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.[98]
ஜூலையில் பைன்வுட் ஸ்டுடியோசுக்கு அருகிலுள்ள பிளாக் பார்க் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.[113] ஆகஸ்டில் நெய்ல் , டென், கோல்ட்ப்ளும் ஆகியோர் நடிக்கத் துவங்கினர்.[114][115][116] இச்சமயத்தில் இங்கிலாந்திலிருந்த குழு உறுப்பினர்கள் நால்வருக்கும், தயாரிப்புக்கு முன் மால்ட்டாவைச் சென்றடைந்த மேலும் நால்வருக்கும் கோவிட்-19 தொற்று உறுதியானது.[98][117] முதல் குழுவினர் பிராட், ஹோவர்ட், நீல் ஆகியோருடன் மால்ட்டாவில் படப்பிடிப்பு நடத்துவதாக இருந்தது. எனினும் அந்நாட்டில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை கூடியதாலும் அங்கிருந்து வருவோருக்கு 14 நாள்கள் தனிமைக்காலத்தை பிரிட்டன் அரசு கட்டாயமாக்கியதாலும், படப்பிடிப்புக்குச் சிலவாரங்களுக்குமுன் இத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.[118] மால்ட்டா காட்சிகளை திரெவாரோ திருத்தி எழுதினார். செட்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன.[119] மால்ட்டாவில் நடிகர்களுக்குப் பதில் ஒரு இரண்டாம் குழு படப்பிடிப்பை நடத்தியது.[118] ஆகஸ்ட் இறுதிப்படி மால்ட்டாவில் நடந்த படப்பிடிப்பு [120][121] செப்டம்பர் வரை தொடர்ந்தது.[118][122] மால்ட்டா படப்பிடிப்புக்குப் பிறகு, பைன்வுட் ஸ்டுடியோவில் மேலும் ஏழு வாரப் படப்பிடிப்பு தொடர்ந்தது.[98] அக்டோபர் இறுதியில் படப்பிடிப்பு நிறைவுறுவதாக இருந்தது.[116][123] பெருந்தொற்றால் ஏற்பட்ட மறுசீரமைப்பால் திரெவாரோ, ஜேக் ஜான்சன் ஆகியோர் ஜான்சனின் படப்பிடிப்பு அட்டவணையில் ஒரு பொருத்தமான நேரத்தைக் குறிக்க முயன்றனர் (ஏனெனில் ஜான்சன், ஸ்டம்ப்டவுன் தொலைக்காட்சித் தொடரில் மீண்டும் நடிப்பைத் தொடர இருந்தார். ஆனால் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஆக்கத் தாமதத்தால் அத்தொடர் கைவிடப்பட்டது).[124][125]
அக்டோபர் 2020-இல் திரெவாரோ, படத்தின் வெளியீட்டுத் தேதியை மே 2021-இலிருந்து சூன் 2020-க்குத் தள்ளிவைத்தார்.[126]
படக்குழுவினருள் பலர் கோவிட்-19 தொற்றுக்கு ஆளானதால் அக்டோபர் 7, 2020 அன்று படப்பிடிப்பு பகுதியளவாக நிறுத்தப்பட்டது.[127] அவர்கள் பின்னர் 'நெகடிவ்' என முடிவு பெற்றனர். எனினும் படப்பிடிப்பின் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி அவர்களுக்கு இருவாரத் தனிமை தேவைப்பட்டது.[128] அக்டோபர் 23 அன்று படப்பிடிப்பு தொடர்ந்தது. நெய்ல், டென், கோல்ட்ப்ளும் ஆகியோர் படப்பிடிப்புக்கு வருகைதருகையில் எடுத்த ஒளிப்படத்தை இயக்குநர் திரெவாரோ வெளியிட்டார்.[129] பகுதியளவான பணிநிறுத்தத்தின் போது, முதன்மை நடிகர்கள் இரண்டாம் நிலைக்காட்சிகளில் நடித்துவந்தனர். அம்மாதத்தின் பிற்பகுதியில் படப்பிடிப்பு முழுவீச்சில் தொடங்கியது. நவம்பர் 6, 2020 அன்று படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது.[4]
பின்தயாரிப்பு
படப்பிடிப்பு நிறைந்தபின் திரெவாரோ, பின்தயாரிப்புக் களமாக மாற்றப்பட்ட தன் பிரித்தானிய வீட்டுக் கொட்டிலில் படப்பணிகளைத் தொடர்ந்தார். ஓராண்டாகப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் அவருக்குக் காட்சி விளைவுகள், ஒலிக்கலப்பு, இசையமைப்பு ஆகியவற்றைத் தனித்தனியாக மேற்கொள்ள நேரம் கிடைத்தது.[91]
Remove ads
இசை
முந்தைய ஜுராசிக் வேர்ல்ட் படங்களுக்கு இசையமைத்த மைக்கேல் ஜியாச்சினோ இதற்கும் இசையமைத்துள்ளார்.[130] பத்து நாள்கள் இங்கிலாந்தின் அபே ரோட் ஸ்டுடியோசில் நடைபெற்ற இசைப்பதிவு மே 2021-இல் நிறைந்தது.[131][132][133]
சந்தைப்படுத்துதல்
ஜூன் 25, 2021 அன்று அமெரிக்காவில் F9 படம் வெளியாகையில் அதனுடன் டொமினியன் படத்தின் முதல் ஐந்து மணித்துளிகள் முன்னோட்டமிடப்பட்டன. இக் காட்சிகள் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள IMAX திரையரங்குகளில் காட்டப்பட்டன.[134][135][136] பெருந்தொற்றுக் காலத்தில் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைக்கும் நோக்கிலேயே இந்த முன்னெடுப்பு அமைந்தது.[136][137]
வெளியீடு
ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் படத்தின் முதல் திரையோட்டம், மே 23, 2022 அன்று மெக்சிக்கோ சிட்டியில் வெளியானது.[138] ஜூன் 1, 2022 அன்று மெக்சிகோ மற்றும் தென் கொரியாவிலிருந்து திரையரங்கு வெளியீடு தொடங்கியது.[139][140] ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் 10, 2022 அன்று யுனிவர்சல் பிக்சர்ஸால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[141]
இப் படம் 18 மாத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, திரையரங்குகளில் வெளியான நான்கு மாதங்களுக்குள் யுனிவர்சல்லின் பீகாக் வலைப்பக்கத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் பத்து மாதங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் ஓடியபின் இறுதி நான்கு மாதங்கள் மீண்டும் பீகாக் வலைப்பக்கத்துக்குத் திரும்பும்.[142] ஒப்பந்தம் முடிவுற்றபின் ஸ்டார்ஸ் (Starz) தளத்தில் வெளியாகும்.[143]
Remove ads
வரவேற்பு
"அதிரடி அதகளக் கதையினுடாக பின்னப்பட்டிருக்கும் இந்த மிகைப்படுத்தப்பட்ட ஹாலிவுட் பொழுதுபோக்கு சினிமா, யதார்த்தை அனுமதிக்க மறுத்திருக்கிறது. இருந்தாலும் அதன் முந்தையப் படங்களைப் போலவே தொழில்நுட்ப மாயையுடன் இந்தப் படம் சுட்டிக்காட்டும் எச்சரிக்கை கதை நிஜமானவை" என்கிறார் அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தின் 'பொறுப்புமிக்க புத்தாக்கத் துறை' பேராசிரியர் ஆண்ட்ரூ மேனார்ட்.[144][145]
"25 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த ஜுராசிக் பார்க் படத்தின் காட்சிகள் இப்போதும் நினைவில் இருக்கும் நிலையில், இப்போது வெளிவரும் ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் காட்சிகள் சுத்தமாக நினைவிருப்பதில்லை. படம் சம்பந்தப்பட்டவர்களும் இதை உணர்ந்ததாலோ என்னவோ, ஒரிஜினல் ஜுராசிக் படத்தில் நடித்தவர்களை இந்த படத்திலும் நடிக்க வைத்திருக்கிறார்கள்..முடிவில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் படமாகவே முடிந்திருக்கிறது. உண்மையான ரசிகர்களை உற்சாகப்படுத்த விரும்பினாலும் அது நடக்கவில்லை. காரணம் பாத்திரங்கள் சோர்வடைந்தவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். எல்லா காட்சிகளும் எதிர்பார்க்கும்வகையிலேயே இருக்கிறது. தோல்வியடைந்த ஒரு நினைவெழுச்சிப் பயணமாக இதைச் சொல்லலலாம். டைனோசர்களை ரொம்பவும் பிடிக்குமென்றால் ஒரு தடவை பார்க்கலாம்" என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.[146][147]
தி இந்து குழுமத்தின் தமிழ் மொழிப் பதிப்பான இந்து தமிழ் நாளிதழ் அளித்துள்ள திறனாய்வில் "எல்லாருக்குமான இந்த உலகத்தில் மனிதர் ஒரு பகுதிதான் என்பதை உணர்த்தும் படைப்பாக உருவாகியிருக்கிறது 'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்'...சில இடங்களில் டைமிங் காமெடிகளும் பொருந்திப்போகிறது. படத்தின் தீவிர ரசிகர்களை தவிர்த்து, புதிதாக பார்ப்பவர்களுக்கு நல்ல திரை விருந்தாக படம் அமையும்...மொத்தமாக படம் ஜுராசிக் வேர்ல்டு ரசிகர்களைத் தாண்டி, பொதுவான பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காத படைப்பாக வெளியாகியிருக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.[148] அந் நாளிதழில் வெளியான மற்றொரு கட்டுரை "ஒரு கனவை, ஒரே நேரத்தில் ஓராயிரம் பேரை காணச் செய்யும் மாயாஜால வித்தை சினிமாவுக்கு மட்டுமே சாத்தியம். அந்த சாத்தியம் சில நேரங்களில் பல உண்மைகளையும் உரக்கச் சொல்லி விடுகிறது...[டொமினியன் படத்தின் வழியே] ஹாலிவுட் சினிமா, அப்படி ஒரு உண்மையை மீண்டும் உரக்கச் சொல்லிருக்கிறது"[144] எனக் கூறி அதன் பின் ஆண்ட்ரூ மேனார்ட் எழுதிய கட்டுரையைத் தமிழாக்கம் செய்து வழங்கியுள்ளது.[144]
"ஏற்கனவே நன்றாக ஓடிய ஒரு திரைப்படத்தை வைத்துக்கொண்டு அடுத்தடுத்து முடிந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைக்கும் ஹாலிவுட் தொடர் திரைப்படங்களைப் போலவே இந்தப் படமும் அமைந்திருக்கிறது" என்கிறது ஃபர்ஸ்ட்போஸ்ட் இணையதளம்.[147][149]
Remove ads
எதிர்காலம்
மார்ஷல், 2020 மே மாதம் பேசுகையில், ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் இக் குழுமத்தின் இறுதிப் படமாக இருக்காதெனவும், மாறாக மனிதர்கள் தொன்மாக்களுடன் நிலத்தைப் பகிர்ந்துகொள்ளும் "ஒரு புதிய ஊழியின் தொடக்கத்தை" குறிக்குமெனவும் கூறினார்.[150]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads