ஜுராசிக் பார்க் (திரைப்படம்)

ஸ்பானிஷ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஜுராசிக் பார்க் (திரைப்படம்)
Remove ads

ஜுராசிக் பார்க் (Jurassic Park) என்பது 1993 ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பில்பேர்க் (Steven Spielberg) இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும்.[3] ஜுராசிக் பார்க் கதைக்குழுமத்தின் முதல் படம் இதுவேயாகும். இதே பெயரில் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் (Michael Crichton) 1990-இல் எழுதி வெளியிட்ட ஒரு புதினத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் ஜுராசிக் பார்க், இயக்கம் ...

இத் திரைப்படமானது நடு அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிக்காவைச் சேர்ந்த ஈஸ்லா நுப்லார் என்ற கற்பனைத் தீவில் நிகழ்வதாக அமைந்துள்ளது. அங்கு ஒரு செல்வந்தர், மரபணு வல்லுநர்களின் துணையுடன் அழிந்துபோன உயிரினங்களான தொன்மாக்களை (Dinosaurs) படியெடுப்பு முறையில் உயிர்ப்பித்துப் பின் அங்கு தான் உருவாக்கிய உயிரியல் பூங்காவில் உலவவிடுகிறார். அப் பூங்காவில் ஏற்படும் எதிர்பாரா இடர்களையும் அவற்றிலிருந்து தப்பக்  கதைமாந்தர்  மேற்கொள்ளும் முயற்சிகளையும் இப் படம் காட்சிப்படுத்துகிறது.

கிரைட்டனின் புதினம் வெளியாவதற்கு முன் நான்கு நிறுவனங்கள் இத் திரைப்படத்தின் உரிமைகளை வாங்க முன்வந்தன. இறுதியில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் உதவியால் ஸ்பில்பேர்க் $ 15 லட்சத்துக்கு அவ்வுரிமைகளைப் பெற்றார்; திரைக்கதையை எழுதுவதற்கென மைக்கேல் கிரைட்டன், $ 5 லட்சத்துக்கு அமர்த்தப்பட்டார்; திரைக்கதையின் இறுதி வடிவத்தை எழுதிய டேவிட் கோப் (David Koepp), கிரைட்டனின் புதினத்தில் காணப்பட்ட நீண்ட விளக்கங்கள், வன்முறை ஆகியவற்றுள் பெரும்பாலான பகுதிகளைத் தவிர்த்தார். மேலும், கதைமாந்தரின் காண்பிப்பையும் மாற்றியமைத்தார்.

படப்பிடிப்பு, 1992 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை கலிபோர்னியா மற்றும் ஹவாயில் நடைபெற்றது. இறுதித் தயாரிப்பு, போலந்தில் மே 1993 வரை ஸ்பில்பேர்க் தலைமையில் நடைபெற்றது. அதே சமயத்தில்தான் அவர் சிண்டலர்ஸ் லிஸ்ட் (Schindler's List) படத்தையும் இயக்கிக்கொண்டிருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற தொன்மாக்கள் அனைத்தும் இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் (Industrial Light & Magic) (ILM) நிறுவனத்தின் CGI தொழில்நுட்பத் துணையாலும் ஸ்டான் வின்ஸ்டன் (Stan Winston) குழுவினரின் அசைவூட்ட மாதிரிகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டன. அவற்றின் ஒலிகளுக்காகத் தற்கால விலங்குளின் ஒலிகள் பதிவுசெய்யப்பட்டன. மொத்தப் படத்தின் ஒலிப்பதிவையும் துல்லியமாகச் செய்ய விரும்பிய ஸ்பில்பேர்க், DTS என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தைத் தோற்றுவிக்க முதலீடு செய்து உதவினார். படத்தின் சந்தைப்படுத்துதல் $ 6.5 கோடி செலவில் நடந்தது. நூறு நிறுவனங்களுடன் உரிம ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

ஜுராசிக் பார்க், முதன்முதலில் ஜூன் 9, 1993 அன்று, வாசிங்டன், டி. சி.யில் உள்ள அப்டவுன் திரையரங்கில் திரையிடப்பட்டது. ஜூன் 11 அன்று அமெரிக்கா முழுவதும் வெளியானது. முதல் திரையோட்டத்தில் உலகளவில் $ 91.27 கோடிக்குமேல் ஈட்டியது[4]. இதனால் 1993-இல் அதிக வருவாய் ஈட்டிய படமாகவும், அச்சமயம் வரை அதிக வருவாய் ஈட்டிய படமாகவும் விளங்கியது. இதில் இரண்டாவது சாதனையை 1997-இல் வந்த டைட்டானிக் திரைப்படம் முறியடித்தது.

ஜுராசிக் பார்க் படத்தின் சிறப்பு விளைவுகள், நடிப்பு , ஜான் வில்லியம்ஸின் இசையமைப்பு, ஸ்பில்பேர்க்கின் இயக்கம் ஆகியன திறனாய்வாளர்களால் பாராட்டப்பெற்றன. இப் படம் செப்டம்பர் 23, 2011 அன்று ஐக்கிய இராச்சியத்தில் மீண்டும் வெளியானது. ஏப்ரல் 4, 2013 அன்று இருபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக முப்பரிமாண வடிவிலும் வெளியிடப்பட்டது. இவ்வெளியீடுகளால் $ 100 கோடிக்கு மேல் மொத்த வருவாய் ஈட்டிய 17-ஆவது திரைப்படமாக ஆனது. இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை (மூன்று அகாதமி விருதுகள் உட்பட) பெற்றுள்ளது. இவற்றுள் திரை வண்ணம், ஒலியமைப்பு ஆகியவற்றுக்காக வழங்கப்பட்ட விருதுகளும் அடங்கும்.

CGI மற்றும் அசைவூட்டத் திரைவண்ண வளர்ச்சியில் இப்படம் ஒரு நிலக்குறியாகக் கருதப்படுகிறது. 2018 -இல், அமெரிக்கக் காங்கிரசு நூலகம் , இப் படத்தை "கலாச்சார ரீதியாகவோ, வரலாற்று ரீதியாகவோ அழகியல் ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்தது" என்ற அடிப்படையில் அமெரிக்காவின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுத்தது.[5]

ஜுராசிக் பார்க்-கின் தொடர்ச்சிகளாக த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் (1997), ஜுராசிக் பார்க் III (2001), ஜுராசிக் வேர்ல்ட் (2015), ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் (2018), ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022), ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் (2025) ஆகிய படங்கள் வெளியாகின.

Remove ads

கதைச் சுருக்கம்

இன்ஜென் (International Genetic Technologies) உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜான் ஹேமண்ட், ஜுராசிக் பார்க் என்ற உயிரியல் பூங்காவைக் கோஸ்ட்டா ரிக்கா நாட்டைச் சேர்ந்த ஈஸ்லா நுப்லார் (Isla Nublar) என்ற தீவில் உருவாக்குகிறார். ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் உலகிலிருந்து அற்றுப்போய்ப் பின் மீளுருவாக்கப்பட்ட தொன்மாக்களும் (Dinosaurs), தொல் தாவரங்களும் இங்கு வாழ்கின்றன. வெலாசிராப்டர் ஒன்றினால் பணியாளர் ஒருவர் கொல்லப்படுவதைத் தொடர்ந்து பூங்காவின் பாதுகாப்பை வல்லுநர்களைக் கொண்டு உறுதிசெய்யும்படி அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர் .

ஹேமன்டும் இதற்காக முதலீட்டாளர்களின் வழக்கறிஞர் டொனால்ட் ஜென்னாரோ, கணிதவியலாளர் இயான் மால்கம், தொல்லுயிர் ஆய்வாளர் ஆலன் கிரான்ட், தொல் தாவர ஆய்வாளர் எல்லி சாட்லர் ஆகியோரை அழைத்துவருகிறார். தீவில் வந்திறங்கும் இக்குழுவினர், உயிருள்ள பிராக்கியோசாரஸ் முதலான தொன்மாக்களைக் கண்டு வியக்கின்றனர். பின்பு பூங்காவின் ஆய்வகத்தில், தொன்மாக்கள் படியெடுக்கப்பட்ட முறையை அறிகின்றனர் (அம்பர் பிசினில் மாட்டிக்கொண்ட பழங்காலக் கொசுக்களிடம் கண்டெடுக்கப்பட்ட தொன்மா டி.என்.ஏக்கள் அவற்றை மீண்டும் உருவாக்க உதவின. தொலைந்த மரபணுத்தொகைகளுக்கு மாற்றாக தவளை டி.என்.ஏ க்கள் நிரப்பப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட தொன்மாக்களுக்குள் இனப்பெருக்கம் நிகழாமல் தடுப்பதற்காக அவை அனைத்தும் பெண் விலங்குகளாக உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் இயற்கை, இத் தடையைக் காலப்போக்கில் வென்றுவிடும் என மால்கம் கூறுகிறார்).

பின் ஹேமன்ட், இக்குழுவினரையும் தன் பேரப்பிள்ளைகளான லெக்ஸ், டிம் ஆகியோரையும் பூங்காவைப் பார்வையிட அனுப்பிவிட்டு அவர்களைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கிறார். எனினும் ஒரு உடல்நலமற்ற டிரைசெரடாப்ஸ் மட்டுமே இவர்களுக்குத் தென்படுகிறது. இந்நிலையில் வெப்பமண்டலப் புயல் ஒன்று ஈஸ்லா நுப்லாரை நெருங்கிக்கொண்டிருப்பதால் அவர்கள் பார்வையாளர் மையத்துக்குத் திரும்புகின்றனர். எல்லி மட்டும் பூங்காவின் கால்நடை மருத்துவருடன் இணைந்து அத் தொன்மாவைப் பார்வையிடுகிறார்.

இப்புயலின்போது பூங்காவின் கணிப்பொறி நிரலாளர் டென்னிஸ் நெட்ரி, தொன்மாக்களின் முளையங்களைத் (Embryos) திருடி இன்ஜென்-னின் போட்டி நிறுவனமான பயோசின்-னுக்கு (Biosyn) விற்கத் திட்டமிடுகிறார் (முன்பே இதற்கான கையூட்டை இவர் பெற்றிருந்தார்). முளையச் சேமிப்பறைக்குள் நுழைவதற்காகத் தீவின் பாதுகாப்புக் கட்டமைப்பை இவர் அணைத்துவிடுவதால், பூங்காவின் மின்வேலிகள் செயலிழக்கின்றன. பார்வையாளர்களின் தானியங்கிச் சிற்றுந்துகள், டி.ரெக்ஸ் என்ற தொன்மாவின் இருப்பிடத்துக்கு அருகே நின்றுவிடுகின்றன. அத் தொன்மா வெளிவந்து அவர்களைத் தாக்குகிறது. ஜென்னாரோ அதற்கு இரையாகிறார். மால்கம் காயமடைகிறார். கிரான்ட், லெக்ஸ் , டிம் ஆகியோர் காட்டுக்குள் தப்பிச்சென்று ஒரு மரவுச்சியில் அன்றைய இரவைக் கழிக்கின்றனர்.

இச்சமயத்தில் தீவின் கிழக்குக் கப்பல்துறையில் காத்துள்ள பயோசின் ஆட்களுக்கு முளையங்களைக் கொண்டுசெல்கையில் வழிதப்பும் நெட்ரியை டைலோஃபோசாரஸ் என்ற தொன்மா கொல்கிறது. டி-ரெக்ஸ் தாக்குதலில் தப்பியோரைத் தேடும் எல்லியும் பூங்காவின் காப்பாளர் இராபர்ட் முல்டூனும் மால்கம்மை மீட்டபின் பார்வையாளர் மையத்துக்குச் சிற்றுந்தில் திரும்புகின்றனர். வழியில் சிறிது தூரம் அவர்களை டி-ரெக்ஸ் துரத்துகிறது.

கட்டுப்பாட்டு அறையில், நெட்ரி ஏற்படுதிய குழப்பத்தைத் தீர்க்கப் போராடும் தலைமைப் பொறியாளர் ரே அர்னால்டும் ஹேமன்டும், பூங்காவின் கட்டமைப்புகளை மறு இயக்கம் செய்து மின்னிணைப்பை மீட்க முடிவுசெய்கின்றனர். எனவே மின் கட்டமைப்பைத் துண்டித்துவிட்டு அனைவரும் விடியற்காலையில் நிலவறை ஒன்றில் தங்குகின்றனர். அர்னால்ட் மட்டும் பிரிகலன்களை மீளியக்கம் செய்ய ஒரு பராமரிப்புக் கொட்டகைக்குச் செல்கிறார். பின்பு அவரைத் தேடிச்செல்லும் எல்லியும் முல்டூனும், மின்வெட்டால் வெலாசிராப்டர்களும் தப்பிவிட்டதை அறிகின்றனர். முல்டூன் அவற்றைத் தேடுகையில் எல்லி, கொட்டகைக்குள் சென்று மின்சாரத்தை உயிர்ப்பிக்கிறார். அப்பொழுது அர்னால்டின் துண்டிக்கப்பட்ட கையைக் கண்டு அங்கிருந்து தப்புகிறார். அச்சமயம் முல்டூனை ஒரு ராப்டர் கொல்கிறது.

இவ்வேளையில் மரத்திலிருந்து இறங்கும் கிரான்டும் சிறார்களும் சில தொன்மா முட்டை ஓடுகளைக் காண்கின்றனர். மால்கம் கணித்ததுபோலவே தொன்மாக்கள் இனப்பெருக்கத்தைத் தொடங்கிவிட்டன என கிரான்ட் உணர்கிறார் (தொன்மாக்களின் டி.என்.ஏ. இடைவெளிகளில் நிரப்பப்பட்ட டி.என்.ஏ கற்றைகளுள் சில, மேற்காப்பிரிக்கத் தவளைகளுடையவை (West African Bullfrogs). இவை ஒரேபாலினச் சூழ்நிலையில் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்பவை. எனவே பூங்காவின் தொன்மாக்களும் அப் பண்பை உள்வாங்கிக்கொண்டு ஆணாக மாறி இனப்பெருக்கம் செய்துள்ளன).

பார்வையாளர் மையத்தில் இரு சிறார்களையும் விடும் கிரான்ட், பிறரைத் தேடுகையில் எல்லியைச் சந்திக்கிறார். இருவரும் மையத்துக்குத் திரும்பி அங்கு சிறார்களைத் தாக்க முயலும் ராப்டர்களிடமிருந்து அவர்களை மீட்டுக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு லெக்ஸின் முயற்சியால் பூங்காவின் கட்டமைப்பு மீள்கிறது. பின்பு அவர்கள் ஹேமன்டைத் தொலைபேசியில் அழைத்துவிட்டு மையத்தின் வெளிக்கூடத்துக்குச் செல்கின்றனர். அங்கு நால்வரையும் தாக்க முயலும் இரு ராப்டர்களை எதிர்பாராமல் அங்கு வரும் டி-ரெக்ஸ் கொல்கிறது. மையத்துக்கு வெளியில் ஹேமன்டும், மால்கம்மும் சிற்றுந்தில் வந்து நிற்கின்றனர். தான் அப்பூங்காவுக்கு ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என கிரான்ட் கூற ஹேமன்டும் அதை ஏற்கிறார்.

பின் அறுவரும் வானூர்தி இறங்குதளத்துக்குச் சென்று அங்கு காத்துள்ள சுழலிறகியில் (Helicopter) ஏறி ஈஸ்லா நுப்லாரை விட்டு வெளியேறுகின்றனர்.

Remove ads

நடித்தவர்கள்

முதன்மைக் கட்டுரை:ஜுராசிக் பார்க் தொடரில் தோன்றிய கதைமாந்தரின் பட்டியல்

எண் கதைமாந்தர் நடித்தவர் குறிப்பு
1 ஆலன் கிரான்ட் (Dr.Alan Grant) சாம் நெய்ல் (Sam Neill) தொல்லுயிர் ஆய்வாளர்
2 எல்லி சாட்லர் (Dr.Ellie Sattler) லாரா டென் (Laura Dern) தொல் தாவர ஆய்வாளர்
3 இயான் மால்கம் (Dr.Ian Malcolm) ஜெஃப் கோல்ட்ப்ளும் (Jeff Goldblum) கணித வல்லுநர்
4 ஜான் ஹேமன்ட் (John Hammond) ரிச்சர்ட் ஆட்டன்பரோ (Richard Attenborough) இன்-ஜென் நிறுவனத்தின் தலைவர், ஜுராசிக் பார்க்கை உருவாக்கியவர்
5 அலெக்சிஸ் "லெக்ஸ்' மர்ஃபி (Alexis "Lex" Murphy) அரியானா ரிச்சர்ட்ஸ் (Ariana Richards) ஹேமன்டின் பேர்த்தி
6 திமோத்தி "டிம்" மர்ஃபி (Timothy"Tim" Murphy) ஜோசெஃப் மெஸெல்லோ (Joseph Mazello) ஹேமன்டின் பேரன்
7 இராபர்ட் முல்டூன் (Robert Muldoon) பாப் பெக் ( Bob Peck) பூங்காவின் காப்பாளர்
8 டொனால்ட் ஜென்னாரோ (Donald Gennaro) மார்ட்டின் ஃபெர்ரீரோ (Martin Ferrero) பூங்காவின் முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர்
9 டென்னிஸ் நெட்ரி (Dennis Nedry) வைன் நைட் (Wayne Knight) பூங்காவின் கணிப்பொறி நிரலாளர்
10 ரே அர்னால்ட் (Ray Arnold) சாமுவேல் எல். ஜாக்சன் (Samuel L. Jackson) பூங்காவின் தலைமைப் பொறியாளர்
11 லூயி டாட்ஜ்சன் (Dr.Lewis Dodgson) கேமரூன் தோர் (Cameron Thor) பயோசின் நிறுவனத்தின் தலைவர்
12 ஜுவானிட்டோ ராஸ்டக்னோ (Juanito Rostagno) மிகுவேல் சான்டோவல் (Miguel Sandoval) அம்பர் பிசின் சுரங்கம் ஒன்றின் உரிமையாளர்
13 ஜெர்ரி ஹார்டிங் (Dr.Gerry Harding) ஜெரால்ட் ஆர். மோலன் (Gerald R. Molen) பூங்காவின் கால்நடை மருத்துவர்
14 ஹென்றி வூ (Dr.Henry Wu) பி.டி. வோங் (BD Wong) பூங்காவின் தலைமை மரபணு வல்லுநர்
15 - ரிச்சர்ட் கிலே

(Richard Kiley)

பூங்காச் சுற்றுலாவில் வானொலி மூலம் வர்ணணையளிப்பவர்
16 திரு. டிஎன்ஏ -வின் (‌‌Mr. DNA) குரல் கிரெக் பர்சன்

(Greg Burson)

படியெடுத்தல் முறையினை விளக்கும் அசைவூட்ட டிஎன்ஏ
Remove ads

தயாரிப்பு

முன்னேற்றம்

Thumb
மைக்கேல் கிரைட்டனின் புதினம் வெளியாவதற்கு முன்பே இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் கவனத்தை ஈர்த்தது. இப் புதின ஆசிரியர் இத்திரைப்படத்தின் முதல் திரைக்கதையையும் எழுதியவராவார்.

மைக்கேல் கிரைட்டன் முதன்முதலில், ஒரு தொன்மாவை மீளுருவாக்கும் பட்டதாரி மாணவரைப் பற்றிய திரைக்கதையைத்தான் சிந்தித்து வைத்திருந்தார். ஜுராசிக் பார்க் புதினத்தை எழுதத் தொடங்கும் வரை தொன்மாக்கள் மற்றும் படியெடுத்தலைப் பற்றிய ஆர்வம் அவருக்கு மிகுதியாக இருந்தது.[6]

இப் புதினம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் 1989 இல் ஸ்டீவன் ஸ்பில்பேர்க், பின்னாளில் ER என அறியப்பட்ட தொடரின் திரைக்கதையைக் குறித்துக் கிரைட்டனுடன் கலந்துரையாடச் சென்றிருந்தார். அப்பொழுது அவருக்கு இப் புதினத்தைக் குறித்துத் தெரியவந்தது.[7] "என்றாவது ஒரு நாள், நவீன மனித இனத்தின் அருகில் தொன்மாக்களைக் கொண்டுவந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஜுராசிக் பார்க் ஒரு நம்பகமான பார்வை" என அவர் தெரிவித்தார்.[8]

அச்சமயத்தில் கிரைட்டன், $ 15 லட்சத்தைப் பேச்சுவார்த்தைக்கு உட்படாத கட்டணமாகவும், தயாரிக்கப்படப் போகும் திரைப்படத்தின் ஒட்டு மொத்த வருவாயில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டையும் கோரினார். வார்னர் புரோஸ்.மற்றும் டிம் பர்டன், கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் ரிச்சர்ட் டோனர், 20ஆம் சென்சுரி பாக்ஸ் மற்றும் ஜோ தாந்தே ஆகியோர் திரைப்பட உரிமைகளை வாங்க முயன்றன.[7] ஆனால் யுனிவர்சல் ஸ்டுடியோஸ், இறுதியில் ஸ்பில்பேர்க்குக்காக மே 1990 ல் அவ்வுரிமைகளை வாங்கியது.[9]

ஹூக் திரைப்படத்தை முடித்தபின்பு ஸ்பில்பேர்க், சிண்டலர்ஸ் லிஸ்ட் திரைப்படத்தை எடுக்க விரும்பினார். அமெரிக்க இசை நிறுவனத்தின் (அப்போதைய யுனிவர்சல் பிக்சர்ஸின் தாய் நிறுவனம்) தலைவரான சித் ஷீன்பெர்க் (Sid Sheinberg), அத் திரைப்படத்துக்குப் பச்சைக்கொடி காட்டியதுடன், " ஸ்பில்பேர்க் முதலில் ஜுராசிக் பார்க் திரைப்படத்தை எடுக்கவேண்டும்" என நிபந்தனை விதித்தார்.[7] பின்னர் கூறும்போது ஸ்பில்பேர்க், ஜுராசிக் பார்க் வழியாக "ஜாஸ் திரைப்படத்துக்கு நிலத்தில் ஒரு நல்ல தொடர்ச்சியை உருவாக்கித் தர முயன்றேன்" எனத் தெரிவித்தார்.[10]

படப்பிடிப்பு

Thumb
படத்தில் இடம்பெற்ற ஃபோர்ட் எக்ஸ்ப்ளோரர் மாதிரி. இடம்:யுனிவர்சல் ஸ்டுடியோஸ், ஜப்பான் .

இருபத்தைந்து மாதங்கள் முன்-தயாரிப்புக்குப் பின் 1992-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று ஹவாய் பகுதிக்குட்பட்ட கவாய் தீவில் படப்பிடிப்பு துவங்கியது.[11] புதினத்தின் களமாக கோஸ்ட்டா ரிக்கா இருந்தமையால் அங்கேயே நடத்தலாம் என முதலில் கருத்து நிலவியது. எனினும் உள்கட்டமைப்பு மற்றும் அணுகல் குறித்த ஸ்பில்பேர்க்கின் கவலைகள் அவரை ஏற்கனவே பணிபுரிந்த இடத்தைத் தேர்வுசெய்ய வைத்தன.[8] மூன்று வாரப் படப்பிடிப்பில், ஈஸ்லா நுப்லாரின் காடுகளுக்காகப் பல்வேறு பகல்நேர வெளிப்புறப் பிடிப்புகளைச் (exteriors) செய்யவேண்டியிருந்தது.[9] செப்டம்பர் 11 அன்று, இனிகி சூறாவளி, கவாய் மீது நேரடியாகக் கடந்துசென்றதால் ஒருநாள் படப்பிடிப்பு தடைபட்டது.[12] திரைப்படத்தின் புயல் காட்சிகள் பலவும் இச் சூறாவளியின் போது படமாக்கப்பட்டன. காலிமைமஸ் துரத்தல் காட்சிக்கான படப்பிடிப்புக்களம், ஓஹு தீவின் குவாலோவா பண்ணைக்கு மாற்றப்பட்டது. துவக்கக் காட்சி ஒன்றுக்காக மின்னணு முறையில் ஒரு இயற்கைக் காட்சியின் அசையாப் படத்தை அசைவூட்ட வேண்டியதானது. படத்தின் திறப்புக் காட்சி, மவுய் தீவின் ஹைக்கூ பகுதியில் படமாக்கப்பட்டது.[13] கூடுதல் காட்சிகள், "தடைசெய்யப்பட்ட தீவான" நீஹாவில் எடுக்கப்பட்டன.[14] பூங்காவின் பார்வையாளர் மையத்தின் வெளிப்புறத்துக்காகக் கவாயிலுள்ள வேலி ஹவுஸ் பயிர்த்தோட்டப் பண்ணையில் ஒரு முகப்பு கட்டப்பட்டது.[15] சாமுவேல் எல். ஜாக்சனின் பாத்திரம் ராப்டர்களால் கொல்லப்படும் நெடுங்காட்சி ஒன்றுக்காக உருவாக்கப்பட்ட களம், இனிகி சூறாவளியால் அழிக்கப்பட்டது.[16]

படத்தில் தோன்றிய தொன்மாக்கள்

மேலும் பார்க்க: ''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய விலங்குகளின் பட்டியல்

இத் திரைப்படத்தின் தலைப்பு ஜுராசிக் காலத்தைச் சுட்டுவதாக இருப்பினும், இதில் தோன்றும் பிராக்கியோ சாரஸ் , டைலோஃபோ சாரஸ் ஆகியன மட்டுமே அக் காலத்தைச் சேர்ந்தனவாகும். பிற விலங்குகள் கிரெடேஷியஸ் காலத்தில்தான் தோன்றின.[17] திரைக்கதையிலும் கிரான்ட் ஒரு சிறுவனிடம் வெலாசிராப்டரின் சீற்றத்தை விவரிக்கும்பொழுது " நீ (இப்போது) கிரெடேஷியஸ் காலத்தில் வாழ்வதாகக் கற்பனைசெய்து கொள்..." என்கிறார்[18]

"இத் திரைப்படத்தின் நட்சத்திரம்" என்று ஸ்பில்பேர்க்கால் வருணிக்கப்பட்ட தொன்மா. ரசிகர்களுக்காக ஸ்பில்பேர்க், படத்தின் இறுதியில் டி-ரெக்ஸைக் கொண்டு ஒரு காட்சியைப் படமெடுத்தார்.[19] ஸ்டான் வின்ஸ்டன் வடிவமைத்த அசைவூட்ட டி-ரெக்ஸ் மாதிரியானது 20 அடி (6.1 மீட்டர்) உயரமும், 17500 பவுண்டு (7900 கிலோ) எடையும், 40 அடி (12 மீட்டர் ) நீளமும் இருந்தது.[20] "உயிருள்ள ஒரு தொன்மாவுக்கு மிக அருகில் நான் இருந்த தருணம் அது" என்று தொல்லுயிர் ஆய்வாளர் ஜாக் ஹார்னர் (Jack Horner) பின்பு நினைவுகூர்ந்தார்.[20] மால்கம்-மாக நடித்த ஜெஃப் கோல்ட்ப்ளும் “அது நடந்து வரும்போதும் தன் கோரமான மூக்கை நீட்டி மஞ்சள் கண்களை உருட்டும்போதும் அது இயக்கப்படும் பொம்மை என்பதை மறந்து, மிரண்டுபோய் நடித்தேன் என்பதே உண்மை” என்றார்.[21]

இப்படத்தின் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்ட தொல்லுயிர் ஆய்வாளர்களிடையே டி-ரெக்ஸின் அசைவுகளை (குறிப்பாக அதன் ஓட்டத்திறனை) பற்றி ஒருமித்த கருத்து நிலவவில்லை. எனினும் இப்படத்தின் அசைவூட்டக் கலைஞர் ஸ்டீவ் வில்லியம்ஸ் (Steve Williams), "இயற்பியலை ஜன்னலுக்கு வெளியில் எறியவும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடக்கூடிய ஒரு டி-ரெக்ஸை (‌‌அவ்வளவு வேகமாக ஓடினால் அதன் உள்ளீடற்ற எலும்புகள் முறிந்துவிடக்கூடும் என்றாலும்) உருவாக்கவும்" முடிவுசெய்தார்.[22] டி-ரெக்ஸானது ஒரு சிற்றுந்தைத் துரத்தும் காட்சியைப் படம்பிடிக்க இரு மாதங்களானது இம் முடிவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

இத் தொன்மாவின் பார்வையானது அசைவுகளின் அடிப்படையில் அமைந்ததாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிந்தைய ஆய்வுகள், கொன்றுண்ணிப் பறவைகளுக்கு இணையான துணைவிழிப் பார்வை (‌Binocular Vision) இதற்கிருந்தது என நிரூபித்துள்ளன.[23]

யானைக்கன்று,புலி மற்றும் ஆட்பிடியன் (Alligator) ஆகியவற்றின் ஒலிகளைக் கலந்து இத் தொன்மாவின் முழக்கமாகக் காட்டினர். இதன் உறுமலுக்காக ஆண் கோவாலாவின் ஒலியும்[24] மூச்சொலிக்காகத் திமிங்கிலம் ஒன்றின் ஒலியும் காலிமைமஸ் ஒன்றை வேட்டையாடும் காட்சிக்காக நாய் கயிறைக் கடிக்கும் ஒலியும்[19] காலடி ஓசைக்காக சீக்கோயா மரங்கள் (Sequoias) வெட்டப்பட்டுத் தரையில் விழும் ஓசையும் பதிவுசெய்யப்பட்டன.[25]

இப்படத்தில் வெலாசிராப்டருக்கு முக்கியப் பங்குண்டு. இதன் உண்மையான அளவு திரைப்படத்தில் காட்டப்பட்டதை விடச் சிறியதாகும். பட வெளியீடுக்குச் சற்றுமுன் இவ்விலங்கையொத்த யூட்டாராப்டர் (Utahraptor) என்ற தொன்மாவை, ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.[26] இதனால் ஸ்டான் வின்ஸ்டன் "நாம்(‌படப்பிடிப்புக் குழுவினர்) அதை (வெலாசிராப்டரை) செய்தோம்; பின்பு அவர்கள் (ஆய்வாளர்கள்) அதை (யூட்டா ராப்டரை) கண்டுபிடித்துவிட்டார்கள்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்."[20] இராபர்ட் முல்டூன் தாக்கப்படுதல் மற்றும் சமையலறை ஆகிய காட்சிகளில் வெலாசிராப்டர் போல வேடமிட்ட ஆட்கள் நடித்தனர்.

ஓங்கில், கடல் பசு, வாத்து,[19] மாகேம், ஆமை முதலானவற்றின் ஒலிகளும் மனிதர்களின் கரகரப்புகளும் வெலாசிராப்டரின் ஒலிக்காகப் பயன்படுத்தப்பட்டன.[27] இத் திரைப்படம் வெளியானபின்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்,வெலாசிராப்டர் மற்றும் டெய்னானிக்கஸ் (Deinonychus) போன்ற டுரோமேயோசார் வகைத் தொன்மாக்களுக்கு இறகுகள் இருந்திருக்கலாம் எனக் காட்டுகின்றன. எனினும் இக் கூறானது ஜுராசிக் பார்க் III படத்தில், அதுவும் ஆண் ராப்டர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.[28]

  • டைலோஃபோசாரஸ் (Dilophosaurus)

இத் தொன்மாவானது அதன் உண்மையான அளவைவிடச் சிறியதாகச் காட்டப்பட்டுள்ளது. ரசிகர்கள் இதை வெலாசிராப்டருடன் குழப்பிக்கொள்ளாமல் இருப்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டது.[29] இதன் கழுத்திலுள்ள விசிறி போன்ற அமைப்பும், நஞ்சு உமிழும் திறனும் கற்பனையே.

அன்னம், பருந்து, ஹௌலர் குரங்கு (Howler Monkey) மற்றும் கிலுகிலுப்பைப் பாம்பு ஆகியவற்றின் ஒலிகளைக் கலந்து இத் தொன்மாவுக்கான ஒலியை உருவாக்கினர்.[19] இதன் அனிமேட்ரானிக் மாதிரியானது, ஸ்டான் வின்ஸ்டன் குழுவினரால் "ஸ்பிட்டர்" (Spitter) எனப் பெயரிடப்பட்டது. படப்பிடிப்பின்பொழுது இதை ஓர் அகழியில் வைத்து இயக்கினர். நஞ்சு உமிழும் காட்சியின்போது மெத்தாசில் (Methacyl) மற்றும் K-Y ஜெல்லி (K-Y Jelly) கலவையைப் பெயின்ட்பால் (Paintball) முறையில் பயன்படுத்தினர்.[30]

  • பிராக்கியோசாரஸ் (‌Brachiosaurus)

ஈஸ்லா நுப்லாரில் பார்வையாளர் குழுவினருக்குத் தென்படும் முதல் தொன்மா. இது தன் உணவை மென்று உண்ணுவது, பின்னங்கால்களில் நின்று மரவுச்சியை மேய்வது ஆகிய காட்சிகள் தவறான காண்பிப்புகளாகும். திரைப்படக் கலைஞர் ஆன்டி ஸ்கோன்பெர்க் (Andy Schoneberg), " பிராக்கியோசாரஸை ஒரு பசுமாடு போல அமைதியான விலங்காகக் காண்பிக்கவே உணவை மெல்லும் காட்சி சேர்க்கப்பட்டது" என்றார்.இத் தொன்மாவின் தலை, மேல்கழுத்து ஆகிய மாதிரிகள் மட்டுமே ஹைட்ராலிக் (Hydraulic) முறையைப் பயன்படுத்தாமல் வடிவமைக்கப்பட்டன.[31]

அறிவியல் சான்றுகளின்படி, இவ்விலங்கிற்கு ஓரளவே குரல்திறன் இருந்ததாகத் தெரிகிறது. எனினும் ஒலி வடிவமைப்பாளர் கேரி ரிட்ஸ்ரோம் (Gary Rydstrom) திமிங்கிலம் மற்றும் கழுதை ஆகியவற்றின் ஒலிகளை இவ்விலங்கிற்குப் பயன்படுத்தி "ஒரு இனிமையான அதிசய உணர்வை"ஏற்படுத்தினார். பென்குயின் பறவைகளின் ஒலிகளும் பயன்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது.

  • டிரைசெரடாப்ஸ் (Triceratops)

இத் தொன்மா ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்துக்கு முன்பே இக்காட்சியைப் படம்பிடிக்கும்படி ஸ்பில்பேர்க் அறிவுறுத்தியதால் ஸ்டான் வின்ஸ்டனுக்கு வேலைப்பளு மிகுதியானது.[32] கவாய் (Kaua'i) தீவில் எட்டு பேரால் இயக்கப்பட்ட இதன் மாதிரி, படத் தயாரிப்பின்போது படம்பிடிக்கப்பட்ட முதல் தொன்மாவாகும்.[8]

லெக்ஸ் மர்ஃபியாக நடித்த அரியானா ரிச்சர்ட்ஸ் சவாரி செய்யும் காட்சிக்காக ஒரு டிரைசெரடாப்ஸ் குட்டியின் மாதிரியை ஸ்டான் வின்ஸ்டன் உருவாக்கினார். ஆனால் படத்தின் விறுவிறுப்பு குறையும் என்பதால் அக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.[33]

கேரி ரிட்ஸ்ரோம், தான் ஒரு அட்டைக் குழாய்க்குள் மூச்சுவிடும் ஒலியும் ஸ்கைவாக்கர் பண்ணையில் (Skywalker Ranch) பசுமாடுகள் எழுப்பும் ஒலியையும் இணைத்து இவ்விலங்குக்கான ஒலியை உருவாக்கினார்.[27]

  • காலிமைமஸ் (Gallimimus)

இத் தொன்மாக்கள் ஒரு காட்சியில் டி-ரெக்ஸிடமிருந்து கூட்டமாகத் தப்பி ஓடுவதுபோல காட்டப்பட்டுள்ளன. படப்பிடிப்பின்போது முதன்முதலில் இவற்றுக்கே டிஜிட்டல் வடிவமைப்பு வழங்கப்பட்டது. முதலில் எலும்புக்கூடுகளாகவும் பின் முழு விலங்குகளாகவும் ஆக இரு ILM சோதனைகளில் இவை இடம்பெற்றன.[19] இவற்றின் அமைப்பு, தீக்கோழிகளை ஒத்ததாக இருந்ததால், தனியொரு விலங்கைவிட ஒட்டுமொத்த மந்தைக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.[34]

இக்காட்சியைப் படம்பிடிக்கும்பொழுது படத்தின் அனிமேட்டர்களை ILM வளாகத்தில் ஓடவிட்டு அவர்களின் அசைவுகளைப் படமெடுத்தனர்.[34][35] இவற்றின் ஒலிக்காகக் குதிரைகளின் கனைப்பொலி பதிவுசெய்யப்பட்டது.[27]

  • பாராசாரோலோஃபஸ் (Parasaurolophus)

பார்வையாளர் குழுவினர், முதன்முதலில் பிராக்கியோசாரஸைக் காணும்பொழுது இத் தொன்மாக்கள் அதன் பின்னணியில் கூட்டமாகத் தோன்றுகின்றன.[36]

இத் தொன்மாவின் எலும்புக்கூடு, பூங்காவின் பார்வையாளர் மையத்தில் தோன்றுகிறது.[37]

Remove ads

வரவேற்பு

விருதுகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...
Remove ads

புகழ்

"ஜுராசிக் பார்க் படத்தில் [தொன்மாக்களின்] உலகை மீண்டும் படைக்கும் தொழிலதிபராக வெண் தாடி, கைத்தடி என்று நட்புணர்வு கொண்ட தாத்தாவாக [ரிச்சர்ட் ஆட்டன்பரோ] நடித்த [ஜான் ஹேமன்ட்] பாத்திரம் சராசரி இந்திய ரசிகரும் அறிந்த ஒன்று" என பின்னாளில் இந்து தமிழ் திசை இதழின் வெ. சந்திரமோகன் எழுதினார்.[54]

தொடர்ச்சிகளும் விற்பனையும்

இவற்றையும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads