சைனம்

From Wikipedia, the free encyclopedia

சைனம்
Remove ads

சைனம் (ஆங்கிலம்: Jainism) பாரம்பரியமாக சைன நெறி (जैन धर्म) என்று அறியப்படுகிறது, ஒரு பண்டைய இந்திய சமயமாகும் மற்றும் சமண நெறிகளுள் ஒன்றாகும். சைன சமயத்தின் மூன்று முக்கிய தூண்கள் அகிம்சை, அனேகாந்தவாதம் (அன் + ஏகாந்தவாதம் = அனேகாந்தவாதம், பல தெய்வ வழிபாடு) மற்றும் அபரிகிரகா (பற்றின்மை) ஆகும்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள் தொகை, தோற்றுவித்தவர் ...
Thumb
சைனம் வலியுறுத்தும் அகிம்சையின் சின்னம்
Thumb
24 தீர்த்தாங்கரர்கள்
Thumb
23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதர், ரணக்ப்பூர், இராசத்தான்

இந்நெறி, 24-ஆவதும், இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரரால் பொ.ஊ.மு. 6-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் சைனம் கொள்கை அடிப்படையில் திகம்பரம் மற்றும் சுவேதாம்பரம் என இரு பிரிவாக பிரிந்தது. இறைவனின் இருப்பு மற்றும் வேதங்களை ஏற்றுக் கொள்ளாத சமயங்களில் பௌத்தம் போன்று சைனமும் ஒன்றாகும்.

சைன சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களில் முதலாமவர் ரிசபதேவர். இறுதியானவர் மகாவீரர் ஆவார். தீர்த்தங்கரர்களின் உபதேசங்களை மக்களிடத்தில் பரப்பியவர்களை கணாதரர்கள் என்பர்.

திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என்பவை சைனத்தின் இரு பிரிவுகள் ஆகும்.

Remove ads

சொல்லிலக்கணம் மற்றும் வேர்ச்சொல்லாய்வு

சைனம் எனும் சொல் சின = வென்றவன் எனும் வடமொழிச் சொல்லின் விருத்தி என்ற ஒலிமாற்றத்தால் பெற்ற சொல்லாகும் (சிவ > சைவ போல்). இதற்கு சினரின் வழி எனப் பொருள். மகாவீரர், தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தித் தன்னை வென்றவர் என்ற காரணத்தால், செயனா[1][2][3][4] எனும் பெயர்ப் பெற்றார். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்களை செயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்களை செயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்[4]. இச்சொல், நாளடைவில் திரிந்து சைனர் என்றானது. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றும், அவர் சைனம் எனும் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றால், மகாவீரருக்கு முன்பு இந்நெறி எப்பெயரில் அழைக்கப்பெற்றது என்பது கிடைக்கவில்லை.

Remove ads

வேறு பெயர்கள்

தமிழ் இலக்கியங்களில் சைன நெறி பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. அவை,

  • அருகம் - அருகர் - அருக பதவி (இருவினைகளை முற்றுமாகப்போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையை அடைந்தவர்)
  • ஆருகதம்
  • நிகண்ட வாதம்[5] - நிகண்டர் - பற்றற்றவர்
  • சாதி அமணம்
  • சீனம் - சீனர் (>சினர்>சைனர்) - வென்றவர் (ஐம்புலன்களையும், இருவினைகளையும் வென்றவர்), இச்சொல் புத்தத்தையும் குறிக்கும்[6]
  • பிண்டியர்[7] : பிண்டி (அசோக) மரத்தைப் போற்றி வழிபடுபவர் - பிண்டியர் மதம்

சைன நெறியைப் பின்பற்றுபவர்களை சைனர், நிகண்ட வாதி, அருகர், ஆருகதர், சாதி அமணர்[8] என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவர்.

Remove ads

தோற்றமும் வரலாறும்

வைசாலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள குந்தி கிராமா என்ற ஊரில் சித்தார்த்தர், திரிசலை ஆகியோருக்குப் பிறந்த மகாவீரரால் இந்தச் சமயம் தோற்றுவிக்கப்பெற்றது. இவரின் இயற்பெயர் வர்த்தமானர். இவர் மகள் பெயர் அனோசா. சகோதரர் நந்தி வர்த்தனார். இவர் யசோதா எனும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்திக்கொண்டிருந்த பொழுது, யாகம், சாதிக் கொடுமை போன்றவற்றைக் கண்டு மனம் வெறுத்து, துறவறம் பூண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் உடைதுறந்து, பிச்சையெடுத்து உண்டு துறவற வாழ்வினை மேற்கோண்டார். இரிசிபாலிகா எனுமிடத்தில், நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குப் போதித்தார். மக்கள் இவரை செயனா என்று அழைத்தனர். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்கள் செயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் செயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்.[4] இவருக்கு வழங்கிய வேறு பெயர்கள் கைவல்யர், மகாவீரர், செயனர், நிர்கிரந்தர் ஆகும்.

சைனமும் பண்டைய தமிழகமும்

சைனம் பண்டைய தமிழகம் வந்த வரலாறு

பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்திரகுப்த மோரியர்(மௌரியர்), ஆசீவக நெறியை பின்பற்றிய தன் மகனான பிந்துசாரரிடம்[9][10][11] ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட சில காலத்திற்கு பின்பு, சைன நெறியைத் தழுவினார். சந்திரகுப்த மோரியரின் அரசகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர் என்பவர் காலத்தில் சைன நெறி தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். பத்திரபாகு முனிவர், சந்திரகுப்த மோரியருடன் இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து பன்னீராயிரம் சைன முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர், மைசூர்(எருமையூர்) அருகேயிருக்கும் சமணவெள்ளைக்குளம் (எ) சிரவணபௌகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர், சோழ பாண்டிய நாடுகளில் சைனம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சைன நெறி பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் பொ.ஊ.மு. 317 முதல் பொ.ஊ.மு. 297 என்பதால் சைனம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையானது.[12]

திரமிள சங்கம்

பண்டைய தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியில் பொ.ஊ. 470ல் பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பவர் திரமிள சங்கம் எனும் சைனர்களின் சங்கத்தை மதுரையில் நிறுவினார். இதனை, தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் குறிப்பிடுகிறார். இச்சங்கத்தின் நோக்கம், சைன நெறியைப் பரப்புவதும், சைன நெறிக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத் தோற்றுவிப்பதுமாக இருந்தது. இதனை, நான்காம் தமிழ்ச் சங்கம் என்று கூறுவர்[13][14][15]. ஆனால், இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச் சங்கம் போன்றது அல்லாமல் சைன சமயக்கருத்துக்களை பரப்ப உருவாக்கப்பட்ட சங்கம் என்று மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள் தான் இயற்றிய சமணமும் தமிழும் எனும் நூலில் கூறுகிறார்.[16]

சைனர்கள் இயற்றிய தமிழ் இலக்கியங்கள்

சைன நெறியை பரப்பும் நோக்குடன் பண்டைய தமிழகம் வந்த சைன நெறியினர், காப்பியங்கள் மற்றும் புராணங்கள் இயற்றாமல் காலப்போக்கில் அழிந்த நெறிகளைப் போல இல்லாமல், பௌத்த மற்றும் வைதீக நெறிகளுடன் போட்டியிட்டுக் கொண்டு காப்பியங்கள் மற்றும் புராணங்கள் மூலம் தங்கள் நெறியைப் பரப்பினர். சைனர்கள் இயற்றிய காப்பியங்கள் மற்றும் நூல்களாவன:

  1. ஐம்பெருங்காப்பியங்கள்
    1. சீவக சிந்தாமணிதிருத்தக்கதேவர் - பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டு
    2. வளையாபதி - பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது
  2. ஐஞ்சிறுங்காப்பியங்கள்
    1. பெருங்கதைகொங்குவேளிர் - பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு - (சைனம், வடமொழித் தழுவல், அரசன் உதயணன் வரலாறு)
      1. பெருங்கதையின் சுருக்கநூல் - உதயணகுமார காவியம்கந்தியார் - பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டு - (சைனம், வடமொழித் தழுவல், அரசன் உதயணன் வரலாறு)
    2. நாககுமார காவியம் - பொ.ஊ. 16ஆம் நூற்றாண்டு[17] – (சைனம்)
    3. யசோதர காவியம் - பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு - (சைனம், வடமொழித் தழுவல், உயிர்கொலை கூடாது)
    4. சூளாமணிதோலாமொழித்தேவர் - பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டு - (சைனம், வடமொழித் தழுவல், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
    5. நீலகேசி - பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டு - (சைனம், நீலி என்ற பெண் சைன முனிவர் சைன சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
  3. நரிவிருத்தம்திருத்தக்கதேவர் - பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டு
Remove ads

சைன நெறி குறித்த குழப்பங்கள்

சமணம் மற்றும் சைனம் ஆகிய சொற்களின் பொருட்குழப்பம்

திவாகர முனிவரால் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.

     சாவகர் அருகர் சமணர் ஆகும்;
     ஆசீ வகரும் அத்தவத் தோரே
                            - திவாகர நிகண்டு

அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.

     சாவகர் அருகர் சமணர் அமணர்
     ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே
                            - ஐயர் வகை, பிங்கல நிகண்டு

இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,

  1. கண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்
  2. கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக புத்தத்தையும்
  3. கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும் பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.

இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள சைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள சைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் சைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு சைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.

இந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் சைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆசீவகம் சைனத்தின் உட்பிரிவாக்கப்பட்ட குழப்பம்

திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,

  1. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு[18]
  2. பௌத்தர்களின் நெறி நூலான மச்சிமா நிகாயம்
  3. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்[19]
  4. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய புத்தக் காப்பியம் மணிமேகலை[5]
  5. பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி
  6. பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்

ஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் சைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி சைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,

  1. பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்
  2. பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை

ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.[20]

சைன நெறியின் தோற்றத்தின் காலம் பற்றிய குழப்பம்

[தெளிவுபடுத்துக]

மகாவீரர், தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தித் தன்னை வென்றவர் என்ற காரணத்தால், செயனா[1][2][3][4] எனும் பெயர்ப் பெற்றார். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்களை செயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்களை செயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்[4]. இச்சொல், நாளடைவில் திரிந்து சைனர் என்றானது. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றும், அவர் சைனம் எனும் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்தவர் என்றும் இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றால், மகாவீரருக்கு முன்பு இந்நெறி எப்பெயரில் அழைக்கப்பெற்றது என்பது கிடைக்கவில்லை.

Remove ads

உட்பிரிவுகள்

Thumb
சுவேதம்பர சைன சாதுக்கள்

சைன நெறியில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் திகம்பரர்களும்[21], வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் சுவேதம்பரர்களும் இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள். இவர்களிலிருந்து கீழ்வரும் பிரிவுகள் பிற்காலத்தில் தோற்றம் பெற்றன.

  • சுதனக்வாசி - இறைவனுக்கு உருவமில்லை என்பது இவர்கள் கொள்கை.
  • சுவேதம்பர தேராபந்த் - ஆச்சார்யா பிட்சு என்பவரால் தொடங்கப்பெற்றது.
  • பிசாபந்த
  • முருடிபுசக - உருவவழிபாட்டினை ஏற்றவர்கள்.
Remove ads

சைனத்தின் அடிப்படைக் கொள்கைகள்

Thumb
24 தீர்தங்கரர்களில் முதல்வரும் கடையவரும்

சைன சமய இல்லறத்தார்களும் மற்றும் சைனத் துறவிகளும் பின்பற்ற வேண்டிய அறங்களை அனுவிரதம் என்றும் மகாவிரதம் என்று அடைவு செய்துள்ளது. விரதம் என்பது நோன்பினை குறிக்கும். வாழ்க்கையை ஒரு விரதமாக கடைபிடிக்க வேண்டும் என்பது மகாவீரரின் குறிகோள் ஆகும். இதனால்தான் இல்லறத்தாரைச் சாவகநோன்பிகள் என்றும் துறவறத்தாரை பட்டினி நோன்பிகள் [22] என்றும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

இல்லறத்தாரும் மற்றும் துறவறத்தாரும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து அனுவிரதங்கள்

  1. அகிம்சை
  2. வாய்மை
  3. கள்ளாமை
  4. துறவு
  5. அவாவறுத்தல்

1. அகிம்சை (கொல்லாமை)

இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற நான்கு கொள்கைகளையும் சேர்த்து அகிம்சை என்கின்றனர். ”அகிஞ்சோ பரமொ தர்ம” என்பது மகாவீரரின் பொன்மொழியாகும். கொல்லாமையே மேலான அறம் என்பது இதன் பொருள். எந்த உயிருக்கும் எந்த வகையிலும் இம்சை செய்யாமையே அகிம்சை எனப்படும். சைன சமயத்தின் பன்னிரண்டு அங்க ஆகமங்களில் முதல் ஆகமம் ஆகிய ஆயாரங்க சுத்தத்தில் அகிம்சை எனப்படும் அறத்தினை மகாவீரர் போதித்துள்ளார். அதன் ஒரு பகுதியில் “ மனிதர்களே “, எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தவோ, வதைக்கவோ, கொல்லவோ கூடாது. பிறறை அவமதிப்பது கூட இம்சையாகும். ஆகவே அகிம்சை என்பது உயிர்க்கொலை புரியாமை மட்டும் அன்று; மன்னுயிர்க்கும் இன்னா செய்யாமையும், பிறறை அவமதிக்காமையும் அகிம்சை ஆகும். மனிதர்களே, நீங்கள் எடுத்துவரும் பல்வேறு பிறவிகளில், உங்களால் இம்சிக்கப்பெறும் உயிராகவும் நீங்களே பிறப்பெடுத்து இருப்பீர்கள்; ஆகவே, எல்லா உயிர்களையும் உங்கள் உயிர் போல மதித்து நடப்பதே அகிம்சையாகும், என்று மகாவீரர் அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வகை அறங்களுக்கும் மூலமாகவும் முதலாகவும் சுடர்விடுவது தயா எனப்படும் பெருங்கருணை ஆகும். இப்பேரருள் வாய்க்கப் பெற்றவர்கள் மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க மாட்டான். அனைத்துயிர்களையும் சம நோக்குடன் பார்ப்பான்.

2. வாய்மை (அசத்திய தியாகம்)

மகாவீரரின் இரண்டாவது பேரறமாகத் திகழ்வது பொய் பேசாமை எனப்படும். இதனை ”அசத்தியத் தியாகம்” என்பர். சத்தியம் என்பது உண்மை. அசத்தியம் என்பது உண்மைக்குப் புறம்பாகிய பொய். தியாகம் என்பதற்கு கைவிட்டுவிடுதல் என்பது பொருள். எனவே அசத்தியத்தியாகம் எனில் பொய் பேசுவதை அறவே கைவிட்டுவிடுதல் என்று பொருள். மகாவீரர் வாய்மை அறத்தினை முழுமையாகப் பின்பற்றுவதற்கு ஐந்து வழிகள் அறிவித்துள்ளார்.

  • எந்த ஒரு கருத்தையும் ஆராயாது பேசுதல் கூடாது.
  • சீற்றத்துடன் பேசுதல் கூடாது.
  • ஆசைகாட்டி பேசுதல் கூடாது.
  • அச்சம் ஏற்படும்படி பேசுதல் கூடாது.
  • பிறர் சிரிக்க வேண்டும் என்பதற்காகவோ, விளையாட்டிற்காகவோகூட பொய் பேசுதல் கூடாது.

அகிம்சையும் சத்தியமும் அறமாகக் கொண்டு செயல் புரிவோர் பல்வேறு சித்திகளைப் பெறுவர் என்பது சைன சமயத்தின் நம்பிக்கை. காந்தியடிகளின் அறப்போராட்டத்திற்கு மகாவீரர் போதித்த அகிம்சையும் சத்தியமுமே இரு பெரும் ஆயுதங்களாக பயன்பட்டு வெற்றி தேடித் தந்தது.

3. கள்ளாமை

மகாவீரரின் அறிவுரைகளில் மூன்றாவது அறமாகப் பேசப்படுவது அசுதேயம் ஆகும். சுதேயம் எனில் களவு. அசுதேயம் எனில் களவு புரியாமை எனும் கள்ளாமையாகும். கொல்லாமை அறத்தினால் பிற உயிர்களுக்கு தீங்கு புரியாமை குறித்த மகாவீரர் கள்ளாமை அறத்தினால் பிறர் உடைமைகளுக்கு தீங்கு நேராதபடி வாழவேண்டும் என வலியுறுத்துகிறார். எப்பொருளாக இருப்பினும், பிறர் கொடாத பொருளைக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் கள்ளாமையாகும்.

சைன நூல்களில் ஐந்து வகையாக கள்ளாமை விளக்கப்படுகிறது.

1 பிறர் இருக்கையில் தங்க முன்னிசைவு கேட்டல் 2 பெற்ற பிச்சையில் பங்குகொள்ள குருவின் இசைவு கேட்டல் 3 தங்குமுன் வீட்டின் உரிமையாளரின் இசைவினைப் பன்முறை வேண்டல் 4 ஆசனங்கள் மற்றும் பிறபொருட்களைப் பயன்படுத்த இசைவு கேட்டல் 5 மற்றொரு துறவிக்காக இவை வேண்டுதல்

4. பிரமச்சரியம்

காமம் இன்மை என்பது மகாவீரரின் மற்றொரு அறமாகும். தகாத ஆசையே மனிதன் துயரப்பட காரணமாகிறான். தனக்குரிய தலைவியைத் தவிர, பிறன் மனை வாழும் பெண்ணை மனதால்கூட தொடுதல் பாவம் என்று மகாவீரர் எச்சரித்தார்.

5. அவாவறுத்தல்

அவா அறுத்தல் என்பது மகாவீரரின் ஐந்தாம் அறமாகும். அவாவறுத்தல் என்பது ஆசையை குறிப்பதாகும். அவாவறுத்தல் (அவா + அறுத்தல்) ஆசையை துறத்தலாகும். ஆனால் அறநெறியில் பொருள் ஈட்டும்படியும், ஆனால் முறைகேடாக செல்வத்தை ஈட்டுவதை மகாவீரர் கண்டித்தார். எனவே, அளவாகவும், குறைவாகவும் பொருள் ஈட்ட வேண்டும், தேவைக்கு மேல் பொருள் ஈட்டக்கூடாது என்பது கருத்தாகும்.

துறவறத்தார் கடைபிடிக்க வேண்டிய மகாவிரதங்கள்

  1. ஐம்பொறி அடக்கம் ஐந்து
  2. ஆவசுயகம் ஆறு
  3. லோசம்
  4. திகம்பரம் (உடை உடுத்தாமை)
  5. நீராடாமை
  6. பல் தேய்க்காமை
  7. தரையில் படுத்தல்
  8. நின்று உண்ணல்
  9. ஒரு வேளை மட்டும் உண்ணல்
Remove ads

சைனத்தின் பிற கொள்கைகள்

நிலையாமை

தோன்றும் பொருட்கள் யாவும் ஒருநாள் அழியக்கூடியதே. எனவே உடல்நலமாக உள்ளபோதே வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும் அறச்செயல்களை ஆற்றுதல் வேண்டும்.

வினைக்கோட்பாடு

ஒருவனின் செயல்களின் நுண்ணிய அணுக்களும் உயிருடன் ஒட்டியுள்ளன் என்பதும், அது இப்பிறவியிலோ அல்லது மறுபிறவிலோ விளைவினைத் தருவதற்குரிய காலம் வரும் போது அவை வெளிப்பட்டு இன்ப துன்பங்களை உண்டாக்கும். இவ்வினைக்கோட்பாட்டை, ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம் எனச் சிலப்பதிகாரம் செப்புதல் நோக்குதல் வேண்டும்.

சுபாவவாதக் கொள்கை

ஒருவர் செய்த பாவத்திற்குப் பரிகாரம் உண்டு என வைதீக மதங்கள் கூறின. ஆனால் சைன சமயம், ஒருவர் மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் செய்த பாவத்தை இப்பிறவிலோ அல்லது மறுபிறவியிலோ அனுபவித்து தீர்ப்பது தவிர வேறு வழியில்லை எனக்கூறுகிறது. எனவே மனவடக்கம், சொல்லடக்கம் மற்றும் புலனடக்கத்துடன் வாழவேண்டும் என்று சைனம் அறிவுறுத்துகிறது.

நவபதார்த்தங்கள் (ஒன்பது பொருட்கள்)

கண்ணால் காணவும் கருத்தால் அறியபடுப்ப்டுகின்ற எல்லாப் பொருள்களையும் சீவன் என்றும் அசீவன் என்று இரு பெரும் பாகுபாட்டில் அடைவு செய்து ஆராய்ந்து உணர்த்திய சிறப்பு மகாவீரர்க்கு உண்டு. ஒரு அறிவு படைத்த உயிர்முதல் ஆறு அறிவு படைத்த மனிதன் வரை 1.சீவன் என்றும் மற்றவற்றை 2. அசீவன் பிரித்துக் கூறியவர். மற்ற ஏழு பதார்த்தங்களான 3.புண்ணியம், 4.பாவம், 5.ஊற்று எனும் ஆசுவரம், (உயிரில் வினைகள் ஊற்றேடுக்கும் என்றும் மனம், மொழி, செயல் ஆகிய மூன்றின் வாயிலாக உயிரிடம் வினைகள் ஊற்றுக்கள் சென்று சேருவது), 6.செறிப்பு (சம்வரை) எனும் தத்துவம் (இன்ப-துன்பங்களுக்கு காரணமான ஊற்றின் வழியை மூடுதல்), 7.உதிர்ப்பு எனும் நிருசரை (வாழ்க்கையை கடுந்தவம், தருமத்தியானத்தினால் கழிப்பது), 8.கட்டு (பந்தபாசத்திலிருந்து விடுபடுதல்), 9.வீடுபேறு.

Remove ads

பஞ்சப்பரமேட்டிகள் (வழிபாட்டுக்கு உரியவர்கள்)

தீர்த்தங்கரர்கள் வீடுபேறு பெற்று அனந்த சுகத்தில திளைத்திருக்கும் முற்றும் உணர்ந்த ஞானிகள். இவர்களையே வழிபடுதல் சைனர்களின் நெறியாகும். அன்றியும் அருகர், சித்தர், ஆச்சாரியார், ஆசிரியர் மற்றும் சாதுக்கள் எனும் ஐவரையும் பஞ்சப்பரமேட்டிகள் எனப் போற்றி வணங்குவர்.

கலை மற்றும் கட்டிடக்கலை

Thumb
சரவணபெலகுளாவில் பாகுபலியின் சிற்பம்

வெண்தாமரைக்குளம் எனும் சிரவணபெளகுளாவில் அமைந்துள்ள சைனத்துறவியான பாகுபலியின் சிற்பம் சைனர்களில் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றது. இச்சிலை 57 அடி உயரமானதாக உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சைனர்களின் பள்ளிகள் என்று அழைக்கப்பெறும் குகைகள் காணப்பெறுகின்றன. இவற்றில் சைனர்களின் கற்படுக்கைகள் உள்ளன. அத்துடன் இந்தியா முழுமையும் உருவ வழிபாட்டிற்காக அமைக்கப்பெற்ற கோவில்களும் சைனர்களின் கலையை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.

சைன நெறி நூல்கள்

  • பௌம சரிதம் : மகாவீரரின் நிலையாமை கொள்கை குறித்து பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூல்.
  • பூர்வங்கள் : தொடக்க கால சைனர்களின் புனித இலக்கியம்.
  • தசவைகாலிக சூத்ரம் : சைன நெறி மூல ஆகமம்.
  • தத்துவார்த்த அதிகாம சூத்திரம் மற்றும் சர்வார்த்த சித்தி : உமாசுவாதி எழுதியது. சைன நெறி பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல். காலம் பொ.ஊ. 100.
  • பிரவசன சாரம், நியமசாரம் மற்றும் பஞ்சாத்திகாயம் : நூலாசிரியர், குந்தகுந்தாச்சாரியர், காலம், பொ.ஊ.மு. 50 - பொ.ஊ. 50
  • மூலசாரம் : நூலை பலர் எழுதியுள்ளனர். காலம் பொ.ஊ. 100 முதல் 400 முடிய.
  • சேத சூத்திரங்கள், உபாங்கம் மற்றும் பிரகீர்ணம் : இந்நூலைகளை பலர் எழுதியுள்ளனர். காலம் பொ.ஊ. 400.
  • பக்தப் பிரஞ்ஞா : நூலின் ஆசிரியர் மற்றும் காலம் தெரியவரவில்லை.
  • திரவிய சங்கிரகம் : திகம்பர பிரிவை சார்ந்த நேமி சந்திரர் எழுதியது. காலம் பொ.ஊ. 1000. இதில் உத்தராத் தியான சூத்திரம், தசாங்க சூத்திரம், பகவதி சூத்திரம் என்ற அங்கங்கள் கொண்டுள்ளது.
  • தத்துவ தீபிகை : நூலாசிரியர் அமிர்த சந்திரசூரி, திகம்பரர்.
Remove ads

சைன நெறி அறிஞர்கள்

  • சித்தசேனர் : தொடக்ககால சைன நெறி தத்துவவாதி.
  • உமாசுவாதி : பொ.ஊ. 1ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைன நெறிக்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.
  • அகலங்கர் : பொ.ஊ. 750ல் வாழ்ந்த சைன தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சைன விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.
  • குணரத்ன: பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைன தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர். இந்நூல் அரிபத்திரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.
  • அரிபத்திரர் : பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைன தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன முக்காயம் என்ற நூலை எழுதியவர்.
  • ஏமச்சந்திரர் : இவரது காலம் பொ.ஊ. 1018–1172. புகழ்பெற்ற சைன நெறி தத்துவ அறிஞர். தத்துவம் மற்றும் தர்க்க நூல்களை எழுதியவர்.
  • பிரபாசந்திரர் : பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைன நெறி தர்க்கவாதி.
  • இராசசேகர சூரி : சைன நெறி தத்துவ ஆசிரியர். பொ.ஊ. 1340ல் வாழ்ந்தவர்.
  • வித்தியானந்தா : சைன நெறி தர்க்கவியல்வாதி.
  • இயசோவிசயா : சைன நெறி தர்க்கவியல்வாதி.
Remove ads

முக்கிய விழாக்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads