தமிழ் இலக்கணம்

தமிழ் மொழிக்கான இலக்கணம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ் மொழி 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,' என மூன்று பிரிவுகளை உடையது. இவையே 'முத்தமிழ்' என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்.

தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

  1. எழுத்து
  2. சொல்
  3. பொருள்
  4. யாப்பு
  5. அணி

அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று வகை இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.[சான்று தேவை][1][2][3]

Remove ads

எழுத்து

முதலெழுத்து

"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப"

"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே"

'அ' முதல் 'ஔ' வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்

உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.

சார்பெழுத்துகள்

"சார்ந்து வரன் மரபின் மூன்று அலங்கடையே"

"உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்"

சார்பு எழுத்து மூன்று என்பது மரபு என்கிறார் தொல்காப்பியர்

அவை குற்றியலிகரம் குற்றியலுகரம் மற்றும் ஆய்தம்

ஆனால் பிற்காலத்தில் நன்னூலார் அதை விரிபு படுத்தி :

  1. உயிர்மெய் எழுத்து
  2. ஆய்த எழுத்து
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலுகரம்
  6. குற்றியலிகரம்
  7. ஐகாரக் குறுக்கம்
  8. ஔகாரக் குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்

எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன.

இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216), ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.

தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும் ஆகும். அதில் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளைப் பற்றியும் கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

Remove ads

எழுத்து குறித்த இலக்கணச் செய்தி

எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழி நெடிலடி போன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும் அடிகளுமாகும்.

வஞ்சியுரிச்சீர்

  • நேர் இறுதி ஐந்து எழுத்து
  • நிரை இறுதி ஆறு எழுத்து
  • சிறுமை மூன்று எழுத்து
  • பெருமை ஆறு எழுத்து
  • 4 முதல் 6 எழுத்து வரை - குறளடி
  • 7 முதல் 9 எழுத்து வரை - சிந்தடி
  • 10 முதல் 14 எழுத்து வரை - அளவடி
  • 15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி
  • 18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி

மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது.

ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7 முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20 எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்.[4]

Remove ads

சொல்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ,

சொல்லின் வகைகள்

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

பொருள்

பொருள் இரண்டு வகைப்படும். அவை,

  1. அகப்பொருள்
  2. புறப்பொருள்

தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

யாப்பு

யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.

யாப்பின் உறுப்புகள்

யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை

  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை

உயிர் எழுத்துகளும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும். அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுற தொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும்.

யாப்பின் அடிப்படையில் பா வகைகள்

  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கலிப்பா
  4. வஞ்சிப்பா
Remove ads

அணி

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,

  1. தன்மையணி
  2. உவமையணி
  3. உருவக அணி
  4. பின்வருநிலையணி
  5. தற்குறிப்பேற்ற அணி
  6. வஞ்சப் புகழ்ச்சியணி
  7. வேற்றுமை அணி
  8. இல்பொருள் உவமையணி
  9. எடுத்துக்காட்டு உவமையணி
  10. இரட்டுறமொழிதலணி

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads