திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் (Kabartheeswarar Temple அல்லது Valanchuzinathar temple) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 25-ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதிசேடன், திருமால், பிரம்மன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
Remove ads
அமைப்பு
முன் மண்டபம்
முன் மண்டபம் அழகான வேலைப்பாடுகளைக்கொண்ட தூண்களோடு அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் வலப்புறம் வழியாக அம்மன் சன்னதிக்குச் செல்லலாம்.
கருவறை
கருவறையில் லிங்கத்திருமேனியாக கபர்தீஸ்வரர் உள்ளார். கருவறை வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன. அருகே இடப்புறம் சோமாஸ்கந்தர், நடராஜர் சிவகாமி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் செப்புத்திருமேனிகள் உள்ளன. ஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்கள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
திருச்சுற்று
கருவறையின் வெளியே கோஷ்டத்தில் பிட்சாடனர், நடராஜர், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சனீஸ்வரர் காணப்படுகின்றனர். கருவறைக்குச் செல்லும் மண்டபத்தில் லட்சுமி சரஸ்வதி உள்ளனர். முன்மண்டபம் தொடங்கி கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் பாலமுருகன், 32 வகையான லிங்க பானங்கள், நான்கு விநாயகர்கள், சந்தான ஆசாரியார், மகாவிஷ்ணு, துர்க்கை, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி, விநாயகர், வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வள்ளிதெய்வானையுடன் கூடிய ஆறுமுகக்கடவுள், கஜலட்சுமி, 22 வகையான லிங்கங்கள், தபஸ் நாச்சியார் உள்ளனர். தொடர்ந்து பள்ளியறை உள்ளது.
அம்மன் சன்னதி
கபர்தீஸ்வரர் சன்னதியின் வலப்புறத்தில் வெளிப்பிரகாரத்தில் பெரியநாயகி சன்னதி உள்ளது. உள்ளே இச்சன்னதியின் முன் மண்டபத்தில் வலப்புறம் அஷ்டபுஜமாகாளி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.


பைரவர் சன்னதி
முதலாம் இராசராச சோழனின் பட்டத்தரசியான உலகமகாதேவியாரால் கட்டபட்ட திருவலஞ்சுழி சேத்திரபாலர் கோயில் என்னும் பைரவர் சன்னதி இக்கோயில் வளாகத்தில் உள்ளது.[1]
Remove ads
தல வரலாறு
- ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.
- அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.
தல சிறப்புகள்
- திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.
- சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
- திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.
வெள்ளை பிள்ளையார் சன்னதி
கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. இக்கோயில் வளாகத்தில் உள்ள சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது.[2] இக்கோயிலின் நுழைவாயிலைக் கடந்து வரும்போது முதலில் வெள்ளை விநாயகர் சன்னதியாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் மற்றொரு வெள்ளை பிள்ளையார் கோயில் தஞ்சாவூர் நகரில் உள்ளது.
Remove ads
கும்பகோணம் சப்தஸ்தானம்
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.[3] கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலை ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.[4] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.[5] விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.
Remove ads
அமைவிடம்
இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.
புத்தமதம்
இப்பகுதியில் புத்தமதம் சிறப்பாக இருந்ததற்குச் சான்றாக இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நின்ற நிலையிலான புத்தர் சிலை ஒன்று இருந்துள்ளது. தற்போது அச்சிலை சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன. நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. அமர்ந்த நிலையிலுள்ள புத்தர் சிலை ஒன்றினை திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் தற்போது வழிபாட்டில் உள்ளதைக் காணமுடியும்.
Remove ads
திருத்தலப் பாடல்கள்
- இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருநாவுக்கரசர் பாடிய பதிகம் - 066 திருவலஞ்சுழி - ஐந்தாம் திருமுறை
கலிவிருத்தம்
(குறிலீற்றுமா கூவிளம் கூவிளம் கூவிளம்)
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு; (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையுநம் பாவமே! 1
இளைய காலமெம் மானை யடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே! 3.
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் - 002 திருவலஞ்சுழி - இரண்டாம் திருமுறை
கலித்துறை
(தேமா கூவிளம் 4)
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே! 1
கிண்ண வண்ணம லருங்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும்வ லஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே! 3.
Remove ads
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பரணிடப்பட்டது 2013-01-19 at the வந்தவழி இயந்திரம்
- தலவரலாறு, சிறப்புகள், அமைவிடம் பரணிடப்பட்டது 2013-01-19 at the வந்தவழி இயந்திரம்
- அப்பர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2007-11-30 at the வந்தவழி இயந்திரம்
- சம்பந்தர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2013-03-14 at the வந்தவழி இயந்திரம்
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads