பிரம்மம்

From Wikipedia, the free encyclopedia

பிரம்மம்
Remove ads

இந்து சமயத்தில் பிரம்மம் (Brahman, சமக்கிருதம்: ब्रह्म) என்ற சொல் முக்காலும் உண்மையான ஒரே மெய்ப்பொருளைக் குறிக்கும். அனைத்து உபநிடதங்களும் இதைப்பற்றியே பேசுகின்றன. வடமொழியிலிருந்து உருவான இச்சொல்லின் சரியான உருப்பெயர்ப்பு: ‘ப்ரஹ்மம்’.

Thumb
சனகாதி முனிவர்களுக்கு பிரம்ம வித்தையை மௌன குருவாக ஆலமரத்தடியில் அமர்ந்து அருளிச் செய்யும் தட்சிணாமூர்த்தி
Thumb
ஆதி சங்கரர் தம் சீடர்களான பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகருக்கு பிரம்ம உபதேசம் செய்தல்

பிரம்மா, விஷ்ணு, சிவன் எனப்படும் முத்தெய்வங்களில் படைத்தல் செயலுக்குரியவராகக் கூறப்படும் ‘பிரம்மா’ அல்லது ‘பிரமன்’ என்ற ஆண்மைச் சொல்லுடன் அஃறிணைச் சொல்லான ‘பிரம்ம’த்தை குழப்பிக்கொள்ளக்கூடாது. ‘பிரம்மா’ வேறு, பிரம்மம் வேறு.

Remove ads

அடிப்படை மெய்ப்பொருள் அல்லது பரம்பொருள்

எது எது உள்ளதோ அவை யாவற்றிற்கும் பெயரோ, உருவமோ அல்லது இரண்டுமோ இருந்தே தீரும். தங்க ஆபரணங்களெல்லாம் தங்கத்தை ஆதார உண்மையாக கொண்டுள்ளன. மண்ணால் செய்யப்பட்ட அவ்வளவும் மண்ணை அடிப்படை நிலையுண்மையைக் கொண்டன. திரைக்காட்சியில் தோன்றும் காட்சி அனைத்திற்கும் திரையே கடையுண்மை. அப்படியே உலகில் பெயருடனோ உருவமுடனோ காணப்படும் எல்லாவற்றிற்கும் ஆதார அடிப்படை மெய்ப்பொருள் ஒன்று உள்ளது என்பது எல்லா உபநிடதங்களின் கூற்று. அது ‘பெயர்’ ‘உருவம்’ என்ற வரையறுப்புகளை மீறியது. அதனால் அதை ‘அது’ (வடமொழியில் ‘தத்’) என்று மட்டுமோ அல்லது ‘பிரம்மம்’ என்றோ உபநிடதங்கள் குறிக்கின்றன. ‘பிரம்மம்’ என்ற சொல் ‘வளர்தல்’ அல்லது ‘அதிகரித்தல்’ என்று பொருள்படும் ‘பிருஹ்’ என்ற வடமொழி வினைச்சொல்லிலிருந்து உருவானது.

Remove ads

‘ஸத்’ என்ற ஒரு சொல் போதும்

மாறுதலே இல்லாத கடையுண்மை என்பதை அடிக்கோடிடுவதற்காக அதை ‘பரப்பிரம்மம்’ என்றும் கூறுவதுண்டு. அங்கிங்கெனாதபடி எங்கும் விளங்கியதாய் இருக்கும் இப்பரம்பொருளைப் பற்றி ‘இருக்கிறது’ என்பதைத்தவிர வேறு ஒன்றும் பேசிவிடமுடியாது. வெறுமனே இருக்கும், அவ்வளவுதான். அது பேசாது, பேசவொண்ணாதது; பார்க்காது, பார்க்கவொண்ணாதது; காரணிக்காதது, காரணத்தில் அடங்காதது; காரியம் செய்யாதது; காரியத்தினால் ஏற்படாதது – இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். முக்காலத்திலும் இருப்பதனால் அதை ‘இருப்பு’ என்று பொருளுடைத்த ‘ஸத்’ என்ற ஒரே சொல்லால் வேதங்கள் சொல்லிவிடுகின்றன. ‘ஸத்’ என்றால் நிலை பெயராத உண்மை.

Remove ads

மெய்யுணர்வே நேர்முக அறிவு

பிரம்மத்தைப்பற்றி நாம் அறிவதாகக் கொள்வதெல்லாம் வேதங்கள் சொல்வதன் மூலமே. இவ்வறிவு ‘மறைமுக’ அறிவாகும். பிரம்மத்தைப் பற்றிய ‘நேர்முக’ அறிவை மெய்ஞ்ஞான உள்ளுணர்வு ஒன்றினாலேயே அடையமுடியும். வேறுவழியால் அடைவதல்ல அவ்வறிவு. அறிவதையெல்லாம் அறியச்செய்வதே அந்த மெய்யுணர்வுதான். அதை ஆங்கிலத்தில் ‘Consciousness’ என்றும் வடமொழியில் ‘ஜீவசைதன்யம்’ என்றும் ‘சித்’ என்றும் சொல்வர்.

மெய்யுணர்வு அறியப்படுவதில்லை

மெய்யுணர்வைத்தாண்டி வேறு ஓர் உணர்வோ அறிவோ இருக்கமுடியாது. மெய்யுணர்வுதான் அத்தனை அறிவையும் அறிகிறது. ‘மெய்யுணர்வின்மை’ என்ற அறிவை அறியவும் மெய்யுணர்வு வேண்டும். இருட்டறையில் விளக்கைப் போட்டவுடன் தெரியும் பொருட்களை மட்டுமல்லாது, ஒரு பொருளும் இல்லாதபோது ஒன்றுமில்லை என்ற வெறுமையையும் காட்டிக்கொடுப்பது ஒரே வெளிச்சம் தான். இருட்டாக இருந்தபோது இருட்டைக் காண்பித்துக் கொடுத்ததும் ஒரு வெளிச்சம் தான். அந்த வெளிச்சம் தான் நம்முள்ளிருக்கும் மெய்யுணர்வு. இதுதான் வெளிச்சம் இருக்கும்போதும் வெளிச்சத்தையே நமக்கு விளக்கிவைக்கிறது. அறியப்படும் பொருள் எதையும் நம் அறிவுக்கு விளங்கச்செய்வது நம் மெய்யுணர்வே. ஆனால் மெய்யுணர்வை நமக்கு விளங்கச் செய்வதற்கு வேறு அறியும் திறனோ கருவியோ வேண்டியதில்லை. மெய்யுணர்வு என்பது அறியப்படும் பொருள் அல்ல. எரியும் விளக்கை விளங்கச் செய்வதற்கு வேறு விளக்கு தேவையில்லை. மேலும் தனக்கு அயலான பொருளை அறியும் அறிவானது மெய்யறிவுமல்ல.

Remove ads

எல்லாவற்றையும் கடந்தது

இவ்வுலகனைத்தும் பிரம்மத்தின் வெளிப்பாடு தான். எல்லாவற்றிற்கும் முழு முதற்காரணம் அதுவே. விளங்கிடும் பிரம்மத்தைச் சார்ந்துதான் இவ்வவனி யாவும் விளங்குகிறது. ஆனாலும் பிரம்மத்திற்கு காரண-காரியங்கள் சொல்லப்பட வில்லை. அதனாலேயே அது உலகத்தின் இன்ப-துன்பங்களையும், நல்லது-கெட்டதுகளையும் தொடக்க-முடிவுகளையும் தாண்டிய ஒன்று எனப்படுகிறது. அது எண்ணத்திற்கும் சொல்லுக்கும் புத்திக்கும் அப்பாற்பட்டது. இப்படிச் சொல்வதால் பிரம்மம் [[புத்தம் சொல்லுவதுபோல் சூன்யம் என்றோ அறவே இல்லாத பொருளென்றோ கொள்ளலும் சரியல்ல. பிரம்மத்தை சம்பந்தப்படுத்திப் பேசப்படும் வினைதான் மறுக்கப்பட்டதே யொழிய பிரம்மத்தின் இருப்பு மறுக்கப்படவில்லை.

Remove ads

அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு

எல்லா உயிர்களுக்குள்ளும் உயிருக்குயிராக இருக்கும் (ஆன்மா என்று சொல்லப்படும்) மெய்யுணர்வும், எங்கும் நிறைந்து முடிந்த முடிவான உண்மைப்பொருளாக உள்ள பிரம்மமும், ஒன்றே தான் என்பது ஆதி சங்கரர் போற்றிய அத்வைத வேதாந்தத்தின் முடிவு. குடத்துள்ளிருக்கும் வெட்டவெளிக்கும், குடமே இல்லாமலிருக்கும் பரந்த வெட்டவெளிக்கும் வித்தியாசமே இல்லை. வித்தியாசம் இருப்பதாகச் சொல்லப்பட்டால் அது குடம் என்ற ஒரு செயற்கை வரம்பு, ஒன்றை சிறியது போலவும் மற்றொன்றை பெரியது போலவும் பிரித்துக்காட்டுகிறது என்பதுதான். இது அத்வைதம் சொல்கிற சித்தாந்தம்.

இராமானுஜர் போற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தத்தின் முடிவு இதிலிருந்து சிறிது வேறுபடுகிறது. ஒரு வெட்டவெளியை சிறியதாகவும் மற்றொன்றை பெரியதாகவும் பிரித்துக்காட்டும் குடத்தை இல்லை என்று மறுக்கமுடியாது. ஆதலால் ஆன்மாவை பரம்பொருளின் (அ-து பிரம்மத்தின்) ஒர் அம்சம் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறது அந்த சித்தாந்தம்.

பிரம்மத்திற்கு ஒரு செய்கையோ மாறுதலோ கிடையாது. அது ஏதோ செய்வதுபோல் தோன்றினால் அப்பொழுது அதை ‘பரமாத்மா’ என்கிறோம். குருக்ஷேத்திரத்தில் கீதையைப்பேசும் பரமாத்மாவை கிருஷ்ணபரமாத்மா வென்றும், கைலாயத்தில் செயல்படும்போது அதை பரமேசுவரன் என்றும், வைகுண்டத்தில் செயல்படும்போது அதை ஸ்ரீமந்நாராயணன் என்றும் ஸத்யலோகத்தில் படைத்தல் தொழிலில் ஈடுபடும்போது பிரமன் என்றும் சொல்கிறோம். இவர்களெல்லாம் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடுகள். இவ்விதம் பரமாத்ம தத்துவத்தை (பரம்பொருளை) முதலில் சொல்லி அதனுடைய வெளிப்பாடுதான் பரமாத்மாவென்று பின்னால் சொல்வது அத்வைத வேதாந்தக் கொள்கை. மாறாக, பரமாத்மாவை அடிப்படையாக வைத்து அவருடைய தத்துவம் தான் பரமாத்ம தத்துவம் என்று சொல்வது விசிஷ்டாத்வைத வேதாந்தக் கொள்கை.

பிரம்மம் குணங்களற்றது (‘நிர்க்குணம்’) என்று அத்வைதம் சொல்கிறது. விசிஷ்டாத்வைதம் இதை மறுக்கிறது.

Remove ads

‘ஸத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம’

இது தைத்திரீய உபநிடத்திலிலுள்ள (தைத்திரீய உபநிஷத்) ஒர் முக்கியமான வாக்கியம். ‘பிரம்மம் என்பது உண்மை. பிரம்மம் என்பது மெய்யறிவு. பிரம்மம் என்பது வரையற்றது’. இது அத்வைத மரபில் இவ்வாக்கியத்திற்குச் சொல்லப்படும் பொருள். விசிஷ்டாத்வைத மரபில் உண்மை, அறிவு, வரையற்ற தன்மை இம்மூன்றும் பிரம்மமாகிற பரமாத்மாவின் குணங்கள் என்று கொள்ளப்படுகிறது.

இதனாலேயே பிரம்மத்தை ‘ஸச்சிதானந்தம்’ என்று சொல்வதும் பொருந்தும். அதாவது, ‘ஸத்’ (ஸத்யம் என்ற உண்மை, இருப்பைக் குறிப்பதால்), ‘சித்’ (ஞானம் என்ற மெய்யறிவைக் குறிப்பதால்), மற்றும் ‘ஆனந்தம்’ (வரையற்றது என்றவுடனே குறையற்ற ஆனந்தமும் நிறைபெறுவதால்).

Remove ads

சில மாதிரி மேற்கோள்கள்

யேனேதம் ஸர்வம் விஜானாதி தம் கேன விஜாநீயாத்பிருஹதாரண்யக உபநிஷத் 2 – 4 – 14 ‘எதைக்கொண்டு எல்லாம் அறியப்படுகிறதோ அதை எதைக்கொண்டு அறிவது?’

அணோரணீயாந் மஹதோ மஹீயாந்மஹாநாராயணோபநிஷத், அனுவாகம் 12 ‘அணுவுக்கணுவானது, பெரிதுக்கும் பெரிதானது’

யோ புத்தே: பரதஸ்து ஸ:” பகவத்கீதை: 3 – 43. ‘எது புத்திக்கும் அப்பாற்பட்டதோ'.

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர-தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோ’யமக்னி: / தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி”// முண்டக உபநிஷத் 2 – 2 -10. ‘அங்கு ஆதவனோ சந்திரனோ தாரகைகளோ பிரகாசிப்பதில்லை. மின்னல் கொடிகள் விளங்குவதில்லை. விளங்கிடும் அவனைச்சார்ந்து எல்லாம் விளங்குகின்றன. அவனுடைய் பிரகாசத்தால் இந்த எல்லாமே பிரகாசிக்கின்றன’.

யதோ வாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மனஸா ஸஹ” தைத்திரீயோபநிஷத்: 2 – 1 – 9 ‘(பிரம்மத்தினிடமிருந்து) அதை அடையமுடியாமல் மனதுடன் கூட சொற்கள் பின்வாங்குகின்றன’.

Remove ads

மகாவாக்கியங்கள்

வேதாந்த நூல்களில் நான்கு வேதங்களிலுள்ள உபநிஷத்துகளிலிருந்து பிரும்மத்தைப் பற்றிய நான்கு வாக்கியங்கள் கடைந்தெடுத்த ஸாரமாகக் கருதப்படுகின்றன. அவையாவன :

பிரஞ்ஞானம் பிரம்ம” (ஐதரேய உபநிடதம்ரிக் வேதம்) ‘மெய்யுணர்வே பிரம்மம்’

அஹம் பிரம்ம அஸ்மி” (பிருஹதாரண்யக உபநிடதம்யஜுர் வேதம்) ‘நான் பிரம்மமாக இருக்கிறேன்’

தத் த்வம் அஸி” (சாந்தோக்ய உபநிடதம்ஸாம வேதம்) ‘அதுவாகவே நீ இருக்கிறாய்’.

அயமாத்மா பிரம்ம” (மாண்டூக்ய உபநிடதம்அதர்வ வேதம்) ‘இந்த ஆன்மா பிரம்மமே’

‘பிரம்ம’- சொற்றொடர்கள்

பிரம்மம் என்ற சொல்லிலிருந்து வடமொழியில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் சில தமிழிலும் அப்படியே நூல்களில் வழக்கில் உள்ளன. அவைகளில் முக்கியமானவை:

‘பிரம்மஞ்ஞானி’: பிரம்மத்தை நேர்முகமாகவே அறிந்தவர். இவர் பிரம்மமாகவே ஆகிறார் என்பது உபநிடத-வாக்கியம்.

‘பிரம்மஞ்ஞானம்’: பிரம்மத்தைப்பற்றிய நேர்முக அறிவு.

‘பிரம்ம-நிர்வாணம்’: பிரம்மமாகவே ஆகிவிடல்.

‘பிரம்மச்சாரி’: பிரம்மமாகிற வேதங்களை கற்பதொன்றே குறியாயிருப்பவன்.

‘பிரம்மார்ப்பண்ம்’: பிரம்மத்திற்கு அர்ப்பணம்.

‘பிரம்மானுபவம்’: பிரம்மத்தை நேர்முகமாகக்கண்ட அனுபவம்.

‘பிரம்மபாவம்’: பிரம்மமாகவே பார்க்கும் நிலை.

‘பிரம்மோபதேசம்’: பிரம்மமாகிற வேதத்தின் உயிர் மூச்சாகிய காயத்ரீ மந்திரத்தை முறையாக உபதேசித்தல்.

பிரம்ம சூத்திரம் : பிரம்மத்தைப்பற்றிய பொருளனைத்தும் 555 சூத்திரங்களில் உள்ளடக்கிய பிரமாண நூல்.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரங்கள்

  • The Principal Upanishads. By S. Radhakrishnan. George Allen & Unwin, London 1953
  • Essentials of Hinduism. V. Krishnamurthy. Narosa Publishing House, Delhi. 1989
  • ஸ்ரீ ரமணரின் உள்ளது நாற்பது. ஸ்ரீரமணாசிரமம், திருவண்ணாமலை, 1950
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads