ராம் மனோகர் லோகியா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ராம் மனோகர் லோகியா
Remove ads

ராம் மனோகர் லோகியா (Rammanohar Lohia:மார்ச்சு 23,1910- அக்டோபர் 12, 1967) அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்; வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்திய பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர். புரட்சிகரமான சிந்தனையாளர்.' பிரஜா சோஷலிஸ்ட் கட்சி'யின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர்; உலக அரசு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா பொது வாழ்க்கைக்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்[1]

விரைவான உண்மைகள் ராம் மனோகர் லோகியா, பிறப்பு ...
Remove ads

இளமை

ராம் மனோகர் லோகியா உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூரில், 1910, மார்ச், 23 ல் மார்வாரிக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஹீராலால் காங்கிரஸ் தலைவர். தாய்சாந்தா ஓர் ஆசிரியர். சிறுவயதிலேயே தாயை இழந்த ராம், தந்தையால் வளர்க்கப்பட்டார். தந்தையின் தேசியப் பணிகளை இளம் வயது முதலே கண்ணுற்ற ராம், இயல்பாகவே தேசியவாதியாக வளர்ந்தார். மகாத்மா காந்தியின் தீவிர விசுவாசியாக இருந்த ஹீராலால், அவரை அடிக்கடி சந்திக்கச் சென்ற போதெல்லாம், தனது மகன் ராமுடன் செல்வார். அப்போதே காந்தியடிகள் மீது ராமுக்கு பிடிப்பு ஏற்பட்டது. காந்தியின் சுய கட்டுப்பாடு, ஆன்மிக வலிமை, தேசிய சிந்தனை ஆகியவை ராமுக்கு வழிகாட்டின. தனது பத்தாவது வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் ராம்மனோகர் லோகியா.

இவருக்கு 10 வயதாய் இருந்த போது 1920-ல் பால கங்காதர திலகர் மறைவை அடுத்து சிறு கடையடைப்பு நடத்தினார். இதுவே ராமின் முதல் விடுதலைப் போராட்டம் ஆகும். காந்தியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்த ராம், 1921 ல் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்தார். அவரது முற்போக்கு சிந்தனைகள் ராமை வசீகரித்தாலும், சில கருத்துகளில் முரண்பட்டார். நேருவுடனான கொள்கை மாறுபாடுகளை வாழ்வின் இறுதிவரை ராம் மனோகர் லோஹியா வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் இருவரும் ஒத்த சிந்தனைகளுடன் இயங்கினர்.

இந்தியாவுக்கு 'டொமினியன் அந்தஸ்து வழங்க அதாவது இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு சுயாட்சியுடன் பிரித்தானியாவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த 1928 ல் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது அதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மாணவராக இருந்த ராம், 'சைமனே திரும்பிப் போ' போராட்டத்தைத் தனது பகுதியில் நடத்தினார்.

1929-ல் காசி இந்து பல்கலைக்கழகத்தில் இடைநிலைப் படிப்பை முடித்த ராம், தனது பி.ஏ. (ஹானர்ஸ்) படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் (வித்யாசாகர் கல்லூரி) முடித்தார். பிறகு, ஜெர்மனியில் உள்ள பெர்லின் பலகலைக்கழகத்தில் படிக்க விரும்பி, ஜெர்மன் மொழியைக் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கியதால், தனது மேற்படிப்புக்காகக் கல்வி உதவித்தொகையும் பெற்றார். 'உப்புச் சத்யாகிரகம்' என்ற தலைப்பில் காந்தியின் சமூக- பொருளாதாரக் கோட்பாடுகளை ஆய்வு செய்தார். அதற்காக முனைவர் பட்டம் பெற்றார். 1932-ல் இந்தியா திரும்பினார் ராம்.

Remove ads

விடுதலைப்போரில் பங்கேற்பு

1933-இல் நாடு திரும்பிய ராம், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஆயினும், காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைளில் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. பெரும்பாலும் நில உடைமையாளர்களும் பெரும் செல்வந்தர்களுமே காங்கிரஸ் தலைவர்களாக இருந்த நிலையில், நாட்டின் ஏழை மக்கள்குறித்து சிந்தித்தார். வெளிநாட்டுக் கல்வியால் பொதுவுடைமை குறித்த கனவுகளுடன் நாடு திரும்பிய ராம் தனது கொள்கைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், 1934- ல் காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே, 'காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி' என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் வெளியீடான 'காங்கிரஸ் சோஷலிஸ்ட்' இதழில் தொடர்ந்து பல அரசியல் கட்டுரைகளை எழுதினார்.

1936 ல் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம், கட்சிக்குள் வெளிவிவகாரத் துறையை உருவாக்கினார். ஜவஹர்லால் நேரு, வெளிவிவகாரத் துறையின் முதல் தலைவராக ராம் மனோகர் லோகியாவை நியமித்தார். பதவி வகித்த அந்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருதுகோள்களை வரைந்தார்.

1939-ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியபோது இந்தியா பிரித்தானியாவுக்கு ஆதரவு அளிப்பதில் இருவேறு காங்கிரசில் மாறுபாடுகள் எழுந்தன. அதில், ஆதரவு அளிக்கக்கூடாது என்ற அணியில் ராம் இருந்தார். போரைப் பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள பிரித்தானியரின் நிர்வாகத்திற்குச் சிக்கல் ஏற்படுத்தி அவர்களை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது ராமின் கருத்தாக இருந்தது. அரசு நிறுவனங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்த காரணத்தால் 1939 -ல் கைது செய்யப்பட ராம், மாணவர்களின் எதிர்ப்பால் மறுநாளே விடுவிக்கப்பட்டார்.

Remove ads

சிறை வாசம்

விடுதலையடைந்த ராம் மனோகர் லோகியா, காந்தியின் 'ஹரிஜன்' இதழில் 01.06.1940-ல் 'இன்றைய சத்யாகிரகம்' என்ற கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையில் அரசுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்த ஆங்கில அரசு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ராம் மனோகர் லோகியாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மகாத்மா காந்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய காந்தி, டாக்டர் ராம் மனோகர் லோகியா சிறைக்குள் இருக்கும்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. அவரைப் போன்ற துணிவும் எளிமையும் கொண்ட மனிதர் வேறு யாரையும் நான் கண்டதில்லை.அவர் வன்முறையைப் பிரசாரம் செய்யவில்லை. அவர் என்ன செய்தாரோ, அது அவரது மேன்மைக்கு மேலும் மெருகூட்டுவதாகவே அமைந்திருந்தது என்றார்.

சிறையில் ஆங்கில அதிகாரிகளால் மனரீதியான கொடும் சித்ரவதைக்கு ராம் ஆளானார். இந்நிலையில் 1941-ல் உலகப்போரில் காங்கிரசின் ஆதரவைப் பெற போராட்ட வீரர்கள் பலரும் ஆங்கிலேய அரசால் விடுவிக்கப்பட்டனர். அப்போது ராம் மனோகர் லோகியாவும் விடுதலை ஆனார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1941-ல் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நாடு முழுவதும் துவங்கியது. காந்தி, நேரு, படேல், ஆசாத் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் தள்ளப்பட்டனர். ராம் மனோகர் லோகியா கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றார். வெளிப்படையாக இயங்க முடியாத நிலையில் தலைமறைவுப் போராட்டத்தில் ராம் ஈடுபட்டார். ரகசிய இடங்களிலிருந்து பிரசாரத் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகித்த குழுவில் ராமும் இருந்தார். உஷா மேத்தாவுடன் இணைந்து மும்பையில் ராம் நடத்திய ரகசிய வானொலியான 'காங்கிரஸ் ரேடியோ' மூன்று மாதங்கள் வெற்றிகரமாக இயங்கியது. சுதந்திரப் போரில் ரகசிய வானொலி பயன்படுத்திய நிகழ்வு ஆங்கிலேய அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முன்னணித் தலைவர்கள் இல்லாதபோதும் காங்கிரசின் மாதாந்திரப் பத்திரிகையான 'இன்குலாப்' இதழை அருணா ஆசப் அலியுடன் இணைந்து தயாரித்து வெளியிட்டார்.

Remove ads

நேபாள வாழ்வு

அரசு ராமின் நடவடிக்கைகளை அறிந்தது. போலீசார் சுற்றி வளைத்த நிலையில், கொல்கத்தாவுக்கு தப்பிய ராம், அங்கு வெவ்வேறு பெயரில் மாறுவேடத்தில் வாழ்ந்தார். அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பினார். நேபாள புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அங்கு கொய்ராலா சகோதரர்களுடன் ராமுக்கு ஏற்பட்ட நட்பு, அவரது வாழ்வின் இறுதிவரை நீடித்தது.

அங்கிருந்து நாடு திரும்பி மீண்டும் தலைமறைவு இயக்கத்தில் ஈடுபட்ட போது 1944-ல் மும்பையில் கைதானார். லாகூர் சிறைக்கு அனுப்பப்பட ராம், அங்கு கடுமையான சித்ரவதைக்கு ஆளானார். அதனால் ராமின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. காந்தியின் தலையீட்டால் ராம் மனோகர் லோகியாவும் அவரது சீடர் ஜெயபிரகாஷ் நாராயணனும் விடுதலை ஆயினர்.

Remove ads

கோவாவில் போராட்டம்

விடுதலைக்குப் பின், ஓய்வுக்காகத் தனது பொதுவுடைமை நண்பரான ஜூலியா மெனசெஸ் (Juliao Menezes) என்பவரின் அழைப்பின் பேரில் கோவா சென்றார்.[2][3] அங்கு கோவாவை ஆண்ட போர்ச்சுக்கீசிய அரசு மக்கள் மீது கொடும் அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்ததைக் கண்டித்துப் போராடினார்.[4] அதன் விளைவாகக் கைது செய்யப்பட்டார். ஆயினும், மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை கோவா அரசு நீக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.[5]

Remove ads

மத ஒற்றுமைப் போராட்டம்

அந்தக் காலகட்டத்தில் நாட்டில் கிளர்ந்த இந்து- முஸ்லிம் வேற்றுமை ராமுக்கு வேதனையை ஏற்படுத்தியது. நாட்டை மதரீதியில் பிளவுபடுத்துவதற்கு ராம் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார். மதரீதியில் பிளவுபட்ட பகுதிகளில் வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் அகிம்சை நெறியை முன்னெடுத்து, மக்களை ஒன்றுபடுத்த முயன்றார்.

1947-ல் நாடு விடுதலை பெற்று, மக்கள் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்த வேலையில், மகாத்மாவின் அடியொற்றி, மதக்கலவரங்களில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மயான பூமிகளில் அமைதி திரும்பப் பாடுபட்டுக் கொண்டிருந்தார் ராம் மனோகர் லோகியா.

Remove ads

விடுதலை பெற்ற இந்தியாவில் ஆற்றிய தொண்டுகள்

  • நாடு விடுதலை பெற்ற பிறகு, உள்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய தேவையை உணர்ந்தார் ராம் மனோகர் லோகியா. நாட்டின் முன்னேற்றத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்று பிரசாரம் செய்தார். தானே அதற்கு முன்மாதிரியாக விளங்கினார்.
  • மக்களே கால்வாய்களையும் சாலைகளையும் அமைக்க வேண்டும் என்று கூறிய ராம், 'பணியாரி' நதியின் குறுக்கே, மக்களை ஒருங்கிணைத்து அணைக்கட்டு ஒன்றைக் கட்டினார். அது இன்றும் 'லோகியா சாகர் அணை' என்ற பெயருடன் உள்ளது.
  • ஆக்கப்பூர்வமான கட்டமைப்புப் பணிகள் அல்லாது செய்யப்படும் சத்யாகிரகம் என்பது வினைச்சொல் இல்லாத வாக்கியம் போன்றது என்பது ராம் மனோகர் லோகியாவின் புகழ்பெற்ற பொன்மொழி.
  • பொதுப்பணிகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதிபட நம்பினார். சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை ராம் வலியுறுத்தினார்
  • குடியரசு நாட்டில் மக்களின் குறைகளை மக்கள் பிரதிநிதிகள் அறிய வேண்டி 'ஜனவாணி தினம்' என்ற ஒருநாளை அறிமுகப்படுத்தினார். அந்நாளில் மக்கள் தங்கள் குறைகளைப் பிரதிநிதிகளிடம் முறையிட வாய்ப்பளித்தார். அம்முறை இன்றும் நாடாளுமன்றத்தில் நடைமுறையிலுள்ளது.
Remove ads

ஆங்கில மொழி எதிர்ப்பு

நாட்டின் பொதுமொழியாக ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி இருக்க வேண்டும் என்று ராம் விரும்பினார். நம்மிடையே உள்ள ஆங்கிலப் பயன்பாடு நமது அசலான சிந்தனைகளை மழுங்கச் செய்கிறது; நம்மிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது; தவிர, படித்தவர்களுக்கும் பிறருக்கும் இடையே பெருத்த இடைவெளியை உருவாக்குகிறது. எனவே இந்தி மொழியை அதன் புராதனப் பெருமையுடன் புதுப்பிக்க வேண்டும் என்பது லோகியாவின் கருத்தாகும்.

திட்டக்குழு மாயை

சுதந்திர இந்தியாவில் 1963 வரை மூன்று பொது தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான ஒருகட்சி ஆட்சியே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதனை ராம் எதிர்த்தார். பிரதமர் நேருவுக்கு ஒருநாள் செலவிடப்படும் தொகை ரூ. 25 ஆயிரம்; அதே சமயம் நாட்டின் ஏழைக் குடிமகனுக்கு 3 அணா வருமானத்திற்கும் கூட வழியில்லை என்ற ராம், அரசின் திட்டமிடலைக் கடுமையாக விமர்சித்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் நேரு, ஏழ்மையை ஒழிக்க திட்டக் குழு செயல்படுகிறது. அதன் புள்ளிவிபரப்படி, நாட்டின் சாமானியக் குடிமகனின் சராசரி நாள் வருமானம் 15 அணா ஆகும் என்றார் (அந்நாளில் இதன் மதிப்பு ஒரு உரூபாயை (16 அணா) விடச் சற்றே குறைவு).

இந்தப் புள்ளிவிபரத்தைச் சாடிய லோகியா, சிறப்பு விவாதம் நடத்த அழைப்பு விடுத்தார். விவாதத்தில் பேசிய லோகியா, தனது புகழ்பெற்ற நாடாளுமன்றப் பேச்சான 'தீன் (3) அணா - பந்த்ரா (15) அணா' என்ற விவாதத்தில் நாட்டின் திட்டக்குழு நடத்தும் நாடகங்களை விலாவாரியாக விளக்கி அதன் முகத்திரையைக் கிழித்தார். அதன்மூலமாக, திட்டக் குழு முன்வைக்கும் புள்ளிவிபரங்கள் மாயையானவை என்று நிரூபித்தார். இறுதியில் ராம் மனோகர் லோகியா கூறுவதே உண்மை என்பதை நாடு உணர்ந்தது. இந்த விவாதம் திட்டக்குழுவின் பணிகளைச் செம்மைப்படுத்த உதவியது.

Remove ads

சமூக நீதிக் கருத்து

சாதிகளுக்கு இடையிலான வேற்றுமையே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக ராம் கூறினார். சாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், திறமையைக் குறுக்குகின்றன; குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளைக் குறுக்குகிறது; சாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும் என்றார் ராம் மனோகர் லோகியா. மேல்தட்டில் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தட்டில் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்த முயன்றால் இந்தப் பிரச்னை தீரும் என்று கருதினார். உணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு (ரொட்டி அவுர் பேட்டி) இருப்பதே சாதியை ஒழிக்கும் என்றும் ராம் அறிவுறுத்தினார்.

Remove ads

பொதுவுடைமைச் சிந்தனைகள்

பொதுவுடைமையாளரான லோகியா கம்யூனிசத்தை ஏற்கவில்லை. பாட்டாளிகளின் சர்வாதிகாரமும் முதலாளிகளின் ஏகாதிபத்தியமும் உலகின் பிரச்னைகளைத் தீர்க்காது என்று அவர் தீர்க்கமாக உரைத்தார். இரண்டுமே இயந்திரமயமானவை என்ற அவர், பெரும் தொழிற்சாலைகளை அமைப்பது மூன்றாம் உலகத்தை அமைக்க உதவாது என்று எச்சரித்தார். 'மார்க்சிசம், ஐரோப்பாவின் ஆசியா மீதான கடைசி ஆயுதம்' என்றே லோகியா வர்ணித்தார். மூன்றாம் உலக நாடுகளுக்கு முதலாளித்துவமும் கம்யூனிசமும் அல்லாத மாற்று அரசியல் தத்துவங்கள் தேவை என்று கருதினார்.

1962-ல் சீனா, இந்தியா மீது போர் தொடுத்தபோது, இந்தியா, பிற நாடுகளின் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டுமானால், தோல்வியைத் தவிர்க்க வேண்டுமானால், அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்று கூறி நாட்டில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கினார்.

அரசின் அதிகாரங்களைக் குறைத்து மக்களிடம் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்ற ராம், 'ஹிந்த் கிசான் பஞ்சாயத்' அமைப்பை நிறுவி, விவசாயிகளின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள உதவினார். உலக அளவில் உள்ள அனைத்து பொதுவுடைமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, ஓர் அமைப்பாக்க வேண்டும் என்று லோகியா கருதினார். 'பிரஜா சோஷலிஸ்ட்' கட்சியின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய லோகியா, உலக அரசுகுறித்த சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வந்தார்.

கட்சியிலிருந்து விலகுதல்

1954ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் மொழிவாரியாக மாநிலம் அமைக்கக்கோரி நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். அன்று பட்டம் தாணுப்பிள்ளையின் தலைமையிலான பிரஜா சோசலிச கட்சியின் அரசு ஆட்சியில் இருந்தது. லோகியா அப்பொழுது அலகாபாத் சிறையில் இருந்தார். செய்தியைக் கேட்டவுடனேயே, இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பட்டம் தாணுப்பிள்ளையின் அரசு கலைக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி தேர்தலில் வெற்று பெற்று ஆட்சியில் அமர்வது அதுவே முதன்முறை. இப்போது நாம் பதவி விலகவில்லை என்றால் அரசின் வன்முறைக்கு எதிராகப் பேசும் தார்மீக உரிமையை நாம் இழந்துவிடுவோமென, பதவி விலக வேண்டும் என்பதற்கு லோகியா காரணம் கூறினார். பதவி விலகக்கூடாது என்று கட்சித்தலைமை முடிவெடுத்தபோது, லோகியா பிரஜா சொஷலிஸ்ட் கட்சியிலிருந்து விலகினார்.[6]

இறுதிக்காலம்

தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் எனப் புதிய இளம் தலைமுறையுடன் விவாதித்து காலம் கழித்தார். ஒரு உண்மையான பொதுவுடைமையாளராக வாழ்ந்த ராம் மனோகர் லோகியா, புதுதில்லியில் 1967, அக்டோபர் 12-ல் மறைந்தார். அப்போது அவருக்கென்று சொந்தமான வங்கிக் கணக்கோ, சொத்தோ ஏதும் இருக்கவில்லை.

லோகியாவின் படைப்புகள்

  • சாதீய முறைகள் (The Caste System)
ஐதராபாத், நவகிந்த் [1964] 147 p.
  • வெளியுறவுக் கொள்கை (Foreign Policy)
அலிகார், பி. சி. துவாஷ் ஷ்ரெனி, [1963?] 381 p.
  • உலகச் சிந்தனைத் துகள்கள்(Fragments of a World Mind)
மைத்ரவானி பப்ளிஷர்ஸ் & புத்தக விற்பனையாளர்; அலகாபாத் [1949] 262p.
  • உலகளாவிய எண்ணங்களின் அடிப்படைகள் (Fundamentals of a World Mind)
தொகுப்பு: கே. எஸ். கரந்த். மும்பை, சிந்து பப்ளிகேஷன்ஸ், [1987] 130 p.
  • இந்தியப் பிரிவினைக் குற்றவாளிகள் (Guilty Men of India’s Partition)
லோகியா சமத வித்யாலயா நியாஸ், பதிப்பீட்டுத் துறை [1970] 103 p.
  • இந்தியா, சீனா மற்றும் வட எல்லைகள் (India, China, and Northern Frontiers)
ஹைதராபாத், நவகிந்த் [1963] 272 p.
  • அரசியல் இடைவேளை (Interval During Politics)
ஹைதராபாத், நவகிந்த் [1965] 197 p.
  • மார்க்ஸ், காந்தி மற்றும் சோசியலிசம் (Marx, Gandhi and Socialism)
ஐதராபாத், நவகிந்த் [1963] 550 p.
  • லோகியாவின் சிறந்த படைப்புகள்-தொகுப்பு (Collected Works of Dr Lohia)
ஒன்பது பாகங்கள் கொண்ட தொகுதி.
ஆங்கிலத்தில் தொகுப்பு -டாக்டர். மாஸ்ட்ரம் கபூர் (அனுபவம் வாய்ந்த சோசியலிச எழுத்தாளர்),
வெளியீடு- அனாமிகா பப்ளிகேஷன்ஸ், புதுதில்லி.

லோகியாவைப் பற்றிய சில நூல்கள்

  • இந்தியாவில் பொதுவுடைமைச் சிந்தனைகள்- ராம் மனோகர் லோகியாவின் பங்களிப்பு (Socialist Thought in India: The Contribution of Rammanohar Lohia),
எம். ஆறுமுகம், புதுதில்லி, ஸ்டெர்லிங் (1978)
  • டாக்டர். ராம் மனோகர் லோகியா, வாழ்வும் தத்துவமும் (Dr. Rammanohar Lohia, his Life and Philosophy),
இந்துமதி கெல்கார், வெளியீடு: சமாஜ்வாதி சாகித்திய சன்ஸ்த்தான், தில்லி -அனாமிகா பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் (2009) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7975-286-9
  • லோகியா ஓர் ஆய்வு (Lohia, A Study)
என். சி. மெக்ரோத்ரா, ஆத்ம ராம் (1978)
  • லோகியாவும் பாராளுமன்றமும் (Lohia and Parliament),
லோக்சபா செயலகத்தால் வெளியிடப்பட்டது (1991)
  • கடிதங்களின் வழி லோகியா (Lohia thru Letters),
வெளியீடு - ரோம மித்ரா (1983)
  • லோகியா (Lohia),
ஆன்கார் ஷரத், லக்னவ், பிரகாஷன் கேந்திரா (1972)
  • லோகியாவும் அமெரிக்கச் சந்திப்பும்(Lohia and America Meet), :ஹாரிஸ் வூஃபோர்டு, சிந்து (1987)
  • இந்தியாவில் இடதுசாரிக் கொள்கை: 1917-1947 (Leftism in India: 1917-1947),
சத்தியபிரத ராய் சௌத்ரி, இலண்டன் மற்றும் புதுதில்லி, பால்கிரேவ் மேக்மில்லன் (2008)

சிறப்பு

  • உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்ட டாக்டர் ராம் மனோகர் லோகியா சட்டக்கல்லூரி இந்தியாவின் முன்னணி சட்டக் கல்லூரிகளில் ஒன்றாகும்.
  • புது தில்லியில் அமைக்கப்பட்ட வில்லிங்டன் மருத்துவமனை இந்தியா சுதந்திரம் பெற்றபின் இவரது நினைவாக டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருந்தியல் நிறுவனம் மருத்துவ முதுகலைப் படிப்பிற்காகத் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • டாக்டர் ராம் மனோகர் லோகியா சட்டக் கல்லூரி, பெங்களூரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.
  • 1946-ல் போர்த்துகீசிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராகக் கோவாவில் ராம் மனோகர் லோகியா போராட்டம் தொடங்கிய இடமான பாஞ்சிம் எனுமிடத்தில் உள்ள 18 ஜூன் சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads