பொதுவுடைமை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரசறிவியல் மற்றும் சமூக அறிவியல் ரீதியில், பொதுவுடைமை (இலத்தீன் மொழியில் communis, "பொது, உலகளாவிய")[1][2] ஒரு உளவியல் - சமூகவியல் - அரசியல் - பொருளாதாரக் கருத்தியல் ஆகும். இவ்வியக்கம், சமூகபொருளாதார ரீதியில் அனைவருக்கும் பொதுவாக உற்பத்திப்பொருளைப் பகிர்தலையும், அரசு,[3][4] பணம் மற்றும் வகுப்புவாதத்தை[5][6] இல்லாதொழித்தலையும் முக்கிய கோட்பாடுகளாகக் கொண்டது.
பொதுக் கொள்கைகள்
தத்துவங்கள்
பொதுவுடமைவாதிகள்
|

பொதுவுடைமையானது, மார்க்சியம், அரசிலாவாதம் முதலான பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கியது. இவ்வெல்லாச் சிந்தனைகளும், சமகாலச் சமூகத்தின் பொருளாதார மையமானது, முதலாளித்துவத்தை மையமாகக் கொண்டிருப்பதை ஆராய்கின்றன. முதலாளித்துவத்தில் இரு சமூகவகுப்புகள் உள்ளன. ஒன்று, பாட்டாளி வர்க்கம் - வாழ்வதற்காக உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்திலுள்ளவர்களும் சமூகமொன்றில் பெரும்பாலான எண்ணிக்கையைக் கொண்டிருப்பவர்களும். அடுத்தது, முதலாளி வர்க்கம் - பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை - உற்பத்தியை தனிப்பட்ட ரீதியில் உரிமைகோரி, அதன்மூலம் இலாபமீட்டும் சமூகத்தின் சிறுபான்மையினர். இவ்விரு தரப்பினருக்கும் இடையிலான முரண், புரட்சியைத் தோற்றுவிக்கலாம். கிடைக்கின்ற உற்பத்தியை சமூகத்தின் பொதுவுடைமை ஆக்குவதை, இம்முரணுக்கான தீர்வாக, இச்சித்தாந்தம் முன்வைக்கின்றது.
Remove ads
வரலாறு
ஆரம்பகால பொதுவுடைமை

பொதுவுடைமை எனும் சொல்லாடலானது, பிரெஞ்சு அறிஞரும் எழுத்தாளருமான விக்டர் டி ஹுபேயால் (Victor d'Hupay) 1777ஆமாண்டு எழுதப்பட்ட நூலொன்றில் முன்மொழியப்பட்டது. இந்நூலில் தான் விரும்புகின்ற வாழ்க்கைமுறையைப் பொதுமை (Communal) என்று முன்மொழிகின்ற விக்டர், பொருளாதார மற்றும் பௌதிக உற்பத்திகளைப் பொதுமைச் சமூகத்தின் சகல அங்கத்தவர்களிடையும் பகிரவேண்டும் என்றும் இதனால், ஒவ்வொருவரின் உழைப்பின் மூலமும் கிடைக்கும் பலனைச் சமமாகப் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறுகின்றார்.[7]
வகுப்புவாதங்களில்லாத சமத்துவமான சமூகம் பற்றிய சிந்தனை பழங்கிரேக்கத்திலேயே உதித்ததாக நம்பப்படுகின்றது.[8] பொ.பி 5ஆம் நூற்றாண்டில், பிரபு குலங்களும் மதகுருக்களும் தமக்கென்று கையகப்படுத்தி வைத்திருந்த சலுகைகளுக்கு எதிராக பாரசீகத்தில் (ஈரான்) முன்னெடுக்கப்பட்ட மஸ்தாக்கு இயக்கமும் பொதுவுடைமை சார்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.[9][10] சமய புனித நூல்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட சிறிய பொதுவுடைமைச் சமூகங்கள் வரலாறெங்கணும் அவதானிக்கப்பட்டுள்ளன.[11] உதாரணமாக, சில நடுக்கால கிறித்துவ திருச்சபைகளில் அவற்றின் நிலமும், சொத்துக்களும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டதைச் சொல்லலாம்.
ஆங்கில எழுத்தாளர் தாமஸ் மோர், 1516இல் எழுதிய உதோப்பியா எனும் நூலில், ஆட்சியாளர்களின் சொத்துக்கள் பொதுவுடைமையாக இருக்கவேண்டும் என்ற பொதுவுடைமைக் கருத்து காணப்படுகின்றது. பொ.பி 17ஆம் நூற்றாண்டில் "தோண்டுநர்" (Diggers) எனப்பட்ட ஒரு தூய்மைவாத புரட்டஸ்தாந்து குழுவினர் நிலங்களைத் தனியார் உரித்துடன் வைத்திருப்பதை எதிர்த்து வாதாடினர்.[12] பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவொளிக்காலத்திலும் பிரெஞ்சின் இழான் இழாக்கு உரூசோ முதலான அறிஞர்கள், சொத்துக்களை தனியார் வைத்திருத்தல் முதலான சிந்தனைகள் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்தனர். அதே நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சி உச்சம் கண்டதை அடுத்து, பொதுவுடைமை ஒரு அரசியல் கோட்பாடாக எழுச்சி பெறலாயிற்று.[13]
பத்தொன்பதாம் நூற்றாண்டில், பல்வேறு சமூக மறுமலர்ச்சியாளர்கள், பொது உரிமைகோரலை அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்களை நிறுவினர். எனினும் அது முந்தைய பொதுவுடைமை சமூகங்கள் போலன்றி, பகுத்தறிவு மற்றும் பன்முகத்தன்மையுடனான பார்வையில் சமயத்தின் முக்கியத்துவத்தை மாற்றீடு செய்தனர்.[14] அவர்களில், இந்தியானாவில் 1825இல் நியூ ஹார்மனி அமைப்பை உருவாக்கிய இராபர்ட்டு ஓவன் மற்றும் அமெரிக்காவில் சில குறிப்பிடத்தக்க பொதுமை குடியிருப்புகள் உருவாகக் காரணமான சார்லஸ் பௌரியர் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.[14] ஐரோப்பாவில், தன் நவீன வடிவில், பொதுவுடைமையானது சமூகவுடைமை இயக்கங்களுக்கு வெளியேயும் வளர்ந்தது. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, மார்க்ஸ் மற்றும் எங்கல்சு முதலான சமூகவுடைமை விமர்சகர்கள், தொழிற்சாலை ஆலைகளில், ஆபத்தான பொருட்களுடன் தொழில்புரியவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவம் கொடுமையிழைப்பதாக குற்றம் சாட்டினர். அவர்களால் 1848இல் வெளியிடப்பட்ட பொதுவுடைமை அறிக்கையில் பொதுவுடைமைக்கு ஒரு புதிய வரைவிலக்கணம் வழங்கப்பட்டது.[14]
நவீனப் பொதுவுடைமை

1917இல் இரசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சி, விளாதிமிர் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சி, எழுச்சியடையும் வாய்ப்பை உருவாக்கியது. இதுவே பகிரங்கமாக பொதுவுடைமைக் கட்சியொன்று, பெரும் அரசியல் இடத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது சம்பவமாகக் கருதப்படுகின்றது. இச்சம்பவம், மார்க்கசிய இயக்கம் மீது, நடைமுறை சார்ந்த மற்றும் கருத்துச் சார்ந்த உரையாடல்கள் நிகழக் காரணமானது. முன்னேறிய முதலாளித்துவ அபிவிருத்திகளின் அடிப்படையில் சமூகவுடைமையும் பொதுவுடைமையும் கட்டியெழுப்பப்படலாம் என்பதை மார்க்ஸ் முன்மொழிந்தார். எவ்வாறெனினும் உருசியாவானது, பெரும் எண்ணிக்கையிலான படிப்பறிவற்றவர்களையும் சிறுபான்மை தொழில்துறைப் பணியாளர்களையும் கொண்ட வறியநாடாக அப்போது விளங்கியது. உருசியாவால் முதலாளித்துவ ஆட்சியை இலகுவாகக் கவிழ்க்கமுடியும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார்.[15]
லெனினின் போல்செவிக் கட்சியின் பொதுவுடைமைப் புரட்சிக்கான திட்டத்தை, மிதவாதப் போக்குடைய சிறுபான்மை மென்செவிக் கட்சி எதிர்த்தது. "நிம்மதி, உணவு, நிலம்" என்ற கோஷங்களுடன் ஆதிக்கசக்தியாக வளர்ந்த போல்செவிக், முதலாம் உலகப்போரில் இருசியாவின் பங்களிப்பை நிறுத்துவதற்கான பொதுமக்களின் பெருவிருப்பை தடைபோட்டதுடன், குடிமக்களின் நிலச்சீர்திருத்தம் மற்றும் சோவியத் சபைகளுக்கான ஆதரவைப் பெற்றுக்கொண்டது.[16]
லெனினின் சனநாயக மையவாதத்துக்கமைய, லெனினியக் கட்சிகள், ஒரு படிநிலை அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. பொதுவுடைமைக் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகள், 1937 முதல் 1938 வரை இசுடாலினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் துப்புரவாக்கம் மூலம் முடிவுக்குக் கொணரப்பட்டன. இருசியப் புரட்சியில் பெரும்பங்காற்றிய முக்கிய புள்ளிகள் உட்பட்ட பலர், அச்செயற்பாட்டின் போது, குற்றம் சுமத்தப்படு மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.[17]
பனிப்போர்

இரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பாகங்கள் மீது செலுத்திய ஆதிக்கம், அதை வல்லரசாக உயர்த்தியது. ஐரோப்பாவும் சப்பானியப் பேரரசும் சிதைந்துபோனதுடன், பொதுவுடைமைக் கட்சிகள் விடுதலை இயக்கங்களை முன்னின்று நடத்தலாயினர். சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, மார்க்கசிய, லெனினிய அரசாங்கங்கள், பல்காரியா, செக்கோசிலோவாக்கியா, இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு, போலந்து, அங்கேரி, உருமேனியா, அல்பேனியா[18] முதலான நாடுகளில் ஆட்சிக்கு வந்தன. யுகோசுலாவியாவிலும் யோசேப்பு தித்தோ தலைமையில் ஒரு மார்க்கசிய - லெனினிய அரசு உருவானது. எனினும், தித்தோவின் விடுதலைக் கொள்கைகள், யொகோசுலாவியாவை பொதுவுடைமை நாடுகளின் ஒன்றிணைப்பிலிருந்து அந்நாட்டை விலகச்செய்ததுடன், தித்தோவின் கொள்கைகள், பொதுவுடைமையாளர்களால், வழுவுடையவை என்று வர்ணிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு போட்டியாகவும் எதிர்த்தரப்பாகவும் பொதுவுடைமை, அறிஞர்களால் நோக்கப்படலாயிற்று.[19]

> 5,000 DM
2,500 – 5,000 DM
1,000 – 2,500 DM |
500 – 1,000 DM
250 – 500 DM
< 250 DM |
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு
சோவியத் ஒன்றியத்தின் அதியுயர் சட்டமன்றத்தின் பிரகடனத்தின் கீழ், சோவியத் ஒன்றியம் 1991 டிசம்பர் 26இல் கலைக்கப்பட்டது. இப்பிரகடனமானது, முந்தைய சோவியத் குடியரசுகளின் விடுதலையை உறுதிசெய்ததுடன், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் (CIS) உருவாகவும் காரணமானது. , எட்டாவது மற்றும் இறுதியான சோவியத் ஒன்றியத் தலைவராக விளங்கிய மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியம் கலைவதற்கு முந்திய நாள் பதவிவிலகியதுடன், சோவியத்தின் அணுசக்தி ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சினிடம் ஒப்படைத்தார். அன்று மாலை, கிரெம்லின் மாளிகையில் ஏற்றப்பட்டிருந்த சோவியத் கொடி இறக்கப்பட்டதுடன், புரட்சிக்கு முந்தைய உருசியக் கொடி ஏற்றப்பட்டது.[20] ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே, சோவியத்தில் இருந்த உருசியா உள்ளிட்ட எல்லாக் குடியரசுகளும் தனித்தனியே பிரிந்துவிட்டிருந்தன. ஒன்றியத்தின் உத்தியோகபூர்வமான கலைப்புக்கு ஒரு வாரம் முன்பு, விடுதலை பெற்ற நாடுகளின் சமவாயத்துக்காக, பதினொரு குடியரசுகள் ஒப்பமிட்டு, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது என்பதை மறைமுகமாக அறிவித்தன.[21][22]
சமகால நிலை
சமகாலத்தில், சீனா, கியூபா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பொதுவுடைமை நாடுகளாக விளங்குகின்றன. வடகொரியா தன்னை, மார்க்கசிய - லெனினியத்தின் அடுத்தபடி என்று சொல்லிக்கொள்கின்ற யுச்சேயை தனது அரசியல் கோட்பாடாக முன்வைக்கின்றது. பொதுவுடைமைக் கட்சிகள், இன்றும் பெரும்பாலான நாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தோடு உள்ளனர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசின் பங்காளியாக விளங்கும் பொதுவுடைமைக் கட்சி, தென்னாபிரிக்காவில் ஆட்சியில் பங்குவகிக்கின்றது.இந்தியாவில், அதன் மூன்று ஆட்சிப்பகுதிகளில், பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சிசெலுத்துகின்றன. நேபாளம், பொதுவுடைமைவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தைக் கொண்டது.[23] பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, அந்நாட்டின் சனநாயக சமூகவுடைமைத் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியில் பங்கேற்கிறது.
சீன மக்கள் குடியரசானது, மாவோயியக் கொள்கைகளின் பல அம்சங்களை மறுபரிசீலனைக்குட்படுத்தி இருக்கின்றது. லாவோஸ்,வியட்நாம் முதலான நாடுகளைப் போலவே, மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பரவலாக்கி, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்துவதில் முயன்றுவருகிறது. டங் சியாவுபிங்கின் ஆட்சியில் 1978இல் ஆரம்பமான சீன பொருளாதார சீராக்கங்கள், மாவோ காலத்தில் 53% ஆக இருந்த வறுமையை, 2001இல் வெறும் 6% ஆகக் குறைப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன.[24]
Remove ads
பொதுவுடைமைக் கோட்பாடுகள்
மார்க்கசியம்

காரல் மார்க்சு மற்றும் பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோரால் முன்மொழியப்பட்ட மார்க்சியம், பொதுவுடைமைக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். மார்க்கசியம் தன்னை, அறிவியல்பூர்வமான சமூகவுடைமையாக இனங்காண்கின்றது. அறிவுய்திகள் முன்வைக்கும் இலட்சியவாத சமூகம் ஒன்றைக் கருத்திற்கொள்ளாமல், சமூக வரலாற்றுக் காரணிகளைப் புரிந்துகொண்ட எதார்த்தபூர்வமான கோட்பாடாக மார்க்கசியம் விளங்குகின்றது. மார்க்சியம் பொதுவுடைமையை, நிறுவப்படவேண்டிய அரசியல் விவகாரங்கள் என்ற கண்ணோட்டத்தில் காணாமல், வெற்று அறிவுபூர்வம் சாராத நடைமுறைச்சாத்தியமான சமூகம் சார்ந்த வெளிப்பாடாகவே கருதுகின்றது.[25] எனவே மார்க்சியம், பொதுவுடைமைச் சமூகத்தின் எதிர்காலத் திட்டமிடல் கோட்பாடாக அமையாமல், அக்கோட்பாட்டை செயலாக்கும் மற்றும் அடிப்படை இயல்புகளை நடைமுறை வாழ்க்கையைக் கொண்டு கண்டறிய உதவும் அரசியல் சித்தாந்தமாகவே விளங்குகின்றது.
வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்று முன்பு அறியப்பட்ட மார்க்சியப் பொருள்முதல் வாதம், மார்க்சியத்தின் வேராகத் திகழ்கின்றது. பொருளாதாரத் தொகுதிகளின் அடிப்படை இயல்புகளை, உற்பத்திமுறை, வகுப்புவாதச் சிக்கல்கள் என்பவற்றின் வழியே வரலாற்றினூடாக அது புரிந்துகொள்ள முயல்கின்றது. இப்பகுப்பாய்வு மூலம் தொழிற்புரட்சி உலகுக்கு புதிய உற்பத்திமுறையொன்றை அறிமுகம் செய்தது. அதுவே முதலாளித்துவம். முதலாளித்துவத்துக்கு முன்பு, தொழில்சார்ந்த வகுப்புகள், உற்பத்தியில் பயன்பட்ட உபகரணங்களுக்கு உரித்தானவர்கலாக இருந்தனர். ஆனால் இயந்திரங்கள் அவ்வுபகரணங்களின் இடத்தைப் பெற்றுக்கொண்ட சமகாலத்தில், அவை பயனற்றுப்போயின. தொழிலாளர் படையானது, அதன் பின்னர் தன் உழைப்பை விற்பதன் மூலம், அல்லது வேறொருவரின் இயந்திரத்தில் தங்கியிருப்பதன் மூலம் மட்டுமே ஆதாயத்தை ஈட்டி வாழமுடிந்தது.இதனால், உலகம் பாட்டாளி - முதலாளி எனும் இருபெரும் வகுப்புகளாகப் பிளவுண்டது.[26] இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. உற்பத்திகளில் முதலாளிகள் தனியார் உரிமம் கோரி இலாபமீட்டிய அதேவேளை, உற்பத்தியில் உரிமைகோர முடியாத பாட்டாளிகள், முதலாளிகளுக்கு அவற்றை விற்பது தவிர வேறு வழியில்லாதவர்கள் ஆயினர்.
இவ்வாறு செல்லும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம், முதலாளிகள் நிலக்கிழாரியம் மூலம் வளர்ந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, ஆளும் வர்க்கமாக வளர்ந்தனர் என்கின்றது.[27] இந்நிலையில் பாட்டாளிகள், அரச அதிகாரத்தைப் பெற்று தனியார் உரிமத்துக்கெதிராக பொதுவுரிமத்தை நிலைநாட்டும்போதே, பாட்டாளி - முதலாளி எனும் பேதத்தை ஒழிக்க முடிவதுடன், உலகை பொதுவுடைமை எனும் கோட்பாட்டின் கீழ் கொணரமுடியும். முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையிலேயே தொழிலாளர் சர்வாதிகாரம் இருக்கின்றது. இதன்மூலமே பொது வாக்குரிமை மூலம் பொது அதிகாரம் தெரிவுசெய்யப்பட்டு மீளளிக்கப்படுகின்றது.[28] இது முதலாளிகளைத் தோற்கடித்தாலும், முதலாளித்துவத்தைத் தோற்கடிக்காது. எனவே அதன்பிறகு சாத்தியமான ஒரே உற்பத்திமுறை முதலாளித்துவ உற்பத்திமுறையாகவே காணப்படும்.
மார்க்சியத்தின் கோட்பாட்டின் படி, தேசியமயமாதல் என்பது, செழிப்பை அரச உடைமை ஆக்குதல். ஆனால் சமூகமயமாதல் என்பது, சமூகமே அவ்வுடைமையின் உண்மையான மேலாண்மையாக விளங்குதல். தேசியமயமாதலைக் கவனமாகக் கையாளவேண்டிய சிக்கலாகக் கொண்ட மார்க்சியம், அரசுடைமையில் தொடர்ந்தும் முதலாளித்துவ உற்பத்திமுறை விளங்குவதை பரிந்துரைக்கிறது.[29] இந்த யுக்தியால், சில மார்க்சிய குழுமங்களை ஒன்றிணைத்து, சோவியத் ஒன்றியம் முதலான தேசியமயப்படுத்தப்பட்ட பேரரசுகள் உருவாக வழிகோலப்பட்டது.[30]
லெனினியம்
லெனினியம் என்பது, விளாடிமிர் லெனினால் முன்னெடுக்கப்பட்ட, உருசியப் புரட்சியில் முன்வைக்கப்பட்ட அரசியல் சித்தாந்தம் ஆகும். பொதுவுடைமையிலிருந்து நீட்சிபெற்ற லெனினியம், சமூகவுடைமையின் நிலைநிறுத்தலுக்காக ஒரு குடியரசு அமைப்பு நிறுவுதலையும், பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தையும் முன்வைத்தது. ஐந்து ஆண்டுகளாக மார்க்கசியத்தின் நடைமுறைப் பிரயோகமாக விளங்கிய லெனினியம், 1917இல் போல்செவிக் கட்சியின் கீழ் உழைக்கும் வர்க்கம் அதிகாரம் பெற்று சோவியத் ஒன்றியம் உருவாகக் காரணமானது.
ஏனையவை

மார்க்சியமும் லெனினியமும் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம், ஜோசப் ஸ்டாலின் மூலம் மார்க்சிய -லெனினியமாக முன்வைக்கப்பட்டன.[31] சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி மூலம் சோவியத் ஒன்றியத்தில் இவற்றை செயல்முறைப்படுத்திய ஸ்டாலின், பொதுவுடைமை அனைத்துலகம் என்ற அமைப்பின் கீழ், பரவலான உலகக் கவனத்தைப் பெற்றுக்கொண்டார். மார்க்சு மற்றும் லெனினின் கோட்பாடுகளை ஸ்டாலின் உண்மையிலேயே கைக்கொண்டாரா என்பதில் இன்றும் அறிஞர் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்கின்றன.[32] மார்க்சிய - லெனினியம் ஸ்டாலினின் கொள்கையாகவும், இசுடாலினியம் அவரது நடைமுறையாகவும் கொள்ளப்படுகின்றது. மார்க்சிய - லெனினியத்தில் இல்லாத தனிமனித வழிபாடு, அரச ஒடுக்குமுறை என்பன இசுடாலினியத்தில் காணப்பட்டன. சீனத்தலைவர் மா சே துங்கின் ஆட்சிக்கொள்கையான மாவோவியம், மார்க்சிய - லினினியத்தின் இன்னொரு வடிவமாகக் கொள்ளப்படுகின்றது. மார்க்சிய- லெனினிய இணைவான இசுடாலினியம், மாவோயியம் முதலானவை சமூகவுடைமையை நிறுவுவதற்குப் பதில், அரச முதலாளித்துவத்தையே நிறுவியதாக, ஏனைய பொதுவுடைமை - மார்க்சியர்கள் விமர்சித்தனர்.[30]
தம்மை மார்க்சிய - லெனினியத்தின் நீட்சிகள் என்று உரிமைகோரிய இன்னும் பல பொதுவுடைமைக் கோட்பாடுகள் உலக அரங்கில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. ஸ்டாலினுக்கு எதிராக அதிகாரத்துக்குப் போட்டியிட்ட லியோன் திரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும், மார்க்சிய - லெனினியத்துக்கு எதிராக திரொட்ஸ்கியியம் எனும் சித்தாந்தத்தை முன்மொழிந்தனர். நான்காம் அனைத்துலகம் அமைப்பு, ஸ்டாலினின் பொதுவுடைமை அனைத்துலகம் அமைப்புக்கு எதிராக 1938இல் திரொட்ஸ்கியால் நிறுவப்பட்டது. இன்னும் கட்டுப்பாடில்லா மார்க்சியம் (Libertarian Marxism),[33], மன்றுசார் பொதுவுடைமை (Council communism), இடது பொதுவுடைமை,[34] முதலான பல்வேறு பொதுவுடைமைக் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன. மார்க்சியத்துக்கு எதிராக,அரசிலாப் பொதுவுடைமை, கிறித்துவப் பொதுவுடைமை என்பன அதேகாலத்தில் உருவாகின.
Remove ads
விமர்சனம்
பொதுவுடைமை மீதான விமர்சனம் இருவகைப்படும். ஒன்று, இருபதாம் நூற்றாண்டு பொதுவுடைமை அரசுகளின் செயன்முறை அம்சங்களோடு கருத்தில் கொள்ளப்படுபவை.[35] அடுத்தது, பொதுவுடைமைக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளோடு தொடர்பானவை.[36] பொதுவுடைமைக் கொள்கைகளுள் ஒன்றான மார்க்சியப் பொருள்முதல் வாதம், தாராண்மை மக்களாட்சியின் உரிமைகளை நசுக்கும் ஒன்றாக நோக்கப்படுகின்றது.[37][38][39]
மார்க்சிய மறுமலர்ச்சியாளரும், சமூகவியலாளரும் ஆன எட்வர்டு பெர்ன்சுடைன் முந்தைய மார்க்சிய கொள்கையை உருவாக்கிய கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் ஏங்கல்சும் கொள்கையின் ஆரம்பக்கட்டத்தின் போது இளையவர்களாய் இருந்ததால் அக்கொள்கை வன்முறைப் பாதையை தூண்டுவதாக சாடி இருக்கிறார். மேலும் அது முதிர்ச்சி அடையாத கொள்கை எனவும் இவரால் கூறப்பட்டது.[40] ஆனால் பிற்கால மார்க்கியக் கொள்கையில் கார்ல் மார்க்சு சமூக புரட்சியின் மூலமாக காண முடியும் எனக் கூறியதால் பிற்கால மார்க்சிய கொள்கை முதிர்ச்சி அடைந்த கொள்கை என்று வழிமொழிந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.[41] நடைமுறையில் பொதுவுடமைக் கொள்கைகள் பல நாடுகளில் சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலியுள்ளன. (எ. கா) சோவியத் யூனியன், வட கொரியா. பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது.[சான்று தேவை] பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளில் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத வகையில் ஊடக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.[சான்று தேவை] சீனா போன்ற நாடுகளின் நடக்கும் பல்வேறு அநியாயங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன. மனிதவுரிமைகள் தொடர்பான மக்கள் புரிதலுக்கோ தேடலுக்கோ கூட வழிகள் இல்லை. இணையத்திலும் கூட மனிதவுரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் மக்களுக்கு எட்டாத வகையில் முடக்கப்பட்டுள்ளன. [சான்று தேவை]
மேலும் காண
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads