விகதகுமாரன்
கே. சி. டேனியல் இயக்கிய 1930 ஆண்டைய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விகதகுமாரன் ( ஆங்கிலம்: The Lost Child ) என்பது 1930 ஆம் ஆண்டய இந்திய ஊமைப்படம், இப்படத்தை ஜே. சி. டேனியல் நாடார் எழுதி தயாரித்து இயக்கினார். மேலும் இவரே இப்படத்தில் நாயகன் வேடத்திலும் நடித்தார். விகதகுமாரன் ஒரு சமூக நாடகமும், முதல் மலையாளத் திரைப்படமும் ஆகும். இந்த பணிக்காக ஜே. சி. டேனியல் மலையாள திரையுலகின் தந்தையாகவும் கருதப்படுகிறார். இந்த திரைப்படம் முதல் இந்திய சமூக நாடக திரைப்படமாகவும் புகழ் பெற்றது. படத்தின் அறியப்பட்ட நகல் எதுவும் இல்லை, இது அழிந்துவிட்ட ஒரு படமாகும்.[1]
Remove ads
கதைச்சுருக்கம்
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பணக்காரனின் மகனான சந்திரகுமார் என்ற சிறுவனை பூதநாதன் என்பவன் இலங்கைக்கு கடத்திச்சென்றுவிடுகிறான். சிறுவனை அவரது பெற்றோர் தேடிப்பார்த்து அந்த முயற்சியில் தோல்வியடைகின்றனர். இலங்கைக்கு கடத்தபட்ட சந்திரகுமார் ஒரு தோட்டத் தொழிலாளியாக வளர்க்கப்படுகிறான். தோட்ட உரிமையாளரான பிரித்தானியரின் அன்பைப் பெறுகிறான். காலப்போக்கில், சந்திரகுமார் தோட்டக் கங்காணி பதவிக்கு உயர்கிறான். இந்த நேரத்தில் சந்திரகுமாரின் தூரத்து உறவினரான ஜெயச்சந்திரன் இலங்கைக்கு வருகிறார். அப்போது அவரது உடைமைகள் அனைத்தைதும் பூதநாதனால் கொள்ளையடிக்கப்படுகின்றன. உடமைகள் கொள்ளைபோனதால் சிக்கித் தவிக்கும் ஜெயசந்திரனுக்கு சந்திரகுமாரின் அறிமுகம் உண்டாகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகின்றனர். இருவரும் திருவனந்தபுரத்திற்கு வருகிறார்கள், அங்கு சந்திரகுமாரின் சகோதரி ஜெயச்சந்திரனைக் காதலிக்கிறார். இதற்கிடையில் பூதநாதன் அவளைக் கடத்த முயற்சிக்கிறான். இருவரும் சரியான நேரத்தில் செயல்பட்டு அவளைக் காப்பாற்றுகிறனர். சந்திரகுமாரின் முதுகில் உள்ள ஒரு வடுவைப் பார்த்து சந்திரகுமாரை குடும்பத்தினர் அடையாளம் காண்கின்றனர். இதன் இறுதியில் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்கிறது.
Remove ads
நடிகர்கள்
- ஜெயச்சந்திரனாக ஜே. சி. டேனியல்
- சரோஜினியாக பி. கே. ரோசி
- பூதநாதனாக ஜான்சன்
- சந்திரகுமாராக சுந்தர் ராஜ்
தயாரிப்பு
ஜே. சி. டேனியல் திருவிதாங்கூரில் உயர் கல்வியை முடித்த நிலையில் திரைப்படம் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார்.[2] தற்காப்புக் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்த இவர், தெற்கு திருவிதாங்கூரின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பட்டத்தில் நிபுணராவார். இவர் 1915 இல் தன் 15 வயதில் இந்தியன் ஆர்ட் ஆஃப் ஃபென்சிங் மற்றும் ஸ்வாட் பிளே என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார். பொது ஊடகமான திரைப்படத்தின் வீச்சை டேனியல் நன்கு அறிந்திருந்தார். பிரபல ஊடகமான திரைப்பத்தைப் பயன்படுத்தி சிலம்பட்டத்தை பிரபலப்படுத்த இவர் விரும்பினார். அந்த காலக்கட்டத்தில் கேரளத்தின் பொது மக்கள் திரைப்படத்தைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இருந்தனர். எனவே இவரின் இந்த யோசனையானது மிகவும் சவாலான ஒரு பணியாக இருந்தது. இவர் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு திரைப்பட தயாரிப்பின் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கும் தேவையான உபகரணங்களைப் பெறுவதற்கும் மதராசுக்கு (இப்போது சென்னை ) புறப்பட்டார். மதராசானது தென்னிந்தியாவில் திரைப்படத் தயாரிப்பின் வளர்ந்து வரும் மையமாக இருந்தது மற்றும் தென்னிந்தியாவில் நிரந்தர திரையரங்குகளையும் கொண்ட பகுதியாக இருந்தது. இந்த அரங்கம் கெயிட்டி என்ற பெயரில் 1912 இல் நிறுவப்பட்டது. இருப்பினும், மதராசிலிருந்து இவர் விரும்பியதைப் பெற முடியவில்லை, மேலும் அங்கு இருந்த பல்வேறு படப்பிடிப்பு வளாகங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தாலும் இவர் மனம் தளராமல் இந்தி சினிமா தயாரிப்பின் மையமான பம்பாய்க்கு (இப்போது மும்பை ) பயணம் செய்தார். இவர் கேரளத்தைச் சேர்ந்த ஆசிரியர் என்றும், தன் மாணவர்களுக்கு திரைப்படம் பற்றி கற்பிக்க விரும்புவதாகவும் ஸ்டுடியோ உரிமையாளர்களிடம் கூறி உள்ளே நுழைய அனுமதி பெற்றார். இவ்வாறு பம்பாயில் திரைப்படத் தயாரிப்பிற்கு வேண்டிய அறிவையும் உபகரணங்களையும் இவர் சேகரித்தார். இதன்பிறகு தனது கனவை நிறைவேற்ற மீண்டும் கேரளாத்துக்கு வந்தடைந்தார். இறுதியாக தனது சொந்த ஸ்டுடியோவில் படத்தை படமாக்கினார்.
1926 ஆம் ஆண்டில், ஜே. சி. டேனியல் கேரளத்தில் தி திருவிதாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ் என்ற பெயரில் முதல் திரைப்பட ஸ்டுடியோவை நிறுவினார். இது திருவனந்தபுரத்தில் பட்டோடத்தில் தற்போதைய குடிமைப்பணி ஆணைய அலுவலகத்துக்கு அருகே இருந்தது. இவர் தனது பெயரில் இருந்த ஒரு பகுதி நிலத்தை 4 லட்சம் பிரித்தானிய இந்திய ரூபாய்க்கு விற்று பணம் திரட்டினார். பின்னர் இவர் தனது கனவுப் படத்தின் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கினார். இவரே திரைக்கதை எழுதி அதற்கு விகதகுமாரன் ( தொலைந்த சிறுவன் என்பது பொருளாகும்) என்று பெயரிட்டார். ஊமைப்படமான இப்படத்தை இயக்கினார். மேலும் இப்படத்தின் கதாநாயகன். படத்தொகுப்பு உள்ளிட்ட பெரும்பாலான பின் தயாரிப்பு பணிகளையும் செய்தார். படத்தின் கருபொருள் சமூக முக்கியத்துவம் வாய்ந்தது மேலும் அந்த வகையின் ஆரம்ப படங்களில் ஒன்றாக இருந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான இந்திய திரைப்படங்கள் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவையாக, சமூக கருப்பொருள்கள் கொண்ட படங்கள் அற்றும் இருந்தன. இப்படம் டெப்ரி கேமராவைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டது.[3]
இந்த படத்தில் நடித்தவர் மலையாள திரைப்பட உலகின் முதல் நடிகை திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள தெய்காடு என்ற இடத்திலிருந்து வந்த பி. கே. ரோசி என்ற தாழ்த்தபட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஆவார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் லாலா (ஒரு பிரித்தானிய) ஆவார்.[4] படத்தின் நாயகியான ரோசி திரைப்படத்தில் நடிக்க படப்பிடிப்பு தளத்துக்கு மதிய உணவுடன் வந்து மாலையில் தனது வீட்டுக்கு திரும்புவது வழக்கம். முன்னதாக கதாநாயகி வேடத்தில் நடிக்க பம்பாயைச் சேர்ந்த லானா என்ற நடிகையை டேனியல் முடிவுசெய்திருந்தார். மற்றொரு முக்கியமான பாத்திரத்தில் நடிகை பி. எஸ். சரோஜாவின் தந்தையாக ஜான்சன் நடித்திருந்தார். இந்த படத்தில் டேனியலின் நண்பர் சுந்தர் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
Remove ads
வெளியீடு

படத்தின் வெளியீட்டு தேதி சரியாக தெரியவில்லை. இரண்டு தேதிகள் கூறப்படுகின்றன.[5] படம் 1928 நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது.[6] திருவனந்தபுரத்தில் கேபிடல் தியேட்டரில் 23 அக்டோபர் 1930 அன்று பிற்பகல் 6:30 மணிக்கு விகதகுமாரன் திரையிடப்பட்டது. திருவனந்தபுரம் நகரின் மையத்தில் உள்ள இன்றைய மாநில சட்டமன்றக் கட்டடத்திற்கு அருகில் இன்றைய ஏ. ஜி. அலுவலகத்திற்கு எதிரே திரையரங்கம் இருந்தது. படத்தின் திரையிடலை வழக்கறிஞர் மல்லூர் கோவிந்த பிள்ளை துவக்கிவைத்தார். இது ஒரு ஊமைப்படம் என்பதால், திரையரங்கில் ஒரு அறிவிப்பாளர் இருந்தார், அவர் கதையையும் கதைச் சூழலையிம் விளக்குவார். இந்தப் படம் கேரளத்தில் தயாரிக்கபட்ட முதல் படமாகவும், சமூக முக்கியத்துவம் கொண்ட படமாகவும் இருந்ததது. என்றாலும் படத்தில் ஒரு பெண் இருந்த காரணத்தால் கேரளத்தின் சில இந்து சமய ஆச்சார குழுக்களின் எதிர்ப்பை சந்தித்தது. காரணம் அந்தக் காலத்தில் படங்களில் பெண்கள் நடிப்பது விபச்சாரத்திற்கு இணையான செயலாக கருதப்பட்டது.[7] நாடகங்களில் கூட பெண் வேடங்களில் ஆண்கள் நடித்த காலம் அது. திருவனந்தபுரத்தில் உள்ள கேபிடல் அரங்கில் விகதகுமாரன் வெளியானபோது, உயர் சாதி இந்துக்களால் அரங்கிற்குள் படத்தின் நாயகி ரோசி அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஒரு தலித் பெண் படத்தில் உயர்சாதி நாயர் பெண்ணாக நடிப்பதா என்று ஆத்திரமடைந்து, ரோசியிடம் முரட்டுத்தனத்தனமாக நடந்துகொண்டனர். படம் திரையிடப்பட்ட போது, திரையில் கற்கள் வீசப்பட்டு, திரை சேதப்படுத்தப்பட்டது.[8] இந்தத் திரைப்படம் ஆலப்புழாவில் ஸ்டார் தியேட்டரில் திரையிடப்பட்டது. அந்த நேரத்தில் கேரளத்தின் மிக முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான ஆலப்புழாவின் பார்வையாளர்கள் தாராள சிந்தனையாளர்களாக இருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் திரைப்படத்தைப் பார்த்தனர். திரை மங்கியபோது பார்வையாளர்கள் கூச்சலிட்டதால் ஒரு சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது. இதுவே முதல் மலையாள படம் என அறிவிப்பாளர் விளக்கினார், சில சிறிய பிரச்சினைகள் இருந்தன என்றாலும் பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர். படத்தின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இருந்ததால், ஜே. சி. டேனியேல் தானே படப் பெட்டியுடன் ஆலப்புழாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. கொல்லம், திருச்சூர், தலச்சேரி, நாகர்கோவில் ஆகிய ஊரிகளிலும் படம் திரையிடப்பட்டது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மிதமான வியாபாரத்தை மட்டுமே செய்தது. வசூலானது படத்துக்கு ஆன செலவை விட குறைவாகவே இருந்தது.
திரைப்படங்கள் அல்லது நாடகங்களில் பெண்கள் நடிப்பது என்பது விபச்சாரத் தொழிலுக்கு இணையாக கருதபட்டது. விகதகுமாரன் படம் வெளிவந்தபோது, நிலப்பிரபுத்துவ நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு தலித் பெண் நாயர் பெண்ணாக நடித்திருப்பதைக் கண்டு கோபமடைந்தனர்.[7] இதனால் அவர்களில் சிலர் கதாநாயகி ரோசியின் குடிசையை எரித்தனர். இதனால் அவர் தமிழ்நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார், அங்கு அவர் திருமணம் செய்துகொண்டு தன் வாழ்வைக் கழித்தார். திருவனந்தபுரத்தை விட்டு வெளியேறியபின் ரோசி இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது.[8] சமீபத்தில் தான் அவரது புகைப்படம் மல்லூர் கோவிந்த பிள்ளையின் டைரிகளில் இருந்து பெறப்பட்டது.
பாக்ஸ் ஆபிஸில் படம் தோல்வியடைந்தத பிறகு, டேனியல் கடன் சுமையால் பாதிக்கப்பட்டு நிலைமையைச் சமாளிக்க, அவர் தனது உபகரணங்களை விற்று தனது ஸ்டுடியோவை மூட வேண்டியிருந்தது.[7][9] பின்னடைவுகள் இருந்தபோதிலும், டேனியல் மேலும் ஒரு திரைப்படத்தை உருவாக்கினார் இது தற்காப்பு கலையான அடிதடி முறை குறித்த ஆவணப்படமாக இருந்தது. இந்தப் படம் முடிந்தபிறகு டேனியல் முற்றிலும் திவாலானார். ஏறக்குறைய ஏழையாக ஆனார். இதனால் அவர் வாழ்வாதாரத்தை தேடுவதற்காக திருவனந்தபுரத்தை விட்டு வெளியேறினார். இதன்பிறகு டேனியல் தனது வாழ்நாள் முழுவதையும் பாளையங்கோட்டை, மதுரை, காரைக்குடி ஆகிய இடங்களில் பல் மருத்துவராக தன் வாழ்வைக் கழித்தார்.
கேரள அரசு துவக்கத்தில் டேனியலுக்கு எந்த மரியாதையும் கொடுக்க மறுத்துவிட்டது, ஏனெனில் ஜே. சி. டேனியல் பிறந்த கன்னியாகுமரி மாவட்டமானது 1956 இல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. இதனால் டேனியல் ஏதேனும் நிதி உதவியை விரும்பினால், அவர் அதற்கு தமிழக அரசிடம்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறிவிட்டது. 1975 ஆம் ஆண்டில் டேனியல் இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு சிந்தனை மாற்றமாக, கேரள அரசு 1992 இல் கேரள மாநில திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக ஜே. சி. டேனியல் விருதை மலையாள சினிமாவில் வாழ்நாள் சாதனைகளை கௌரவிப்பதற்காக நிறுவியது.[10] டேனியல் இப்போது மலையாள சினிமாவின் தந்தை என்று அறியப்படுகிறார். விகதகுமாரனின் தோல்விக்கு இது ஒரு ஊமைபடம் படமாக இருந்தது காரணம் என்று கூறப்படுகிறது.[11]
Remove ads
பரவலர் பண்பாட்டில்
ஜே. சி. டேனியலின் வாழ்க்கை மற்றும் விகதகுமாரன் தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான இலக்கிய மற்றும் சினிமா படைப்புகள் உருவாக்கபட்டுள்ளன. விகதகுமாரனின் கதாநாயகி பி. கே. ரோசியின் வாழ்க்கையை விவரிக்கும் வினு ஆபிரகாமின் புதினமான நாஷ்டா நாயிகா ஆகும்.[12] இந்த படம் 2003 இல் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[13]
2013 ஆம் ஆண்டில், ஜே. சி. டேனியலின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு கமல் எழுதி இயக்கிய செல்லுலாய்ட் திரைப்படம் வெளியானது. விகதகுமாரனைத் தயாரிக்கவும் திரையிடவும் டேனியல் மேற்கொண்ட போராட்டங்களையும் அவர் நிதி நெருக்கடியில் மூழ்குவதையும் இந்தப் படம் விவரிக்கிறது.[12] வினு ஆபிரகாமின் நாஷ்டா நாயிகா புதினத்தையும், திரைப்பட பத்திரிகையாளர் செல்லங்கட் கோபாலகிருஷ்ணன் எழுதிய வாழ்க்கை வரலாறான லைப் ஆப் ஜே. சி. டேனியல் என்ற நூலையும் ஓரளவு அடிப்படையாகக் கொண்ட இப்படம், விகதகுமாரனின் முன்னணி நடிகையான ரோசியின் வாழ்க்கையையும் கொண்டுள்ளது. டேனியல் வேடத்தில் பிருத்விராஜ் நடிக்க, மம்தா மோகன்தாஸ் அவரது மனைவி ஜேனட்டாகவும், புதுமுகம் சாந்தினி ரோசியாகவும் நடித்தனர். இந்த படத்தில் ஒரு ஐ. ஏ. எஸ் அதிகாரி மற்றும் அப்போதைய கேரள முதலமைச்சரைப் பற்றியும் சித்தரித்த நுட்பமான விசயம் குறித்து விமர்சனங்களை உருவாக்கியது, இது ஐ.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான மலையத்தூர் ராமகிருஷ்ணா ஐயர் மற்றும் கே. கருணாகரன் ஆகியோரை சுட்டிக்காட்டுகிறது. ஜே. சி. டேனியல் ஒரு நாடார் (தமிழர், கிறிஸ்தவர்) என்பதால் மலையாள சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்க மறுத்தது அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டனர்.[14][15] எழுத்தாளரும் அரசு ஊழியருமான என். எஸ். மாதவன் மற்றும் கேரளாத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி. பாபு பால் ஆகியோர் மலையத்தூர் மற்றும் கருணாகரன் ஆகியோரின் சித்தரிப்பில் உண்மைத் தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.[16]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads