கீழையூர் இரட்டைக் கோயில்கள்
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள இரட்டை சிவன் கோயில்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீழையூர் இரட்டைக் கோயில்கள் (Twin Temples, Keezhaiyur) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தின் கீழையூர் புறநகர்ப் பகுதியில் ஒரே இடத்தில் அமைந்துள்ள இரு சிவன் கோயில்களாகும். கீழையூர், சோழ மன்னர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூரின் ஒரு பகுதியாக அமையும்.

Remove ads
அமைவிடம்
திருச்சியிலிருந்து அரியலூர் அல்லது ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 35 கி.மீ. வடக்கிலும், அரியலூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ள கீழையூர் மேலப்பழுவூருக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது. அவ்வூரில் இக்கோயில்கள் அமைந்துள்ளன.
அமைப்பு
மேற்கு நோக்கிய நிலையில் இக்கோயில்களின் முதன்மை நுழைவாயில் உள்ளது. தென்மேற்கு திசையையொட்டி ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வெளிப்புறம் இரு புறத்திலும் துவாரபாலகர்கள் உள்ளனர்.[1] அவனி கந்தர்வ ஈசுவர கிருகம் என்றழைக்கப்படுகின்ற இக்கோயில்களின் வட புறத்தில் உள்ள கோயில் வடவாயில் ஸ்ரீகோயில் (சோழிச்சரம்) என்று அழைக்கப்படுகிறது. தென் புறத்தில் உள்ள கோயில் தென்வாயில் ஸ்ரீகோயில் (அகத்தீசுவரம்) என்று அழைக்கப்படுகிறது. பழுவேட்டரையர்கள் சிற்றசர்களில் குமரன்கண்டன் மற்றும் குமரன்மறவன் காலத்தில் இக்கோயில்கள் கட்டப்பட்டன. (கி.பி. 9ஆம் நூற்றாண்டு). இக்கோயில் வளாகத்தில் இரண்டு சிவன் கோயில்களுடன் சில பரிவாரக் கோயில்களும் காணப்படுகின்றன.
Remove ads
மூலவர்
ஒரு கோயிலுக்கு மூலவரான இறைவன் அகஸ்தீஸ்வரர் இறைவி அபிதகுஜாம்பிகை தனித்தனிச் சன்னதிகளில் உள்ளனர். மற்றொரு கோயிலுக்கு மூலவரான சோழீஸ்வரர் சன்னதியில் இறைவி மனோன்மணி உள்ளார்.
சிறப்பு
சிற்பக்கலையின் எடுத்துக்காட்டாக இரட்டைக்கோயில்களைக் கூறலாம். தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில், கொடும்பாளூர் மூவர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களை இக்கோயில்கள் நினைவுபடுத்துகின்றன. நுட்பமான சிற்பங்கள், அழகான நந்திகள், நேர்த்தியான கருவறைகள், அழகான மண்டபங்கள், சிம்மத்தூண்கள், விமானங்கள் என்ற நிலையில் ஒவ்வொன்றும் தனித்த கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
