சஞ்சய வம்சம்

இந்தோனீசியாவிலுள்ள சாவகத் தீவில் ஆட்சி செய்த குறிப்பிடத்தக்க பண்டைய வம்சம் From Wikipedia, the free encyclopedia

சஞ்சய வம்சம்
Remove ads

சஞ்சய வம்சம் (Sanjaya dynasty) என்பது இந்தோனீசியாவிலுள்ள சாவகத் தீவில் ஆட்சி செய்த குறிப்பிடத்தக்க பண்டைய வம்சமாகும். இது கிபி முதல் நூற்றாண்டில் சாவகத்தில் மாதரம் இராச்சியத்தை ஆண்டது. பண்டைய சாவகத்தில் இந்த வம்சம் இந்து மதத்தின் தீவிர ஊக்குவிப்பாளராக இருந்தது.[1]

Thumb
சஞ்சய வம்சத்தின் மரபுகளில் ஒன்றான பிரம்பானான் கோயில்.

தோற்றமும் உருவாக்கமும்

காங்கல் கல்வெட்டின் படி, இந்த வம்சம் பொ.ச.732-இல் சஞ்சயன் என்பவரால் நிறுவப்பட்டதாகத் தெரிகிறது. காங்கல் கல்வெட்டு தென்மேற்கில் உள்ள காங்கல் கிராமத்தில் மகலாங் நகரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு தென்னிந்திய தமிழ் பல்லவ எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது மற்றும் குஞ்சரகுஞ்சா பகுதியில் உள்ள மலையில் ஒரு இலிங்கம் ( சிவனின் சின்னம்) நிறுவப்பட்டது பற்றி கல்வெட்டு கூறுகிறது. இந்த பகுதி யவத்வீபம் (சாவகம்) என்ற உன்னத தீவில் அமைந்துள்ளது. இது ஏராளமான அரிசி மற்றும் தங்கத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு, யவத்வீபத்தை சன்னா என்ற மன்னன் ஆட்சி செய்தார் என்று கூறுகிறது. அவருடைய நீண்ட கால ஆட்சி ஞானம் மற்றும் நல்லொழுக்கத்துடன் குறிக்கப்பட்டது. மன்னர் சன்னா இறந்த பிறகு, இராச்சியம் பிளவுபட்டது. ஆட்சியாளர் மற்றும் புரவலரை இழந்ததால் குழப்பம் பரவலாக இருந்தது. இதற்கு மத்தியில் சஞ்சயன் அரியணை ஏறினார். இந்த கல்வெட்டின் படி, அவர் சன்னகாவின் மகனாவார். சன்னகா, சன்னா மன்னரின் சகோதரி என்றும் வர்ணிக்கப்படுகிறார். சஞ்சயன் புனித நூல்கள், தற்காப்புக் கலைகள் மற்றும் இராணுவப் பயிற்சி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். இவர் தனது இராச்சியத்தைச் சுற்றியுள்ள அண்டைப் பகுதிகளை வென்றார். மேலும், இவரது புத்திசாலித்தனமான ஆட்சி அவரது நிலத்தையும் அவரது குடிமக்கள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதித்தது.[2]

கரிதா பராஹ்யங்கனின் கருத்துப்படி (பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் இது முக்கியமாக சுந்தா இராச்சியத்தின் வரலாற்றைக் கூறுகிறது), சஞ்சயன், மன்னர் சன்னாவிற்கும் சன்னகவிற்கும் மகன். சன்னா மற்றும் சஞ்சயன் ஆகியோரின் இந்த உறவு காங்கல் கல்வெட்டில் வழங்கப்படவில்லை. சன்னாவை அவனது உறவினரான காலூவின் அரசர் பர்பசோரா தோற்கடித்தார். அதனால் அவர் மெராபி எரிமலைக்கு பின்வாங்க வேண்டியிருந்தது என்றும் அது குறிப்பிடுகிறது. பின்னர், சஞ்சயன் சன்னாவின் இராச்சியத்தை மீட்டு, மேற்கு சாவகம், நடுச் சாவகம், கிழக்கு சாவகம் , பாலி போன்ற பகுதிகளை ஆட்சி செய்தார். இவர் மலாயு மற்றும் கலிங்கத்துடன் (அவர்களின் அரசர் சங் சிறீவிஜயனுக்கு எதிராக) போரில் ஈடுபட்டார்.

சிறிய வேறுபாடுகளைத் தவிர, கரிதா பராஹ்யங்கனின் முக்கிய கருப்பொருள் காங்கல் கல்வெட்டுக்கு ஒத்திருக்கிறது. இந்த கதை மேற்கு சாவகத்துடன் வம்சத்தின் தொடர்புகளை பரிந்துரைத்தது.

Remove ads

சைலேந்திரர்களுடனான உறவுகள்

சஞ்சய - சைலேந்திர உறவு பற்றி சில கோட்பாடுகள் உள்ளன. நடு சாவகத்தை ஆண்ட சைலேந்திர வம்சம் என்ற ஒரே ஒரு வம்சமே இருந்ததால், சஞ்சய வம்சம் என்று எதுவும் இல்லை என்று சில அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த கோட்பாடு போயர்பட்ஜரகாவால் முன்மொழியப்பட்டது. மேலும், ஒரே இராச்சியம் மற்றும் ஒரே வம்சம் இருந்தது என்றும் பரிந்துரைத்தது. இந்த இராச்சியம் மாதரம் பகுதியில் தலைநகருடன் மேடான் என்று அழைக்கப்படுகிறது. மேலும் சைலேந்திரர்களின் ஆட்சி வம்சமாகும். சஞ்சயன் மற்றும் அவனது சந்ததிகள் அனைவரும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறுகிறார்.

பொ.ச.778 இல் தோன்றிய சைலேந்திர வம்சத்தால் சஞ்சய வம்சம் சாவகத்தின் வடக்கே கட்டுப்படுத்தப்பட்டது என்று மற்றொருவர் கூறுகிறார். இந்நிகழ்ச்சிக்கான சான்றுகள் கலசன் கல்வெட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில், நடு சாவகத்தில் சைலேந்திர வம்சத்திற்கு அடுத்தபடியாக சஞ்சய வம்சம் இருந்தது. மேலும் பெரும்பாலான காலம் அமைதியான சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பால் வகைப்படுத்தப்பட்டது.

மகாயான பௌத்தத்துடன் சைலேந்திரர்களின் தொடர்பு அரசன் சங்கரன் (இரகாய் பனரபன் அல்லது பனங்கரன்) புத்த மதத்திற்கு மாற்றப்பட்ட பிறகு தொடங்கியது.[3] பிற்கால சைலேந்திர மன்னர்கள், பனங்கரனின் வாரிசுகள் மகாயான பௌத்தர்களாகவும் மாறி, சமரதுங்கன் ஆட்சியின் இறுதி வரை சாவகத்தில் பௌத்தத்திற்கு அரச ஆதரவைக் கொடுத்தனர். இந்தக் கோட்பாடு ராஜா சங்கரா கல்வெட்டு (இப்போது காணப்படவில்லை), சோஜோமெர்டோ கல்வெட்டு மற்றும் கரிட்டா பராஹ்யங்கன் கையெழுத்துப் பிரதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. பிகாடனின் ஆட்சியில் இருந்து, மேடான் இராச்சியத்தின் இறுதி வரை, சிவத்துவ இந்து சமயம் மீண்டும் அரச ஆதரவைப் பெறுகிறது.

சைலேந்திர குடும்பம் அவர்களின் சில கல்வெட்டுகளில் பழைய மலாய் மொழியைப் பயன்படுத்தியதாக மற்றொரு ஆதாரம் சுட்டிக்காட்டுகிறது. இது சுமாத்திராவில் சைலேந்திர வம்சத்தின் வெளிநாட்டு தோற்றம் மற்றும் சிறீவிஜயத்துடனான அவர்களின் தொடர்புகளை பரிந்துரைத்தது. சைலேந்திரர்கள், சிறீவிஜயத்துடனான அவர்களின் வலுவான தொடர்புகளுடன், நடு சாவகத்தின் கட்டுப்பாட்டைப் பெற முடிந்தது. மேலும், சஞ்சய வம்சம் உட்பட இராக்கைகள் (உள்ளூர் சாவகப் பிரபுக்கள்) மீது மேலாதிக்கத்தை சுமத்த முடிந்தது. இதனால் மாதரம் சஞ்சய வம்சத்தின் மன்னர்களை தங்கள் அதிகாரத்துவத்தில் இணைத்துக் கொண்டார்கள் என்று இந்த கோட்பாடு கூறுகிறது. வம்சத்தின் அரசவையின் மையம் தெற்கு கேதுவில் ( மகலாங்கைச் சுற்றி, யோக்யகர்த்தாவின் வடக்கே) அமைந்திருந்தாகத் தெரிகிறது.

Remove ads

சம்பாவுடனான உறவுகள்

தென்கிழக்காசியாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள சம்பா இராச்சியத்துடன் சாவக இராச்சியங்கள் குறைந்தபட்சம் சஞ்சய வம்சத்தின் ஆட்சியிலிருந்து நெருங்கிய உறவைப் பேணி வந்துள்ளன். சாவகர்களைப் போலவே, சாம்களும் இந்தியமயமாக்கப்பட்ட ஆசுத்திரோனீசிய மக்கள் ஆவர். சாம் கோயில்களில் உள்ள கட்டிடக்கலை அம்சங்களில் உறவின் ஒரு உதாரணத்தைக் காணலாம். அவை சஞ்சய வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்ட நடு சாவகத்தில் உள்ள கோயில்களின் கட்டிடக்கலை பாணிகளுடன் பல ஒற்றுமைகள் உள்ளன.

நடு சாவகத்தின் ஆட்சியாளர்

சஞ்சய வம்சத்தின் பட்டத்து இளவரசராக இருந்த இராகாய் பிகாடன், சைலேந்திர மன்னரான சமரதுங்கனின் மகளான பிரமோதவர்தனியை (833-856) மணந்தார். அப்போதிருந்து, புத்த சைலேந்திரர்களுக்குப் பதிலாக, இந்து மதத்தை பின்பற்றும் சஞ்சயாவின் செல்வாக்கு மாதரத்தில் வெளிப்படத் தொடங்கியது. பிரமோதவர்தனியின் சகோதரரும் சமரதுங்கனின் மகனுமான பாலபுத்ரன் மன்னனை இராகாய் பிகாடனை வீழ்த்தினார். இதன் விளைவாக, 850 இல், சஞ்சய வம்சம் மாதரத்தின் ஒரே ஆட்சியாக இருந்தது. இது நடு சாவகத்தில் சைலேந்திரர்களின் இருப்பை முடிவுக்குக் கொண்டுவந்தது. மேலும், பாலபுத்ரன் சுமாத்ராவில் உள்ள சிறீவிஜயத்திற்கு பின்வாங்கினார். அங்கு அவர் முதன்மையான ஆட்சியாளரானார்.[4]

சஞ்சய வம்சத்தைப் பற்றிய தகவல்கள் பொ.ச.907 தேதியிட்ட பாலிதுங் கல்வெட்டிலும் காணப்படுகின்றன. பாலிதுங் கல்வெட்டின் படி - ஒரு ஆட்சியாளர் இறந்தவுடன், அவர்கள் தெய்வீக வடிவமாக மாறினார்கள். இந்தக் கல்வெட்டுகளிலிருந்து, சஞ்சய வம்சத்தின் ஆண்ட மன்னர்களின் சாத்தியமான வரிசையை அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர்:[5] :88–89,91,92,108,126–127

  • சஞ்சயன் (732—760)
  • பனங்கரன் (760—780)
  • பனுங்கலன் (780-800)
  • சமரக்ரவீரன் (இரகாய் வாரக்) (800—819)
  • இரகாய் கருங் (819-838)
  • இரகாய் பிகாடன் (838-850)
  • இரகாய் கயுவாங்கி (850—898), லோகபாலா என்றும் அழைக்கப்படுகிறார்
  • பாலிதுங் (898-910)

இது சஞ்சய வம்சத்தின் ஆட்சியின் போது, உன்னதமான சாவகத்தின் இலக்கியம் மலர்ந்தது. காகாவின் இராமாயணம் போன்ற உன்னதமான இந்து இலக்கியங்களை பழைய சாவக மொழியில் மொழிபெயர்ப்பதும் தழுவுவதும் நடத்தப்பட்டது. பொ.ச.850 -களில், நடு சாவகத்தில் உள்ள பிரம்பானான் கோயிலின் கட்டுமானத்தை பிகாடன் தொடங்கினார். பின்னர் மன்னன் பாலிதுங்கால் முடிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. பிரம்பானன் கோயில் வளாகம் தென்கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாகும். மேலும் அதன் பெருமை போரோபுதூருக்கு போட்டியாக உள்ளது, இது உலகின் மிகப்பெரிய பௌத்த கோவிலாகும் .

பாலிதுங்கிற்குப் பிறகு சஞ்சய மன்னர்களின் வாரிசுகள்:[5]

  • தக்சன் (910—919)
  • துலோடாங் (919-924)
  • வாவா (924-929)
  • எம்பு சிண்டோக் (929—947)
Remove ads

வீழ்ச்சி

பொ.ச.929 இல், எம்பு சிண்டோக் நடு சாவகத்திலிருந்து கிழக்கு சாவகத்திற்கு மாதரம் அரச சபையை மாற்றினார். மாற்றத்தின் உண்மையான காரணங்கள் முற்றிலும் தெளிவாக இல்லை. சில சாத்தியமான காரணங்கள் உள்ளன; மெராபி எரிமலை வெடிப்பு, அதிகாரப் போராட்டம் அல்லது சிறீவிஜயப் பேரரசைத் தளமாகக் கொண்ட சைலேந்திரர்களின் அரசியல் அழுத்தம் ஆகியவை இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம்.[1]

கிழக்கு சாவகத்திற்கு மாற்றப்பட்டது நடு சாவக சஞ்சய வம்சத்தின் முடிவைக் குறித்தது. அதிலிருந்து கிழக்கு சாவகத்தில் ஈசான வம்சம் என்ற புதிய வம்சம் தோன்றியது.

Remove ads

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads