செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவில் (Senji Singavaram Ranganatha Temple) என்பது செஞ்சி சிங்கவரம் பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் குகைக்கோவில் இந்தியாவில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரங்கநாத நாதருக்கும் அரங்கநாயகி தாயாருக்கும் அமைக்கப்பட்ட ஒரு கோயிலாகும். இந்தக் கோவில் பல்லவக் காலக் கட்டட கலையமைப்பில் அமைந்துள்ளது. செஞ்சி நாயக்க வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணப நாயக்கர் என்பவரால் இக்கோவில் புனரமைக்கப்பட்டது.

Remove ads
விளக்கம்
சிங்கவரம் அரங்கநாதர் கோவில் செஞ்சிக் கோட்டையிலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. கோயிலை அடைய 160 படிகள் ஏறிச் செல்லவேண்டும். இராணிக் கோட்டையுடன் இந்தக் கோயில் சுரங்கப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.[1] 24 அடி நீளத்தில் அரங்கநாதர் பாம்புப்படுக்கையில் படுத்தபடி உள்ளவராக பாறையில் செதுக்கப்பட்டுள்ளார்.[2] அரங்கனின் நாபிக் கமலத்தில் நான்முகன், இடது புறம் கந்தர்வன் முதலானோர் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வலது புறம் கருடன் தவிர, விஷ்ணுவால் கொல்லப்பட்ட மது மற்றும் கைதபா ஆகிய பேய்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இறைவனின் திருவடியருகே பூமாதேவி, பிரகலாதன் ஆகியோர் உள்ளனர்.
மகேந்திரவர்மன் அல்லது நரிசிம்மவர்மன் (கி.பி. 580-688) காலத்தைச் சேர்ந்த பல்லவக் குகைக் கோவில்கள் மேலச்சேரியில் மத்திலேசுவரர் கோவிலாகவும், சிங்கவரத்தில் அரங்கநாதர் கோவிலாகவும் உள்ளன. மண்டகப்பட்டு கல்வெட்டின் படி, பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மன் அரங்கநாதர் கோயிலினை நிறுவினார். வரலாற்றாசிரியர் கே. ஆர். சீனிவாசன் இந்தக் கோவிலில் உள்ள துர்கை, விஷ்ணு போன்றோர் மாமல்லபுரத்தின் குகைக் கோயில்ளைப் போலவே இருப்பதாகக் கூறுகிறார். மேலும் "சிங்கவரம்" என்ற பெயர் நரசிம்மர் அல்லது சிம்மவிஷ்ணு என அழைக்கபட்ட மற்றொரு பல்லவ மன்னரான மாமல்லனின் பெயரிலிருந்து வந்ததாக இருக்கலாம் என்று கூறுகிறார். இந்தக் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் பல்லவர் கலையமைப்பைக் கொண்டுள்ளதாகவும் கே. ஆர். சீனிவாசன் குறிப்பிடுகிறார். துர்கை நான்கு பின்னிரு கைகளில் சங்கு, சக்கரத்தையும், முன்னிரு கைகளை தனது தொடையிலும் இடுப்பிலும் வைத்துக்கொண்டு மகிசாசூரனின் தலைமீது நிற்கிறார்.[3]
Remove ads
தொன்மக்கதை
கோயிலின் தலபுராணம் இதை அசுர மன்னன் இரணியகசிபுவுக்கு மகனாக பிறந்த பிரகலாதனின் தொன்மத்துடன் தொடர்புப்படுத்துகிறது.
சிங்கவரம் கோவிலில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு, திருப்பன்றிக்குன்று எம்பெருமான் என்று கடவுளைக் குறிப்பிடுகிறது, இது வராக பெருமாளுக்காக உருவாக்கப்பட்ட கோயில் என்று பொருள்படும்.[4]
பிற்காலப் புராணங்களில், செஞ்சி கிருஷ்ணப்பா நாயக்கர் வரதராஜ பெருமாளுக்காக ஒரு மலர்த் தோட்டத்தை அமைத்திருந்தார். ஒருசமயம் பெருமாள் ஒரு பன்றி வடிவில் தோட்டத்தில் உள்ள பூக்களை உண்டு அழித்தபடி இருந்தார். கிருஷ்ணப்ப நாயக்கர் அந்தப் பன்றியைத் துரத்திச் செல்கிறார். ஆனால் அதைக் கொல்ல முடியவில்லை. பன்றி வேடத்தில் இருந்த பெருமாள் சிங்கவரத்திற்குச் சென்று, ஒரு குகைக்குள் சென்று மறைந்துவிடுகிறார். பின்னர் தான் யாரென்று நாயக்கருக்கு வெளிப்படுத்துகிறார். திகைத்துப்போன நாயக்கர் சிங்கவரம் கடவுளை வணங்குகிறார். பின்னர் இறைவன் ஒரு துறவியின் வழியாக அங்கு கோயிலைக் கட்டும்படி நாயக்கரை அறிவுறுத்துகிறார். ஒரு கட்டத்தில் துறவி நாயக்கரைக் கொல்ல முயல்கிறார். ஆனால் நாயக்கர் துறவியைக் கொன்றுவிடுகிறார். ஆனால் இறந்த துறவியின் உடல் தங்கமாக மாறிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி செஞ்சிக் கோட்டைக்குள் அரங்கநாதர் கோயில் கட்டப்பட்டது. மேலும் சிங்கவரம் கோயில் கட்டப்பட்டது (மறுசீரமைக்கப்பட்டது).[5]
இந்தக் கோவிலில் நடைபெறும் சஷ்டி பூர்த்திக் கொண்டாட்டங்கள் தேசிங்கு ராஜா புராணத்துடன் தொடர்புடையது. இந்தக் கோவில் தேசிங்கு ராஜாவின் குலத் தெய்வமாக உள்ளது.[6][2] புராணக் கதைகளின்படி, கிபி 1714-இல் ஆற்காடு நவாப் சதத்துல்லா கானுக்கு எதிரான போருக்கு செல்வதற்கு முன்பு ராஜா தேசிங்கு தன் குலதெய்வத்திடம் ஆசிபெற இங்கு வந்தார். ஆனால் குலத் தெய்வத்திற்கு இப்போருக்கு தேசிங்கு செல்வதில் விருப்பம் இல்லாததால் தன் மறுப்பைத் தெரிவிக்கும் வகையில் தலையைச் சற்று திருப்பி வைத்துக்கொண்டார். அதையும் மீறி, ராஜா தேசிங்கு அவசரமாகப் போருக்குச் சென்றார். ஆனால் போரில் கொல்லப்பட்டார். ராஜா தேசிங்குக்கு முஸ்லீம் கூட்டாளி இருந்தார். அதே நேரத்தில் சதத்துல்லா கானுக்கு இந்துக்கள் ஆலோசகர்களாக இருந்ததாக டுமோண்ட் குறிப்பிடுகிறார். புராணங்கள் மற்றும் பாடல்களில், போரைத் தொடரும் ராஜாவின் திட்டங்களுக்காக கவலைப்பட்ட அரங்கநாதர், தேசிங்கின் இளம் மனைவிக்கு முன்னால் தோன்றுகிறார். அவள் உடன்கட்டை ஏற அனுமதி கேட்கிறாள். அவர் முதலில் அவளைத் தடுக்க முயல்கிறார். ஆனால் அவளுடைய வற்புறுத்தலுக்கு ஒப்புக் கொண்டு அவளையும் இறந்த கணவருக்கும் வரங்கள் அளித்து ஆசீர்வதிக்கிறார்.[2][7][5]
Remove ads
கோவில் திறந்திருக்கும் நேரம்
கோவில் தினமும் காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் மாலை 04.00 மணியிலிருந்து 06.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads