தன்மையங்கள்

From Wikipedia, the free encyclopedia

தன்மையங்கள்
Remove ads

உள மெய்யியலில் தன்மையங்கள் (ஆங்கிலம்: qualia; உச்சரிப்பு: /ˈkwɑːliə/ அல்லது /ˈkweɪliə/; ஒருமை வடிவம்: தன்மையம் [quale]) என்பன நனவான அகநிலை அனுபவத்தின் தனிப்பட்ட நிகழ்வுகளாக வரையறுக்கப்படுபவையாகும். இதன் ஆங்கிலச் சொல்லான குவாலியா என்ற சொல் ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் ஒரு பொருள் "என்ன வகையானது" அல்லது "எந்த மாதிரியானது" என்று பொருட்படும் இலத்தீன் பெயரடையான குவாலிஸ் (இலத்தீன் உச்சரிப்பு: [ˈkʷaːlɪs]) என்பதன் இலத்தீன் இருபாலர் பன்மை வடிவச் சொல்லான குவாலியா என்ற சொல்லிலிருந்து உருவானது. எடுத்துக்காட்டாக, "ஒரு குறிப்பிட்ட பழத்தை ருசிப்பது – அதிலும் குறிப்பாக இந்தக் குறிப்பிட்ட பழத்தை இந்த கணம் ருசிப்பது – என்பது என்ன" என்ற அனுபவம் குவாலியா எனப்படும் தன்மையங்களைக் குறிக்கிறது.

Thumb
சிவப்பு நிறத்தின் "சிவந்த தன்மை" தன்மையத்தின் ஒரு எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுகிறது.

தலைவலியின் போது அந்த நோவின் அனுபவ உணர்வு, ஒரு பானத்தின் சுவை, மாலை நேரச் செவ்வானத்தின் சிவந்த தன்மை ஆகியவை தன்மையங்களின் எடுத்துக்காட்டுகளில் அடங்கும். உணர்வின் குணாதிசயத் தன்மை என்ற அளவில், தன்மையங்கள் முன்மொழிவு மனப்பான்மைக்கு (propositional attitudes) முரணாக நிற்கிறது.[1] தன்மையங்கள் அனுபவத்தை நேரடியாக அனுபவிக்கும் தன்மையைக் குறிக்கையில் முன்மொழிவு மனப்பான்மையோ அனுபவத்தைப் பற்றிய நம்பிக்கைகளில் கவனம் செலுத்துகிறது என்பதே இதற்குக் காரணம்.

தன்மையங்கள் என்பது "நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பரிச்சயமான ஒன்றைக் குறிக்கும் பரிச்சயமில்லாத சொல், அதாவது நம்மைச் சுற்றியுள்ள விஷயங்கள் நமக்குத் தோன்றும் வழிகள்" என்று மெய்யியலாளரும் அறிதிற அறிவியலாளருமான டேனியல் டென்னெட் கூறியுள்ளது இங்கு நோக்கத்தக்கது.[2]

தன்மையங்களின் முக்கியத்துவம் குறித்த விவாதத்தின் பெரும்பகுதி இந்தச் சொல்லின் வரையறையைச் சார்ந்தே உள்ளது. மேலும், தன்மையங்களின் சில அம்சங்கள் சில மெய்யியல் அறிஞர்களால் ஏற்கப்பட்டு அல்லது வலியுறுத்தப்பட்டும் மேலும் சில அம்சங்கள் வேறு சில மெய்யியல் அறிஞர்களால் மறுக்கப்பட்டும் இருப்பதைக் காண முடிகிறது. இதன் விளைவாக, பல்வேறு வரையறைகளின் கீழ் தன்மையங்களின் தன்மை மற்றும் இருப்பானது சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. டேனியல் டென்னெட் போன்ற சில உள மெய்யியல் அறிஞர்கள் தன்மையம் என்ற ஒன்று இல்லை என்றும் அவற்றின் இருப்பு என்பது நரம்பியல், இயற்கையியல் ஆகியவற்றிற்குப் பொருந்தாது என்றும் வாதிடுகின்றனர்.[3][4] ஜெரால்ட் எடெல்மேன், அன்டோனியோ டமாசியோ, விளையனூர் இராமச்சந்திரன், ஜியுலியோ டோனோனி, கிறிஸ்டோஃப் கோச், ரோடோல்ஃபோ லினாஸ் போன்ற சில நரம்பு அறிவியல் அறிஞர்களும் நரம்பியல் நிபுணர்களும் தன்மையங்கள் இருப்பதாகவும், அறிவியலிலிருந்து அவற்றை அகற்றுவதற்கான முயற்சி என்பது அறிவியலின் உள்ளடக்கம் குறித்த சில அறிஞர்களது தவறான புரிதலை அடிப்படையாகக் கொண்டது என்றும் கருதுகின்றனர்.[5][6][7][8][9][10][11][12][13][14] மனம், அல்லது ஒருமைநிலைவாதம், என்னும் மெய்யியல் வரையறைக்குள், தன்மையங்கள் என்பது கிழக்கத்திய மெய்யியல் மற்றும் பாரம்பரியத்தில் காணப்படும் ஞானம் என்னும் சிந்தனையோடு ஒத்ததாகக் கருதப்பட்டு ஒப்பிடப்படுகிறது.

Remove ads

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads