பிரிக் நாடுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரிக் (BRIC) அல்லது பிரிக் நாடுகள் (BRIC countries) என்பது பொருளாதார வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள வளரும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவற்றின் கூட்டமைப்பைக் குறிக்கும்.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
”பிரிக்” எனும் சுருக்கத்தை கோல்ட்மேன் சாச்ஸ்[1][2] நிறுவனத்தின் உலகப் பொருளாதார ஆய்வு வல்லுநர் ஜிம் ஓ’நீல் என்பார் 2001 ஆம் ஆண்டு உருவாக்கினார். மெக்சிகோ, தென் கொரியா ஆகிய நாடுகள் மட்டுமே பிரிக் நாடுகளுடன் ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்று வருபவையாக உள்ளன. ஆனால் 2005 ஆம் ஆண்டு ஆய்வின்படி இந்த இரு நாடுகளும் வளர்ச்சியடைந்தவையாக கருதப்பட்டதால் அவற்றை பிரிக் நாடுகள் பட்டியலில் அவர் சேர்க்கவில்லை.[3].
வேகமாக வளர்ந்து வருவதால், தற்போதுள்ள பணக்கார நாடுகளின் மொத்த பொருளாதார வளத்தைக் காட்டிலும் அதிகமான வளர்ச்சியை, 2050 ஆம் ஆண்டில் பிரிக் நாடுகள் பெற்றிருக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் தெரிவிக்கிறது. இந்த நான்கு நாடுகளும் உலகின் நிலப் பரப்பில் 25 சதவீதத்துக்கு மேலும், மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கு மேலும் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.[4][5]
பிரிக் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்று தனிப்பெரும் பொருளாதார கூட்டமைப்பாகவோ அல்லது வணிக கூட்டணியாகவோ உருவெடுக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் கருதவில்லை.[6] மாறாக, அவை ஒரு அரசியல் குழுவாக அல்லது கூட்டணியாக உருவெடுத்து, அதன் மூலம் தங்களுடைய பொருளாதார வலுவை மிகச் சிறந்த புவிசார் அரசியல் அமைப்பாக மாற்றுவதற்கே முனைப்பாக உள்ளன என்று அந்த அமைப்புக் கூறுகிறது..[7][8]
2009 ஆம் ஆண்டு, சூன் மாதம் 16ம் நாள் பிரிக் நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய முதல் உச்சி மாநாட்டை எகடேரின்பர்க் என்ற ரஷ்ய நாட்டின் நகரில் நடத்தினர். அப்போது பல்முனை உலக ஒழுங்கை ஏற்படுத்த அறைகூவல் விடுத்தனர்.[9]
Remove ads
பிரிக் கொள்கை

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும், திறனையும் பார்க்கும்போது அவை 2050 ஆம் ஆண்டு உலகின் நான்கு பொருளாதார வல்லரசுகளாக உருவாகும் வாய்ப்புள்ளது என்று கோல்ட்மேன் சாச்ஸ் வாதிடுகிறது.[10] இந்த நாடுகள் உலகின் 25 சதவீத மக்கள் தொகையையும், 40 சதவீத பரப்பளவையும், 15.435 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் (வாங்கு திறன் சமநிலை கணக்கீடு) கொண்டுள்ளன. இவை அனைத்தையும் நோக்கும்போது உலக அரங்கில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் எனலாம். வளரும் நாடுகளில் இந்த நான்கு நாடுகளும் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி பெற்று வருகின்றன.
பிரிக் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்று அரசியல் கூட்டமைப்பு என்றோ, ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) போன்று வணிக கூட்டமைப்பு என்றோ கோல்ட்மேன் சாச்ஸ் கூறவில்லை. இருந்தபோதிலும், அவை தங்களுக்குள் ஒருவித அரசியல் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக, முக்கியமான வணிக உடன்பாடுகளில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், இந்தியாவுடனான அணு ஆற்றல் உடன்பாடு போன்றவற்றில் அமெரிக்காவிடம் இருந்து அரசியல் சலுகைகளைப் பெறுவதற்கு அரசியல் ரீதியில் தங்களுக்குள் ஒத்துழைக்கின்றன என்று கோல்ட்மேன் சாச்ஸ் கூறுகிறது
(2003) பிரிக் உடன் கனவு காணல்: 2050ஐ நோக்கி
உலக முதலாளித்துவத்திற்கு ஏற்ப, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தங்களது அரசியல் ஒருங்கியத்தை மாற்றியுள்ளன என்று பிரிக் கொள்கை விளக்குகிறது.[11][12] இந்தியா, சீனா ஆகியவை உற்பத்தி செய்த பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் முதன்மையான நாடுகளாகவும், பிரேசில், ரஷ்யா ஆகியவை மூலப் பொருட்களை அளிக்கும் நாடுகளாகவும் இருக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் எதிர்பார்க்கிறது. இதனால் பிரிக் நாடுகளிடையே வலுவான ஒத்துழைப்பு இருக்கும். ஏனெனில் பிரேசில், ரஷ்யா ஆகியவை இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூலப்பொருட்களை அளிக்கும். இதனால் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இதன் மூலம் மிக ஆற்றல் வாய்ந்த பொருளாதாரக் கூட்டமைப்பாக பிரிக் நாடுகள் இருக்கும்.
பிரேசிலில் சோயாவும் இரும்புத் தாதும், ரஷ்யாவில் பெட்ரோலியப் பொருட்களும் எரிவாயும் அதிகளவில் உள்ளன. பனிப்போர் முடிவுக்குப் பின் அல்லது அதற்கு முன்பே பிரிக் நாடுகள் தங்களது பொருளாதார அல்லது அரசியல் சீரமைப்பு நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் நுழைந்தன. போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையிலும் தங்கள் நாட்டில் கல்வி, அன்னிய நேரடி முதலீடு, உள்நாட்டு தொழில் முனைதல், உள்நாட்டு நுகர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தின.
(2004) பின் தொடரும் அறிக்கை

முதன்முறையாக வெளியிட்ட பிரிக் நாடுகள் குறித்த ஆய்வின் பின்தொடர் அறிக்கையை 2004 ஆம் ஆண்டு கோல்ட்மேன் சாச்ஸ் உலகப் பொருளியல் ஆய்வுக் குழு வெளியிட்டது.[13] பிரிக் நாடுகளில், ஆண்டு வருமானம் 3,000 டாலர்கள் கொண்ட நபர்கள் எண்ணிக்கை அடுத்த மூன்றாண்டுகளில் இரண்டு மடங்காகவும், அடுத்த பத்தாண்டுகளில் 800 மில்லியன்களாகவும் இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. அதாவது, இந்த நாடுகளில் உள்ள நடுத்தர மக்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும் என்று மதிப்பிட்டது.
இந்நாடுகளில் 2025 ஆம் ஆண்டில் 15,000 டாலர்கள் வருமானம் பெறுவோர் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் மட்டுமின்றி ஆடம்பரப் பொருட்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என்பதை இதன் மூலம் அறியலாம். முதலில் சீனாவும் பின்னர் பத்தாண்டுகள் கழித்து இந்தியாவும் உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
பொருளாதார சமநிலையும் வளர்ச்சிக் கூறுகளும் பிரிக் நாடுகளை நோக்கி இயங்கினாலும் வளர்ந்த நாடுகளிலுள்ள தனிநபர்களின் பொருளாதார வளம் பிரிக் நாடுகளின் தனிநபர்களை விட அதிகமாகவே இருக்கும். 2025 ஆம் ஆண்டு அதிக மக்கள் தொகை கொண்ட ஆறு ஐரோப்பிய நாடுகளின் தனி நபர் வருமானம் 35,000 டாலர்களாக இருக்கும். அதே நேரம் பிரிக் நாடுகளில் 500 மில்லியன் நபர்கள் மட்டுமே 35,000 டாலர்கள் தனி நபர் வருமானம் உடையவர்களாக இருப்பர் என்று கோல்ட்மேன் சாச்ஸ் மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் மின் ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதில் திறனின்மை, மூலதனச் சந்தைகளில் பிரிக் நாடுகளின் போதுமான பிரதிநிதித்துவம் இன்மை ஆகியவை குறித்தும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகளின் மக்கள்தொகையானது இவற்றின் ஒட்டுமொத்த வளங்களை ஜி-6 நாடுகளை விட அதிகரிக்கச் செய்யும். ஆனால் தனிநபர் வருமானம் தற்போதைய வளர்ந்த நாடுகளைவிடக் குறைவாகவே இருக்கும் என்று அந்த அறிக்கை கணிக்கிறது. இதனால் பிரிக் நாடுகளின் மிகப் பெரிய சந்தைகளைப் பயன்படுத்த முனையும் பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படும். உலக அரங்கில் இந்தியாவும் சீனாவும் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தங்களின் பங்களிப்பை அதிகரித்து வருகின்றன. இதை வளர்ந்த நாடுகள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மெக்சிகோ, தென் கொரியா ஆகியவை மட்டுமே பிரிக் நாடுகளுடன் போட்டியிடும் அளவு திறனுடையவை ஆக இருந்தன. ஆனால் அவை வளர்ந்த நாடுகள் என முடிவு செய்ததால், பிரிக் நாடுகள் பட்டியலில் அவற்றை சேர்க்கவில்லை என்று 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கோல்ட்மேன் சாச்ஸ் விளக்கியது.
(2007) பின்தொடரும் அறிக்கை-2

இந்தியாவின் உயர்ந்துவரும் வளர்ச்சித் திறன் குறித்து துசார் பொட்டர், இவா யி ஆகியோர் இந்த ஆய்வறிக்கையில் விளக்கினர். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எவ்வாறிருந்தது என்பதை இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு கணித்தனர். தாங்கள் முன்னர் மதிப்பிட்டதை விட, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் தாக்கம் பெரிதாகவும், வேகமாகவும் இருக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் கூறியது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்றவற்றால் இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் அதிக வளம் பெருவார்கள் என்றும் அவ்வறிக்கை கூறியது.[14]
2007 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட கணக்கின்படி, அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு, நிலைத்த வளர்ச்சி போன்றவை காரணமாக 2007 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி டாலர் அளவுகளில் நான்குமடங்கு அதிகமாக இருக்கும். 2050 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதாரத்தை விட அதிக வளர்ச்சி பெற்றிருக்கும். 2032 ஆம் ஆண்டு இந்தியா ஜி-7 நாடுகளின் வளர்ச்சியை முந்திச் செல்லும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.[14]
Remove ads
பிரிக் புள்ளிவிவரம்
தி எகானமிஸ்ட் என்ற ஆங்கில பொருளியல் மாத இதழ் ஆண்டு தோறும் அனைத்து நாடுகளின் முக்கியமான பொருளியல் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டிலிருந்து பிரிக் நாடுகள் குறித்த புள்ளி விவரங்களையும் வெளியிடுகிறது.
உலகப் பெரும் பொருளாதார நாடுகள்
Remove ads
பிரிக்கின் எதிர்காலம்
2006 முதல் 2050 ஆம் ஆண்டு வரையான உலகின் முதல் 22 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பண மதிப்பில்) புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள அட்டவணை உலகின் முதல் 22 நாடுகளின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பண மதிப்பில்) புள்ளிவிவரம் ஆகும். 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புள்ளிவிவர அட்டவணையில் பிரிக் நாடுகள் ஆழ்ந்த வண்ணப் பட்டையால் குறிக்கப்பட்டுள்ளன.
Remove ads
பிரிக் மாநாடு

பிரிக் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அளவிலான மாநாடு மே 16, 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவில் எகடேரின்பர்க் எனும் நகரில் நடைபெற்றது.[16] பின்னர் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் இடையேயான அலுவலர் ரீதியிலான முதல் உச்சி மாநாடு சூன் 16, 2009 ஆம் ஆண்டு எகடேரின்பர்கில் நடைபெற்றது.[17] இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, டிமிட்ரி மெத்வதேவ், மன்மோகன் சிங், ஹூ ஜின்டாவோ ஆகியோர் பங்கேற்றனர்.[18]
நடப்பு பொருளாதார சூழலை எவ்வாறு கையாள்வது, தங்களுக்குள் எவ்வாறு பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பது, நிதி நிறுவன சீரமைப்பை எப்படி ஊக்குவிப்பது என்று இந்த நான்கு நாடுகளும் அப்போது ஆலோசனை செய்தன.[17][18] பிரிக் போன்ற வளரும் நாடுகள் உலக நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் எவ்வாறு பங்கேற்பது என்றும் விவாதித்தன.[18] உலகளவிலான பரிமாற்றத்திற்காக நிலையான, கணிக்கக் கூடிய, பலவகைகளை உள்ளடக்கிய உலக நாணயம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று பிரிக் நாடுகள் கூட்டமைப்பு ஆலோசனை கூறின. உலக பண பரிமாற்றத்தில் அமெரிக்க டாலர் ஆதிக்கத்தின் மீது நேரடித் தாக்குதலாக இந்த ஆலோசனை அமைந்தது.[19][20]
இந்த மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பு அனைத்துலக நாணய நிதியத்துக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை பிரேசில் வழங்கியது.[21] அந்நாடு இதற்கு முன் இந்த அமைப்பிடமிருந்து கடன் பெற்றிருந்தது. இருப்பினும் அந்த நிதியத்துக்கு கடன் கொடுக்கும் அளவு பிரேசிலின் பொருளாதார நிலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.[21][21] இதே போல் சீனா 50.1 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், ரஷ்யா 10 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் அனைத்துலக நாணய நிதியத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.[21][21]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads