தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சர்வதேச அமைப்பு From Wikipedia, the free encyclopedia

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
Remove ads

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு[6] (Association of Southeast Asian Nations),[7], அல்லது ஆசியான் (ASEAN /ˈɑːsi.ɑːn/ AH-see-ahn,[8] /ˈɑːzi.ɑːn/ AH-zee-ahn)[9][10], என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும். இதனை ஆகஸ்ட் 8, 1967 இல் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து அமைத்தன[11]. அதன் பின்னர் புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டன. பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி பேணல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பத்தை வழங்குதல் என்பன இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் அடங்குகின்றன[12].

விரைவான உண்மைகள் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்புAssociation of Southeast Asian Nations, தலைமையகம் ...

ஆசியான் அமைப்பானது 4.46 மில்லியன் km2 நிலப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இது மொத்த உலகின் பரப்பளவின் 3% ஆகும். இப் பிராந்தியத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 600 மில்லியனாக உள்ளது. இது மொத்த உலகின் மக்கள் தொகையின் 8.8% ஆகும். ஆசியான் அமைப்பின் கடற் பரப்பளவானது இதன் நிலப் பரப்பளவை விட மூன்று மடங்கு பெரியதாகும். 2011 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஒருங்கிணைந்த மொத்தத் தேசிய உற்பத்தியானது 2 டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்தது.[13] ஆசியான் அமைப்பை தனி அமைப்பாகக் கருதினால், இது உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளதார அமைப்பாகக் காணப்படும்.

Remove ads

வரலாறு

ஆசியான் கூட்டமைப்பிற்கு முன்னர் தோற்றம் பெற்ற அமைப்பே "தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு" (Association of Southeast Asia) ஆகும். இது பொதுவாக ASA என அழைக்கப்பட்டது. இக் கூட்டமைப்பு பிலிப்பீன்சு, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கி 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாங்கொக்கிலுள்ள தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சரகத்தில் ஒன்றுகூடி "ஆசியான் பிரகடனத்தில்" கையெழுத்திட்டதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பு 1967 ஆகத்து 8 இல் நிறுவப்பட்டது. இந்த ஆசியான் பிரகடனமே பொதுவாக "பாங்கொக் பிரகடனம்" என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் ஆடம் மாலிக், பிலிப்பீன்சின் நார்க்கிசோ ராமொஸ், மலேசியாவின் அப்துல் ரசாக், சிங்கப்பூரின் சி. இராசரத்தினம் மற்றும் தாய்லாந்தின் தனட் கோமன் ஆகிய இந்த ஐவரே இப்பிரகடனத்தில் கையெழுத்திட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்களாவார். இவர்களே இந்த ஆசியான் கூட்டமைப்பின் நிறுவுனர்கள் என அழைக்கப்படுகின்றனர்.[14]

நோக்கங்கள்

ஆசியான் பிரகடனத்தின்படி ஆசியான் கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டதன் நோக்கங்களாவன;

  1. கூட்டு முயற்சிகளின் மூலம் தென்கிழக்காசிய_நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தலும் சமூக கலாச்சார மேம்பாட்டை ஏற்படுத்துதலும்.
  2. நீதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளிப்பதன் மூலமும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலமும் பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துதல்.
  3. தீவிர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியின் மூலம் பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துதல்.
  4. கல்வி, தொழில், தொழில்நுட்ப, மற்றும் நிர்வாகத் துறைகளில், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு உதவுதல்.
  5. அவர்களின் விவசாயம் மற்றும் கைத்தொழிற் பயன்பாடு, வர்த்தகத்தினை விரிவாக்குதல், போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்துதல் என்பவற்றில் கூடிய கவனமெடுத்தல்.
  6. தென்கிழக்கு ஆசிய கற்கைநெறிகளை மேம்படுத்துதல்.
  7. சமமான நோக்கங்களைக் கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புக்களுடன் நெருக்கமான நன்மைமிக்க உறவுகளை ஏற்படுத்துதல்.[15][16]

தொடர்ந்த விரிவாக்கம்

புரூணை நாடானது 1 ஜனவரி 1984 இல் சுதந்திரமடைந்ததன் பின்னர் ஒரு வாரத்தில் 8 ஜனவரி 1984 இல் இக்கூட்டமைப்புடன் ஆறாவது உறுப்பினராக இணைந்துகொண்டதன் மூலம் இக் கூட்டமைப்பின் வளர்ச்சி ஆரம்பித்தது.[17] 28 ஜூலை 1995 இல் வியட்நாம் இக்கூட்டமைப்புடன் ஏழாவது உறுப்பினராக இணைந்துகொண்டது.[18] வியட்நாம் இணைந்து இரண்டு வருடங்களின் பின்னர் 23 ஜூலை 1997 இல் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டன.[19] கம்போடியாவும் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுடன் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொள்ள இருந்த போதிலும் அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் போராட்டத்தின் காரணமாக இணைந்துகொள்ள முடியவில்லை. பின்னர் 30 ஏப்ரல் 1999 இல் கம்போடியா தனது அரசியல் உறுதிப்பாட்டின் பின்னர் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டது.[19][20]

1990 களில் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் நாடுகளுக்கிடையிலான மேலதிக ஒருங்கிணைப்பும் அதிகரித்தது. 1990 ஆம் ஆண்டு கிழக்கு ஆசியாவின் பொருளாதாரக் குழுவை உருவாக்க மலேசியா தீர்மானித்தது.[21] இதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களையும் சீனக் குடியரசு, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளையும் உள்ளடக்கி ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்தலை முழு ஆசியப் பிராந்தியத்திலும் கட்டுப்படுத்துதலே இக் குழுவின் நோக்கமாகும்.[22][23] ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் ஜப்பானி இருந்தும் வந்த பாரிய எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது.[22][24] இத்திட்டம் தோல்வியில் முடிந்த போதிலும் அங்கத்துவ நாடுகள் மேலதிக ஒருங்கிணைப்பிற்குத் தமது பணியைத் தொடர்ந்து 1997 இல் ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three) எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

கிழக்குத் திமோரும் பப்புவா நியூ கினியாவும்

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டின் போது கிழக்குத் திமோர் ஆசியான் கூட்டமைப்பில் பதினோராவது அங்கத்தவராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பக் கடிதத்தைக் கையளித்தது. இந்தோனேசியா கிழக்குத் திமோருக்கு இதயங்கனிந்த வரவேற்பை தெரிவித்தது.[25][26][27]

பப்புவா நியூகினியா 1976 ஆம் ஆண்டு பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டதுடன் 1981 ஆம் ஆண்டில் விசேட பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது.[28] பப்புவா நியூகினியா ஒரு மெலனேசியன் அரசாகும்.

சுதந்திர வர்த்தகம்

2007 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பு தனது 40 ஆவது வருட நிறைவு விழாவையும் ஐக்கிய அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளின் 30 வருடப் பூர்த்தியையும் கொண்டாடியது.[29] 2013 ஆம் ஆண்டளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளை ஏற்ப்டுத்திக் கொள்வதென 26 ஓகஸ்ட் 2007 இல் தீர்மானிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டில் ஆசியான் பொருளாதார சமூகத்தை நிறுவுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.[30][31]

27 பெப்ரவரி 2009 இல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது 12 நாடுகளினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2000 தொடக்கம் 2020 வரையான வருடக் காலப் பகுதியில் 48 பில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[32][33] ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளும் அவர்களின் ஆறு பெரிய வர்த்தகப் பங்காளிகளான ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் 26-28 பெப்பிரவரி 2013 காலப்பகுதியில் இந்தோனேசியாவின் பாலி நகரில் பிராந்திய பரந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.[34]

Remove ads

ஆசியான் வழி

Thumb
ஜகார்த்தாவில் உள்ள ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளின் கொடிகள்.

அடிப்படை கோட்பாடுகள்

  • சுதந்திரம், இறைமை, சமத்துவம், பிராந்திய ஒருமைப்பாடு, மற்றும் அனைத்து அங்கத்துவ நாடுகளின் தேசிய அடையாளங்களின் மீதான பரஸ்பர மரியாதை.
  • வெளித் தலையீடு, நாசவேலை அல்லது பலாத்காரத்தில் இருந்து விடுபட்டுத் தன்னுடைய தேசிய இருப்புக்கு வழிவகுத்தல் ஒவ்வொரு அரசினதும் உரிமை.
  • மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கை.
  • அமைதியான முறையில் வேறுபாடுகள் அல்லது பிணக்குகளை தீர்த்தல்.
  • படை அச்சுறுத்தல் அல்லது பயன்பாட்டை நிராகரித்தல்.
  • அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் திறமையான ஒத்துழைப்பு.

விமர்சன வரவேற்பு

ஆசியான் வழி அமைப்பின் உருவாக்க நிலைகளின் சூழ்நிலை சமகால அரசியல் யதார்த்தத்தில் இருந்து மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

Remove ads

கூட்டங்கள்

ஆசியான் உச்சி மாநாடுகள்

Thumb
ஜகார்த்தாவிலுள்ள 2011 ஆசியான் கூட்டமைப்பிற்கு வரவேற்கும் சுவரொட்டி.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பால் நடாத்தப்படும் கூட்டங்கள் ஆசியான் உச்சி மாநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறான ஆசியான் உச்சி மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பிராந்தியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் அவற்றைத் தீர்க்கவும் சந்தித்துக்கொள்வதோடு, ஆசியான் பிராந்தியத்திற்குள் உட்படாத வேற்று நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வெளிநாடுகளுடனான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர்.

ஆசியான் தலைவர்களின் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு முதன்முதலாக இந்தோனேசியாவின் பாலி நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசியானின் மூன்றாவது உத்தியோகபூர்வ உச்சி மாநாடு பிலிப்பைன்சின் மணிலா நகரில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தென்கிழக்காசிய_நாடுகளின்_கூட்டமைபின் அரசுத் தலைவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.[35] தொடர்ச்சியாக 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நான்காவது உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள விருப்பமும் சம்மதமும் தெரிவித்ததையடுத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஆசியான் உச்சி மாநாடுகளை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.[35] அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில், இப்பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் அவசரப் பிரச்சினைகளை குறிப்பிடுவதற்காக வருடாந்தம் சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை தமது பெயரின் அகர வரிசைப்படி ஒவ்வொரு நாட்டிலும் நடாத்த உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்துக்கொண்டன. ஆனால் பர்மா நாடானது ஐக்கிய அமெரிக்காவாலும், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் காரணமாக 2006 ஆம் ஆண்டில் ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை நடாத்தும் உரிமையை 2004 ஆம் ஆண்டில் இழந்தது.[36]

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசியான் சாசனம் நடைமுறைக்கு வந்ததையடுத்து ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை வருடத்திற்கு இருமுறை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெறும். மாநாட்டின் வழக்கமான நடைமுறைகள் பின்வருமாறு;

மேலதிகத் தகவல்கள் ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாடுகள், எண் ...

பாங்கொக்கில் நடைபெற்ற ஐந்தாவது உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள், ஒவ்வொரு உத்தியோகபூர்வ உச்சி மாநாடுகளுக்கும் இடையில் சாதாரணமாக சந்தித்துக்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. :[35]

மேலதிகத் தகவல்கள் ASEAN Informal Summits, எண் ...

கிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடு

Thumb
கிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டின் பங்கேற்பாளர்கள்
  ஆசியான்
  ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three)
  ஆசியான் மற்றும் ஆறு (ASEAN Plus Six)
  பார்வையாளர்கள்

கிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது (EAS) ஆசியான் கூட்டமைப்பின் தலைமையுடன் கிழக்கு ஆசியா மற்றும் அப்பிராந்தியத்திலுள்ள 16 நாடுகளை உள்ளடக்கி ஒவ்வொரு வருடமும் கூட்டப்படும் ஒரு பரந்த ஆசிய அமைப்பாகும். இந்த உச்சிமாநாடானது வர்த்தகம், ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் பிராந்திய ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் நடாத்தப்படுகின்றது.

ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களான 10 நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளே இந்த உச்சிமாநாட்டின் அங்கத்துவ நாடுகளாகும். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை அண்ணளவாக உலகின் மக்கள் தொகையின் அரைப் பங்காகும். 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்யாவும், ஐக்கிய அமெரிக்காவும் 2011 ஆம் ஆண்டில் நடக்கும் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டிற்கு இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடன் பூரண அங்கத்தவர்களாகக் கலந்துகொள்ள உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.[37]

முதலாவது உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது கோலாலம்பூரில் 14 டிசம்பர் 2005 இல் நடைபெற்றது. அடுத்தடுத்த கூட்டங்கள் ஆசியான் தலைவர்களின் வருடாந்த சந்திப்பிற்குப் பின்னர் நடைபெற்றன.

சந்திப்பு நாடு நடாத்தப்பட்ட இடம் திகதி குறிப்பு
முதலாவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு  மலேசியா கோலாலம்பூர் 14 டிசம்பர் 2005 ரஷ்யா விருந்தினராகக் கலந்துகொண்டது.
இரண்டாவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு  பிலிப்பீன்சு செபு நகரம் 15 ஜனவரி 2007 13 டிசம்பர் 2006 இல் நடாத்தப்படவிருந்து பின்னர் திகதி மாற்றியமைக்கப்பட்டது

கிழக்காசிய ஆற்றல் பாதுகாப்பிற்கான செபு பிரகடனம்

மூன்றாவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு  சிங்கப்பூர் சிங்கப்பூர் 21 நவம்பர் 2007 காலநிலை மாற்றம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மீதான சிங்கப்பூர் பிரகடனம்[38]

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது

நான்காவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு  தாய்லாந்து சா-அம் மற்றும் ஹுவா ஹின் 25 ஒக்டோபர் 2009 இம் மாநாடு நடாத்தப்படவிருந்த இடம் மற்றும் காலம் என்பன அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டுப் பின்னர் 12 ஏப்ரல் 2009 இல் தாய்லாந்தின் பட்டாயாவில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநாடு நிகழவிருந்த இடத்தைத் தாக்கியதால் மாநாடு இரத்துசெய்யப்பட்டது. பின்னர் பூகெட் மாகாணத்தில் இருந்து இடம் மாற்றப்பட்டு[39] சா-அம் மற்றும் ஹுவா ஹின் பிரதேசங்களில் ஒக்டோபர் 2009 இல் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது.[40]
ஐந்தாவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு  வியட்நாம் ஹனோய் 30 ஒக்டோபர் 2010[41] ரஷ்யாவும், ஐக்கிய அமெரிக்காவும் 2011 ஆம் ஆண்டில் நடக்கும் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டிற்கு இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடன் பூரண அங்கத்தவர்களாகக் கலந்துகொள்ள உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.[37]
ஆறாவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு  இந்தோனேசியா பாலி 19 நவம்பர் 2011 ஐக்கிய அமெரிக்காவும், ரஷ்யாவும் உச்சிமாநாட்டில் இணைந்துகொண்டன.
ஏழாவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு  கம்போடியா புனோம் பென் 2012

ஞாபகார்த்த உச்சிமாநாடு

ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடொன்றினால் ஆசியான் கூட்டமைப்பிற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடு ஒன்றிற்கும் இடையில் ஒரு மைல்கல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் பொருட்டு நடாத்தப்படும் மாநாடே ஞாபகார்த்த உச்சிமாநாடு எனப்படும். இம் மாநாட்டை நடாத்தும் நாடு இந்த மாநாட்டிற்கு ஆசியான் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தமக்கிடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை பற்றிக் கலந்துரையாடும்.

சந்திப்பு நடாத்திய நாடு அமைவிடம் திகதி குறிப்பு
ஆசியான்-ஜப்பான் ஞாபகார்த்த உச்சிமாநாடு  சப்பான் தோக்கியோ 11, 12 டிசம்பர் 2003 ஆசியானுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உறவு ஆரம்பிக்கப்பட்டு 30 ஆவது வருடத்தின் நிறைவைக் கொண்டாடும் பொருட்டு இந்த மாநாடு நடாத்தப்பட்டது. இந்த மாநாடே ஆசியானுக்கும் ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடு ஒன்றிற்கும் இடையில் நடாத்தப்பட்ட முதலாவது ஆசிய உச்சிமாநாடாகும்.
ஆசியான்-சீனா ஞாபகார்த்த உச்சிமாநாடு  சீனா நன்னிங் 30, 31 ஒக்டோபர் 2006 ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையில் உறவு ஆரம்பிக்கப்பட்டு 15 ஆவது வருடத்தின் நிறைவைக் கொண்டாடும் பொருட்டு இந்த மாநாடு நடாத்தப்பட்டது.
ஆசியான்-கொரியக் குடியரசு ஞாபகார்த்த உச்சிமாநாடு  தென் கொரியா ஜேயு டோ 1, 2 ஜூன் 2009 ஆசியானுக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையில் உறவு ஆரம்பிக்கப்பட்டு 20 ஆவது வருடத்தின் நிறைவைக் கொண்டாடும் பொருட்டு இந்த மாநாடு நடாத்தப்பட்டது.
ஆசியான்-இந்தியா ஞாபகார்த்த உச்சிமாநாடு  இந்தியா புது தில்லி 20, 21 December 2012 ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவு ஆரம்பிக்கப்பட்டு 20 ஆவது வருடத்தின் நிறைவைக் கொண்டாடும் பொருட்டு இந்த மாநாடு நடாத்தப்பட்டது.

பிராந்திய அமைப்பு

Thumb
ஆசியானின் முழுமையான உறுப்பினர்கள்.
ஆசியானின் அவதானிப்பாளர்கள்
ஆசியான் வேட்பாளர் உறுப்பினர்கள்.
ஆசியான் மற்றும் மூன்று.
கிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடு
ஆசியான் பிராந்திய அமைப்பு

ஆசியான் பிராந்திய அமைப்பு (ARF) என்பது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இயங்கும் முறையான, உத்தியோகபூர்வ, பன்முக அமைப்பாகும். 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவ்வமைப்பில் 27 நாடுகள் அங்கத்துவம் வகித்தனர். உரையாடல்களையும் ஆலோசனைகளையும் மேற்கொள்ளல், நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்தல் என்பன ஆசியான் பிராந்திய அமைப்பின் நோக்கங்களாகும்.[42] ஆசியான் பிராந்திய அமைப்பின் சந்திப்பு முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ்வமைப்பின் தற்போதைய அங்கத்தவர்கள் பின்வருமாறு: ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, சீனக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, மொங்கோலியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், பப்புவா நியூகினியா, ரஷ்யா, கிழக்குத் திமோர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை.[43]

வேறு சந்திப்புக்கள்

மேற்குறிப்ப்டப்பட்ட கூட்டங்களுக்கு மேலதிகமாக ஏனைய வழக்கமான[44] சந்திப்புக்களும் நடாத்தப்படுகின்றன.[45] இவற்றுள் ஆசியான் அமைச்சர்கள் கூட்டமும்[46] ஏனைய சிறிய கூட்டங்களும் உள்ளடங்கும்.[47] இக் கூட்டங்கள் பொதுவாக பாதுகாப்பு[44] அல்லது சுற்றுச்சூழலைப்[44][48] பற்றி அமைந்திருப்பதுடன் இக்கூட்டங்களில் அரசுத் தலைவர்களுக்குப் பதிலாக அமைச்சர்களே கலந்துகொள்வார்கள்.

மேலும் மூன்று

ஆசியான் மற்றும் மூன்று என்பது ஆசியான் கூட்டமைப்பு நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை இணைந்து நடாத்தும் ஒரு மாநாடாகும். இது ஒவ்வொரு ஆசியான் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டின் போதும் முக்கிய நிகழ்வாக நடைபெறும். இன்றுவரை சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் சுதந்திர வர்த்தக பகுதியை (FTA) உருவாக்கவில்லை. சுதந்திர வர்த்தக பகுதியை (FTA) உருவாக்குதல் குறித்த கூட்டமானது 2012 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்றது.[49]

ஆசியா-ஐரோப்பா சந்திப்பு

ஆசியா-ஐரோப்பா சந்திப்பு (ASEM) ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் கூட்டுறவைப் பலப்படுத்தும் முகமாக 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விசேடமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவே இச்சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.[50] ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக 45 ASEM பங்காளர்களில் ஒருவரான செயலாளர் கலந்துகொள்வார். அத்தோடு இச்சந்திப்போடு இணைந்து நடக்கும் ஆசியா - ஐரோப்பா அறக்கட்டளை (ASEF) என்ற சமூக கலாச்சார அமைப்பின் கூட்டத்திலும் ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக ஒரு பிரதிநிதி அரசாங்க குழுவில் நியமிக்கப்படுவார்.

ஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு

ஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு என்பது ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் ஒரு சந்திப்பாகும்.

ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின் 44 ஆவது வருடாந்த சந்திப்பானது 16 ஜூலை ]]2011]] தொடக்கம் 23 ஜூலை 2011 வரை பாலி நகரில் நடைபெற்றது.இச்சந்திப்பில் இந்தோனேசியா ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் குடிமக்களுக்கு ஆசியான் பிராந்தியத்திற்குள்ளான பயணங்களுக்கு ஒன்றுபட்ட ஆசியான் பயண விசாவை முன்மொழிந்தது.[51] 45 ஆவது வருடாந்த சந்திப்பானது கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெற்றது. தென் சீனக் கடலின் உரிமை தொடர்பான சீனா மற்றும் அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட கருத்து முரண்டாடுகள் காரணமாக ஆசியான் கூட்டமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக இச்சந்திப்பின் முடிவில் இராஜதந்திர அறிக்கை அமைப்பினால் வெளியிடப்படவில்லை.

Remove ads

பொருளாதார சமூகம்

ஆசியான் கூட்டமைப்பின் உறுதியான பிராந்திய கூட்டுறவிற்கு ஆதாரமாக விளங்கும் முக்கிய மூன்ரு தூண்களாக பாதுகாப்பு, சமூக கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு என்பன உள்ளன.[52] ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் பொருட்டு 2015 ஆம் ஆண்டு ஆசியான் பொருளாதார சமூகத்தை (AEC) உருவாக்கின.[53] 1989 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிய்ல் ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சியாக சிங்கப்பூர் 6.73 சதவீதமாகவும், மலேசியா 6.15 சதவீதமாகவும், இந்தோனேசியா 5.16 சதவீதமாகவும், தாய்லாந்து 5.02 சதவீதமாகவும், பிலிப்பைன்ஸ் 3.79 சதவீதமாகவும் இருந்தன. இந்தப் பொருளாதார வளர்ச்சியானது ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் சராசரிப் பொருளாதார வளர்ச்சியான 2.83 சதவீதத்திலும் அதிகமாகும்.[54]

ஆசியானின் ஆறு பிரதானமானவர்கள்

ஆசியான் கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகளின் பொருளாதாரத்திலும் பார்க்கப் பலமடங்கு வளர்ச்சியடைந்த ஆறு பெரிய பொருளாதார நாடுகளே ஆசியானின் ஆறு பிரதானமானவர்கள் என அழைக்கப்படுகின்றன.

நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி (பட்டியல்) மொத்த தேசிய உற்பத்தி
 இந்தோனேசியா895,854,000,0001,211,000,000,000
 தாய்லாந்து376,989,000,000602,216,000,000
 மலேசியா307,178,000,000447,980,000,000
 சிங்கப்பூர்267,941,000,000314,906,000,000
 பிலிப்பீன்சு257,890,000,000416,678,000,000
 வியட்நாம்137,681,000,000320,450,000,000

வெளிநாட்டு நேரடி முதலீடு

2009 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பின் வெளிநாட்டு நேரடி முதலீடானது 37.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காகி 75.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. ஆசியான் கூட்டமைப்பின் 22 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்றது. அடுத்ததாக 16 சதவீதம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளிடமிருந்தும் ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்தும் கிடைக்கப் பெறுகின்றது.

உள்ளார்ந்த ஆசியான் பயணம்

ஆசியான் நாடுகளிடையே இலவச விசா சேவை அறிமுகம் செய்துவைக்கப்பட்டதால் உள்ளார்ந்த ஆசியான் பயணங்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்தது. 2010 ஆம் ஆண்டில் ஆசியான் அங்கத்துவ நாடுகளின் சுற்றூலாப் பயணிகளின் எண்ணிக்கையான 73 மில்லியனில் 47 சதவீதம் அல்லது 34 மில்லியன் சுற்றூலாப் பயணிகள் வேறோர் ஆசிய நாட்டிலிருந்து வந்தவர்களாவார்கள்.[55]

உள்ளார்ந்த ஆசியான் வர்த்தகம்

2010 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியின் வரையில் உள்ளார்ந்த ஆசியான் வர்த்தகமானது மிக்கக் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகின்றது. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஆசியான் கூட்டமைப்பினுள் உள்ளடங்காத நாடுகளுக்கே அதிகமாக எற்றுமதியை மேற்கொண்டன. எனினும் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுள் தமது ஏற்றுமதியில் லாவோஸ் 80 வீதத்தையும் மியான்மார் 50 வீதத்தையும் வேறோர் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாட்டுக்கு எற்றுமதி செய்தது.[56]

Remove ads

சாசனம்

Thumb
ஜலன் சிசிங்கமங்கராஜா இல.70A, தெற்கு ஜகார்த்தா, இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஆசியான் செயலகம்.

ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாணியிலான சமூகத்தை நோக்கி நகரும் நோக்குடன் கையெழுத்திட்ட ஆசியான் சாசனத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் பொருட்டு 15 டிசம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஒன்றுகூடினார்கள்.[57] இந்த ஆசியான் சாசனம் ஆசியான் கூட்டமைப்பை ஒரு சட்ட அமைப்பாக மாற்றியதுடன் 500 மில்லியன் மக்கள் சூழ்ந்துள்ள இப்பிராந்தியத்தில் ஒரு சுதந்திர வர்த்தக பகுதியை உருவாக்குதல் அதன் இலக்காக அமைந்தது.

Remove ads

கலாசார நடவடிக்கைகள்

ஆசியான் பிராந்தியத்தை மேலும் ஒருங்கிணைக்கும் பொருட்டு ஆசியான் கூட்டமைப்பு பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இவற்றுள் விளையாட்டுக்கள், கல்வி நடவடிக்கைகள் என்பவற்றுடன் எழுத்தாளர்களுக்கான விருதுகளும் உள்ளடங்குகின்றன. ஆசியான் பல்கலைக்கழக வலையமைப்பு, ஆசியான் உயிர்ப் பல்வகைமைக்கான மையம், ஆசியான் சிறந்த விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்பவியலாளர் விருது, சிங்கப்பூரின் அனுசரணையில் வழங்கப்படும் ஆசியான் உதவித்தொகை என்பன இவற்றிற்குச் சில உதாரணங்களாகும்.

Remove ads

கல்வி மற்றும் மனித மேம்பாடு

எழுத்தறிவு வீதம்

பொதுவாக எழுத்தறிவு என்பது ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.[58] ஆசியான் நாடுகளில் ஆறு நாடுகள் 2000 ஆம் ஆண்டளவில் 100% வீதத்தை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளன. 1990 களில் ஏற்படுத்தப்பட்ட கட்டாய ஆரம்க் கல்வியே இந்த எழுத்தறிவு வளர்ச்சிக்குக் காரணமாகும்.[59][60]

மேலதிகத் தகவல்கள் நாடு, வருடம் (மிக அண்மையில்) ...

வயது வந்தோருக்கான (15+) எழுத்தறிவு வீதம் பல நாடுகளில் உயர்வாக உள்ளது. ஆனால் இரு நாடுகளின் வயது வந்தோருக்கான எழுத்தறிவு வீதம் 90% இற்கு அண்மித்துக் காணப்படுகின்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எழுத்தறிவு வீதத்தில் சிறு வித்தியாசத்தை காணக்கூடியதாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எழுத்தறிவு வீதம் கம்போடியாவில் 14% ஆகவும் லாவோசில் 19% ஆகவும் உள்ளது.[61]

Remove ads

விளையாட்டுக்கள்

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் பொதுவாக எஸ்.ஈ.ஏ விளையாட்டுக்கள் (SEA Games) என அழைக்கப்படுகின்றன. இது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்க தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) மற்றும் ஆசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழும் நடைபெறுகின்றன.

ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்

Thumb
ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்களின் சின்னம்.

ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள் என்பது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியாகும். இது ஒவ்வொரு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்களின் பின்னரும் நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்கள் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பின்னர் தோற்றம் பெற்றதுடன் இவ்விளையாட்டுக்களில் மாற்றுத்திறனாளிகளும், கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் பங்குபற்றுகின்றனர்.

ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம்

ஆசியான் கால்பந்து வெற்றிக்கிண்ணம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காற்பந்தாட்டப் போட்டியாகும். இப்போட்டிகள் ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பினால் நடாத்தப்படுவதுடன் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் அங்கீகாரம் பெறப்பட்டவையாகவும் உள்ளன. இப்போட்டிகளில் தென்கிழக்காசிய நாடுகளின் தேசியக் காற்பந்து அணிகள் பங்குபற்றுகின்றன. இப்போட்டிகள் 1996 ஆம் ஆண்டு டைகர் கிண்ணம் என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்டதுடன் பின்னர் ஆசிய பசிபிக் பிரெவெரீஸ் நிறுவனத்தின் அனுசரணை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது, இந்த காற்பந்து விளையிட்டு போட்டி, AFF Suzuki என பெயர்மாற்றம் கண்டுலுள்ளது. இவண்டிற்கான இறுதிக்கட்ட சுற்று வரும் 18 நவம்பர் முதல் 15 டிசம்பர் 2018 வரை நடைபெறும்.[62][63]

ஆசியான் 2030 பீபா உலகக் கோப்பை ஏல உரிமை

ஜனவரி 2011: ஆசியான் கூட்டமப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தோனேசியாவின் லம்பொக் நகரில் நடத்திய சந்திப்பை அடுத்து 2030 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை காற்பந்தை நடத்தும் உரிமையை ஒரு தனி அமைப்பாகப் பெறத் தீர்மானிக்கப்பட்டது.[64]

மே 2011: ஆசியான் 2030 ஆம் ஆண்டு உலகக்கோப்பை காற்பந்தை நடாத்த அதன் முயற்சியில் முன்னோக்கி செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இச் சந்திப்பு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் தொடர்ச்சியாக நடைபெற்றது.[65]

Remove ads

ஆசியான் போட்டிகள்

  • தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்
  • ஆசியான் பல்கலைக்கழக விளையாட்டுக்கள்
  • ஆசியான் பாடசாலை விளையாட்டுக்கள்
  • ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள்
  • ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம்
  • ஆசியான் அழகிப் போட்டி

குறிப்புகள்

  1. Address: Jalan Sisingamangaraja No.70A, Kebayoran Baru, South Jakarta.[66]
  2. தென்கிழக்காசியா, ஓசியானியா-இல் ஒரு கண்டம் தாண்டிய நாடு.
  3. உறுப்பு நாடுகளின் UNDP தரவுகளிலிருந்து சராசரி அண்மைக்கால மதிப்பீடாகக் கணக்கிடப்பட்டது.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads