யோசித்த ராசபக்ச

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யோசித்த ராசபக்ச (Yoshitha Rajapaksa) இலங்கையின் ரக்பி விளையாட்டு வீரரும், முன்னாள் கடற்படை வீரரும் ஆவார். இலங்கைக் கடற்படையில் இவர் லெப்டினண்ட் பதவி பகித்தவர். இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவின் இரண்டாவது மகனாவார். சி. எஸ். என் தொலைக்காட்சியின் உரிமையாளர்களில் ஒருவரான இவர் இலங்கை தேசிய ரக்பி ஒன்றிய அணித் தலைவராகவும், இலங்கைக் கடற்படையின் ரக்பி அணியின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.[1] 2016 சூன் 30 அன்று, யோசித்த ராசபக்ச, மற்றும் சி.எஸ். என் ஊடக நிறுவனத்தின் நான்கு மூத்த அதிகாரிகள் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பெப்ரவரி 11 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.[2]

விரைவான உண்மைகள் யோசித்த ராசபக்ச, சார்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

யோசித்த மகிந்த ராசபக்ச, சிராந்தி ராசபக்ச ஆகியோரின் இரண்டாவது மகனாவார்.[3] இவருக்கு நாமல், ரோகித்த என இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.[4] இவரது தந்தை-வழிப் பாட்டனார் டி. ஏ. ராசபக்ச விஜயானந்த தகநாயக்காவின் அரசில் அமைச்சராக இருந்தவர்.[5] தாய்வழிப் பாட்டனார் ஈ. பி. விக்கிரமசிங்க இலங்கைக் கடற்படையில் கொமடோராகப் பணியாற்றியவர்.[6]

யோசித்த கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி பயின்றார்.[7]

கடற்படையில் பணி

2006 ஆம் ஆண்டில் யோசித்த இலங்கைக் கடற்படையில் இணைந்தார். பயிற்சி முடிந்த பின்னர் பதவியேற்றம் பெற்று தந்தையும் அரசுத்தலைவருமான மகிந்தவுக்கு உதவியாளராகப் பணியாற்றினார்.[8] பின்னர் பிரித்தானியா ரோயல் கடற்படைக் கல்லூரியில் சேர்ந்து எச்.எம்.எசு ஓசன் கப்பலில் பயிற்சி பெற்றார்.[9][10] 2015 சனவரியில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த தோல்வியடைந்ததை அடுத்து, உடனடியாக யோசித்தவை கடற்படைப் பதவிகளில் இருந்து மகிந்த விடுவித்தார்.[11] ஆனாலும், யோசித்தவின் பதவி விலகலை கடற்படைத் தளபதி ஏற்றுக் கொள்ள மறுத்து விடவே, யோசித்த தொடர்ந்து கடற்படையில் பணியாற்றி வந்தார்.[12]

2015 சனவரியில் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவின் அரசு நாடாளுமன்றக் குழு ஒன்றை விசாரணைக்காக நியமித்தது யோசித்த கடற்படையில் சேருவதற்கான அடிப்படைத் தகுதிகளை கொண்டிருக்கவில்லை என்றும், க.பொ.த (சா.த) சோதனைகளை இரு தடவைகள் எடுத்தும் போதியளவு பெறுபேறுகளைப் பெறவில்லை என்றும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது. ஐக்கிய இராச்சியத்திலும், உக்ரைனிலும் பயிற்சி பெறுவதற்காக இவருக்கு அரசு 22.23 மில்லியன் இலங்கை ரூபாய்கள் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.[13]

Remove ads

சர்ச்சைகள்

கொலைக் குற்றச்சாட்டுகள்

2012 மே 16 இல் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் என்பவர் கொழும்பில் மர்மமான முறையில் வாகன விபத்து ஒன்றில் உயிரிழ்ந்தார். இவர் பயணம் செய்த வாகனம் சுவர் ஒன்றில் மோதி, தீப்பிடித்து எரிந்ததாகவும், அதில் பயணம் செய்த வசீம் கரிலேயே கருகி இறந்ததாகவும் ஆரம்பத்தில் கூறப்பட்டு விபத்து எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. புதிய அரசு இவ்வழக்கை மீண்டும் ஆரம்பித்து, புதிய ஆதாரங்களை சமர்ப்பித்து, இது படுகொலை முயற்சி என்ற வகையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தனது முன்னாள் காதலியாக இருந்த பெண் ஒருவருக்காக இப்படுகொலையை யோசித்த ராசபக்ச திட்டமிட்டு செய்ததாக கூறப்படுகிறது.[14][15][16] ஆனாலும், இவ்வழக்கு, அரசியல் காரணங்களுக்காக தம்மீது தொடுக்கப்பட்டுள்ளதாகவும், இக்குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் மகிந்த ராசபக்ச தெரிவித்தார்.[17]

நிதி மோசடி

சி. எஸ். என் தொலைக்காட்சியில் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட யோசித்த 2016 சனவரி 30 அன்று கடுவலை நீதித் துறை நடுவர் தம்மிக ஏமபால முன்னிலையில் நிறுத்தப்பட்டு 14 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். தொலைக்காட்சி சேவைகளை நடத்துவதற்கான நிதியை எவ்வாறு பெற்றார் என்பது, பொதுச் சொத்துக்களை தவறான வழியில் பயன்படுத்தினார் போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.[18]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads