வடக்கு கலிமந்தான்
இந்தோனேசிய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு கலிமந்தான் (ஆங்கிலம்: North Kalimantan; மலாய்: Kalimantan Utara; இந்தோனேசியம்: Provinsi Kalimantan Utara; சீனம்: 北加里曼丹) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.
இந்தோனேசியா போர்னியோ தீவில் வடக்கு கலிமந்தான் அமைவிடம்.
வடக்கு கலிமந்தான் மாநிலம், அதன் வடக்கில் சபா மாநிலம்; மேற்கில் சரவாக் மாநிலம்; ஆகிய மலேசிய மாநிலங்களை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கில் கிழக்கு கலிமந்தான் எனும் இந்தோனேசிய மாநிலத்தையும் நில எல்லையாகப் பகிர்ந்து கொள்கிறது.
தஞ்சோங் செலோர் (Tanjung Selor) எனும் நகரம் வடக்கு கலிமந்தான் மாநிலத்தின் தலைநகரமாகச் செயல்படுகிறது. அதே சமயத்தில் தாராக்கான் (Tarakan) எனும் நகரம் அந்த மாநிலத்தில் மிகப்பெரிய நகரமாகவும்; நிதி மையமாகவும் விளங்குகிறது.
Remove ads
பொது
வடக்கு கலிமந்தானில் உள்ள மதங்கள் (சூன் 2021)[5]இசுலாம் (70.97%), கத்தோலிக்க திருச்சபை (7.22%), சீர்திருத்தத் திருச்சபை (21.10%), பௌத்தம் (0.65%), இந்து சமயம்
(கீழே 2022 புள்ளிவிவரங்கள்)
வடக்கு கலிமந்தான் மாநிலம் 25 அக்டோபர் 2012-இல் உருவாக்கப்பட்டது. முன்பு இந்த மாநிலம் கிழக்கு கலிமந்தான் மாநிலத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது அதன் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் (Development Disparity) இருந்தன. அதைச் சரி செய்வதற்காகவும்; மற்றும் இந்த மாநிலத்தின் மீது மலேசியாவின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும், கிழக்கு கலிமந்தான் மாநிலத்தில் இருந்து தனி ஒரு மாநிலமாகப் பிரிக்கப்பட்டு வடக்கு கலிமந்தான் மாநிலம் உருவாக்கப்பட்டது.[6]
வடக்கு கலிமந்தான் மாநிலம் 71,827.3 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. 2010—ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 524,656 மக்கள் தொகையைக் கொண்டு இருந்தது. 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அதன் மக்கள் தொகை 701,784-ஆக இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் இந்தோனேசியாவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகப் பெயர் பெற்றது.
இருப்பினும் 2022-இல் புதிய மாநிலமாக தெற்கு பாப்புவா (South Papua) உருவாக்கப் பட்டதும் அந்த நிலை மாறியது. 2021-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வடக்கு கலிமந்தான் மாநிலத்தின் மக்கள் தொகை அதிகாரப்பூர்வ மதிப்பீடு 713,622 ஆகும்.
Remove ads
வரலாறு
மிங் வம்சத்தின் (Ming Dynasty), 1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரையிலான சீனா நாட்டு மிங் சி லு (ஆங்கிலம்: Ming Shilu; சீனம்: (Chinese: 明史) வரலாற்றுப் பதிவுகளில்; 1417-ஆம் ஆண்டிற்கான பதிவில் சூலு மன்னராட்சியில் (Sulu Sultanate); மகாலது கிலமாதிங் (Mahalatu Gelamading) எனும் அரசரால் கலிமந்தான் இராச்சியம் ஆளப் பட்டதாகப் பதிவாகி உள்ளது.
கலிமந்தான் இராச்சியம்
அந்தக் காலக்கட்டத்தில் கலிமந்தான் இராச்சியத்தை ஓர் இந்து மன்னர் ஆட்சி செய்ததாகவும்; அந்த அரசரின் பெயர் மகாராஜா கலிமாந்தகன் (ஆங்கிலம்: Maharaja Klainbantangan; சீனம்: 麻哈剌吐葛 剌麻丁) என்று சீனப் பதிவுகள குறிப்பிடுகின்றன.
கலிமந்தான் இராச்சியம், பிலிப்பீன்சு இராச்சியத்திற்கு (Philippine Kingdom) அடிமையாக இருந்த ஒரு இராச்சியம் என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மகாராஜா கலிமாந்தகனின் பட்டப் பெயரான கலிமாந்தகன் எனும் பெயரில் இருந்து கலிமந்தான் இராச்சியத்திற்கு (Kingdom of Kalimantan) பெயரிடப்பட்டதாக சீனப் பதிவுகள குறிப்பிடுகின்றன.[7]
வடக்கு கலிமந்தான் மாநிலம், பின்னர் புலுங்கான் சுல்தானகத்தின் (Sultanate of Bulungan) ஒரு பிரதேசமாக மாறியது. இந்த புலுங்கான் சுல்தானகம் கடலோரத்தில் வாழ்ந்த காயான் (Kayan) குழுவின் தலைவராக இருந்த உமாப்பன் (Uma Apan) என்பவரால் நிறுவப்பட்டது.
புலுங்கான் இந்து இராச்சியம்
16-ஆம் நூற்றாண்டில், அசுங் லுவான் (Asung Luwan) என்று அழைக்கப்படும் காயான் இளவரசி, புரூணையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் டத்து மென்காங் (Datuk Mencang) என்று அழைக்கப்படும் ஓர் இந்து பிரபுவை மணந்தார். அதைத் தொடர்ந்து தஞ்சோங் செலோர் நகரத்தை மையமாகக் கொண்டு ஒரு சுதேச அரசும்; இந்து மத வம்சாவளியும் நிறுவப்பட்டன. இந்தச் சுதேச புலுங்கான் இராச்சியம்தான் பின்னர் காலத்தில் புலுங்கான் சுல்தானகம் என மாற்றம் கண்டது.
அந்தக் கட்டத்தில் இந்த புலுங்கான் இராச்சியம்; தானா தீடுங் (Tana Tidung), மலினாவ் (Malinau), நுனுக்கான் (Nunukan), தாராக்கான் (Tarakan) மற்றும் சபாவின் சில பகுதிகளைக் கையகப்படுத்தி இருந்தது.
கூத்தாய் இராச்சியம்
புலுங்கான் இராச்சியம், பெராவு (Berau) எனும் போர்னியோ அரசிற்கு அடிமை அரசாக இருந்தது. அதே சமயத்தில் பெராவு அரசு, கூத்தாய் இராச்சியத்தின் (Kingdom of Kutai) அடிமையாக இருந்தது. அடுத்தடுத்த போர்களின் போது, புலுங்கான் இராச்சியம், புரூணை அரசின் கைகளில் விழுந்தது.
அதன் பின்னர் சூலு சுல்தானகத்துடன் (Sultanate of Sulu) ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட பின்னர், புலுங்கான் அரசு அதிகாரப்பூர்வமாக சூலு சுல்தானகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
Remove ads
புலுங்கான் சுல்தானகம்
1777-ஆம் ஆண்டில், புலுங்கான் அரச குடும்பம் இந்து சமயத்தில் இருந்து இசுலாம் சமயத்திற்கு மாறியது. மன்னர் வீரா அமீர் (Wira Amir) தன் பெயரை அஜி முகம்மது (Aji Muhammad) என்றும்; சுல்தான் அமிருல் முக்மினின் (Sultan Amirul Mukminin) என்றும் மாற்றிக் கொண்டார். புலுங்கான் இராச்சியம் என்பது புலுங்கான் சுல்தானகம் என மாறியது.
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்
1853-ஆம் ஆண்டில், புலுங்கான் சுல்தானகத்தின் (Kesultanan Bulungan) மீது டச்சுக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைத் திணிக்க ஓர் அரசியல் ஒப்பந்தத்தில் (Politiek Contract) கையெழுத்திட்டனர். அந்தக் கட்டத்தில் சூலு சுல்தானகம், பிலீப்பீன்சில் இருந்த எசுப்பானியா நாட்டுக் கடல் படையுடன் போரில் ஈடுபட்டு இருந்ததால் சூலு சுல்தானகத்தால் பதில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
பின்னர் 1881-ஆம் ஆண்டில், வடக்கு போர்னியோவில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (British North Borneo Company) (BNBC) உருவாக்கப்பட்டது. அன்றைய வடக்கு போர்னியோ தான் இன்றைய இன்றைய சபா மாநிலம். வடக்கு போர்னியோவை, பிரித்தானிய அதிகார வரம்பிற்குள் வைத்து, தாவாவ் பகுதியை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் உரிமை கோரியது.
இரண்டாம் உலகப் போர்
ஆங்கிலேயர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு, இந்தோனேசியாவை ஆட்சி செய்த டச்சுக்காரர்கள் 1915-ஆம் ஆண்டில் தாவாவ் பகுதியின் பிரித்தானிய எல்லைகளை அங்கீகரித்தனர். அந்த எல்லைதான் இப்போது சபா மாநிலத்திற்கும் வடக்கு கலிமந்தானுக்கும் இடையிலான எல்லையாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானிய ஆக்கிரமிப்புப் படைகள் புலுங்கான் இராச்சியத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன் மூலமாக ஜப்பானியர்கள் புலுங்கான் இராச்சியத்தின் இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதற்கு மாற்றமாக ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்து புலுங்கான் இராச்சியம் தப்பித்தது.[8][9]
புல்டிகன் சோக நிகழ்ச்சி
1963-ஆம் ஆண்டில், இந்தோனேசியா-மலேசியா மோதலின் போது, மலேசியா எனும் ஒரு புதிய நாடு உருவாக்கத்தில் புலுங்கான் சுல்தானகத்தின் நிலைப்பாடு தெளிவற்றதாக இருந்தது. ஏப்ரல் 1964-இல், புலுங்கான் பிரபுகளுக்கும் (Bulungan Aristocracy) மலேசியாவிற்கும் இடையிலான உறவுகளை நிரூபிக்கும் ஓர் ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஆவணம் இந்தோனேசியா-மலேசியா மோதலின் போது மலேசியா உருவாவதை ஆதரித்தது. மலேசியாவுடன் இணைவதைப் பற்றியும் சொல்லப்பட்டு இருந்தது.
புலுங்கான் அரச குடும்பத்தினரை கொலை செய்ய கட்டளை
24 ஏப்ரல் 1964-இல், முல்லவர்மன் பிராந்திய இராணுவப் பிரிவின் தலைவர் (Leader of Regional Military Commands Mulawarman), பிரிகேடியர் ஜெனரல் சோகர்ஜோ (Brigadier General Soeharjo), புலுங்கான் பிரபுத்துவத்தைக் கைப்பற்றி புலுங்கான் பிரபுக்களைக் கொல்ல உத்தரவிட்டார்.
2 ஜூலை 1964-இல், இராணுவ அதிகாரி பி. சிமாதுபாங் (Letnan B. Simatupang) மற்றும் தளபதி புந்தாரான் (Captain Buntaran) ஆகியோரை புலுங்கான் சுல்தான் அன்புடன் வரவேற்றார்.
3 ஜூலை 1964 வாக்கில், பிரவிஜயா 517 (Brawijaya 517) எனும் இராணுவப் பிரிவால் புலுங்கான் அரண்மனை மீது படையெடுக்கப்பட்டது. அரண்மனை எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. மேலும் அரச குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டனர்.
இந்தோனேசிய தேசிய ஆயுதப் படை
புர்கான் சாபியர் (Burhan Djabier) என்பவர் தன் 1991-ஆம் ஆண்டு நூலில் (East Kalimantan: The Decline of a Commercial Aristocracy) எழுதி இருப்பது:
பிரிகேடியர் ஜெனரல் சோகர்ஜோ ஒரு அறியப்பட்ட இடதுசாரி மற்றும் அரசியல் ரீதியாக பிணைக்கப்பட்டவராக கருதப் படுவதால், இந்தோனேசிய தேசிய ஆயுதப் படைகள் (Tentara Nasional Indonesia - TNI) தலைமையகம் அவரை மாற்றவோ அல்லது மாற்றுவதற்கு முயற்சிகள் செய்யவோ இல்லை.[10]
பெரும்பாலான இடதுசாரிகளும்; இந்தோனேசியாவின் கம்யூனிஸ்டு கட்சியாளர்களும் (Partai Komunis Indonesia - PKI) புலுங்கான் அரச குடும்பத்திற்கு விரோதமாக இருந்தனர். அரச அரண்மனை எரிப்பு மற்றும் அரச இனச் சுத்திகரிப்புக்கு இந்தோனேசியாவின் கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாக இருக்கலாம் என்றும் அறியப்பட்டது.[11]
புலுங்கான் அரச குடும்பத்தினர் மலேசியாவிற்கு தப்பிச் செல்லுதல்
எஞ்சியிருந்த புலுங்கான் அரச குடும்பத்தினர் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றனர். பின்னர் மலேசியக் குடியுரிமை பெற்றனர். மலேசிய அரசாங்கத்தின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர்.
2017-ஆம் ஆண்டில், 53 ஆண்டுகளுக்குப் பின்னர், புலுங்கான் அரச குடும்பத்தினர் தாங்கள் மீண்டும் இந்தோனேசிய குடிமக்களாக மாறுவதாக அறிவித்தனர். இந்தோனேசிய அரசாங்கம் அமைதி காத்து வருகிறது.[11]
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
வடக்கு கலிமந்தான் நான்கு துணைப் பிரிவுகளாகவும்; (ஆங்கிலம்: Regency; இந்தோனேசியம்: Kabupaten); மற்றும் ஒரு நகரமாகவும் (Kota) பிரிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு; 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு; மற்றும் 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல்:[2][12][13]
Remove ads
மக்கள் தொகையியல்
இனம்
வடக்கு கலிமந்தானில் பெரும்பாலோர் டயாக், ஜாவானிய மக்கள் ஆகும். மற்றும் தீடோங் (Tidung) புலுங்கான் மக்கள் (Bulungan), சூலு இனக்குழு (Suluk) பஞ்சார் மக்கள் (Banjarese), மூருட் (Murut), லுன் பாவாங் (Lun Bawang), லுன் டாயே (Lun Dayeh) இனக் குழுவினரும் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள்தொகையைக் கொண்டுள்ளனர்.
காட்சியகம்
மேற்கோள்
நூல்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads