தாராக்கான்
இந்தோனேசியா, வடக்கு கலிமந்தான் மாநிலத்தின், பெருநகரம் மற்றும் தீவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாராக்கான் (இந்தோனேசியம்: Tarakan; ஆங்கிலம்: City of Tarakan) என்பது இந்தோனேசியா, வடக்கு கலிமந்தான் மாநிலத்தின், பெருநகரம் மற்றும் தீவு ஆகும். வடக்கு கலிமந்தான் மாநிலத்தில், உள்ள மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியாகவும் இந்தத் தீவு நகரம் விளங்குகிறது. அத்துடன் இந்தத் தீவு நகரம், வடக்கு போர்னியோ, வடக்கு கலிமந்தான் மாநிலத்தின் சுலாவெசி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
இடச்சு கிழக்கிந்திய குடியேற்ற காலத்தில், தாராக்கான் ஒரு முக்கிய எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியமாக இருந்தது. பசிபிக் போரின் போது இந்தத் தீவு நகரம், பெரும் உத்திசார் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. மேலும் போர்னியோ போர் தொடக்கத்தில் அரச சப்பானிய இராணுவத்தின் முதல் இலக்குகளில் இந்த நகரமும் ஒன்றாகும்.
இந்த நகரம் இந்தோனேசிய மாநிலமான வடக்கு கலிமந்தான் மாநிலத்தில் உள்ள ஒரே மாநகரமாகும். (2012-இல் நிறுவப்பட்டது) இந்தோனேசிய புள்ளிவிவரங்கள் நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த நகரத்தின் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை 193,370; 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை 242,786 ஆகவும் இருந்தது.[3][4] 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அரச மதிப்பீடு 255,310 (132,175 ஆண்கள்; 123,135 பெண்கள்) ஆகவும் இருந்தது.[1]
1942 சனவரி 10 அன்று சப்பான், நெதர்லாந்து கிழக்குத் தீவுகள் மீது போரை அறிவித்தது. அரச சப்பானிய இராணுவத் துருப்புக்கள் மறுநாள் தாராக்கானில் தரையிறங்கின.[5] நெதர்லாந்து ஒரு மாதத்திற்கு முன்பே சப்பான் மீது போரை அறிவித்திருந்தது.[6] இதன் பின்னர் தாராக்கான் போர் தொடங்கியது.
Remove ads
புவியியல்
இந்த நகரம் கலிமந்தான் கிழக்கு கடற்கரையிலிருந்து தாராக்கான் தீவில் அமைந்துள்ளது. 8,635 எக்டேர் (21,340 ஏக்கர்)[7] நிலப்பரப்பைக் கொண்டுள்ள இந்த நகரத்தின் 27.5% பகுதி வண்டல் களிமண்ணாலும் 57.63% செம்புறை மண்ணாலும் ஆனது; கடல் மட்டத்திலிருந்து 0–110 மீட்டர் (0–361 அடி) உயரத்தில் உள்ளது.[7]
வரலாறு
சொல் பிறப்பியல்



உள்ளூர் புராணங்களின்படி, பூர்வீக திடுங் மக்கள் (Tidung people) கி.பி 1076-ஆம் ஆண்டு வாக்கில் தாராக்கானில் தங்கள் இராச்சியத்தை நிறுவினர். பல நூற்றாண்டுகளாகத் தங்கள் தலைநகரை பலமுறை மாற்றிய பிறகு, கி.பி 1571-இல் அவர்கள் தாராக்கானின் கிழக்கு கடற்கரையில் நிரந்தரமாகக் குடியேறினர்.[8]
தாராக்கான் எனும் பெயர் திடுங் மொழியிலிருந்து பெறப்பட்டது: தாராக் (Tarak) என்றால் சந்திக்கும் இடம்; கான் (Ngakan) என்றால் உண்ணுதல் என்று பொருள்படும். முன்பு காலத்தில், கப்பலோட்டிகளும் வணிகர்களும் திடுங் பகுதியில் தங்களின் கடல் உணவுகளைச் சாப்பிடவும்; ஓய்வெடுக்கவும்; மற்றும் வணிகம் செய்யவும்; ஒரு சந்திப்பு இடமாக தாராக்கான் இருந்துள்ளது.
பெட்ரோலியம்
1863-ஆம் ஆண்டில் இடச்சு ஆய்வாளர்கள் தாராக்கானில் பெட்ரோலிய எண்ணெய் கசிவுகளைக் கண்டறிந்தனர். 1905-ஆம் ஆண்டில், நெதர்லாந்து மாட்சாப்பி பெட்ரோலிய (Koninklijke Nederlandsche Petroleum Maatschappij) நிறுவனத்திற்கு எண்ணெய் உற்பத்திச் சலுகை வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் ராயல் டச்சு ஷெல் நிறுவனத்திற்கு முன்னோடியாக இருந்தது.
ஓர் ஆண்டு கழித்து 1906-ஆம் ஆண்டில், 57,928 பீப்பாய்களுக்கு மேல் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தது. 1920-களில் தாராக்கானில் ஆண்டுக்கு ஐந்து மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது.[9] இது இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் முழுவதிலுமான மொத்த எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காகும்.[10]
Remove ads
மக்கள்தொகை
இந்த நகரத்தின் மக்கள் தொகை:
- 2010-ஆம் ஆண்டு - 193,370[3]
- 2020-ஆம் ஆண்டு - 242,786[11]
- 2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அரச மதிப்பீடு 255,310
சமயம்
- 85% முசுலிம்கள்
- 10% கிறித்தவர்கள்
- 1.3% இந்துக்கள்
- 0.04% பௌத்தர்கள்
- 0.03% கன்பூசியனிசத்தினர்[12]
காலநிலை
தாராக்கான் தீவில், ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்யும் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) உள்ளது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

